May 30, 2013

தமிழ் வழியா ...? ஆங்கில “வலி”யா ...?




 குறிப்பு : நான்கு நாட்களுக்கு முன்பு எழுதியது .


போனவாரம் தமிழ்த்தாய்க்கு சிலை...!
இந்த வாரம் தமிழுக்கு உலை ...!

கல்லூரிகளில் இனி கட்டாயம் ஆங்கிலமாம்...! விசித்திரமாக இருக்கின்றது . விழிகளை விற்று சித்திரம் வாங்குவதற்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை .

கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள் , பத்தாம் வகுப்பு வரையோ பன்னிரெண்டாம் வகுப்பு வரையோ தமிழில் படித்து விட்டு , பின் எப்படி கல்லூரியில் அனைத்தையும் ஆங்கிலத்தில் படிக்கமுடியுமென்று தான் தெரியவில்லை . தனிப்பட்ட முறையில் மிகுந்த சிரமப்பட்டேன் . இதோ இன்று வரை பட்டுக்கொண்டிருக்கின்றேன் . பத்தாம் வகுப்பு முடிந்து பாலிடெக்னிக் சேர்ந்தபொழுது மொழிதெரியா நாட்டில் சிக்கிக்கொண்ட மாதிரிதான் இருந்தது . அதுவும் முதல் வருடம் கணிணியையே பார்த்திராத என்னைப்போன்ற  மாணவர்களுக்கு C , C ++ என்று பாடங்களை வைத்தது பெரும் கொடுமை கூடவே கணிதம் ஒன்று கணிதம் இரண்டு என்று இரண்டு பி(க)ணக்குகள் வேறு  . இந்த பாடங்களில் சரி பாதி மாணவர்கள் அவுட் . அதைவிட கொடுமை அடுத்த முறை அரியர் எழுதிய அத்தனை போரையும் தேர்ச்சி பெற வைத்தது.

கடந்த ஆறு மாதங்களில் அதிகமான சம்பளத்துடனும் , சலுகைகளுடனும் கூடிய அருமையான இரண்டு வேலை வாய்ப்புகள் தவறிப்போனது. ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தெரியவில்லை என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே இருவிடங்களிலும் நிராகரிக்கப்பட்டேன் . இயல்புக்கு திரும்ப இரண்டு வாரமானது . இடைப்பட்ட காலத்தில் ஏகத்துக்கும் எரிந்து விழுந்தேன்  அம்மாவிடமும்  , அப்பாவிடமும் ஆங்கிலப் பள்ளியில் என்னை சேர்க்காத காரணத்திற்காக.  நிராகரிப்பின் வலியைக்காட்டிலும் ரணமான வேறு வலி இவ்வுலகில் இருகின்றதா எனத்தெரியவில்லை  .

தமிழில் புரிந்து கொள்ளும் அளவுக்கு ஆங்கிலத்தில் பாடங்களை புரிந்து கொள்ளமுடியவில்லை , புத்தகத்தின் பக்கங்களை திருப்புவதை விட, டிக்சனரியின் பக்கங்களை தான் அதிகம் புரட்ட வேண்டியிருக்கிறது . அதே சமயம் , சில தொழில்நுட்ப படிப்புகளை தமிழில் படிப்பதென்பது ரஷ்ய , சீன மொழியில் படிப்பதைப்போன்று அவ்வளவு சிரமமாக இருக்கின்றது  , அந்தக்கொடுமைக்கு ஆங்கிலமே பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது .

இன்று வாழ்வாதாரமான தமிழ் மொழியை பொருளாதாரமான ஆங்கிலம் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றது  . இன்றைய இயந்திர வாழ்க்கையில் , நல்லதொரு பொருளாதார நிலையைப்பெற ஆங்கிலம் அதி அவசியம் தான் , அதிலேதும் மாற்றுக்கருத்து இல்லை . ஆனால் கட்டாயம் என்று திணிக்கப்படுவதைத்தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . திணிக்கப்படும் எதுவுமே வாந்தியாகத்தானே வெளியே வரும் ...? வாந்தி சில சமயம் வாழ்க்கையையே பறித்துவிடுகின்றதே.

பள்ளிக்கூட நாட்களில் எப்பொழுதும் பிடித்தமான வகுப்பு விளையாட்டு வகுப்பு தான் , எந்தவிதமான தேர்வும் , மதிப்பீடும் , மனனமும் கிடையாது . எந்தவிதமான கட்டாயமும் கிடையாது ஆனால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் எல்லோரும் விருப்பத்தோடு  விளையாடுவோம் . வாழ்வாதாரமான தமிழையும் , பொருளாதாரமான  ஆங்கிலத்தையும்   பரீட்சை எழுதும் ஒரு பாடமாக வைக்காமல், விளையாட்டு வகுப்பை போன்றே , செயல் வழிக்கற்றல் மூலமாக ஆரம்பப்பள்ளிகளில் இருந்தே  முறையாக  சொல்லிக்கொடுத்தார்களேயானால்  நிச்சயமாக அது எல்லோருக்கும் பயனாக இருக்கும் . அதை விடுத்து கட்டாயம் என்று திணித்தார்களேயானால் அது சர்வநிச்சயமாக அழிவையே தரும் மொழிக்கும் , மனிதர்க்கும் .

ஒருவேளை ஆங்கில வழி கட்டாயமாக்கப்பட்டால் , அனைவரின் ஒருமித்த கருத்துக்கு பின்னரே அது நடைமுறைக்கு வரவேண்டும் . இல்லையெனில் ஆட்சி மாறினால் காட்சி மாறும் அரசியல் சடுகுடுவில் மாணவர்கள் சிக்கி சின்னா பின்னமாகிவிடுவார்கள். ஏற்கனவே சமச்சீர் கல்வியில் அதுதானே நடந்தது .


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு



May 28, 2013

ட்வீட் அல்ல டவுட் ...!







மாயி படத்த இப்ப எடுத்துருந்தா , “வாம்மா மின்னல்”ங்குறதுக்கு பதிலா “வாம்மா மின்சாரம்”னு சொல்லிருப்பாய்ங்களோ..?

பாத்து பாத்து , தேச்சு தேச்சு குளிச்சாலும் , குளிச்சு முடிச்சு கண்ணாடிய பாக்கும்போது காதுமடல்ல சோப்பு நுரை பொங்குவது எனக்கு மட்டுந்தானா..?

“மாதக்கடைசிகளில் மனைவியை சமாளிப்பது எப்படி”ன்னு யாருன்னாச்சும் புக்கு எழுதீருக்காங்களா...?

“ஊர் உலகத்துல எவ்ளோவோ பொண்ணுங்க இருக்கும்போது நா மாட்டும் ஏன் ஜெஸ்சிய லவ் பண்ணுநேங்க்குற” மாதிரி , ஊர் , உலகத்துல எவ்ளவோ கோவில்கள் இருக்கும்போது ,ஏங்க எல்லாரும் திருப்பதிக்கும் , திருச்செந்தூருக்குமே போறாங்க ...?



டவுட் டவுட் டவுட் ....!



என்றென்றும் புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு 


May 27, 2013

கிரிக்கெட்டும் , கல்யாணமும் .....!




  
பரிணாம வளர்ச்சியில (?) கிரிக்கெட்டும் , கல்யாணமும் ஒரே மாதிரி தான் போல . ஆரம்ப காலத்துல கல்யாணம், “டெஸ்ட்” மேட்ச் மாதிரி அஞ்சு நாள் நடந்துச்சு , அப்புறம் “ஒன்டே” மாதிரி ஒரே நாள், காலைல ஆரம்பிச்சு நைட்டுக்குள்ளார முடிஞ்சுது .  இப்பல்லாம் “ட்வென்டி டிவென்டி” மாதிரி, நாலே மணி நேரம்தான் . சாயங்காலம் ஆறு டூ பத்து . கிரிக்கெட் மாதிரி கல்யாணங்கள் லயும் பிக்சிங்கும் , பிராடுத்தனமும் அதிகமாயிட்டே போகுது . எல்லாமே வியாபாரம் தானோ ....?

நிதானம் , பொறுமை இந்த வார்த்தைகளையெல்லாம் அகராதியிலருந்தே எடுத்துடலாம், எல்லாமே எக்ஸ்பிரஸ் தான்....! இவ்ளோ வேகமாவும் , அவசர அவதியாவும் எங்கதான் போறமோ ..? எந்த ஆணியதான் புடுங்க போறோமோ ...?

முந்தாநாள் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்தேன் இல்ல இல்ல ரிசப்சனுக்கு போயிட்டு வந்தேன் . இன்விடேசன் கூட இப்பல்லாம் ரிசப்சனுக்குதானே தர்றாங்க . ஆறுமணிக்கு ஆபிஸ் முடிச்சு, அலுவலக நண்பர்கள் கூட அப்டியே அடிச்சு புடிச்சு போயி , மணமக்களை பாக்குறதுக்கு கொஞ்ச நேரம் கியூ வுல நின்னு , அப்டிக்கா மேடைக்கு போயி , சொரத்தே இல்லாம கைய கொடுத்து , டெம்ப்ளேட்டா ஒரு ஆல் த பெஸ்ட்ட மொணங்கி , இஞ்சி திங்காத மங்கியாட்டாம் ஈஈஈ ன்னு போட்டோவுக்கு இளிச்சு, நானும் வந்துட்டேன்னு  ஒரு அட்டண்டஸ் போட்டுட்டு  அப்டியே பந்திக்கு போனா அங்க அத விட பெரிய கியூ ....!

ஏற்கனவே சாப்டுட்டு இருக்குறவங்க எழுந்திரிக்குரதுக்கு முன்னாலேயே போயி பின்னால நின்னு சீட் புடிச்சு ஒக்காந்தா , பாஸ் ...! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க , இட்டலி வந்துட்டு இருக்குங்குறாங்க. கல்யாண வீட்டுல  வந்துட்டு இருக்குன்னு சொன்னா இப்பத்தான் வெந்துட்டு இருக்குன்னு அர்த்தம் . அய்யோ அய்யோ ...! முடியல , பசி தாங்க முடியல ...!

பசி வெறியில வச்ச மொய்யவிட அம்பது ரூபாய்க்கு சேத்து சாப்டுட்டு , வெளில வந்தா நம்ம எக்ஸ் கொல்லீக்ஸ்லாம் நிக்குறாங்க . ஹாய் ன்னு சொல்லிட்டு போறதுக்குள்ள ஒரு ஃபோன் , அப்டியே எடுத்து பந்தாவா பேசிட்டு , அப்புறம் எப்டி இருக்க மச்சி...! ன்னு கேக்குரதுக்குள்ள அவனுக்கு ஃபோன் , அவனுக்கும் கஸ்டமர் கேர் இருக்காதா பின்ன ....! அப்ரமென்ன வராத ஃபோனையே கொஞ்சம் நேரம் வெறிச்சு பாத்துட்டு வீட்டுக்கு வந்தாச்சு . பத்து மணிக்கு மேல அதே எக்ஸ் கொல்லீக்சஸ்க்கு போன போட்டு மொக்கிட்டு தூங்கியாச்சு ....!

இப்பல்லாம் ரியல்  வேர்ட்ல வாழறதுக்கு யாருக்குமே டைம் இல்ல , எல்லாருமே விர்ச்சுவல் வேர்ல்ட் ல தான் வாழ்ந்திட்டு இருக்கோம் அதுவும் எக்ஸ்பிரஸ் வேக வேர்ல்ட் ல .....!


என்றென்றும் புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு 

May 23, 2013

பாஸ்...! ஒங்களுக்கு உசுரு மேல ஆச இருக்கா ...?





மண்டையில மூளை இருக்குதோ இல்ல களிமண்ணு இருக்குதோ , நாட்டுக்கும் , வீட்டுக்கும்  நாம ரெம்ப முக்கியமில்லையா….? அதான் , பேண்டுக்கு பெல்ட்  போட்டுருக்கேனோ இல்லையோ , கார்ல எப்ப போனாலும் சரி கண்டிப்பா சீட் பெல்ட் போட்டுடுவேன் . வண்டி சாவிய எடுக்குறனோ இல்லையோ , ஹெல்மட் எடுத்துட்டு தான் டூ வீலரையே தொடுவேன் .

அதென்னமோ தெரியல கார்ல சீட் பெல்ட் போட்டுட்டு போறவனையும் , டூ வீலர்-ல ஹெல்மட் போட்டுட்டு போறவனையும் நம்மாளுங்க கிண்டலாவே பாக்குறாங்க . பயந்தாங்கோளின்னு நக்கல்,  நையாண்டி வேற...! நண்பர்களே...! ஒங்க உசுரு, ஒங்களுக்கு மசுருக்கு சமமா இருக்கலாம் . ஆனா, ஒங்க குடும்பத்துக்கு ரெம்பப் பெரிசு, ஒங்க உசுரையும் , இழப்பையும் எதுனாலயும் ஈடுகட்டவேமுடியாது.  ஸோ , டூ வீலர்ல போகும்போது ஹெல்மட்ட தலையில வைச்சுக்குங்க . நீங்க தலையில வைக்காமா பெட்ரோல் டாங்கி மேல வச்சீங்கன்னா ஒங்க குடும்பம் தலையில கைவச்சுடும்......! கார்ல போகும்போது சீட் பெல்ட்ட சீட்டுக்கு போடாமா, கண்டிப்பா நீங்க போட்டுக்குங்க, இல்லாங்காட்டி ஒங்க சீட்டு செதறீடும்...!

நீ என்ன வேணும்னாலும் சொல்லு  நாங்க போடவே மாட்டோம் னு சொல்ற வீர பிரகஸ்பதிகள் என்னனோ தொலைங்க . ஆனா தயவு செய்து போடுறவங்கள கிண்டல் பண்ணாதீங்க . சீட் பெல்ட்டோட அவசியத்த இந்த வீடியோவவிட அழகாகவும் , ஒரைக்குற மாதிரியும் யாராலும் சொல்ல முடியாது . பாருங்க பாஸ் பாருங்க ...! பாத்தத பாஸ் பண்ணுங்க பாஸ், பாஸ் பண்ணுங்க..!

வீடியோவைப் பகிர்ந்த லெக்ஷ்மண் அண்ணனுக்கு நன்றிகள் ...!


என்றென்றும் புன்னகையுடன்...
ஜீவன்சுப்பு.


May 16, 2013

ஹேப்பி பர்த்டே.....!



  


இன்றைய இரவோடு, நான் பூமிக்கு வந்து பதினோராயிரத்து முண்னூற்று இருபத்தி மூன்று நாள் முடிந்துவிட்டது. ஆமாங்க..! எனக்கு ஹேப்பி பர்த்டே ....!

(என்னங்க..! கால்குலேட்டர் ஒப்பன் பண்ணி 11316 டிவைடட் 365 ன்னு போட்டுப்பார்த்துருப்பீங்களே...! ஐ நோ ..! ஐ நோ...! எதையுமே நேரா சொல்றதவிட சுத்தி வளச்சு சொன்னாத்தானே ரீச் ஆகுது . சரி சரி சிரிச்சது போதும் மேல படிங்க ...! இல்ல... இல்ல... கீழ படிங்க .)

அன்பின் அரவணைப்புடனும், 
அனுபவத்தின் துணையுடனும்
அகவை முப்பத்து இரண்டில்
அடியெடுத்து வைக்கின்றேன்.
அற்புதமான ஆண்டாக
அமையுமென்ற நம்பிக்கையுடன்...!

சிறுவயதில் பிறந்தநாள் என்பது ஒரு திருவிழா , ஒரு கொண்டாட்டம் . ஆம் ...! எத்தனையோ ஆயிரம் விந்தணுக்களில் ஒன்று மட்டுமே கருவாகி , உயிராக உருவாகி , உலகத்தோடு உறவாடிய நாள் நிச்சயமாக கொண்டாடப்படவேண்டிய நாள் தானே ....! ஆனால் இப்பொழுதைய கார்ப்பரேட் கலாச்சாரத்தில் பிறந்தநாள் என்பது வெறும் விழா கூட இல்லை மற்றுமொரு திண்டாட்ட நாளே. வேலைக்கு வந்த புதிதில் பிறந்தநாளன்று புத்தாடை அணிந்து , மிட்டாயுடன் அலுவலகம் சென்ற என்னை விநோதமாகப் பார்த்தார்கள் சக கார்ப்பரேட் கர்மாக்கள் . என்ன இது சின்னப்புள்ளத்தனமா என்று ஏளனம் , பரிகாசம் வேறு . அன்றோடு முடிந்தது பிறந்தநாள் கொண்டாட்டம் . இப்பொழுது நானும் பழகிவிட்டேன் பரிகசிக்க ...!

இதோ இன்று அதிகாலை அலைபேசியில் அம்மாவின் அழைப்பு . மிகுந்த ஆச்சர்யம் எனக்கு….! அம்மாவின் அழைப்பில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம் . பரஸ்பரம் முரண்பட்ட ஒரு காரணத்தினால், இரண்டுநாளைக்கு முன் அம்மாவுடனான ஒரு தொலைபேசி உரையாடலை, முழுமையாக முடிக்காமலே துண்டித்துக்கொண்டேன் . அதன் பின் நானும் கூப்பிடவில்லை , அவரும் அழைக்கவில்லை . இதோ அவரே அழைத்துவிட்டார் ..!

சுப்புக்குட்டி ..! நாளக்கி ஒனக்கு பொறந்த நாளுப்பா , காலயில வெள்ளனா எந்துருச்சு கோயிலுக்கு
போயிட்டு வாய்யா….. வில் ஆரம்பித்து ஒவ்வொன்றாய் சொல்லிகொண்டே போனார் , அறிவு அன்னிச்சையாக சரி.... சரி.... என்று சொல்லிகொண்டு இருந்த அதே வேளையில்  , மனம் மானசீகமாக மன்னிப்புக்கேட்டுக்கொண்டிருந்தது, துண்டித்துக்கொண்ட தொலைபேசி இணைப்புக்காக . வீம்பில் நான் ஜெயித்து விட்டேன்...! ஆனால், அன்பில் அவர் ஜெயித்துவிட்டார்..! எவ்வளவு தான் முரண்பட்டாலும் , சண்டையிட்டாலும் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ள அம்மாக்களுக்கு மட்டும் ஆயிரம் ஆயிரம் அக்கறைகளும், பிரியங்களும்  இருந்து கொண்டுதானிருக்கின்றன .

நாளை நானும் கொண்டாடுவேன் ஹேப்பி பர்த்டே  ...! எப்படி ...?

வழமைபோல அதிகாலை எட்டரை மணிக்கு அடித்துப்பிடித்து எழுந்து, காக்கைக் குளியல் போட்டு,
கரித்துக் கொட்டிக் கொண்டே கேண்டீன் இட்லியை விழுங்கி , சீட்டு ஹீட்டாகும் வரை அலுவகத்தில் குப்பை கொட்டி, இடையிடையே ஐ.பி.ல், அஞ்சலி என நியாயம்பேசி , மாலை வீடுவந்து , வெட்டியாக சிறிதுநேரம் விட்டம் பார்த்து, சொச்ச நேரத்துக்கு பேஸ்புக் மேய்ந்து, ஹேப்பி பர்த்டே சொல்லாதவனுக்கு அர்ச்சனை செய்து, பின்னிரவில் சொட்டச்சொட்ட கண் விழித்து சூப்பர் சிங்கர் பார்த்து, சூம்பிப்போன கண்களுடன் சுருண்டிடுவேன் படுக்கையில் ....!


ஆனால் அம்மா அப்படியா ...!

அதிகாலை துயிலெழுந்து
அழகாகப் பட்டுடுத்தி
அன்பாக புன்னகைப்பூச்சூடி...!

அர்ச்சனை ஒருகையிலும்
ஆரஞ்சு மிட்டாய் மறுகையிலுமாக
ஆலயம் சென்றிடுவாள் ...!

இறைவனைப் பிரார்த்தித்து
இனிப்பை வழங்கிடுவாள்
இன்று எம்மகனுக்கு பிறந்தநாளேன்று ...!

மாசற்ற அந்தத் தாயிடம்
மனமாரச் சொல்லுங்கள்
எனக்கான வாழ்த்துக்களை ...!

சொல்லி முடிக்கும் அந்த
கணத்தில், ஆரஞ்சு மிட்டாயின்
தித்திப்பை நீங்களும் உணர்வீர்கள் ....!


என்றென்றும் புன்னகையுடன் ...
ஜீவன்சுப்பு.




May 4, 2013

பரீட்சை எழுதப்போறேன் ...!







பரீட்சைன்னு சொன்னா பல்லுப்போன வயசுல கூட பயம் வரும்போல # பயமா இருக்கு..! எம்.பி.ஏ. எக்ஸாம் எழுதப்போறேன் ....! ( நாங்களும் கீச்சுவோம்ல ...! ).

ரெகுலர்ல காலேஜுக்கு போயி, மூணு தியரி மூணு பிராக்டிகல் எழுதுனாவே கன்ஃபார்மா நாலு அரியர்ஸ் விழுகும் . இந்த லட்சணத்துல காலேஜே போகாம, கரஸ்ல ஒம்போது பேப்பர் எழுதப்போறேன், ஒம்போதுமே தியரி...! ஹைய்யோ, ஹைய்யோ ...!

பரீட்சைங்க்குற பேர்ல, மனப்பாடம் பண்ணுனத கக்குறதுங்குறது நல்ல கல்விமுறையே  இல்ல, பரீட்சைகள் புத்தகத்தை பார்த்து எழுதுவதாக இருக்க வேண்டும் அப்டின்னு யாரோ ஒரு நல்ல உள்ளம் எதிலையோ எழுதி இருந்ததா ஞாபகம் ...! புத்தகத்த பாத்து எழுதச்சொன்னா கூட எந்த கேள்விக்கு எந்த புத்தகத்துல பதில் இருக்கும்னு தெரியாத தற்குறில நாம...! என்னமோ போங்க அநியாயமா இருபதுனாயிரம் போச்சேன்னு கவலயா இருக்கு ....!

அதுக்கு நாங்க என்னடா பண்ணமுடியும்னு கேக்குறீங்களா..? ஒண்ணே ஒன்னு பண்ணுங்க பாஸ் ..! ஒங்க இஷ்ட தெய்வத்த வேண்டிக்குங்க ...! நா நல்ல படிக்கணும் , எனக்கு எக்ஸாம் ஈசியா இருக்கோணும் , எனக்கு தெரிஞ்ச கொஸ்டீனா வரணும்னு இல்ல ...!  எம்பக்கத்துல ஒக்காந்து எழுதப்போறவேன் நல்லா படிக்கணும் , அவனுக்கு தெரிஞ்ச கொஸ்டீனா  வரணும் , அவனுக்கு எக்ஸாம் ஈசியா இருக்கோணும்னு வேண்டிக்குங்க . நாங்கல்லாம் பொதுநலவாதியாக்கும் ....!

ஆங்...! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் , பாஸ் படத்துல வர்ற மாதிரி அழகான ஹால் சூப்பர்வைசர் வரணும்னும் வேண்டிக்குங்க , ஆனா பிட்டல்லாம் புடுங்ககூடாதுன்னு கண்டிசனோட வேண்டிக்குங்க ....! ஹி ..ஹி.....!

நெறைய கிழிக்க வேண்டியது சாரி படிக்க வேண்டியது இருக்குறதுனால பிளாக்குக்கு ரெண்டு  வாரத்துக்கு  லீவு ...! லீவு ...! லீவோய் ....!

(என்னங்க சொல்றீங்க ...? லீவ கொஞ்சம் எக்ஸ்டன் பண்ணுனா நல்லாருக்குமா...! நோ...! நெவர்...! ).



May 3, 2013

சூப்பர் சிங்கர் – சத்யப்பிரகாஷ் .








சூப்பர் சிங்கர் முதல் சீசனில் இருந்து தொடர்ந்து பார்த்து வருகின்றேன் . தினமும் பல் விள(ல)க்குவது , குளிப்பது(!) , புசிப்பது போல சூப்பர் சிங்கர் பார்ப்பதும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது .

ஒவ்வொரு சீசனிலும் எத்தனையோ பேர் கலந்து கொண்டு சிறப்பாக பாடினாலும், யாரோ ஒருவர் மட்டும் பேவரைட் ஆக இருந்துவிடுகின்றார்கள் . கிருஷ்ணமூர்த்தி, அனிதா , ரவி , பிரியங்கா , அனு, சத்யப்பிரகாஷ் . இந்த விஷ் லிஸ்ட்ல கிருஷ்ணமூர்த்திய தவிர யாருமே டைட்டில் வின் பண்ணல . நமக்கு பிடிச்சவங்க வெற்றி பெறாத பொது கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கும் . அதிலும் சத்யப்பிரகாஷோட தோல்வி ஆகப்பெரிய அதிர்ச்சி  .

சத்யா எப்பவுமே ராக் ஸ்டார் தான் . உதித் நாராயணன் மாதிரி பாடுறதாகட்டும்  , சிவாஜி , எம்.ஜிஆர் மாதிரி எக்ஸ்பிரசன் கொடுக்குறதாகட்டும் , வெஸ்டர்ன் , கிளாசிக் , ஃபோக் , மெலடின்னு எல்லாத்துலயுமே  அசத்தக்கூடிய  சத்யா போட்டியில தோத்துட்டாலும் , அதிகமான சினிமா பாடல் வாய்ப்புகள் இப்ப இவருக்குதான் கிடைத்துக்கொண்டு இருக்கிறது .

முதல் பாடல், “மயங்கினேன் தயங்கினேன்” படத்தின் – “மயங்கினேன் தயங்கினேன்” என்ற ஒரு நிமிட மெலடி, பெரிதாக செவி ஈர்க்கவில்லை . அடுத்தாக, அனிருத் இசையில் “மூன்று” படத்திற்காக ஹரீசுடன் இணைந்து பாடிய போ நீ போ ரீமிக்ஸ். அதற்கடுத்து, ஜி.வி பிரகாசின் “தாண்டவத்தில்” “உயிரின் உயிரேவில்” சைந்தவியுடன் பாடிய  டூயட். இரண்டிலுமே பெரிதாக ஸ்கோப் இல்லை  , ஹம்மிங் , ஆலாப் மட்டுமே ஆனாலும் நன்றாகவே பாடியிருப்பார் . போன வருஷம் வெளிவந்த(?) “முதல் தகவல் அறிக்கை” என்ற படத்தில் “உன் ஊரெங்கும் வீசும்” என்று தொடங்கும் ஒரு  மெலடி பாடியிருக்கிறார் , அட்டகாசமாக இருக்கிறது. ஆனால், படம் படுத்ததால் பாடல் பரவலாக கேட்கப்படவே இல்லை .

இரண்டு வருடத்திற்குப் பிறகு இதோ இப்பொழுதுதான் நல்ல வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன . “கொஞ்சம் காஃபி கொஞ்சம் காதல்” – சுருக்கமா – “K 4” என்ற வெளிவர இருக்கிற படத்தில் , பாணி கல்யான் இசையில் ஒரு சேர்ந்திசைபாடல்  - “அடி தாகீரா” என்று ஆரம்பிக்கும்  நட்பையும் , காதலையும் போற்றும் பாடல் . அதிராத இசை , எளிமையான வரிகள், இனிமையான குரல் , இடையிடையே ராப்  என்று கலவையாக, அருமையாக இருக்கிறது . படம் வெளிவந்தபிறகு கல்லூரி மாணவர்களின் ரிங் டோனாக இருப்பதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உள்ள பாடல் .

பாடல் வரிகள் எல்லாமே அவ்வளவு அருமை .

“காதல்தான் இங்கு உயிரெழுத்து , நண்பரெல்லாம் அதன்  துணை எழுத்து”

“கைக்குட்டை இல்லாமல் கண்ணீரைத் துடைக்கின்ற அழகான விரல் அல்லவா “

“விரல்களில் செல்போன் பேச்சு , விழிகளில் பேஸ்புக் சாட்டு “

“தாய் கூட சிலநேரம் நம்மை தள்ளி வைப்பாள் அது பெரும் சோகம் , நண்பன் வந்து அங்கு நமக்காக  தோள் கொடுப்பான் அது யோகம் “.

“அதிகாலை , இளம் மாலை காஃபியின் சுவை போல அடி நெஞ்சில் இனிக்கின்றதே” .

கேட்டுப்பாருங்க உங்களுக்கும் பிடிக்கலாம் .
  
சமீபத்தில் பாரதிராஜாவின் “அன்னக்கொடியும் கொடிவீரனும்” படத்துக்காக ஜி.வி.பிரகாசின் இசையில் சின்மயி உடன் இணைந்து “ஆவாரங் காட்டுக்குள்ளே” என்று தொடங்கும் ஒரு டூயட் பாடியிருக்கிறார் . ஆலாப்புடன் தொடங்கும் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. அப்டியே போகப்போக குழைந்து நெகிழ்ந்து பாடியிருக்கிறார்கள் . கேட்க கேட்க பிடிக்கக்கூடும் . படம் வெளிவந்த பிறகு பண்பலைகளின் இரவு நேர விருப்பப் பாடலாக அமைவதற்கும் வாய்ப்பிருக்கிறது 

WELL DONE SATHYA...! WAY TO GO.....!