Apr 10, 2018

பேசாத வார்த்தைகள் : 04-2018
தண்ணீர் தட்டுப்பாடு , தண்ணீர்ப் போர் வருவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இப்போதைய பிரச்னை தண்ணீர் கலப்படம். இரண்டு நாளுக்கு முன் வாட்சப்பில் வந்த ஒரு சலனப்படத்தில் , மினரல் வாட்டரில் கால்சியமே இல்லை , பாருங்கள் என்று குண்டு பல்பை வைத்து குண்டு போட்டார்கள். சமீபத்திய இந்து பத்திரிக்கையின் நடுப்பக்கத்திலும் , தலையங்கத்திலும் தண்ணீர்க் கலப்படத்தை பற்றி கவலைப்பட்டிருந்தார்கள். கண்ணுக்கு புலப்படாத ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் துகள்கள் நாம் குடிக்கும் தண்ணீரில் கலந்திருப்பதாக ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கிறார்களாம் . எந்த நம்பிக்கையில் குழந்தை , குட்டிகளை பெற்று வைத்திருக்கிறோம் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் மழை பெய்தால் , ரோட்டில் மண்ணும் , சகதியும் படிந்திருக்கும். ஆனால் இப்பொழுது பிளாஸ்டிக் கவர் தான் பறந்து , பரந்து படிந்திருக்கிறது. வரும் காலத்தில் பிளாஸ்டிக் மழையே பெய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. கையை வீசிக்கொண்டு கடைகளுக்கு  செல்வதற்குப்பதில் , கட்டைப்பையை தூக்கிக்கொண்டு போனாலே போதும் நாட்டின் பாதி பாலிதீன்களை ஒழித்துவிடலாம். ஆனால் நம்முடைய அலட்சியமும் , சோம்பேறித்தனமும் எதிர்காலத்தை நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கிறது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சூரியனார் ஃபுல் பாஃர்மிற்கு வந்துவிட்டார். அதிகாலையில் , பச்சைத்தண்ணீரில் குளித்துக்கொண்டிருக்கும்போதே வியர்த்து கொட்டுகிறது. நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு இரண்டுமணி நேரம் நண்பகலில் டூ வீலரில் சுற்றி வீட்டிற்கு வந்தேன் , அடுத்த நான்குமணி நேரத்திற்கு உலகமே சுற்றிவிட்டது. “ஹீட் ஸ்ட்ரோக்” என்கிற வார்த்தையை சர்வ சாதரணமாக கேட்கமுடிகிறது . அடுத்த இரண்டு , மூன்று மாதத்திற்கு சூதானமாக இருந்துகொள்ளவேண்டும் , இல்லையேல் பஸ்பம்தான். வெயிலுக்கு இதமாக இருக்குமே என்று இளநீர் குடித்தால் , அன்னிச்சை செயலாக கண் இளநீர்க்காரரின் கையை நோக்குகிறது. அருவி எஃபெக்ட். சரி சல்லிசாக கிடைக்கும் தர்பூசணியை சாப்பிடலாமென்றால் தர்பூசணியில் கெமிக்கல் , இன்ஜெக்சன் என்று சித்தமருத்துவர் சிவராமன் பீதியைக்கிளப்புகிறார். எல்லா பக்கமும் முட்டு சந்தாகவே இருந்தால் எங்கதான் போறது யுவர் ஆனர்...!!??
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சார்லி மற்றுமொரு ஃபீல் குட் மலையாளப்படம். 


பேஃஸ்புக் குரூப்பில் சிலாகிக்கப்பட்டிருந்த சார்லியை பார்த்தேன் , பார்க்கிறேன் . பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நேற்றையைப் பற்றிய கவலையும், நாளையப் பற்றிய பயமும் இல்லாமல் அன்றைய, அப்போதைய நிமிடத்தை அனுபவிக்கும் தேசாந்தரி சார்லியாக துல்கர். முன்பின் தெரியாதவர்களுக்கு, தேவைப்படும் நேரத்தில் தக்க உதவிகளைச் செய்து சம்பந்தப்பட்டவர்களை சந்தோஷப்படுத்தி , சலனமில்லாமல் அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்ந்து கொண்டே இருக்கிறார் . துல்கருக்கு அந்தத் தாடி ஆப்டாக இல்லை . மற்றபடி மனுஷன் நடிப்பில் குறைவைக்கவில்லை. இந்த கதாபாத்திரத்தில் பஹத் நடித்திருந்தால் இன்னும் பெட்டரா இருந்திருக்குமே என்றொரு எண்ணம் வந்துபோனது. சமீபமாக பஹத் பித்து பிடித்தாட்டுகிறது. 

வேலை , வீடு , பேஃஸ்புக் , வாட்சப் என்று செட்யூல்டு வாழ்கையை வெறுத்து , புதிய மனிதர்களையும் , இடங்களையும்  கலையையும் தேடித்தேடி நகரும் டெஸ்ஸா என்ற கதாபாத்திரத்தில் பார்வதி. பார்வையாளனின் மொத்த பார்வையையும் ஒத்தை ஆளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார் பாவை பார்வதி. என்ட மோளே என்னா நடிப்பும்மா ...! தடித்த பிரேம் கொண்ட மூக்குக்கண்ணாடி , பாதி வெட்டப்பட்டு காற்றில் கவிதை  வரையும்  கேசம் , ரிலாக்ஸ்டான ட்ரெஸ்சிங் , பெரிய சைஸ் மூக்குத்தி என்று  டெஸ்சாவின் அவுட்லுக் அட்டகாசமாக இருக்கிறது. கிட்டத்தட்ட அரை இன்ச் போல்டு சைசிற்கு இருக்கும் மூக்குத்தி மற்ற நடிகைகளுக்கு எந்த அளவிற்கு பொருந்தும் என்று தெரியவில்லை. சமீபத்தில் வந்த விக்ரம் வேதாவில் மாதவன் ஜோடியாக நடித்திருந்த ....ஸ்ரீநாத் “இருக்கு ஆனா இல்லை” என்பதுபோல  மெல்லியதாக மூக்குத்தி அணிந்திருப்பார்  அதைத்தவிர வேறெந்த நடிகையும் மூக்குத்தி அணிந்திருந்ததாக தெரியவில்லை. தர்ஷினிக்கு மூக்குத்தி அணிவிக்கவேண்டுமேன்று ஆசையுண்டு .அதற்கு முன்பாக காது குத்தவேண்டும்.

பிரதான கதாபாத்திரங்களின் சித்தரிப்பு , தமிழில் வெளிவந்த “180” ரூல்ஸ் கிடையாது என்ற படத்தினை நினைவுபடுத்துகிறது. சார்லி தங்கிச் சென்ற அறைக்கு குடிவரும் டெஸ்ஸா , காமிக்ஸ் போன்று வரையப்பட்ட ஒரு ஓவியத்தொகுப்பினை காண்கிறார். அந்த ஓவியம் ஒரு கதையைச் சொல்லி, பாதியோடு நிற்கிறது . கதையின் மீதியையும்,  சார்லியையும்  தேடி புறப்படும் டெஸ்ஷாவின் பயணமே மீதிப்படம். திருடன் , படகோட்டி, குஞ்சப்பன் , கனி என்று அனைத்து கதாபாத்திரங்களுமே கச்சிதம் . பத்ரோஸ் , குயின்மேரி எபிசோடு ஒரு துயரக் கவிதை .

ஓவியம் தொடர்பான காட்சிகள் வரும் போதெல்லாம் ஒலிக்கும் பின்னணி இசை பிரமாதம்.கோபி சுந்தரின் இசை கொடி கட்டிப் பறக்கிறது . மால்குடி சுபாவின் அமர்க்களமான குரலில் ஒலிக்கும் “அகலே யாரோ பாடும் பாடல்” கேட்பதற்கு ஆஹா...!!! .விஷூவல்ஸ் வாவ்.!!! சக்திஸ்ரீகோபாலனின் “புலரிகளோ” சுகம். மேற்படி பாடலின் ஆரம்பத்திலும் , இடையிடையேயும் ஒலிக்கும் இஸ்லாமிய சேர்ந்திசை கேட்பவர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்குகிறது. ஸ்ரேயாகோஷலின் “புதுமழை” – ஜன்னலோர சாரல்.
 
துல்கரின் அறை , அந்த ஸ்கூட்டர் ஓவியம் , மரப்படகு , சோமபானம் விற்பனை நடக்கும் வீட்டின் வெளிப்புறம் என்று படத்தில் அட போடவைக்கும் அஃறிணைகள் அதிகதிகம். ஆர்ட் டைரக்டருக்கு பூச்செண்டல்ல ஆளுயர மாலையே கொடுக்கலாம். படம் எடுக்கப்பட இடங்களுக்கு போக வேண்டுமென்ற எண்ணத்தினை அநேகக் காட்சிகள் , பார்வையாளருக்கு அன்னிச்சையாக ஏற்படுத்துவது ஒளிப்பதிவிற்கு கிடைத்த மகத்தான வெற்றி.

செல்போன் சிம்மை உடைத்து விட்டு தோழியிடம் பழிப்புக் காட்டுவது , புலரிகளோ பாடலில் வரும் தலையாட்டி பொம்மையின் அசைவிற்கேற்ப ஆடுவது , பூரம் திருவிழாவில் துல்கரிடம் தான் டெஸ்ஸா இல்லை என்று சொல்லி , அவரின் ஏமாற்றத்தை ஓரக்கண்ணால் ரசிப்பது என்று பல காட்சிகளில் பரவசப்படுத்துகிறார் பார்வதி. டேக் ஆஃபின் சமீராவே இன்னும் நினைவுகளை விடு அகலவில்லை. கூடுதலாக இப்பொழுது டெஸ்சாவும். பார்வதியின் மேஜிக்கை அனுபவிப்பதற்காகவே இன்னுமொருமுறை படத்தை பார்க்கவேண்டும். குறிப்பாக கிளைமேக்ஸில் வரும் தமிழ் வசனங்களும் , பார்வதி , துல்கரின் முகபாவங்களும் பால்பாயச முந்திரி. 

சார்லியில் வரும் எந்தவொரு முதன்மைக்  கதாபாத்திரங்களோடும் உங்களைப் பொருத்திக்கொள்ள முடியாது . அப்படியான கதாபாத்திரங்களை உங்கள் வாழ்வில் சந்தித்திருப்பதற்கான சாத்தியமும் சொற்பமே. ஆனாலும் படம் உள்ளுக்குள் ஊடுருவுகிறது.

 என்றென்றும் புன்னகையுடன்
 ஜீவன்சுப்பு.

Mar 27, 2018

பேசாத வார்த்தைகள் : 03-2018


மாநகரக் குப்பைகள் போல வந்து குவியும் வாட்சப் பகிர்தல்களில், எப்பொழுதாவது முத்துப்போல உருப்படியான தகவல்கள் சிக்குவதுண்டு, அப்படியொரு முத்துதான் “இட்லி தோசை”- (“ID”) நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவரின் காணொளி. ஜிமிக்கி கம்மலாலும் , புருவ உயர்த்தல்களாலும் மாநிலம் தழுவிய மதிமயக்கத்திற்கு வித்திட்ட மங்கையர்களை வழங்கிய, கடவுளின் தேசமான கேரள நன்னாட்டில் பிறந்த இளைஞர் தான் மேற்படி இட்லி தோசை நிறுவனர் முஸ்தபா. 


ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூலில் அவர் ஆற்றிய உரைதான் கட்செவி அஞ்சலில் பகிரப்பட்டிருந்தது . வழமையான பிசினஸ் வெற்றியாளர்களின் வீர உரை போலில்லாமல் , நாடி. நரம்புகளை புடைக்கவைத்து , கனவுலகில் கணநேர சூர்யவம்சம் சரத்குமாராய் “லாலா லாலா” பாடவைக்காமல் ரெம்ப எதார்த்தமான பேச்சு. மெல்லிய நகைச்சுவை இழையோட, மென்மையான குரலில் , தன்மையான உடல் மொழியோடு வழங்கிய உரை வசீகரம். பதினைந்து நிமிட உரையில் மூன்று முக்கியமான தகவல்களை முன்னிறுத்துகிறார். அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.
யூ டியூப் : https://www.youtube.com/watch?v=01_eOCGNYN8
இணையதளம் : https://www.idfreshfood.com/

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


சமீபத்தில் அலுவல் நிமித்தம் பெருந்துறை சென்றிருந்தபொழுது , மதிய உணவிற்கான உணவக விசாரிப்பில் கண்டடைந்தது சக்தி மெஸ். பெருந்துறை டூ கோவை பிரதான சாலையில் , சுங்கச்சாவடிக்கு அடுத்த நால் ரோட்டின் வலதுபுறம் கார்னரில் அமைந்துள்ளது குடிசை வேயப்பட்ட இந்தக் கடை. அரைமனதுடன் உள்ளே நுழைந்தால், கல்யாண வீடு போல , சாப்பிடுபவர்களின் பின்னால் நின்று கொண்டிருக்கிறார்கள் அசைவப் பிரியர்கள். பதினைந்து நிமிடக் காத்திருப்புக்கு பின் இருக்கையைக் கைப்பற்றி இரைப்பையை நிறைத்துகொண்டோம்.

சாப்பாடு கொஞ்சம் பதமாக இருந்தது , ஆனால் , அசைவச் சாப்பாட்டிற்கு அதுதான் சரியான பதமென்று பக்கத்து இலை பரிந்தார். குடும்ப உறுப்பினர்கள் , பெரும்பாலும் பெண்கள் இணைந்து நடத்துகிறார்கள். நாங்கள் சென்றிருந்த சமயம் கரை வேஷ்டிகள் கூட்டம் குழுமியிருந்தது. பக்கத்தில் கட்சி மாநாடாம். தண்ணீரோடு  கரைபுரண்டோடிய கரை வேஷ்டிகளின் கலாட்டாக்களை வெகு நாசூக்காக , சிரித்துக்கொண்டே சமாளித்த அக்காக்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்.  மட்டன் குழம்பு , மீன் குழம்பு , கோழிக்குழம்பு , எலும்பு ரசம் , தயிர் இதுதான் வரிசை. நிறைவாக பாயசமும் உண்டு. உணவகத்தின் சிறப்பே மசாலாதான். “இனியொரு விதி”யெல்லாம் செய்யாமல் அவர்களே மசாலா அரைத்து சமைக்கிறார்கள். வயிற்றிற்கும், பர்சிற்கும் பங்கமில்லாத கடை.

நல்லா கார சாரமாய் உணவருந்துபவர்களுக்கான அமுத சுரபி சக்தி மெஸ் . அதே நேரம் , காரம்னா காத தூரம் ஓடுபவர்களுக்கு உகந்த இடமல்ல இது. நல்லா ருசியா இருக்கே என்று நாட்டுக்கோழியுடன் ஒரு வெட்டு வெட்டி வெளியே வந்தால். நாக்கை வெட்டிப் போட்டுவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு காரம் கபடி விளையாட ஆரம்பித்துவிட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பால், பழம் தயிர் என்று சமாளித்து நாக்கை நார்மல் மோடுக்கு வரவேண்டியதாகிவிட்டது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


வழக்கம் போல, இந்த ஆண்டும் நியூ இயர் ரிசொல்யூஷன் நீர்த்துப்போயிற்று. தினசரி, வாரம், மாதம் , காலாண்டு என்று அட்டவணை எல்லாம் வக்கணையாகத்தான் போட்டேன். நடைமுறையில் பிம்பிளிக்கி பிளாக்கி ஆகிவிட்டது. “ஒரே ஒரு குருக்கள் வரார்”ன்ற மாதிரி  ஒரே ஒரு பதிவு , ஒரே ஒரு படம் அவ்வளவுதான். காலாண்டு முடிந்துவிட்டது. காலரைப் பிடித்து யாரும் கேட்கப் போவதில்லைதான் , இருந்தாலும் இதுபோல பொதுவெளியில் எழுதி வைக்கும்போது கொஞ்சம் உறுத்தல் வந்து பாதியையேனும் பாலோ செய்துவிடலாமே என்ற நப்பாசைதான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 


கடந்த வாரம், சென்டிமென்டல் பயணமாக பழனி போய் வந்தேன். இது மூன்றாவது வருடம் . நடராஜா சர்வீசில் , பேருந்து நிலையத்திலிருந்து பழனி மலை உச்சியை அடைவதற்கு  இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. இடையிடயே இளைப்பாறல் வேறு. உடம்பு வெகுவேகமாக பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. வழமை போல சேட்டன்களும் , சேச்சிகளும் சாரை சாரையாக படையெடுக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் கோவில்களில் இலவச தரிசன வரிசையில் போவதுதான் எளிதாகவும் , விரைவாகவும் இருக்கிறது . பணத்தைக் கொடுத்து எல்லாவற்றையும் எளிதாக, விரைவாக வாங்கிவிடவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அதிகரித்ததன் விளைவு இது. போலவே , மருத்துவமனைகள் , பள்ளிக்கூடங்களிலும். இது சரியான போக்காக தெரியவில்லை. கடந்த முறை போல அன்னதானத்திற்கு ஆசைப்பட்டு சிறையில் சிக்காமல் , உண்டச் சோறுடன் தப்பித்தாயிற்று . வெறும் கருப்பட்டிக் கூழை தகர டப்பாக்களிலும், பிளாஸ்டிக் டபாக்களிலும் அடைத்து பஞ்சாமிர்தம் என்று விற்பனை செய்யும் தேவஸ்தான கடைகளை முருகர் மன்னிப்பாராக. அதே  நேரம் மலையடிவாரத்தில், சித்தனாதன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் – அமிர்தம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

என்றென்றும் புன்னகையுடன்.,
ஜீவன்சுப்பு

Mar 22, 2018

பேசாத வார்த்தைகள் : 02-2018


பேசாத வார்த்தைகள் : 02-2018பயணமும், வாசிப்பும் தான் ஒரு மனிதனை முழுமையாக்குகின்றன என்று வாசித்த நினைவு. சத்தியமான வார்த்தைகள். குறிப்பாக திட்டமிடாத பயணமும் , வாசிப்புமே அனுபவத்தை அள்ளித்தருகின்றன. பயணம் சார்ந்த படங்கள் பெரும்பாலும் சிலாகிக்க தகுந்தவையாகவே இருக்கும் என்பது என் எண்ணம். பலதரப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட  கதாபாத்திரங்கள் படத்திற்கு  சுவாராஸ்யம் கூட்டும். தமிழில் வந்த எங்கேயும் எப்போதும் , அன்பே சிவம் இரண்டுமே எனக்கு மிக நெருக்கமான படங்கள் . குறிப்பாக எ.எ ல் வரும் பயணக் கதாபாத்திரங்கள் . தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட அழகான கவிதைக்கு ஒப்பானது .

நார்த் 24 காதம் என்ற மலையாளப் படத்தினை தீபாவளிக்கு முதல் நாள் நள்ளிரவில் பார்க்க வாய்த்தது. அழகான ஒரு ரோட் மூவி . ஃபகத் ஃபாசிலின் நடிப்பை மகேஷிண்டே பிரதிகாரம் மற்றும் ஐந்து சுந்தரிகளின் ஒரு எபிசோடில்  ஏற்கனவே பார்த்து ரசித்த அனுபவமுண்டு . மேற்படி படத்தை பார்க்க ஆரம்பித்த போது , யாருடா இது , ஃபகத்திற்கு போட்டியா நடிக்கிறான் என்று வியந்து , டைட்டில் கார்டில் ஃபகத் பேரை பார்த்து பல்பு வாங்கினேன். நம் வருங்கால முதல்வர்கள் எல்லாம் ஒன்று ஓவர் ஆக்டிங் செய்கிறார்கள் இல்லை ஆக்டிங்குற பேர்ல ஆக்ஸா பிளேடை நடு மார்பிலே சொருகுகிறார்கள் . ஃபகத் பாத்திரத்திற்கு தேவையான நடிப்பை ரெம்ப shuttle ஆக , ரசிக்கும் விதமாக கொடுக்கிறார்  . பெண் ரசிகைகள் அதிகமென்று கேள்விப்பட்டதுண்டு , சக ஆண்களுக்கே பிடிக்கும்போது பெண்களுக்கு பிடிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

படத்தின் ஆச்சர்யம் நாராயணியாக நடித்திருக்கும் சுப்பிரமணியபுரம் சுவாதிதான் . நெடுமுடி வேணு , ஃபகத் என Established நடிகர்களுக்கு மத்தியில் எறங்கி அடித்து அசத்தியிருக்கிறார் . So cute என்று சொல்லும்போதெல்லாம் So க்யூட்டாக கவர்கிறார். நல்லவேளை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிரயாணத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களுமே படத்தை அழகாக்குகின்றனர். நடிகர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு இசையும் , ஒளிப்பதிவும் பிரயாணம் செய்திருக்கிறது . இசை கோவிந்த் மேனன் . கிளைமேக்சிற்கு கொஞ்சம் முன்னே, பின்னிரவில் , காலிகட்டிலிருந்து நெடுமுடி வேணுவின் வீட்டிற்கு மூவரும் ஆட்டோவில் பிராயணிக்கும் பத்து நிமிடங்களும் உருக்கமான , நெகிழ்வான நிமிடங்கள். அந்த பத்து நிமிடங்களுக்கும் வரும் பின்னணி இசை ஒரு மென் சோகக் கவிதை . அதற்கடுத்த பத்து நிமிடங்கள் ஆதுரமான ஸ்பரிசம். கிளைமேக்ஸ் சுகம். அவசியம் பாக்கவேண்டிய ஒரு ஃபீல் குட் மூவி.

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு

Feb 18, 2018

பேசாத வார்த்தைகள் : 01-2018
வியாபாரம் , சந்தைப்படுத்துதல் தொடர்பான சுவராஸ்யமான , தரமான  கட்டுரைகள் தமிழில் குறைவு . தமிழ் இந்துவில் , சதீஷ் கிருஷ்ணமூர்த்தி ஒரு தொடர் எழுதுகிறார். பிராண்டிங் தொடர்பாக . வலிந்து திணிக்கும் எதுகை - மோனையையும், அடுக்கு மொழியையும் சகித்துக்கொண்டால் உங்களுக்கு நல்லதொரு கட்டுரையை வாசித்த திருப்தி கிடைக்கும். சமீபத்தில் ஒற்றை பிராண்ட் , பல பொருள்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஆசீர்வாத் என்கின்ற பிராண்டை கோதுமை மாவிற்காக விளம்பரப்படுத்திவிட்டு , அதே பிராண்ட் பேரில் அவர்களின் மற்ற பொருள்களையும் சந்தைபடுத்தும்போது எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. காரணம் , மக்களுக்கு ஆசீரவாத் என்றாலே கோதுமை மாவு என்ற பிம்பம் ஆழப்பதிந்ததுதான் . எனக்கு தெரிந்த இன்னுமொரு உதாரணம் . நீல்கமல் . நீல்கமல் என்றாலே பிளாஸ்டிக் என்று மக்களுக்கு மனதில் நின்றுவிட்டது. பிராண்ட் பவரை பயன்படுத்துகிறேன் பேர்வழி என்று ஸ்டீல் பிசினசிலும் நீல்கமல் என்றே இறங்கி தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள் . வேறொரு புதிய பிரான்ட் பெயரில் இறங்கியிருந்தால் இன்னும் சிறப்பான இடத்தை பிடித்திருக்கலாம்.

#############################################################################################
சூப்பர் சிங்கரின் அடுத்த அத்தியாயம் ஆரம்பாகிவிட்டது . இந்தமுறை ஆடிசன்ஸ் அக்கபோர்களை தவிர்த்து ஸ்ட்ரெயிட்டா செட்டுக்குள் இறங்கிவிட்டார்கள். முதல் எபிசோடை மறு ஒளிபரப்பில் பார்க்க நேர்ந்தது . அநியாயத்திற்கு  அபாரமாக பாடுகிறார்கள். சுமாரா(வா)ன  குரல்களை கூட்டி வந்து மெருகேற்றிய காலமெல்லாம் மலையேறி , ஏற்கனவே நன்றாக பாடுபவர்களை கூட்டி வந்து இன்னும் கொஞ்சம் வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள் .  அந்தவகையில் பார்த்தால் , குரல் தேடலோ , கண்டுபிடிப்போ இல்லை. இது பக்கா புரோமோஷனல். புதுக்கோட்டையிலிருந்து வந்திருந்த இருவர் பாடிய நாட்டுப்புறப்பாடலில் மண்மணம் தூக்கல் . உடல்மொழியாகட்டும் , குரல்வளமாகட்டும் ரெண்டுமே பிரமாதம் . ஜூனியர் நவநீத கிருஷ்ணன் , விஜயலட்சுமியாய் வருங்காலத்தில் வளம் வர வாய்ப்பு பிரகாசம். மற்றுமொரு போட்டியாளர் ஸ்ரீராமின் குரல் சத்யப்பிரகாசாய் ஒலிக்கிறது .காலி பெருங்காய டப்பா மாதிரி பிரியங்கா லொட லொடப்பதை மட்டும் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. தம்பீ..! டீ இன்னும் வர்ல என்று சொல்லி , ஜீ தமிழுக்கு தாவிய ஸ்ரீநிவாசை நாட்டாமை நாற்கலியிலிருந்து நீக்கிவிட்டார்கள் போலும்.
#############################################################################################
தர்ஷினிக்காக இணையத்தில் காணொளிப்படங்களை தேடிக்கொண்டிருந்தேன் . இன்ஃபோபெல்ஸ் நிறுவனத்தாரின் சிலபல வீடியோக்கள் கிடைத்தது . குழந்தைகளுக்கான தரமான அனிமேஷன் வீடியோக்களை தமிழில் தொடர்ந்து வழங்குகிறார்கள். அதில் “ஒரு பசுவின் கதை” என்ற ஒரு காணொளிப் படம் குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு படைப்பு . வாய்மை தான் கரு . அட்டகாசமான அனிமேஷன் , தரமான கிராபிக்ஸ் , செவியீர்க்கும் குரல் , நேர்த்தியான எடிட்டிங் என்று எல்லாம் கச்சிதமாக அமைந்திருக்கிறது.  ஓர் உணர்வுப்பூர்வமான குறும்படம் பார்த்த திருப்தி. பதினைந்து நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவை அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு காண்பிக்கவேண்டுகிறேன். கண்மணியும் , சுப்புவும் , பப்புவும் இப்பொழுது எங்கள் வீட்டில் சதா பேசிக்கொண்டும் , ஆடிக்கொண்டும் இருக்கிறார்கள்.
#############################################################################################
சமீபத்தில்  அருவி , மாயவன் என்று இரண்டு படங்களை பார்த்தேன் . அருவியை அயல் மொழிப் படத்தில் இருந்து உருவி எடுத்திருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டார்கள். என்னளவில் படம் சுமார் ரகம்தான் . இதுதான் உலகப்படம் என்றால் எனக்கெல்லாம் உள்ளூர்ப் படமே போதும். அருவி ஸ்டுடியோக்குள் என்டர் ஆவதிலிருந்து எக்சிட் ஆவது வரையிலான பகுதி காமெடி சரவெடி. மற்றபடி கண்ணைகசக்குவதும் , நெஞ்சை பிசைவதுமான முற்பகுதியும் ,பிற்பகுதியும் எனக்கு அவுட் ஆஃப் ஃபோகஸ்.
மாயவன் எனக்கு ரெம்ப்பப் பிடித்திருந்தது. சில காட்சிகளில் , சந்தீப் கிஷனை பார்க்கும்போது “குருவி தலையில் பனங்காய் போல” என்ற உவமை நினைவிற்கு வந்துபோனது. ஆதிரை என்ற பாத்திரத்தில், ஆரஞ்சு வண்ண சல்வாரில் அறிமுகமாகும் லாவண்யா திரிபாதி ஜோதியாய் ஒளிர்கிறார். உத்திரப்பிரதேசம் வழங்கிய தேவதை வாழ்க...! தண்ணீரை வாய் வைத்து உமிழ்நீரோடு கலந்து குடிக்கவேண்டும் என்று ஒரு வசனம் வருகிறது படத்தில் . அறிவியல்பூர்வமான செய்தியா இல்லை வாட்சப் வசனமா என்று தெரியவில்லை . முடிவு கொஞ்சம் குழப்பும் விதமாக இருந்தாலும் அவசியம் வரவேற்கப்படவேண்டிய முயற்சி. அருவியின் இரைச்சலில் மாயவன் மாயமாகிவிட்டதுதான் ஆகப்பெரிய கொடுமை .

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.