Apr 25, 2017

பேசாத வார்த்தைகள் – 250417


தஞ்சாவூர்க் கவிராயர் என்பவர் , தமிழ் இந்துவின் நடுப்பக்கத்தில் வாரமொருமுறை தம் பசுமையான நினைவுகளை எளிமையான வார்த்தைகளால் பகிர்ந்து வருகிறார் . சென்றவாரத்தில் உறவுகளையும் , தின்பண்டங்களையும் இணைத்து நினைவுகூர்ந்திருந்தார் . இருபத்தைந்து வயதினைக் கடந்த எலோருக்குமே மேற்படி அனுபவம் இருந்திருக்கும், நம் வீட்டிற்கு வந்த  ஒவ்வொரு உறவினருக்கும் ஓர் ஆஸ்த்தான தின்பண்டம் இருக்கும் . நமக்காக அதை அவர்கள் எடுத்து வரும் விதமும் பண்டத்தின் மணமும் இன்றளவும் அவர்களை நினைவுகூரவைக்கும் .


தாய் வழி பெரியம்மா என்னை பார்க்க வரும்போதெல்லாம் பொறி உருண்டை கொண்டு வருவார் . இரண்டு கைகளை சேர்த்து பிடித்தாலும் , பிதுங்கி நிக்கும் சைசில் இருக்கும் ஒவ்வொன்றும். மொறு மொறுவென்று கடிக்கும் போது இருக்கும் சுவையை காட்டிலும் , கடைசியில் சில கடிகளை அப்படியே வாயில் சற்று ஊற வைத்து சாப்பிடுவது அலாதியான சுவையை தரும்.

அப்பா எப்பொழுதும் விரும்பி வாங்கி வருவது இனிப்புக் காராசேவ். கசங்கிப்போன தினத்தந்தி பேப்பரில் பொட்டலம் கட்டி , ராஜ்கிரண் டைப் அண்டர்வேருக்குள் வைத்து அப்பா எடுத்து வரும் இனிப்பு காராசேவ்க்கு தனி ருசி .

தந்தை வழி பெரியம்மா சத்துணவுக்கூடத்தில் வேலைபார்த்தமையால் ஒவ்வொருமுறை வருகையின்போதும் அரசு சத்துமாவு பாக்கெட் ஒன்றோ இரண்டோ எடுத்துவருவார் . வெந்நீர் ஊற்றி பிசைந்து ஒரு நாளைக்கு ஓர் உருண்டையாக அம்மா தருவார் . என்னதான் உருண்டு, புரண்டாலும் இரண்டாவது உருண்டை கிடைக்காது. மேற்படி சத்துணவு உருண்டையில் உச்சபட்ச ருசியே அங்கங்கே சிதறி இருக்கும் சர்க்கரை கட்டி தான் . மாவு மட்டும் முதலில் கரைந்து இடையிடயே சர்க்கரை கட்டி மட்டும் தனியாக உமிழ்நீரில் சங்கமிக்கும்போது ருசியில் நாமும் கரைந்தே போவோம்.

அம்மாவின் ஆஸ்தானம் சீடைக்காயும், தேன்குழலும் . சீடைக்காயில் கலந்திருக்கும் தேங்காயின் ருசியை இப்பொழுதும் என்னால் நினைவுகூர்ந்து ருசிக்க முடிகின்றது. அமராவதிபுதூர் குருகுலத்தில் படித்தபோது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஒரு டின் நிறைய சீடைக்காயும், தேன்குழலும் கொடுத்தனுப்புவார் அம்மா. விரைவில் தீர்ந்துவிடக்கூடாது என்பதற்காக வேளைக்கு பத்து என்று எண்ணி எண்ணி தின்றிருக்கிறேன். சமயங்களில் பக்கத்துப் பையன் கேட்டுவிடக்கூடாதே என்று சத்தம் வராமல் வாயில் ஊறவைத்து தின்றதை எல்லாம் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அடுத்து தேன்குழல் . தேன்குழலின் சிறப்பே அதன் டிசைன்தான். ஒவ்வொன்றாக ஒடித்து ஒடித்து சாப்பிடுவது கிட்டதட்ட ஓவியம் வரைவது போலதான் . ஆயுள் சொற்பம்தான் எனினும் தேன்குழலில் பச்சை தேன்குழல் வெகு ருசியாக இருக்கும் . பச்சை தேன்குழல் என்பது ஆஃப்பாயில் போன்றது . அதாவது அரைவேக்காட்டில் எடுப்பது .


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


வியாபாரத்தில் நம்மாட்களுக்கு ஒரு பழக்கம் உண்டு . அதாவது போன ரூட்லையே போறது . ஒருத்தன் வடை சுட்டு வியாபரம் பண்ணி நாலு காசு சேர்த்தா , உடனே நாங்களும் வடை சுடுறோம்னு எதிர்லயே கடை போட்டு எதிர்த்த கடைக்காரன் தலையில் துண்டை போட்டுவிடுவோம். பத்தாதற்கு நாமும் கையை சுட்டுக்குவோம். பரீட்சார்த்த முயற்சி என்பது தமிழகத்தில் வெகு சொற்பம் . ஊரோடு ஒத்து வாழ்ன்னு ஒரு சப்பைக்கட்டு கட்டி கிணத்துத் தவளையாகவே இருக்கிறோமோ என்றொரு எண்ணம் எனக்குண்டு. விதியாசப்படுத்திக்காட்டுவதில் நமக்கு நம்பிக்கையும் இல்லை அக்கறையுமில்லை. நம்முடைய வித்தியாசமெல்லாம் தமிழ்சினிமா இயக்குனர்கள் , தங்களது பட ரிலீசின் போது ஊடகத்திற்கு சொல்லும் ஒப்பனை வார்த்தைகள் போலத்தான்.

விளம்பரங்கள் கூட அப்படித்தான் . சாரதி வேஷ்டிக்கு அப்புறம் வேஷ்டிக்காக பெரிதாக எந்தவொரு விளம்பரத்தையும் கேட்டதாகவோ, பார்த்ததாகவோ , படித்ததாகவோ நினைவில்லை . சில வருடங்களுக்கு முன்பு வேஷ்டி விளம்பரம் எல்லாம் காசைக் கரியாக்குகிற செயலாகத்தான் பார்க்கப்பட்டது. காரணம் , ஆண்கள் வேஷ்டிகளைத் துறந்து பேன்ட், ஜீன்ஸ் என்று மாறிவிட்டதும், வேஷ்டிகட்ட மறந்துவிட்டதுமே. இந்நிலையில்தான் ராம்ராஜ் நிறுவனத்தினர் வேஷ்டி விளம்பரத்தை கையிலெடுத்து , தொடர்ந்து விளம்பரங்களை காட்டி,  ஆண்கள் கவனத்தை வேஷ்டிகளின் பக்கம் இழுத்தார்கள். விளம்பரங்கள் மட்டுமல்லாது புராடக்ட்களிலும் , சப்ளை செயினிலும் புதுமைகளை புகுத்தி ஆடைத்துறையில் வெண்மைப் புரட்சியை அமர்க்களமாக சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் .  புதிதாக எதையும் உருவாக்கவில்லை; மீட்டுருவாக்கம் தான் . ஆனால் துணிந்து இறங்கி , சின்ன சின்ன வித்யாசங்களை புகுத்தி இன்று ஒரு பெரிய சந்தையையே உருவாக்கிவிட்டார்கள் . இப்பொழுது நம் வடை பார்ட்டிகளுக்கு கண்களில் வேர்வை கட்டி அடுத்தடுத்து களமிறங்கிவிட்டார்கள். போட்டி நல்லதுதான் , இருப்பினும் ஏதேனும் ஒருவகையில் ஏற்கனவே இருப்பதை விட சிறப்பாக இருக்கவேண்டுமல்லவா 

சமீபத்தில் நான் ஆச்சர்யபட்டு பார்த்த இரண்டு விளம்பரங்கள் & புராடேக்ட்கள் ஒன்று இன்னோவேடிவ் வகையறா மற்றொன்று மீட்டுருவாக்கம் வகையறா. 

இன்னோவேடிவ் புரோடேக்ட் : கம்ஃபோர்ட் பேப்ரிக் கண்டிஷனர்.

எனக்குத் தெரிந்து டெட்டாலைத்தான் நாம் வெகுநாட்களாக பேப்ரிக் கண்டிஷனராக உபயோகித்துக் கொண்டிருந்தோம் . அதுவும் மாமாங்கத்திற்கு ஒருமுறை. அதாவது போர்வை, ஜமுக்காளம் துவைக்கும்போது மட்டும். மற்றபடி சவுக்கார கட்டியை வைத்து ரெண்டு தோய் தோய்த்து நாலு கும்மு கும்மி காயப்போடுவதோடு சரி . திடீரென பேப்ரிக் கண்டிஷனர் என்ற ஒன்றை விளம்பரப்படுத்தி இன்று சந்தையை துவைத்துப்  பிடித்துவிட்டார்கள். இன்றுவரை கம்போர்ட்டிற்கு போட்டியாக  வேறு எந்த பிராண்டும் வராதது ஆச்சர்யம். கோடிக்கணக்கில் மதிப்பிடப்படும் சந்தையை மோனோபோலியாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.


மீட்டுருவாக்கம் : aer  டாய்லட் ப்ரெஷ்னர்.

சாம்பிராணி , ஊதுவத்தியைத்தான் சில இடங்களில் இன்றும் அறை மணப்பானாக உபயோகித்துக்கொன்டு இருக்கிறார்கள். சிறுவயதில் வீட்டில் அந்துருண்டையை போட்டுவைப்பார்கள் . அப்பொழுதெல்லாம் ஒதுங்குவதற்கு காடு கரைதான் . கிணற்றடியில், அலமாரியில் இங்கெல்லாம் நாப்தலின் என்ற வண்ண வண்ண அந்துருண்டையைத்தான் போட்டு வைத்திருப்பார்கள் . கொஞ்ச நாட்கள் கழித்து ஓடோனில் என்றொரு பிராண்ட் வந்து அந்துருண்டையை உருட்டிவிட்டு அதன் இடத்தை பிடித்துக்கொண்டது . மிகச்சமீபம் வரைக்கும் ஓடோனில் தான் கழிவறைகளின் மணக்கும் நண்பன்.

அதிரடியாக சமீபத்தில் உள்ளே நுழைந்தார்கள் கோத்ரேஜ் கம்பெனிக்காரர்கள். அதே டாய்லட்/ரூம் ப்ரெஷ்னர் தான் . ஆனால் வடிவமைப்பில் , பேக்கேஜிங்க்கில் , விளம்பரத்தில் என்று அனைத்து விசயங்களிலும் ஸ்டைலை புகுத்தி சந்தையை பிடித்துவிட்டார்கள் . வழமையான பேக்கேஜிங் மற்றும் மணத்தை தவிர்த்து ஸ்லீக்கான ஸ்டைலான புதுவிதமான நறுமணத்துடன் வந்த aer பாக்கெட்டை மக்கள் உடனே சுவீகரித்துக்கொன்டார்கள் .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கட்டப்பாவ காணோம் 




வரும் ஆனா வராது மாதிரியான படம் . கண்டிப்பா தோத்துடுவானுங்கன்னு முடிவு பண்ணி டி,வியை ஆஃப் பண்ணப்போகும்போதுதான் பவுண்டரியை அடிச்சு நம்பிக்கையை விதைப்பார்கள் அதைப்போலத்தான் க.காவும் . கோடை உக்கிரமாய் சிபி ; உக்கிரத்தை ஓரளவு ஈடுகட்டும் தர்பூசாய் ஐஸ்வர்யா ராஜேஷ். சிபியை மட்டும் சகித்துக்கொண்டால் பார்க்காலாம் டைப் படம்தான் . ஆங்காங்கே வரும் குறியீடுகளும், வசனங்களும் குறிப்பாக கிரிக்கெட் பார்ப்பதும் அதைத்தொடர்ந்து வரும் வசனங்களும் “ஏ”ஒன் ரகம். இருப்பினும் விரசமில்லை .  கள்ளச்சிரிப்புகளுடன் கடந்துவிடலாம்.
ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் காலியானபிறகு , அவ்வளவுதான்னு நினைச்சுட்டு இருக்கும்போது நினச்சுப்பார்க்காத வகையில் டெயிலண்டர்கள் காட்டு காட்டென்று காட்டுவார்களே அதைப்போலவே காளிவெங்கட், மைம் கோபி , யோகிபாபு , டாடி சரவணன்னு பொளந்துகட்டுகிறார்கள் . காளிவெங்கட்டிற்காகவே இனி படம் பார்க்கலாம் போல . எனக்கு வாய்த்த அடிமைகளிலும் செம்மையான பெர்பார்மென்ஸ் மேற்படி க.காவிலும் தொடர்கிறது. குறிப்பாக ஷேர் ஆட்டோவில் பல்பு வாங்கும் போது காட்டும் உடல்மொழியெல்லாம் அபாரம் . உடல் மொழியோடு டயலாக் டெலிவரிகளும் நல்லா blend ஆவது சிறப்பு .

யோகிபாபுவின் ஓப்பனிங் என்ட்ரி சீனும் ,  தொடர்ந்து வரும் பி.ஜி.எம்மும் அதிரி புதிரி ரகம். தள்ளுவண்டிக் கடைக்காரரிடம் வாளி வாங்கும் காட்சிகள் கலகலப்பு . தள்ளுவண்டிக்கார அம்மிணியின் தண்ணி வண்டிக்காரக் கணவர் பேசும் “சொல்மீ” , “ப்ரோ” எல்லாம் அல்டிமேட் அல்டிமேட் ...! யோகியின் அசிஸ்டென்ட்டாக வரும் அந்த பங் வைத்த பையன் ஓட்டை வாளியில் மீனை வைத்துக்கொண்டு ஓடிவரும் காட்சி காமெடி ஹைக்கூ . லிவிங்க்ஸ்டன் , பெரிசு அப்புறம் அந்த களவாணி பட வில்லன் எல்லாருமே கச்சிதம். சேது மட்டும் ஏன் டல்லாவே வர்றாருன்னு தெரியல .மேஜிக் பண்றவங்கல்லாம் பொதுவா எந்த்தோவோட தானே இருப்பாங்க வைப்ரேஷனே இல்லாம சைலண்டா பொம்மை மாதிரி வர்றாரு , பேசுறாரு போறாரு .

“கண்களில் சுற்றும் கனவுகளை கைகளில் பிடிக்க வழி இருக்கா” பாடல் , அதன் வரிகளாலும் , சத்யப்பிரகாசின் குரல்களாலும் செவிஈர்க்கிறது. சிபி, ஐஸ்சின் அன்னியோன்யமான காட்சிகளும் , குட்டிக் குழந்தையின் பிஷ் ஸ்டெப்ஸ் நடனமும் பார்வைப்பரவசம் .

கலகலப்பு படத்திற்கு அப்புறமா நிறைய இடங்களில் சிரிச்சு பார்த்த படம் கட்டப்பாவ காணோம்.


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு

4 comments:

  1. பல்சுவைக்கதமாக நினைவுகளும் ,விளம்பரங்களும், விரும்பி ரசித்த படமும் ! அருமை.

    ReplyDelete
  2. ...சுவையான பதிவு. டெட்டாலை துணிகளுக்கு போட்டதாக சொல்கிறீர்களே, இதுவரை கேள்விப்பட்டதில்லை....சத்யபிரகாசின் குரலை கேட்கவேண்டும்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  3. சுவையான பகிர்வு. உறவினர்கள் கொண்டு வரும் தின்பண்டங்கள் - எங்கள் பெரியம்மா வரும்போது அதிரசமும் கைமுறுக்கும் கொண்டு வருவார்கள். இப்போதும், அவர்களுக்கு முடியவில்லை என்றாலும் கஷ்டப்பட்டு செய்து தருவார்கள். நான் கட்டாயப்படுத்தி மறுத்தாலும்!

    ReplyDelete
  4. @ தனிமரம் & வெங்கட்ண்ணா - நன்றி ...!

    @ செல்லப்பா சார் - எஸ் . nappy wash :)

    ReplyDelete

Related Posts with Thumbnails