Jun 26, 2013

கலவரக்காரனின் காதல் கடிதம் ...!






காதல் கடிதம் பரிசுப்போட்டியில் வலுக்காட்டாயமாக என்னை இழுத்துவிட்டதன் மூலம் , காதல் பூமியில் கலவரக்காரனை கட்டவிழ்த்துவிட்டான் சீனு ...! 

ஆங்கிலம் , பெண்கள் இரண்டுமே எப்பவும் எனக்கு அலர்ஜி தான் . ஆங்கிலத்தில பேசும்போது உணரும் அதே பதற்றத்தை பெண்களிடம் பேசும்போதும் உணர்வதுண்டு .  மனம் பதறி  தடதடக்க  ஆரம்பித்துவிடும் . காரணம் இல்லாமல் இல்லை, வீட்டிற்கு ஒற்றைப்பிள்ளை  . படித்தது குருகுலத்தில் . மொத்தத்தில் பெண்வாசமே இல்லை ....!

முப்பது  வருடங்களாக எனக்கு தெரிந்த , அறிந்த , பேசிய பழகிய ஒரே பெண் என் அம்மாதான் . அதிலும்  பதினைந்து வருடங்கள் விடுதி வாழ்க்கை . இப்பொழுது இரண்டு வருடங்களாக மனைவி . அதுவும் அம்மா வீட்டிலிருந்து படித்துக்கொண்டிருந்தவர்,  இரண்டு வாரங்களுக்கு முன்தான் என்னுடன் வந்து இணைந்துள்ளார் .

பெண்களுக்கும் எனக்குமான தொடர்பு வானுக்கும் பூமிக்குமானது . எப்பொழுதாவது பெய்யும் மழை தான் ஒரே தொடர்பு . அதிர்ஷ்டவசமாகவோ இல்லை துரதிர்ஷ்டவசமாகவோ இதுவரையில் என் வாழ்க்கையில் அப்படியொரு காதல் மழை பெய்யவே இல்லை , வறண்ட பாலைவனம்தான் . மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டபோதும் நான் எங்கேயோ போய் ஒளிந்துகொண்டுவிட்டேன் பயந்துகொண்டு ...!

இன்று பாலைவனத்தில் பெய்யப்போகும் இந்த காதல் மழை ஒரு கற்பனைக் கான(த)ல் மழை...!


“தேவி”யில் ஆரம்பித்து , “அன்பே”, “ஆருயிரே” என்று தொடர்ந்து , “அழகான ராட்சசியே” என்பது வரை ஆளாளுக்கு அவர்களின் காதலியை ஆயிரமாயிரம் விதங்களில் விளித்துவிட்டார்கள் . நான் எப்படி விளிப்பது என்று விழித்துக்கொண்டும், முழித்துக்கொண்டும் இருக்கின்றேன் . இப்படியே விழித்துக்கொண்டும், முழித்துக்கொண்டும் இருந்தால் தாடி வைத்த முரளி ஆவதற்கான அதிகபட்ச வாய்ப்புக்கள் இருப்பதாகப்படவே, இப்பொழுதே ஆரம்பிக்கிறேன் உனக்கான... இல்லை... எனக்கான இல்லை ... இல்லை...  நமக்கான காதல் கடிதத்தை ...!

…………………………………………..!

( உனக்கான வெற்றிடத்தை நீயே இட்டு நிரப்பிக்கொள் எனக்காக ...! ).

ஒருவழியாக கடிதத்தை ஆரம்பித்தாயிற்று. அடுத்து ....? வழமை போல காதலாகி கசிந்துருகவேண்டும் இல்லையா ...! இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லா இரவு முழுவதும் யோசித்துக்கொண்டே இருக்கின்றேன் .....! காதல் கசிந்துருகவில்லை , மெழுகுவர்த்தி உருகியதுதான் மிச்சம் . சரி , குறைந்த பட்சம் ஒரு கவிதையாவது எழுதலாமே என்று எழுத ஆரம்பித்தால்...! ஆரம்பித்தால்...? கவிதை அருவியாகக்கொட்டவில்லை,  வேர்த்துத்தான் கொட்டுகின்றது ...! என்ன செய்ய…? வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கின்றேன் ...?

கவிதையில் பொய் “அழகு” என்று சொல்கிறார்கள் . கவிதை எழுத ஆரம்பிக்கும் ஒவ்வொருமுறையும் உன்பெயரையே எழுதி முடிக்கின்றேன் என்று “அழகு” சொல்ல எனக்கும் ஆசைதான் ...! என்ன செய்ய...? எவ்வளவு முயன்றாலும் கவிதை மட்டும் வரவே மாட்டேன் என்கின்றது . ( அப்ப , கடிதம் மட்டும் நல்லா வருதாக்கும்னு மனதுக்குள் ஒரு நக்கல் விக்கல் எடுக்குமே..? ஐ நோ , ஐ நோ ..! ).

சரி சொந்தமாகத்தான் கவிதை எழுத முடியவில்லை , மதன் கார்க்கியையோ , நா.முத்துக்குமாரையோ காப்பியடித்து கவிதை எழுதலாம் என்றால் தன்மானம் தடுக்கின்றது . என்ன செய்ய ...? கோணலாக இருந்தாலும் என்னுடையதாக்கும் என்றே வளர்ந்துவிட்டேன்  ....! நோ ...! நோ ...! அதுக்காக கோணல் கவிதையெல்லாம் சொல்லி உன்னைக்கண்கலங்க  வைக்கமாட்டேன் ...! தைரியமாக மேலே படிக்கலாம் ....! ஹா ...! ஹா ...!

மொத்தத்துல என்னதாண்டா சொல்ல வர்ற ன்னு கேட்குமே உன் மனம் ...! என்னது கேட்கவில்லையா ...? ஆனால் என் மனம் கேட்கின்றது ...! பதில் தான் இல்லை என்னிடம் .  இதுதான் நான் என்று அறுதி உறுதியிட்டு எதையும் சொல்ல முடியவில்லை என்னால் . நிறம்மாறும்  பச்சோந்தியைப்போல மாறிக்கொண்டே இருக்கின்றேன் . நேற்றைய விருப்பம் , வெறுப்பு , கோபம் , பிரியம் , ஆசை எல்லாம் இன்று அப்படியே இல்லை அதே நேரத்தில் இல்லாமலும் இல்லை . நாளை எப்படி இருக்குமென்றும் தெரியவில்லை. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை . ( கமல் படம் பாத்துட்டு வந்து கடிதம்(!) எழுதியிருப்பானோன்னு மைல்டா ஒரு டவுட் வருமே ..! ஹா...! ஹா ...! ஐ நோ ...! ஐ நோ ...!).

எவ்வளவு தான் டார்ட்டாயிஸ் மாதிரி  சுத்தி சுத்தி யோசித்துப்பார்த்தாலும் முதன் முதலில் உன்னை எங்கே பார்த்தேன் என்று கண்டுபிடிக்க முடியாமல் ஆல் அவுட் ஆகிவிடுகின்றேன் . அதற்காக அப்படியே விட்டுவிடமுடியுமா ...? மீண்டும், மீண்டும் யோ...சிக்கி...ன்றேன் ....!

யுரேகா ...! யுரேகா ...! என்னை அழிக்க வந்த அணுகுண்டை கண்டுகொண்ட கணத்தை  கண்டுபிடித்துவிட்டேன் ...! ஆம் , நீயொரு அணுகுண்டுதானே...! என்ன, அணுகுண்டு மொத்தமாக அழிக்கும் , நீ அனு அனு வாக அழிக்கின்றாய் ..! அவ்வளவுதான் வித்தியாசம் .

தண்ணியடிக்க வரும்பொழுதுதான் முதன் முதலாக உன்னைப்பார்த்தேன் . நோ...! நோ...! அந்தத்தண்ணி இல்லம்மா, நம்ம தெரு முனையில இருக்கும் அடிபைப்பில் தண்ணியடிக்க வரும்பொழுது தான் முதன்முதலில் உன்னை  பார்த்தேன் . தப்புத்தப்பா யோசிக்கக்கூடாது, என்ன சரியா ...? பேசுறதையும் , எழுதுறதையும் பார்க்கும்பொழுது தண்ணியடிச்சுட்டு உளறுவது மாதிரி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலும் , அழகில்லாமலும் இருக்கும். உண்மை எப்பொழுதுமே பார்ப்பதற்கும் , படிப்பதற்கும் , கேட்பதற்கும் அழகற்று உளறுவது போல தானே இருக்கும் ...! 

அரைத்தூக்கத்தில் , அதிகாலை வேளையில் தண்ணியடிக்க வந்த என் மனம் தந்தியடிக்க ஆரம்பித்துவிட்டது நங்கை உன்னைப்பார்த்த பின். கிஞ்சித்தும் ஒப்பனையின்றி, தூக்கத்தில் கலைந்த முடி முன் நெற்றியில் நடனமாட ,  மங்கை நைட்டியை மடித்துக்கட்டி பக்கத்துவீட்டு அட்ராசிட்டி அத்தையிடம் நீ மல்லுக்கட்டிய பொழுதுதான் முதன் முதலில் உன்னைப்பார்த்தேன் . யப்பா ...!  நீ பேசியதெல்லாம் தேனாக காதில்  வந்து பாய்ந்தது என்று சொன்னால் என்னைப்போன்ற பொய்யன் இந்த உலகத்தில யாரும் இருக்கமாட்டார்கள்  , நீ பேசிய வார்த்தைகள் எல்லாமே ஈயத்தைக்காய்ச்சி ஊத்துவதை போலத்தான் இருந்தது . ஆனாலும் எனக்குப்பிடித்தது ... ஏனென்றால் நீ பேசியது உண்மையையும் , நியாத்தையும் . அந்த நிலையில்  உன்னைப் பார்த்ததும் காதலெல்லாம் வரவில்லை , கொஞ்சம் கலவரமாகத்தான் இருந்தது   .

அதற்கடுத்தடுத்த நாட்களிலும் அதிகாலையில் கொஞ்சம் பயத்துடனும் , கொஞ்சம் குறுகுறுப்புடனும் தண்ணியடிக்கவந்தேன் உன்னைப்பார்ப்பதற்காகவே. மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணி முகமூடி போட்டுக்கொள்ளாமல் வெகு இயல்பாக இருக்கும் நீயும் , உன் நடவடிக்கைகளும் எனக்கு மிகவும் பிடித்துப்போனது  .

தண்ணீர் மெதுவாக வருகின்றது என்று அனைவரும் வருத்தப்படும்போது எனக்கு மட்டும் சந்தோசம் கரைபுரண்டோடும், உன்னை இன்னும் சிறிது நேரம் பார்க்கலாமே என்று. விடுமுறை முடிந்து விடுதி திரும்பும் மாணவன் எப்படி பேருந்து மெதுவாகச் செல்லவேண்டும் , பள்ளி மெதுவாக வரவேண்டும் என்று மனத்திற்குள் எண்ணுவானோ, அதேபோல நானும் சமயங்களில் தண்ணீர் மெதுவாக வரவேண்டுமென்று எண்ணியம்துண்டு.  

எதிர்பார்த்த ஒரு நாளில் எனக்கு பிறந்த நாள் என்று ஆரஞ்சு மிட்டாயுடன் என் முன்னே நீ நின்றது இன்னும் என் கண்ணில் அப்படியே இருக்கின்றது . சம்பிரதாய வாழ்த்து கூட சொல்லாமல் , ஓ அப்படியா என்று உடல்மொழியில மட்டும் சொல்லிவிட்டு , மிட்டாயை மட்டும் எடுத்துக்கொண்டேன் . சில நாட்கள் ஆரஞ்சு மிட்டாயை அப்படியே வைத்திருந்து பின் சில பல வண்டுகள் தேனெடுக்க முயல்வதை அறிந்த அடுத்த நொடியே கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டேன்- என்ன செய்ய ஆசையும் , பொறாமையும் கொண்ட  சராசரி  மனிதன்தானே   நானும் ...!

நான் வண்ணத்திரையின் நடுப்பக்கத்தை புரட்டிக்கொண்டிருக்கின்றேன்,
நீயோ வண்ணதாசனை (சு)வாசித்துக்கொண்டிருக்கிறாய்.
நான் சத்தம் போட்டு பேசுவது எனக்கே கேட்கவில்லை ,
நீ ரகசியம் பேசுவது ஊருக்கே கேட்கிறது .
நான் அடங்கிக்கொண்டிருகின்றேன் ,
நீ வெடித்துக்கொண்டிருக்கின்றாய் .
நான் பேசாத வார்த்தைகள் தான் அழகென்கின்றேன் ,
நீயோ பேசும் வார்த்தைகள் தான் அழகென்கின்றாய் .
இப்படி அனைத்திலுமே நீயும் நானும் முரண்பட்டுத்தான் இருக்கின்றோம் ,
அதனாலென்ன ...? அனைத்திலும் ஒத்திருக்க நாமென்ன வியாபாரமா செய்யப்போகிறோம் ....!
காதல் தானே பண்ணப்போகின்றோம் ...!
காதலில் முரண் தானே அழகு ...!

ஒவ்வொரு காதலும் கண்டிப்பாக கல்யாணத்தில் தான் முடியவேண்டும் என்றோ , இல்லை கருமாதியில் தான் முடியவேண்டுமென்றோ அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை . அப்படிப்பட்ட காதல் தான் வெற்றிபெற்ற காதல், அமரக்காதல் , என்பதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை . காதலையும் கல்யாணத்தையும் என்னால் தொடர்பு படுத்தவே முடியவில்லை . நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொருவரை காதலிக்கின்றோம் . அதற்க்காக காதலிக்கும் அத்தனை போரையும் திருமணம் செய்து கொள்ளமுடியுமா இல்லை திருமணம் செய்துகொள்ளமுடியவில்லை என்று ஒவ்வொருமுறையும் மரித்துத்தான் போகமுடியுமா ...? நான் ஒரே ஒருவரை மட்டும் தான் என் வாழ்வில் காதலித்தேன் என்று யாராவது சொன்னால் அதை விட பெரிய வேஷம் வேறெதுவும் இல்லை என்றுதான் நான் சொல்வேன் .

ஒருவேளை பரஸ்பரம் விருப்பமிருந்தும் நாம் இணையமுடியாவிட்டாலும் , அதற்காக நான் வருந்தமாட்டேன் . நீயும் வருந்தவேண்டிய அவசியமில்லை . காதலின் வெற்றியை திருமணத்தின் மூலமும் , தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதின்மூலமும் மதிப்பிடுவது முட்டாள்தனமாகவே எனக்கு படுகின்றது . திருமணம் என்பதை  ஒரு சடங்காக, ஒரு விதிமுறையாகத்தன்  பார்க்கின்றேன் . வரைமுறை மீறாதாவர்களுக்கு விதிமுறை தேவையில்லை என்பவர்களின் எண்ணமே என் எண்ணம்  .

ஒருவேளை நாம் இணைந்தால் , நான் உனக்கு முழு சுததந்திரம் தருவேனென்று சொல்லமாட்டேன் . உனக்கான சுதந்திரமும் , உனக்கான கட்டுப்பாடுகளும் உன்னிடம் தான் இருக்கின்றது . உன் நிறை குறைகளுடன் உன்னை அப்படியே ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கின்றேன் . அதே போல் நீ என்னை அப்படியே  ஏற்றுக்கொள்ள மட்டுமே விரும்புகின்றேன் . உனக்காக நானும் , எனக்காக நீயும் ஏன் நமது தனிப்பட்ட விருப்பங்களை , வெறுப்புகளை மாற்றிக்கொள்ளவேண்டும் . எனக்கு அதில் உடன்பாடில்லை. வற்புறுத்துவதும் , வற்புறுத்தப்படுவதும் கூட வன்முறைதானே ? நீ நீயாக இரு நான் நானாக இருக்கின்றேன் . உனக்கு கொடுக்க என்னிடம் எந்த வாக்குறுதிகளும் இல்லை, கட்டுப்பாடுகளும் இல்லை . உன்னை ,உன் செயலை எனக்கு பிடித்திருக்கின்றது , நாம் இணைந்து வாழ்ந்தால் நான்றாக இருக்குமென்று தோன்றுகின்றது . உனக்கும் என்மீது காதலிருந்தால் , இணைய விருப்பமிருந்தால்,இணைய சாத்தியப்பட்டால் சந்தோசம் .

நாம் இணைந்தாலும் இணையாவிட்டாலும் , தனிமையான ஜன்னல் ஓரத்து பேருந்துப்பயணமும்  , பின்னிரவின் நிசப்தமும்  , தெருவோர குழாயடிச்சண்டையும் , மொட்டைமாடி தூக்கமும் , வண்ணதாசனின் புத்தகங்களும் ஆரஞ்சுமிட்டாயும் இன்னும் எத்தனை எத்தனயோ விசயங்கள் எப்பொழுதும் என் காதலை உயிர்ப்புடனேயே  வைத்திருக்கும் ...!


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு .


இது எனது  சொந்தப் படைப்பு என்று உத்திரவாதம் கொடுக்கின்றேன்  ...!


Jun 22, 2013

ஸ்ரீராம் பார்த்தசாரதி மீட்டும் ஆனந்த யாழ் ...!




ஆயிரக்கணக்கான திரைப்பாடகர்கள் இருந்தாலும் ஒரு சிலருக்கு ஒரு சில குரல்கள் மட்டும் ரெம்பப்பிடிக்கும் . அப்படி எனக்கு ரெம்பப்பிடித்த இருவரில் ஒருவர் “ஸ்ரீராம் பார்த்தசாரதி” மற்றொருவர் “பல்ராம்” . இருவருக்குமே தனித்தன்மையான குரல் . ஏதோ ஒரு வகையில் என்னைக்கட்டிபோட்டுவிடும் குரல்கள் இருவருடையதும்.

ஸ்ரீராம் குரலை எங்கு எப்பொழுது கேட்டாலும் எனக்கு பழைய அல்லது பால்ய நினைவுகள் தான் வந்து வருடும் . ஆங்கிலத்தில் NOSTALGIA என்று சொல்வார்கள் அதேபோலத்தான்  . அந்த நினைவுகளில்  சந்தோசம் , துக்கம் எல்லாம் கலந்தே வரும் , அது ஏனென்றே தெரியவில்லை . ஆனால் ரெம்பப்பிடிக்கும். அதனால் தெரிந்துகொள்ள ஒருபோதும் விரும்பியதில்லை ..

ஸ்ரீராம் குரல்ல எப்பவுமே ஓர்  Ancient Touch இருப்பதாகத்தான் எனக்குத்தோன்றுகின்றது . அது எந்தவகையான பாடல்களாக இருந்தாலும் சரி . “அதைக்கூடவா” என்று தொடங்கும் ஜெயம்கொண்டான் படத்தில் வரும் பாடல் , கஜினியில் “சுட்டும் விழிச் சுடரே” , கோ படத்தின்  – “வெண்பனியே” , பிதாமகனில் – “இளம்காத்து வீசுதே” என ஸ்ரீராம் பாடிய பாடல்கள் எல்லாமே கடும்குளிருக்கு இதமாய் இருக்கும் கம்பளி போல் அவ்வளவு பிடிக்கும் .

நேற்றுதான் முதல்முறையாக ராமின் “தங்கமீன்கள்” கேட்டேன் . யுவனின் ஆன்மாவிலிருந்து இசை என்று போட்டிருந்தார்கள் . உண்மைதான் மிகையில்லை . ஆல்பத்தில் மொத்தம் நான்கு பாட்டுகள் என்று நினைக்கின்றேன் . “ஆனந்த யாழ்” ஒரே ஒரு பாடல்தான் கேட்டேன் , கேட்கிறேன் , கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் . மற்ற பாடல்கள் கேட்கவே இல்லை . ஒன்றே  போதும் அவ்வளவு அற்புதமாக இருக்கின்றது  .

அப்பா தன் மகளை பற்றிப்பாடும் பாடல் . நிச்சயமாக அப்பாக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ரெம்ப்பப்பிடிக்கும் .. மிக எளிமையான , ரசனையான வரிகள் , அதிராத இதமான இசை இதையெல்லாம் விட ஸ்ரீராமின் மயிலிறகான குரல் .

இந்தப்பாடலை ராம் எப்படிக்காட்சிப்படுத்தப்போகிறார் என்று தெரியவில்லை . பறவையே எங்கு இருக்கிறாய் “ என்று கற்றது தமிழ் –ல் வரும் பாடல் காட்சியமைப்பு, நிச்சயமாக நான்றாகவே செய்வார் என்ற நம்பிக்கையை விதைக்கின்றது .


இதுவரை இந்த பாடலை கேட்கவில்லை என்றால் நிச்சயமாக் கேட்டுப்பாருங்கள் ....! ஒன்று உங்கள் குழந்தையின் நினைவுகள் வந்து போகும் இல்லை உங்கள் பால்யத்தின் அப்பாவுடைய  நினைவுகள்  உள்மனதில் வந்துமோதும் .

பாடல் வரிகள் இணையத்திலிருந்து ....

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

இரு நெஞ்சம் இணைத்து பேசிட,
உலகில் பாஷைகள் எதுவும் தேவை இல்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்,
மலையின் அழகோ தாங்கவில்லை.

உந்தன் கைகள் பிடித்து போகும் வழி,
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி

இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்.
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்,
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்.

தூரத்து மரங்கள் பார்க்குதடி,
தேவதை இவளா கேக்குதடி,
தன்னிலை மறந்தே பூக்குதடி,
காற்றினில் வாசம் தூக்குதடி அடி
கோவில் எதற்கு ? தெய்வங்கள் எதற்கு ?
உனது புன்னகை போதுமடி !

இந்த மண்ணில் இது போல் யாரு இங்கே,
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி !

ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
அடி நெஞ்சில் வண்ணம் பூசுகிறாய் !

உன் முகம் பார்த்தால் தோணுதடி,
வானத்து நிலவு சின்னதடி,
மேகத்தில் வரைந்தே பார்குதடி,
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி,

அதை கையில் பிடித்து ஆறுதல்
உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லப்படி !

இந்த மண்ணில் இது போல் யாரும்
இங்கே என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் !

நா.முத்துக்குமார் .

பாடல் ...



என்றென்றும் புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு .