Nov 23, 2020

பேசாத வார்த்தைகள் #231120 ~ அனுவாவி பயண அனுபவம் !

பேசாத வார்த்தைகள் #231120 ~ அனுவாவி பயண அனுபவம் !


திருப்பூரிலிருக்கும் போதே அறியக் கேட்டிருக்கிறேன். வழக்கமாக கோவையில் பார்க்கக் கூடிய இடங்கள் என காலம்காலமாக மருதமலையையும், சமீபமாக வெள்ளிங்கிரி ஈஷாவையும் சொல்வார்கள். அதையும் தாண்டி அதிகம் பிரபலமாகாத ,  ஆனால் அவசியம் பார்க்கத்தகுந்த இடங்கள் அநேகம். அதில் அனுவாவி சுப்ரமணியர் கோவிலும் ஒன்று. மருதமலைக்கு நேர் பின்னால் அமைந்திருக்கிறது.



ஒரு மாதத்திற்கு முன்பாக அனுவாவி பயணம் பற்றி அலுவலகத்தில் பேச்செடுத்த போது நான் நீ என்று பத்து பேர் பக்கம் கைகளைத் தூக்கினார்கள். கடைசியில் ஒரு மாதமாக திட்டமிட்டு  கடந்த சனியன்று அலுவலக சகாக்கள் இருவருடன் சேர்நது மூவராக சென்று வந்தோம். அலுவலக சகாக்களுடன் செல்வதில் சில சகாயங்கள் உண்டு. அலுவலகத்தில் ஏற்படும் சிறு சிறு உரசல்கள் நெருப்பாய் பற்றி எரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள  இது போன்ற பயணங்கள் உதவிடும் என்று நம்புகிறேன். 





வடவள்ளியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் , காந்திபுரத்திலிருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது அனுவாவி. ஆனைகட்டி செல்லும் பிராதான சாலையிலிருந்து இடது புறமாகப் பிரிந்து ஒரு மூன்று கிலோமீட்டர் சென்றால் அனுவாவி முருகரின் அடிவாரம்.   மேற்படி மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கும் அனைத்து வீடு, கட்டிடங்களும் மின்சாரக் கம்பி கொண்டு வேலியிடப்பட்டிருக்கிறது. யானை இறங்குமிடமென்பதினால் உடமைகளையும் ; உயிர்களையும் பாதுகாக்கும் பொருட்டு மேற்படி நடவடிக்கை.





அடிவாரத்தில் பிரம்மாண்டமான  ஆஞ்சநேயர் வெட்டவெளியில் வீற்றிருக்கிறார். அவருக்கும் மி.க. வேலித்தான். சனிக்கிழமையானபோதும் , வேலி அடைக்கப்பட்டிருந்ததினால் தரிசிக்கவியலவில்லை. உடன்வந்த ஆஞ்சநேய சகாவிற்கு வருத்தம் அதில். பரந்து விரிந்த ஆல, அரச மரங்களின் நிழலில் , பத்து ரூபாய் கொடுத்து,  வண்டியை நிறுத்திவிட்டு மேலே ஏற ஆரம்பித்தோம். ஒப்பீட்டளவில் மருதமலையை விட படிகள் குறைவுதான். ஆனால், செங்குத்தான படிகள் அதிகதிக மூச்சைக் கோருகிறது. சுமாராக 500 முதல் 600 படிகளிருக்கும். நான்கைந்து இடங்களில் ஓய்வெடுத்துக்கொண்டு உச்சிக்குச் சென்றடைந்தோம். நாங்கள் சென்றிருந்த நாள் திருக்கல்யாண வைபவம் ஆகையினால் கரோனவையும் தாண்டிய கணிசமான கூட்டம். மாப்பிள்ளை அலங்காரத்தில் முருகரையும் , மணப்பெண்கள் அலங்காரத்தில் அவர்தம் மனைவி, துணைவியையும் தரிசித்தோம்.  90கிட்ஸ்கள் கவனத்திற்கு. தம்பதிகள் சகிதமாக இருக்கும் முருகரை தரிசித்தால் , திருமண பாக்கியம் விரைவில் கிட்டுமாம் .





முருக தரிசனம் முடித்து, அதனினும் உச்சியில் வீற்றிருக்கும் சிவனை வழிபட்டு, சிவனேன்னு சில நிமிடம் உட்கார்ந்து வந்தோம். முருகருக்கும், சிவருக்கும் இடையில் ஹனுமான் தீர்த்தமுண்டு. சுனை போலிருக்கும் அவ்விடத்தை இரும்புச் சட்டகம் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள் ,செல்ஃபிப் பலிகளை தவிர்க்கும் நடவடிக்கையாக இருக்கலாம். இந்த ஹனுமன் தீர்த்தத்தை வைத்து ஒரு வரலாறு சொல்கிறார்கள். சுவாரஸ்யமாக இருக்கிறது. அதாவது , ஹனுமான் சஞ்சீவி மலையை கொணர்ந்து கொண்டிருக்கும்போது, ஓய்விற்காக ஆன் தி வேயில் , இக்குன்றின் மேல் இளைப்பாறியிருக்கிறார். தண்ணீருக்காக தவித்திருக்கும்போது , முருகர் மனமிரங்கி , மலையிறங்கி தனது வேலால் மலையின் ஒரு பகுதியை குத்தியிருக்கிறார். அங்கிருந்து பீறிட்ட தண்ணீர் ஹனுமனின் தாகத்தை தீர்த்திருக்கிறது. ஹனுமனுக்கான ஊற்று . ஊற்றுக்கு வாவி என்றொரு பெயரும் உண்டாம். ஆக , ஹனுவாவி அது மருவி இப்போது அனுவாவி . பெயர்க்காரணம் முற்றிற்று. 




சிவன் சன்னதியில் காட்சி முனை இருக்கிறது. அங்கிருந்து செங்கற்ச் சூளைகள் சூழ்ந்த சின்னத்தடாக நிலபரப்பையும் , அரண் போல நீண்டு  தொடர்ந்து இருக்கும் மலைகளையும் , வானையும் பார்த்தல் பரவசம். இறங்கி வருகையில் கல்யாண விருந்தாக வெஜிடபிள் பிரியாணி வழங்கினார்கள். இரண்டு பொட்டலங்களை சுவீகரித்துக்கொண்டோம். முற்பகலில் மலை ஏறி பிற்பகலில் இறங்கினோம் . நல்ல வெயில் ஆனபோதிலும் கொஞ்சம் கூட சோர்வே இல்லை. மருதமலையை விட குளிர்ச்சியாக இருக்கிறது. தண்ணீர் ஃபிரீசரில் வைத்தெடுத்தது போல ஜில்லிடுகிறது. சொற்பமான செலவில் குடும்பத்தினருடன் சென்று வர தோதான இடம் அனுவாவி சுப்ரமணியர் கோவில்.



யானை பயம் மட்டும் உண்டு , மற்றபடி கயவர் ; காதலர் பயம் இல்லாமல் குழந்தை குட்டிகளோடு விஜயம் செய்யலாம். விசேடமற்ற பிறிதொருநாள் காலை வேளையில் வரவேண்டும். பனி படர்ந்த மலைகளையும் ; நகரும் மேகங்களையம் காண்பது அலாதியான அனுபவமாக இருக்கும். ஸ்தலம் இன்னும் கமர்சியலாக மாறாதபடியால், கடைகள் ஏதுமில்லை ; எல்லா நாளும் பிரியாணிக்கு உத்தரவாதமும் சொல்லமுடியாது. ஆகையினால் கையோடு தின்பண்டங்கள் , உணவுபொட்டலங்கள் , தண்ணீர்ப் போத்தல்கள் கொண்டு செல்தல் உசிதம். மலையிறங்கிய போது தான் கவனித்தோம் , அகஸ்தியர் ஆசிரமம் ஒன்று அடிவாரத்தில் இருக்கிறது. உள்ளே சென்று வந்தோம் , அகஸ்தியரின் சமகால வாரிசொருவர் , சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு ,  ஹாய் டியூட் என்று யாரிடமோ மொபைலில் வீடியோ சாட்டிக்கொண்டிருந்தார். சரியாக இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். காந்திபுரத்திலிருந்து தனி வாகனத்தில் புறப்பட்டால் ஒரு நான்கு மணி நேரத்திற்குள் சென்று திரும்பி விடலாம். 

ஊர் சுத்தீஸ் குருப்பீன் முதற்பயணம் சிறப்பாக நிறைவுற்றது. அடுத்தவாரம் பொன்னூத்து என்று திட்டமிட்டிருக்கிறோம். பார்க்கலாம் ✨



என்றென்றும் புன்னகையுடன்

ஜீவன்சுப்பு