Mar 29, 2013

செருப்பு தைப்பவரா..? சர்வீஸ் இஞ்சினியரா..?





அலுவலக வேலையாக மாதமிருமுறை கோவை செல்லவேண்டி வரும் , சென்ற வாரமும் சென்றிருந்தேன் . அந்த பயணத்தின் , பயணம் தந்த அனுபவத்தின் பகிர்வு இது .

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இறங்கி சிறிது தூரம் நடக்க ஆரம்பிக்கையில் கண்ணில் பட்டது அந்த காட்சி . எப்பொழுதும் நறுமணம் வீசும் மாநகராட்சி கழிவறையின் பின்புறம் , தரை சிதைந்து போன நடைபாதை ஓரமாக யாருக்கும் பயன்படாத நாலைந்து செருப்புகளும் , “சூ “க்களும் முன்னிருக்க , தைக்கவேமுடியாத கிழிசலான சட்டையுடனும் , எண்ணெய் என்றால் என்னவென்று கேட்கும் பரட்டை தலையுடனும் , கழிவறை சுவற்றில் சாய்ந்தபடி ஒரு முதியவர் பின்னிருந்தார் . அவர் கண்கள் கால்களை தேடிக்கொண்டிருந்தன. அது அடுத்த வேளை சாப்பாட்டின் தேடல் .

மேற்சொன்ன முதியவரை கடந்து செல்லும்போது ஏதேதோ எண்ணங்களும், எண்ணங்கள் தோற்றுவித்த கேள்விகளும்  தோன்றி மறைந்தன . இவர் முன்னிருக்கும் செருப்புகளும் , சூக்களும் எதற்க்காக ? எப்படி அது இவரிடம் வந்திருக்கும் ? செருப்பு தைப்பவர்கள் காலில் செருப்பு இருக்குமா ? இருந்தால் எங்கு வாங்கியிருப்பார்கள்?இப்பொழுதெல்லாம் அறுந்து போன செருப்பை எல்லாரும் தைத்து போடுகிறார்களா ?

வேலைக்கு வரும் முன், வீட்டில் வாங்கி கொடுத்த செருப்பு இனி தைக்கவே முடியாது என்கிற நிலை வரும் வரை பயன்”படுத்தி”யிருக்கிறேன் .வேலைக்கு சேர்ந்த சில வருடங்கள் , செருப்பு அறுந்தவுடன் தூக்கி போட்டுவிட்டு , அடுத்த செருப்பு வாங்கி கொண்டிருந்த நான், சமீபகாலமாக நன்றாக இருந்தாலும் இல்லையென்றாலும் வருடமிருமுறை புதிது புதிதாக வாங்கி கொண்டிருக்கிறேன் .எல்லாம் தனிமனித வருமானமும் , விளம்பரங்களும் , நுகர்வு கலாச்சாரமும் கொடுத்த தாக்கம் . மாதக்காய்சியான நானே இப்படி இருக்கையில் பெரும்பான்மையானவர்கள் இதே போல இருப்பதாகத்தான் நினைக்கின்றேன். 
(தனிப்புத்தியை பொதுப்புத்தியாக மாற்றும் தவிர்க்க முடியாத நினைப்பு இது)
அப்படி இருக்கையில் யார் வந்து இவரிடம் தைப்பார்கள்? எப்படி இவர்களின் இருப்பிடம் தெரியும் ? எவ்வளவு வருமானம் கிடைக்கும் ? இவர்கள் குடும்பம் எங்கு இருக்கும் ? இவர்கள் குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ? இப்படி ஏகப்பட்ட கேள்விகள்...

கேள்விகளுக்கு விடைதேடும் முன் என்னை அழைத்துசெல்ல வாகனம் வந்துவிட்டது , அந்த வேகத்தில் எழுந்து, உடையில் இருந்த தூசிகளை தட்டிவிட்டுக்கொண்டே கிளம்பிவிட்டேன் . அதன்பின் மாலை வரை கார்ப்பரேட் ஊழியனாக கடமையில் மூழ்கியதில்  , காலையில் தோன்றிய எண்ணங்கள் , கேள்விகள் எதுவுமில்லை, உடைகளின் தூசிகளை தட்டும் போதே, அதனுடன் சேர்ந்து அவைகளும் போயிருக்கூடும் .

வேலை முடிந்த மாலையில், வீடு திரும்ப மீண்டும் பேருந்துநிலையம் நோக்கி வருகையில், மிகச்சரியாக அந்த முதியவரை கடக்கும் பொழுது,எனது புதிய பேட்டா செருப்பு அறுந்ததை என்னவென்று சொல்ல...?

அறுந்தவுடன் முதியவருக்கு வேலை கொடுக்கப்போகிறோமே என்ற மகிழ்ச்சியை காட்டிலும் கோவமே மேலோங்கி இருந்தது. அது “பேட்டா” கப்பேனியை நினைத்து . வழக்கமாக “காதிம்ஸ்“ல் செருப்படுக்கும் நான் , “பேட்டா”வின் அதிரடி தள்ளுபடி அறிவிப்பில் அறிப்பெடுத்து இருநூறு ரூபாய்க்கு முன்னூறு கேள்விகள் கேட்டு வாங்கிய செருப்பது . இருபதே நாட்களில் காலிளித்துவிட்டது .

கோபத்தின் வெளிப்பாட்டில் முதியவர் முன்னின்று என் அறுந்த கால் செருப்பை உதறிவிட்டேன் . பெரியவர் அதை குனிந்து , பணிந்து எடுக்கும்போது கூனிக்குறுகிவிட்டேன் , எம் செயலை நினைத்து . எப்பவுமே எம் கோவமும் , ஆணவமும் , திமிரும் எம்மை விட அதிகாரத்திலோ , வசதியிலோ குறைந்தவர்களிடமே குவிகிறது . முனெச்சரிக்கையோ ? எம் செயலை அவர் கண்டுகொள்ளவே இல்லை . தன் வேலையில் தீவிரமாக இருந்தார் .
ஊசி , நூலெடுத்து அறுந்த செருப்பை தைக்கையில் எனக்கு தான் வலித்தது . தைத்து முடித்து புன்னகையுடன் என்னை பார்த்தார் . நான் கார்ப்பரேட்டில் பெற்ற அனுபவத்தில் , நன்றாக இருந்த எனது மறுகால் செருப்பை அவரிடம் கழட்டி கொடுத்தேன், இம்முறை கைகளிலே எடுத்து .

கழட்டி கொடுத்த செருப்பை முழுமையாக பார்த்துவிட்டு திருப்பி கொடுத்துவிட்டார் . நான்றாக இருக்கிறது என்றும் தைக்க தேவையில்லை என்றும் . ஒருவேளை பெரியவர் எம்.பி.ஏ படித்திருந்தால் நன்றாக இருந்த செருப்பையும் ஏதேதோ காரணம் சொல்லி தைத்து காசு பார்த்திருக்கலாம் .

இது நடந்து கொண்டிருக்கும் போதே தவழ்ந்தபடி வந்தார் மற்றுமொரு வறுமைக்கு வாக்கப்பட்டவர். வண்டி ரிப்பேராம் என்று கூறிக்கொண்டே அவர் கைகளில் இருந்த ஒரு பொட்டலத்தை பெரியவரின்

கைகளில் திணித்துவிட்டு போனார். அது மதிய சாப்பாட்டு பொட்டலம் . மணி மாலை ஆறரை .

கூலி எவ்வளவு என்று கேட்டேன் , நீ பாத்து கொடுப்பா என்ற பெரியவர் , பத்து ரூபா குடு கண்ணு என்று தன் இருகைகளையும் என் முன்னே நீட்டினார். வேதனையும் , புறக்கணிப்பும் , கவலையும் , ஏழ்மையும் , வறுமையும் , பசியும் , அவமானமும் ரேகைகளாக படிந்திருந்த  அந்த கரங்களில் பத்து ரூபாயை திணித்துவிட்டு நடந்தேன் .

வீடு வரும் வரை உறுத்திக்கொண்டே இருந்தது புதிதாக தைக்கப்பட்ட செருப்பும் , மனதும்.


எண்ணங்களின் நீட்சி :

செருப்பு தைப்பவர்கள் , குடை ரிப்பேர் பார்ப்பவர்கள் , பூட்டு ரிப்பேர் பார்ப்பவர்கள் , பிளம்பிங் வேலை பார்ப்பவர்கள் முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு வந்து செல்வார்கள் என்றும் , இபொழுதெல்லாம்  காணக்கிடைப்பதில்லை எனவும் பலமுறை பலபேர் அங்காலாய்த்து பார்த்ததுண்டு. சமயங்களில் நானும் .

ஏன் என்று யோசித்துபார்த்தோமேயானால் அதற்கு காரணம் நாமென்றே தோன்றுகிறது . ஒருவருக்கு கொடுக்கும்  மரியாதையும் ,மதிப்பும் அவர் குண நலன்கள் சாராது அவர் செய்யும் தொழில் கொண்டே  நாம் கொடுத்து வருகின்றோம் , அல்லது அப்படியே கொடுக்க பழக்கப்பட்டிருக்கிறோம் .

செருப்பு தைப்பவர் – செருப்பு தைப்பவனாகவும் , பூட்டு , குடை ரிப்பேர் பார்ப்பவர் – பழைய சாமான் ரிப்பேர் பார்ப்பவனாகவும் , பேப்பர் போடுபவர் – பேப்பர் போடுபவனாகவும் , சமையற்காரர் – சமையல்காரனாகவும் , பால் ஊத்தும் பெரியவர் – பால்காரனாகவுமே அழைக்க பழக்கப்படுத்துகிறோம் . அவர்களை வாசலோடு வழியனுப்ப கற்றுக்கொடுக்கிறோம் நம் குழந்தைகளுக்கு . அதே நேரம் மருத்துவர் , பொறியாளர் , கணக்காளர் , ஆசிரியர் சிலர் கேவலமான புத்தியையும் எண்ணங்களையும் கொண்டிருந்தாலும் புனிதராகவே பாவிக்கப்படுகிறார்கள் . அவர்களை இல்லத்திலும் இதயத்திலும் உயர்வான இடத்திலேயே வைத்திருக்கிறோம் . வைக்கச்சொல்லி கொடுக்கிறோம் . முன்னவர்கள் நம்மை தேடி வரவேண்டுமென்றும் , பின்னவர்களை நாம் தேடிப்போகவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது .

இப்படி தொழில் சார்ந்து ஒடுக்கப்பட்ட, சிறுமைப்படுத்தப்பட்ட  மக்களின் வாரிசுகளும் ஏன் இதே போல குலத்தொழிலே பார்க்க வேண்டுமென்று மனம் எதிர்பார்க்கின்றது..? சூப்பர்வைசராக இருக்கும் எமக்கு, இன்று நல்ல மரியாதையை கிடைத்தாலும் என் மகனோ , மகளோ மேனஜராக வேண்டுமென்று எண்ணுகின்றேன் . அதைபோலதானே அவர்களும் அடுத்த நிலைக்கு அவர்கள் குழந்தைகள் வர ஆசைப்படுவார்கள் . ஞாயம் தானே .

நம் வீட்டில் பழுதடைந்த குளிர்சாதனப் பெட்டியையோ ,தொலைகாட்சிபெட்டியையோ ,, அலுவலகத்தில் பழுதடைந்த இயந்திரத்தையோ சரி செய்து மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வருபவரை பொறியாளர் என்கிறோம் . அப்படி பார்த்தால் செருப்பு தைப்பவர்களும்  , பூட்டு, குடை ரிப்பேர் பார்ப்பவர்களும் பொறியாளர்களே . அவர்களும் சர்வீஸ் எஞ்சினியர்களே .




புதிய தலைமுறை இத்துறைகளை புரபசனலாகவும் , இம்மனிதர்களை மரியாதை மிக்கவர்களாகவும் அணுகட்டும்.

Mar 21, 2013

அய்யோ..! இங்க ஈர(ழ)மே இல்லயா...?





மத்திய அரசில் இருந்து திமுக விலகிக்கொண்டதற்கு , ஆளுக்கொரு காரணம் சொல்றாங்க ..

கபட நாடகம் – இது முதலமைச்சர் ,
மாணவர்கள் எழுச்சி – இது மீடியா,
அடுத்த எலக்சன் கூட்டணிக்காக – இது அரசியல் பார்வையாளர்கள்,
நாங்க ஏற்கனேவே எடுத்த முடிவுதான் – திமுக
ஆச்சரியம் , ஆனா அரசுக்கு ஆபத்தில்ல – நிதி அமைச்சரு .

என்னமோ போங்க , ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி சொல்றாங்க . ஆனா நிச்சயமா இவங்க யாரும் நல்லது பண்ண மாட்டாங்கன்னுதான் மட்டும் தெரியுது . ஆக மொத்தம் எல்லாரும் அரசியல் தான் பண்றாங்க .

இவங்க பண்ற அரசியல பாத்தா, உண்மையா போரடுரவங்களயும் பைத்தியக்காரனா மாத்திடுவாங்கபோல.

மாணவர்களே சூதானமா இருந்துக்கங்கபா  .
இல்லாட்டி உங்களையும் அவுங்க கூட்டத்திலையோ,
இல்லாட்டி மன நோயாளியாகவோ மாத்திடுவாங்க .

முந்தா நேத்து ஒரு டீ.வில ஒரு நேரலை விவாத நிகழ்ச்சி பாத்தேன் , திமுக ஆதரவு வாபஸ் வாங்குனதை பற்றி, ஒரு நாலஞ்சு  பேரு பேசுனாங்க ..இல்ல அடிச்சுகிட்டாங்க . எதுக்கு அடிச்சுகிட்டாங்க ? நாங்க ரெம்ப நல்லவங்க ன்னு அடையாளப்படுத்துரதுக்காக .

நிகழ்ச்சியில, ஜெனிவாவுலருந்து ஒரு பொது பங்கேற்பாளர் சொல்றாரு ,

“இந்தியா சார்புல மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதி வாய தெறக்கவே இல்ல , எல்லாரும் அவர் ஏதாவது பேசுவாருன்னு பாத்தா ..கடசி வர பேசவே இல்ல” அப்டின்னு .

அதுக்கு நம்ம காங்கிரஸ் மாண்புமிகு, கூலா சொல்றாரு , ஆமா பேசலதான்...,
இப்ப என்ன அவசரம் ? அதான் இன்னம் ரெண்டு நாள் இருக்குல்ல , கடசில கருத்து சொல்லுவோம் .அப்டிங்குராறு  .

கடசில கருத்து சொல்றதுக்கு , கரண்டு பில் கட்டுரதுக்காகவா போயிருக்கோம்னு...?
கத்தனும்போல இருந்துச்சு .
   
காலத்தையும் , மனிதர்களையும் பறிகொடுத்து நிக்குரவண்ட, அண்னேன் கடிகார கணக்கு சொல்றாரு .நீங்கல்லாம் நூறு வருசத்துக்கு நல்லா இருப்பீங்க  ...!

இவங்களையேல்லாம் நெனச்சு நம்ம நாமே நொந்துக்க வேண்டியதுதான் .வேறென்ன செய்ய ?

  
தமிழ்நாடு காங்கிரஸ்ல எத்தன கோஷ்டி, எத்தன தலவருங்க தொண்டருங்க இருக்கான்னு நமக்கு தெரியல . ஆனா ஒருத்தருக்கு கூட இது உருத்தலயாங்க ?

ஒரு கோஷ்டியில இருக்க ஒருத்தர பதவி நீக்கிட்டாலோ , எலக்சன்ல சீட்டு தரலைனாலோ ஒடனே அந்த கோஷ்டி ல இருக்க எல்லாரும் , தலைமைக்கு தந்தி அடிக்குரிங்க , தபால் போடுறீங்க , ஏன் சமயத்துல தலைநகருக்கே படையெடுக்குறீங்க.


  
ஈழ இன அழிப்பு உங்களுக்கு அநியாயமா தெரியலையா ?
இது தப்புன்னு தலைமைக்கு தந்தி அடிக்க தோணலையா ?
டெல்லிக்கு படை எடுக்கனும்னு தோணலையா ?  
ஈழம் உங்க மனசுல ஈரத்த வர வைக்கலையா ?

இவ்ளோ பேரு இங்க போராடுறாங்க , இன்னுமா உங்களுக்கு உறைக்கல இது துரோகம்னு ?
இந்நேரம் அத்தன பேரும் உங்க அடிப்படை உறுப்பினர் பதவிலருந்து வெலகி இருக்கவேண்டாமா ?

ஒருத்தர பலிவாங்குனதுக்காக ஒருலட்சத்து அறுபதினாயிரம் பெற பழி வாங்கியாச்சுங்க . இன்னுன் என்னதாங்க வேணும் ...?
  
இது எவ்வளவு பெரிய தப்புன்னும் ,பாவம்னும் உங்க மனசாட்சியே சொல்லும் இல்ல கொல்லும் .
வேறென்ன சொல்ல முடியும் என்னைபோன்ற கையாலாகாத வாக்காளனால்.....? எம் நிலை கண்டு எம்மீதே எமக்கு கழிவிரக்கம் வருகிறது .


இதெல்லாம் பாக்க பாக்க , எமக்கேன்னமோ நம்பிக்கையே இல்லாம போகுது.........

அய்யோ...! இங்க ஈர(ழ)மே இல்லயா...?

Mar 19, 2013

ஈழம் - மாணவர்கள் உண்ணாவிரதம் தேவையா ?


ஈழம் - மாணவர்கள் உண்ணாவிரதம் தேவையா ?





கவனிக்க : எமக்கு உள்ளூர் அரசியலும் தெரியாது , உலக அரசியலும் தெரியாது . உங்கள் பக்கத்து வீட்டில், உங்கள் தெருமுக்கு டீக்கடைகளில் உட்கார்ந்து நியாயம் பேசும் சாதாரனமானவர்களில் நானும் ஒருவன். இந்த பதிவு என் மனதில் தோன்றிய எண்ணங்களை பகிரவேயன்றி பரபரப்புக்காகவோ , இல்லை பப்ளிசிட்டிக்காகவோ அல்ல . யாருக்கேனும் இந்த பதிவு மட்டமாகவோ , இல்லை எதிர்ப்பாகவோ, நகைப்பாகவோ  உணர்ந்தால் எமக்கு தெரியப்படுத்துங்கள் பதிவை நீக்கிவிடலாம் .
இந்த பதிவு உங்களில் சிலருக்கு சிறுபுள்ள தனமாகக்கூட தோன்றலாம். பகிரவேண்டும் எனத் தோன்றியது பகிர்ந்து விட்டேன் . கல்லோ , மாலையோ , ஏளனமோ, நக்கலோ  எது வீசினாலும் சரி ஏற்றுகொள்ள தயார் .


பஸ் டே கலாட்டா , ஃபுட் போர்டு பயணம் , சினிமா நடிகனின் பாதகைகளுக்கு பாலபிசேகம் என்று சுற்றி திரியும் மாணவர்களை நேரம் கிடக்கும் பொழுதெல்லாம் வறுத்தெடுக்கும் வட்டத்தில் நானும் ஒருவன் .

இன்று மாணவர்கள் ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருப்பதை பார்த்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது .

இந்த கூட்டம் எந்தவொரு அரசியல்வியாதியின் கூக்குரலுக்கோ ,சூப்பர் நடிகர்களின் விரலசைவிற்கோ சேர்ந்ததில்லை.உணர்வுகளின் கொப்பளிப்பு இது ,

மாணவர்கள் ஒரு நல்லதொரு விசயத்திற்காக ஒன்று சேர்ந்திருப்பது மிகப்பெரிய சந்தோசம் . ஆனால் உண்ணாவிரதம் தேவையா...?

லட்சக்கணக்கில் நம் உறவுகளையும் , உணர்வுகளையும் கொன்று தீர்த்த இலங்கை அரசாளுபவர்களும் சரி  , அதற்கு  துணைபோன இந்திய அரசியல் தலைவர்களும் சரி மூன்று வேளையும் வயிறு முட்ட தின்றுகொழுக்கிறார்கள். ஏன் இதை எழுதிக்கொண்டிருக்கும் நானும் , படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் கூட வயிறை நிரப்பிக்கொண்டுதான் இருக்கிறோம் .

தப்பு பண்றவனே தின்னுட்டு தைரியமா  பண்ணும்போது , அந்த தப்ப தட்டி கேக்குற மாணவர்கள் ஏன் உண்ணாவிரதமிருக்கணும். மூணு வேளையும் சத்தான சாப்பாடு சாப்டுட்டு போராடணும் ங்குறதுதான் என் எண்ணம் .

ஆங்கிலேயர்களை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்திருக்கலாம் . அந்த வீரியத்தையும் , கொள்கை பிடிப்பையும் பார்த்து ஆங்கிலேயர்கள் மனமிரங்கி விடுதலை கொடுத்திருக்கலாம் . ஆங்கிலேயர்கள் இறுகிய இதயம் படைத்தவர்கள் . ஆனால் இப்பொழுது மாணவர்கள் போராடுவது இறுகிய இதயம் படைத்தவர்களை நோக்கியல்ல , இதயமற்ற ஈனப் பிறவிகளை நோக்கி . அவர்களை தண்டிக்கவும் , கண்டிக்கவும் இரும்பாலான இந்திய அரசியல் கதவை தட்டுகிறார்கள் நம் மாணவர்கள் .

ஓங்கி குரல் கொடுக்க , எக்கு கதவை தட்டித்திறக்க உடம்பில் தெம்பும், திராணியும் வேண்டாமா...? உண்ணாமல் எவ்வளவு நாள் இருந்திட முடியும் .

டெல்லி கல்லூரி மாணவி சம்பவத்திற்கு நாடே போராடியது . சரிதான் தப்பேதும் இல்லை . ஆனால் இந்த ஈழப்பிரச்சனையை , தமிழகத்தை தவிர மற்ற மாநில மீடியாக்களும் சரி , மக்களும் சரி தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் , குப்பனுக்கும் சுப்பனுக்கும் இடையில் நடக்கும் வாய்க்கால் சண்டையாகவே பார்க்கிறார்கள் என்றே நினக்கின்றேன் . அரசியல்வாதிகளோ ஆட்சியையும் , அதிகாரத்தையும்  தக்கவைத்துக்கொள்ள ஆடும் சதுரங்கமாகவே பார்க்கிறார்கள்.

தனி தெலுங்கானாவிற்காக ஆளும் கட்சியினரே ஆந்திராவில் பதவியை ராஜினாமா செய்தார்கள் . நம்மாளுங்க ராஜினாமா பண்றோம்னு சொல்லுவாங்க, சொல்லுவாங்க, சொல்லிகிட்டே இருப்பாங்களே ஒழிய ஒரு நாளும் செய்யமாட்டாங்க .

முதலில் இந்தபிரச்சனை தேசிய பிரச்சனையாக கருதப்படவேண்டும் . அதற்க்கு ஒரே வழி மாணவர்களின் இந்த போராட்டம் தான் . ஒட்டுமொத்த தமிழக மாணவர்களும் ஒன்று திரண்டு போராட வேண்டும். சாலை மறியலை தவிர்த்து ஒவ்வொரு மத்திய மாநில அரசு அலுவலகங்களின் முன் போராட வேண்டும் .அவ்வளவு எளிதாகவும் , விரைவாகவும் நடக்ககூடிய நிகழ்வல்ல இது . பெரும் போரிது .இந்த போரை வெல்ல அசாத்திய தெம்பும், திராணியும்,மனவுறுதியும் வேண்டும் .

அதனால் மாணவர்களே உண்ணாவிரதம் வேண்டாம் . மூன்று வேளையும் நன்றாக உண்டு பின் ஓங்கி குரல் கொடுங்கள். சத்தியம் ஜெயிக்கும் .
  
வேண்டுகோள் : உண்ணாவிரத பந்தலை கடந்து செல்லும் நாம் ஒவ்வொருவரும் , திடம் கொண்டு போராடும் நம் போராளி மாணவர்களுக்கு  ஒரு குவளை தண்ணீரேனும் கொடுத்துச்செல்வோம் . அது ஆயிரமாயிரம் ஆதரவு வார்த்தைகளுக்கு மேலானவை .

Mar 13, 2013

பரதேசி & வத்திக்குச்சி...!





கடந்த பத்து, பதினைந்து நாட்களாகவே , பத்து நிமிடத்திற்கு ஒரு முறை , தொலைக்காட்சி அலைவரிசைகளில் பரதேசி & வத்திகுச்சி யோட டீசரும், ட்ரைலரும் தான் நீக்கமற நிறைந்திருக்கிறது .

பரதேசி – பளிச்சென்ற வண்ணங்களிலும் இல்லாமல் , கருப்பு வெள்ளையிலும் இல்லாமல் ஒரு மாதிரியான பழுப்பு படிந்த, பழைய கால புகைப்படம் போன்ற வண்ணமே சொல்கின்றது இது ஒரு வரலாற்றை, வாழ்வியலை பேசக்கூடிய படமென்று .

ஒத்திகை பார்க்காமல் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய எளிய மக்களின் வாழ்வியலை, பல வருட ஒத்திகைகளுக்கு பிறகு பாலா படங்களாக்குவார் . அந்த மனிதர்களின் உச்சபட்ச சந்தோசம் , துயரம் , ரணம் , வலி , சுகம் என அனைத்தையுமே எந்த வித சமரசங்களும் இல்லாமல் அப்படியே பதிவு செய்வதில் தான் பாலாவின் வெற்றி அடங்கியிருப்பதாக நினைக்கின்றேன் .

டிரைலரை பார்க்கும் போது, இந்தப்படமும் முந்தைய படங்களை போலவே இருக்கும் போல் தெரிகிறது . இந்த முறை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார் . தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவில் ஆரம்பித்து , படத்தின் வண்ணம் , கதை நடப்பதாக காட்டப்படும் தளம் , நடிகர்களின் உடை, பேச்சு மொழி என எல்லாமே ஈர்க்கிறது .

அதர்வாவை காட்டிலும் , வேதிகாவின் சின்ன சின்ன உடல் மொழிகள் அட்டகாசமா இருக்கின்றது .இதற்கு முன் காளை என்ற படத்தில் வேதிகா வந்து போனதாக நினைவு . இதில் நிச்சயமாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் .

வழக்கமாக இசைக்கு ராஜாக்களை நாடுபவர் , இந்த முறை ஜி.வி இடம் தாவியிருக்கிறார் . ராஜாக்களை மிஞ்சும் அளவுக்கு இசை கேட்டிருப்பார் போல , ஜி.வி, அவர் பாணியிலும் இல்லாமல்  , ராஜாக்கள் போலும் இல்லாமல் ஒரு புது மாதிரியாக இசை அமைத்துள்ளார் . பாடல்கள் எதுவும் மனதில் தங்கவில்லை . “மாலை தன வேதனை” , “முன் பனியா”, “இளங்காத்து வீசுதே”, “ஓம் சிவோ”, “பிச்சை பாத்திரம்”...... வீ மிஸ் ராஜாஸ் .. பாலாவும் இதையேதான் உணந்திருப்பார் .

கடந்த இரண்டு நாட்களாக பரதேசி படத்தின் ரியாலிடி ட்ரைலர் & டீசர் தான் இணையத்தில் சூடான விவாதிக்கப்படுகிறது . இப்பொழுதெல்லாம் ஒரு படம் வெற்றியடைய விளம்பரம் மட்டும் பத்தாது ,ஏதோ ஒரு வில்லங்கமும் , விவகாரமும் இருந்தால் தான் முடியும் என்ற நிலைக்கு தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள் போலும் .




அடுத்தவர்கள் தயாரிக்கும் பொழுது , ஒரு படத்தை வருடக்கணக்கில் எடுக்கும் பாலா , தான் தயாரித்து, இயக்கும் படத்தை மட்டும் இவ்வளவு விரைவாக எடுத்து முடித்துவிட்டார்.
தான் ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்று, இது வரை எடுத்த படங்களின் மூலம் நிரூபித்த பாலா , வியாபாரத்திற்காக, ஒரு மோசமான பட விளம்பரத்தின் மூலம், தன்னை மிகச்சிறந்த தயாரிப்பாளராக நிரூபிக்க தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது .

டிரைலரும், டீசரும் எம்மை டீஸ் பண்ணவில்லை. படமும் அவ்வாறே இருந்தால் சரி .



வத்திக்குச்சி : ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் இரண்டாவது படம் . ஒரு நல்ல படம் அந்த தயாரிப்பு நிறுவனத்தின் மீதான நம் நம்பிக்கையையும் , எதிர்பார்ப்பையும் ஒரு சேர பெற்றுவிடுகின்றது . அந்த வகையில் “எங்கேயும் எப்போதும்” பார்த்த பின் வத்திக்குச்சியின் மீதும் இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

இசை - வாகை சூடவா மூலம் செவி ஈர்த்த ஜிப்ரான் , “குறு குறு” என்ற பாடலிலும்  “மம்மி வேக் மீ அப்” என்ற தமிங்கிலீஸ் பாடலிலும் மீண்டும் ஒருமுறை செவி ஈர்க்கிறார் . மற்ற பாடல்களும் காட்சிகளுடன் திரையில் பார்க்கும் போது பிடிக்கக்கூடும் .

அஞ்சலி – திமிரான பேச்சு , நக்கலான பார்வை , அதிகாரமான தோரணை எல்லாம் சேர்த்து வச்சு பார்த்தால் குட்டி சொர்ணாக்கா மாதிரி தான் அஞ்சலி, ஆனாலும் அழகு . கதாநாயகிகளை முன்னிறுத்தி கதை யோசிக்கும் இன்றைய இயக்குனர்கள் சினேகாவையும் ,அஞ்சலியைதான் தேர்வு செய்வார்கள் போலும் . சினேகா திருமதி ஆகிவிட்டபடியால் இபொழுது ஒரே வாய்ப்பு அஞ்சலிதான் , அவரும் மிகச்சிறப்பாகவே நடிக்கிறார் . சமீப வருடங்களில் பார்த்த படங்களில், நடித்த கதாநாயகிகளின் பெயர்களில் , அஞ்சலி நடித்த கதாபாத்திரங்களின் பெயர் மட்டுமே ஞாபத்தில் இருக்கிறது.  கற்றது தமிழ்- “ஆனந்தி”, அங்காடி தெரு -“கனி” , எங்கேயும் எப்போதும் –“மணிமேகலை”.

வத்திக்குச்சி ட்ரைலர் முழுதும் அஞ்சலி ராஜ்ஜியம் தான் . வழக்கம் போல அஞ்சலிக்கு அடிபணியும் கதாநாயகன் தான் .இருந்தாலும் ரசிக்க முடிகிறது.

காரணமே இல்லாமல் ஒரு சிலரை பிடிப்பதைப்போல், ஒரு சிலரை பிடிக்காமலும் போகிறது . வத்திக்குச்சி ஹீரோவை பார்த்தாலும் அப்படித்தான் பிடிக்கவே இல்லை. எஸ் ஜே சூர்யாவின் ஒன்னு விடாத தம்பி போல் இருக்கிறார். ஏ ஆர் முருகதாசின் தம்பி என்ற தகுதி மூலம் மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இயக்குனர் - புதுமுகம் , அதனாலேயே நம்பி போகாலாம் . இன்றைய தேதிக்கு புதுமுக இயக்குனர்கள் படம் மட்டுமே படமாக பார்க்கும் வகையில் இருக்கிறது . சிறந்த இயக்குனர்களாக பீற்றிக் “கொல்லும்” இயக்குனர்களின் படங்கள் பாடமாகவே இருக்கிறது .

அஞ்சலி , ஜிப்ரான் , ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பு இதற்காகவே வத்திக்குச்சியை உரசி பார்க்கலாம் என தோன்றுகிறது. 

Mar 12, 2013

பொங்கல் பய(ண)ம் – ரெண்டு பை ரெண்டு .










ஒரு வலியா திண்டுக்கல் போயி எறங்குனா ... மணி மூணே முக்கால் . எந்த பஸ்ஸ டார்கட் பண்ணி வந்தேனோ , அந்த பஸ் புறமுதுகு காட்டி என்னை தாண்டி போயிட்டுருக்கு . கொஞ்சம் வருத்தமா இருந்தாலும் , சரி பரவா ல்ல அதான் அம்மா ஆட்சியில சிறப்பு பேருந்துகள் தாறுமாறா விட்ருக்காங்களே ன்னு நம்பிகையோட நடந்தேன் .

நாலு அடி எடுத்து வைக்குரதுக்குள்ள, சிறப்பு பேருந்தும் என்னை கடந்து போகுது ... மூணு மணிநேர பயணப்பட வேண்டிய ஊருக்கு ரெண்டு நிமிசத்துல ரெண்டு பஸ்சு .. வெளங்கீரும் .
நிப்பாட்டி , ஏறக்கூடிய தூரம் தான் . ஆனா ஏறல . அதுக்கு நெறைய காரணம் ...
ஒன்னு , உள்ள உக்கார எடமில்ல , மூணுமணி நேரம் நின்னுட்டு தான் போகணும் . ரெண்டாவது பசி வயித்தகில்லுது . மூணாவது ரெம்ப முக்கியமானது ... சூச்சு போகணும் .

எச்சரிக்கை : பின் வருவது , கதைக்குள்ள கத மாதிரி , பய(ண) த்துக்குள்ள பய(ண)ம்  கண்புயூஸ் ஆகிடாதிங்க....

ஏற்கனவே ஒருமொற , இந்த மூணையும்  அலட்சியப்படுத்திட்டு பஸ் ஏறி நா பட்ட பாடு இருக்கே.. அய்யய்யோ ...சொல்ல முடியாது .

அவசர அவசரமா திருப்பூர் பஸ்ல இருந்து எறங்கி, ஓடிபோயி ரன்னிங்ல இருந்த  எங்க ஊர் போற பஸ்ல ஏறிட்டேன் . பஸ் போக ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலேயே பசி உயிர் போகுது , திங்குறதுக்கு ஒண்ணுமில்ல , சரி யார்ட்டயாவது தண்ணியாவது ஓசில வாங்கி குடிக்கலாம்னு பாத்தா , ஏற்கனவே யூரின் டேங் நிரம்பி வழியபோற ஸ்டேஜ் . பஸ்ல கூட்டம் அள்ளுது.  ஏதாவது அசம்பாவிதம் நடந்து அசிங்கப்பட்டுடுவோமோ ன்னு பயம் வேற. ஒரு ஸ்டேஜுக்கு மேல அடக்க முடியல . கண்டக்டர் ட்ட போயி கேட்டேன் . ஏங்க , கொஞ்சம் நிப்பாட்டுங்களே, யூரின் போயிட்டு வந்துர்றேன் ...
முடியல ... ன்னேன் .
(மேலயும் கீழயும் பாத்துகிட்டே கண்டக்டர் சொன்னாரு ) அதெல்லாம் முடியாது...,  இது எக்ஸ்பிரஸ் வண்டி நீ நெனச்ச எடத்துல எல்லாம் நிக்காது . போயி உள்ள நில்லு.

(ங்கொய்யால நாப்பது கிலோமீட்டர் வேகத்துல, தகர டப்பாவா உருட்டி விட்ட மாதிரி போறதெல்லாம் எக்ஸ்ப்ரஸ் வண்டியா ..? ன்னு மனசுக்குள்ளே மொனங்கிகிட்டேன், பின்ன வாயி விட்டா சொல்ல முடியும் ).

பக்கத்துல இருந்தவரு சொன்னாரு , தம்பி போய் ட்ரைவர் ட்ட கேளுப்பா  நிப்பாட்டுவாரு ன்னு . சரின்னு , கூட்டத்துல புகுந்து பொறப்பட்டு டிரைவர்ட்ட போனா ... முன் சீட் புல்லா பொண்ணுங்க.
ஒருபக்கம் வெக்கமா இருக்கு’ ...இன்னொரு பக்கம் வெடிக்கிற மாதிரி இருக்கு’. வெக்கம் பாத்தா வேலைக்காகாது ன்னு முடிவு பண்ணி, ஒண்ணாப்பு படிக்கிற பையன் வாத்தியார்ட்ட ஒத்த வெரல் காட்டி நிக்குறமாதிரி நின்னேன் . டிரைவருக்கு மொதல்ல புரியல , மொறச்சு பாத்தாரு . அப்புறம் என்னோட பாடி லாங்க்வேஜ பாத்து யூரின் போகனுமான்னாரு ...சிரிச்சுகிட்டே . நல்ல வேல பஸ் நாறாமா காப்பதிட்டாரு . போயி டேங்கி ஓப்பன் பண்ணி திரும்பி பாத்தா , பத்து பதினஞ்சு பேரு திமு திமுன்னு வர்றாய்ங்க . அடப்பாவிங்களா ...?
என்ன ஒன்னு திரும்ப பஸ்ல ஏறுன பெறகு , பஸ் முழுக்க என்னயவே பாக்குற மாதிரி இருந்துச்சு .


அனுபவம் தந்த பாடத்துல , பஸ் ஏறல. மொதல்ல போயி  டேங்க காலி பண்ணிட்டு  பின்ன ஃபுல் பண்ணிகிட்டேன் . மறுபடி வந்து பஸ்சுக்கு தவமிருக்க ஆரம்பிச்சேன் . திருப்பூர்ல போட்ட பிளான் படி பஸ் டான்ட்ட விட்டு நூறடி தாண்டி வந்து நின்னேன் . அங்க என்ன மாதிரியே ப்பிளான் பண்ணிய நூறு பேரு நின்னாய்ங்க . வாழ்க வளமுடன் .  மணி நாளே கால் .

பொன்னமராவதி போற பஸ் வர்ற மாதிரியே தெரியல. மணி அஞ்சே கால் . வர பஸ் எல்லாம் தேனி , மதுர இந்த ரெண்டு ஊருக்கும் தான் வருது . என்னாடா இது , தமிழ்நாட்டு மக்களையெல்லாம் மதுரைக்கும் , தேனிக்கும் குடிபெயர்த்துட்டாங்களான்னு  கடுப்பாயிடுச்சு  .
மணி ஆறே கால் .... ஏழு மணி ... ஒரு வண்டியையும் காணும் . வேற வழியே இல்லாம,
நத்தம் வர போற ஒரு டவுன்பஸ்ல அடிச்சு புடிச்சு ஏறி உக்காந்துட்டேன் .

நத்தம் பஸ் ஸ்டான்ட் மணி எட்டர .
பொன்னமராவதி போக பஸ் எங்க வரும், எத்தன மணிக்கு வரும்னு கடகாரருட்ட கேட்டேன் .
“விசேச நாளுகள்ள டைம் லாம் கெடையாது , வந்தா ஏறிக்க . அதுவும் திண்டுக்கல்ல இருந்து வந்தாதான் உண்டு” .
நாசமா போச்சு . இதுக்கு திண்டுக்கல் லே நின்ருக்கலாம் . சத்தம்போட்டே சொல்லிட்டேன் .

அவரே மறுபடியும் சொன்னாரு , தம்பீஈ  ....அந்தப்பக்கம், சிங்கம்புணரி போறதுக்கு டவுன் பஸ் வரும் அதுல போனினா , அங்கருந்து பொன்னமராவதி க்கு பஸ் இருக்கு  போய் வேணா பாரு ன்னாரு . என்ன பாக்க பாவமா இருந்துருக்கு, அது அவரோட தொனில தெரிஞ்சுது .

சரின்னு போனா , அவர் சொன்ன மாதிரியே பஸ் நிக்குது. ஒரே சந்தோசம் நம்ம புடிச்ச ஏழரை காலைல ஏழரையோட  முடிஞ்சுடுச்சு போலன்னு  வேகமா போயி பஸ்ல ஏறுனேன் . பஸ் காலி . அப்பாடா கொஞ்சநேரம் தூங்கலாம் . ஒக்காந்துருந்த நாலு பேருக்கு டிக்கட் கொடுத்துட்டு இருந்த கண்டக்டர் திரும்பி பாத்து கேட்டாரு ....

எங்க போகனும் ....?

சிங்கம்புனரிங்க ....

இந்த பஸ் “ஊர் சுத்தி” , “மல சுத்தி” போகும் பரவாயில்லியா .....?

வேண்டாங்க எனக்கு “தல சுத்தி போகும்னு” ஏறுன வேகத்துல எறங்கிட்டேன் .

மறுபடியும் பஸ்சுக்காக தவம் ... ஒடம்புல  சொச்சமிருந்த சொரத்தும் போச்சு . பஸ் டான்ட்ல நிக்கவே முடியல . ஒரு ஓரமா பூட்டியிருந்த கடயா பாத்து  சம்மணக்கால் போட்டு ஒக்காந்து மிச்சமிருக்க பிஸ்கட்ட சாப்ட ஆரம்பிச்சுட்டேன் . போற வாரவங்கல்லாம் ஒரு மாதிரி பாத்துட்டு போனாய்ங்க .

பத்துமணி சுமாருக்கு சிங்கம்புணரிக்கு ஒரு டவுன் பஸ்சு வந்துச்சு . முண்டியடிச்சு போயி ஜன்னலோரமா எடம் புடிச்சு , டிக்கட் வாங்கி ஜன்னல்ல பாத்தா , பொன்னமராவதிக்கு போற டைரக்ட் பஸ் உள்ள வருது . நமக்கு சனிக்கிழமை சனி உச்சத்துல இருக்குபோல .என்ன பண்ணலாம் இறங்கிடலாமா , இல்ல இதுலேயே போகலாமா மனசுக்குள்ளே பட்டிமன்றம் போயிட்டு இருக்கு . முடிவு பண்றதுக்கு முன்னாடியே பஸ் முந்திடுச்சு .

சிங்கம்புணரி பஸ் ஸ்டான்ட் - மணி பதினொண்ணு சும்மா வெயிலு காட்டு காட்டுன்னு காட்டுது . முடியல . உடனடியா எதுனா தின்னாத்தான் மேற்கொண்டு நடக்கவே முடியும் . பக்கத்துல இருந்த ஒரு களப்பு கடைக்குள்ள நுழைஞ்சு ரெண்டு புளிச்சுப்போன தோசையும் , கெடாத கெட்டி சட்னியும் கொட்டிகிட்டு மறுபடியும் பஸ்டான்ட் . மறுபடியும் தவம் . ஜீன்சும் டீ சர்ட்டும் போட்ட பிச்சைகாரன் மாதிரி நின்னுட்டு இருந்தேன் .

பதினொன்ற மணிக்கு வந்துச்சு அடுத்த டவுன் பஸ் .தோச தந்த தெம்புல சீட்டு புடிச்சுட்டேன் .
எம்.எல்.ஏ , எம் பி சீட் கோட்ட புடிச்சுடலாம் ஆனா இந்த டவுன்பஸ்கள் ல சீட் புடிக்குறது அவ்ளோ ஈஸி இல்ல. பஸ் மூவாகுது ...... ரோடுன்னா ரோடு அப்டியொரு ரோடு .. சும்மா நாடி நரம்பெல்லாம் தெறிக்குது . தல சுத்துதுன்னு கீழ குனிஞ்சா தர சுத்துது .. அயோயோயா ... எனக்கு என்னோமா ஆகிடுச்சே ன்னு பதறி , கண்ண நல்ல தொடச்சுட்டு பாத்தா ... அது உண்மையிலே தரதான் . பஸ் சு ஓட்ட... ஓட்டைய அடச்சு வச்சுருந்த பலகை விலகிடுச்சு . அப்றேமென்ன கால நல்லா பப்பரப்பான்னு வெச்சுகிட்டே பொன்னமராவதி  போயி சேர்ந்தேன் .

அடுத்து ...என்னது அடுத்தா ? டேய் யப்பா முடியலடா ..ன்னு தோணுதா உங்களுக்கு . படிக்குரதுக்கே உங்களுக்கு இப்டி இருக்கே . எனக்கு எப்டி இருந்துருக்கும் ?

பொன்னமராவதியில் இருந்து எங்க கிராமத்துக்கு பயணம் . இந்த தடவ தனியார் டவுன் பஸ்சு . உச்சி வெயில் பன்னெண்டு மணிக்கு பஸ்ல ஏறி ஒக்காந்தா .. உள்ள  டீ வி ல படம் ஓடிட்டு இருக்கு . என்ன படம் தெரியுமா ? வேட்ட ..வேட்ட ..வேட்டைகாரன் ... ! ஏம்  உச்சி  மண்டையில சுர்ருங்குது ..... ! நானெல்லாம் போன ஜென்மத்துல எதோ பாவம் பண்ணிருக்கேன் .

மணி மத்தியானம் ஒன்னு . கிட்டதிட்ட பதினெட்டு மணி நேர பயணம் முடிவுக்கு வந்தது .
வீட்டுக்கு போனா எங்க அம்மா கேக்குது, என்னடா பிளைட்லையா வந்த ? இவ்ளோ வெரசா வந்துட்ட. கடுப்புல துடுப்பு போடாம சும்மா இரும்மா ன்னு எரிஞ்சு விழுந்து, உள்ள போயி சரிஞ்சு விழுந்தேன் .



பி.கு : ரெம்ப நாளா ஒரு ஆச இருந்துச்சு , சென்னை ல இருந்து எங்க கிராமத்துக்கு டவுன் பஸ்லே போகணும்னு  ( கிட்டத்தட்ட  நானூத்தி  சொச்சம் கிலோமீட்டரு ). நல்ல வேளை அது நடக்கல . ஒருவேள அதுமட்டும் நடந்த்ருந்தது , சென்னையில டவுன்பஸ் ல  ஏறுன என்ன , எங்க ஊர்ல ஆம்புலன்சுலருந்துதான் ஏறக்கிருப்பாய்ங்க .

வர வர ஊருக்கு போறது போருக்கு போற மாதிரி ஆகிடுச்சு .....!

Mar 4, 2013

பவரு வெர்சஸ் கொமாரு ...! சிம்பு & ரசிகனின் கொல வெறி கலாட்டா ...!




நன்றி...!

ஹாரிபாட்டரின் பவர் ஸ்டார் பதிவின் இன்ஸ்பிரேசன்ல எடுக்கப்பட்ட .. சாரி எழுதப்பட்ட பதிவு. நன்றி ஹாரி ...!

டேய் ...! சிம்புக்கு என்னாலதாண்டா தொல்ல, ஆனந்த தொல்ல ...! கண்ணா லட்டு தின்ன ஆசையா வுல பவரு பேசுற பன்ச் டயலாக் இது . சரி படத்துக்காக தான் பவரு பேசிருக்காருன்னு பாத்தா ... மனுஷன் நெசமாவே சிம்புக்கு தொல்ல குடுக்க ஆரம்பிச்சுட்டாரு ... ஏற்கனவே ஆனந்த தொல்ல ... இப்ப ஆந்த்தம் தொல்ல...!

யூ டியூப்ல பாத்தீங்கல்ல, பவரு சிம்புக்கு எப்பூடி பியூஸ் புடுங்குராருன்னு.

யங் சூப்பர் ஸ்டார் சிம்பு ரசிகனின் பார்வையில் ஒரு கொலவெறி கலாட்டா ....!

சிம்பு ரசிகன் : வர வர இந்தாளு பண்ற அலப்பறைக்கு அளவே இல்லாம போச்சு . இந்த அநியாயத்த கேக்க, இங்க யாருமே இல்லையா.. இல்லையா .... இல்லையா ....?
( எக்கோ எபெக்டில் படிக்கவும்..)

ஏன் இல்ல .. நா இருக்கேன் .. நா இருக்கேன் ... நா இருக்கேன் ...!

எலே, எவன்டா அவென் ...?

நான்தாண்டா கொமாரு ...!

என்னடா தெலுங்கு பட டைட்டில் மாதிரி இருக்கு ...! யாரு கொக்கி கொமாரா ..?

இல்ல, ராசகொமாரூ....!

அடங்கொப்பத்தா...! யாரு விண்ணுக்கும் மண்ணுக்கும் ராசகொமாரா நீயி.. ?



ஆமா நானே தான் . நீ வருவாயா..? என மன்றாடி கேட்ட, நூறு கோடி இந்திய ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று உங்களை பவர் ஸ்டாரிடமிருந்து ரட்சிக்க வந்த ராஜகொமாரூ நாந்தான் ....

அய்யைய்யோ....! நாய் புடிக்குறவண்ட இருந்து தப்பிச்சு , நாய் புடிக்குற வண்டில விழுந்து சாகப்போரமே ...!

நாசமா போச்சு ... ஏலே.., பக்கிகளா ஓடுங்க ஓடுங்க.. ஆபத்து நம்மள நெருன்கிட்ட்ருக்கு ... நாம இப்ப அது வாயில இருக்கோம்... ஓடுங்க ...!
( தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ஆங்கில பட வசனம் போல படிக்கவும்.) 


வடிவேலு : என்னடா நடக்குது இங்க ...? டேய் அப்ரசண்டிகளா..!. கொஞ்ச நாலு நா பீல்டுல இல்லனா இன்னா அழிச்சாட்டியம் பண்றிங்க ...! நா வந்துட்டன்டா , வந்துட்டேன் ....!

சிம்பு : இதெல்லாம் சரிபட்டு வராது ... இவங்க கொட்டத்த அடக்கணும்னா ஒரே வழி தான் .... நேர அப்பாட்ட போயி சரண்டர் ஆயிடவேண்டியதுதான் ......
யப்...பா ய...ப்பா ... என்ன வெச்சு ஒரு படம் எடுப்..பா எடுப்..பா பா பா  ...! ஆகா, அப்பான்னு சொன்னவே எதுக மோன கொட்டுதே.... இருங்கடா இருங்க .. எங்க அப்பாவ கூட்டிட்டு வரேன் ... ஏ டண்டணக்கா ...டண்டனக்கா ....!


சூப்பர் ஸ்டார்  : அந்த ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள இனி காப்பாத்தமுடியாது . கதம் ..கதம் ..கதம் ....!

Mar 2, 2013

சூப்பர் சிங்கரும் ...சூப்பர் சீனியரும் .....




எனக்கு சக்கர வியாதி அதனால இனிப்பு சாப்டகூடாதுன்னு சொல்லிகிட்டே ஜிலேபி சாப்டர ஆளுங்க நாம . அதுபோல தான் சூப்பர் சிங்கரையும் , விஜய் டீ வி  யையும் திட்டிகிட்டே தெனமும் தவறாம பாத்துடுவேன் .

புது சீசன் ஆரம்பிச்ச இந்த ரெண்டு , மூணு வாரத்துல நேத்து தான் பாத்ததுலே ஒர்த்தான எபிசோடு .

வெள்ளந்தியான பேச்சு , கருப்பான தேகம்  , சாதாரண உடை . கிராமத்து ஆளு , அதுவும் பழைய பாட்டு மட்டுமே பாடுறவரு முக்கியமா அறுபத்தியொரு வயசு .... நிச்சயமா நாம ஓலக மகா ஜட்ஜுங்க இவர வெளிய அனுப்பிடுவாங்கன்னு நெனச்சேன் .( முப்பது வயசுக்கு மேல உள்ள யாரும் இது வர டாப் நூருக்குள்ள கூட வந்தது இல்ல , வர விட்டது இல்ல .)

நல்ல வேல வெளிய அனுப்பமுடியாத அளவுக்கு கலக்கிட்டாரு ஐயா அழகேசன் .. சூப்பரா பாடுனாருங்க . யூ டியூப் ல போய்  பாருங்க . ரெண்டு அட்டகாசமான பழைய பாட்டு .

அவரு செலக்ட் ஆகும்போது பார்வையாளர்கள் பகுதியிலருந்து ஒருத்தர காமிச்சாங்க . என்ன உறவுன்னு தெரியல... மனுசருக்கு அவ்ளோ சந்தோசம் ... ஒரு செக்கன்ட் சந்தோசத்துல அவரோட தொண்டக்குழி ஏறி இறங்கும் பாருங்க .. அடடா ..!
பாரதிராஜா பட எதார்த்த மனிதர்கள்லாம் சும்மா ...
என்ன ஒரு எக்ஸ்பிரசன் .... அத எழுத முடியாது உணர தான் முடியும்.

ரெண்டு பெரும் கட்டிபுடிச்சுகிட்டாங்க – அது அழகான ஒரு கவித மாதிரி இருந்ததது .
( நிச்சயமாக நண்பராகத்தான் இருப்பாருன்னு நெனைக்கறேன், இருபதிலே வராத உறவுகள் , அறுபதில் எங்க வரபோகுது )

போட்டில எவ்வளவு தூரம் வருவாருன்னு , விஜய் டிவி க்குதான் தெரியும் .
என் விருப்பமெல்லாம் அவருக்கு பரிசு, பட்டம்  கொடுத்து அனுப்பாட்டியும் , பிளாக் அன்ட் ஒயிட்ல அழவைக்காம, வோட்டு அரசியல் பண்ணாம , வெள்ளந்தியான குழந்தையாகவே அவர் திருப்பி அனுப்பப்படவேண்டும் ... அனுப்புவார்களா ....?

போட்டி சேனல்கள் கவனத்திற்கு : அப்பட்டமா காப்பி அடிச்சு எல்லாருமே ஜுனியருக்கும் , சீனியருக்குமே போட்டி வைக்காம. ஜூனியர வதைக்குரத விட்டுட்டு சூப்பர் சீனியர்களுக்கு ரியாலிட்டி ஷோ வச்சிங்கன்னா.... TRP ரேட்டிங் பிச்சுக்கும் . வயசான அவங்களுக்கும் ஒரு அரவணைப்பா  இருக்கும். பாக்குற எங்களுக்கும் சந்தோசமா இருக்கும் .