Feb 19, 2013

வாங்க சொர்க்கத்துக்கு போகலாம் ....!

நல்லது பண்ணுனா சொர்க்கத்துக்கு போகலாம் , அங்க பூ மெத்தையில தூங்கலாம் , வேண்டியது திங்கலாம் . கெட்டது பண்ணினா நரகத்துக்கு தான் போகலாம் அங்க எண்ணச்சட்டியில போட்டு எரிப்பாங்க , பட்டினி போட்டு வாட்டுவாங்க ..... இப்டி தான் சொர்க்கமும் நரகமும் சிறு வயதில் கற்பிக்கப்பட்டது . வெகு நாள் வரை அது நெசம் என்றே நம்பியதுண்டு . புஸ்தகத்தை படிப்பதை நிறுத்தி மனுசங்களையும் , இயற்கையையும் படிக்கும்போதுதான் தெரிஞ்சுது  அடடா , சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையிலல்லாவா நாம வாழ்ந்துட்டு இருக்குறோங்குறது  .  
அவரவர்களுக்கு என்று தனி தனி சொர்க்க நரகங்கள் இருக்ககூடும் . அந்த வகையில சொர்க்கம் என்பது எனக்கு .....

சொர்க்கம் நம்பர் ஒன்னு  :ச்சோ... ன்னு மழை கொட்டித்தீர்த்த ஒரு ராத்திரி பொழுதில்  , ஆள் அரவமற்ற ரோட்டுல , தேங்கா துருவலை தூவுவது போல அடிக்கும் சாரல்ல நனஞ்சுகிட்டே காதுல ஹெட்போன மாட்டிகிட்டு, அப்டியே இசைஞானி யோட  பூவே செம்பூவே பாட்ட கேட்டுட்டே நடந்தம்னா அடடா ...அது தாங்க சொர்க்கம் ... விடியும் வர நடக்கலாம் . இடையில ஒரு வயலின் பீட் வரும் பாருங்க .. யப்பா என்ன கம்போசிங் ...இசை பற்றிய அரிச்சுவடி கூட தெரியாட்டியும் ஒவ்வொரு முறை இந்த பாட்ட கேட்கும் போதல்லாம் ஒரு மியுசிக் கண்டக்டரா மாறி கைய காத்துல பறக்க விடுவதுண்டு . மொத்த ஆர்க்கெஸ்ட்ரா வோட  லைவ் வா இந்த பாட்ட கேட்கணும் . அப்டி கேட்டா அதான் சொர்க்கத்தின் உச்சம் .

சொர்க்கம் நம்பர் ரெண்டு :


பூம்புகார் போன்ற ஏகாந்தமான ஒரு கடற்கரயில , கதிரவன் கண்ணயரும் ஒரு மாலை பொழுதில் கடல் தொட்ட பாறையில ஒக்காந்துகிட்டு , நமக்கு ரெம்ப புடிச்ச புஸ்தகத்த கடற்காற்றோட சேர்த்து சுவாசிக்கும் சுகமே சுகம் . படிச்சுட்டு இருக்கும்போதே அலை வந்து கால் தொட்டு , கண்ணாமூச்சி ஆடிட்டு போகும் பாருங்க , அடடா ....அற்புதம் .

சொர்க்கம் நம்பர் மூணு :
பிறந்த கொழந்தையின் ஸ்பரிசம் . அப்பப்பா இதுதானப்பா சொர்க்கம் ... .. பிறந்த கொழந்தைய கையில தூக்குற போது ஒரு ஒருவிதமான பரவசம் வரும் பாருங்க ...அப்டியே அந்த பிஞ்சு கைய வச்சு மொகத்துல தடவுனாலும் சரி ஒதஞ்சாலும் சரி நெக்குருகி போவோம் .  இது மாதிரியான சொர்க்கங்கள் சாத்தானை கூட தேவனாக மாற்றிவிடும் .


சொர்க்கம் நம்பர் நாலு :சுகா ஒருமுறை எழுதி இருந்தார் ... நமக்கு புடிச்ச பாட்ட நாமலே போட்டு கேட்குறது சுகமில்ல ..எதிபாரா தருணத்துலவேறு யாரோ போட்டு நாம கேட்போம் பாருங்க அதான் சுகம் ..அப்டின்னு . முழுக்க முழுக்க நெசமான வார்த்தைகள் இது .
முன்பின் அறிமுகமில்லா ஊருக்கு போகும் ஒரு தனிமை பயணத்தில் , ஏதோ ஒரு கிராமத்தை கடக்கும் போது அங்கிருக்கும் டீ கடை ரேடியாவிலோ , இல்ல கோவில் திருவிழா மைக் செட்டுலோ  இருந்து நமக்கு ரெம்ப புடிச்ச ஒரு கல்யாண தேனிலாவோ இல்ல ஆகாய வெண்ணிலாவோ காத்துல கரைஞ்சு அப்டியே நம்மளையும் கரைக்கும் பாருங்க அதுதான் சொர்க்கம் . அந்தப் பயணம் எப்பவுமே மறக்காது .

சொர்க்கம் நம்பர் அஞ்சு :


எல்லாருக்குமே அவரவர் ரசனைக்கு ஏற்ப கற்பனை கதாபத்திரங்கள் மனதுள வச்சுருப்போம் ,
பேருந்து பயணத்துலயோ , திருவிழா கூட்டத்திலோ ,  நாம நம் மனதில் பதிஞ்சு வச்சுருக்க உருவத்துக்கோ , குணங்களுக்கோ ஒத்துப்போற ஒருத்தர  பாக்கும்போது அவ்ளோ சந்தோசமா இருக்கும் . பேச கூட தேவையில்ல , அந்த கற்பனை கதாபாத்திரம் நம் அடுத்த சில மணி நேரங்களை கொண்டாடிவிடும் . இது கூட ஒரு சொர்க்கம் தான் .

சொர்க்கம் நம்பர் ஆறு :


ரெம்ப காலம் கழித்து , நீண்ட பயணத்துக்கு அப்புறம் நமக்கு ரெம்ப புடிச்ச பிரியமானவங்கள சந்திக்கும் தருணம் ரெம்ப உணர்வுப்பூர்வமானது .வார்த்தைகள் மௌன விரதமிருக்க விரதமிருக்க , உணர்வுகள் ஆர்ப்பரிக்கும் அலாதியான தருணம் . இதுவும் ஒரு சொர்க்கமே .

சொர்க்கம் நம்பர் ஏழு :


 வருடம் முழுதும் ஹோட்டல் சாப்பாட்டு சாப்டு , விடுமுறைக்கு வீட்டுக்கு போனதும் அம்மா சமச்ச சாப்பட சாப்டுறதே ஒரு சொர்க்கம் தான் . அதுவும் ஒரு மழைக்கால வேலையில ஆட்டுக்கல்ல மாவாட்டி , வெறகடுப்புல இட்லி அவிச்சு அதுக்கு தொட்டுக்குறதுக்கு , அம்மில அரச்ச மசாலா போட்டு ஒரு வெங்காயக் கோஸ் வச்சு கொடுத்தாங்கன்னா அடடா அமிர்தம். நமக்கு விருப்பமானவங்க மருந்து கொடுத்தாவே விருந்து மாதிரி இருக்கும் அப்ப விருந்தே கொடுத்தா?  சொர்க்கத்துல ஒக்காந்து அமிர்தம் சாப்பிட்ட மாதிரி  இருக்கும் .

இன்னும் இது போல எத்தனை எத்தனயோ சின்ன சின்ன சொர்க்கங்களை அவசரகதியில் அனுதினமும் நம் கடந்து போகிறோம் , சொர்க்கம் என்று தெரியாமலே . தெரிந்தாலும் நின்று பார்த்து அனுபவிக்க நேரமில்லை. ஒருவேளை ராஜு முருகன் வட்டியும்  முதலில் , தவற விட்ட சொர்க்கங்களை பட்டியலிட்டால் அட ஆமால்ல ன்னு ஞாபகத்துக்கு வரலாம் .

இதுபோன்ற சொர்க்கங்கள் தான் வாழ்கையை அர்த்தப்படுத்துகிறது , அழகாக்குகிறது .

என்னங்க ... இது போல உங்களுக்கும் சொர்க்கங்கள் இருக்கும் தானே ? அப்றமென்ன வாங்க சொர்க்கத்துக்கு போகலாம் .


சொர்க்கங்களை தேடி வண்ணத்துப்பூச்சி பறக்கும் ....

Feb 15, 2013

நான் அவன் இல்லை ...!
ஒன்னு அறிவாளியா இருக்கணும்,  இல்லாட்டி முட்டாளா இருக்கணும் . ரெண்டும்கெட்டானா இருக்குறது ரெம்ப கஷ்டம் . அதுலயும் பெரிய கஷ்டம் என்னன்னா,  ஒரு ரெண்டுங்கெட்டான் சந்தர்ப்ப சூழ்நிலையால அறிவாளியா புரிந்துகொள்ளப்படுவதும் அதன்  தொடர்ச்சியா அறிவாளி பட்டத்த  தக்கவச்சுக்க அவன் படுற பாடும் . ( இத படிக்கும் போது , உங்க மைண்ட்ல “கும்கி பட தம்பி ராமையா” வந்தார்னா நீங்க ஒரு அறிவாளி பாஸ் . உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிட்டு தொடருங்க )


  
அமராவதிபுதூர் குருகுலத்துல படிக்குற (?) காலத்துல ஆறாப்பு லருந்து  பத்தாப்பு வரைக்கும் ‘இ ‘ பிரிவு தான் . அதென்ன லாஜிக்கோ படிக்காம ‘இ’ ‘ஈ’ ன்னு சுத்திக்கிட்டு திரியுற எல்லா பயபுள்ளைகளையும் இந்த , பிரிவுல தான் போடறாங்க . நான் படிச்ச பிரிவுல எல்லாருமே சுமாரு . அதுல நாம கொஞ்சம் சூப்பரான சுமாரு . இதுனாலேயே சுமாரான சுப்பையா , சூப்பர் சுப்பையாவா  அடையாளம் காணப்பட்டேன் ( வேலைக்கு வந்த பின்னாடி  சூப்பர்வைசர் சுப்பையா வா மாறி இப்ப மெர்ச்சண்டைசர் சுப்பையாவா அடையாளம் காணப்படுகிறேன்  .. ) .

ஒட்டுமொத்தமா எல்லா பிரிவையும் சேர்த்தா நான் ரெம்ப சுமாருதான் . இருந்தாலும் எங்க பிரிவுக்கு நாந்தான் நம்பர் ஒன்னு . (ஆல இல்லாத ஊருக்கு இலுப்பப்பூ சக்கர மாதிரி )சரி நாமளா சொல்லல , அவுங்களே நம்மள நல்லா படிக்குற பயன்னு சொல்றாங்க, அதனால ஒரு சாப்ட் கார்னர் கெடைக்குதுன்னு அப்டியே நல்லா படிக்குற புள்ளயாட்டமே நடிக்க ஆரம்பிச்சுட்டேன் . ஒம்பதாவது வர பிரச்சன இல்ல பத்தாவதுல வச்சாங்க ஆப்பு .

காரைக்குடி கம்பன் கழகத்துல நடக்குற மாநில அளவிலான திருவாசகம் , திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ல , என்னைய கேட்காமலே எங்க தமிழ் வாத்தியாரு எம் பேர கொடுத்துட்டாரு . மறுநாள் ஒரு பெரிய புஸ்தகத்த கொடுத்து நல்லா படி , நிச்சயமா நீதான் ஜெயிப்ப ன்னு சொல்லிட்டு போயிட்டாரு . புஸ்தகத்த பாத்தாவே கண்ண கட்டுது . எசகு பிசகா வசமா சிக்கிட்டேன் . நாள் நெருங்க நெருங்க பயம் அதிகமாகுது , ஒருவேள நாம டம்மி பீசுன்னு தெரிஞ்சு போச்சுன்னா ? நெனைக்கவே நெஞ்சடைக்குது . பேயறஞ்ச மாதிரியே சுத்திக்கிட்டு இருந்தேன் .

சரி முட்டி மோதி படிச்சரலாம்னு பாத்தா முடியல . வேப்பங்காயா கசக்குது . மறுநாள் காலைல போட்டி, திடீர்னு ஒரு கிரிமினல் யோசனை , உடம்பு சரி இல்லன்னு சொல்லிடலாம் . முடிவு பண்ணியாச்சு  , மொத நாள் நைட்டு வெங்காயத்த அக்குள்ள வச்சுக்கிட்டு , ராத்திரி பூரா எப்ப காச்சல் வரும் , எப்ப காச்சல் வரும்னு கொட்ட கொட்ட முழிச்சு கெடந்தேன் . மறுநாள் பெரிய நாடகத்த போட்டு போட்டிக்கு போகாம தப்பிச்சுட்டேன் .

அப்ப கூட எங்க தமிழய்யா என்ன சொன்னாரு தெரியுமா ? சுப்பையாவுக்கு ஒடம்பு சரியில்லாம போச்சு இல்லனா அவந்தான் பரிசு வாங்கிருப்பான்.. அடடா இன்னுமா இந்த உலகம் நம்புது ..
கடசி வரைக்கும் “கும்கி ராமையாவாகவே” குப்ப கொட்டி, கல்லூரிக்கு குடிபெயர்ந்தேன் .


 இப்ப கூட வேலைக்கு வந்த பின்னாடி , ஏதாவது அலுவலக கூட்டத்துல,  கூட வேல பாக்குறவங்க சொன்ன யோசனைய  நான் சொல்லும்போதோ , கீழ் வேல பாக்கும் நண்பர்கள்  தயாரித்த அறிக்கைய  கொடுக்கும் போது அதானால் கிடைக்குற பாராட்ட எனதாக்கி கொள்றேன் . பளிச்சுன்னு இல்லங்க இது என்னோட யோசன இல்ல என்கூட வேல பாக்குற ...... அவரோடதுன்னு , அவருக்கு தான் இந்த பாராட்டு போகணும்னு சொல்ல தயக்கம். நாம சொல்லாமலே , அவங்களா நம்மள அறிவாளியாக பார்க்கும் போது  நாமலே ஏன் வலிய போய் இல்லன்னு சொல்லணும் ங்கற எண்ணம் ஆழமா பதிஞ்சுருச்சு .

அதே சமயம் ஏதாவது பிரச்சனனாலோ , ரிப்போர்ட்ல தப்பு வந்தாலோ நான் இல்லன்னு ஒடனே பளிச்ச்ன்னு சொல்லி தப்பிக்க பாக்குறேன் . ஒன்னு மட்டும் நல்லா தெரியுது ந(ர)கரம் வாழக் கத்துக் கொடுக்குதோ இல்லையோ நல்லா பொழைக்க கத்துக்கொடுக்குது .

சரியான நபர்களுக்கு சரியான நேரத்துல பாராட்டும் அங்கீகாரமும் கிடைப்பது இல்ல . அதற்கு பதிலாக என்னை போன்ற கும்கி ராமையாக்கள் கவுரவிக்கப்படுகிறார்கள் .
இந்த ஒலகத்துல நெறைய கும்கி ராமையாக்கள் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறோம் .

காலம் போன கடசில , பாடுரதுக்கே கஷ்டப்படுற நேரத்துல சுசீலா அம்மாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது பெரிய அநியாயம் .

இதவிட பெரிய அநியாயம் தனுசுக்கு தேசிய விருது கொடுத்தது . தனுஸ் சிறந்த நடிகர் தான் , ஆனா அவர விட சிறந்த நடிகர்கள் நெறைய பேருக்கு கலைமாமணி கூட கொடுக்கப்படலை ங்குறது தான் கொடுமையே.

இதப் போலத்தான் சமீபத்துல,  தேர்ந்தெடுத்த மலர்களால் வலைச்சரத்துல மலர்ச்சரம் தொடுத்த நம் நண்பர் திடம் கொண்டு போராடும் சீனு , “தெரிஞ்சோ தெரியாமலோ” இந்த வாசமில்லா வண்ணத்து பூ (ச்சியையும்) வையும் சேர்த்து கட்டிவிட்டார் . அடையாளம் காணப்படாமல் , அங்கீகரிக்கப்படாமல் எத்தனையோ புதிய , பழைய பதிவர்கள் இருக்கும் போது  நான் அடையாளம் காணப்பட்டது ஒரு குற்ற உணர்ச்சியை தருகிறது . இந்த தெரிஞ்சோ தெரியாமலோவில் , நான் சீனுவின் பார்வையில்  தெரிஞ்சதாலயும் , மற்றவர்கள் தெரியாமல் போனதாலயும்  இந்த வண்ணமும் வலைச்சரத்தில் அச்சேறி விட்டது . இதனால் தான் யாருக்கும் நன்றி கூடச்சொல்லவில்லை .


சவுக்கு போன்ற வீரியமான வீச்சும் , கழுகு , ஆந்தை , வௌவால் போன்ற  விசாலமான பார்வையும் கொண்ட ராஜாளி பறவைகள் வசிக்கும் இந்த வலைப்பூ வனத்தில் , இந்த வண்ணத்துப்பூச்சியும் தன்  இருப்பை தெரிவிக்கவே இந்த வலைப்பூ . வண்ணத்து பூச்சியைபோலவே இந்த தளம் , பெயர் ஓர் கவர்ச்சியை தரலாம், ஆனால் நீங்கள் நினைப்பது போல் ...
நான் அவன் இல்லை” ..


வண்ணத்துப்பூச்சி பறக்கும் .....


Feb 2, 2013

வரப் போற விஸ்வரூபங்கள் ....!


 இப்போ     : என் மன வானில் எண்ணங்களாக ...!

விரைவா :  வலைப்பூவில் வண்ணங்களாக ....!

படத்துக்கு மட்டுந்தான் வெளம்பரமா..?  பதிவுக்கும் போடுவோம்ல ...!

அந்த தசாவதார விஸ்வரூபங்கள் ...!

1. நான் அவன் இல்லை ...!
 2. வாங்க சொர்க்கத்துக்கு போகலாம் ...!
 3. கருமத்தம்பட்டி டூ பூலாங்குறிச்சி - "வலி "- திண்டுக்கல் .
 4. களப்புக்கட...! வழியாக  ரிட்டர்ன் டு கருமத்தம்பட்டி .....!
 5.பறவையே எங்கு போகிறாய் ...?
 6.ஆனந்த விகடன் - ஃபுல் மீல்ஸ் டு வெரைட்டி ரைஸ் ... !
 7. இங்கு கொழந்தை தொழிலாளர்கள் தயாரிக்கப்படுகிறார்கள்.
 8. காவன் ரூனா சூனா பானாவின்  பார்வையில - காவன் ரூனா பாவன் ழானா...!
 9.டாலர் நகரமும்  நானும் - (.கா அண்டு நி.கா.)
 10. முரண்பாடு , சமன்பாடு , பெரும்பாடு .....!இதையெல்லாம்,  நேரடியாவே DTM  அதாங்க DTH மாதிரி ( DIRECT TO MAIL ) வெளியிடலாம்னு ஒரு ஐடியா இருந்துச்சு, ஆனா சில எதிர்ப்புகள் காரணமாவும் போனியாகதுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்னதாலும்  வலைப்பூவுலையே  ரிலீஸ் பண்ணிடலாம்னு தயாரிப்பு  தரப்புல முடிவு  பண்ணிருக்கோம் .

இந்த தசாவதார விஸ்வரூபங்கள் உங்களுக்கு எதுன்னா உடன்பாடில்லைனா நீங்க என்கிட்டே தான் சொல்லனும் . நாம  பேசி ஒரு சுமுகமா முடிவு பண்ணிக்குவோம் . என்ன சரிதானே . சரி சரின்னு மண்டய மண்டய ஆட்டிட்டு அப்ரமாட்டிக்கு "அம்மா" ட்ட போட்டுகுடுத்து பதிவுக்கே தட போட்டுடக்கூடாது . பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ...!

அப்டில்லாம் ஆகாது , ஒருவேள , ஒருவேள அப்டி எதுன்னா ஆச்சுன்னா, நா சகிப்பு தன்ம உள்ள ஆந்திரா , பம்பாய் ன்னு வேறு வலையுலகத்துக்கு போய்டுவேன் . அங்கயும் இல்லனா அடிமையா இருந்தாலும் , இறந்தாலும் பரவா இல்லன்னு ஆங்கில வலைக்கு போய்டுவேன் .

இந்த நேரத்துல என்ன பின் தொடர்ற அந்த பன்னிரெண்டு பேர்க்கு நா என்ன சொல்லிகிறேன்னா ....!

எவ்ளோ எதிர்ப்பு  வந்தாலும் சரி  , உங்க வலைல  வைரஸ் குண்டு  போட்டாலும் சரி  எந்த நேரத்துலயும் கொந்தளிச்சு யாரையும் தாளிச்சுற கூடாது.

என்ன சொல்றீங்க .. வலை மாறக்கூடாதா .. ச்ச ச்ச .. அது ஒரு கவலயில சொன்னது , கோவம் -லாம் இல்ல.

எப்பவும் அமைதியா இருக்கோணும் என்ன..? எப்பவுமே அகிம்சையும் , அமைதியும் தான் ஒசந்தது . ஜெய்கிந்த் ....!


( ஆகா ஆரம்பத்துல இருந்து கடசி வரைக்கும் எல்லாமே சமகாலத்தோட  ஸின்க் ஆகுதே . ஒலக மகா  ரசிகசிகாமணிகள் யாரும் ஒண்டிக்கு ஒண்டி வந்துடாதிங்கப்பா .. நா ஒரு டம்மி பீசு ...)

ஆனா ஒன்னே ஒன்னுஇந்த "நான் அவன் இல்லை" ங்கற விஸ்வரூபத்த மட்டும் சீக்கிரம் வெளில வுடனும் . நெறையப் பேருக்கு நன்றிகடன் தீக்கனும் .

எண்ணங்களும் , வண்ணங்களும் சேந்த  பின்னாடி, உங்க வூடு தேடி இந்த வண்ணத்துபூச்சி பறந்து வரும்.