Mar 1, 2013

பொங்கல் பய(ண)ம் – ஒன்னு பை ரெண்டு
வர வர ஊருக்கு போறது போருக்கு போற மாதிரி ஆகிடுச்சு . பொங்கலுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடியே லீவு போட்டு , சுபயோக சுபதினமான வெள்ளிக்கிழமை ராத்திரி எட்டு மணிக்கு ஊருக்கு கெளம்பினேன்.

கருமத்தம்பட்டியில் ஒருமணி நேர காத்திருப்புக்கு பொறகு, படுத்துகிட்டே திருப்பூருக்கு போனேன் . பஸ் அவ்ளோ காலி . ஒரே சந்தோசம் ஆரம்பமே அமர்க்களமா இருக்கேன்னு .

திருப்பூர் பி.என் ரோடு வரயிலும்  எக்ஸ்பிரஸ் வேகத்துல போன பஸ் அதுக்கப்புறம், எறும்பு போல ஊர ஆரம்பிச்சுருச்சு . சரின்னு அங்கனையே எறங்கி, அப்டியே பொடி நடையா நடக்க ஆரம்பிச்சேன் .

பஸ் கெடைக்குமா ? கெடைக்காதா ? ன்னு யோசிக்கையிலேயே கைச்சுமைய விட மனச்சுமை அதிகாமாயிட்டு . யோசனயோட நடந்ததால , பஸ் ஸ்டான்ட் வந்ததே தெரியல . உண்மைய சொல்லனும்னா அது பஸ்டான்ட் மாதிரியே தெரியல.

கும்பமேளா மாதிரி கூட்டம் கும்மியடிக்குது .
உள் மனசு தந்தியடிக்குது , மவனே நீ இன்னைக்கு ஊருக்கு போன மாதிரிதான்.

சரி உள்ள போயி பாக்கலாம்னு , கும்பமேளாவுல புகுந்து புறப்பட்டேன் . காவல்துறை உங்கள் நண்பன் கைல தார்க்குச்சியோட, தடுப்ப விட்டு தாவிட்டு இருந்தவங்கள தாறுமாறா சாத்திட்டு இருந்தாங்க . நடக்க நடக்க கண்ணு சொருகுது , தல சுத்துது .

சான்சே இல்ல . பஸ்ஸ நெருங்கவே முடியல  . ஒரு’வலியா’கி  ஜூஸ் போட்ட சக்கையா பஸ் ஸ்டான்ட விட்டு வெளில வந்தேன் . மேற்கொண்டு என்ன பண்றதுன்னு யோசிக்கனும்னா, மறுபடி ஜூஸ் ஆனாத்தான் உண்டு . பக்கத்துல இருந்த ஜூஸ் கடயில போயி ஒரு ஆப்பிள் ஜூஸ் சாப்டுட்டே அடுத்த கட்ட நடவடிகையில இறங்குனேன்.

கூட வேல பாக்குற ஒருத்தர் பஸ் ஸ்டான்ட் பக்கத்துல குடியிருக்குறது ஞாபகம் வந்து , போன போட்டேன் , மணி பன்னெண்டு .

சொல்லுங்க சார் ...! என்ன இந்த நேரத்துல .?

இல்லங்க ஊருக்கு போலாம்னு வந்தேன் . முடியாதாட்டுக்கு . நைட்டுக்கு மட்டும் ஒங்க வீட்ல தங்கிட்டு காலைல போகலாம்னு .........

அடடா , நானும் ஊருக்கு கெளம்பிட்டு இருக்கேனே ....... வீட்லயும் யாருமில்ல ...

ஓ ....செ...ரி..ங்..க .....

போச்சு ..இருந்த ஒரு சான்சும் போச்சு . வேற வழியே இல்ல மறுபடியும் கும்பமேளா வுக்குள் பயணித்து , திண்டுக்கல் பஸ் நிக்குற எடத்த விட்டு தாண்டி நின்னேன். கணக்கு தப்பல
நெனச்ச மாதிரியே திண்டுக்கல் பஸ் தாண்டி வந்து நின்னுச்சு . பாஞ்சு உள்ள போனா.. பயபுள்ளைக ஒன்னு கூட எந்திரிக்கல .. என்னான்னு விசாரிச்சா ? பழைய பஸ் ஸ்டான்ட் போயி ரிட்டர்ன் வர்றாங்களாம் . பஸ் புடிக்குரதுக்கு கூட கிட்னி வேணுமாட்டுக்கு.

சுத்தீ சுத்தி பாத்ததுல கடசி சீட்டுக்கு முன் சீட்டுல , ரெண்டு மலைக்கு நடுவுல ஒரு மடு இருப்பதற்கான எடம் தென்பட்டுச்சு . சட்னு போயி செட்டில் ஆயிட்டேன் .
மலைகளுக்கு ஒரே சந்தோசம், நான் மடு வாக இருந்ததுனால இருக்கலாம்.

எப்டியோ பஸ் ஏறியாச்சு. லக்கேஜ் வைக்க பக்கத்துல எடமில்ல . நாலு சீட்டுக்கு முன்னாடி எடமிருந்துச்சு ஆனா, மனசுல தான் எடமில்ல . அங்க வச்சு யாருனா ஆட்டைய போட்டுட்டு போயிட்டா ? யோசிச்சுட்டு இருக்கும் போதே, மலையில ஒன்னு  வெடிக்க ஆரம்பிச்சுருச்சு , ஏம்ப்பா அங்கன தான் எடமிருக்குல ... கொண்டு போயி வைக்குறது .... வச்சுட்டன் .

கண்டக்டருக்கும் பின் சீட்டுக்காரருக்கும் சில்லற சண்ட ... ஒரே ஏலர. நல்ல வேல நான் தப்பிச்சேன் , கண்டக்டர் கிட்ட வசவு வாங்காம சில்லறையா கொடுத்து டிக்கட் வாங்கிட்டேன் . பக்கத்து இருந்த மல தலய சொரிஞ்சுச்ச்சு . ஆகா சிக்கிட்டான்யா சிக்கிட்டான் .

இந்த மாதிரி விசேச நாளுகள்ள, ஆள் சேதாரமில்லாம ஊருக்கு போறதே பெரிய விஷயம் . இதுல லக்கேஜ் வேற . சொல்லவும் வேணுமா ?

ரெண்டு நிமுசம் தூங்கி வழியிறது அப்புறம் திடீர்னு முழிச்சு லக்கேஜ் ஜ பாக்குறது . கொஞ்ச நேரத்துல அசந்து தூங்கிட்டேன் . சட்னு முழிச்சு பாத்தா லக்கேஜ காணும் .......

அய்யய்யோ ...... ன்னு பாதி கத்திட்டு இருக்கும்போதுதான் தெரிஞ்சுது , நான் வச்ச லக்கேஜ் வச்ச எடத்துலருந்து எதிர் திசையில ஊசலாடிக்கிட்டு இருந்தது . ( டிரைவர் போட்ட பிரேக்ல கீழ விழுந்து, அத எடுத்து வச்ச மகராசன் வேற பக்கம் வச்சுட்டார். நல்ல வேல முழுசா கத்தல.

கால் காசு பெறாத கைப்பொருள் காணாமப் போனாலும் நம்மலால தாங்க முடியாது . நம்ம லக்கேஜ்லயோ வீட்டுக்காரங்க எல்லாருக்கும் துணியும் மணியும் இருந்துச்சு. லக்கேஜ் காணாத அந்த நிமிஷம் இருக்கே, அப்பாடி.... அனுபவிச்சா தான் தெரியும் . அனுபவம் தந்த பாடம், லக்கேஜ் ஜ தூக்கி மடில வச்சுண்டேன் .

டிரைவர் டவுன்பஸ் ஒட்டுபவராட்டுக்கு நல்லா உருட்டுனாரு . நடுவுல ஒரு கொள்ள கூட்டத்துல கொண்டுபோய் நிப்பாட்டுனாறு . பத்து ரூபா பிஸ்கட்ட பதினஞ்சு ருவாய்க்கும் தண்ணிய இருவது ரூபாக்கும் தண்டம் அழுது வாங்குனேன்.

மறுபடியும் உருட்டுனாரு நாங்களும் உருண்டோம் . மணி காத்தால மூணே முக்கால் , ஒரு வலியா திண்டுக்கல் போயி எறங்குனா ......!


இந்த பய(ண)ம்  பெரிசு அதுனால , அடுத்த பதிவுல பய(ண)ம் தொடரும் .

5 comments:

 1. என்னது திண்டுக்கல்லா...? போன் செய்யவேயில்லை... உங்க கூட டூ,,,

  ReplyDelete
 2. மணி காத்தால மூணே முக்கால் --- ...ம்ஹீம்... கோபம் தீரலே...

  ReplyDelete
 3. பொங்கல் நேரத்தில் பயணம் செய்தால் சட்னிதான்...

  ReplyDelete
 4. //மலைகளுக்கு ஒரே சந்தோசம், நான் மடு வாக இருந்ததுனால இருக்கலாம்.// ஹா ஹா செம
  //கால் காசு பெறாத கைப்பொருள் காணாமப் போனாலும் நம்மலால தாங்க முடியாது . // உண்மை நண்பா ஆனாலும் செம நக்கலு உங்களுக்கு

  ம்ம்ம் தொடருங்கள் தொடருங்கள்

  ReplyDelete
 5. சுவையான பேருந்து அனுபவம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete

Related Posts with Thumbnails