Mar 19, 2013

ஈழம் - மாணவர்கள் உண்ணாவிரதம் தேவையா ?


ஈழம் - மாணவர்கள் உண்ணாவிரதம் தேவையா ?

கவனிக்க : எமக்கு உள்ளூர் அரசியலும் தெரியாது , உலக அரசியலும் தெரியாது . உங்கள் பக்கத்து வீட்டில், உங்கள் தெருமுக்கு டீக்கடைகளில் உட்கார்ந்து நியாயம் பேசும் சாதாரனமானவர்களில் நானும் ஒருவன். இந்த பதிவு என் மனதில் தோன்றிய எண்ணங்களை பகிரவேயன்றி பரபரப்புக்காகவோ , இல்லை பப்ளிசிட்டிக்காகவோ அல்ல . யாருக்கேனும் இந்த பதிவு மட்டமாகவோ , இல்லை எதிர்ப்பாகவோ, நகைப்பாகவோ  உணர்ந்தால் எமக்கு தெரியப்படுத்துங்கள் பதிவை நீக்கிவிடலாம் .
இந்த பதிவு உங்களில் சிலருக்கு சிறுபுள்ள தனமாகக்கூட தோன்றலாம். பகிரவேண்டும் எனத் தோன்றியது பகிர்ந்து விட்டேன் . கல்லோ , மாலையோ , ஏளனமோ, நக்கலோ  எது வீசினாலும் சரி ஏற்றுகொள்ள தயார் .


பஸ் டே கலாட்டா , ஃபுட் போர்டு பயணம் , சினிமா நடிகனின் பாதகைகளுக்கு பாலபிசேகம் என்று சுற்றி திரியும் மாணவர்களை நேரம் கிடக்கும் பொழுதெல்லாம் வறுத்தெடுக்கும் வட்டத்தில் நானும் ஒருவன் .

இன்று மாணவர்கள் ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருப்பதை பார்த்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது .

இந்த கூட்டம் எந்தவொரு அரசியல்வியாதியின் கூக்குரலுக்கோ ,சூப்பர் நடிகர்களின் விரலசைவிற்கோ சேர்ந்ததில்லை.உணர்வுகளின் கொப்பளிப்பு இது ,

மாணவர்கள் ஒரு நல்லதொரு விசயத்திற்காக ஒன்று சேர்ந்திருப்பது மிகப்பெரிய சந்தோசம் . ஆனால் உண்ணாவிரதம் தேவையா...?

லட்சக்கணக்கில் நம் உறவுகளையும் , உணர்வுகளையும் கொன்று தீர்த்த இலங்கை அரசாளுபவர்களும் சரி  , அதற்கு  துணைபோன இந்திய அரசியல் தலைவர்களும் சரி மூன்று வேளையும் வயிறு முட்ட தின்றுகொழுக்கிறார்கள். ஏன் இதை எழுதிக்கொண்டிருக்கும் நானும் , படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் கூட வயிறை நிரப்பிக்கொண்டுதான் இருக்கிறோம் .

தப்பு பண்றவனே தின்னுட்டு தைரியமா  பண்ணும்போது , அந்த தப்ப தட்டி கேக்குற மாணவர்கள் ஏன் உண்ணாவிரதமிருக்கணும். மூணு வேளையும் சத்தான சாப்பாடு சாப்டுட்டு போராடணும் ங்குறதுதான் என் எண்ணம் .

ஆங்கிலேயர்களை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்திருக்கலாம் . அந்த வீரியத்தையும் , கொள்கை பிடிப்பையும் பார்த்து ஆங்கிலேயர்கள் மனமிரங்கி விடுதலை கொடுத்திருக்கலாம் . ஆங்கிலேயர்கள் இறுகிய இதயம் படைத்தவர்கள் . ஆனால் இப்பொழுது மாணவர்கள் போராடுவது இறுகிய இதயம் படைத்தவர்களை நோக்கியல்ல , இதயமற்ற ஈனப் பிறவிகளை நோக்கி . அவர்களை தண்டிக்கவும் , கண்டிக்கவும் இரும்பாலான இந்திய அரசியல் கதவை தட்டுகிறார்கள் நம் மாணவர்கள் .

ஓங்கி குரல் கொடுக்க , எக்கு கதவை தட்டித்திறக்க உடம்பில் தெம்பும், திராணியும் வேண்டாமா...? உண்ணாமல் எவ்வளவு நாள் இருந்திட முடியும் .

டெல்லி கல்லூரி மாணவி சம்பவத்திற்கு நாடே போராடியது . சரிதான் தப்பேதும் இல்லை . ஆனால் இந்த ஈழப்பிரச்சனையை , தமிழகத்தை தவிர மற்ற மாநில மீடியாக்களும் சரி , மக்களும் சரி தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் , குப்பனுக்கும் சுப்பனுக்கும் இடையில் நடக்கும் வாய்க்கால் சண்டையாகவே பார்க்கிறார்கள் என்றே நினக்கின்றேன் . அரசியல்வாதிகளோ ஆட்சியையும் , அதிகாரத்தையும்  தக்கவைத்துக்கொள்ள ஆடும் சதுரங்கமாகவே பார்க்கிறார்கள்.

தனி தெலுங்கானாவிற்காக ஆளும் கட்சியினரே ஆந்திராவில் பதவியை ராஜினாமா செய்தார்கள் . நம்மாளுங்க ராஜினாமா பண்றோம்னு சொல்லுவாங்க, சொல்லுவாங்க, சொல்லிகிட்டே இருப்பாங்களே ஒழிய ஒரு நாளும் செய்யமாட்டாங்க .

முதலில் இந்தபிரச்சனை தேசிய பிரச்சனையாக கருதப்படவேண்டும் . அதற்க்கு ஒரே வழி மாணவர்களின் இந்த போராட்டம் தான் . ஒட்டுமொத்த தமிழக மாணவர்களும் ஒன்று திரண்டு போராட வேண்டும். சாலை மறியலை தவிர்த்து ஒவ்வொரு மத்திய மாநில அரசு அலுவலகங்களின் முன் போராட வேண்டும் .அவ்வளவு எளிதாகவும் , விரைவாகவும் நடக்ககூடிய நிகழ்வல்ல இது . பெரும் போரிது .இந்த போரை வெல்ல அசாத்திய தெம்பும், திராணியும்,மனவுறுதியும் வேண்டும் .

அதனால் மாணவர்களே உண்ணாவிரதம் வேண்டாம் . மூன்று வேளையும் நன்றாக உண்டு பின் ஓங்கி குரல் கொடுங்கள். சத்தியம் ஜெயிக்கும் .
  
வேண்டுகோள் : உண்ணாவிரத பந்தலை கடந்து செல்லும் நாம் ஒவ்வொருவரும் , திடம் கொண்டு போராடும் நம் போராளி மாணவர்களுக்கு  ஒரு குவளை தண்ணீரேனும் கொடுத்துச்செல்வோம் . அது ஆயிரமாயிரம் ஆதரவு வார்த்தைகளுக்கு மேலானவை .

5 comments:

 1. //நம்மாளுங்க ராஜினாமா பண்றோம்னு சொல்லுவாங்க, சொல்லுவாங்க, சொல்லிகிட்டே இருப்பாங்களே ஒழிய ஒரு நாளும் செய்யமாட்டாங்க//

  செஞ்சிட்டாங்களே...

  ReplyDelete
 2. விரைவில் நல்லது நடக்கட்டும்...

  ReplyDelete
 3. உண்ணாவிரதம் தேவையான்னு தலைப்ப பார்த்ததும் நீங்க ஏதோ மாணவர்கள் போராடுறதே தப்புன்னு சொல்ல போறிங்களோனு நெனச்சுட்டேன், அதவிட இந்தப் பதிவு விளம்பரத்திற்காக.. இப்டி எல்லாம் ஆரம்பிச்சதும், ஏதோ வில்லங்கமா எழுதி இருப்பிங்கலோனு நெனச்சேன், ஆனா, சாப்டுட்டு போராடுங்கனு சொன்னிங்க பாருங்க, இது யாருக்கும் தோனலயே! உண்மை தான் சாப்டு போராடலாமே!

  இந்த பதிவுக்கு எதிர்ப்பு வராது கவலபடாதிங்க!

  ReplyDelete
 4. நல்லதொரு ஆலோசனை! இந்த போராட்டம் இந்தியா முழுவதும் மாணவர்களால் தொடரப்பட்டால் ஒருவேளை தீர்வு கிடைக்கலாம்!

  ReplyDelete
 5. //திடம் கொண்டு போராடும் // அட...

  அருமையான பதிவு நண்பா... காந்தி அரசியலே வேறு, அது பற்றி இங்கு பேச விருப்பம் இல்லை.... தெம்பாகப் போராட வேண்டும் என்கிற எண்ணமும் போராடுபவர்கள் மீது உமக்கு இருக்கும் அக்கறையும் வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது...

  ReplyDelete

Related Posts with Thumbnails