வேலை நிமித்தம் வெளி மாநிலங்களில்
தங்கியிருக்கும் தமிழர்களிடம் பேசியிருக்கிறீர்களா...!?? அவர்கள் சொல்லும் பொதுவான
ஒன்று...எவ்வளவு வசதி, வாய்ப்பு இருந்தாலும் நம்மூரு போல
வராது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்கள் , இன்னும் ஒரு படி மேலே போய் , தமிழ்நாடு ஒரு சொர்க்கம் என்பார்கள்.
என்னாது சொர்க்கமா என்று கேட்கும் நமக்கு நகைப்பாக இருக்கும். ஆனால், ஒரு நாலு நாள் வடகிழக்கு மாநிலங்களில்
போய் தங்கி இருந்து வந்தால் சூடம் ஏற்றி சத்தியம் செய்வோம், தமிழ்நாடு சொர்க்கம் தான் என்று.
ஏன்...!!? நிறைய இருக்கின்றது. மருத்துவம் , கல்வி, வேலைவாய்ப்பு,
உணவு, சகிப்புத்தன்மை, பாதுகாப்பு
, சீரான தட்பவெப்பநிலை இப்படி
அடுக்கிக்கொண்டே போகலாம். அலுவலக வேலை நிமித்தம் கடந்த ஜூன் மாதம் , ஒரு வார பயணமாக பஞ்சாப் சென்று
வந்தேன். காலை 5 மணி முதல் இரவு எட்டு மணி வரை வெயில் வீசும் நீண்ட பகல்.
வெயில்ன்னா 47 டிகிரி. கிட்டத்தட்ட எண்ணெய்ச் சட்டிக்குள் இருப்பது போல். என்னங்க
இவ்ளோ வெயிலாக இருக்கிறது என்றால், நீங்கள்
வெயில் காலத்தில் வந்திருந்தால் என்ன சொல்லுவீர்கள் என்று கேட்டு சிரிக்கிறார்
பஞ்சாபி. ஆம்..!! ஐம்பது டிகிரியை தாண்டும் வெயிலும் , மைனஸில் அடிக்கும் குளிரும் அங்கு
சர்வசாதாரணம். ஏப்ரல் மேயில் போனால் கருகிப்போய்விடுவோம். நவம்பர், டிசம்பரில் போனால் உறைந்துபோய்
விடுவோம்.
சீரான தட்பவெப்பநிலை தமிநாட்டின் தனிச்சிறப்புகளில்
ஒன்று. அதீத வெயிலோ, மழையோ, குளிரோ எதுவுமில்லை. எல்லாமே safe zoneக்குள்ளாகவே இருக்கும். முப்பது வருடங்களுக்கு முன்பு மீனவர்களுக்கு
கூட வானிலை அறிக்கை அவசியமானதாக இருந்ததில்லை. 2000க்கு பிறகு வானிலை அறிக்கை
பார்த்து கடலுக்கு போவது அத்தியாவசியமானது. அடுத்தடுத்த வருடங்களில் கடலோர
மாவட்டங்கள், ஆற்றுக் கரையோர மாவட்டங்கள் எல்லாம்
மழைக்காலங்களில் வானிலை அறிக்கை பார்க்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. இப்பொழுது
தண்ணியில்லா காட்டில் இருப்பவர்கள் கூட வானிலை அறிக்கை பார்க்கவேண்டிய அவல நிலையில்
இருக்கிறோம். மழைக்காலங்களில் இப்படியென்றால் கோடைகாலத்தில் ஏழு எட்டு வருடங்களாக
வெயிலும் காட்டு காட்டென்று காட்டிக்கொண்டிருக்கிறது. பெரியவர்கள், குழந்தைகள் எல்லாம் வெயில் தாங்காமல்
சுருண்டு, துவண்டுவிடுகிறார்கள். சென்னை, வேலூர் போன்ற ஊர்களில் ஏ.சி இல்லாமல்
இருக்கவே முடியாது என்கிற நிலை.
இந்த climate disasterல் புது வரவு குளிர். இரண்டு வருடங்களாக
வதைத்துக்கொண்டு இருக்கிறது கடுங்குளிர். எம்மைபோன்ற வெப்ப ரத்தப்பிராணிகளுக்கு
இது கொடுங்குளிர். தனிப்பட்ட முறையில் சாப்பாடு, தூக்கம் இதெற்கெல்லாம் தரைதான் சவுகர்யம் எனக்கு. இந்த கட்டில், மெத்தை, டைனிங் டேபிள் இதல்லாம் அசவுகர்யம். வெயில் காலத்தில் மெல்லிய
பெட்சீட், மழைக்காலத்தில் கூடவே ஒரு பாய் இதுதான்
பள்ளியறை கவசங்கள். போனவருட குளிருக்கு கம்பளி தேவைப்பட்டது. இந்த வருடம்
தினம்தினம், தினுசு தினுஷாக
முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். அறை ஜன்னலுக்கு ஒரு கம்பளி, தரையில் ஐந்தெடுக்கு விரிப்பு. முதலில்
நியூஸ் பேப்பர், அடுத்து காரட்டன் பாக்ஸ்
அதைத்தொடர்ந்து பாய், கம்பளி, பெட்சீட் . இதற்கும் மேல் ஸ்வெட்டர் போட்ட ஞான் , எனக்கும் மேலாக தடித்த போர்வை.
இப்படியிருந்தும் நான்கு மணிக்கு நடுங்க ஆரம்பிக்கிறது உடல். நமக்குத்தான்
வயசாயிடுச்சோ என்று நினைத்து , சமவயது
சகாக்கள் சிலரிடம் விசாரித்தேன் , எல்லோருக்குமே
இது கடுங்குளிராகத்தானிருக்கிறது. மார்கழிதான் முடிஞ்சுருச்சே இனியும் ஏன்யா குளிராண்டவர் ஓவர் டைம்
பார்க்குறார்ன்னுக்கேட்டா தைல தல நடுங்கும் ; தரையும் குளிரும் , மாசில
மரம் நடுங்கும் , மச்சும் குளிருங்குறாங்க . எனக்கு கொலநடுங்குது...!!!
குளோபல் வார்மிங்க் தான் காரணமா...!!? இல்லை வேறதுவுமா என்று தெரியவில்லை.
ஆனால், தமிழ்நாட்டு தட்பவெப்பநிலை இப்படி
சீர்குலைந்து சின்னாபின்னமாகி போய்க்கொண்டிருப்பது உள்ளபடியே அதிக வருத்தம்
தருவதாக உள்ளது. அனேகமாக அடுத்தது மணற் காற்றாகத்தானிருக்கும். கெட் ரெடி மக்காஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
"வாங்க ஏழைகளே" என்ற நெல்சன்
சேவியரின் இரண்டு வார்த்தை ஸ்டேட்டஸ் ஒன்றுக்கு வண்டை வண்டையாக வசை
பாடியிருந்தார்கள் நூற்றுக்கணக்கானோர். அதையொட்டிய இன்னும் சில நண்பர்களின்
போஸ்டும் காணக்கிடைத்தது. ஆனால் தெளிவாக விஷயம் என்னவென்று விளங்கவில்லை.
பத்திரிக்கை வாசித்து அறிந்துகொண்டேன்.
உயர்சாதி ஏழைகளுக்கென்று பத்து சதவீத
இட ஒதுக்கீட்டிற்கான மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது. அதையொட்டிய
கருத்து பகிர்வுதான் துர் நாற்றம் வரக்கூடிய அளவிற்க்கு
முற்றியிருந்தது.வெற்றிகரமான தோல்வி மாதிரி , உயர்சாதி
ஏழைகள்ன்ற பதமே நகை முரணாக தோன்றும். ஆனால் அப்படி ஒரு கூட்டம் இருந்தது, இருக்கிறது. இருக்கும். நான்கூட அந்த
கூட்டத்தை சேர்ந்தவன்தான். உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை நான் வரவேற்கிறேன்.
ஆனால் அதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகுதிபட்டியலை எதிர்க்கிறேன் . இவர்கள்
சொல்லியிருக்கிற தகுதிகளை வைத்துப்பார்த்தால் இந்த ஜென்மம் முழுக்க நான் உயர்சாதி
ஏழையாகத்தான் இருப்பேன் போல. இது ஏதோ ஓட்டரசியலுக்காக கொண்டுவரப்பட்ட மசோதாதான்
என்று எண்ணத்தோன்றுகிறது
ஏன் வரவேற்கிறேன்.!?
பிறப்பால் உயர்சாதி. வாழ்ந்து கெட்ட
குடும்பத்தின் வாரிசு. பிறந்ததில் இருந்து 22 வயது வரை வற்றாத வறுமை . ரேஷனில்
அரிசி வாங்கி , கருவேலங் குச்சி பொறக்கி கரியடுப்பில்
சமைத்து மதியத்திற்கு வேண்டுமென்று காலையில் அரைவயிரும், இரவிற்கு வேண்டுமென்று மதியம்
அரைவயிரும், இரவில் அரைவயிருமாக , அரைவயிற்றுக் கஞ்சி குடித்து
ஆளாக்கினார் அம்மா. பத்தாம் வகுப்பு முடித்தவுடன் , டிப்ளமோ படித்தால் சீக்கிரம் வேலைக்குபோய் முழு வயித்துக்கும்
சாப்பிடலாம் என்றே பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்.
பத்தாம் வகுப்பில் 416 மதிப்பெண்கள்.
அந்த வருடம் பார்த்து டிப்ளமோவிற்கும் கவுன்சிலிங் ஆரம்பித்தார்கள். அடகு வைத்த
அம்மாவின் அரைபவுன் தோடு மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு, மாமாவின் துணையோடு அண்ணா பல்கலைக்கழகம்
போய்சேர்ந்தேன். காரைக்குடி அழகப்பாவில் சீட்டு கிடைத்தால் , தெரிந்த ஊர் , 50, 100
என்று சல்லிசான வாடகையில் வீடு பிடித்து அம்மாவும் உடன் வந்துவிடலாம். மாதா மாதம்
விடுதிகட்டணம் கட்டவேண்டிய சுமை இல்லை என்று எண்ணி போயிருந்தோம். 84 சதவீத
மதிப்பெண்கள் எடுத்தும் அழகப்பாவில் சீட் கிடைக்கவில்லை. காரணம் OC. அன்றைய தேதியில் எங்கள் குடும்ப ஆண்டு
வருமானம் ஏழு, எட்டு ஆயிரம். அதுவும் நிரந்தரமில்லை.
அறந்தாங்கி பாலிடெக்னிக்கில் இலவச இடம் கிடைத்தது. ஆனால் பிரச்சனை விடுதிகட்டணம்.
மாதா மாதம் ரூபாய் 650 கட்டியாக வேண்டும்.
செய்வதறியாமல் திகைத்து நின்றேன்.
எங்களது பொருளாதார நிலையறிந்த அலுவலகர் , நீங்க
500 , 1000 செலவு பண்ணியிருந்தா BC ன்னு மாத்தியிருக்கலாமே என்றார் .
எனக்கு அம்மாமேல் கோபமாக வந்தது. அம்மாவுக்கு அப்பாமேல் கோவம் வந்தது. கடைசியில்
மூன்று வருடத்திற்கும், மாதா மாதம் சரியான தேதியில்
விடுத்திகட்டணம் கட்டாததற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், விடுதியை விட்டு நீக்கப்படும் என்று
எச்சரிக்கை கடிதம்தான் வந்தது.
தெரிந்தவர், தெரியாதவர், என்று பலரின் உதவியோடும் , அம்மாவின் கல்யாணத்திற்கு சீர்வரிசையாக
கொடுத்த அண்டா, குண்டான், தாலி ,தோடு என்று அடகு வைத்தது மூலமும் படித்து முடித்தேன். பத்துபைசா
ஸ்காலர்ஷிப் இல்லை. கேட்ட கல்லூரியில் கேட்ட இடம் கிடைக்கவில்லை. படிப்பின் மீதே
வெறுப்பு. உயர் சாதியில் ஏழையாய் பிறப்பதெல்லாம் பெருந்துயரம். உறவோடும் ஒட்ட
முடியாது. ஊரோடும் ஒன்ற முடியாது.
விடுதிக்கட்டணத்திற்காகவும், தேர்வு கட்டணத்திற்காகவும் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் கடனை அடைப்பதற்கு
மூன்று வருடங்கள் முழுமையாக தேவைப்பட்டது எனக்கு. வேலைக்கு சேர்ந்து ஐந்து
வருடங்கள் கழித்து , இருபத்தி ஐந்தாவது வயதில் தான் எங்கள்
400 சதுர அடி ஓட்டு வீட்டிற்கு மின்சார இணைப்பே கொடுக்க முடிந்தது. இப்பொழுது
மெல்ல எழுந்தாயிற்று. ஏதோ 2 சென்ட் இடமும், நாலைந்து
பவுன் நகையும் கூடவே ஒற்றைப்பிள்ளையாய் பிறந்ததாலும் இந்த அளவிற்கு படித்து மேலே
வர முடிந்தது. இதுவும் இல்லாத உயர்சாதி ஏழைகள் நிலைமை ரெம்ப மோசம்.
ஏன் எதிர்க்கிறேன்...!!?
இன்றைய தேதியில் ஜாதிச்சான்றிதழையே
எளிதாக corrupt செய்து கரெக்ட் செய்ய முடிகிறது. வருமான வரி சான்றிதழ் எல்லாம் ஒரு
விஷயமே இல்லை. இரண்டாவது, 8 லட்ச ரூபாய் ஆண்டு வருமானம், ஐந்து
ஏக்கர் நிலமெல்லாம் இருந்தால் அரசாங்கத்திடமிருந்து குண்டுமணி அளவிற்கு கூட மானியமோ, சலுகையோ தேவையில்லை. அரசு
கூறியிருக்கும் இரண்டு தகுதியும் எனக்கு இருக்கிறது ஆனாலும் இட ஒதுக்கீடு இல்லாமலே
என்னால் என் குடும்பத்தை என் குழந்தையை சிறப்பாக படிக்க வைக்க வாழ வைக்க இயலும்.
எல்லாருமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு 8 லட்ச ரூபாய் வருமானமுள்ள
ஒருவர் சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி சலுகையை அனுபவிப்பார்கள்.
என்பாதாயிரம் ரூபாய் கூட வருமானம் இல்லாதவர்கள் இல்லாமலே போவார்கள். இதற்கு
அதிகபட்ச வாய்ப்பிருக்கிறது.
இரண்டரை லட்சம் ஆண்டு வருமானம்
இருந்தாலே வருமான வரி வரம்பிற்குள் வரும் ஒருவர் எப்படி உயர்சாதி ஏழை
வரம்பிற்குள்!!?? ஒரு லட்சத்திற்கும் குறைவான வருமானம், ஒரு சென்ட் இடத்திற்கும் குறைவான நிலம்
அல்லது , வீடு வைத்திருப்பவர்கள் மட்டுமே
தகுதியானவர்கள் என்று அறிவித்தால் 50 சதவிகிதமாவது உபயோகமாக இருக்கும். ஆனால்
அதிலும் தில்லு முல்லு செய்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இட ஒதுக்கீடுதான்
வேண்டுமென்று இல்லை, பொருளாதார உதவி என்ற வகையிலாவது
அவசியம் உதவவேண்டும். ஏனெனில் உயர்சாதியில் ஏழையாய் பிறப்பது அந்த குழந்தையின்
தவறல்லவே.
என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.
மிகச் சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி
Deleteவாய்யா வா... முகநூலில் என்ன சுத்தினாலும் இங்கே தான் வரணும்...
ReplyDeleteWelcome bro...(!)
Haa haa..!! Thnks DD
Deleteநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி.
ReplyDeleteநம் ஊர் குளிர் - தலை நகரில் இன்னும் அதிகம் தான்.
இட ஒதுக்கீடு- இங்கே எல்லாம் அரசியல்.
நன்றி பிரதர்
DeleteWell Said! I agree
ReplyDeleteகருத்தை ஆதரிக்கிறேன். 4, 5 லட்சத்திற்குள் வருமான வரம்பைக் கொண்டிருக்க வேண்டும். உண்மையான உயர் சாதிஏழைகள் பயன் பெற முடியும். 8 லட்சம் வருமான வரம்புடன் 3 லட்சம் வருமானம் உள்ளவர்கள் போட்டி போடுவது மிக கடினம். அந்த பிரிவினர் தொடர்ந்து நீடிக்கவே செய்வர். 8 லட்சம் அதிகமெனப்தில் ஐயம் ஏதுமில்லை. ஆனால் இதனை அதிகம் என்று சொல்பவர்கள் . சலுகை பெறும் பிற சாதியினருகு 8 லட்சம் மேலிருந்தாலும் அனுபவிப்பதில் எந்தக் குற்ற உனர்வும் இல்லை. இந்த முரண் நிலையை முன்னிலைப் படுத்துவதுமில்லை தில்லை. இதனை எதிர்ப்பவர்கள் எல்லாம் முன்னேற்ற சாதியனர் பட்டியலில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடே கூடாது என்கிறார்களே தவிர சலுகைக்கான வருமான வரம்பைக் குறைக்க வேண்டும் எனக் கேட்பதில்லை. 8 லட்சம் வருமான வரம்பை அனைத்து சாதியினருக்கும். பொதுவாக வைத்து விட்டால் இந்த இடஒதுக்கீட்டிற்கான அவசியம் இல்லை. ஒரு குறிப்பிட்ட் சாதியினர் ஐஏஎஸ் போன்ற உயர் பதவிகளில் 70 % இருக்கிறார்கள் என பட்டியலை பகிர்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு பத்து பேர் பட்டியலைக் கூறுங்கள் என்றேன். இதுவரை யாரும் கூறவில்லை. அனுமானங்களின் அடிப்படையில் வெறுப்புணர்வை வளர்த்துக் கொண்டிருக்கின்றன சமூக வலைதளங்கள்.
ReplyDeleteஇந்த வருடம் குளிர் அதிகம் தான்! வெய்யில் எப்படி இருக்கப் போகிறதோ!
ReplyDelete