Apr 9, 2013

கரு.பழனியப்பன் – ஒரு பார்வை ...!
“இருளும் , மவுனமும்” நிறைந்திருந்தால் அது ‘மணிரத்னம்’ படம் . “அன்பும் , பிரியமும்” நிறைந்திருந்தால் அது ‘ராதாமோகனின்’ படம் . “பிரமாண்டமும் , நடசத்திரங்களும்” நிறைந்திருந்தால் அது ‘சங்கரின்’ படம் . “வலியும் , துயரமும்” நிறைந்திருந்தால் அது ‘பாலா’வின் படம் . “காதலும் , மோதலும்” நிறைந்திருந்தால் அது கவுதமின் படம். “நக்கலும், நகைச்சுவையும்” நிறைந்திருந்தால் அது ‘ராஜேஸின்’ படம். “சுமோக்களும் , அரிவாள்களும்” நிறைந்திருந்தால் அது ‘ஹரி’யின் படம் . இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது என் அகத்தில். இந்த வரிசையில், “வசனங்களும் , வசனங்களும்” நிறைந்திருந்தால் அது “காவன் ரூனா பாவன் ழானா” வின் படம். இங்கு நான் குறிப்பிடும் “காவன் ரூனா பாவன் ழானா” என்பவர் இயக்குனர் கரு.பழனியப்பன் .

அவரின் முதல் படம் பார்க்கும் முன்பே அவர் மீது ஒரு பிரியம் ஏற்பட்டுவிட்டதென்னவோ  உண்மை . அதற்கு காரணம், முதலாவதாக, சக மாவட்டத்துக்காரர் ; இரண்டாவதாக, எனக்கு மிக பிடித்த தாடி மற்றும் கண்ணாடி ; மூன்றாவதாக, நறுக்கென்று பேசும் அந்த பேச்சு .

முதல் படமான பார்த்திபன் கனவில் ஆரம்பித்து கடைசியாக வெளியான மந்திரப்புன்னகை படம் வரை அனைத்தையும் விரும்பி பார்த்திருக்கிறேன் . “வீடுன்னா கலஞ்சு தான் இருக்கும் , வச்சது வச்ச எடத்துல இருக்க இது என்ன மியூசியமா” என்பதில் ஆரம்பித்து , “இருந்த இடத்தில் இருந்து பேசுறதுக்கு தான் செல்போன் கண்டுபிடிச்சாங்க , ஆனா நாம் ஏன்யா போன் வந்தோன்ன எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சுறோம்” ங்குற வரையிலும் வசனங்களாலே நிறைந்திருக்கும் “காவன் ரூனா பானா ழானாவின்” படங்கள் .  ஒவ்வொரு வசனமும் குத்திக்கிழிக்கும் கூர்மையான கத்தியை போன்றது.

கிரேசிமோகணும் , கமலகாசனும் இணைந்து கொடுக்கும் படங்களை பார்ப்பதற்கு ஒரு தனி கவனம் வேண்டும் . அடுத்தடுத்த நகைச்சுவை வசனங்களால் நம்மை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள் . முதல் நகைச்சுவைக்கு சிரித்து முடிக்கும் முன் அடுத்தடுத்து மூன்று நான்கு நகைச்சுவைகள் நம்மை கடந்து போய்விடும். அது போலதான் “காவன் ரூனா பானா ழானாவின்” படங்கள் . அடுத்தடுத்த வசனங்களால் நம்மை திணறடித்துவிடுவார் .

அட! ஆமால்ல, என்று ஒரு வசனத்தை பற்றி நாம் யோசித்துக்கொண்டிருக்கையிலேயே, அடுத்தடுத்த வசனங்களை வீசிக் கொண்டிருப்பார் . இவர் படங்களில் கதாநாயகன் மட்டுமல்ல கடைநிலை நடிகர் வரை பேசும் வசனங்கள் கூட அவ்வளவு பொருள் பொதிந்து இருக்கும். ஒவ்வொரு வசனத்தையும் கருவாய் வைத்து ஒவ்வொரு நீயா நானாவே வைக்கலாம் .

அவ்வப்போது நீயா நானாவில் “காவன் ரூனா பாவன் ழானா” பேசக் கேட்டிருக்கிறேன் , தனி மனிதராக இயல்பில் அவர் எப்படியோ அது எமக்கு தெரியவில்லை , தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை . ஆனால் மிக சுவராசியமாகவும் , சிந்திக்க வைக்கும் வகையிலும் பேசுகிறார் . ஒவ்வொருமுறை இவர் பேசும்போதும், அது எந்த விசயமாகினும் என்னை ஈர்த்து விடுகிறார் . இளைஞர்களுக்கு சுஜாதா சொன்ன பத்து அறிவுரைகளை ஒரு முறை மறு அறிவுறுத்தினார் . ஒருமுறை மதம் மாறி செய்த தன் காதலையும் கல்யாணத்தையும் சுவைபட கூறினார்.

கதாநாயகிகளின் பார்வையில் படம் சொல்லும் போக்கு தமிழ் சினிமாவில் அரிது . இவரது இரண்டு படங்கள் கதாநாயகிகளின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருகின்றது . பார்த்திபன் கனவு பிரிவோம் சந்திப்போம். இரண்டுமே படங்களிலுமே பெண்களின் பார்வையை மிக அழகாக படமாக்கியிருப்பார் . என்னை பொறுத்தவரை இந்த படங்களை ஒரு அழகிய இரண்டுமணிநேர கவிதையென்றே சொல்வேன் .

பிரிவோம் சந்திப்போமில் முதல் பாதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், அதன் நடைமுறை பழக்க வழக்கங்களையும் காட்டியிருந்தாலும், எந்த ஜாதிய, மத உணர்வுகளை புண்படுத்தாமலும், துதி படாமலும் காட்சிப்படுத்தியிருப்பார். தன் படங்களில் குணச்சித்திர நடிகர்களுக்கு இவர் தரும் முக்கியத்துவம் கவனிக்கப்பட வேண்டிய விசயம் . “பிரிவோம் சந்திப்போமில்” “எம். எஸ்.பாஸ்கரும்”, சமையல் காறராக வருபவரும் பேசிக்கொள்ளும் காட்சிகள் அவ்வளவு சுவராஸ்யமானவை . இரண்டாம் பாதியில் “ஜெயராமும்” , “கஞ்சா கருப்பும்” , “இளவரசும்” அதகளம் பண்ணியிருப்பார்கள் .

“இளவரசுவை”ப்போல டயலாக் டெலிவரி பண்ண வேறு ஆள் தமிழ் சினிமாவில் இல்லையென்றே நினைக்கின்றேன். “ஜெயராம்” , “இளவரசு”, “எம்.எஸ் பாஸ்கர்” அப்பப்பா எவ்வளவு திறமைசாலிகள்.  இவர்களுக்கு சரியான தீனி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை . “துப்பாக்கி” படத்தில் “ஜெயராமிற்கு” கொடுத்தது போல கோமாளித்தனமான கதாபாத்திரங்களை கொடுக்காமல் இருந்தாலே போதும்.

மந்திர புன்னகையில் ஒரு காட்சியில் , மருத்துவர் ஒருவர் “காவன் ரூனா பானா ழானாவை” பார்த்து இப்படி சொல்லுவார் .. “ஒட்டு மொத்த திறமையையும் நுனி நாக்கில் வைத்திருக்கிறாயே... விஷமாக “ என்று . உண்மை தான். நடிகர்களில் அஜித்தை போல , பின்விளைவுகள் பற்றி அலட்டிக்கொள்ளாமல், படபடவென்று பொரிந்து தள்ளிவிடுகிறார் பொது மேடைகளில் .

முதல் படமான “பார்த்திபன் கனவு” இரண்டாயிரத்து மூன்றில் வெளிவந்தது , இந்த பத்து வருடங்களில் மொத்தம் ஐந்து படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார் .இப்பொழுது “ஜன்னல் ஓரம்” என்றொரு படத்தை இயக்கி கொண்டிருப்பதாக கேள்வி. “கவுதம் மேனன்” போல அழகான தமிழ் பெயர்களை தம் படங்களுக்கு வைப்பவர் . கவுதம் படங்களின் பெயர்களை  ஒருவரிக்கவிதை என்றால் , கரு.பழனியப்பன் படங்களின் பெயர்களை ஒற்றை வார்த்தை கவிதை என்பேன்  . இவர் படங்களின் பாடல்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் . ( “கனா கண்டேனடி” , “ஆலங்குயில்” , “அற்றைத்திங்கள்” , “என்ன தந்திடுவாய்” , “விழியும் விழியும்”  “சித்திரையில் என்ன வரும்” , “இரு விழியோ” , “கண்டேன் கண்டேன்”, “சட சட சட “ .) ஒவ்வொன்றும் கிளாசிக்.

ஒரு முறை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் , “காவன் ரூனா பாவன் ழானாவிடம்” மதன் ஒரு கேள்வி கேட்டார் , ஒரு படத்திற்கும் மற்றுமொரு படத்திற்கும் நீண்டதொரு இடைவெளி இருக்கிறதே . அடுத்தடுத்து படங்கள் பண்ணி வாழ்க்கையில் செட்டில் ஆக ஆசையில்லையா...? என்று ... அதற்கு அவர் சொன்னது ...

செட்டில் ஆவதென்றால் என்ன ?

வித விதமான கார்களோ , நாலைந்து வீடுகளோ வாங்குவதா ?

அப்படியே வாங்கினாலும் ஒரே நேரத்தில் என்னால் எத்தனை வீடுகளில் வசிக்க முடியும்..? , எத்தனை கார்களில் பயணிக்க முடியும்..? . எனக்கு இதுவே போதுமானதாக இருக்கிறது . என் அப்பாகூட, என் அம்மாவிடம் வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார் , பழனியப்பன் படமே பண்ணவில்லையே , சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறான்..? , வருடத்திற்கு ஒரு படம் கொடுக்காவிட்டால் கூட சினிமா உலகம் மறந்துவிடுமே , எப்படி சமாளிக்கபோகிறான்..?  என்று . வயிற்றிற்காகவும் , வசதிக்காவும் என்னால் படம் எடுக்க முடியாது...என்று தொடந்தது அந்த பதில்.

“கெட்டவங்க எல்லாம் ஜெயிச்சுடுவோம்னு நம்புறாங்க , நல்லவங்க எல்லாம் தோத்துடுவோம்னு பயப்புடுறாங்கன்னு” ஒரு வசனம் “சதுரங்கம்” படத்தில் வரும் . பழனியப்பன்  நல்லவராகவே இருந்து ஜெயிக்கட்டும்.

“ஜன்னல் ஓரம்” காத்திருக்கின்றேன் காற்றுக்காக அல்ல கருத்தாழமிக்க வசனங்களுக்காக...!
14 comments:

 1. காவன் ரூனா பாவன் ழானா - 'செட்டில்' பற்றி நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்...

  1. அன்றாடங் காய்ச்சிகளுக்கு : "அத்தனைக்கும் ஆசைப்படு"

  2. ஞானிகளுக்கு : "ஆசையே துன்பத்திற்கு காரணம்"

  எல்லாவற்றையும் ஒரு நொடியில் மாற்றும் பணக்குழியில் விழாத வரை... இவை இரண்டையும் தெளிவாக புரிந்து வைத்திருக்கலாம்...

  ReplyDelete
 2. பதிவில் குறிப்பிட்ட பாடல்கள் அனைத்தும் இனிமையானவை... ரசிப்புக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. பார்த்திபன் கனவு பார்த்திருக்கிறேன்! அருமையான படம்! நல்ல இயக்குனரை பற்றிய நல்ல தகவல்கள்! பயனுள்ள பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மத்த படத்தையும் பாருங்க ...அருமையா இருக்கும்.

   Delete
 4. கரு பழனியப்பன் பற்றி அழகான திறனாய்வு செய்துவிட்டீர்கள்..அவரை நீயா நானாவில் பார்த்திருக்கிறேன்.பார்த்திபன் கனவு அவருடைய படம் என்பதும் எனக்கு தெரியாது. அவைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. //பார்த்திபன் கனவு அவருடைய படம் என்பதும் எனக்கு தெரியாது.//

   என்ன இப்பூடி சொல்லிபுட்டீங்க . நீயா நானா பார்ப்பவர்களுக்கு , கண்டிப்பாக
   கரு .பழனியப்பன் படங்கள் பிடிக்கும் .

   Delete
 5. பார்த்திபன் கனவு நான் மிக ரசித்த படங்களுள் ஒன்று. அவரின் மற்ற படங்களும் சோடைபோகாத படைப்புகள்தாம். கரு.பழனியப்பனை ரசித்து எழுதிய இந்தப் பகிர்வை நான் மிக ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. //அவரின் மற்ற படங்களும் சோடைபோகாத படைப்புகள்தாம். //

   நிச்சயமாக ...!

   Delete
 6. நல்ல பதிவு.. இனிமே இப்படங்கள் வந்தால் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. //இனிமே இப்படங்கள் வந்தால்//

   இனிமேல்லாம் இப்படங்கள் வராது . சி டி வாங்கி பாருங்க ...! சூப்பரா இருக்கும் .

   Delete
  2. /இனிமேல்லாம் இப்படங்கள் வராது/

   உங்க ஆஃபீஸ் கலீக் சொன்னது சரிதான் :))

   Delete
 7. அருமை அண்ணே! எனக்கும் அவரது படங்கள் பிடிக்கும்.

  ReplyDelete

Related Posts with Thumbnails