Dec 1, 2019

பேசாதவார்த்தைகள் ~ #011219 ~ உலர் | சுஷ்சுருதி உணவகம் |ந.வீ.பி | DRIVE | HACKERS .



பேசாதவார்த்தைகள் ~ #011219 ~ உலர் | சுஷ்சுருதி உணவகம் |ந.வீ.பி | DRIVE | HACKERS .




கடந்த வாரத்தில் 3 படங்களை மொபைலில் பார்த்தேன். முதலாவது பாண்டிராஜின் நம்ம வீட்டுப் பிள்ளை. திரளான நடிகர்களை வைத்துக்கொண்டு குடும்பம், உறவுகள் சார்ந்து படம் எடுப்பதில் பாண்டிராஜ் தேர்ந்த விற்பன்னராகிவிட்டார். நான்கைந்து கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு சுவராஸ்யமாக படம் பண்ணுவதில் உள்ள சவால்களுக்கு நிகரான சவால்கள் இதுபோன்ற படங்களிலும் உண்டு. இத்துனை கதாபாத்திரங்களை சிருஷ்டித்து, அவர்களுக்கு ரசனையான நாமகரணம் சூட்டி , தனித்த சுபாவம் கொடுத்து அதை சுவரஸ்யமாகவும் அதே சமயம் துறுத்தாமலும் காட்சிப்படுத்துவதென்பது பராட்டப்படவேண்டிய ஒன்று. சிவாவுக்கு மீண்டுமொருமுறை கைகொடுத்திருக்கிறார் பாண்டிராஜ். படம் எனக்குப் பிடித்திருந்தது.

இரண்டாவதாக Drive என்றொரு இந்திப்படத்தின் தமிழ் டப்பிங் பார்த்தேன். அஃபீசியலாக கொள்ளையடித்த பணத்தை புரெபஷனலாக கொள்ளையடிக்கிறார்கள். ஸ்ட்ரீட் ரேஷும் ; ஜனாதிபதி மாளிகையும் களம். இதெல்லாம் நம்புறமாதிரியா சார் இருக்குன்ற ரகத்தில் அநேகக் காட்சிகள் இருப்பினும் , பார்வைக்கு இடையூறில்லை . லீட் ரோல் செய்திருக்கும் இருவருமே நச். ஹீரோ ரோல் செய்திருப்பவர் கண்களிலேயே சிரிக்கிறார். மலையாளத்தில் பகத் போல இந்தியில் இவர் போல. இவர்களுக்கு இணையாக தமிழில் ஜீவா வந்திருக்கலாம். வரவில்லை ; ஒருவகையில் தப்பித்தோம். கதாநாயகி அலட்டலான பெர்ஷனாலிட்டி. அசால்ட்டாக அசரடிக்கிறார். லேடி சூப்பர் சுடாரெல்லாம் நாலு அடியல்ல நாற்பதடி பேக் போகவேண்டும். படம், பார்க்கலாம் ; பார்க்காமலும் இருக்கலாம் ரகம்.


மூன்றாவதகா Hackers என்றொரு ஹாலிவுட் படத்தின் தமிழ் டப்பிங் பார்த்தேன்.  அதிகாரத்திலும் பதவியிலும் இருக்கும் நபர்கள் , பொதுமக்களின் இணைய  ; தொலைபேசி உரையாடல்களை , கருத்துபரிமாற்றங்களை வேவு பார்க்கிறார்கள். இதனை உலகறியச்செய்யும் முயற்சியில் இறங்கும் எதிர்க்கட்சி தலைவரை காவு வாங்க தேதி குறித்திருக்கிறார்கள். மேற்படி திட்டத்தை எதேச்சையாக அறிந்து கொள்ளும் ஹேக்கர் பெண்ணொருவர் , மற்ற ஹேக்கர்கள் துணையுடன் அம்பலடுத்துகிறார். இடையே அப்பா மகள் பாசம் , அப்பாவின் சிஷ்யப் பிள்ளையாண்டனுடன் காதல் , லிப்லாக்கெல்லாம் உண்டு. ஆங்கிலப் படங்களை தமிழ் டப்பிங்கில் பார்ப்பது , சுப்ரபாதத்தை ஒலிக்கவிட்டு ;  ஒளியில் கிரிக்கெட்டைப் பார்ப்பதுபோல் உள்ளது. பார்க்காமலேயே இருந்திருக்கலாம். சிப் அளவிற்குக்கூட சுவராஸ்யமில்லை.

@@@@@@

மயிலன் சின்னப்பனின் உலர் சிறுகதை வாசித்தேன். அச்சில் வந்திருக்கும் அவரது மூன்றாவது சிறுகதை இது என்றெண்ணுகிறேன். அந்திமழை இதழில் வந்திருந்ததாக எழுதியிருந்தார். அந்திமழையெல்லாம் எலைட் ரக வாசிப்பாளர்கள் மட்டுமே வாங்கிக்கொண்டிருக்கும் மாத/வார இதழ் போல. எனது விருப்பத்தின் பேரில் கட்செவியில் pdf கோப்பை அனுப்பி வைத்திருந்தார். அபாரமான சிறுகதை. சற்றே பெரிய சிறுகதையும் கூட. அவரின் முதலிரண்டு சிறுகதைக்கும்  உலர்க்கும் இடையே பெரும்பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் விவரணைகளில். கொஞ்சம் சிக்கலான மனித அகம் சார்ந்த எண்ணங்களை, வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத உள் மன விருப்பங்களை தஞ்சை வட்டார வழக்கில் , நுட்பமாகவும் எளிதாகவும் எழுத்தில் வடித்திருக்கிறார். வாழ்த்துக்கள் டாக்டர். முதுநிலை மருத்துவம் படித்துவிட்டு பரபரப்பான மருத்துவராக இயங்கிக்கொண்டே எழுதுவதும், எழுத்தில் பிராகசிப்பதும் அபூர்வம். நல்லதொரு வாசிப்பனுபவத்தை தந்ததற்கு மனம் நிரம்பிய நன்றிகள் ம.சி. உங்களின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.


@@@@@@@


கடந்த வாரத்தில் ஒரு வேலை நாளில் எதேச்சையா கண்ணில் பட்டது சுஷ்சுருதி இயற்கை உணவகம். திருப்பூர் டூ பல்லடம் சாலையில், பழைய பேருந்து நிலையத்திற்கு வெகு சமீபமாக உள்ளடங்கி இருக்கிறது. விசாலமான வாகன நிறுத்துமிடமே பாதி திருப்தியை தந்துவிடுகிறது. பொதுவாக இயற்கை உணவகம், பாரம்பரிய உணவகம் என்றால் , பெருவாரியானவர்களைப் போல் எனக்கும் ஒவ்வாமை உண்டு. பெரிதாக ஒன்றுமில்லை ; அது இதுவென்று சொல்லி மொத்தமாக ருசியை காலி செய்துவிடுவார்கள் என்பதுதான் காரணம். திருமண மண்டப பந்திபோல் இருக்கிறது உணவருந்துமிடம். அதேசமயம் சாம்பாரில் கை வைக்கும்போதே நமக்குப் பின்னால் வந்து அடுத்த பந்திக்கான ஆட்கள் நிற்கும் அவலமில்லை . போலவே சாப்பிடுவதற்கு முன்பே டோக்கன் வாங்கச் சொல்லும் அசிங்கம் இங்கில்லை என்பது உபரி ஆறுதலாக இருந்தது. 

தலை வாழை இலை போட்டு இந்துப்புடன் பரிமாற ஆரம்பிக்கிறார்கள். புடலைங்காய் பொரியல் அதீத மசாலாவினால் தன்னியல்பைத் தொலைத்திருந்தது. ருசியும் பிரமாதமாக ஒன்றுமில்லை. அடுத்தது பலாக்கீரை மசியல். வேகவைத்த பருப்புடன் நன்கு மசித்திருந்தார்கள். நல்ல சுவை. அடுத்தது முள்ளங்கி துவையல். வாழ்வில் முதன்முறையா கேள்விப்படுகிறேன். புளி சேர்த்து மைய்ய அரைத்திருந்தார்கள். மோர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அபாரமாக இருந்தது. இதுபோக மாங்காய் ஊறுகாய், பொரித்த அப்பளம். 

ஒற்றைத் தீட்டல் பொன்னி அரிசியில் வடிக்கப்பட்ட சாப்பாடு. பதமாகவும் இல்லாமல் ; குழைவாகவும் இல்லாமல் பக்குவமாக வடித்திருந்தார்கள். இளம் சிவப்பு வண்ணத்தில் கொஞ்சம் குருணையாக இருந்தது சாதம். ஆனால் நல்ல ருசி. கதம்ப சாம்பாரை பொன்னிக்குவியலில் ஊற்றிப் பிசைந்து ஒரு கவளம் எடுத்து வாயில்போட்டால் அடடா பிரமாதம். எங்கள் பகுதியில் பூசைச் சாம்பார் என்று சொல்லுவார்கள். பல காய்கள் போட்டு , உறைப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கும் . சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமாய் இருக்கும். இரண்டு நாட்களுக்குக்கூட வைத்துச் சாப்பிடுவோம். இங்கே வழங்கப்பட கதம்ப சாம்பார் நல்ல சுவை. பெரும்பாலான உணவகங்களில் சாம்பாரில் போடப்பட்டிருக்கும் காய்கறிகள் நானும் ரவுடிதான் ரேஞ்சுக்கு மட்டுமே இருக்கும். இங்கே விதிவிலக்கு. காய்கள் ருசியாக இருந்தது , விரும்பி சாப்பிட்டேன். அடுத்தது பருப்பு ரசம். எல்லா இடத்திலும் போல் இங்கேயும் மிளகாய் பொடி போட்டு சாம்பாரின் ஒன்றுவிட்ட தங்கச்சியைப் போல சமைத்திருந்தார்கள். 

அடுத்து , புளிக்குழம்பு ஓகே ரகம். அல்சர் பிரச்னையிருப்பதினால் ஊறுகாய் போல தொட்டுக்கொண்டேன். நாட்டு மாட்டுப் பாலில் உண்டாக்கிய தயிர் ஒரு கிண்ணத்தில் கொடுத்திருந்தார்கள். தயிருக்கு தாவுவதற்கு முன்பாக ரவை, பாசிப்பருப்பு, பச்சரிசி கலவையில் இளம் சூட்டில் கொடுக்கப்பட்ட பாயாசத்தை இலையில் விட்டு ஒரு பிடி பிடித்தேன். 90ஸ், 2k கிட்ஸ்களெல்லாம் பாயாசத்தை கிண்ணத்தில் போட்டு ஸ்பூனில் சாப்பிடுகிறார்கள். அட்டகாசமான விஷுவல்ஸ் கொண்ட ஒரு திரைப்படத்தை ஸ்டாம்ப் சைஸ் ஸ்க்ரீன் கொண்ட மொபைலில் பார்ப்பதற்கு ஒப்பானது அது. நிறைவாக தயிருடன் மோர் விட்டு ஏப்பம் விட்டேன். சில இடங்களில் மோரில் பச்சை மிளகாய், இஞ்சி , மல்லித்தழை எல்லாம் போட்டு நீர்மோர்ப் பந்தல் மாதிரி ஆக்கிவிட்டிருப்பார்கள். இங்கே அந்தக் கொடுமையை செய்யவில்லை. கிளீன் மோர்.

ஒரு முழுசாப்பாட்டின் விலை 110 ரூபாயாகிறது. தொகை கொஞ்சம் அதிகம்போல் தோன்றினாலும் தரத்திற்குத் தகும். அருகிலேயே இயற்கை அங்காடி கடை விரித்திருக்கிறார்கள். கருப்பு கவுணி அரிசி கால்கிலோ வாங்கிவந்தேன்.

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன் சுப்பு


3 comments:

  1. சிறந்த பதிவு
    தொடருகிறேன்

    ReplyDelete
  2. தமிழகம் வந்த போது எங்க வீட்டுப் பிள்ளை பார்த்தேன். ஓகே. உலர் சிறுகதை பற்றிய உங்கள் விவரம் வாசிக்கத் தூண்டுகிறது. இயற்கை உணவகம் - ஆஹா... சுவைக்கத் தோன்றுகிறது.

    ReplyDelete

Related Posts with Thumbnails