Mar 26, 2014

தண்ணீர் - கண்ணீர் ...!





"நாக்கு இல்ல , நாடி நரம்பெல்லாம் வறண்டு போகப்போகுதுடா ...!"

ஊரிலிருந்து திரும்பி வந்த அம்மா சொன்ன வார்த்தைதான் இது . ஒட்டு மொத்த தமிழகமே தண்ணீர் பஞ்சத்தை நோக்கி காட்டாற்று வெள்ளம் போல முன்னேற , எங்கள் சிவகங்கைச் சீமை அதற்கும் ஒரு படி மேலே வேகமாக சென்றுகொண்டிருக்கின்றது .

ஆற்றுப்பாசனமோ , வாய்க்கால் பாசனமோ ஏதொன்றும் இல்லை . வானம் பார்த்த பூமி , இப்பொழுது வானத்தையும் பார்க்க முடியாததாகி தகிப்பது பெருங்கொடுமை . சிவகங்கை மாவட்டத்தின் எல்லைக் கிராமம் பூலாங்குறிச்சி தான் எங்கள் ஊர். தண்ணீர் வசதி ஏதுமில்லாத போதும் , இயற்கையிலேயே அமைந்த மலைகளும் , அதிலிருந்து வரும் ஊற்றுகளும் , மூதாதையர்கள் நுட்பமுடன் அமைத்த ஒன்றை ஒன்று தொடர்புடைய குளங்களும் , ஊருணிகளும் இது வரை காப்பாற்றியது .

மினரல் வாட்டரெல்லாம் வருவதற்கு முன்பே எங்கள் ஊர் தண்ணீர் அக்கம் பக்கத்து ஊர்களில் மினரல் வாட்டர் கணக்காக விற்கப்பட்டது . பொன்னமராவதியிலோ , கொப்பனாபட்டியிலோ இல்லை அக்கம் , பக்கம் உள்ள ஏதேனும் ஒரு கிராமத்திலுள்ள வீட்டில் குடிக்க பூலாங்குறிச்சி தண்ணீர் தந்தார்கள் என்றால் , அவர்கள் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் என்று அர்த்தம் . அனுதினமும் அதிகாலையிலும் , அந்தி மாலையிலும் அக்காக்களும் , அண்ணன்களும் சாரை சாரையாக மிதிவண்டியில் ரப்பர் டியூபுடன்  , பிளாஸ்டிக் குடங்களுடனும் தண்ணீர் சுமந்து செல்வார்கள். முறையே வீடுகளுக்கும் , விற்பதற்கும் . இப்படி இருந்த ஊரில் இன்று மினரல் வாட்டர் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள் .

கேணிக் கயிறு , வாளியை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு , எங்கள் வீட்டு கிணற்றில் மொந்து குளித்த நாட்கள் எல்லாம் போய் இன்று இரண்டு செட் கயிறு வாங்கி பிணைத்து இறைத்துக் கொண்டிருக்கிறோம் . அப்படியே இறைத்தாலும் , வாளியில் வரும் தண்ணீரை விட உடம்பில் இருந்து வெளியேறும் வியர்வை நீர் தான் அதிகமாக இருக்கின்றது . ஆடு , மாடுகளெல்லாம் அடிமாட்டுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது . வெயில் மழை பொழிந்து கொண்டிருக்கின்றது.

பொதுவாக விவசாயம் தவிர வேறெந்த தொழிற் வாய்ப்பும் , வசதியும் இல்லாத தேய்ந்த தென் மாவட்டமான எங்கள் மாவட்டத்தில் வீட்டுக்கொருவர் மலைசியாவிலோ, சிங்கப்பூரிலோ கொண்டுவிற்கப் போயிருப்பார்கள் . என் உடன் படித்த நண்பர்களில் என்பது சதவீதத்திற்கும் மேலே மேற்படி ஊர்களில் தான் வாழ்கிறார்கள் இல்லை பிழைக்கிறார்கள்  . இப்பொழுது இந்த நிலைமை மாறிவிட்டது , வீட்டிற்கு ஒருவர் இல்லை இருவராகிவிட்டனர் . போகிற போக்கில் ஒட்டு மொத்த சிவகங்கை மாவட்டமும் சிங்கைக்கோ , மலைசியாவிற்கோ புலம் பெயர்ந்தாலும் ஆசார்யப்படுவதற்கில்லை .ஆனால், அப்பொழுதுகூட எங்கள் தொகுதி மாண்புமிகு ஏதோவொரு கிராமத்தின் ATM ஐ திறந்து கொண்டு, இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது என்பார் .

வைரமுத்து சொன்ன தண்ணீருக்கான மூன்றாம் உலகப்போர் வரும் தலைமுறையில் அல்ல , நம் தலைமுறையிலேயே வரப்போகின்றது . வெகுவிரைவில் , நீங்களும் , நானும் தண்ணீருக்காக கட்டிப் புரண்டு சண்டை போடப்போகின்றோம் .

திரையரங்குகளில் காண்பிக்கப்படும்  “நான் தான் முகேஷ் “ என்ற விளம்பரப் படத்தில் புகையிலைக்குப் பதிலாக தண்ணீரையும், பாடப் புத்தகங்களில் தீண்டாமைக்குப் பதிலாக விளை நிலங்களை , விலை நிலங்களாக்குவது ஒரு பாவச் செயல் என்று போடும் நாள் வந்துவிட்டதென்றே நினைக்கின்றேன் . அரசுகளையும் , அதிகாரிகளையும் குறைசொல்வதை விட்டுவிட்டு  , ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவில் தண்ணீரின் அவசியத்தையும் , முக்கியத்துவத்தையும் உணர்ந்தாலொழிய தண்ணீருக்காக சிந்தப்போகும் செந்நீரை யாராலும் தடுக்கவோ / தவிர்க்கவோ முடியாது

நீ எதிர் பார்க்கும் மாற்றத்தை உன்னில் இருந்தே ஆரம்பி என்று சொல்வார்கள் . அதன்படி , என்னால் முடிந்த அளவு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென்றும், மக்காத பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மஞ்சள் பைகளையும் , கட்டை பைகளையும் பயன்படுத்த வேண்டுமென்று முடிவெடுத்து அதன்படி நடக்க ஆரம்பித்துள்ளேன் . கண் கெட்ட பிறகான சூரிய நமஸ்காரம் தான் ... கண்ணோடு போகட்டுமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு .

செலவழிக்கும் ஒவ்வொரு அதிகபட்ச தண்ணீர் துளியும் , தண்ணீர் கிடைக்காமல் நாக்கு, நாடி, நரம்பெல்லாம் வறண்டு போய் மாண்டு போன யாரோ ஒருவருடைய செந்நீர் என்றும்  . பிளாஸ்டிக் பைகளை கைகளில் தொடும்போதெல்லாம் , தண்ணீர் இல்லாமல் மாண்டு போன ஒரு குழந்தையின் சடலத்தை தொடுவது போலவுமே உணர்வதாக கற்பிதம் செய்து கொள்கின்றேன் நான் . நீங்கள் ......?

நாக்கு இல்ல , நாடி நரம்பெல்லாம் வறண்டு போகப்போகுதுடா ....!

என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .



29 comments:

  1. வெயில் இப்போதே தாங்க முடியாமல் அலற வைக்கிறது... மின்வெட்டு சிறிது சிறிதாக ஆரம்பித்தும் விட்டது... போன மாதம் முதல், 1 மணி நேரம் மோட்டார் போட்டாலும் 1 குடம் தண்ணீர்...? ம்ஹிம்... இப்போது சுத்தம்...! நிலத்தடியில் நீர் இருந்தால் தானே...?

    ஒவ்வோர் நீர்த்துளியும் தங்கத்துளிகள் தான்... அனைவரும் உணர்ந்து உடனே செயல்படவும் வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வோர் நீர்த்துளியும் தங்கத்துளிகள் தான்// ஆமா dd

      Delete
  2. ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவில் தண்ணீரின் அவசியத்தையும் , முக்கியத்துவத்தையும் உணர்ந்தாலொழிய தண்ணீருக்காக சிந்தப்போகும் செந்நீரை யாராலும் தடுக்கவோ / தவிர்க்கவோ முடியாது//

    நிச்சயம் இப்படி ஒரு சூழல் வரும் என்று நான் கருதுகிறேன் ப்ரோ... ஊரில் இருந்தவரையில் தண்ணீரின் அவசியத்தை உணராத நான் சென்னை போன்ற மாநகரங்களில் வந்த பின் அதன் மகத்துவத்தை உணர்ந்து கொண்டேன்... என்ன நெகிழியின் ஆபத்தை எப்படித்தான் விளக்கினாலும் மக்கள் உணர்வதாக இல்லை போலும் .... நானும் எனது மாமா திரு . கருணாகரசு அவர்களும் ஒரு முயற்சி செய்யலாம் என்று இருந்தோம் ... இந்த பதிவு இன்னும் ஊக்கத்தை விதைத்தது என்னுள் ....

    ReplyDelete
    Replies
    1. //நெகிழியின்// பிளாஸ்டிக்கின் தமிழ் பெயரா ?

      நன்றி அரசன்

      Delete
  3. கண் கெட்ட பிறகான சூரிய நமஸ்காரம் தான் ... கண்ணோடு போகட்டுமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு .// நிதர்சனம் அண்ணே

    ReplyDelete
  4. எங்க வீட்டில் முடிந்தளவு பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறோம். இருந்தும் பருப்பும் எண்ணெய், ஹார்லிக்ஸ், காம்ப்ளான்னு பிளாஸ்டிக் கவர்கள் பேக் செய்யப்பட்டு வரும் பொருட்களை வாங்காமல் இருக்க முடிவதில்லை. அந்த வகையில் தினமும் குறைஞ்சது5 கவர்களாவது எங்க வீட்டில் இருந்து குப்பைக்குப் போகுது!

    ReplyDelete
    Replies
    1. //எண்ணெய், ஹார்லிக்ஸ், காம்ப்ளான்னு பிளாஸ்டிக் கவர்கள் பேக் செய்யப்பட்டு வரும் பொருட்களை வாங்காமல் இருக்க முடிவதில்லை. // வாஸ்தவம் தான் காய்கறி கடை , ஹோட்டல் இங்கு வாங்குவதையாவது நிறுத்தலாம் ...

      பிளாஸ்டிக்க ஒழிக்க முடியுமான்னு தெரியல அட்லீஸ்ட் குறைக்கவாவது செய்வோம்

      Delete
  5. கட்டுரையின் கடைசி இரண்டு பத்திகள் தண்ணீரின் மகத்துவத்தோடு, தண்ணீரின் அழிவிற்கு காரணிகளில் ஒன்றான பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணி பைகளை உபயோகிக்கும் உங்கள் பழக்கம் மகிழ்ச்சியை தந்தது. மற்றவர்களும் இதனைப் படித்த பின்பு தண்ணீரின் தேவையை உணர்ந்து அதனை பாதுகாக்க வேண்டும். மேலும் தண்ணீர் குறைவுக்கு காரணமான பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணி பைகளை உபயோகிக்க வேண்டும்.

    ReplyDelete
  6. இப்படியான பதிவுகளை செயல்களை வரவேற்கிறேன் ...ஒவ்வொருவரும் நாம மாறணும் .

    ReplyDelete
    Replies
    1. அதிகமாக வரவேற்க முயற்சி செய்கிறேன் :)

      Delete
  7. நிதர்சனமான உண்மைகள். சரியான சமயத்தில் எழுப்பப்பட்ட எச்சரிக்கைப் பகிர்வு. தண்ணீர் விலைக்கு வாங்கிப் பருக வேண்டிய காலம் வரும் என்று சொல்லியிருந்தால் என் முன்னோர்கள் சிரித்திருப்பார்கள். இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. வருங்காலத்தை கற்பனையில் பார்க்கவே பயமாகத்தான் உள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை பெரும்பாலும் நான் தவிர்த்தே வருகிறேன். உன்னுடைய நானும் ஆமோதிக்கிறேன். பங்கு கொள்கிறேன் ஜீவன்!

    ReplyDelete
  8. பிளாஸ்டிக் பொருளை தொடும்போது எல்லாம் இனி ஷாக் அடிக்கிற மாதிரி பண்ணிடிங்க சகோ! ஆனால் எங்கள் வீட்டில் ஏற்கனவே இதை கடைபிடிக்கிறோம் .ராஜி அக்கா சொல்வதை போல் சில விஷயங்களை தவிர்க்கமுடியவில்லை! அருமையாய் சொல்லிருக்கீங்க சகோ!

    ReplyDelete
  9. நிதர்சனம்சொல்லும் கட்டுரை....

    தண்ணீருக்காக சண்டை போட்டுக் கொள்ளும் காலம் வெகு அருகில் இருப்பதாகத் தான் நானும் உணர்கிறேன்..... ஒவ்வொரு தனிமனிதனும் தன்னால் முடிந்த அளவு தண்ணீரை வீணாக்குவதை தவிர்த்து சேமிக்கத் துவங்க வேண்டும்.... முயன்றால் முடியாதது இல்லை...

    ReplyDelete
  10. எதிர்காலம் பயங்கரமாகத்தான் காட்சியளிக்கிறது

    ReplyDelete
  11. சிறு வயதில் தண்ணீருக்காக அலைந்த காலம் உண்டு... ஆகவே எனக்கு தண்ணீர் சிக்கனம் தெரியும். குழாயடி சண்டை நாடுகளுக்கு இடையே நிகழும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது தெரிகிறது..

    ReplyDelete
  12. நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க தம்பி.. !

    //வெகுவிரைவில் , நீங்களும் , நானும் தண்ணீருக்காக கட்டிப் புரண்டு சண்டை போடப்போகின்றோம் .//

    தண்ணி வேணும்னா கேளுங்க தம்பி, அக்வா பினாவோ, கின்லேவோ, இல்ல டாஸ்மாக்கிலையோ,வாங்கித் தந்திடறேன்.. கட்டிப்புரண்டு சண்டையெல்லாம் வேண்டாமே.. (சும்மா ஜாலிக்கு தான் சொன்னேன் பா.. Batman வந்து தலையில கொட்டப் போகுதுன்னு நினைக்கிறேன்.. :) )

    ReplyDelete
  13. அற்புதமான பதிவு.. விகடனில் பாரதி தம்பி மீத்தேன் வாயு திட்டம் படித்துவிட்டு இதை படித்தேன் இன்னும் வலிக்கிறது

    ReplyDelete
  14. போன வருடத்தை விட இந்த வருடம் நிச்சயம் கோடை அதிகமாய் தகிக்கப் போகிறதென்று இப்போதே தெரிகிறது... எனக்கு தெரிந்த வரை மே மாத உச்சியில் தகிக்கும் வெயில் இம்முறை மார்ச் தொடக்கத்திலேயே வந்து விட்டது... தினம் தினம் வானத்தைப் பார்த்து காத்திருக்கும் மழைக்கான ஏக்கம் மிகவும் அதிகமாகவே... வானமோ அவ்வப்பொழுது லேசாய் கருமை நிறத்துக்கு மாறி சில நிமிடங்களிலேயே பளீரென வெளிறிப் போகிறது. இங்கேயே இந்த நிலைமல் என்றால் சென்னை எல்லாம் நினைக்கவே முடியவில்லை... இயற்க்கையோடு இணைந்து வாழாமல் விலகிப் போனதால் வந்த விளைவு இது.... ஹ்ம்ம்ம் திகைப்பாய் தான் இருக்கிறது இன்னும் 10 வருடங்கள் கடக்கையில் உணவிற்க்கும், தண்ணீருக்குமான தட்டுப்பாடு எந்த அளவில் இருக்குமோ...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி பிரியா .

      Delete
  15. உண்மைதான் பாஸ், முன்னாடி குளிச்ச வாய்கால், கிணறு எல்லாம் குப்பை மேடாத்தான் காட்சி அளிக்குது..........

    ReplyDelete

Related Posts with Thumbnails