May 4, 2017

பேசாத வார்த்தைகள் : திருச்சி ...!




பேசாத வார்த்தைகள் : திருச்சி ...!

இரண்டாயிரத்து இரண்டு மற்றும் மூன்றாம் வருடத்தின் சில மாதங்கள் திருச்சியில் குப்பை கொட்டினேன் . மலைக்கோட்டை எதிரில் உள்ள ஒரு சத்திரத்தில் தங்கியிருந்து எசன்ஸ் கடைக்கு வேலைக்கு சென்றுகொண்டிருந்தேன் . இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் மற்றும் கடையிலிருந்து சத்திரத்திற்கு போய்வர . ஒரு மிதிவண்டி , அதன் பிறகு எப்போதாவது ஒருமுறை திருச்சி போய்வருவதுண்டு பெரும்பாலும் அது சிலமணி நேரப் பயணமாகவே இருக்கும் .

பல வருடங்களுக்குப் பிறகு உறவினர் வீட்டில் இருக்கும் மனைவியையும், தர்ஷினியையும் பார்த்துவரும் பொருட்டு இரண்டு நாள் நிகழ்வாக பயணப்பட்டேன் திருச்சிக்கு . வழக்கம்போல ஜன் சதாப்”தீ” மிகச்சரியாக மூன்று மணி நேரத்தில் திருச்சியை அடைந்தது . அங்கிருந்து அரசுப்பேருந்தில், ஒருமணி நேர அக்னிப்பயணத்திற்கு பிறகு சமயபுரம் சென்றடைந்தேன் .

கடந்த கால நினைவுகளை ரீ-கலெக்ட் செய்யும் விதமாக , இரண்டு நாள் பயணத்தில்  சந்திக்க வேண்டியவர்கள்/ வேண்டிய இடங்கள் என்று ஒரு லிஸ்ட் வைத்திருந்தேன் . சமயபுரம் மாரியம்மன் , மலைக்கோட்டை பிள்ளையார், ஸ்ரீரங்கம் பெருமாள்  , சென்ட்ரல் ஐய்யப்பன் , வண்ணத்துப்பூச்சி பார்க் , கோர்ட் சித்தர் மற்றும் சில மைக்கேல் ஐஸ்கிரீம் பார்லர் உள்பட சில உணவகங்கள்/சிற்றுண்டியகங்கள்.

திட்டப்படி ஞாயிறு மாலை சமயபுரம் . ஆனால் , குழுமியிருந்த கூட்டத்தை பார்த்து மலைக்கோட்டைக்கு எடுத்துவிட்டேன் ஓட்டத்தை. சென்னை ரெங்கநாதன் தெருவிற்கு சவால் கொடுக்கும் விதமாக மலைகோட்டை NSB சாலை . ( ஆமா ..! NSB ன்னா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரோடு தானே ..?) இதுபோன்ற நெருக்கடியான சாலைகளில் முண்டியடித்து முன்னேறிக் கொண்டிருக்கும் போது ஏற்படும் மூச்சுதிணறலை, இருபுறமும் விரிந்திருக்கும் ஏதோவொரு ஜவுளிக் கடலின் கண்ணாடிக் கதவுகளின் வழியாக கசிந்துவரும் ஏ.சி காற்றுதான் ஆசுவாசப்படுத்தி உயிர் மூச்சை மீட்டுக் கொடுக்கிறது . பெரும்பாலும் ஜவுளிக் கடைகள்  எல்லாம் மாடி மேல மாடி வைத்து உயர்ந்துதானிருக்கும்  திருச்சி சாரதாஸ் மட்டும் பரந்து, விரிந்து அகண்டு இருக்கின்றது . கடல்களைக் கடந்து போய்கொண்டே இருந்தால் கடைகளோடு கடைகளாக கோவில் முகப்பு . புதிதாக போகிறவர்கள் கண்டிப்பாக கண்டுபிடிப்பது சிரமம்தான் .

தாயுமானவர் சன்னிதிக்கு வெகு சமீபத்தில் கும்பலாக மக்கள் செருப்பைத்தூக்கிக்கொண்டு நின்றார்கள் . நானும் நின்றேன் . நல்லவேளை காலணி காப்பாளர் ஆதார் அட்டை கேட்கவில்லை . காலணி காப்பகத்தின் நிலை வெகு பரிதாபம். பெட்டிக்கடைகூட வைக்கமுடியாத இடத்தில் நாறிக்கொண்டிருக்கிறது . சம்பந்தப்பட்டவர்கள் கவனித்தால் தேவலாம் . இல்லையெனில் அடிவாரப்பிள்ளையாரையே நம்மாட்கள் காவலுக்கு வைத்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது . பத்து நிமிட தவத்திற்கு பின் காலணி காணாமல்போகாது என்பதற்கான கேரண்டி கார்டை பெற்றுகொண்டு அடிவார விநாயகருக்கு உக்கி போட்டு , உச்சிப் பிள்ளையாருக்கு முக்கி போட ஆரம்பித்தேன் .

திருச்சியில் குப்பை கொட்டினேன் என்று சொன்னேன் அல்லவா , அப்பொழுதெல்லாம் தினமும் காலை குளித்து முடித்து மலைமீதேறி உச்சிப் பிள்ளையாருக்கு வணக்கம் வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன் . அதே நினைப்பில் தான் இப்பொழுதும் ஏறினேன் . படி ஏறத்துவங்குவதற்கு முன்பான சமதளத்தில் ஒரு தடுப்பு . உலோகத் துப்பறிவாளர் பீப்படித்துக்கொண்டிருந்தார் . எனக்கும் அடித்தார் . தொடர்ந்து கோவில் சிப்பந்தி பஞ்சு மிட்டாய் வண்ணத்தில் இருந்த ரசீதைக்  கிழித்து கைகளில் திணித்தார் . என்னவென்று வினவினேன் . கேமரா மொபைலுக்கு இருவது ரூபாய் கட்டணமாம் . நவீன கட்டணக் கொள்ளை(கை)யாக இருக்கிறது . இன்றைய தேதிக்கு பணியாரம் சுடும் பாட்டிகூட கேமரா மொபைல்தான் வைத்திருக்கிறது. 399 ரூபாய்க்கு மொபைல் வாங்கினால் கூட அதில் கேமரா வசதி இருக்கின்றது . போகட்டும் .

எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மருதமலை , பழனி மலை  , சிவன்மலை படிக்கட்டுக்களை விட உச்சிப்பிளையார் மலைக்கோவில் படிக்கட்டுகள் குறைவுதான் ( தோராயமாக அறுநூறு படிகள்). ஆயினும் , மற்ற மூன்றைக்காட்டிலும் உ.பி மலை  சற்று சிரமம் . காரணம் குடவரைப் படிக்கட்டுகள். மற்ற மூன்றும் ஓப்பன் படிக்கட்டுகள் , அதிகாலையிலோ , மாலையிலோ போகும்போது இயற்கையோடு சேர்ந்து கொஞ்சம்  ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம் . இங்கே அதற்கு வாய்ப்பில்லை . மூலவர் கர்ப்பகிரஹத்திற்குள் பிரவேசித்ததுபோலத்தான் . போதாதற்கு நிமிர்த்து வைத்த ஏணியை போன்ற படிகள் . முதல் சமதளத்தை அடைவதற்குள் பிரிட்டீஷ்காரன் இங்கிலீஸ் போல தஸ்புஸ் என்று நாக்கு தள்ளிவிட்டது . இன்னும் ஒரு பத்துப் பதினைந்து வருடங்கள் கழித்து மலை ஏறமுடியுமா என்பது மோடி அரசு பேங்கில் போடுவதாக சொன்ன பதினைந்து லட்சம் லட்சணம்தான்.

கிட்டத்தட்ட மலை ஏறுவது , பாதயாத்திரை போவது , நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்று சுவாமி தரிஷனம் செய்வது இதெல்லாம் கூட மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்துகொள்வது போலத்தான். மூச்சு வாங்காமல் , முட்டியைப்பிடிக்காமல் , தரையில் அமராமல் , போற வர்றவர்களை வேடிக்கை பார்க்காமல்  உங்களால் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் சந்நிதியை அடைய முடியுமேயானால் நீங்கள் fit ஆக இருகின்றீர்கள் என்று அர்த்தம் .

உச்சிப்பிளையாருக்கு முன்பாக ஓர் அம்மன் சந்நிதி உண்டு . அங்கே, வெளிக்காற்று உள்ளே வரும்விதமாக இரண்டு இடங்களில் ஜன்னல் வைத்திருக்கிறார்கள் . ஜன்னலில் கொஞ்சம் முகத்தைக் கொடுத்து ஆக்சிஜனைப் பெற்றுகொண்டு மேற்கொண்டு நடையைக் கட்டினேன் . இப்பொழுது ஓப்பன் படிக்கட்டுக்கள் . வெயிலின் உக்கிரத்தில் இருந்து தப்பிக்கும்விதமாக இடையிடையே சாமியானா பந்தல் போட்டிருக்கிறார்கள். நான் சென்றது இரவு நேரம். காற்று அசுர வேகத்தில் வீசிக்கொண்டிருந்தது. பலத்த காற்றில் பறந்த இளைஞர்ன்னு நாளைய தினமலரில் பெட்டிச்செய்தி வந்துவிடக்கூடாதே என்ற பயத்தில் தடுப்புக்கம்பியை இறுகப்பற்றிக்கொண்டு பரந்து விரிந்த திருச்சியை ஒரு பயப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சிறுவனும் அவனது தாயாரும் என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே கடந்து போனார்கள். நானும் சிரிக்க முயற்சித்தேன்.

ஒட்டு மொத்த மலையும் செல்ஃபிகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பொதுவாக பொது இடங்களில் படம் எடுப்பதும், எடுதுக்கொள்வதும் எனக்குப் பிடிக்காதது . காரணம் வேறொன்றுமில்லை கூச்சம் . uneasy ஆக உணர்வேன் . ஆனால் , இங்கே தான் இருவது ரூபாய் கட்டணம் வசூலித்திருக்கிறார்களே அது செறிக்கவேண்டும் என்பதற்காக ஒரு காலை கம்பிக்குள் முட்டுக்கொடுத்துக்கொண்டு நாலைந்து புகைப்படங்களை கிளிக்கினேன் . காலும் கையும் ஆடிய ஆட்டத்தில் எடுத்த போட்டோக்கள் வீடியோவாகிவிட்டன.

மிச்சம் இருக்கும் படிகளையும் தவழ்ந்து ஏறி வரிசையில் நின்றேன் பத்து நிமிடக்காத்திருப்புக்குப் பின் விநாயகப்பெருமானின் திவ்ய தரிசனம் கிட்டிற்று . உண்டியலிலோ , தீபத்தட்டிலோ காணிக்கை என்று ஏதொன்றும் போடவில்லை . என்னளவில் காணிக்கை போடுவதைக்காட்டிலும் , குப்பை போடாமலிருப்பதே  நாம் செய்யும் பெரிய சேவை/காணிக்கை தான் . பெரும்பாலான நம் தமிழகக் கோவில்களைப் பார்த்தால் , மக்கள்\ கோவிலுக்கு கும்பிட வருகிறார்களா இல்லை குப்பை போட வருகிறார்களா என்று சந்தேகமே வந்துவிடும். கி.ரா அவர்களின் மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்ரை கூற்றை நிறுவும் செயல்களில்/இடங்களில் மேற்படி இடமும்/செயலும் ஒன்று .

குறிப்பு : எதிர்பார்த்ததைவிட பதிவு நீண்டுகொண்டே போவதால் திருச்சி Conclusion அடுத்த பதிவில் .



என்றென்றும்  புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.


4 comments:

  1. ரசித்துப் படித்தேன். இப்போதெல்லாம் சமயபுரத்தில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முட்டிக்கி முட்டிக்கி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் செக் அப் செய்து விட்டார் போல் இருக்கிறது.

    ReplyDelete
  2. ஆஹா. திருச்சி வந்திருந்தீர்களா? இச்சயமத்தில் நானும் திருச்சியில்....

    கடந்த சில முறைகளாக உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குப் போக முடியவில்லை!போகணும்!

    ReplyDelete
  3. உங்க கிட்ட பிரச்சனையே இது தான், மத்த Blogs ல தான் பண்ணுற மாதிரி Silent reader ஆ இருக்க முடியரதே இல்ல :) பல வருடமான புழங்கர இடம் தான் திருச்சியும், சாரதாஸும், ஆனாலும் அதில் கூட ஜீவன் Version இருக்கா என்ன??!?! சென்ற முறை சாரதாஸுக்கு போனப்போ என் தங்கையிடம் உங்க ஒரு Quote பத்தி சொல்கிட்டு இருந்தேன் "அடுத்த முறை ஒரு Plastic பையை பயன்படுத்தும் போது ஒரு இறந்த குழந்தையை தொடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள் ". மென் நடையும், சிறு நகையும் கலந்த உங்க cocktail வழக்கம் போல செம்ம. அப்புறம் இது உங்க Birthday month என நினைவு. Happy birthday சகா!

    ReplyDelete
  4. @ தமிழ் இளங்கோ அய்யா - நன்றி ...! எஸ் . சமயபுரம் அதீத கூட்டத்தால் திணறுகிறது.

    @ வெங்கட்ண்ணா - ஆமாம். உங்களது பதிவை தாமதமாகவே பார்த்தேன் . இல்லைஎன்றால் .

    @ மைதிலி சிஸ்டர் - உங்களுக்கு அபார நினைவாற்றல். பாவம் உங்கள் மாணவர்கள்.சைலன்ட் ரீடரா இல்லாமல் அப்பப்ப சத்தம் போடுங்க :)

    ReplyDelete

Related Posts with Thumbnails