Dec 8, 2019

பேசாத வார்த்தைகள் ~ 08122019


பேசாத வார்த்தைகள் ~ 08122019


உணவகம் ~ சுப்பு மெஸ்.

முன்கூட்டிய திட்டமிடல் இல்லாத ஒரு கோவை பயணத்தில் , மதிய உணவிற்காக சுப்பு மெஸ் படியேறினேன். மேற்படி மெஸ்ஸை தெரிவு செய்ததற்கு மூன்று காரணம் .

முதல் காரணம் நான் சொல்லவேண்டிய அவசியமில்லை ; உங்களுக்கே தெரிந்திருக்கும் . ஆம் . அதேதான். நாமம்..!!! இரண்டாவது அமைவிடம். பேருந்து நிலையத்திற்கு வெகு சமீபம். மூன்றாவது அசைவ சாப்பாடு ருசியாக இருப்பது.  சுப்பு மெஸ் அளவிற்கு வேறெந்த உணவகத்திலும் நீங்கள் மகளிர் கூட்டத்தை காணவியலாது. குறிப்பாக யுவதிகள்.


எப்பொழுதும் போல அப்பொழுதும் சுப்பு மெஸ் ஜனத்திரளால் நிரம்பி வழிந்தது. பத்து நிமிடக் காத்திருப்பிற்கு பின் இருக்கை கிடைத்து , உபகாசரிடம் முழுச்சாப்பாடு கோரினேன். கூடவே வறுத்த மீன். தலைவாழை இலை போட்டு , ஒரு எவர்சில்வர் தட்டில் சடங்குப்பொருட்கள் போல குழிக்கிண்ணங்களில் கூட்டு, பொரியல் , மீன் மற்றும் ஆட்டுக் குழம்பு , தயிர் நிரப்பி கொண்டு வந்து வைத்தார்கள்.

உங்களுக்கு அதிர்ட்டம் இருந்தால் கறிக்குழம்புக் கிண்ணத்தில் ஒரு சிறு துண்டு கறி கிடைக்கலாம். அதிர்ட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மீன் மட்டும் கிட்டாது. இரண்டு குழம்புமே அளவான காரம். மீனை விட கறிக்குழம்பு சுவை. கூட்டு பொரியல் ஓகே ரகம். உள்ளங்கை அளவிற்கான மீன் துண்டு குறைவான மாசலா, எண்ணெய் தடவி வெங்காயம், எலுமிச்சை சகிதம் மிதமான சூட்டில் பரிமாறப்பட்டது. நடுவில் இருந்த முள்ளை தவிர எள்ளளவும் சேதாரமில்லை. ஒரு முழுச்சாப்படும் , மீன் துண்டும் 245 ரூபாயானது. 200க்குள் இருந்திருந்தால் தகும்.


@@@@@@@@@@@


பெண்கள் , பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை கட்டுப்படுத்தும்விதமாக , இணையத்தில் குழந்தைகளை கொண்டு எடுக்கப்பட்ட ஆபாச படங்களை , பார்ப்பவர்களை பட்டியலிட்டிருக்கிறோம் என்றும் , சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து அறிவுரையும் தேவைப்பட்டால் தண்டனையும் வழங்குவோம் என்று காவல்துறை அறிவித்திருக்கிறது. ஒரு பெண் பிள்ளையை பெற்றவன் என்ற முறையில் வரவேற்கிறேன். அதே சமயம் சம்பத்தப்பட்ட சலனப்படங்களை எடுப்பவர்களை ; இணையத்தில் ஏற்றுபவர்களை தண்டித்தால் மிக்க மகிழ்வோம்.

மற்றபடி இன்றைய சூழலில் பார்ன் மூவி பார்ப்பதற்கோ , சமிஞ்கைகள் வாசிப்பதற்கோ பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. வெப் சீரிஸ் , வெட்டிங் போட்டோகிராஃபி , கிண்டில் புத்தகங்களே போதுமானதாக இருக்கிறது. நீங்க நம்பவில்லையெனினும் அதுதான் நிஜம்.


@@@@@@@@@


புத்தகம் ~ அகிலாஷ் சூறாவளியின் 18 சிறுகதைகள்.

பிரபாகரின் சிபாரிசின் பேரில் பெருமுயற்சி எடுத்து அமேசான் கிண்டில் எல்லாம் டவுன்லோடி மேற்படி புத்தகத்தை இலவசக் கொள்முதல் செய்தேன். கிண்டிலை ஆண்ட்ராயிடிலும் வாசிக்கலாம் போல. எனக்கு கிண்டில் ஆண்ட்ராய்டில் புத்தகம் வாசிப்பது இதுதான் முதல்முறை.

பக்கத்திற்கு இருபது முதல் இருபத்தைந்து வரிகள். வரிக்கு நான்கு வார்த்தைகள் என்ற கட்டமைப்பில் இருக்கிறது. புத்தகம் போலவே பக்கத்தை புரட்டும் வசதிகூட உண்டு. வாசித்த பக்கங்களின் சதவீதம்,  வாசிக்க வேண்டிய பக்கங்களின் உத்தேச நேரத்தேவை எல்லாம் footnote ல் காணக்கிடைக்கிறது. பத்து நிமிடங்கள் சேர்ந்தாற்போல வாசித்தால் 20,30 பக்கங்களை எளிதில் கடந்துவிடலாம். நல்ல பெரிய எழுத்துரு ; அவ்வளவாக கண்களை உறுத்தாத பின்னணி என்று வாசிக்க சவுகர்யமாவே இருக்கிறது.

சரி புத்தகத்திற்குப் போவோம். மொத்தம் 18 சிறுகதைகள். அகிலாஷ் சூறாவளி என்கின்ற சுரேந்தர் என்பவர்தான் எழுதியிருக்கிறார். வழக்கமான சிறுகதை பாணியெல்லாம் இல்லாமல் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கிறது. ஆங்கில வார்த்தைகளை English லேயே எழுதியிருப்பது சிறப்பு. புத்தகத்தின் பெருங்குறையாக நான் கருதுவது  "எலுதுபிலைகள்". ஜீரணிக்கவே முடியவில்லை.

கணிசமான கதைகளில் பயணமும், உரையாடலும் பிரதானமாக இருக்கிறது. சாதாரண கதைகளில் வரும் உரையாடல்களிலேயே இது யார் பேசுவது என்ற ஐயம் வாசிப்பவனுக்கு வரும். இவரது சிறுகதைகளோ அசாதாரணமான ரகத்தில் இருக்கிறது. போதாதற்கு முன்பின்னாக, அரூபமாக கதையை சொல்லிச் செல்கிறார். ஆரம்ப கட்டத்தில் இருக்கும் வாசகர்களுக்கு புரிந்து கொள்வது ரெம்பவே கடினம்.

ஒவ்வொரு சிறுகதையிலும் சில பத்திகள் அபாரமாக இருக்கின்றது.  ஓர் ஆரம்பம் , ஒரு பிரச்சனை அப்றம் சுபமாகவோ , சோகமாகவோ ஒரு முடிவு என்கின்ற வழக்கமான சட்டகத்திற்குள் அடக்கமுடியாத சிறுகதைகள். அதுவே பலம் அதுவே பலவீனமும்.

கொஞ்சம் பொறுமையா மீள் வாசிப்புக்கு உட்படுத்தி திருத்தி வெளியிட்டிருக்கலாம். ஒரு போட்டி வைத்து , காலக்கெடு வைத்து , கட்டுப்பாடுகள் வைத்து எழுதினால் இப்படித்தான் வரும் போல. ஆடல், பாடல், ஓவியம் எழுத்து போன்ற கலைகளுக்கெல்லாம் போட்டி வைப்பதை அனுமதிக்கவே கூடாது. தனியல்பாக எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி முகிழ்க்கவேண்டும் என்பதே என் அபிப்பிராயம்.

அப்றம் அ.சூ கொஞ்சம் இண்டெலெக்சுவல் பார்ட்டி போல. எனக்கு ஒத்துவரவில்லை. புத்தகம் நல்லால்லைன்னு சொல்லல ; எனக்கு பிடிக்கலைன்னு கூட சொல்லமாட்டேன். பிடிபடலன்னு வேணும்னா சொல்லலாம். கொஞ்சநாட்கள் கழித்து பொறுமையாக மீள்வாசிப்பிற்கு உட்படுத்தவேண்டும்.
"சிப்பிக்குள் இருக்கும் முத்தின்பால் ஆயிரம் கனவுகள் " அப்படின்னு ஒரு கவிதை அதற்கொரு விளக்கம் ஒரு கதையில் வருகிறது. எனக்கு பிடித்திருந்தது.

என்றென்றும் புன்னகையுடன்.,
ஜீவன் சுப்பு.

2 comments:

 1. நல்லதொரு தொகுப்பு.

  உணவகம் - நன்றி. எப்படியும் நான் செல்ல முடியாது! :)

  சிறுமிகளுக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதில் வலி.

  புத்தகம் - கிண்டில் புத்தகம் அறிமுகத்திற்கு நன்றி. தேடிப் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 2. கிண்டில் வந்தாச்சா...? இனி கச்சேரி தான்...

  ReplyDelete

Related Posts with Thumbnails