Apr 15, 2013

நீயா நானாவும் – நானும் ...!
வழக்கமாக நீயா-நானாவில் பேசப்படும், விவாதிக்கப்படும் விசயங்களை நான் என்னுடனும் என் நடைமுறை வாழ்க்கையுடன் பொருத்திப்பார்ப்பதுண்டு . நேற்று ஒரு அருமையான, அவசியமான  தலைப்பை பற்றிய ஒரு விவாதம் . “கேட்ஜட்களால்” நாம் நடைமுறை வாழ்க்கை எந்த அளவு மாறியிருக்கிறது . நாம் கேட்ஜட்களுக்கு அடிமையாகிவிட்டோமா ...? என்ற தலைப்பில் விவாதம் போனது .

கேட்ஜட்ன்னா என்னன்னு  கொஞ்சம் நாளைக்கு முன்னாடிதான் தெரிஞ்சுகிட்டேன் . மனித வேலைகளை எளிமையாக்கும் எந்த ஒரு மின்னணு உபகரணமும் , இயந்திரமும்  கேட்ஜத்தானாம். அந்தவகையில பாத்தா செல்போன் , டிவி , கால்குலேட்டர் , கம்ப்யூட்டர் , இணையம் , மிக்சி , கிரைண்டர் , ஃபிரிஜ் னு எல்லாமே கேட்ஜெட் தான் . சரி நாம இதுல எதுக்காவது அடிமையாகி இருக்குறோமா, இதனால நமக்கு ஏதும் பாதிப்பிருக்கா , இல்ல நம்ம நேரத்த மிச்சம் பண்ணுதான்னு  ன்னு யோசிச்சு பார்த்தேன் . நிச்சயமா அடிமையாகி இருக்கேன்னு தான் தோணுது

நீயா நானா ஆரம்பிச்ச ஐந்து நிமிடங்களில் , “விஜய் டீவி பாருங்க அருமையானா ஒரு புரோகிராம் டெலிகாஸ்ட் ஆகிட்டு இருக்குன்னு” , எனக்கு தெரிஞ்ச நாலு பிளாக்கர் நண்பர்களுக்கு மெசெஜ் அனுப்புனேன் . அனுப்பி முடிச்சு நிகழ்ச்சியில மூழ்கிட்டேன் . ஒன்பதரை மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி பதினொன்னரை மணி வரை நீடித்தது . ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் செல்போன எடுத்துப் பாத்தேன்  , யாருன்னா ரிப்ளை அனுப்பிச்சுருக்காங்கலான்னு . நிகழ்ச்சி முடியும் வரை யாருமே அனுப்பல . ஒரு சின்ன ஏமாற்றத்துடன் படுக்கப்போயிட்டேன் . நடு சாமத்துல பாத்ரூம் போக எந்திரிச்சவன் செல்போன பாக்குறேன் ஏதாவது ரிப்ளை வந்துருக்கான்னு, அப்பவும் வல்ல . காலையில எழுந்தவுடன் பாத்தேன் அப்பவும் வல்ல . இதோ இப்ப இந்த பதிவ டைப் பண்ணிக்கிட்டு இருக்குற வர ஒரு ரிப்ளை கூட வல்ல. ஆரம்பத்துல ஏமாற்றமா இருந்தது இப்ப கோவமா மாறிடுச்சு , ஒருத்தர்கூட நம்ம மெசெஜ் ஜ  மதிக்கலையேன்னு . இந்த கோவம்  ஒருவகையான மன உளைச்சலை தருது . மெசெஜ் ஜ படிச்சவங்க கண்டிப்பா ரிப்ளை அனுப்பனும்னு அவசியம் இல்லைதான் . ஆனா ஏத்துக்க முடியல .

ரெண்டுமணி நேரம் செல்போன வீட்டுல மறந்து வச்சுட்டு போயிட்டு , திரும்பி வந்தோன்ன பாக்குற மொத வேல , எதுனா மெசெஜ் வந்துருக்கா , மிஸ்டு கால் வந்துருக்கான்னு பாக்குறதுதன். ஒண்ணுமே வல்லைனா அவ்வளவு தான் . ச்சே..! ஒருத்தருக்கு கூட நம்ம முக்கியமில்லையா ..? நம்ம ஒர்த்தே இல்லையா ? ன்னு என் மேலேயே எனக்கு கோவம் கோவமா வருது . எப்பவுமே போனும் , மெசெஜ் மா இருக்குறவங்கள பாக்கும் போது எரிச்சலும் , பொறாமையும் வருது . இந்த ஒலகத்துல இருந்து என்னைய மட்டும் தனியாக பிரித்து வைத்த மாதிரியும் , வெகுவாக அந்நியப்படுத்தப்பட்ட மாதிரியும் ஒரு உணர்வு . பேஸ்புக் ல  ஒரு போட்டோவும் , ஸ்டேட்டசும் போட்டுட்டு மறுநாள் போயி பாக்கும்போது கொறஞ்சது நாலு லைக்ஸ் ம் , ரெண்டு கமெண்டும் வந்திருந்தாதான் திருப்தியா இருக்கு , வாழ்வதற்கே அர்த்தம் இருக்குற மாதிரி ஒரு திருப்தி .  ஒண்ணுமே வரலைன்னா ...அய்யய்யோ அந்த வலிய சொல்லவே முடியாது . இதே கத தான் பிளாக்ல எழுதுற பதிவுக்கும் .

நாலு மாசத்துக்கு முன்னாடி வர பிளாக்ன்னா என்னன்னே தெரியாது . இப்ப பிளாக் ஆரம்பிச்சத்திலருந்து , தெனமும் கொறஞ்சது ஒரு மணி நேரமாவுது அதுல செலவாகிடுது. பிளாக் ஒப்பன் பண்ணி பாக்கலைனா அன்னைக்கு நாளே முழுமையடையாத மாதிரி இருக்கு . எதையோ இழந்த மாதிரி ஒரு உணர்வு  . ஆரம்பத்துல ஏதோ நம்ம அனுபவங்களையும் , எண்ணங்களையும் பதிவா போடலாம்னு நெனச்சு பதிவு போட்டவன் இப்ப பதிவு போடுவதற்காகவே அனுபவங்களையும் , எண்ணங்களையும் தேடுகிறேன் . பார்க்கும் எல்லாவற்றையும் பதிவாக போட மனம் துடிக்கிறது . தூங்கும் போது , படிக்கும் போது , குளிக்கும் போது என எல்லா நேரமும் இதே சிந்தனை . வேலை நேரம் முடிந்து , பிளாக் பாத்து வீட்டுக்கு போகும்போது மணி எட்டு ஆகிடுது . அம்மா இப்ப அடிக்கடி கேக்குது , என்னாச்சுப்பா ஆபிஸ்ல வேல அதிகமா ? மொகம் சொரத்தே இல்லாம இருக்கே...? ரெம்ப டல்லா இருக்கியேன்னு ..? என்ன சொல்வது அம்மாவிடம் . இத்தனைக்கும் ஆபீஸ்ல வேல ரெம்ப கம்மி , ஆஃப் சீசன் .

பிளாக் பாலோவ் பண்றதுனாலயும், பிளாக் ல எழுதுரதுனாலயும் நெறைய தெரிஞ்சுக்க முடியுதுதான்  , புது நண்பர்கள் கிடைக்கிறாங்கதான் . ஆனா அதற்கான விலை அதிகமா இருக்குதோன்னு கொஞ்சம் பயமாவும் இருக்கு . கை நீட்டி உதவி கேக்கும் பிசைக்காரனை உதாசீனப்படுத்திவிட்டு கோவில் உண்டியலில் பணம் போடுவதைப்போல , அக்கம் பக்கம் இருப்பவர்களை தவிர்த்துவிட்டு, அவர்களுடன் உரையாடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டு , எங்கோ அண்டை மாநிலத்திலும் , அண்டை நாட்டிலும் இருக்கும் யாருடனோ சாட் செய்வது உறுத்தலாக இருக்கிறது .

இந்த உலகத்தோடு கணினி வழியாகவும் , இணையம் வழியாகவும் , தொலைகாட்சி வழியாகவும் தான் இணைந்திருக்கிறேன். எங்காவது டூர் போனால் கூட இயற்கையை கண்களால் பார்த்து  காட்சிப்படுத்துவதைவிட காமிராக் கண்களில் தான் அதிகம் பார்க்கிறேன் , பார்ப்பவை அனைத்தையும் காமிராவில காட்சிப்படுத்த தோன்றுகிறது   . டூர் தராத சந்தோசத்தை, டூர் போட்டோவுக்கு பேஸ்புக்கில் கிடைக்கும் கமென்ட்சும் , லைக்சும் தருகிறது .

மொழி தெரியாத ஒரு புது ஊருல ஒருத்தர கொண்டு போயி விட்டுட்டு , எப்டி இருக்குன்னு  கேட்டா என்ன சொல்லுவாங்க ....? “கண்ணைக்கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கும்பாங்க ” . இப்பல்லாம் மொழி தெரியாத ஒரு புது ஊருல ஒருத்தர கொண்டு போயி விடணும்னு அவசியமே இல்ல , ரெம்ப சிம்பிள், செல்போன புடுங்கிட்டீங்கன்னா போதும். அதுவே கண்ணக்கட்டி காட்டுல விட்டதுக்கு சமம் தான் . ஒங்களுக்கு எத்தன போன் நம்பர் மனப்பாடமா தெரியும் .? எனக்கு மூணே மூணு நம்பர் தான் தெரியும் . இந்த கேட்ஜட்கள் ஞாபக சக்திய சுத்தமா மழுங்கடிச்சுடுச்சு . பஸ்ல நூறு ரூபா கொடுத்து ரெண்டு டிக்கட் போக , மீதி சில்லறையை வாங்கி மூணு மொற என்னுனாலும் கணக்கு பிடிபடவே மாட்டீங்குது . கடசில செல்போன் கால்குலேட்டர்ல தட்டி பாத்தாதான் கரெக்டா இல்லையான்னே தெரியுது .

சமீபத்துல ஒரு பதிவர் எழுதி இருந்தார் ... தமிழ்நாட்டுல மொத்தம் ஏழரை கோடி சினிமா விமர்சகர்கள் இருக்கறாங்கன்னு . அதுல ஒரு சின்ன திருத்தம், ஏழரை கோடி சினிமா விமர்சகர்கள் இல்லை ஏழரை கோடி நியூஸ் ரீடர்கள் இருக்கிறாங்கன்னு சொல்றதுதான் கரக்டு . செய்திகளை முந்தித்தருவதில் தொலைக்”கட்சி” களுக்கு மட்டும் போட்டியல்ல , நம் அனைவருக்குமே போட்டிதான் . எனக்கு ஒரு நியூஸ் தெரிஞ்ச ஒடனே அப்டேட் பண்ணனும்னு கையும் , நாக்கும்  அறிக்க ஆரம்பிச்சுடுது . பிளாக் , பேஸ்புக் , டுவிட்டர் , மெசெஜ்னு  அது எந்த மீடியமோ ஒடனே அப்டேட் பண்ணனும் . இது எதுவுமே இல்லையா இருக்கவே இருக்கு வாய் .

போனவாரம் தூரத்து நண்பர் ஒருவர், ஆபீஸ்க்கு வந்தவுடன் நேர எங்க கேபினுக்கு வந்தார் . அவரே பேச ஆரம்பிச்சார் .. இன்னைக்கு என்னாச்சு தெரியுமா ..? “காலைல ஆபீசுக்கு வந்துட்டு இருக்கும்போது , பீளமேட்டுக்கு பக்கத்துல ஒரு பெரிய ஆக்சிடன்ட் ..................................................................!
புதிய தலைமுறை நிருபரையும் விட விரிவாவும் , நுணுக்கமாவும் ஆக்சிடண்ட விவரிக்க ஆரம்பிச்சுட்டார் . பேசிகிட்டு இருக்கும்போதே சட்டுன்னு செல்போன்ல படம் பிடிச்ச வீடியோவ காமிக்குறார். ஏன் எங்ககிட்ட சொன்னாருன்னு தெரியல , சொல்லி முடிச்சு போயிட்டார்  . மதியம் பாத்தா வேறொரு கேபின்ல அதே ஆக்சிட்டேன்ட அதே மாதிரி சொல்லிட்டு இருக்கார் . மறுநாள் காலைல பேப்பரோட வந்தார் , பாத்தியா நேத்தே நான் சொன்னன்ல அது நியூசா வந்துருக்கு பார் . இந்த “நேத்தே நா சொன்னேன்ல” இருந்த அழுத்தத்த என்னால உணர முடிஞ்சுது . அவர் மட்டுமல்ல நா கூட நெறைய தடவ இப்டிதான் .

இந்த ஒலகத்துலேயே மிகப்பெரிய கெட்ட பழக்கம் எதுன்னு என்னைய கேட்டீங்கன்னா டீ.வி. யையும் , செல்போனையும் தான் சொல்லுவேன் . தண்ணியடிக்குரத விடுறதோ , தம்மடிக்குரத் விடுறதோ கஷ்டம் இல்லங்க டி.வி பாக்குறதையும் , செல்போன் பேசுறதையும் விடுறதுதான்  ரெம்ப கஷ்டம் . எதாவது ஒரு சேனல் பாத்துட்டு இருப்பேன் விளம்பரம் வந்துட்டா ஒடனே அடுத்த சேனல் அப்புறம் அதுக்கடுத்த சேனல் , இப்டியே இமைக்காம பாத்துட்டே இருப்பேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி வீட்டுல நடந்த ஒரு சண்டைல ரிமோட்ட தூக்கிபோட்டு ஒடச்சுட்டேன் , ஸோ, இப்பல்லாம் ஒரே சேனல் தான் பாக்குறேன் . சோம்பேறித்தனம் , யாரு எந்திரிச்சு போயி டி.வி ல சேனல் மாத்தறதுங்குற சோம்பேறித்தனம் . விளம்பர இடைவெளியம்போது கண்ண மூடிக்குவேன் . அது கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கு . அம்மாவும் , வீட்டுக்காரம்மாவும் ரிமோட் வாங்க சொல்றாங்க நா வாங்குறதா இல்ல. இதவிட பெரிய சண்டை வராமலா போயிடும் , கண்டிப்பா வரும் . ங்கொய்யால அப்டி வரும்போது டி.வி ய தூக்கிப்போட்டு ஒடச்சுடனும் , சனியன் அத்தோட தொலஞ்சுதுன்ன்னு நிம்மதியா இருக்கணும் .

நேத்து சென்னையிலருந்து நண்பன் புத்தாண்டு வாழ்த்து சொல்லி மெசெஜ் அனுப்பி இருந்தான் . சரி ரெம்ப நாளாச்சேன்னு பதிலுக்கு கூப்ட்டேன் , ரெண்டாவது கூப்பிடுக்கு அழைப்பில் வந்தான் . உற்சாகமா பேச ஆரம்பிச்சவன்ட்ட இருந்து  கொஞ்ச நேரத்துல ம் ம் ம்க்குற சத்தம் மட்டுந்தான் வருது , நா மட்டும் தான் பேசிட்டு இருக்கேன்  . என்னடான்னு கேட்டா, இல்லடா எங்க கம்பெனிக்கு அவார்ட் கொடுக்குறாங்க அதான் டி.வி ல பாத்துட்டு இருக்கேன் , நா ஈவ்னிங் கூப்ப்டட்டா ன்னு கேட்டுட்டு, நா பதில் சொல்றதுக்கு முன்னாடியே கட் பண்ணிட்டான் . ரெண்டு ஈவ்னிங் முடிஞ்சுது இன்னும் போன் வரல . யோசிச்சு பாத்தா நாங்கூட அப்டிதான் , சூப்பர் சிங்கர் பாக்கும்போது யாரும் கூப்ட்டாலும் எடுக்குறதே இல்ல . விளம்பர இடைவெளியம்போதுதான் பேசுவேன் . ஏன் எடுக்கலைன்னு கேட்டா பாத்ரூம்ல இருந்தேன் , சார்ஜ் போட்டுருந்தேன் , சைலண்டல போட்டுட்டேன்னு குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாம கூசமா ஒரு பொய் . வீட்டுக்கரம்மாவுக்கு தெரிஞ்சுடுச்சு , இப்பல்லாம் விளம்பர இடைவெளிகள் ல கூப்பிட பழகிட்டார் .

டிவி யாவது பரவால்லன்னு சொல்லலாம் , நமக்கு புடிக்குதோ இல்லையோ சேனல் போடுற புரோகிராமத்தான் பாக்கணும் , அதுக்கும் கரண்டு வேணும் . ஆனா இந்த செல்போன் இருக்கே , எத வேணும்னாலும் பாக்கலாம் , எப்ப வேணும்னாலும் பாக்கலாம் , கரண்ட் தேவையில்ல . கட்டற்ற சுதந்திரம் தவறான பாதைக்கு நம்மள இழுத்துட்டு போகுதோன்னு ஒரு கவல இருந்துட்டே இருக்கு. ஆனாலும் விட முடியல .

“அபியும் நானும்”ல பிரகாஷ் ராஜ் கேக்குற மாதிரி , நிலாவ எப்ப கடசியா ரசிச்சு பாத்தேன்னு என்ன நானே கேட்டுக்கிட்டேன் .....! ரெம்ப நேரம் யோசிச்ச பெறகும் தெய்வத்திருமகள் படத்துல நிலாவ ரசிச்சதுதான் ஞாபகத்துக்கு வருது . வீட்டு பால்கனில ஒக்காந்து  நிலாவப் பாக்கக்கூட  நேரம் இல்ல , இதுல எங்க போயி ரசிக்குறது .

சரி கடசியா யாரோட பிறந்தநாளுக்காவது அப்டியே கட்டிப்பிடிச்சு , கைகொடுத்து மனசார வார்த்தைகள விட்டு வாழ்த்தி இருக்கோமான்னு யோசிச்சு பாக்குறேன் . இல்லவே இல்ல. ஸ்மைலி படம் போட்டு ரெண்டுவரில ஒரு மெசெஜ் , விஸ் யூ ஹேப்பி பர்த்டே, அவ்ளோதான் . வெளிநாட்டுலயோ , வெளி மாநிலத்துலையோ இருந்த பேஸ்புக்ல ஒரு மெசெஜ் ஓவர் . இப்பல்லாம் காதல் மொட்டாவதும் , மலர்வதும் , இணைவதும் கூடிப்பிரிவதும் இப்டி எல்லாமே டெக்ஸ்ட் மெசெஜ்லதான் .

கடசியா யாருக்கு கைபட கடிதம் எழுதினேன் ...! ஞாபகமே இல்ல . கடிதமும் , கடிதம் கொண்டுவரும் தபால்காரரும் மறந்தே போய்விட்டார்கள் . இப்பல்லாம் பேனா பிடிச்சு ரெண்டு வார்த்தைகள் எழுதுவதற்கே ரெம்ப  கஷ்டமாக இருக்கிறது .

கடசியா, யாருக்கு பரிசு வாங்கி கொடுத்திருக்கிறேன் , எப்ப வாங்கி கொடுத்தேன்னு யோசிச்சு பாக்குறேன் . அப்டி ஒரு நிகழ்வு நடந்ததாவே ஞாபகம் இல்ல . வேகமான இந்த வாழ்க்கையில நமக்கு என்ன புடிக்கும்னே நமக்கு தெரிஞ்சுக்க நேரமில்ல , இதுல அடுத்தவனுக்கு என்ன புடிக்கும்னு தெரிஞ்சு , அத கடையில போயி வாங்கி ..... அட போங்கப்பா....! அம்பதோ நூறோ மொய் வச்சு , செயற்கையா போட்டோவுக்கு ஒரு போஸ் கொடுத்துட்டு  திரும்புவதுதான் வழக்கமாயிடுச்சு .

கேட்ஜெட்ஸ் இல்லாத ஒரு ஒலகத்த நெனச்சு பாக்கவே முடியல ...! ஃபேன் இல்லாம தூங்க முடியல , டூ வீலரும் , செல்போனும் இல்லாம வெளில போக முடியல , ஃபிர்ட்ஜ்ம் , கியாசும் இல்லாத சமையலறைகுள்ள போகவே முடியல . நாளுக்கு நாள் டிப்பெண்டன்ஷி அதிகமாயிட்டே போகுது . ஈ வேஸ்ட்டும் தான் .

டெக்னாலஜி வளர்ந்துடுச்சுன்னும்  , ஒலகம் ரெம்ப சுருங்கி உள்ளங்கைக்குள்ள வந்துடுச்சுன்னும் சொல்றாங்க . வாஸ்தவம் தான் , உண்மையும் அதுதான் . அதேவேளையில், டெக்னாலஜியால உலகம் சுருங்கியதைவிட அதிகமாக மனிதர்களிடம் மனிதமும் , ஈரமும் , இரக்கமும் , இயல்பும், உடல் நலமும் , சகிப்புத்தன்மையும் , பொறுமையும் சுருங்கிவிட்டது என்பதும் உண்மை . மறுக்க முடியாத உண்மை .


27 comments:

 1. நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கீங்க, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா ...! வந்ததற்கும் ...வாசித்ததற்கும் .. வாழ்த்தியதற்கும் .!

   Delete
 2. //ஆரம்பத்துல ஏதோ நம்ம அனுபவங்களையும் , எண்ணங்களையும் பதிவா போடலாம்னு நெனச்சு பதிவு போட்டவன் இப்ப பதிவு போடுவதற்காகவே அனுபவங்களையும் , எண்ணங்களையும் தேடுகிறேன் .// அருமையான வரி...

  இப்போ எல்லாம் நீயா நானா பாக்குறத ரொம்பக் கம்மி பண்ணிட்டேன். ஏதோ செயற்கையா இருக்காது மாதிரி ஒரு உணர்வு. மற்றபடி நேத்து நீங்க மெசேஜ் அனுபினப்ப நான் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போய் இருந்தேன்.

  இயந்திரத்தனமான உலகத்துல நம்மாளையும் அப்படித் தான் இருக்க முடியுது... நம்மை சுற்றி எங்கும் இயந்திரம். வேலையே அதைக் கொண்டு நடக்கிறது. பார்க்காலாம் நம்மில் மாற்றம் எங்கிருந்து எந்த வடிவில் தொடங்கப் போகிறது என்று

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே ...! வந்ததற்கும் ...வாசித்ததற்கும் .. வாழ்த்தியதற்கும் .!

   Delete
 3. திருப்பூர் விழாவிலே சொன்னேன்... ஞாபகம் இருக்கா...? இப்ப தான் கொஞ்சம் ஆரம்பம்...! இன்னும் கொஞ்ச நாளில் சரியாயிடும்...!

  அடடா... பார்த்திடுலாம் என்று விஜய் டிவியை பார்த்தால் "படித்தவர்கள் - படிக்காதவர்கள் - நீயா நானா...! இது ஏற்கனவே பார்த்தாச்சே என்று மெசேஜ்யை அனுப்பிய நேரத்தைப் பார்த்தால் நேற்று 9.47 க்கு அனுப்பி உள்ளீர்கள்... ஹிஹி... மெசேஜ் பார்த்தது : இன்று காலைப் பத்து மணிக்கு அளவில்... (மன்னிக்கவும் ஞாயிறு அன்று மெசேஜ் உட்பட எல்லாமே Silent Mode தான்)

  ReplyDelete
  Replies
  1. மிக நல்ல பழக்கம் சார்

   Delete
 4. உண்மைதான்! பிளாக் எழுத ஆரம்பித்ததும் நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு ஏற்பட்டது! ஏதோ அடிமை ஆகிவிட்ட மாதிரி ஒரு உணர்வு! இப்போது கொஞ்சம் கட்டுப்படுத்தி குறைக்க முயற்சி செய்து வருகிறேன்! அருமையான பதிவு! நன்றி!

  ReplyDelete
 5. நன்றிண்ணா ...! வந்ததற்கும் ...வாழ்த்தியதற்கும் ..!
  ( நா எங்கப்பா வாழ்த்துனேன் ன்னெல்லாம் கேக்கப்புடாது .)

  ReplyDelete
 6. தொழில் நுட்பம் அடிமையாக்கிவிட்டதை நாம் அனைவரும் உணர்ந்துதான் இருக்கிறோம்.ஆனால் விடுபடத்தான் வழி தெரியாமல் திண்டாடுகிறோம்.

  ReplyDelete
 7. தம்பி... நேற்று நல்ல தலைவலி என்பதால் மாத்திரை போட்டுத் தூங்கி விட்டேன். காலைதான் கவனித்தேன் என்பதே நிஜம்! அதற்கப்புறமேனும் பேசியிருக்கலாம்தான். ஸாரி...! பதிவு எழுத ஆரம்பித்த புதிதில் யாரும் கமெண்ட் போட வரலையேன்னு எரிச்சலா வரும். நிறைய கமெண்ட் வர ஆரம்பிச்சதும், நாம எதிர்பார்‌க்கறவங்க கருத்திடலையேன்னு கோபம் வரும். இப்ப எல்லாம் சமநிலை ஆயிடுச்சு. தினமும் ஒரு மணி நேரம் வலைக்குன்னு ஒதுக்கிருக்கேன். அது மாதிரி டைம் ஒதுக்கிட்டு எதையும் அளவோட வெச்சுக்கிட்டா தப்பில்லங்கறத என் கருத்து. அருமையான எழுத்து நடை இந்தப் பதிவில் ஜீவனுக்கு கைவரப் பெற்றிருப்பதைக் கண்டுமகிழ்ந்தேன். தொடர்வதற்கு வாழ்த்துக்கள்!

  ஓய்விருந்தா என் இந்தப் பதிவை ஒரு கண்ணோட்டம் விடு தம்பி!

  http://minnalvarigal.blogspot.com/2012/03/blog-post_06.html

  ReplyDelete
  Replies
  1. அண்ணேன் பதிவு சூப்பர் .... நமக்கு மட்டுந்தேன் இப்டியோன்னு பயந்தேன் .... இப்ப சந்தோசமா இருக்கு ....! ஹி ஹி ....!

   Delete
 8. எல்லோரும் விரும்பும் நிகழ்ச்சியானாலும் மனதும் சற்று வலிக்கச்செய்கிறது

  ReplyDelete
 9. Dont worry.. This too will pass away :)

  ReplyDelete
 10. Nice penning bro

  ReplyDelete
 11. ஹைய்யோ!!!!

  அட்டகாசமான இடுகை! ஒவ்வொன்னும் உண்மையே!

  நான் செல்ஃபோன் வெறுப்பாளி. ஒப்புக்கு ஒன்னு வாங்கி வச்சுருக்கேன், இந்தியா வரும்போது பயன்படுத்த.

  அங்கெதான் செல் இல்லாதவள் புல் ஆச்சே:(

  டிவியும் பார்ப்பதில்லை. எப்பவாவது உள்ளூர் செய்தி மட்டும் விதிவிலக்கு.

  ReplyDelete
  Replies
  1. //அங்கெதான் செல் இல்லாதவள் புல் ஆச்சே:( //

   வாஸ்தவம்தான் ...

   //டிவியும் பார்ப்பதில்லை //

   டிவி பாக்கமா இருக்குறது ரெம்ப நல்ல பழக்கம் .

   Delete
 12. i can understand your feelings as a blogger ,i will try to post comments regularly, as well your points are very true ,i feel the same my cell phone and laptop is not there for 1 day means i could understand i do not have any work,i feel free .

  ReplyDelete
 13. ரொம்ப சரியாய் சொன்னீங்க....

  ReplyDelete
  Replies
  1. சரியை ஆமோதித்த செழியனுக்கு நன்றிகள் .

   Delete
 14. எதார்த்தமான வரிகளில் நிரம்பி இருக்கு பதிவு ஆனாலும் ஆங்காங்கே ஆழமான வெளிப்பாடுகள் அப்பட்டமாக வந்துபோகிறது ........இந்த நோயை சரி செய்ய புத்தகங்களை வாசியுங்கள் நல்ல வாசகன் சிறந்த எழுத்தாளன் ...உங்களுக்கு எழுத்து வசப்படுகிறது டிவி பார்ப்பதை குறைத்து விடுங்கள் செல்போன் அவசிய தேவைக்கு என்பதை அவபோது மனதிற்கு சொல்லிவிட்டு கைகளில் இருந்து விடுதலை கொடுங்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அக்கறையான கருத்துகளுக்கு நன்றி மேடம்ஜி ...!

   Delete

Related Posts with Thumbnails