Nov 24, 2019

பேசாதவார்த்தைகள்#241119 ~ ஆதித்யவர்மா.

பேசாதவார்த்தைகள்#241119 ~ ஆதித்யவர்மா.




கேடி என்கின்ற கருப்புதுரை பார்ப்பதுதான் திட்டம். வழக்கம்போல , கேடி ஒரு காட்சிதான் அதுவும் காலைக்காட்சி மட்டும்தான் என்றும் , இப்போதைக்கு  ஆதித்தியவர்மா , சங்கத்தமிழன் இருக்கு என்று சொல்லி கவுன்டர்மஹான் சங்கைத்தடவ ஆரம்பித்தார். சங்கு முக்கியமென்பதினால் , ஆ.வர்மாவுக்கு ஒரு டிக்கெட் வாங்கி பதினாறாவதாக அமர்ந்தேன்.


வருடங்களுக்கு முன்பு திரையார்வலர்களால் சிலாகிக்கப்பட்ட தெலுங்கு அர்ஜூன் ரெட்டியின் தமிழ் "ரீ~ரீ மேக்" தான் ஆ.வர்மா. வழக்கமாக வரும் முகேஷ் விளம்பரம் இல்லாமலேயே படம் தொடங்கியது. முதற் சில காட்சிகள் த்ரீ ரோசஸ் விளம்பரப் பட பாணியில் நியூட்ரலாக போனது. அதற்கடுத்த பத்து நிமிடங்களும் டாப் கியரில் அடித்துதூக்கிவிட்டார்கள் இல்லை தூக்கி அடித்துவிட்டார்கள்.


ஆக்சுவலா தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறதோ ; இல்லையோ , தமிழ் சினிமாவில் சாக்லேட் கம் ப்ளேபாய் கேரக்டருக்குமான வெற்றிடம் மேடிக்கு பிறகிலிருந்தே இருந்து வந்தது. மேடி இப்போது டாடியாகிவிட்டார்.( மோடின்னு வாசித்தவர்கள் எல்லாரும் தலையில் கொட்டிக்கொள்ளுங்கள் :))
எது ஆர்யாவா!? அதெல்லாம் ஆ.இ.ஊ.இ.பூ.ச. மேற்படி வெற்றிடத்தை துல்கர் சல்மான் , நிவின்பாலி, நானி, வி.தே.கொ போன்ற அண்டை மாநிலத்தவர்களைக் கொண்டே நேற்று வரை நிரப்பிவந்தோம். ஆம் , நேற்றுவரை. இனிமேலும் அண்டைமாநிலங்களை அண்ட வேண்டிய அவலமில்லை. ஆம். அவன் வந்துவிட்டான் ; அவன் வந்துவிட்டான்...!!!! துருவ்.


இருவது ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி குட்டிச்சுவரில் அமர்ந்துகொண்டு அபிதாகுஜலாம்பாளை காதலித்துக் கொண்டிருந்த சீயான் விக்ரம் கண் முன்னே அன்னிச்சையாக வந்துபோகிறார். சில காட்சிகளில் குரலிலும்.


துருவ் பக்கா மணிரத்தினம் மெட்டீரியல். எப்டி மணி சார் மிஸ் பண்ணுனாருன்னு தெரியவில்லை. பயன்படுத்திக் கொண்டிருந்தால் நிச்சயமாக அவருக்கு ஒரு கம்பேக் மூவியாக இருந்திருக்கும். ட்ரெண்ட்ல சொல்லனும்னா துருவ் , மணி சாருக்கு வாய்ப்பு கொடுத்த மாதிரி இருந்திருக்கும். நக்கல் இல்லை உண்மையிலேயே.


ஹீரோயின் செலக்சனில் கோட்டை விட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அது வேண்டுமென்றே விட்ட கோட்டைதான் எனப்படுகிறது எனக்கு . சொல்லப்போனால் மிகச்சரியான தெரிவது. நாயகி இன்னும் கொஞ்சம் வனப்பாக , முக லட்சணமாக இருந்திருந்தால் , உடல் இச்சைக்காகத்தான் ஆதி மீராவை காதலித்தான் என்றாகிவிட வாய்ப்பிருக்கிறது. இரண்டாவது அந்தப்பெண் எப்படி உடனடியாக இசைந்தால் என்றொரு கேள்வி !? முத்தமிடுவதற்கு முன்பாகவே , மிகக்குறைவான காட்சிகளின் வழியாக , ஆதியைப் பற்றிய வரலாறு, உள்ளது உள்ளபடி சொல்லப்படுகிறது. மேலும் கலகலப்பான பெண்களைக்காட்டிலும் இதுபோன்று மருட்சியோடும் ; மூடியாகவும் இருப்பவர்கள்தான் சட்டென்று முடிவெடுப்பவர்களாக இருப்பார்கள். சோ அது இயல்பாகவே படுகிறது.


அட்டகாசமான ரொமான்ஸ் காட்சிகளிலெல்லாம் , தியாகராஜ ஆராதனையில் கீர்த்தனை வாசிப்பதைப்போல வாசித்திருக்கிறார் இசையமைப்பாளர். இசை சுமார்தான். ஆனால் அதையெல்லாம் துருவ நட்சத்திரம் கொண்டு ஈடு கட்டிவிட்டார்கள்.


லிப்லாப் காட்சிகளுக்கிடையே படம் நகர்கிறது. எதிலுமே விரசமில்லை. துருவ் தன் அப்பா விக்ரமிடம் கற்றுக்கொண்டதைவிட கலைத்தாயின் மூத்த மகனிடம் அதிகம் கற்றுக்கொண்டிருப்பார்போல.  என்னவொன்று நிறைய வசனங்கள் ஆங்கிலத்தில் , தமிழ் வசனங்கள் கூட அதி வேகத்தில் பேசப்படுகிறது. தமிழ் ரீ மேக்தானா என்று சந்தேகம் வருமளவிற்கு. நாயகனின் மருத்துவ நண்பராக வருபவர் கவனம் ஈர்க்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் எவருக்கும் வாய்ப்பில்லை. நாயகி உட்பட .


குடிகாரன் ; பெண் பித்தன் ; முரட்டு சுபாவம் உடையவன் ; சுயநலவாதி என்று ஆதி கேரக்டரின் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டு. ஆனால் முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சிவரை நேர்மையாகவே நடந்துகொள்கிறான் ஆதி. குறைந்தபட்சம் அவனுக்கு மட்டுமாவது. அது மட்டும் ஏன் சார் உங்க கண்களுக்கு தெரிவதே இல்லை. அயோக்கிய சிகமணிகளைவிட இதுபோன்று யோக்கிய சிக்காமணிகளிடம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


படம் நெடுக போதையில் புழங்குவதும் ; பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கைக்கு கூப்பிடுவதெல்லாம் ஹீரோயிசமா!? இதெல்லாம் ஒரு படமா !? இதுதான் பண்பாடா , நகரீகமா என்று கொந்தளிப்பவர்களுக்கு. கூல் ...!!! படத்தில் எந்த இடத்திலும் அப்படி சொல்லவே இல்லை. ஆதி கதாபாத்திரம் யாரையும் வற்புறுத்துவதில்லை , பார்த்த மாத்திரத்தில் அழைப்பதுமில்லை. பரஸ்பரம் விரும்புபவர்களிடம் உறவு வைத்துக்கொள்கிறார் அல்லது உறவில் இருக்க விழைகிறார். பொதுநலம் ; அன்பு ; அக்கறை என்று ஆதி கம்பு சுத்துவதில்லை. ரெம்பவே பிராக்டிக்கலான ஆள். லீடிங் ஹீரோயினிடம் கூட பிஸிக்கலா ஹெல்ப் பண்ண முடியுமா என்றுதான் கேட்கிறார்.


இன்னொரு முக்கியமான விஷயம். இதெல்லாம் கலாச்சார சீரழிவு என்று பொங்கியெழுந்து அடக்கி அடக்கி வைத்தால் , சிறுமிகளிடம் சில்மிஷம் செய்து சீரழித்த கொடூரன் கைது என்ற சீழ்பிடித்த சமூகமாகத்தான் இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கும் இருப்போம்.


சிற்சில குறைகள் இருப்பினும் ; சில காட்சிகள் , வசனங்களில் வேற்று கருத்து இருப்பினும் படம் எனக்கு ரெம்ப பிடித்திருந்தது. வசனங்களை தெளிவு படுத்திக்கொள்வதற்காக இன்னுமொருமுறை பார்க்கவேண்டும்.


ஆதித்யாவர்மாவை பாலா இயக்கியிருந்தா எப்டி இருந்திருக்கும்னு நினைச்சுப்பார்த்தேன் ,கை அன்னிச்சையா குரல்வளையை தடவிக்கொள்கிறது. கண்டிப்பாக துருவை ஜோம்பியாக்கியிருப்பார். தேங் காட்.


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன் சுப்பு.