Apr 5, 2017

பேசாத வார்த்தைகள் - 050417 : லெக்ஷ்மி | நேஷனல் சில்க்ஸ் | கனவு வாரியம்

சமீபத்தில் கேட்க, கேட்க பிடித்துப்போனது லெக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்தின் குரல் . போகன் படத்தின் செந்தூரா பாடல் லெக்ஷ்மியின் முதல் திரையிசைப்பாடல். வழக்கமாக இமான் இசைக்கும் படங்களில் ஷ்ரேயாகோஷலின் குரல் தான் கவனம் ஈர்க்கும். போகனிலும் ஸ்ரேயா உண்டு . ஆயினும் லெக்ஷ்மி செவியீர்க்கிறார். உருவத்திலும் , குரலிலும் முறையே சாய் பல்லவியையும் , சித் ஸ்ரீராமையும் நினைவுபடுத்துகிறார். லேடி சித் ஸ்ரீராம் என்றுகூட சொல்லலாம் . அப்படியொரு ஆளுமை நிரம்பிய அழுத்தமான குரல் . செந்தூரா பாடலின் மற்றுமொரு சிறப்பம்சம் தாமரையின் வசியம் செய்யும் வரிகள் .

“அலைந்து நான் களைத்துப் போகும்போது அங்கே
மெலிந்து நான் இளைத்து போவதாய் சொல்லி ,
வீட்டில் நளபாகம் செய்வாயா ;
பொய்யாய் சில நேரம் வைவாயா, நான்
தொலைந்து போனால் உனை சேரும் வழி சொல்வாயா...!”

பாடல் என்றதும் எங்கே இவர்கள் என்று கேட்கத்தோன்றும் இருவர் , ஜிப்ரான் & ஆலாப் ராஜ். சமீபத்தில் இவர்களிருவரையும் கேட்ட நினைவில்லை. என்னாச்சு ...?


திருப்பூரில் , பொழுதுபோக்க சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை , சென்னையானால் வள்ளுவர் கோட்டம் , பீச் என்று எங்காவது சல்லிசான செலவில் நாள் பூராவும் சுத்திவரலாம் . மதுரை , திருச்சிகளில் கோவில்கள் , அணைகள் என்று எப்படியாவது அரைப்பொழுதை கழித்துவிடலாம். கோவை என்றால் கூட பரவாயில்லை ஷாப்பிங்கிற்காகவும் , விண்டோ ஷாப்பிங்கிற்காகவும் என்று ஒன்றுக்கு இரண்டாக மால்கள் உண்டு . திருப்பூர் மாதிரியான ஊர்களில் ரெம்ப கஷ்டம். தடுக்கி விழுந்தாலும் தடுக்காமல் விழுந்தாலும் அது ஒரு பனியன் கம்பெனியாகதான் இருக்கும். அதிகபட்ச பொழுதுபோக்கும் ஸ்தலம் திரையரங்கை தவிர்த்து வேறொன்றுமில்லை .

ஞாயிற்றுகிழமைகளில் போரடித்தால் அப்படியே டவுன்பஸ்ஸில் ஏறி திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டிய கடை வீதிகளை ஒரு சுத்து சுத்தி வருவதுண்டு . அப்படியொரு சுத்தல் முடிந்து, வீடு திரும்ப கடைவீதி கார்னரில் நின்று கொண்டிருக்கும் போதுதான் கவனித்தேன் அந்த கடையை. பரபரப்பான கடைவீதியின் கடைக்கோடியில் பத்துக்கு இருபது அளவில் ஒரு அறையில் புத்தகக் கடை . நேஷனல் சில்க்ஸ்க்கு சொந்தமான கடை . இயற்கை வழி விளைவித்த பொருட்களையும் , தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களையும் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவசியமே இல்லைதான் , மூன்று டன் ஏ.சி யை மாட்டிவிட்டு புதுபொலிவுடன் விரிவுபடுத்தப்பட்ட பட்டுப்புடவை செக்ஷன் என்று விளம்பரப்படுத்தி கல்லாவை நிரப்பாலம்தான் ஆனால் செய்யவில்லை. மேற்படி நிறுவன உரிமையாளருக்கு புத்தகம் மீது அளவற்ற பிரியமுண்டென்றும் , அவரது தோட்டத்து வீட்டில் ஒரு குட்டி நூலகமே வைத்திருப்பதாகவும் கடைச் சிப்பந்தி சொல்லிகொண்டிருந்தார்.
மேற்படி கடையை ஒட்டினாற்போலயே நேஷனல் சில்க்ஸ் ஜவுளிக்கடையும் இயங்குகிறது .கடைக்கு செல்வோருக்கு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தாத அளவிலான அலங்காரங்களுடன் , எளிமையான , இயல்பான புன்னைகையுடன் கனிவாக வரவேற்கும் கடை சிப்பந்திகள் வெகுவாக கவர்கிறார்கள் . நியாயமான விலையில் தரமான ஜவுளிகளுக்கு அவசியம் நாடலாம் நேஷனல் சில்க்சை .


கனவு வாரியம் . இண்டர்நேஷனல் அளவில் கவனம் ஈர்த்த படமென்று நாளிதழ்களில் , சமூக ஊடகங்களிலும் பேசப்பட்ட படம் . சமீபத்தில் காணக் கிடைத்தது . ஆராய்ச்சியையும், சுய தொழிலையும் , இயற்கை விவசாயத்தையும் வலுவாக ஆதரித்து பேசும் ஒரு பாடம். டாக்குமென்றித்தனமான படமாக தோன்றினாலும் போரடிக்கவில்லை. பொதுவாக இந்தியர்கள் குறிப்பாக சமகால தமிழர்கள் வேலைக்கு செல்வதையே விரும்புகிறார்கள் . தப்பித்தவறி யாரேனும் சொந்தத் தொழில் செய்யபோகிறேன் என்று சொன்னால் , ஏதோ சூசைட் செய்யப்போகிறவனை போலவே இந்த சமூகம் பார்க்கிறது ; அறிவுரைக்கிறது . இதையெல்லாம் தாண்டி ஆராய்ச்சி செய்யபோகிறேன் என்று சொன்னால் சர்வ நிச்சயமாய் சம்பந்தப்பட்டவரை கொண்டுபோய் மனநல மருத்துவமனையில் அனுமதித்துவிட்டுதான் அமர்வார்கள் நம்மாட்கள் . கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் உங்கள் சுற்றத்தில் , நட்பில் எத்தனை பேர் சொந்தத் தொழில் செய்கிறார்கள் ; எத்தனை பேர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் . முன்னதில் சொற்பமாகவும் பின்னதில் அரிதினினும் அரிதாகவும் இருப்பார்கள்.

கம் டு தி மூவி . டிஜிட்டல் டீ.ஆராய் ஆணழகன் சிதம்பரம் . சுண்ணாம்புச் சுவராய் ஈ... ஈ.. என்று வலம் வருகிறார் போதாக்குறைக்கு குரல் வேறு கும்மியடிக்கிறது  . மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதம் . ஐ டி கம்பெனி டூ விவசாயியாக வரும் பாத்திரம் அவ்வளவு பக்குவம் . படத்தில் வெகுவாக கவர்ந்தது வசனம் . கொஞ்சம் பட்டி , டிங்கரிங் பார்த்து கதையின் நாயகனாய் வேறு யாரையேனும் போட்டிருந்தால் இன்னும் அதிகமானோரை சென்று சேர்ந்திருக்கும் கனவு வாரியம்.


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.

3 comments:

 1. அருமையான பதிவு நண்பரே

  ReplyDelete
 2. நூல் காதலர்கள் ஆச்சர்யம் தருபவர்கள்
  நல்ல பதிவு

  ReplyDelete
 3. @ அஜய் & மது - நன்றி !

  ReplyDelete

Related Posts with Thumbnails