Mar 27, 2018

பேசாத வார்த்தைகள் : 03-2018


மாநகரக் குப்பைகள் போல வந்து குவியும் வாட்சப் பகிர்தல்களில், எப்பொழுதாவது முத்துப்போல உருப்படியான தகவல்கள் சிக்குவதுண்டு, அப்படியொரு முத்துதான் “இட்லி தோசை”- (“ID”) நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவரின் காணொளி. ஜிமிக்கி கம்மலாலும் , புருவ உயர்த்தல்களாலும் மாநிலம் தழுவிய மதிமயக்கத்திற்கு வித்திட்ட மங்கையர்களை வழங்கிய, கடவுளின் தேசமான கேரள நன்னாட்டில் பிறந்த இளைஞர் தான் மேற்படி இட்லி தோசை நிறுவனர் முஸ்தபா. 






ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூலில் அவர் ஆற்றிய உரைதான் கட்செவி அஞ்சலில் பகிரப்பட்டிருந்தது . வழமையான பிசினஸ் வெற்றியாளர்களின் வீர உரை போலில்லாமல் , நாடி. நரம்புகளை புடைக்கவைத்து , கனவுலகில் கணநேர சூர்யவம்சம் சரத்குமாராய் “லாலா லாலா” பாடவைக்காமல் ரெம்ப எதார்த்தமான பேச்சு. மெல்லிய நகைச்சுவை இழையோட, மென்மையான குரலில் , தன்மையான உடல் மொழியோடு வழங்கிய உரை வசீகரம். பதினைந்து நிமிட உரையில் மூன்று முக்கியமான தகவல்களை முன்னிறுத்துகிறார். அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.
யூ டியூப் : https://www.youtube.com/watch?v=01_eOCGNYN8
இணையதளம் : https://www.idfreshfood.com/

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


சமீபத்தில் அலுவல் நிமித்தம் பெருந்துறை சென்றிருந்தபொழுது , மதிய உணவிற்கான உணவக விசாரிப்பில் கண்டடைந்தது சக்தி மெஸ். பெருந்துறை டூ கோவை பிரதான சாலையில் , சுங்கச்சாவடிக்கு அடுத்த நால் ரோட்டின் வலதுபுறம் கார்னரில் அமைந்துள்ளது குடிசை வேயப்பட்ட இந்தக் கடை. அரைமனதுடன் உள்ளே நுழைந்தால், கல்யாண வீடு போல , சாப்பிடுபவர்களின் பின்னால் நின்று கொண்டிருக்கிறார்கள் அசைவப் பிரியர்கள். பதினைந்து நிமிடக் காத்திருப்புக்கு பின் இருக்கையைக் கைப்பற்றி இரைப்பையை நிறைத்துகொண்டோம்.

சாப்பாடு கொஞ்சம் பதமாக இருந்தது , ஆனால் , அசைவச் சாப்பாட்டிற்கு அதுதான் சரியான பதமென்று பக்கத்து இலை பரிந்தார். குடும்ப உறுப்பினர்கள் , பெரும்பாலும் பெண்கள் இணைந்து நடத்துகிறார்கள். நாங்கள் சென்றிருந்த சமயம் கரை வேஷ்டிகள் கூட்டம் குழுமியிருந்தது. பக்கத்தில் கட்சி மாநாடாம். தண்ணீரோடு  கரைபுரண்டோடிய கரை வேஷ்டிகளின் கலாட்டாக்களை வெகு நாசூக்காக , சிரித்துக்கொண்டே சமாளித்த அக்காக்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்.  மட்டன் குழம்பு , மீன் குழம்பு , கோழிக்குழம்பு , எலும்பு ரசம் , தயிர் இதுதான் வரிசை. நிறைவாக பாயசமும் உண்டு. உணவகத்தின் சிறப்பே மசாலாதான். “இனியொரு விதி”யெல்லாம் செய்யாமல் அவர்களே மசாலா அரைத்து சமைக்கிறார்கள். வயிற்றிற்கும், பர்சிற்கும் பங்கமில்லாத கடை.

நல்லா கார சாரமாய் உணவருந்துபவர்களுக்கான அமுத சுரபி சக்தி மெஸ் . அதே நேரம் , காரம்னா காத தூரம் ஓடுபவர்களுக்கு உகந்த இடமல்ல இது. நல்லா ருசியா இருக்கே என்று நாட்டுக்கோழியுடன் ஒரு வெட்டு வெட்டி வெளியே வந்தால். நாக்கை வெட்டிப் போட்டுவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு காரம் கபடி விளையாட ஆரம்பித்துவிட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பால், பழம் தயிர் என்று சமாளித்து நாக்கை நார்மல் மோடுக்கு வரவேண்டியதாகிவிட்டது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


வழக்கம் போல, இந்த ஆண்டும் நியூ இயர் ரிசொல்யூஷன் நீர்த்துப்போயிற்று. தினசரி, வாரம், மாதம் , காலாண்டு என்று அட்டவணை எல்லாம் வக்கணையாகத்தான் போட்டேன். நடைமுறையில் பிம்பிளிக்கி பிளாக்கி ஆகிவிட்டது. “ஒரே ஒரு குருக்கள் வரார்”ன்ற மாதிரி  ஒரே ஒரு பதிவு , ஒரே ஒரு படம் அவ்வளவுதான். காலாண்டு முடிந்துவிட்டது. காலரைப் பிடித்து யாரும் கேட்கப் போவதில்லைதான் , இருந்தாலும் இதுபோல பொதுவெளியில் எழுதி வைக்கும்போது கொஞ்சம் உறுத்தல் வந்து பாதியையேனும் பாலோ செய்துவிடலாமே என்ற நப்பாசைதான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 


கடந்த வாரம், சென்டிமென்டல் பயணமாக பழனி போய் வந்தேன். இது மூன்றாவது வருடம் . நடராஜா சர்வீசில் , பேருந்து நிலையத்திலிருந்து பழனி மலை உச்சியை அடைவதற்கு  இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. இடையிடயே இளைப்பாறல் வேறு. உடம்பு வெகுவேகமாக பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. வழமை போல சேட்டன்களும் , சேச்சிகளும் சாரை சாரையாக படையெடுக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் கோவில்களில் இலவச தரிசன வரிசையில் போவதுதான் எளிதாகவும் , விரைவாகவும் இருக்கிறது . பணத்தைக் கொடுத்து எல்லாவற்றையும் எளிதாக, விரைவாக வாங்கிவிடவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அதிகரித்ததன் விளைவு இது. போலவே , மருத்துவமனைகள் , பள்ளிக்கூடங்களிலும். இது சரியான போக்காக தெரியவில்லை. கடந்த முறை போல அன்னதானத்திற்கு ஆசைப்பட்டு சிறையில் சிக்காமல் , உண்டச் சோறுடன் தப்பித்தாயிற்று . வெறும் கருப்பட்டிக் கூழை தகர டப்பாக்களிலும், பிளாஸ்டிக் டபாக்களிலும் அடைத்து பஞ்சாமிர்தம் என்று விற்பனை செய்யும் தேவஸ்தான கடைகளை முருகர் மன்னிப்பாராக. அதே  நேரம் மலையடிவாரத்தில், சித்தனாதன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் – அமிர்தம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

என்றென்றும் புன்னகையுடன்.,
ஜீவன்சுப்பு

4 comments:

  1. ID காணொளி நானும் பார்த்தேன். நல்ல விஷயம்.

    பஞ்சாமிர்தம் - ம்ம்ம்... என்ன சொல்ல - எதிலும் கலப்படம்!

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  2. காணோளி கண்டோம்...இப்படி ரோட்டில் இட்லி விற்றுக் கொண்டிருந்த ஆயா ஒருவரின் மகன் அஹமதாபாத்தில் படித்து கடை ஒன்றை தொடங்கி செயினாக நிறைய ஹோட்டல்கள் வைக்க வேண்டும் என்று சொல்லி பல இதழ் ஒன்றில் இடம் பெற்ற நினைவு. நடந்து கிட்டத்தட்ட 7, 8 வருடங்கள் ஆகியிருக்கும்...

    இந்தக் காணொளியும் பார்த்தேன்...அப்போது அவர் நினைவுக்கு வந்தார். மிக மிக நல்ல விஷயம்தான்...

    பஞ்சாமிர்தம் நன்றாக இருப்பதில்லை. சமீபத்தில் கூட பிரசாதம் என்ற பெயரில் வந்தது...சரி விடுங்க...நீங்க சொல்லியிருக்காப்ல முருகன் மன்னிக்கட்டும்!

    கீதா

    ReplyDelete
  3. அனைத்தும் படிக்க மிக சுவாராஸ்யமாக இருந்தன

    ReplyDelete
  4. முஸ்தபா அவர்களின் சிரித்த முகத்துடன் உரை மிகவும் அருமை...

    ReplyDelete

Related Posts with Thumbnails