Aug 3, 2019

பேசாத வார்த்தைகள் #030819-ஜீவி



அது ஆகச்சிறந்த மொக்கையாக இருந்தாலும் பரவாயில்லை ; டைரக்டரின் அடுத்த படத்தினை திரையரங்கில் தான் காணவேண்டும் . அதுதான் பொருத்தமான பாவமன்னிப்பாக இருக்கமுடியும். 

சசி, மாரி செல்வராஜ், சுரேஷ் சங்கையா, அறிவழகன், விக்ரம் சுகுமாரன், மகிழ்திருமேனி, நெல்சன் வெங்கடேசன், கோபிநாத் என பாவமன்னிப்பு கேட்க வேண்டிய இயக்குனர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போவது ஓர் ஆனந்தத்துயரம்.

கூப்பிய கரங்களுடன் தோன்றும் தயரிப்பாளரும் ; அதனைத்தொடர்ந்து மலைகளைப் பொளந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்து ,நட்டுக்குத்தலாக நிற்கும் தயாரிப்பு நிறுவனத்தின் இலச்சினையும் மெல்லியதாக பீதியைக் கிளைப்பினாலும், வைத்த கண்ணை பின்வாங்குவதாக இல்லையென்று தொடர்ந்தாயிற்று.

பல படங்களில் பார்த்துச்சலித்த ஓப்பனிங் ஸீன் , பருந்துப்பார்வையில் சென்னை . ஆனால் , அதனைத்தொடர்ந்து வரும் ரவுண்டானாவும் , முதல் பாடலின் ஒளிப்பதிவும் , ஒளிப்பதிவாளர் யாரென்று கேட்கத்தோன்றுகிறது.

சிறப்பான பங்களிப்பை நல்கிடவேண்டுமென்ற முனைப்பு நாயகன் வெற்றியின் நடிப்பில் தெரிவதை அறிய முடிகின்றது. ஆனால் காணத்தான்முடியவில்லை. குரல், பார்வை, உடல்மொழி என்று ஒவ்வொன்றும் திசைக்கொன்றாக கும்மியடிக்கிறது. கருணாகரன், ரோகிணி, மைம் கோபி, இரண்டு நாயகிகள் , ஆய்வாளர் எல்லோருமே நிறைவு. இப்ராஹிமாக வருபவற்கு சிறப்பான எதிர்காலம் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். சில எபிஸோடுகளில் நம் பற்களை கலகலக்கவைத்தும் ; பல எபிஸோடுகளில் நம் பற்களைக் கடிக்கவைத்தவர்களுமான விஜய் டிவியின் சில முகங்கள் டைமிங்கில் சிரிக்க வைக்கிறார்கள்.

நகைச்சுவைக்கென்று தனித்த ட்ராக் இல்லாதபோதிலும் குறையில்லாமல் பார்த்துக்கொள்கிறார் குணச்சித்திரத்தில் பாந்தமாக பொருந்தியிருக்கும் கருணாகரன்.

தொடர்பியல், முக்கோணவிதி, மையபுள்ளி என்று அறிவியல் பேசும் படத்தில் , ஊழ்வினையையும் ஊடாக இழையோடவிட்டிருக்கிறார்கள். Really Refreshing. நிறைய காட்சிகளை/வசனங்களை மீள் பார்வைக்கு உட்படுத்தவேண்டியதிருந்தது எனக்கு.
வசனங்களை பாரதி எழுதியிருக்கிறார். டாபிக்கலான விஷயங்களையெல்லாம் போகிற போக்கில் தொட்டுச்சென்றிருக்கிறார்கள். ஊன்றிக் கேட்கவேண்டும். உதாரணமாக , காவல்நிலையத்தில் வைத்து வெற்றியை ஆய்வாளர் விசாரிக்கும் போது , அம்மா எப்படி செத்தாங்க என்று அதட்டலாக ஒரு கேள்வியை வீசுகிறார் ஆய்வாளர். அதற்கு வெற்றி பதில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே , கருணாகரன் ஒரு கமெண்ட் அடிக்கிறார். இதுபோன்று ஆங்காங்கே சமகால நடப்புகளை பகடியிருக்கிறார்கள். அது துருத்தாமல் இருப்பது சிறப்பு.வாழ்க்கையில வரக்கூடாத வியாதி விரக்தி என்று ஒரு வசனம் ~ பாபு தமிழ் உங்களுக்கு ஒரு பூச்செண்டு.

பெரிய குறையென்று பார்த்தால் , சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே ; சம்பவத்தைப் பற்றியே வெற்றியும், கருணாவும் அடிக்கடி வெகு சாவகாசமாக கதைத்துக்கொள்கிறார்கள். அதுவும் எப்படி என்றால் , பொங்கல் சிறப்புப் பட்டிமண்டப குரலில். ஆரம்ப காட்சிகள் கொஞ்சமே கொஞ்சம் வேகக்குறைவாக இருந்தபோதும் பழுதில்லை.

எங்கேயும் எப்போதும் படத்தில் , ஜெய் சொல்வதுபோல இந்த ஹீரோ தான் சார் பிடிக்கல ; மத்தபடி படம் லவ்யூங்க.

இந்தப்படத்தை விஜய் ஆண்டனியோ, அருள்நிதியோ பார்த்திருந்தால் அவர்கள் மைண்டவாய்ஸ் வடபோச்சே என்பதாகத்தான் இருந்திருக்கும். ஆம். இருவருக்குமே அளவெடுத்துத் தைத்த சட்டை போன்ற கதை, திரைக்கதை.

தமிழ் சினிமா ஒன்றில் , ஒரு கதாபாத்திரம் புத்தகம் வாசிப்பதாய் காண்பதே அரிதாகியிருக்கும் காலத்தில் , கதையின் நாயகனை புத்தக வாசிப்பாளராக சித்தரித்திருப்பது சிறப்பு. பட போஸ்டர்களில் கூட வாசிக்கும் நாயகனை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். நன்றிகள்!!!

எழுத்தாளர் பாபு தமிழும், இயக்குனர் கோபிநாத்தும் ரசிகர்களை அறிவுஜீவிகள் என்று நம்பி மேற்படி படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால் வந்த வேகத்திலேயே படத்தை தியேட்டரை விட்டுத் தூக்கியடித்து , நாங்கள்லாம் அவ்ளோ ஒர்த் இல்ல பாஸ் என்றிருக்கிறோம் நாம். துயரம்.
#ஜீவி

2 comments:

  1. பாவமன்னிப்பு படம் பார்த்தால்.....

    வேண்டாம் அதன் பாடல்கள் மட்டுமே கேட்டாலும்...

    ம்ஹீம்... நீங்க நினைப்பது சந்தேகம் தான்..

    ReplyDelete
  2. இப்படி ஒரு படம் வந்திருப்பதே உங்கள் பதிவு மூலம் தான் தெரிகிறது! பெரும்பாலும் படங்கள் பார்ப்பதே இல்லை :) இங்கே அதற்கான வாய்ப்பும் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

    ReplyDelete

Related Posts with Thumbnails