Dec 16, 2019

பேசாத வார்த்தைகள் #16122019


பேசாத வார்த்தைகள் #16122019





புத்தகம் ~ பெர்முடா By கேபிள் சங்கர்.

சற்றேறக்குறைய கடந்த பத்து வருடங்களாக கேபிள் சங்கர் அவர்களின் பத்திப் பதிவுகளை வாசித்து வருகிறேன். வெண்ணெயில் வழுக்கிக்கொண்டு செல்லும் கத்தி போல ஸ்மூத்தான ஃப்ளோ அவரது எழுத்தில் இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம். நான் விரும்பி , தேடிச்சென்று வாசிக்கும் தளங்களில் அவரது இணையப்பக்கமும் ஒன்று. மிகையான விவரணைகள், அலங்கார வார்த்தைகள் ஏதுமின்றியே ஸ்வாரஸ்யமாக இருக்கும் அவரின் எழுத்து.

நிறைய புஸ்தங்கள் எழுதியிருக்கிறார். அவரது சமீபத்திய பெர்முடா தான் நான் வாசிக்கும் அவரின் முதல் புத்தகம். அமேசான் கிண்டிலில் இலவசக் கொள்முதல் செய்தது. 
திருமணம் அதைத்தொடர்ந்து உருவாகும் பந்தம் இதல்லாம் ஒரு நிறுவனம் என்றும் அதன் உறுப்பினர்கள் என்றும் எங்கெயோ வாசித்த நினைவு. அந்த வகையில் பார்த்தால் மூன்று இணைகளின் Un official relationship பற்றிய கதை தான் பெர்முடா.


அனைத்து அத்தியாயங்களிலும் காமம் பிராவகமாக பொங்கி வழிகிறது. தழும்பத் தழும்ப. மூன்று இணைகளின் முறையே ஆண்கள் மத்திம வயது கொண்டவர்களாகவும் ; பெண்கள் யுவதிகளாகவும் இருக்கிறார்கள். கேபிள்ஜி ஆணாதிக்கவாதி என்று யாரும் கிளம்பவில்லையா...!?

அத்தியாயங்களுக்குப் பெயர் வைப்பதில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஒவ்வொரு இணைகளின் பெயரையே தலைப்பாக்கிவிட்டார். முன் பின்னாக ; பின் முன்னாக. உதாரணத்திற்கு A ~ B என்றால் A யின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. B~A என்றால் B யின் பார்வையில். அப்படின்னா A-C , D-F ன்னு sufflingலாம் இருக்குமான்னு கேட்கப்புடாது. ஆனால் இருந்திருந்தால் அது வித்தியாசமாக இருந்திருக்குமோன்னும் தோன்றது.

மேற்படி இணைகளில் சுரேஷ்வர் ~ நித்தியா எபிஸோட்ஸ் எனக்கு நிரம்பப் பிடித்திருந்தது. இரண்டு கதாபாத்திரமுமே ஒவ்வொரு விஷயத்தையும் மிக பக்குவமாக அணுகுவதாகவே படைக்கப்பட்டிருக்கிறது. மற்ற இரண்டு இணைகளின் ஒன்றில் சைகோதனமும் , பிறிதொன்றில் பச்சாபாதமும் நிரம்பியிருக்கிறது. முக்கியமான ஒரு விஷயம் அந்த சுரேஸ்வரை மனம் அன்னிச்சையாக கேபிள் சங்கராகவே கற்பனை செய்துகொண்டுவிட்டது.

புத்தகம் அமேஷிங் ஃப்ளோ. செக்ஸ் சமாச்சாரத்தை ஃப்ளோவுல எழுதறதெல்லாம் ஒரு மேட்டரான்னு நினைக்காதீங்க. அதுதான் நிரம்பக் கஷ்டமான காரியம். நிறையபேர் காமத்தை கோவம் வர்ற மாதிரிதான் எழுதுகிறார்கள். எழுத்தாளருக்கு 45~50 வயதிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் மனதளவில் நிரம்ப இளமையாக இருப்பார் போல. நின்னு விளையாண்டிருக்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பிக்கும் முன்னும் ஒரு சேட் பாக்ஸ் உரையாடல் வருகிறது.  நாலைந்து இடங்களில் பெயர் மாறியிருந்தது , இது இரண்டையும் இணைத்து எதுவும் ட்விஸ்ட் வைப்பார் போல என்றெண்ணிதான் வாசித்தேன். ஆனால் அப்படியெல்லாம் ஏதுமில்லை. சாட் பாக்ஸ் உரையாடல் சேர்க்கைக்கான நோக்கம் என்னவென்று விளங்கவில்லை எனக்கு.

மொத்தத்தில் திகட்ட திகட்ட காமத்தையும் ; அதைத்தொடர்ந்து வரும் அலைக்கழிப்புகளையும் போரடிக்காமல் சொல்லியிருக்கிறார்.  எனக்கு கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்ததாகப்பட்டது.

@@@@@@@@@@@@

திரைப்படம் ~ வார் - இந்தி

ஆண் பெண் பாகுபாடின்றி ஹ்ரித்திக் ரோஷன் மேல் கிரேஸ் உச்சத்தில் இருந்த நாட்களிலேயே எனக்கு அவரைப் பிடிக்காது. அவரது முகம் ஏதொ அந்நியத்தன்மையான ஒன்றாகப்படும் எனக்கு. 45 வயதிலும் கட்டுடல் பேணுகிறார் ஹிரித்திக். லீட் ரோலுக்கு இணையான பாத்திரத்தில் ஜாக்கி ஷெராப் மகன் டைகர்  ஷெராப் நடித்திருக்கிறார். தமிழில் மறு ஆக்கம் செய்தால் விக்ரம் & துருவ் பொருத்தமாக இருப்பார்கள்.

தொழிலதிபர் என்ற போர்வையில் தீவிரவாதிகளுக்கு பண மற்றும் பொருள் உதவி செய்துகொண்டிருக்கும் கயவன் ஒருவனை பிடிக்கும் நோக்கில் ஓர் இந்திய அணி. அந்த அணிக்கு தலைமை ஹிரித்திக். நாட்டிற்கு துரோகம் செய்த தன் தந்தையை சுட்டுக்கொன்ற ஹிரித்திக்கின் தலைமையிலான அணியில் இடம்பிடிக்கவேண்டுமென்ற லட்சியத்துடனும் , தன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்துடனும் உயிரைப் பணயம் வைத்து அந்த அணியில் வந்துசேரும் இஸ்லாமிய இளைஞர் காலீத்தாக ஜுனியர் ஷெராப். ஹிரித்துக்கும் , ஷெராப்பும் அவர்களது அணியினருடன் சேர்ந்து அந்தக் கயவனை பிடித்தார்களா ; அந்த நெட்வொர்க்கை அழித்தார்களா என்பதை படம் விறுவிறுப்பாக சொல்கிறது.

கடவுளின் தேசமான கேரளாவிலிருந்து வட துருவமான ஆர்ட்டிக் வரை படம் பயணப்படுகிறது. ஆக்ஷன் காட்சிகள் அபாரம். ஹெலிஹாப்டர் சேஸிங், ஜம்பிங் எல்லாம் காதுல பூவாக இருப்பினும் உள்ளங்கை ஜில்லிட்டுப்போகிறது. இரண்டு மூன்று அட போட வைக்கும் டவிஸ்டுகள் திரைக்கதையில் உண்டு. அதுதான் பலம். பார்க்கலாம்.

@@@@@@@@@

பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாமே வேஸ்ட் ; நஷ்டத்தில் இயங்குகின்றன , ஊழியர்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கின்றார்கள்.  யாரோ எங்கேயோ மேம்போக்காக ஒரு விஷயத்தை கேள்விப்பட்டு சொன்னதுதான் இன்று வாட்ஸாப், சோஷியல் மீடியாக்கள் தயவுடன் வைரலாக்கப்பட்டு, கணிசமான சாமான்யர்களால் நம்பப்படுகின்றது. உண்மையான நிலவரத்தை "இன்றைய காந்திகள்" புத்தகத்தின் ஆசிரியர் பாலசுப்ரமணியன் முத்துசாமி சொல்கிறார்.

மொத்தமுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் சற்றேறக் குறைய 70 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றனவாம். மீதமுள்ள 30 சதவீத நிறுவனங்கள் , (விமான சேவை உட்பட) நஷ்டத்தில் இயங்குகின்றன. தனியாருக்கு தாரைவார்த்தால் எல்லா நிறுவனங்களும் அட்சய பாத்திரமாக மாறிவிட வாய்ப்பிருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால். அய்யோ பாவம்..!!! உதாரணத்திற்கு டாடா குழுமத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நிறுவனத்தின் மொத்த லாபத்தில் 80 சதவீதம் மூன்றே மூன்று நிறுவனங்கள் மூலம் மட்டும்தான் கிடைக்கின்றதாம். மீதி இருக்கும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நஷ்டத்திலோ , சொற்பமான லாபத்திலோ தான் இயங்கி வருகின்றன. இதுதான் யதார்த்தம்.

சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட தடத்தில் ரயில் சேவையை தனியாருக்கு விட்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லாம் பள பளப்பாகத்தான் இருக்கும். போகப் போகத்தான் பளபளப்பு பள்ளிலிக்கும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பயன். பொதுத்துறை நிறுவனங்களை சீரமைக்கலாம் ; சிதைக்கக் கூடாது. அது மக்களைச் சீரழிப்பதற்கு ஒப்பாகும். 


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.


4 comments:

  1. இனி எல்லாமே தனி தனி தான்...!

    ReplyDelete
  2. பெர்முடா வாசிக்க ஆசையாக இருக்கிறது. நன்றி. வார் திரைப்படம் என்னுடைய taste இல்லை என்று நினைக்கிறேன். அறியத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்

    ReplyDelete

Related Posts with Thumbnails