Jul 31, 2013

கணினி கற்ற கதை ...!


தொடர்பதிவில் எம்மைக் கோர்த்துவிட்ட ஸ்பை க்கு ஒரு கொட்டு ....!

முட்டையப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும் ...? எனக்கு C ++ பாடம்  தான் ஞாபகத்துக்கு வரும் ...! ( ஏன்னு ல்லாம் விலாவாரியா சொன்னா , எம்மேல் நீங்க வச்சுருக்க கொஞ்சநஞ்ச  மரியாதையும்(?) மானாவாரியா மண்னைக்கவ்விரும்...! ஸோ... நீங்களே யூகிச்சுக்குங்க).  

இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில், அறந்தாங்கி பாலிடெக்னிக்- கணினி செய்முறைக்கூடத்தில் தான்   கூட்டத்தோடு கூட்டமா , எதுவுமே செய்யாம எட்டி நின்னு எக்கிப் பார்த்தேன் . அதுதான் கன்னி  கணினி தரிசனம் . கணினியே தொடாம C,C++ லாம் படிச்ச(?) பாக்கியவான் அடியேன். கல்லூரியில் பசையுள்ள பசங்கல்லாம் தனியா கணினி வகுப்புக்கு போயி , பேருக்கு பின்னாடி என்னென்னமோ எழுதிக்குவாங்க ...! மெயில் ஐடி வச்சுருக்கவனை எல்லாம் , மெர்சிடிஸ் கார் வச்சுருக்கவன பாக்குற மாதிரி “ஆ” ன்னு  பார்த்த நாட்கள் அவை .

அப்புறம் படிச்சு முடிச்சு பெங்களூரு , சென்னை , கோவை , திருச்சி , திருப்பூருன்னு நாலு வருசத்துல அஞ்சு ஊருல வேல பாத்து, மறுபடி  கோவை யிலேயே செட்டிலானவரைக்கும் கம்ப்யூட்டருக்கும் நமக்கும் காத தூரம் . சொந்த பந்தமெல்லாம் கம்ப்யூட்டர் படிக்கலையா , கம்ப்யூட்டர் படிக்கலையான்னு கெடக்கிற கேப்புல எல்லாம் கிடா வெட்டி, கம்ப்யூட்டர ஒரு விரோதியாகவே ஆக்கிப்புட்டாங்க .

இரண்டாயிரத்து ஆறு வரைக்கும் கம்ப்யூட்டர் ல , “கண்ட்ரோல் ஆல்ட் டெலிட்” கூட தெரியாது . வேற வழியே இல்லாம கடசில கம்ப்யூட்டர் தெரிஞ்சுக்கவேண்டிய நிர்பந்தம், இல்லாங்காட்டி வேல பணால். அப்றமென்ன இப்ப வரைக்கும் கம்ப்யூட்டர் கத்துக்கிறேன்னு ஒரே அட்ராசிட்டிதான்....!

சீனியர் இல்லாத ஒரு நாள்ல , ஜி.எம் ஒரு புரெடக்சன் ரிப்போர்ட் கேக்க , நான் word னே தெரியாம அத ஒப்பன் பண்ணி கால்குட்டேர் லையே கணக்குபோட்டு எடுத்துட்டு போனேன் . பாத்தோன்ன பாரட்டுவாருன்னு பாத்தா பிராண்டிட்டாரு ....!

என்னய்யா ரிப்போர்ட்டு இது ...? தப்பு தப்பா இருக்கு ...! போ... போயி எக்சல் ல போட்டு எடுத்துட்டு வா ன்னு தொரத்திவிட்டுட்டாறு ...! என்னடா இது லூசுத்தனமா இருக்கு , எக்சல்ல்ல லக்கேஜ் வேணா போடலாம் .... எப்டி ரிப்போர்ட் போடமுடியும் ...? நமக்கு எக்சல்லும் ஓட்டத்தெரியாதேன்னு சொல்லமா கொள்ளமா ரூமுக்கு ஓடியாந்துட்டேன் . மறுநாள் சீனியர் சொல்லி தான் எக்சல் ண்ணா என்னன்னே தெரிஞ்சுது ...!

மொத மொதல்ல பிரின்ட் அவுட் எடுத்தது அத விட பெரிய காமெடி . வேறோருமொர, அதே ஜி.எம் மீட்டிங்க்ல  இருக்கும்போது ஒரு WORD FILE ல ஒரு பார்ட்டியோட பேர சொல்லி , அந்த டீடெயில பிரிண்ட் எடுத்துட்டு வான்னும் ,அர்ஜன்ட் ன்னும்  சொல்லிட்டு போன வச்சுட்டாரு. சரி பிரின்ட் அவுட் தானேன்னு நானும் பிரின்ட் கொடுத்து எடுத்துக்கிட்டு இருந்தேன் . ஒரு பத்து நிமிஷம் இருக்கும் பாதி மீட்டிங்க்லேயே பாஞ்சு வந்தாரு நம்ம ஜி.எம்மு ...

“என்னய்யா பண்ணுற ...?”

“பிரின்ட் எடுத்துட்டு இருக்கேன் சார் ... “

நாப்பது பக்கம் வந்துருச்சு , இன்னும் பத்து பக்கம் வந்தா நீங்க கேட்ட பார்ட்டி டீடேயிலு வந்துரும் சார்ன்னு சொல்லி முடிக்கவும் , அவர் தலயில அடிச்சுக்கவும் சரியா இருந்துச்சு ...!

கம்ப்யூட்டர்ல , ஒவ்வொரு எழுத்தா டைப்பண்ணிட்டு இருக்கும்போதே சட்டுன்னு , அய்யய்யோ U வக்காணூம் , E காணும்னும் , கேணியக்கானும்ங்குற மாதிரி நா போட்டு வச்சுருந்த ரிப்போர்ட்ட காணும்ன்னு அப்பப்போ  EDP STAFFS ச கலவரப்”படுத்துன” நாட்கள் லாம் மறக்கவே முடியாது .

ஒரு முறை ஊருக்கு போயிருந்த போது, சொந்தக்காரர் ஒருத்தர் என்னோட வேல , சம்பளம் , படிப்பெல்லாம் பத்தி விசாரிச்சுட்டு இருந்தாரு . நானும் சொல்லிட்டு இருந்தேன் .

“இந்த சம்பளத்த வச்சு என்ன பண்றது” ...? “ஆமா ஒனக்கு கம்ப்யூட்டர் தெரியுமா ...?”

“கொஞ்சம் , கொஞ்சம் தெரியும் மாமா ...?

“ம்ம்ம் ..! M.S. OFFICE தெரியுமா ...?”

“தெரியாது மாமா ...”  

இதோட நிறுத்திருந்தா அநியாயமா அவர் என்னோட பேசுறதையே நிறுத்திருக்க மாட்டாரு ...!

அடுத்து நாங் கேட்ட கேள்வி இதுதாங்க ...!

“மாமா ! M.S. OFFICE கோயமுத்தூர்ல எந்த ஏரியாவுல இருக்கு .....?”

“...........”

ஒன்னு முறையா படிச்சுருக்கோணும் , இல்லாங்காட்டி சின்னவயசுலே இருந்து கம்ப்யூட்டர் அறிமுகமாயிருக்கோனும் ரெண்டுங்கெட்டான இருந்தா பெரும் பாடுதான்  ....!

தத்தி, தத்தி இதோ இப்போ வலைப்பதிவு வரையிலும் வந்துருக்கேன் ... அதுக்கு முக்கியமான காரணம் நா வேல பாக்குற நிறுவனம் , என்னோட சீனியர்ஸ் , சக நண்பர்கள் , பத்திரிகைகள் . இதோ இத வாசிச்சுட்டு இருக்க நீங்க .... எல்லாருக்கும் ரெம்ப நன்றிங்கோ ......!
  
ஏதோ, அஞ்சு பெற கோர்த்துவிடனுமாமே ....! இன்னும் எழுதாமா யாருனாச்சும் இருக்கீங்களா ...? நல்லாருப்பீங்க நீங்களா வந்து மாட்டிக்குங்க மக்களே....!


என்றென்றும் புன்னகையுடன் ...
ஜீவன்சுப்பு .Jul 26, 2013

பிளாக்குல ட்வீட்டு ...!                          சாப்புடுற சாப்பாட்டுல உப்போ, சக்கரையோ அதிகமாயிட்டா, ச்சீ ச்சீ இத மனுஷன் சாப்புடுவானா ன்னு தூரப் போடுறோம் – குப்பை ன்னும் சொல்றோம்.

ஒடம்புல உப்போ, சக்கரையோ அதிகமாயிட்டா வியாதின்னும், வந்தவன நோயாளின்னும் சொல்றோம் .

ஆனா, அளவுக்கும், தேவைக்கும் அதிகமா மண்ணையும் , பொன்னையும் சேக்குரவன பணக்காரன்னும் , பொழைக்க தெரிஞ்சவன்னும் சொல்றோம் ...!”

நியாயமாஆஆரே......? இது.. நியாயமாஆஆரே......?ஆரஞ்சு மிட்டாயும் , கோலி சோடாவும் இப்பல்லாம் கெடைக்கவே மாட்டேங்குது என்று அலுத்துக்கொள்ளும் என் அருமை அம்மாவுக்கு எப்படிப் புரியவைப்பேன் மன்மோகன் சிங்கின் மகத்துவத்தையும் , உலகமயமாக்கலின் உச்சத்தையும் ...! // BY அமெரிக்க இந்தியத் தமிழன் //.


தலயில சொட்டையும் , வயித்துல தொப்பையும் இல்லாதவர்கள் தான் எங்களுக்கு மாப்பிள்ளையாக வரவேண்டும் – இளம்பெண்கள் ஆசை // இதுக்குப்பேர் ஆசை இல்லங்க பே...ரா...சை...! //.


சீனிவாசனுக்கும் , ராசகொமாருக்கும் ஒரே ஒரு வித்தியாசந்தேன் . முன்னவர் POWER STAR, பின்னவர் POW”D”ER  STAR...! // யப்பா எம்பூட்டு பவுடரு ...! //


பெட்ரோல் டேங் FULL பண்ணுவதென்பது , நடுத்தரவர்க்கத்தின் நிறைவேறாத ஆசைகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது //// BY ரிசர்விலேயே வண்டி உருட்டும் மிடில்கிளாஸ் மாதவன் //

என்றென்றும் புன்னகையுடன் ...

ஜீவன்சுப்பு .Jul 23, 2013

இசையும் , மழையும் - ரசித்த பதிவும் ...!
இசையையும் , மழையையும் பிடிக்காதவர்கள் யாரேனும் இந்த உலகத்தில் இருக்கின்றார்களா என்று தெரியவில்லை . எல்லோரும் பிடிக்குமென்றே சொல்கின்றார்கள் . முகநூல் முதல் ரெஸ்யூம் வரை எனக்கும் பிடிக்குமென்றே சொல்லிவருகின்றேன் . ஆனால் என்னால்  எந்தவொரு மழைப்பொழுதையும் , இசைத்துளியையும் ரசித்து, லயித்து சொல்லமுடியவில்லை ....! எத்தனை பேரால் சொல்ல முடியுமென்று தெரியவில்லை . உங்களால் முடியுமென்றால் நீங்கள் ஒரு ரசிகன் பாஸ் ...!

முன்னிரவு மழையையும் , பின்னிரவின் இசையையும் அழகாக , அமைதியாக லயித்து , ரசிக்கவேண்டுமேன்று நினைக்கும் ஒவ்வொருமுறையும் , மனம் அவசர ஊர்தியாய் பறந்துவிடுகின்றது .   நடிப்பதற்கு , இசைப்பதற்கு , வரைவதற்கு , பாடுவதற்கு , எழுதுவதற்கு எப்படி பொறுமையும், திறமையும்  தேவைப்படுகின்றதோ , அதைப்போலவே ஏன் அதைவிட அதிகமாகவே பொறுமையும் , திறமையும் தேவப்படுகின்றது ரசிப்பதற்கு ...!

ஆழமாக , அழகாக , ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக சில ஜீவன்கள் அனைத்தையும் ரசித்துக்கொண்டே இருக்கின்றது , ரசனை மிக்க அந்த ஜீவன்களால் தான் இந்த உலகம் இன்னும் ஜீவித்திருக்கின்றது என்று திடமாக நம்புகின்றேன்  .

ரசிப்பதே ஒரு கலை எனும்பொழுது , ரசித்ததை அப்படியே எழுத்தில் வார்த்து வாசிப்பவர்களையும் நேசிப்பவர்களாக , ரசனைமிக்கவர்களாக மாற்றும் செயலை என்னவென்று சொல்ல  ...!

இந்தியாவின் முதன்மையான பத்திரிகை என்று “மார்”தட்டிக்”கொல்லும்” பத்திரிகைகள் எல்லாம் நடிகைகளின் “....பை” மட்டுமே பிரதானமாக அட்டைப்படமாக போட்டு , ரசித்து லயித்து எழுதும் காலத்தில் , அழகழகான ரசனைகளை மிக அற்புதமாக வார்த்திருக்கிறார்கள் நம் வலையுலக நண்பர்கள் . நான் மிக ரசித்த இரண்டு பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் அளவற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கின்றேன்  . இந்தப்பதிவுகளையும் , பதிவர்களையும் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம் . தவறவிடக்கூடாத இந்தப்பதிவுகளை , தவறவிட்டவர்களுக்கு  மீட்டெடுத்துக்கொடுக்கும் முயற்சிதான் இந்தப்பதிவு ....!.

ரசனையின் உச்சமான இந்த இரண்டு பதிவுகளையும் படித்து முடித்தவுடன் எனக்கு இதுதான் தோன்றியது ....... அப்படியே ஓடிச்சென்று கட்டியணைத்து , உச்சி முகர்ந்து , நச்சென்று முத்தமிடத்தோன்றியது அந்த அழகான ரசனைவாதிகளின் கரங்களுக்கு.
    
பாடல் கேட்ட கதை – இளையராஜாவின்இயற்பியல் பகுதி - குமரன் .

வாரியார் – சித்திரமே செந்தேன் மழையே – தேவா சுப்பையா .

இந்த ஒரு பதிவு மட்டுமல்ல , இவர்கள் எழுதும் அத்துனை பதிவுகளுமே ரசனையின் உச்சம்தான். இவர்களைப் பற்றிய இந்தப்பதிவால்  நான் பெருமைப்பட்டுக்கொள்கிறேன் . மிக அழகான அனுபவத்தை தந்த தேவா அண்ணனுக்கும் , குமரன் அண்ணனுக்கும்( !) கடைநிலை ரசிகனின் கனிவான நன்றிகள் ...!

  


என்றென்றும் புன்னகையுடன்

ஜீவன்சுப்பு .

Jul 18, 2013

செம்மொழியான தமிழ்மொழியே ...!

“சொல்லுங்கண்ணேன் சொல்லுங்க” , “கொஞ்சம் நடிங்க பாஸ்” இந்த ரெண்டு நிகழ்ச்சிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் . ரெம்ப, ரெம்ப சுவாரஸ்யமான நிகழ்ச்சி . ரெம்ப சாதாரணமான விசயங்கள, மக்கள் எப்படி புரிஞ்சுவச்சுருக்காங்கன்னும் , எந்த மாதிரி அதை வெளிப்படுத்துராங்கன்னும் பார்க்கும்போது செம்ம காமெடியா இருக்கும் . (அடுத்தவங்க பல்பு வாங்குறத பார்க்குறது  யாருக்குத்தான் பிடிக்காது...! ).

இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும்போதெல்லாம் , எனக்கு ஓர் ஆச வரும் , மேற்படி நிகழ்ச்சி மாதிரி தமிழ்நாட்டின் ஏதாவதொரு ஊரின் பொது எடத்துல , படிச்ச பத்து பேர நிறுத்தி வெள்ளக் காகிதம் கொடுத்து, ஒரு பக்கத்துக்கு தமிழ்ல எழுதுங்க மக்களே ன்னு சொல்லனும்னு ...! அப்டி எழுத வச்சு, அதப்படிச்சுப்பாத்தோம்னு வைங்க.. ச்சும்மா சிப்பு சிப்பா இருக்கும் . வடிவேலு , சந்தானம் காமெடில்லாம் பிச்சை எடுக்கணும், அப்டி அதகளமா இருக்கும்.

சாமி சத்தியமா பத்துக்கு நாலு பேரு , நாலு வரிக்கு மேல தாண்டமாட்டாங்க ... சொச்சத்துல பாதி பேரு, வரிக்கு ரெண்டு எழுத்துப்பிழையோடு தான் எழுதிருப்பாங்க . எழுத்துப்பிழை தவிர்த்து , இலக்கணப்பிழை , சந்திப்பிழையல்லாம் பாத்தோம்னா ஒருத்தரும் தேரமுடியாது . அதுதான் இன்றைய நிலை .

பள்ளிப்பருவத்தோடு முடிஞ்சுபோச்சு தமிழ்ல எழுதுறது . கல்லூரில, கடமைக்கு ஒரு தாள் தமிழ் . மற்றபடி வேலைக்கு வந்த பிறகு எங்கும் ஆங்கிலம் . தமிழ்ல எழுதுரதுக்கான வாய்ப்பே இல்ல . ஏன், பொதுவா எழுதுறதுக்கான வாய்ப்பே இல்லாமப்போச்சு அல்லது போக்கடித்துவிட்டோம் . தினசரி நாம ஏதாவது எழுதுரோமான்னு யோசிச்சு பத்தா, கையெழுத்து போடுவத தவிர வேறெதுவும் இருக்குற மாதிரி தெரியல  . அதுவும் சில நேரங்கள்ல டிஜிட்டல் கையெழுத்து இல்லைன்னா பஞ்சிங் ன்னு ஆயிடுத்து . ரெண்டாவது, கையெழுத்துப் போடுரதையெல்லாம் எழுத்துலேயே சேர்க்கமுடியாது . கைக்கு வந்தத கிறுக்குறது தானே கையெழுத்து ...!

கடிதம் ..? காணமல் போன பட்டியல்ல கூட இன்னைக்கு கடிதம் என்ற ஒன்னைக் காணமுடியல  . திருமணப்பத்திரிக்கைகள் கூட இன்னைக்கு ஆங்கிலம் தாங்கி தானே வருது...! நேர்ல கொடுக்குற ஒருசிலர் , பேரே எழுதுறதில்ல, மொட்டையாத்தான் கொடுக்குறாங்க ...!

ஏதோ தப்பித்தவறி வலைப்பூவுல எழுதுறதுனால, வட மாநில நடிகைகள் சொல்வது போல  கொஞ்சும் கொஞ்சும் தமிழ் வார்த்தைகள் ஞாபகத்துல இருக்கு . இதக்கூட முழுமையான தமிழ் ன்னு சொல்லமுடியாது தமிங்கிலீஸ் தான் . கைப்பட காகிதத்துல எழுதும்போதுதான் நம்ம லட்சணம் நமக்கே தெரியுது .  இந்த காற்புள்ளி , அரைப்புள்ளி , ஆச்சர்யக்குறியெல்லாம் எங்க போடனும்னு தெரியாத தற்குரிகள்ல நானும் ஒருத்தேன்னு சொல்றதுக்கு வெட்கமாத்தான் இருக்கு. ஆனா அது தான் உண்மை . கொஞ்சம், நா எழுதுன பதிவுகள(!) படிச்சுப்பாத்தா , கோபிநாத் எப்டி நிமிசத்துக் பத்துத்தடவ வேற, வேற ன்னும் , சரிதானேன்னும் சொல்றமாதிரி, குறைந்தபட்சம் நாலு வரிக்கு ஒரு எடத்துலயாவது மூணு புள்ளியும் ஓர் ஆச்சர்யக்குரியும் போட்டிருப்பது நல்லாவே தெரியுது ...!

திடீர்ன்னு இவனுக்கு என்ன தமிழ்ப்பற்று வந்துருச்சுன்னு உங்களுக்கு தோணலாம், அதற்கு காரணம் சமீபத்தில படித்த ஒரு பதிவு . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் எனக்கு ரெம்பப்பிடிக்கும் . அவரயே ஒருத்தரு கயுவி,கயுவி ஊத்திருக்காரு . பரவலான வாசிப்பு அனுபவமும் , எழுதுகின்ற  அனுபவமும் இருக்க அவருக்கே இப்டின்னா ...?

சரின்னு இதப்படிச்சு முடிச்சு வீட்டுக்கு போனா அடுத்த அதிர்ச்சி அங்கே செலவுச்சிட்டையில காத்திருந்தது  ...!

பொதுவா , அம்மா எப்ப கடைக்கு போய் வந்தாலும் செலவுக்கணக்கு கண்டிப்பா எழுதீருவாங்க, அது அரரூவாயா இருந்தாலும் சரி ஆயிரம் ரூவாயா இருந்தாலும் சரி ...! பெரும்பாலும் நா வீட்டுல இருக்கும்போது என்னையதான் எழுதச்சொல்லுவாங்க . டாக்டர்களுக்கு போட்டியா அண்ணாச்சிக கிறுக்கீருக்கத, முட்டக்கிளாஸ் வெளக்கு வெளிச்சத்துல படிச்சு சிட்ட எழுதுறதுங்குறது சிறுவயதுல ஒரு பெரிய சவால் . உ.ப , து.ப ல்லாம் போட்டு சிட்டய முடிச்சா ரெண்டரையோ , மூனரையோ இடிக்கும். இதர செலவுன்னு போட்டு கணக்கு முடிக்கலாம்னா அம்மா வுடாது . யோசிச்சு யோசிச்சு கடசில கணக்கு நேர் பண்ணீரும் . அதுவரைக்கும் தூங்காது , தூங்கவும் வுடாது  ...! படிக்காட்டியும் , கொஞ்சம் வருஷம் முன்னாடி வரைக்கும்  இந்தியன் பாட்டி மாதிரி, ஒத்த ஒத்த எழுத்தா, அழுத்தி அழுத்தி எழுதி  அம்மா செலவு சிட்ட போட்டுட்டுதான் இருந்தாங்க  . இப்பத்தான் போடுறதுல்ல , உண்மைய சொன்னா போட முடியல. இப்பல்லாம், பெரும்பாலும் அண்ணாச்சி கடையில கூட ஆங்கிலத்துல தானே ரசீது தர்றாங்க, அதான் .  

நம்ம வீட்டுக்காரம்மா போன மாசம்தான் பட்டயப்படிப்பு முடிச்சு பட்டம் வாங்கி வீட்டுக்கு வந்துருக்காக . அதுனால இந்த மாச செலவு சிட்டய அவுகதான் எழுதீருந்தாக. அதுலதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது ....! அது .....


மல்லிகை சாமான் வாங்கிய வகையில் செலவு ருபய் : 1150.00

என்னம்மா இப்டி எழுதீருக்கன்னு கேட்டா , நா என்ன பண்றது தமிழ்ல எழுதி நாலஞ்சு வருசமாச்சு, காலேஜ்ல புல்லா இங்கிலீசுலதான் படிச்சேன் , எழுதுனேன் அதான் அப்டிங்குராக .
என்னத்தச்சொல்ல ...!

ஆங்கிலோ இந்தியன் வீடுகள்ல வேல பாக்குற படிக்காத வேலைக்கார அம்மாவுக்கு , ஆங்கிலம் பேசத்தெரியும் , ஆனா படிக்கவோ , எழுதவோ தெரியாது . அந்த மாதிரி ஆயிடுச்சு இன்னைக்கு நம்ம நெலம.


செம்மொழியான தமிழ்மொழியே
உனக்கிது பெரும் வலியே...!


வேண்டுகோள் : இந்தப்பதிவுல கூட நெறைய எழுத்துப்பிழை இருக்கலாம் . என்னன்னு சொன்னீங்கன்னா திருத்திக்குவேன் .

சிபாரிசு : “அம்மா ,ஆடு , இலக்கணம்” அப்டிங்க்குற தலைப்புல கட்டுரையாளர் / எழுத்தாளர் என்.சொக்கன், தமிழ்பேப்பர் தளத்துல தமிழ் இலக்கணத்தொடர் எழுதீட்டு வர்றார் . தேவைப்படுபவர்கள் (சு)வாசித்து எழுதிப்பழகலாம் .


Jul 8, 2013

ஏதேதோ எண்ணங்கள்...!


ஞானும் ஞானி ...!

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தவமிருக்கும் ஒவ்வொரு முறையும் , உறவுகளுடனும் , நட்புகளுடனும் இன்னும் கொஞ்சம் பிரியமாக நடந்துகொள்ளவேண்டும் , கோபத்தைக்குறைத்துக் கொள்ளவேண்டும் , பொறுமையாக இருக்கவேண்டும் , இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும், அழகனா, அமைதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று நல்ல எண்ணங்கள்  மனத்தில் தோன்றுகின்றது . ஆனால் , உடல் கொஞ்சம் கொஞ்சமாக நலமாக ஆரம்பிக்கும் அதேசமயம் மனம் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப்போக ஆரம்பித்துவிடுகின்றது.

அன்னக்கொடியும் அமீரும் ...!

அன்னக்கொடி படம் பார்த்த பின் அகில உலகத்திலேயே அளவில்லா ஆனந்தப்பட்டிருக்கக்கூடிய  ஒரே ஒருவர் – அமீர் . // என்ன மாமா தப்பிச்சுட்டோம்ல ....! //


ஹைய்யோ மானஸி ...!

லீலை படத்தின் ஒருகிளி பாடலில் பார்த்து ரசித்த “மானSEE”யை அதற்கப்புறம் எங்குமே ‘SEE’ர்க்கவில்லை . வெகு நாட்கள் கழித்து இதோ இப்பொழுது நகைக்கடை விளம்பரம் ஒன்றில் .
ஹையோ “மானSEE” ....! எவ்ளோ அழகான எக்ஸ்பிரசன்ஸ் ....! சான்சே இல்ல ....!


பிளாக்குல ட்வீட்டு ...!

சாலையில், நொறுங்கிய கண்ணாடிச்சிதறல்களை பார்க்கும் பொழுதும்  , ஆம்புலன்சின் அலறலை கேட்கும்பொழுதும் ஆக்சிலேட்டரின் வேகம் தானாகவே குறைந்துவிடுகின்றது .  // அன்னிச்சை செயலா ? இல்லை உயிர்பயமா ?  //


வலிக்குது ....!

பகல் பொழுதுகளில் வரும் உடல் உபாதைகளைக்காட்டிலும் , இரவுகளில் வரும் உபாதைகளுக்கு மட்டும் எங்கிருந்துதான் அப்படியொரு வலி வருகின்றதோ . யப்பா ...! முடியலப்பா முடியல...! வலி தாங்க முடியல ...!

பேச்சு எங்கள் மூச்சு ...!

விஜய் டிவியில் விரும்பி பார்த்த ஒரு நிகழ்ச்சி “ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” . அரைகுறை ஆடல் பாடல் நிகழ்ச்சியெல்லாம் ஆறு சீசன் தொடரும்போது, அவசியமான ஒரு நிகழ்ச்சி நிச்சயமாக அடுத்தடுத்து தொடரும் என்று எதிர்பார்த்தேன் . ஆனால் ஒரே ஒரு சீசனோடு முடித்துக்கொண்டது , ரெம்ப வருத்தமாகவும் , கோவமாகவும் இருந்தது .

கோவம் இப்பொழுது சந்தோசமாக மாறிவிட்டது . இதோ போன வாரத்தில் இருந்து அமர்க்களமாக ஆரம்பித்து விட்டார்கள் அடுத்த சீசனை . ஞாயிறுகளில் காலை பத்து மணி முதல் பதினோருமணி வரை ஒளிபரப்புகின்றார்கள் . தவறவிடக்கூடாத நிகழ்ச்சி , அவசியம் பாருங்கள் .

சென்ற சீசனின் வெற்றியாளர் விஜயன் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்த்தேன் . ஆனால் , கவித சூர்யா வழங்குகிறார் .நன்றாகவே தொகுக்கின்றார் . என்ன SO தான் பாவம் பாடய்ப்படுத்துகின்றது .


என்ன கொடும சார் இது ...?

மேற்படி நிகழ்ச்சியில் பேசிய ஒரு பேச்சாளர் , இந்திய வரலாற்றிலேயே என்று சொல்லுவதற்குப்பதிலாக , இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே என்று சொல்லிவிட்டார் ....! தொலக்காட்சிபெட்டிகளின் வீரியம் அந்த அளவு இருக்கின்றது ....! இன்னும் கொஞ்ச நாட்களில் மொத்தமாக மழுங்கடித்துவிடுவார்கள் .


என்றென்றும் புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு .