Mar 14, 2017

பேசாத வார்த்தைகள் - 13.03.17 : திருப்பூர் செட்டியார் கடை.



சினிமாக் காதலர்கள் எல்லோருமே, உணவுக் காதலர்களாகவும் இருப்பதில்லை. ஆனால் , பெரும்பான்மையான உணவுக் காதலர்கள் சினிமாக் காதலர்களாகவும் இருக்கிறார்கள்.  எல்லோருடைய நட்பு வட்டத்திலும் குறைந்தபட்சம் யாரேனும் ஒருவராவது சினிமா கம் உணவுக் காதலராக இருப்பார். எமது அலுவலகத்திலும் அப்படியொருவர் உண்டு. வயதிலும், பதவியிலும் மூத்தவர் என்றபோதிலும் தன்மையாக பழகக்கூடியவர். வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு படம் இரண்டு, மூன்று ஹோட்டல் சிட்டிங் தவறாமல் இடம்பெறும் அவரது செட்யூலில்.

பலமுறை அழைத்தபோதும் , போகலாம் என்று திட்டமிட்ட போதும் மேற்படி காதலருடனான சிட்டிங் தள்ளிப்போய்கொண்டே இருந்தது . சென்ற மாதத்தில் ஒரு நாள் இரவு , திடீர் முடிவாக, அலுவலகம் முடிந்தவுடன் இன்னபிற இரு அலுவலக நண்பர்களுடன் செட்டியார் கடைக்கு படையெடுத்தோம் .

திருப்பூரில் , டவுன்ஹால் அருகில் , சிவா டெக்ஸ்டைல் எதிர்புறம் உள்ள வீதியில் நுழைந்து , வலது புறம் உள்ள சந்தின் கடைக்கோடியில் உள்ள கடைதான் தி பேமஸ் செட்டியார் கடை . அசைவத்திற்கு பெயர் பெற்ற கடை . கிட்டதட்ட ஒரு சாலையோர முனியாண்டி விலாஸ் போன்ற தோற்றம் . செட்டியார் கடைக்கு ஆடி காரில் வந்தெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்று தோசைக்கல்லில் அடித்து சத்தியம் செய்தால் கூட நம்பமுடியாது. ஆனால் , அதுதான் உண்மை . சமயங்களில் உட்காருவதற்கு கூட இடம் கிடைக்காது.

கடைக்கு எதிர்புறம் மரத்தடியிலும் நாலைந்து டேபிள் சேர் போட்டிருக்கிறார்கள் . ஓபன் ரூஃப் பிரியர்கள் சிலர் பியர்களுடன் சமீபித்திருந்தார்கள் . தவிர்த்து, வெகு அருகிலேயே கூரையுடன் கூடிய உணவருந்தும் கூடமும் உண்டு . வண்டியை பார்க் செய்துவிட்டு மேற்படி கூடத்தில் தஞ்சமடைந்தோம். குதூகலத்துடன் ஒரு வாலிப பட்டாளமும் , ஒன்றிரண்டு குடும்பமும் ஏற்கனவே செட்டியார் கடையை காலி செய்யும் நோக்குடன் , கோழிகளையும் முட்டைகளையும் சுவீகரித்துக்கொண்டிருந்தார்கள். பொதுவாக நான் உணவு விசயத்தில் எந்த பரீட்சார்த்த முயற்சியிலும் ஈடுபடுவதில்லை . வசந்த பவனோ , கையேந்தி பவனோ இல்லை தலைப்பாகட்டியோ , மெனு கார்டை அட்டை டூ அட்டை மேய்ந்துவிட்டு , நாலு இட்லி ஒரு வீட்டு தோசையோடு முடித்துக்கொள்வேன் . பட் , இந்த முறை அதற்கான வாய்ப்பே இல்லை . இதுவரை வாயில் நுழைந்திடாத , காதால் கேட்டிராத சில பல அயிட்டங்களை காதலர் ஆர்டர் செய்துகொண்டிருந்தார் .

நாங்கள் சென்றிருந்த அன்று பிரதோஷம் . என்னுடன் வந்த பிறிதொரு நண்பருடன் சேர்த்து நானும் பிரதோஷத்தன்று அசைவம் சாப்பிடுவதில்லை. எல்லோருக்கும் தலா ரெண்டு நெய் புரோட்டாவும் , சைடிஷாக ஒரு சில மாசலா கிரேவிகளையும் ஆர்டர் செய்தார். புரோட்டாவுக்கு தொட்டுக்கொள்ள, காசு கொடுத்து கிரேவி வாங்கவேண்டுமேன்பதை என்னால் ஜீரணித்துகொள்ளவே முடியவில்லை . நெய் புரோட்டாவை சாப்பிடுவதற்க்கெல்லாம் முப்பத்தியிரண்டு பற்களும் முழு பலத்துடன் இருக்கவேண்டும் . அடித்து நொறுக்கி புரோட்டவை மென்று முழுங்குவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது.

அடுத்தடுத்து ஆர்டர் செய்த அசைவ அயிட்டங்கள் ஒவ்வொன்றாக டேபிளில் படைக்கப்பட்டன . காதலர் எங்களுக்கு “பெப்பர் எக்” கை சிபாரிசு செய்தார் . பட் ,  பிரதோஷத்தன்று நாங்கள் டீ டோட்டலராக்கும் என்று சொல்லி மறுத்து விட்டோம் . முத்தமிடத்தூண்டும் இதழ்களைப் போல , அவர்களுக்கு படைக்கப்பட பெப்பர் எக் எங்களை கட்டி இழுத்தது  , அதன் வாசனை நாசி கடந்து , நரம்புகளையெல்லாம் தூண்டியது .  வெகு பிரயாசைப்பட்டும் அடக்கமுடியவில்லை. சக பிரோதஷ பார்ட்டியை பார்த்தேன் , அவர் கண்கள் , முட்டையை சைவத்தில் சேர்த்துக்கொள்ளலாமே என்று இரைஞ்சுவதாக பட்டது . இரண்டு சுற்று பார்வை பரிமாற்றத்திற்கு பின் ஏகமனதாக முட்டையை சைவத்தில் சேர்த்து இதழ்களில் வாய் பதித்தோம் .

அழகாக நறுக்கிய, நாட்டுகோழி முட்டையின் வெண் சுளையில் கொஞ்சம் அதிகப்படியாக மிளகுப்பொடி போட்டு , பொன் நிறத்தில் எண்ணெயில் வறுத்த அந்த முட்டையின் சுவை கட்டையில் போகின்ற வரை மறவாது . நாங்கள் அத்தோடு நிறுத்திக்கொள்ள  , மற்ற இருவரும் இன்னும் சில உயிரினங்களை கொன்று தின்று கொண்டிருந்தார்கள் . கடைசியாக இரண்டு பிளேட் தயிர் சாதம் கோரினார் காதலர் . இதென்னங்க காம்பினேஷன் என்று ஜெர்க் ஆனதற்கு, அதீத காரத்தை ஆற்றுப்படுத்த என்று பதிலுரைத்தார். எங்களுக்கு வேண்டாமென்று சொல்லி வெளியேறிய பத்தாவது நிமிடத்தில் வயிற்றிலுருந்து தொண்டை வரைக்கும் கப கப வென்று ஆசிட் . பெப்பர் தன் வேலையை காட்டு காட்டென்று காட்ட ஆரம்பித்துவிட்டது . மறுபடியும் போய் தயிர் சாதம் கேட்பது உசிதமில்லை என்று உஷ் கொட்டியவாறே பழரசக் கடையை தேடிக்கண்டுபிடித்து அடைக்கலமானேன் .

ஜிஞ்சர் வித் லெமன் சோடா ஆர்டர் செய்தோம் , நறுக்கிய இஞ்சி , அரை சிட்டிகை உப்பு , அளவான சர்க்கரை கொஞ்சமாக எலுமிச்சை என்று பெர்பெக்ட் கலவையில் மெல்லிய ஜில்லிப்புடன் கூடிய பானத்தை அருந்திய பின்தான் அமிலம் கொஞ்சம் மட்டுப்பட்டது.

நீங்கள் அசைவ விரும்பியா , உங்களுக்கு காரமெல்லாம்  கடலை மிட்டாய் சாப்பிடுவது போன்றா ..? அப்படியென்றால் உங்களுக்கான சரியான தேர்வாக செட்டியார் கடை இருக்கும் . காரம் ஆகாதுன்னு சொல்றவங்க கடை பக்கத்துல கூட போயிடாம  தூரமா ஓடி போயிடுங்க ...! அதான் நல்லது உடம்புக்கும் & பர்சுக்கும்.

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு

12 comments:

  1. சிவா டெக்ஸ்டைல் எத்தனை முறை சென்றுள்ளேன்... இந்த உயிரினங்களை கொன்று தின்னும் உயிரினங்களை பார்க்க முடியவில்லையே... ஐயகோ என் செய்வேன்...! எண்டே ஜீவா...!

    ReplyDelete

  2. நீங்க சொல்லறப்படி சாப்பிட்டால் தமிழகத்தில் சுகர் பேஷண்ட் ஏன் அதிகமாக மாட்டார்கள்........

    ReplyDelete
  3. அருமையான பதிவு சுப்பு... என்ன விட்டுவிட்டு போயிட்டீங்களே...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை நீங்கள் ட்ரீட் வைக்கும்போது ஒண்ணாத்தானே போகப்போறோம் சார் :)

      Delete
  4. Beautiful narration like a seasoned writer.

    ReplyDelete
  5. Dear Admin,
    Greetings!
    We recently have enhanced our website, "Nam Kural". We request you to share the URL links of your valuable articles on our website to reach wider Tamil audience...

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல,
    நம் குரல்
    Note: To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    ReplyDelete

Related Posts with Thumbnails