Oct 5, 2018

பேசாத வார்த்தைகள் : 07092018

பேசாத வார்த்தைகள் : 07092018


ஆந்திராவில் மையம் கொண்டு , தமிழகத்தில் கரை ஒதுங்கிக்கொண்டிருக்கும் “இம்கேம் இம்கேம்” புயலை இரண்டு நாட்களாக பார்த்தும் , கேட்டும் கொண்டிருக்கிறேன் . “கீத கோவிந்தம்” என்ற தெலுங்கு படத்திற்காக கோபி சுந்தர் இசைத்திருக்கும் பாடல் இது . ஐம்பது மில்லியனை கடந்து நூறை  துரத்திக்கொண்டிருக்கிறது யூ டியூப் ஹிட்ஸ் . தமிழ் வெர்ஷன் வேறு வந்திருக்கிறது. சமயங்களில் ஓரளவு சூப்பர் , சூப்பர் டூப்பர் ஹிட் ஆவதும், சூப்பர் டூப்பராக வரவேண்டியது அட்டர் பிளாப் ஆவதும் சகஜம். நம்மூரில் கூட கொலவெறியோடு ரெம்ப பேரு திரிந்தார்கள். சரி போகட்டும் ...! பாடலின் ஒரு பகுதியை சுட்டிக்காட்டி இந்த இசை முப்பத்தாறு வருசத்துக்கு முன்பாக இளையராஜா கோழி கூவுது படத்திற்காக போட்டது என்றும் ( பூவே இளைய பூவே ) அதிலிருந்து சுந்தர் சுட்டிருக்கார் என்றும் ஒரு யூ டியூப் வீடியோ சொல்கிறது. ஏழுமலையானுக்கே வெளிச்சம். பாடலின் ஆரம்ப சில வினாடிகள் எனக்கு “கொஞ்ச நாள் பொறு தலைவா” பாடலை நினைவுபடுத்தியது. 

பாடலுக்கு சுவராஸ்யம் சேர்ப்பது , கோரஸ் பாடும் ஜதி , அதற்கு இணையாக அவயங்களை அழகாக அசைக்கும் அந்த பரத நாட்டிய மங்கைகள். எல்லாவற்றிக்கும் மேலாக சித்ஸ்ரீராம் . லவ் யூ மேன். பாடலை கேட்கும்போதெல்லாம் சித் ஸ்ரீராம் கண் முன்னே வந்து போகிறார் . தமிழ் சினிமாவைப்போல் ஒரேயடியாக உச்சஸ்தாயியில் கதற விடவோ இல்லை ஹஸ்கி வாய்சில் கலங்க விடவோ செய்யாமல் , இயல்பான துள்ளலுடன்  பாடவிட்டிருக்கிறார் சுந்தர். கூடவே நிறைய வாய்ஸ் வேரியேஷனுக்கு இடம் கொடுத்திருக்கிறார். சித்தின் கெரியரில் கெத்தான பாடல் இது . கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவை  கண்டு பெண்கள் பித்தாக அலைவதாகச் சொல்கிறார்கள். போலவே மேற்படி பாடலில் வரும் ஹீரோயினுக்கு பாசறை எல்லாம் ஏற்பாடாகியிருப்பதாக அறிகிறேன். துயரம். ஒரு காட்சியில் கீரோயின் சிரிக்கிறார் , உவ்வே...ஹேன்ட் பேக்கை அன்ஷிப் பண்ணுவது போல உள்ளது . பிறிதொரு காட்சியில் ஹீரோவைபோல இமிடேட் செய்து நம்மை இரிடேட் செய்கிறார். இதெற்கெல்லாம் பரிகாரமாக சிலவினாடிகள் வரும் ஒரு கருப்பு வெள்ளை காவியத்தை பாடலில் இணைத்திருக்கிறார் இயக்குனர். அபாய வளைவுகளுடன் , அதைவிட அபாயகரமான போஸில் ஹீரோயின் தலை துவட்டும் காட்சியில் இருந்து அதற்கடுத்து வரும் காட்சிகள் பாடலுக்கு வேறொரு mood கொடுக்கிறது. இயக்குனர் “ஹாட்,ஹாட்டர்,ஹாட்டஸ்ட்” நிகழ்ச்சியின் விசிறியாக இருப்பார் என்று சந்தேகிக்கிறேன்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக, தாம் கொண்ட கொள்கையில் அரசு உறுதியாக இருக்குமா இல்லை வழக்கம்போல இம்முறையும் பாலீதின் பைகளைப் போலவே  காற்றில் பறக்க விட்டுவிடுமா என்று தெரியவில்லை. அம்பானி அன்கோ ஆட்டைய கலைக்காமலிருந்தால் சரி. திருப்பூரில் பாலிதீன் பைகள் உபயோகப்படுத்துவது ஓரளவிற்கு மட்டுப்பட்டுள்ளது.  மாநகராட்சி கட்டுப்பாட்டை மீறி பாலீதீன் உபயோகிக்கும் கடைக்காரர்களுக்கு பத்தாயிரம் வரை உடனடி அபராதமாக விதிக்கிறார்களாம். பாத்திரம் எடுத்துட்டு வாங்க தம்பி என்று கறிக்கடை பாயும், கட்டப்பை எடுத்துட்டு வாங்க சார் என்று காய்கறிக்கடை அண்ணாச்சியும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பாலிதீன் பைகளை உபயோகப்படுத்தும் பொதுமக்களிடமும் குற்றவுணர்ச்சியை காண முடிகிறது. ஆனாலும் முற்றாக தவிர்த்ததுபோல தெரியவில்லை . ஆணையை அரசு கடுமையாக அமல்படுத்தட்டும் பார்க்கலாம் என்றும் , அவர்கள் கொடுப்பதை நிறுத்தட்டும் ; நாங்கள் வாங்குவதை நிறுத்துகிறோம் என்ற அலட்சியமுமே மேலிடுகிறது . கடந்த பதினைந்து வருடங்களாகத்தான் பாலிதீன் உபயோகம் இப்படி அதிகரித்திருக்கிறது. ஒரு தலைமுறைக்குள்ளாகவே இப்படி அசுரத்தனமாக வளர்ந்து நிற்கும் பாலீதீனை இனியும் தொடர்வது நமக்கும் நல்லதல்ல நம் சந்ததியினருக்கும் உகந்தது அல்ல. கடந்த இரண்டு வாரங்களாக இறைச்சி வாங்குவதற்கு பாத்திரமும், காய்கறி வாங்க கட்டப்பையையும் தூக்க ஆரம்பித்து விட்டேன் .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டாட்டா நிறுவனம் இண்டிகா கார் உற்பத்தியை நிறுத்திவிட்டார்களாம். மிகச்சரியாக இருபது வருடங்களுக்கு “T போர்டு மார்க்கெட்டில் கொடி கட்டி பறந்த வாகனம் இண்டிகா. வாடகைக்கார் என்றால் அம்பாசடர் காருக்கு அடுத்ததாக அனைவராலும் அறியப்பட்டது . பொதுவாக டாடா வாகனங்கள் டீ போர்டுக்கென்றது என்றே இன்றளவும் நினைவுகூறப்படுகின்றது. எப்படி பதிந்தது இந்த எண்ணம் என்று தெரியவில்லை. இண்டிகா காரை தனி நபர் உபயோகத்திற்காக வைத்திருந்த ஒருவரைக்கூட என் சுற்றத்தில் காண முடியவில்லை. ஏன் இப்படி ...!? பராமரிப்பு செலவு , மைலேஜ் காரணம் என்றால் ஏன் மாருதி ஆல்டோவை ,மாருதி 800ஐ டீ போர்டில் காணமுடியவில்லை...!?சமீப காலமாக டாடா குழுமத்திலிருந்து அடுத்தடுத்து ஹேட்ச் பேக் கார்கள் வந்துகொண்டிருக்கின்றன. பார்க்கலாம் மக்கள் டாட்டா சொல்கிறார்களா இல்லை வெல்கம் சொல்கிறார்களா என்று .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@.

புதிய அலுவலகத்தில் மலையாள நண்பர் ஒருவர் அமைந்திருக்கிறார். அவசரப்பட்டு குமையவேண்டாம் , அவர் ஆண் நண்பர். அகன்ற மார்பும், அடர்ந்த தாடியும், ஆறடி உயரமும் உள்ள ஆஜானுபாகுவான ஆண் சிங்கம். தோற்றம் கரடுமுரடாக இருப்பினும் , இளகிய மனம் கொண்டவர். கடந்த மாத நேர்பேச்சில் சினிமாக்களை பற்றி சம்சாரித்தபோது. கைவசம் ஏதேனும் மலையாள சினிமாக்கள் இருந்தால் பகிரவும் என்ற வேண்டுகோளுக்கிணங்கி ஏழெட்டு படங்களை உடனடியாக ஷேரிட்டிருந்தார். அதிலிருந்து சப் டைட்டில் உள்ள படமாக பார்த்து , பார்த்துக்கொண்டிருக்கிறேன். முதல் படமாக “ஆதி” பார்த்தேன். மோகன்லாலின் தவப்புதல்வர் நடித்திருக்கிறார். திரிஷ்யம் பட இயக்குனரின் படைப்பு . ஆரம்ப காட்சிகளில் ஜூனியர் லாலின்  குரலும், உடல்மொழியும் திசைக்கொன்றாக கும்மியடிக்கிறது . பெங்களூருக்குள் நுழைந்தவுடன் படம் வேகமெடுக்க ஆரம்பிக்கிறது . கபடி விளையாடிக்கொண்டிருக்கும் விஜய் கட்டிடம் கட்டிடமாக தாண்டியதையே ஆவென்று வாயைப்பிளந்து பார்த்த நமக்கு , தாண்டோட்டம் என்ற தாவுதலையே விளையாட்டாக பயின்றிருக்கும் ஹீரோ பெங்களூருவை தாண்டுவதை யார் நீங்க , எப்படி தாண்டுறீங்க என்ற கேள்விகளுக்கு இடம்கொடுக்காமல் , எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிறது .  கிளைமேக்ஸ் தமிழ்சினிமா போல இருந்தாலும் , படம் பார்க்கலாம் ரகம் . சம்பவம் எங்கே , எப்பொழுது , எப்படி நடந்தது என்று முன் கூட்டியே தெரிந்திருந்தாலும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட இருவருக்கும் கட்டுடல்.  சமகால மலையாள சினிமாவை ஒப்பிடும்போது இது சுமார் தான், ஆனாலும் நம்மூரில்  கலை வாரிசுகள் அறிமுகமான முதல் படத்தோடு ஒப்புநோக்கும்போது இப்படம் ஃபார் பெட்டர் .

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.

1 comment:

Related Posts with Thumbnails