Apr 26, 2013

இறப்பும் , இழப்பும் , அனுபவமும் ...!

வீட்டிற்கு ஒற்றைப்பிள்ளையாய் பிறந்ததாலும் , இருபது வருடம் வீட்டைப்பிரிந்து விடுதி வாழ்க்கையே வாழ்ந்தாலும், உறவின் பிறப்பும் , இறப்பும் , ஈட்டலும் , இழத்தலும் , கூடலும், பிரிவும்,  பெரிதாக எந்த ஒரு தாக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தியதில்லை . இதோ முதல் முறையாக ஓர் இறப்பும் , ஓர் இழப்பும் என்னைத் தாக்கி கொண்டிருக்கிறது , வாட்டிக் கொண்டிருக்கிறது  .

தனித்து வாழ்ந்தே பழக்கப்பட்டிருந்த எனக்கு , திருமணத்தின் மூலம் மனைவி என்ற பெயரில் வந்த ஒரு புது உறவும் அதனை தொடர்ந்து வந்த மாமனார் , மாமியார் , மச்சான் .. இன்னும் பல உறவுகளும் மிக புதிதாகவும் , புதிராகவுமே இருந்தது. எளிதாக ஒட்டவும் முடியவில்லை , ஒதுங்கவும் முடியவில்லை . திருமண ஆன பின்பும் மனைவி அவர் அம்மா வீட்டிலிருந்தே படித்துக்கொண்டிருந்தார் . தனித்தே இருந்து பழகிவிட்டதாலும் , மாமியார் வீடு  செல்ல கூச்சமாக இருந்ததாலும் , அடிக்கடி மாமியார் வீடு செல்வதில்லை . எப்பொழுதாவது சென்று வருவதுண்டு . மாமியார் மீது மிகப்பெரிய அன்பும் இல்லை , கோபமும் இல்லை . தாமரை இல்லை தண்ணீர் போல பட்டும் படாமலும் ஓர் உறவு .

கடந்த வாரம் திங்கள் கிழமை முன்னிரவில் மனைவியும், மைத்துனனும் கதறிக்கொண்டே போனில் சொன்னார்கள் அம்மா இறந்துவிட்டார் என்று  . ஆம் என் மாமியார்  இறந்து விட்டார் . வயதொன்றும் அதிகமில்லை ஐம்பதுதான் . நெஞ்சு வலியென்று மருத்துவமனைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தவர் வழியிலேயே இறந்துவிட்டார் . செய்தி கேட்டவுடன் ஏதோ ஒரு விவரிக்க முடியாத உணர்வு சூழ்ந்துகொண்டது . டூ வீலரில் சாவியே போடாமல் வண்டியை  உதைக்கின்றேன் . ஸ்டாண்டில் வண்டி நம்பர் கேட்கும்போது தடுமாறுகின்றேன் . நெருங்கிய ஒருவரின் மரணச் செய்தி நம்மை நிலைகுலைய வைத்துவிடும்போல .

பெரும்பாலும் பயணங்கள் எல்லாருக்கும் சந்தோசமாகவே இருக்கும் . ஒரே ஒரு பயணத்தை தவிர...! அது  பின்னிரவில் துக்கத்துக்கு செல்லும் பயணம் . அந்த பயணம் மிகவும் வலி நிறைந்தது , ரணமானது . உலத்திலேயே மிக நீளமான துயரமான பயணம் துக்கத்துக்கு செல்லும் இரவுப் பயணமாகத்தானிருக்கும். கடைசியாக அத்தையை எப்பொழுது பார்த்தோம் , என்ன பேசினோம் ...? கடைசியாக தொலைபேசியில் பேசியபொழுது இன்னும் கொஞ்சம் பிரியமாக பேசியிருக்கலாமோ என்று  ஏதேதோ எண்ணங்கள் அலை மோதுகின்றன ....!

மத்தியான வெயிலில் மைத்துனன் சாலையில் புரண்டு அழுகின்றான் அம்மா வேண்டுமென்று , என்ன சொல்லி தேற்றுவது என்றே தெரியவில்லை . ஆறுதல் சொல்கிறேனென்று ஏதேதோ பிதற்றிக்கொண்டிருந்தேன் . நான் பிதற்றியது எனக்கே புரியவில்லை பாவம் அவனுக்கெங்கே புரிந்திருக்கும் . அழாதேப்பா என்று ஆளாளுக்கு அறிவுரை சொன்னார்கள் . என்னால் அறிவுரை சொல்லவும் முடியவில்லை , ஆறுதல் சொல்லவும் முடியவில்லை , அழுகட்டும் அழுது தீர்க்கட்டும் என்று அமைதியாக அவனை  அணைத்துக்கொண்டேன் . அரவணைப்பைவிட சிறந்த ஆறுதல் வார்த்தை இருப்பதாக எனக்கு தெரியவில்லை .

சடங்கும் மரியாதையும் முடித்து மாலை வீடு திரும்பிய பொழுது எனக்கே அழுகை வந்துவிட்டது. காலையில் திசையெங்கும் இருந்து கூடிய உறவுகளும் , நட்புகளும் , மாலையில் கல்லெறிந்த காக்கை கூட்டம் போல கலைந்துவிட்டது . மரணத்தின் வலியை விட , மரணத்திற்கு பின்பான தனிமையும் , இருட்டும் பல மடங்கு வலி நிறைந்தது .

சடங்குகள் , இறப்பு சான்றிதழ் , வங்கி பெயர் மாற்றம் என்று பகல் முழுக்க அலைச்சல்  , இரவு முழுக்க மன உளைச்சல் என்று ஒரு வாரம் கழிந்துவிட்டது . அத்தையை மாலையுடன் கிடத்தியிருந்த போர்டிகோவில் , இதோ இன்று வீட்டு ஓனரின் புத்தம் புது கார் மாலையுடன் நின்றுகொண்டிருக்கிறது . இவ்வளவு தான் வாழ்க்கை .

வீட்டை காலி செய்து மனைவியை நானும் , மாமாவை மைத்துனனும் கூட்டிக்கொண்டு வெளியேறிய கணம் மிக கொடுமையானது . சாலையில் இறங்கி வீட்டை திரும்பி பார்த்தேன் . இவ்வளவு நாள் அழகான வீடாகத் தெரிந்தது இப்பொழுது சூன்யம் நிரம்பிய ஓர் இருட்டறையாகத் தெரிந்தது . எவ்வளவு கோடி கொட்டி பகட்டாகவும் , ஆடம்பரமாகவும் பங்களாக்களை கட்டினாலும் , ஒரு பெண்ணின் இருப்பும் , வசிப்பும் மட்டுமே அதை வீடாக முழுமை பெறச்செய்யும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்த கணம் அது . பெண்ணில்லாத வீடு எவ்வளவு பெரிய அரண்மனை போலிருந்தாலும் , வெறும் கல் கட்டடம்தான் போல .

இதோ ஒரு நாளைக்கு மூன்று முறை மைத்துனன் பெங்களூரில் இருந்து கூப்பிடுகிறான் , “அய்த்தான் அப்டியே பைத்தியம் புடிக்குற மாதிரி இருக்கு என்ன பண்றதுனே தெரியல” என்று அழுகின்றான் . என்ன சொல்வது...? நண்பர்களுடன் எங்காவது வெளியில போய்வா என்றால் , நண்பர்களே இல்லை என்கின்றான். மூன்று வருடமாக பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றான் ஆனால் நண்பர்களே இல்லை . இவ்வளவு நாள் என்னடா செய்தாய் என்று கேட்டால் தினமும் வேலை விட்டு வீடு வந்து டிவி பார்ப்பானாம் , அம்மாவுடன் தினமும் ஒருமணி நேரம் போனில் பேசுவானாம் . அலுவலகம் , டிவி , போன்  ஒரு சின்ன வட்டம் அவ்வளவுதான் வாழ்க்கை . இந்த வட்டத்தில் ஒன்று தற்பொழுது இல்லை எனும் போது அவனால் தாங்க முடியவில்லை .

ஏதாவது கோவிலுக்கு போ..! இல்ல படத்துக்கு போ..! புத்தகம் வாசி ,பக்கத்து வீட்டு குழந்தையுடன் விளையாடு என்று எதையெதையோ சொல்லி வருகின்றேன்  . நண்பர்களே இல்லாமல் இருப்பதற்கு , நான்கு மோசமான நண்பர்களை வைத்திருப்பது எவ்வளவோ மேல் இல்லையா..? குறைந்தபட்சம், வாழ்க்கையில் சந்திக்கும் மோசமான மனிதர்களை எப்படி  கையாள்வது என்றாவது தெரிந்துகொள்ளலாம் அல்லவா ..! அதனால் இனிமேலாவது நண்பர்களை அமைத்துக்கொள் என்று அறிவுறைக்கிறேன் . ஆனால் எனக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று யோசித்துப்பார்க்கிறேன் .......?  நான்குக்கு மேல் நொண்டியடிக்கிறது மனது .

மனைவி சற்று பரவாயில்லை வெகு விரைவில் இயல்புக்கு திரும்பிவிட்டார் . காரணம் என்னவென்று யோசித்து பார்த்தால்.., இரட்டைக்குழந்தைகளில் ஒருவரானவள் சிறுவயது முதலே பாட்டி வீட்டிலும் , சித்தி வீட்டிலும் வளர்ந்திருக்கிறாள் . மனைவியின் வட்டம் பெரியது. ஆயா , அப்பத்தா, ஐயா , அண்ணன் , அக்கா , தம்பி , அத்தை , மாமா , சித்தி , சித்தப்பா, பெரியம்மா , பெரியப்பா என்று பெரிய உறவு வட்டம் . சந்தோசமோ , துக்கமோ உடனுக்குடன்  பகிர அவளுக்கு ஆயிரம் உறவுகள் . குழந்தைகளுக்கு சொத்தோ , புகழோ , பணமோ சேர்த்து வைக்கத்தேவையில்லை நிறைய  நண்பர்களையும் , நிறைய உறவுகளையும் சேர்த்து வைத்தாலே போதும் போல . எந்த ஒரு உயிர் மீதும் பொருள் மீதும் அளவு கடந்த பிரியமும் , அன்பும் , எதிர்பார்ப்பும் வைத்தோமேயானால் நிச்சயமாக அது மிகப்பெரிய துயரத்திற்குத்தான் இட்டுச்செல்கின்றது .

ஆணுக்கு குறைந்தபட்சம் திருமணம் ஆகும் வரையிலும் , பெண்ணுக்கு திருமணம் ஆகி குழந்தை பெறும் வரையிலும் தாயின் அரவணைப்பு அதி அவசியமாகிறது . தாயின் இடத்தை யாரால் இட்டு நிரப்பமுடியும் ..? நூறு வருடங்கள் வாழ்ந்து இறந்தாலும் தாயின் இறப்பு மிகப்பெரிய இழப்பே . தகுதி இருக்கிறதோ இல்லையோ இதோ இன்று நான் பெரியமனிதனாகிவிட்டேன் . ஐந்து ஜீவன்களின் நல்லது கெட்டதுகளை  முன்னின்று நடத்தும் “பொறுப்பு” என்னும் பந்து காலத்தின் உதைப்பினால் என்னிடம் தள்ளப்பட்டிருக்கிறது . இருபது வருட கல்வி சொல்லித்தராததை இப்பொழுது  இந்த வாழ்க்கை கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. கற்றுக்கொண்டிருக்கின்றேன் .

இறப்பின் வலியை சுமந்து அலுவலகம் திரும்பிய எனக்கு  இங்கும் ஓர் இழப்பு காத்திருப்பதை என்னவென்று சொல்ல..? ஆம் ! நான்கு வருடம் உடன் வேலைபார்த்த சக அலுவலக நண்பர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊர் திரும்பிவிட்டார்  . வயதில் மூத்தவராக இருப்பினும் இட்ட வேலையை தட்டாமல் செய்தவர் . ஹரி சார் ரிப்போர்ட் ரெடியா ..? ஹரி சார் மெயில் அனுப்பீட்டிங்களா ..? ஹரி சார் குட்ஸ் வந்துடுச்சா ..? என்று மூச்சுக்கு மூன்று முறை விழித்த ஹரி சார் இன்று எங்கோ திருநெல்வேலியில் எதோ ஒரு நிறுவனத்தில் , யாருக்கோ பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் . இதோ ஹரி சாரின் இருக்கையை பார்க்கிறேன் காலியாக இருக்கிறது , என் மனம் பாரமாக இருக்கிறது .

இந்த நான்கு வருடங்களில் பரஸ்பரம் குற்றம் சாட்டியிருக்கிறோம் , முரண்பட்டிருக்கிறோம் , எரிந்து விழுந்திருக்கிறோம் , முகம் சுளித்திருக்கிறோம்  ஆனாலும் பிரிவு  வலிக்கிறது . விடைபெற்று  பிரிந்த பொழுதில்  “இத்தன வருசத்துல நா ஏதாவது ஒங்க மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்துட்டு இருந்தா என்ன மன்னிச்சுடுங்கன்னு” ஒற்றை வார்த்தையை சொல்லி  என்னை புனிதாக அடையாளப்படுத்த வெட்கப்பட்டு அப்படியே அணைத்துக்கொண்டேன் . அந்த அணைப்பில் அன்பையும் , மன்னிப்பையும் நான் உணர்ந்ததைப்போலவே அவரும் உணர்ந்திருப்பார் . பேசாத வார்த்தைகள் அழகானவை மட்டுமல்ல ஆயிரமாயிரம் அர்த்தங்களையும் கொண்டது .

ஓர் உயிரோ . பொருளோ உடனிருக்கும் போது அதன் அருமையும் , பெருமையும் தெரிவதே இல்லை , தெரியும் போது அதை விட்டு விலகி வெகு தூரம் வந்துவிடுகின்றோம் . அல்லது முழுமையாகவே இழந்து விடுகின்றோம் .

பிறப்பும் , இறப்பும்
ஈட்டலும் , இழத்தலும்  
பெறுதலும் , கொடுத்தலும்
இணைந்தது தானே
வாழ்க்கை...!

இதோ இப்பொழுது
இறப்பின் வலியையும்
இழப்பின் சுமையையும்
சகித்துக்கொண்டிருக்கிறேன்...!

வெகு விரைவில்
பிறப்பின் மகிழ்வையும்
ஈட்டலின் சந்தோசத்தையும்
சுகிப்பேன் என்று
நகர்ந்து கொண்டிருக்கின்றேன்
நம்பிக்கையுடன் ...!

நம்பிக்கைதானே வாழ்க்கை ...!


15 comments:

 1. என்ன சொல்வதென்றே தெரியவில்லை நண்பா...

  /// எந்த ஒரு உயிர் மீதும் பொருள் மீதும் அளவு கடந்த பிரியமும், அன்பும், எதிர்பார்ப்பும் வைத்தோமேயானால் நிச்சயமாக அது மிகப்பெரிய துயரத்திற்குத்தான் இட்டுச்செல்கின்றது... ///

  என்ன தான் இருந்தாலும் துணைவியை கவனித்துக் கொள்ளுங்கள்....

  /// நிறைய நண்பர்களையும் , நிறைய உறவுகளையும் சேர்த்து வைத்தாலே போதும் போல... ///

  சத்தியமான வரிகள்...

  அம்மாவின் (மாமியாரின்) ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்....

  ReplyDelete
 2. //ஆடம்பரமாகவும் பங்களாக்களை கட்டினாலும் , ஒரு பெண்ணின் இருப்பும் , வசிப்பும் மட்டுமே அதை வீடாக முழுமை பெறச்செய்யும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்த கணம் அது//மிகவும் உண்மை.

  உங்கள் மாமியாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிகிறேன்.

  நான் சந்தித்த இறப்பு என் நினைவிற்கு வந்தது.

  ReplyDelete
 3. ஆடம்பரமாகவும் பங்களாக்களை கட்டினாலும் , ஒரு பெண்ணின் இருப்பும் , வசிப்பும் மட்டுமே அதை வீடாக முழுமை பெறச்செய்யும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்த கணம் அது/

  என்னுள்ளும் இதுபோன்ற நிகழ்வுகளைப்
  பட்டியலிட்டு கலங்க்கச் செய்தது தங்கள் பதிவுஉங்கள் மாமியாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.


  ReplyDelete
 4. ஆழ்ந்த அஞ்சலிகள்!

  ReplyDelete
 5. //மனைவி அவர் அம்மா வீட்டிலிருந்தே படித்துக்கொண்டிருந்தார் // யோவ் இப்பவும் அதுதான் நடக்கு யார ஏமாத்தப் பாக்கீறு
  //மிக நீளமான துயரமான பயணம்// இது போன்ற வார்த்தைகள் மட்டுமே உண்மையான உணர்வுகளை அசாதாரணமாக விதைத்து விடுகின்றன
  // அரவணைப்பைவிட சிறந்த ஆறுதல் வார்த்தை இருப்பதாக எனக்கு தெரியவில்லை .// ம்ம்ம் மிக சரி
  //இந்த வட்டத்தில் ஒன்று தற்பொழுது இல்லை எனும் போது அவனால் தாங்க முடியவில்லை .//

  உங்களை இத்தனை நாள் கவனித்ததில் எனக்குத் தெரிந்தது "மனித உணர்வுகளை அழகான வார்த்தைகளாக்குவது எப்படி என்று நான் உங்களிடம் பாடம் படிக்க வேண்டும்".

  ReplyDelete
 6. மனசை கனக்க வெச்சிட்டய்யா! ஆயிரம் வார்த்தைகள் தராத ஆறுதலை ஒரு தொடுகை, அரவணைப்பு தந்து விடும்! என்னதான் சின்னச் சின்ன உரசல்கள் இருந்தாலும் ஹரி போன்ற நணபர்களின் பிரிவு அவர்களின் சிறப்பை உணர்த்தும். அனுபவங்களில் தோய்ந்த பகிர்வு மனதைத் தொட்டது. அனுபவங்கள் தானே வாழ்க்கை! இறப்பின் வலிக்கும் இழப்பின் சுகத்துக்கும் காலம் மிகச் சிறந்த மருந்து நண்பா! உன் மனதையும் அது ஆற்றுப்படுத்தட்டும் என்பதே என் விருப்பம்!

  ReplyDelete
 7. யாருடைய மரணச்செய்தி வந்தாலும், அவர் உயிருடன் இருந்தபோது இன்னும் சற்று அன்புடனும் பெருந்தன்மையுடனும் பழகி இருக்கலாமோ என்று மனச்சாட்சி உறுத்தும். ஒருமுறையாவது நேரில் சென்று பார்க்காமல் போய்விட்டோமே என்று குற்ற உணர்வு கிளம்பும். சிலபேர் விஷயத்தில் எவ்வளவு சிறுமையோடு நடந்து கொண்டிருக்கிறோம் என்ற நிஜமும் முன்னால் வந்து நம்மைக் குறுக வைக்கும். அத்தகைய அனுபவங்களின் தொகுப்பு தானே வாழ்க்கை என்பது!

  ReplyDelete
 8. நம்பிக்கைதானே வாழ்க்கை ...!

  ReplyDelete
 9. ஒவ்வொருவரியும் எனக்கும் சேர்த்து எழுதியதோ? என்பதுபோல் இருந்தது.
  அனுபவ பூர்வமான எழுத்து. இன்றைய வாழ்வில் பலர் 'சித்தார்த்தனாகத் தான் வாழ்கிறார்கள், ஆனால் மரணம் என்பது வரும் போதே அவர்களில் பலர் - புத்தனாகிறார்கள்'
  இவை நாம் கற்க வேண்டிய பாடங்கள், பள்ளியில் கற்க முடியாதவை.
  இப்பாடம் தந்த மாற்றங்கள் நம்மில் நிரந்தரமாக இருக்க,நாம் நம்மை மாற்ற வேண்டும்.
  காலம் நம் கவலைகளைக் கரைக்கும் என நம்புவோம்.
  தங்கள் அத்தை உங்கள் மகளாகப் பிறந்து, மகிழவைப்பார்.

  ReplyDelete
 10. நம்பிக்கைதான் வாழ்க்கை நண்பா.

  உங்களது அத்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  \\ஓர் உயிரோ . பொருளோ உடனிருக்கும் போது அதன் அருமையும் , பெருமையும் தெரிவதே இல்லை , தெரியும் போது அதை விட்டு விலகி வெகு தூரம் வந்துவிடுகின்றோம் . அல்லது முழுமையாகவே இழந்து விடுகின்றோம் .//

  உண்மை.

  ReplyDelete
 11. வாழ்கையை அதன் போக்கில் வாழ இந்த அனுபவங்கள் மட்டுமே நிற்கும்
  வாழ்க்கையை வாழுங்கள் நம்பிக்கையோடு .......வலி நிறைந்த பதிவு அடுத்த பதிவில் மகிழ்ச்சியை கொடுத்து சமன்படுத்துங்கள்

  ReplyDelete
 12. பேசாத வார்த்தைகள் அழகானவை மட்டுமல்ல ஆயிரமாயிரம் அர்த்தங்களையும் கொண்டது .

  வலைச்சர அறிமுகம் அர்த்தமுள்ளது..!
  http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_14.html

  ReplyDelete
 13. வணக்கம்
  ஓர் உயிரோ . பொருளோ உடனிருக்கும் போது அதன் அருமையும் , பெருமையும் தெரிவதே இல்லை , தெரியும் போது அதை விட்டு விலகி வெகு தூரம் வந்துவிடுகின்றோம் . அல்லது முழுமையாகவே இழந்து விடுகின்றோம்
  உணர்ச்சி மிக்க வரிகள்

  இன்றுவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/08/blog-post_14.html?showComment=1376480761754#c8206585614008425317

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. அனைவருக்கும் நன்றி ...!

  ReplyDelete
 15. சுகங்களை பகிர்ந்தால் இரட்டிப்பாகும் துக்கத்தை பகிர்ந்தால் பாதியாகும்.ஆனால் பகிர நமக்கு நண்பர் கூட்டம் (இல்லை சில நண்பர்களாவது வேண்டும்). பல வரிகள் வருத்தத்தை வரவழைத்தது

  ReplyDelete

Related Posts with Thumbnails