Feb 19, 2013

வாங்க சொர்க்கத்துக்கு போகலாம் ....!

நல்லது பண்ணுனா சொர்க்கத்துக்கு போகலாம் , அங்க பூ மெத்தையில தூங்கலாம் , வேண்டியது திங்கலாம் . கெட்டது பண்ணினா நரகத்துக்கு தான் போகலாம் அங்க எண்ணச்சட்டியில போட்டு எரிப்பாங்க , பட்டினி போட்டு வாட்டுவாங்க ..... இப்டி தான் சொர்க்கமும் நரகமும் சிறு வயதில் கற்பிக்கப்பட்டது . வெகு நாள் வரை அது நெசம் என்றே நம்பியதுண்டு . புஸ்தகத்தை படிப்பதை நிறுத்தி மனுசங்களையும் , இயற்கையையும் படிக்கும்போதுதான் தெரிஞ்சுது  அடடா , சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையிலல்லாவா நாம வாழ்ந்துட்டு இருக்குறோங்குறது  .  
அவரவர்களுக்கு என்று தனி தனி சொர்க்க நரகங்கள் இருக்ககூடும் . அந்த வகையில சொர்க்கம் என்பது எனக்கு .....

சொர்க்கம் நம்பர் ஒன்னு  :ச்சோ... ன்னு மழை கொட்டித்தீர்த்த ஒரு ராத்திரி பொழுதில்  , ஆள் அரவமற்ற ரோட்டுல , தேங்கா துருவலை தூவுவது போல அடிக்கும் சாரல்ல நனஞ்சுகிட்டே காதுல ஹெட்போன மாட்டிகிட்டு, அப்டியே இசைஞானி யோட  பூவே செம்பூவே பாட்ட கேட்டுட்டே நடந்தம்னா அடடா ...அது தாங்க சொர்க்கம் ... விடியும் வர நடக்கலாம் . இடையில ஒரு வயலின் பீட் வரும் பாருங்க .. யப்பா என்ன கம்போசிங் ...இசை பற்றிய அரிச்சுவடி கூட தெரியாட்டியும் ஒவ்வொரு முறை இந்த பாட்ட கேட்கும் போதல்லாம் ஒரு மியுசிக் கண்டக்டரா மாறி கைய காத்துல பறக்க விடுவதுண்டு . மொத்த ஆர்க்கெஸ்ட்ரா வோட  லைவ் வா இந்த பாட்ட கேட்கணும் . அப்டி கேட்டா அதான் சொர்க்கத்தின் உச்சம் .

சொர்க்கம் நம்பர் ரெண்டு :


பூம்புகார் போன்ற ஏகாந்தமான ஒரு கடற்கரயில , கதிரவன் கண்ணயரும் ஒரு மாலை பொழுதில் கடல் தொட்ட பாறையில ஒக்காந்துகிட்டு , நமக்கு ரெம்ப புடிச்ச புஸ்தகத்த கடற்காற்றோட சேர்த்து சுவாசிக்கும் சுகமே சுகம் . படிச்சுட்டு இருக்கும்போதே அலை வந்து கால் தொட்டு , கண்ணாமூச்சி ஆடிட்டு போகும் பாருங்க , அடடா ....அற்புதம் .

சொர்க்கம் நம்பர் மூணு :
பிறந்த கொழந்தையின் ஸ்பரிசம் . அப்பப்பா இதுதானப்பா சொர்க்கம் ... .. பிறந்த கொழந்தைய கையில தூக்குற போது ஒரு ஒருவிதமான பரவசம் வரும் பாருங்க ...அப்டியே அந்த பிஞ்சு கைய வச்சு மொகத்துல தடவுனாலும் சரி ஒதஞ்சாலும் சரி நெக்குருகி போவோம் .  இது மாதிரியான சொர்க்கங்கள் சாத்தானை கூட தேவனாக மாற்றிவிடும் .


சொர்க்கம் நம்பர் நாலு :சுகா ஒருமுறை எழுதி இருந்தார் ... நமக்கு புடிச்ச பாட்ட நாமலே போட்டு கேட்குறது சுகமில்ல ..எதிபாரா தருணத்துலவேறு யாரோ போட்டு நாம கேட்போம் பாருங்க அதான் சுகம் ..அப்டின்னு . முழுக்க முழுக்க நெசமான வார்த்தைகள் இது .
முன்பின் அறிமுகமில்லா ஊருக்கு போகும் ஒரு தனிமை பயணத்தில் , ஏதோ ஒரு கிராமத்தை கடக்கும் போது அங்கிருக்கும் டீ கடை ரேடியாவிலோ , இல்ல கோவில் திருவிழா மைக் செட்டுலோ  இருந்து நமக்கு ரெம்ப புடிச்ச ஒரு கல்யாண தேனிலாவோ இல்ல ஆகாய வெண்ணிலாவோ காத்துல கரைஞ்சு அப்டியே நம்மளையும் கரைக்கும் பாருங்க அதுதான் சொர்க்கம் . அந்தப் பயணம் எப்பவுமே மறக்காது .

சொர்க்கம் நம்பர் அஞ்சு :


எல்லாருக்குமே அவரவர் ரசனைக்கு ஏற்ப கற்பனை கதாபத்திரங்கள் மனதுள வச்சுருப்போம் ,
பேருந்து பயணத்துலயோ , திருவிழா கூட்டத்திலோ ,  நாம நம் மனதில் பதிஞ்சு வச்சுருக்க உருவத்துக்கோ , குணங்களுக்கோ ஒத்துப்போற ஒருத்தர  பாக்கும்போது அவ்ளோ சந்தோசமா இருக்கும் . பேச கூட தேவையில்ல , அந்த கற்பனை கதாபாத்திரம் நம் அடுத்த சில மணி நேரங்களை கொண்டாடிவிடும் . இது கூட ஒரு சொர்க்கம் தான் .

சொர்க்கம் நம்பர் ஆறு :


ரெம்ப காலம் கழித்து , நீண்ட பயணத்துக்கு அப்புறம் நமக்கு ரெம்ப புடிச்ச பிரியமானவங்கள சந்திக்கும் தருணம் ரெம்ப உணர்வுப்பூர்வமானது .வார்த்தைகள் மௌன விரதமிருக்க விரதமிருக்க , உணர்வுகள் ஆர்ப்பரிக்கும் அலாதியான தருணம் . இதுவும் ஒரு சொர்க்கமே .

சொர்க்கம் நம்பர் ஏழு :


 வருடம் முழுதும் ஹோட்டல் சாப்பாட்டு சாப்டு , விடுமுறைக்கு வீட்டுக்கு போனதும் அம்மா சமச்ச சாப்பட சாப்டுறதே ஒரு சொர்க்கம் தான் . அதுவும் ஒரு மழைக்கால வேலையில ஆட்டுக்கல்ல மாவாட்டி , வெறகடுப்புல இட்லி அவிச்சு அதுக்கு தொட்டுக்குறதுக்கு , அம்மில அரச்ச மசாலா போட்டு ஒரு வெங்காயக் கோஸ் வச்சு கொடுத்தாங்கன்னா அடடா அமிர்தம். நமக்கு விருப்பமானவங்க மருந்து கொடுத்தாவே விருந்து மாதிரி இருக்கும் அப்ப விருந்தே கொடுத்தா?  சொர்க்கத்துல ஒக்காந்து அமிர்தம் சாப்பிட்ட மாதிரி  இருக்கும் .

இன்னும் இது போல எத்தனை எத்தனயோ சின்ன சின்ன சொர்க்கங்களை அவசரகதியில் அனுதினமும் நம் கடந்து போகிறோம் , சொர்க்கம் என்று தெரியாமலே . தெரிந்தாலும் நின்று பார்த்து அனுபவிக்க நேரமில்லை. ஒருவேளை ராஜு முருகன் வட்டியும்  முதலில் , தவற விட்ட சொர்க்கங்களை பட்டியலிட்டால் அட ஆமால்ல ன்னு ஞாபகத்துக்கு வரலாம் .

இதுபோன்ற சொர்க்கங்கள் தான் வாழ்கையை அர்த்தப்படுத்துகிறது , அழகாக்குகிறது .

என்னங்க ... இது போல உங்களுக்கும் சொர்க்கங்கள் இருக்கும் தானே ? அப்றமென்ன வாங்க சொர்க்கத்துக்கு போகலாம் .


சொர்க்கங்களை தேடி வண்ணத்துப்பூச்சி பறக்கும் ....

6 comments:

 1. ஆமாம் தோழரே!வாழும்போதே நமது சொர்க்கத்தை நாமே சிருஷ்டித்துக் கொள்ள வேண்டியதுதானே1

  ReplyDelete
 2. சூப்பர்... எனக்கு இரண்டும் ஐந்தும் பிடித்திருந்தது...

  ReplyDelete
 3. அருமை நண்பா, என்னொரு இயல்பான எழுத்துக்கள், பதிவு மொத்ததயும் ரசித்தேன், இவ்வளவு அற்புதமான எழுத்து நடையை விட்டுவிடாதீர்கள், ஒரு சில சமயம் சோர்வு கூட வரலாம் சோர்ந்து விடாதீர்கள்....

  ReplyDelete
  Replies
  1. சொர்க்கம் என்பது நமக்கு சொந்தம் உள்ள blog தான் !

   Delete

Related Posts with Thumbnails