May 29, 2017

பேசாத வார்த்தைகள் : 280517 – ஒரு புத்தகம் ; இரண்டு படம் ; மூன்று பாடல்.


ஒரு புத்தகம் : சுஜாதாவின் “வானில் ஒரு மவுனத்தாரகை”.

ஜெமோவின் ஆயிரங்கால் மண்டபத்தை நூலகத்திலிருந்து எடுத்து வந்து முழுதாக ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன. அதன் பிறகு நூலகத்தை எட்டாமல் கூட   பார்க்கவில்லை. போன வாரம் சந்தைக்கு போயிருந்தபோது நூலாக அம்மையாரிடம் வசமாக சிக்கிவிட்டேன். ஆயிரங்கால் மண்டபத்தை தடவிக் கண்டுபிடித்து கொண்டுசேர்த்தேன். பத்து ரூபாய் அபராதம் .

சுஜாதா புத்தகம் ஏதேனும் உண்டுங்களா என்று வினவியவனுக்கு சுட்டு விரலை நீட்டினார் . இரண்டு நாடகங்கள் , ஒரு கேள்விபதில் மற்றும் ஒரு சிறுகதை நான்கையும் கொண்டுபோய் நீட்டினேன். புது புஸ்தகம் என்று சொல்லி ஒன்றை மட்டும் இரவல் ஏட்டில் குறித்தார் . மேடம், நாலும் வேணுமே தரமாட்டீங்களான்னேன் . நிமிர்ந்து பார்த்தார் . எதுவும் பேசவில்லை . சந்திரமுகி படத்தில், ரஜினி வடிவேலுவைப்பார்த்து சொல்லும் “முருகேசா” வசனத்தை மனதிற்குள் நினைத்திருக்கக்கூடும்.

சுஜாதா எழுதிய புத்தகத்தை வாசித்ததை விட சுஜாதாவைப் பற்றி சிலாகித்து எழுதியததைப் படித்ததுதான் அதிகம். சுஜாதா எழுதியதில் நான் ஒரே ஒரு புஸ்தகத்தை மட்டுமே வாசித்திருக்கிறேன் ( அனிதா or நைலான் கயிறு ) . ஷோசியல் மீடியாவில் சுஜாதாமேனியா அதீதம். சுஜாதைவை பிடிக்கும்னு சொல்றதும் ; பேசுறதும் ; எழுதுறதும் தேய்வழக்கு என்று சொல்வது கூட தேய்வழக்கு தான்.

இந்தியாவில் இருக்கும் ஒட்டு மொத்த ரெஸ்யூம்களையும் நீங்கள் பார்த்தீர்களேயானால் ஒரு விசயம் பொதுவாக இருக்கும் . அது .., Hobby – Hearing Music. போலவே சுஜாதா பிடிக்கும்னு சொல்றதும். வருடங்களுக்கு முன் வீட்டுக்காரம்மாவை ஒரு நேர்முகத்தேர்வுக்காக பெங்களூருக்கு அழைத்துச் சென்றிருந்தேன் . ரெஸ்யூமை வாசித்த தேர்வர், எந்த மியூசிக் பிடிக்கும்னு கேட்டிருக்கிறார் . இளையராஜாவை சொல்லியிருக்கிறார் அம்மிணி. ஓக்கே அவரின் சமீபத்திய ஆல்பம் பெயர் என்ன , நீங்கள் விரும்பி கேட்கும் பாடல் எது ... ஏன் ...? அவ்வளவுதான் கேள்வி. ஐடி கம்பெனில அடிமாடாய் வேலைக்கு சேர்வதற்கும் இந்தக் கேள்விக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்கலாம்தான். பதிலுக்கு திருப்பி , உனக்கு பிடித்த விசயத்திலேயே நீ அப்டேட்டா இல்லையே, பணத்துக்காக குப்பை கொட்டப்போற விசயத்திற்கா நீ அப்டேட்டா இருக்கபோறன்னு கேட்டா ...?

சுய அனுபவம் ஒன்றும் உண்டு . அறந்தாங்கி பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருந்தபோது எங்களுக்கு புதிதாக ஒரு லேடி புரொபசர் வந்து சேர்ந்தார் . அரசுக் கல்லூரிகளில் பெரும்பாலும் கன்சர்வேட்டிவ் புரோபசர்கள் தான் அதுவும் நாற்பது பிளஸ் வயசுகளில் . எங்களுக்கு வந்திருந்தவருக்கு முப்பதுக்குள்தான் . அடுத்த டிப்பார்ட்மென்ட் பசங்களுக்கேல்லாம் சகலதுவாரங்களில் இருந்தும் புகையுடன் கூடிய தீ. முதல் அமர்வில் , பரஸ்பரம் அறிமுகம். ஒவ்வொருவராக அறிமுகப்படுதிக்கொண்டோம் . கவனம் கவரும் நோக்கில் அவனவன் அடுத்தவன் ஹாபிசை எல்லாம் அடித்துவிட்டான்கள். நானும் விட்டேன். பாலகுமாரன் , ஓஷோ புத்தகங்கள் பிடிக்குமென்று . எல்லோர் சொன்னதையும் தலையை அசைத்து கேட்டுக்கொண்டிருந்தவர் என்னிடம் மட்டும் இரண்டு கேள்விகள் கேட்டார் . சமீபத்தில் பாலகுமாரனின் எந்த புத்தகத்தை வாசித்தீர்கள் , கதையைப் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள் . இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அப்புறம் எப்படி கடைசியா படித்ததை சொல்லுவது . மென்று முழுங்கி , நெளிந்து மறந்துட்டேன்னு சொல்லி உட்கார்ந்தேன் . ஒருத்தர இம்ப்ரஸ் பண்ணப்போயி ஒட்டு மொத்த கிளாஸ்க்கு முன்னாடியும் பல்ப்பு. வாலி படத்துல தல சொல்ற மாதிரி, தெரியாதத தெரியாதுன்னுதான் சொல்லனும்னு பட்டறிந்த தருணம்.

ஓக்கே. கம் டு சுஜாதா. நான் பிறந்த வருடத்தில் , வார , மாத இதழ்களில் அவர் எழுதிய ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு . அப்பவே ஏகப்பட்ட ஆங்கில நெடி . முதல் கதையான “வானத்தில் ஒரு மவுனத்தாரகை” கதை தான் புத்தகத்தின் தலைப்பும் கூட . முதல் கதை அறிவியல் | விஞ்ஞானம் வகையறா. மெதுவாக ஆரம்பித்து ஜிவ்வென்று பறக்கின்றது. அடுத்தடுத்த கதைகளில் சில சினிமாத்தனம் சில அட வகையறா. தேனிலவு என்ற கதையில் கீழ்வரும் பத்தி ஒன்று .

“ ரவி ஒரு கையால் கார் ஓட்டிக்கொண்டிருந்தான். மற்றொரு கை அதை விலக்கி ‘ஏதாவது பாட்டுப் போடுங்களேன்” என்றால் சோபனா. அவன் காருக்குள் இருந்த காசெட் ரிகார்டரை தட்ட கீச்சுக் குரல் ஒலித்தது.”

வாசித்துக் கடந்த பின் அடுத்த பத்தியில் ,  இரண்டாவது முறையாக ரவியின் இடக்கை மறுபடியும் அவளை நாடியதுன்னு போட்டிருந்ததை பார்த்தவுடன் மனம் சடன் பிரேக் போட்டது, யோசித்தேன், அப்ப மொதல்ல எப்ப என்று. ரிவர்சில் போய் படித்துணர்ந்தேன். கிளுகிளுப்பான ஒரு பத்தியில் உள்ள விசயத்தையே முழுமையாக உணரமுடியவில்லையே, நாமெல்லாம் எப்போ குறியீடுகள் அடங்கிய மிகுபுனைவு புதினத்தை பின் நவீனத்துவ பாணியில் படைப்பது. எண்ட குருவாயூரப்பாவ்....!

சுஜாதாவே கூறியுள்ளபடி தேனிலவு, ஜன்னல், அரங்கேற்றம் மூன்றும் சிறப்பு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இரண்டு படம்.

ஆனந்தம் – மலையாளம்.
முதலாமாண்டு கல்லூரி மாணவர்களின் இன்டஸ்ட்ரியல் விசிட் தான் படம்.  மொத்த மாணவர்களில், அறுவர் அடங்கிய ஒரு குழுவின் நடவடிக்கைகளை கொண்டே நகர்கிறது IV & படம் . குழுவில் ஒரு காதல் ஜோடி , ஒரு முக்கோண காதல் ஜோடி , மற்றும் இரண்டு தனியர்கள். மாணவர்களின் கங்காணியாக பாலினத்திற்கு ஒருவர் வீதம் இரண்டு புரபசர்ஸ் . (அதென்னப்பா மலையாளப் படங்களில் சித்தரிக்கப்படும் ஆண் புரபசர்ஸ் எல்லோரும் முன்வழுக்கையுடனேயே இருக்கிறார்கள் . சேட்டன்கள் தேங்காய் சேர்ப்பதில்லையோ..?)

பயணம் போகிற பாதையில் கூட எந்த ஒரு திருப்பமும் இல்லை . முதலில் கெம்பி அதைத்தொடர்ந்து கோவா இதுதான் IV இன் ஸ்பாட்ஸ். அறுவருக்குள் நடக்கும் சம்பாஷனைகள், சேஷ்டைகள் , குறும்புகள் , கோபம் தாபம் இதெல்லாம் தான் படம். துள்ளுவதோ இளமைக்கு வாய்ப்பிருந்தும் இளமையை துள்ளவிடவில்லை. இன்றைய தேதிக்கு இதை “நீட்” மூவி என்று சொல்லமுடியாதுதான். பட்சே Neat மூவி. பக்கா வெஜிடேரியன் . நான் வெஜ் பிரியர்களை திருப்திப்படுத்தும் விதமாக மீன் மேக்கர் போல , ஆங்காங்கே சோமபானங்களுடன் கூடிய டிஸ்கோதேக்கள் , ஆதுரமான அரவணைப்புகள் , தழுவல்கள் ஒன்றிரண்டு இதழ் ஒத்தடங்கள்கூட உண்டு. படம் பார்த்தவுடன் தோன்றிய ஒன்று வாழ்கையில் ஒரு முறையாயினும் கெம்பி மற்றும் கோவா சென்று இரவாட்டங்களை கண்டுகளிக்கவேண்டும் என்பதே.

“வெகுதூரம் போகும்போது சேர்ந்தே போங்கள் “ . “ பொறுப்புகள் , கடமைகள் எல்லாம் முடிந்தபிறகே சந்தோசத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால் கடைசி வரை அது முடியாது . ஏனெனில் வாழ்வின் கடைசி நொடி வரையிலும் பொறுப்புகளும்  , கடமைகளும் துரத்திக்கொண்டே தானிருக்கும்”. போகிறபோக்கில் ஆங்காங்கே வருகின்றன வசனங்கள் யோசிக்க வைக்கின்றன.அனுராக கரிக்கின் வெள்ளம் – மலையாளம்.

படத்தின் பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை . சிம்பிள் ஸ்டோரி பட்சே ஃபீல்குட் ஸ்க்ரீன்பிளே. ஆஷா சரத்தை தவிர வேறெந்த நடிகரையும் யான் அறிஞ்சில்லா .  ஆஷா சாரத் ஆசம் ஆக்டிங். அதுவும் உதடு மடித்து கண்களால் சிரிக்கும்போது மனதை மொத்தமாக களவாடுகிறார் . இளவயதில் கதாநாயகியாக ஏதும் நடித்திருக்கிறாரா என்று கூகிளிடத் தோன்றும் தோற்றம் & நடிப்பு . ஹீரோயின் குரலும், சிரிப்பும் குல்பி . “ஹீலிட்டா ரெண்டு இஞ்சு கூடிடும் ஆண்டி” என்று காதலனின் அம்மாவான ஆஷா சரத்திடம் கொஞ்சிக் கெஞ்சும்போது நாம் உருகிப்போய்விடுகிறோம் . கண்களாலே நடித்து கவனம் ஈர்க்கும் ஹீரோவின் தங்கையாக வருபவர் இன்னும் சில வருடங்களில் கதாநாயகியாக மிளிர்வதற்கான அதிகபட்ச வாய்ப்பு தென்படுகிறது. ஹீரோவின் மெக்கானிக் நண்பனை மகேஷிண்ட பிரதிகாரத்தில் பார்த்த நினைவு . சிரிப்பில் –சிறப்பு . படம் நெடுக மிதமான ஒப்பனையில் வெகு இயல்பாக வலம் வரும் கதாநாயகிக்கு கிளைமாக்சில் , மேக்கப் என்ற பெயரில் பெயின்ட் அடித்து உதட்டுக்கு ஈயம் பூசியது போல சாயம் பூசி அழ வைத்தது எல்லாம் வன்மம். ஜனரஞ்சக ரசிகருக்கு அஜீரணமாக இருந்தாலும் கிளைமாக்ஸ் எதார்த்தம்  லவ்லி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மூன்று பாடல்

மறு வார்த்தை பேசாதே – என்னை நோக்கி பாயும் தோட்டா

இசை , புயலா இல்லை தழுவல் இளவரசரா என்று தெரியவில்லை . பாடல் தாமரையாகத்தானிருக்கும். “பிடிவாதம் பிடி , சினம் தீரும் அடி” –காதலியின் செல்லச்  சிணுங்கல் போல வரிகள். சித் ஸ்ரீராம் குரலில் கேட்ட சில பாடல்கள் எல்லாமே ரோலர் ஹோஸ்ட் பயணம் போலத்தான். உச்சஸ்த்தாதியில் ஆரம்பித்து சடாரென கீழிறங்கி மயிலிறகாய் வருடுவார். மேற்படி பாடலில் அது கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது . கண்ட்ரோல்டு சிங்கிங் . பாடல் வரிகளின் விகுதியில் ஸ்ரீராம் கொடுக்கும் மிகுதியான அழுத்தம் கேட்பதற்கு சுகம். பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் புல்லாங்குழல் இசை, சைவம் படத்தின் “அழகோ அழகையும்” , ஆரம்பம் முதல் முடியும் வரை தொடர்ந்து ஒலிக்கும் பீட்ஸ், நெஞ்சினிலே படத்தில் வரும் “மனசே மனசே குழப்பமென்ன” வையும் நினைவுபடுத்துகின்றன. இதற்குமேல் பாடலையும், இசையையும் ஸ்டான்ஸா ஸ்டான்ஸாவாக விவரித்து சிலாகிக்கும் அளவிற்கு நாம் இசையில் பண்டிதமில்லை.

காந்தாரி யாரோ – மகளிர் மட்டும்

ஜிப்ரான் இஸ் Back . வாகை சூடவா, திருமணம் எனும் நிக்காஹ் , களவாணி என்று ஜிப்ரான் செவி ஈர்த்த ஆல்பங்கள் வரிசையில் “மம”வும் நிச்சயம் இடம்பிடிக்கும் . ஜிப்ரான் ஸ்பெஷாலிட்டியே வித்தியாசமான இசைக்கருவிகளின் கோர்வைதான் . மேற்படி ஆல்பத்திலும்\ அது தொடர்கிறது. பத்மலதாவின் யூனிக் வாய்ஸ் தனி ஆவர்த்தனம். காந்தாரி, காதம்பரி , கடவுளின் துகள் என்று பாடல் வரிகளின் வார்த்தைகள் இதிகாச , விஞ்ஞான கலவையாக கவர்கின்றன. மதன்கார்க்கி...?

மனோகதம் பவான் – அனுராக கரிக்கின் வெள்ளம்.

பிரம்ம முகூர்த்தத்தில் துயிலெழுந்து, வீடு விடுபட்டு வீதியில் வந்து வானையும், பூமியையும் பார்க்கும்போது, இரவு கரைந்து பகல் புலரும் அந்த அரவமற்ற பொழுது  எவ்வளவு ரம்மியமாக இருக்குமோ அவ்வளவு ரம்மியம் இந்த பாடல் . வசீகரிக்கும் பெண்குரோலோடு , மெஸ்மரிசம் செய்யும் ஆண் குரல் ஹரிச்சரன் . இசை இதம்.


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.
3 comments:

 1. பல பட்டறையா ரசிக்கறையே சுப்பு. பாராட்டுக்கள்.ஸ்ரீநாத்.srrinath@yahoo.com.

  ReplyDelete
 2. ஒருத்தரை இம்ப்ரஸ் பண்ண போயி....

  பட்டறிவு செம

  ReplyDelete
 3. //மறு வார்த்தை பேசாதே – என்னை நோக்கி பாயும் தோட்டா//

  பாடல் தாமரை எழுதியதுதான். அவரது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

  ReplyDelete

Related Posts with Thumbnails