அலுவலக வேலையாக மாதமிருமுறை கோவை செல்லவேண்டி வரும் , சென்ற
வாரமும் சென்றிருந்தேன் . அந்த பயணத்தின் , பயணம் தந்த அனுபவத்தின் பகிர்வு இது .
சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இறங்கி சிறிது தூரம்
நடக்க ஆரம்பிக்கையில் கண்ணில் பட்டது அந்த காட்சி . எப்பொழுதும் நறுமணம் வீசும்
மாநகராட்சி கழிவறையின் பின்புறம் , தரை சிதைந்து போன நடைபாதை ஓரமாக யாருக்கும்
பயன்படாத நாலைந்து செருப்புகளும் , “சூ “க்களும் முன்னிருக்க , தைக்கவேமுடியாத
கிழிசலான சட்டையுடனும் , எண்ணெய் என்றால் என்னவென்று கேட்கும் பரட்டை தலையுடனும் ,
கழிவறை சுவற்றில் சாய்ந்தபடி ஒரு முதியவர் பின்னிருந்தார் . அவர் கண்கள் கால்களை
தேடிக்கொண்டிருந்தன. அது அடுத்த வேளை சாப்பாட்டின் தேடல் .
மேற்சொன்ன முதியவரை கடந்து செல்லும்போது ஏதேதோ எண்ணங்களும்,
எண்ணங்கள் தோற்றுவித்த கேள்விகளும் தோன்றி
மறைந்தன . இவர் முன்னிருக்கும் செருப்புகளும் , சூக்களும் எதற்க்காக ? எப்படி அது
இவரிடம் வந்திருக்கும் ? செருப்பு தைப்பவர்கள் காலில் செருப்பு இருக்குமா ? இருந்தால்
எங்கு வாங்கியிருப்பார்கள்?இப்பொழுதெல்லாம் அறுந்து போன செருப்பை எல்லாரும் தைத்து
போடுகிறார்களா ?
வேலைக்கு வரும் முன், வீட்டில் வாங்கி கொடுத்த செருப்பு இனி
தைக்கவே முடியாது என்கிற நிலை வரும் வரை பயன்”படுத்தி”யிருக்கிறேன் .வேலைக்கு
சேர்ந்த சில வருடங்கள் , செருப்பு அறுந்தவுடன் தூக்கி போட்டுவிட்டு , அடுத்த
செருப்பு வாங்கி கொண்டிருந்த நான், சமீபகாலமாக நன்றாக இருந்தாலும் இல்லையென்றாலும்
வருடமிருமுறை புதிது புதிதாக வாங்கி கொண்டிருக்கிறேன் .எல்லாம் தனிமனித வருமானமும்
, விளம்பரங்களும் , நுகர்வு கலாச்சாரமும் கொடுத்த தாக்கம் . மாதக்காய்சியான நானே
இப்படி இருக்கையில் பெரும்பான்மையானவர்கள் இதே போல இருப்பதாகத்தான் நினைக்கின்றேன்.
(தனிப்புத்தியை பொதுப்புத்தியாக மாற்றும் தவிர்க்க முடியாத
நினைப்பு இது)
அப்படி இருக்கையில் யார் வந்து இவரிடம் தைப்பார்கள்?
எப்படி இவர்களின் இருப்பிடம் தெரியும் ? எவ்வளவு வருமானம் கிடைக்கும் ? இவர்கள்
குடும்பம் எங்கு இருக்கும் ? இவர்கள் குழந்தைகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்
? இப்படி ஏகப்பட்ட கேள்விகள்...
கேள்விகளுக்கு விடைதேடும் முன் என்னை அழைத்துசெல்ல வாகனம்
வந்துவிட்டது , அந்த வேகத்தில் எழுந்து, உடையில் இருந்த தூசிகளை தட்டிவிட்டுக்கொண்டே
கிளம்பிவிட்டேன் . அதன்பின் மாலை வரை கார்ப்பரேட் ஊழியனாக கடமையில்
மூழ்கியதில் , காலையில் தோன்றிய எண்ணங்கள்
, கேள்விகள் எதுவுமில்லை, உடைகளின் தூசிகளை தட்டும் போதே, அதனுடன் சேர்ந்து
அவைகளும் போயிருக்கூடும் .
வேலை முடிந்த மாலையில், வீடு திரும்ப மீண்டும்
பேருந்துநிலையம் நோக்கி வருகையில், மிகச்சரியாக அந்த முதியவரை கடக்கும் பொழுது,எனது
புதிய பேட்டா செருப்பு அறுந்ததை என்னவென்று சொல்ல...?
அறுந்தவுடன் முதியவருக்கு வேலை கொடுக்கப்போகிறோமே என்ற
மகிழ்ச்சியை காட்டிலும் கோவமே மேலோங்கி இருந்தது. அது “பேட்டா” கப்பேனியை நினைத்து
. வழக்கமாக “காதிம்ஸ்“ல் செருப்படுக்கும் நான் , “பேட்டா”வின் அதிரடி தள்ளுபடி அறிவிப்பில்
அறிப்பெடுத்து இருநூறு ரூபாய்க்கு முன்னூறு கேள்விகள் கேட்டு வாங்கிய செருப்பது . இருபதே
நாட்களில் காலிளித்துவிட்டது .
கோபத்தின் வெளிப்பாட்டில் முதியவர் முன்னின்று என் அறுந்த கால்
செருப்பை உதறிவிட்டேன் . பெரியவர் அதை குனிந்து , பணிந்து எடுக்கும்போது
கூனிக்குறுகிவிட்டேன் , எம் செயலை நினைத்து . எப்பவுமே எம் கோவமும் , ஆணவமும் , திமிரும்
எம்மை விட அதிகாரத்திலோ , வசதியிலோ குறைந்தவர்களிடமே குவிகிறது . முனெச்சரிக்கையோ ?
எம் செயலை அவர் கண்டுகொள்ளவே இல்லை . தன் வேலையில் தீவிரமாக இருந்தார் .
ஊசி , நூலெடுத்து அறுந்த செருப்பை தைக்கையில் எனக்கு தான்
வலித்தது . தைத்து முடித்து புன்னகையுடன் என்னை பார்த்தார் . நான் கார்ப்பரேட்டில்
பெற்ற அனுபவத்தில் , நன்றாக இருந்த எனது மறுகால் செருப்பை அவரிடம் கழட்டி
கொடுத்தேன், இம்முறை கைகளிலே எடுத்து .
கழட்டி கொடுத்த செருப்பை முழுமையாக பார்த்துவிட்டு திருப்பி
கொடுத்துவிட்டார் . நான்றாக இருக்கிறது என்றும் தைக்க தேவையில்லை என்றும் .
ஒருவேளை பெரியவர் எம்.பி.ஏ படித்திருந்தால் நன்றாக இருந்த செருப்பையும் ஏதேதோ
காரணம் சொல்லி தைத்து காசு பார்த்திருக்கலாம் .
இது நடந்து கொண்டிருக்கும் போதே தவழ்ந்தபடி வந்தார்
மற்றுமொரு வறுமைக்கு வாக்கப்பட்டவர். வண்டி ரிப்பேராம் என்று கூறிக்கொண்டே அவர்
கைகளில் இருந்த ஒரு பொட்டலத்தை பெரியவரின்
கூலி எவ்வளவு என்று கேட்டேன் , நீ பாத்து கொடுப்பா என்ற
பெரியவர் , பத்து ரூபா குடு கண்ணு என்று தன் இருகைகளையும் என் முன்னே நீட்டினார். வேதனையும்
, புறக்கணிப்பும் , கவலையும் , ஏழ்மையும் , வறுமையும் , பசியும் , அவமானமும் ரேகைகளாக
படிந்திருந்த அந்த கரங்களில் பத்து ரூபாயை
திணித்துவிட்டு நடந்தேன் .
வீடு வரும் வரை உறுத்திக்கொண்டே இருந்தது புதிதாக
தைக்கப்பட்ட செருப்பும் , மனதும்.
எண்ணங்களின் நீட்சி :
செருப்பு தைப்பவர்கள் , குடை ரிப்பேர் பார்ப்பவர்கள் ,
பூட்டு ரிப்பேர் பார்ப்பவர்கள் , பிளம்பிங் வேலை
பார்ப்பவர்கள் முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு வந்து செல்வார்கள் என்றும் ,
இபொழுதெல்லாம் காணக்கிடைப்பதில்லை எனவும் பலமுறை
பலபேர் அங்காலாய்த்து பார்த்ததுண்டு. சமயங்களில் நானும் .
ஏன் என்று யோசித்துபார்த்தோமேயானால் அதற்கு காரணம் நாமென்றே
தோன்றுகிறது . ஒருவருக்கு கொடுக்கும் மரியாதையும் ,மதிப்பும் அவர் குண நலன்கள் சாராது
அவர் செய்யும் தொழில் கொண்டே நாம்
கொடுத்து வருகின்றோம் , அல்லது அப்படியே கொடுக்க பழக்கப்பட்டிருக்கிறோம் .
செருப்பு தைப்பவர் – செருப்பு தைப்பவனாகவும் , பூட்டு , குடை
ரிப்பேர் பார்ப்பவர் – பழைய சாமான் ரிப்பேர் பார்ப்பவனாகவும் , பேப்பர் போடுபவர் –
பேப்பர் போடுபவனாகவும் , சமையற்காரர் – சமையல்காரனாகவும் , பால் ஊத்தும் பெரியவர் –
பால்காரனாகவுமே அழைக்க பழக்கப்படுத்துகிறோம் . அவர்களை வாசலோடு வழியனுப்ப
கற்றுக்கொடுக்கிறோம் நம் குழந்தைகளுக்கு . அதே நேரம் மருத்துவர் , பொறியாளர் ,
கணக்காளர் , ஆசிரியர் சிலர் கேவலமான புத்தியையும் எண்ணங்களையும் கொண்டிருந்தாலும்
புனிதராகவே பாவிக்கப்படுகிறார்கள் . அவர்களை இல்லத்திலும் இதயத்திலும் உயர்வான இடத்திலேயே
வைத்திருக்கிறோம் . வைக்கச்சொல்லி கொடுக்கிறோம் . முன்னவர்கள் நம்மை தேடி
வரவேண்டுமென்றும் , பின்னவர்களை நாம் தேடிப்போகவேண்டும் என்றும்
அறிவுறுத்தப்படுகிறது .
இப்படி தொழில் சார்ந்து ஒடுக்கப்பட்ட, சிறுமைப்படுத்தப்பட்ட
மக்களின் வாரிசுகளும் ஏன் இதே போல குலத்தொழிலே
பார்க்க வேண்டுமென்று மனம் எதிர்பார்க்கின்றது..? சூப்பர்வைசராக இருக்கும் எமக்கு,
இன்று நல்ல மரியாதையை கிடைத்தாலும் என் மகனோ , மகளோ மேனஜராக வேண்டுமென்று
எண்ணுகின்றேன் . அதைபோலதானே அவர்களும் அடுத்த நிலைக்கு அவர்கள் குழந்தைகள் வர
ஆசைப்படுவார்கள் . ஞாயம் தானே .
நம் வீட்டில் பழுதடைந்த குளிர்சாதனப் பெட்டியையோ
,தொலைகாட்சிபெட்டியையோ ,, அலுவலகத்தில் பழுதடைந்த இயந்திரத்தையோ சரி செய்து
மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வருபவரை பொறியாளர் என்கிறோம் . அப்படி பார்த்தால்
செருப்பு தைப்பவர்களும் , பூட்டு, குடை
ரிப்பேர் பார்ப்பவர்களும் பொறியாளர்களே . அவர்களும் சர்வீஸ் எஞ்சினியர்களே .
புதிய
தலைமுறை இத்துறைகளை புரபசனலாகவும் , இம்மனிதர்களை மரியாதை மிக்கவர்களாகவும் அணுகட்டும்.
நல்ல பதிவு..
ReplyDeleteஅவர்கள் இப்பொழுது காணக் கிடைக்கதாதற்கும் நாம் தானே காரணம்.. அடுத்த தலை முறைக்கு உணர்த்துவோம்.
நன்றி இளங்கோ அண்ணா ! வாசித்ததற்கும் , வாழ்த்தியதற்கும் .
Deleteநல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபல மறைவுகளுக்கு நாம் தான் காரணம்... மாற வேண்டும்... மாற்ற வைக்க வேண்டும்...
நன்றி dd அண்ணா ! வாசித்ததற்கும் , வாழ்த்தியதற்கும் .
Deleteசெருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் கூட பணத்திற்குப் பேரம் பேசி குறைக்க நினைப்பவர்களைக் கண்டால் எனக்கு சுட்டுக் கொல்ல வேண்டும் போல வெறி வரும். காரணம்... நீங்கள் கவனித்த மாதிரி பல முறை கடந்து செல்கையில் நானும் கவனித்ததனால்தான்! என்னால் இயன்றவரை பாத அணிகளை அவர்களிடம் தைத்து சீர் செய்து அணிந்த பின்னரே புதியது வாங்குவது என் பழக்கம். அவர்களுக்கு மிக முக்கியமாய் நாம் வழங்க வேண்டியது மரியாதையும், கெளரவமும் என்கிற உங்களின் கருத்து அருமை என்றால் கடைசியில் நீங்கள் தெரிவித்திருக்கும் விஷயம்.... சூப்பரோ சூப்பர்! ஈடுபாட்டுடன் செய்யும் வரையில் எந்தத் தொழிலும் கேவலமல்ல...!
ReplyDelete//செருப்புத் தைக்கும் தொழிலாளியிடம் கூட பணத்திற்குப் பேரம் பேசி குறைக்க நினைப்பவர்களைக் கண்டால் எனக்கு சுட்டுக் கொல்ல வேண்டும் போல வெறி வரும். //
Deleteகீரை விய்க்கும் பாட்டி , தள்ளுவண்டி கடைகாரர் இவர்களிடமெல்லாம் தான் அதிக பேரம் பேசப்படுகிறது .
நன்றி கணேஷ் அண்ணா ! வாசித்ததற்கும் , வாழ்த்தியதற்கும் .
"காலிளித்துவிட்டது!"
ReplyDeleteமீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது உங்களது பதிவுகள்.
வாழ்த்துக்கள்.
நன்றி வேல் அண்ணா ! வாசித்ததற்கும் , வாழ்த்தியதற்கும் .
Deleteநல்லதொரு பகிர்வு! உண்மைதான்! அனைவரையும் ஏற்றதாழ்வின்றி நடத்த வேண்டும்! எனக்கும் உங்களை ப் போன்று ஒரு பலூன் விற்பவரை பார்த்ததும் தோன்றியது. இவர் எத்தனை பலூன் விற்பார். இந்த வருமானம் அவருக்கு போதுமா? என்று ஒருமுறை யோசித்தேன்! பதிவாக்கவில்லை! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஸ் அண்ணா ! வாசித்ததற்கும் , வாழ்த்தியதற்கும் .
DeleteReally nice!Most Eminent Persons are not Known by the today's peoples!!!!!!!
ReplyDeleteThanks Thambi, How did you come to my blog?
Deleteசென்னையில் பெரும்பாலும் ஆட்டோஸ்டாண்டுகளின் அருகில் தான் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் அமர்ந்திருப்பர். இப்போதும் செருப்பு ரிப்பேருக்குப் “பார்த்துக் குடுங்க” என்று தான் கேட்கிறார்களே ஒழிய, ஆட்டோக்காரர்களைப்போல “போட்டுக் குடுங்க” என்று மிரட்டி வாங்குவதில்லை. முன்பு ஐந்து ரூபாய், இப்போது பத்து ரூபாய். (ஒரு ரிப்பேருக்கு). நாம் தான் இவர்களைக் கவனிக்க வேண்டும்.
ReplyDelete//நாம் தான் இவர்களைக் கவனிக்க வேண்டும்//.நிச்சயமாக . நன்றி அண்ணா ! வாசிப்பிற்கும் , கருத்துக்கும் .
Deleteமிக நல்ல பதிவு.. இவர்கள் குறைந்து போனதற்கு நாம் தான் முக்கிய காரணம்.. இவர்களுக்கு தேவை மரியாதை தான்.. இன்றும் பல இடங்களில் முடி வெட்டுபவரை, செருப்பு தைப்பவரை ஒருமையில் அழைக்கும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது.. சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் இது மிக மிக அதிகம்.. ஒரு தொழில் செய்யும் ஒருவன் தன் தொழிலை தொடராமல் போவதற்கு பணம் மட்டுமே காரணம் அல்ல, அவனுக்கு அந்த தொழிலால் கிடைக்கும் மரியாதையும் முக்கிய காரணம் என்று அழகாக அழுத்தமாக சொல்லியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் பல.. :-)
ReplyDeleteநன்றி ராம் ! வாசித்ததற்கும் , வாழ்த்தியதற்கும் .
ReplyDeleteஇவர்கள் தான் இந்த உலகின் உன்னத மனிதர்கள் ..நாலு எழுத்து படித்து விட்டு தகுதி திறமை வந்தது என்று குதித்து பெரும் பணம் எதிர்பார்க்கிறோம்..
ReplyDeleteஇந்த மனிதர்களின் உழைப்பின் முன் மற்றவெரெல்லம் மிக சாதாரணம்.
எல்லா அடிப்படை தொழிலும் ஒரு கூட்டத்தால் கேவலபடுத்த பட்டன.
இவர்களை தள்ளி வைத்து, இன்றும் ஊரின் ஒதுக்கு புறமாக வைத்து இருக்கும் பழக்கம் மிக அநாகரீகமானது ... ஒரு பிடி அரிசி வருவதற்கு ஒரு விவசாயி படும் சிரமத்தை யோசித்தால் அவர்கள் எதற்காக இப்படி இருக்கிறார்கள் என்று தோன்றும். இவர்கள் என்று வீடு வாங்குவது, வசதியாக வாழ்வது?
இவர்கள் அனைவரும் மனித சமுதாயம் மரித்து போகாமல் இருக்க தொண்டு செய்கிறார்கள். இவர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்க வேண்டும். இவர்கள் முன்னேறி விட்டால், பிறகு மற்றவர்களும் இந்த தொழில்களை செய்ய முன் வருவார். அப்போதே உண்மை விடுதலை.
நன்றி அனானி ...!
Deleteஅருமையான மனச்சிந்தனை, பதிவு எழுதுவது என்றாகிவிட்டது அவரைப்பற்றி கொஞ்சம் விசாரித்து எழுதி இருந்தால் இன்னும் உண்மையை நன்றாக பிரதிபலித்திருக்கும்.
ReplyDelete//விசாரித்து எழுதி இருந்தால் இன்னும் உண்மையை நன்றாக பிரதிபலித்திருக்கும்.//
Deleteஉண்மைதான் . ஏனோ தோணவில்லை .
அருமையான பதிவு அண்ணனா. படிக்கும் பொழுது எனக்கே கண்ணீர் வந்துவிட்டது.இதை சிறு குறும் படமாவோ அல்லது திரைப்படமாவோ எடுக்கலாம் இவர்கள் கதையை. அவர்களின் வாழ்க்கையை நாம் யாரும் பேசவில்லை.திரைப்படமாவது பேசவைக்கட்டும் நன்றி அண்ணனா.MAR 29, ௨௦௧௩ நீங்கள் இந்த தேதியில் பதிவேற்றம் செய்துள்ளீர்கள் ஆனால் நான் இன்றுதான் பார்த்து படித்தேன் அண்ணா. by சுந்தர் .அ
ReplyDelete