Feb 18, 2018

பேசாத வார்த்தைகள் : 01-2018




வியாபாரம் , சந்தைப்படுத்துதல் தொடர்பான சுவராஸ்யமான , தரமான  கட்டுரைகள் தமிழில் குறைவு . தமிழ் இந்துவில் , சதீஷ் கிருஷ்ணமூர்த்தி ஒரு தொடர் எழுதுகிறார். பிராண்டிங் தொடர்பாக . வலிந்து திணிக்கும் எதுகை - மோனையையும், அடுக்கு மொழியையும் சகித்துக்கொண்டால் உங்களுக்கு நல்லதொரு கட்டுரையை வாசித்த திருப்தி கிடைக்கும். சமீபத்தில் ஒற்றை பிராண்ட் , பல பொருள்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஆசீர்வாத் என்கின்ற பிராண்டை கோதுமை மாவிற்காக விளம்பரப்படுத்திவிட்டு , அதே பிராண்ட் பேரில் அவர்களின் மற்ற பொருள்களையும் சந்தைபடுத்தும்போது எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. காரணம் , மக்களுக்கு ஆசீரவாத் என்றாலே கோதுமை மாவு என்ற பிம்பம் ஆழப்பதிந்ததுதான் . எனக்கு தெரிந்த இன்னுமொரு உதாரணம் . நீல்கமல் . நீல்கமல் என்றாலே பிளாஸ்டிக் என்று மக்களுக்கு மனதில் நின்றுவிட்டது. பிராண்ட் பவரை பயன்படுத்துகிறேன் பேர்வழி என்று ஸ்டீல் பிசினசிலும் நீல்கமல் என்றே இறங்கி தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள் . வேறொரு புதிய பிரான்ட் பெயரில் இறங்கியிருந்தால் இன்னும் சிறப்பான இடத்தை பிடித்திருக்கலாம்.

#############################################################################################
சூப்பர் சிங்கரின் அடுத்த அத்தியாயம் ஆரம்பாகிவிட்டது . இந்தமுறை ஆடிசன்ஸ் அக்கபோர்களை தவிர்த்து ஸ்ட்ரெயிட்டா செட்டுக்குள் இறங்கிவிட்டார்கள். முதல் எபிசோடை மறு ஒளிபரப்பில் பார்க்க நேர்ந்தது . அநியாயத்திற்கு  அபாரமாக பாடுகிறார்கள். சுமாரா(வா)ன  குரல்களை கூட்டி வந்து மெருகேற்றிய காலமெல்லாம் மலையேறி , ஏற்கனவே நன்றாக பாடுபவர்களை கூட்டி வந்து இன்னும் கொஞ்சம் வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள் .  அந்தவகையில் பார்த்தால் , குரல் தேடலோ , கண்டுபிடிப்போ இல்லை. இது பக்கா புரோமோஷனல். புதுக்கோட்டையிலிருந்து வந்திருந்த இருவர் பாடிய நாட்டுப்புறப்பாடலில் மண்மணம் தூக்கல் . உடல்மொழியாகட்டும் , குரல்வளமாகட்டும் ரெண்டுமே பிரமாதம் . ஜூனியர் நவநீத கிருஷ்ணன் , விஜயலட்சுமியாய் வருங்காலத்தில் வளம் வர வாய்ப்பு பிரகாசம். மற்றுமொரு போட்டியாளர் ஸ்ரீராமின் குரல் சத்யப்பிரகாசாய் ஒலிக்கிறது .காலி பெருங்காய டப்பா மாதிரி பிரியங்கா லொட லொடப்பதை மட்டும் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. தம்பீ..! டீ இன்னும் வர்ல என்று சொல்லி , ஜீ தமிழுக்கு தாவிய ஸ்ரீநிவாசை நாட்டாமை நாற்கலியிலிருந்து நீக்கிவிட்டார்கள் போலும்.
#############################################################################################
தர்ஷினிக்காக இணையத்தில் காணொளிப்படங்களை தேடிக்கொண்டிருந்தேன் . இன்ஃபோபெல்ஸ் நிறுவனத்தாரின் சிலபல வீடியோக்கள் கிடைத்தது . குழந்தைகளுக்கான தரமான அனிமேஷன் வீடியோக்களை தமிழில் தொடர்ந்து வழங்குகிறார்கள். அதில் “ஒரு பசுவின் கதை” என்ற ஒரு காணொளிப் படம் குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு படைப்பு . வாய்மை தான் கரு . அட்டகாசமான அனிமேஷன் , தரமான கிராபிக்ஸ் , செவியீர்க்கும் குரல் , நேர்த்தியான எடிட்டிங் என்று எல்லாம் கச்சிதமாக அமைந்திருக்கிறது.  ஓர் உணர்வுப்பூர்வமான குறும்படம் பார்த்த திருப்தி. பதினைந்து நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவை அவசியம் உங்கள் குழந்தைகளுக்கு காண்பிக்கவேண்டுகிறேன். கண்மணியும் , சுப்புவும் , பப்புவும் இப்பொழுது எங்கள் வீட்டில் சதா பேசிக்கொண்டும் , ஆடிக்கொண்டும் இருக்கிறார்கள்.
#############################################################################################
சமீபத்தில்  அருவி , மாயவன் என்று இரண்டு படங்களை பார்த்தேன் . அருவியை அயல் மொழிப் படத்தில் இருந்து உருவி எடுத்திருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டார்கள். என்னளவில் படம் சுமார் ரகம்தான் . இதுதான் உலகப்படம் என்றால் எனக்கெல்லாம் உள்ளூர்ப் படமே போதும். அருவி ஸ்டுடியோக்குள் என்டர் ஆவதிலிருந்து எக்சிட் ஆவது வரையிலான பகுதி காமெடி சரவெடி. மற்றபடி கண்ணைகசக்குவதும் , நெஞ்சை பிசைவதுமான முற்பகுதியும் ,பிற்பகுதியும் எனக்கு அவுட் ஆஃப் ஃபோகஸ்.
மாயவன் எனக்கு ரெம்ப்பப் பிடித்திருந்தது. சில காட்சிகளில் , சந்தீப் கிஷனை பார்க்கும்போது “குருவி தலையில் பனங்காய் போல” என்ற உவமை நினைவிற்கு வந்துபோனது. ஆதிரை என்ற பாத்திரத்தில், ஆரஞ்சு வண்ண சல்வாரில் அறிமுகமாகும் லாவண்யா திரிபாதி ஜோதியாய் ஒளிர்கிறார். உத்திரப்பிரதேசம் வழங்கிய தேவதை வாழ்க...! தண்ணீரை வாய் வைத்து உமிழ்நீரோடு கலந்து குடிக்கவேண்டும் என்று ஒரு வசனம் வருகிறது படத்தில் . அறிவியல்பூர்வமான செய்தியா இல்லை வாட்சப் வசனமா என்று தெரியவில்லை . முடிவு கொஞ்சம் குழப்பும் விதமாக இருந்தாலும் அவசியம் வரவேற்கப்படவேண்டிய முயற்சி. அருவியின் இரைச்சலில் மாயவன் மாயமாகிவிட்டதுதான் ஆகப்பெரிய கொடுமை .

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.

2 comments:

Related Posts with Thumbnails