May 26, 2020

பேசாத வார்த்தைகள் ~ 260520

பேசாத வார்த்தைகள் ~ 260520



சொந்த வேலையொன்றை நிறைவேற்றும் பொருட்டு சுமார் இரண்டு மாத காலங்களுக்குப்பிறகு மாநகருக்குள் பிரவேசித்து வந்தேன். உம்பன் புயலால் வெக்கை தணிய வாய்ப்புள்ளதாக சொல்லியிருந்தார்கள். வெளிச்சென்றுவர எத்தனித்ததற்கு அதுவுமொரு காரணம். பத்துமணிக்கு மேலாக பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. மனித மற்றும் எந்திர பழுதுநீக்கும் நிலையங்களிலும், மருந்துக்கடைகளிலும் கணிசமான கூட்டத்தைக் காணமுடிந்தது. ஏனைய ஸ்தாபனங்களில் மருந்துக்கும் மனிதர்களில்லை. கவசத்துடன்கூடிய கடைச் சிப்பந்திகள் கரோனாவை நொந்துகொண்டு வெம்மையில் வெந்துகொண்டிருந்தனர். வியாபார ஸ்தலங்களில் குளிர்சாதன வசதியை இயக்கினால் அறுபது நாட்களுக்கு கடை சீல் வைக்கப்படுமாம். அநேகர் விதியை பின்பற்றுகின்றனர். அதேசமயம் அலுவலகங்களில் விதி காற்றில் பறக்கிறது. 

சென்ற வேலை தாமதமாகியதால் நண்பரின் அலுவலகம் ஒன்றில் தஞ்சம் புகுந்தேன். நண்பர் அசைவப் பிரியர். இருவருமாகச் சேர்ந்து மதியச் சாப்பாட்டிற்காக மட்டன் பிரியாணி வழங்கும் கடையைத் தேட ஆரம்பித்தோம். எக்கடையிலும் அமர்ந்துண்ண அனுமதிக்காதபடியால் கடைசியில் தலப்பாக்கட்டியில் தஞ்சமடைந்தோம். அங்கேயும் பொட்டலம் மட்டுமே . பசி உந்தித்தள்ள பொட்டலத்தை வாங்கி எதிரில் ட்ராவல்ஸ் வண்டிகள் நிறுத்துமிடத்தில் கிடந்த வேப்பமரக்கல்லில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தோம். இரண்டு மட்டன் பிரியாணி , ஒரு பள்ளிப்பாளையம் செமி கிரேவி. பிரியாணி அளவான காரத்தில் நல்ல சுவை. தயிர் பச்சடி அபார சுவையோடு இருந்தது. தண்ணீர்ப் போத்தலோடு சேர்த்து  800ம் சில்லறையுமானது விலை. தலைப்பாகட்டியில் சேர்ந்தாற்போல நான்கு நாட்கள் சாப்பிடவேண்டுமானால் சாமான்யன் தன் தலையை செட்டியார் கடையிலோ ,சேட்டு கடையிலோ அடமானம்தான் வைக்கவேண்டும். நாளது தேதிக்கு ஹிருதயம் சிறுநீரகம் அளவிற்குக்கூடப் பெறாது நம் தலை. ஆனால் அதில்தான் அதிகமான எடையைச் சுமக்கிறோம். போகட்டும். இருக்கப்பட்டவன் அள்ளித்தினிக்கிறான். 

திரும்ப வரும் வழியில் , வளர்மதி பாலத்திலிருந்து ஸ்ரீ சக்தி தியேட்டர் போகும் வழியில் நடராஜர் செட்டியார் நகைக்கடை வாசலில் நிறுத்தினார் நண்பர்.  பர்பிக்யூ ஸ்டைலில் ஒரு மோட்டார் கடை. ARC பியூர் என்று நினைக்கிறேன். சிக்கனை விதம் விதமாக வதம் செய்துகொண்டிருந்தனர் இருவர். நண்பர் வாடிக்கையாளராம். அபாரமான சுவையோடு இருக்கும் ஆளுக்கொரு பள்ளிப்பாளையம் ரோல் சாப்பிடுவோம் என்றார். ஏற்கனவே உள்ளே தள்ளியிருந்த பாதிப் பிரியாணியே ஏகப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்பொழுது மேற்கொண்டு ஒரு சிக்கன் ரோலைத் திணித்தால் வீட்டிற்கு உருண்டுதான் போகப்போகிறோம் என்ற பயமிருந்தாலும் நண்பரின் மனம் கோணக்கூடாது என்பதற்காக சரியென்றேன். மைதா மாவை சப்பாத்தி பதத்தில் உருட்டித் தேய்த்து அதில் நறுக்கிய தேங்காய்ச்சில் , மசாலாவுடன் நன்கு வேகவைத்த போன்லெஸ் சிக்கனை இன்னபிற இனம்காணவியலாத சில அயிட்டங்களோடு ஸ்டஃப் செய்து சுருட்டி ஒரு பட்டர் பேப்பரில் வைத்து அதையும் சுருட்டி கையில் திணிக்கிறார்கள். அதைக் கைப்பற்றுவதென்பது தொடரோட்டத்தில் கட்டையை கைமாற்றும் வைபவம் போல் ரஸமான சம்பவமாக உள்ளது. பட்டர் பேப்பரை தின்றுவிடமல் அதே சமயம் கீழேயும் சிந்திவிடாமல் லாவகமாக சாப்பிட வேண்டும். நான் இரண்டு அங்குல நீளத்தை உள்ளே தள்ளுவதற்க்குள் நண்பர் ஜாலவித்தைக்காரரைப்போல சடுதியில் சாப்பிட்டு கையைத்துடைத்துவிட்டார். அடிக்ட் ஆகக்கூடிய அளவிற்கான அபாரமான சுவையென்று சொல்லமுடியாது ஆனாலும் தகும். அடுத்த முறை வேறொரு அயிட்டத்தை சுவைத்துப்பார்க்கவேண்டும். இரண்டு பள்ளிப்பாளையம் சிக்கன் ரோல் 200 ரூபாயாகிறது. 

★★★★★★

துல்லியமான கணக்கில்லையெனினும் இதுவரை உத்தேசமாக 30+ மலையாளப் படங்களை பார்த்திருப்பேன். சமீபத்தில் பார்த்த நான்கு படங்களைத் தவிர மற்றவையெல்லாம் சப் டைட்டில் தயவுடன் பார்த்தவை. இப்போது சப் டைட்டில் உதவியின்றியே ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடிகின்றது. சரியாக பிடிபடாத வசனங்களை மட்டும் ரீவைண்ட் செய்து கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது புரிந்துவிடுகின்றது. கவனித்தீர்களா பார்வை பல விசயங்களை மழுங்கடித்து விடுகிறது. சில இடங்களில் / விஷயங்களில் கண்களை மூடிக்கொண்டிருப்பது சாலச்சிறந்தது. மலையாளத்தில் ராவு என்றால் காலையில் என்றர்த்தம் ஆகிறதுபோல. நான் இரவென்று நினைத்துக்கொண்டு இதுகாறும் பார்த்துவந்தேன். நேற்றுதான் நண்பரொருவர் சொன்னார். இதுபோன்ற சில அனர்த்தங்கள் ஆகின்றபோதும் மலையாளப் படங்கள் எனக்கு பிடித்தமானவையாகவே இருக்கிறது. இன்னுமொரு 30+ படங்களை சப் டைட்டில் உதவியின்றி பார்த்துவிட்டால் , பேச்சு மலையாளத்தில் பாண்டித்தியம் பெற்றுவிடுவேனென்று எண்ணுகிறேன். ஒருவருக்கு எத்துனை மொழி தெரியுமோ அவர் அத்தனை மனிதருக்குச் சமானம் என்று சும்மாவாக சொன்னார்கள். 

கடந்த இரு வாரங்களில் ஒன்னரை கன்னடப் படங்களையும் , இரண்டரை தெலுங்குப் படங்களையும் காண நேர்ந்தது.  தெலுங்கில் நானி, வி.தே நீங்கலாக ஏனைய ஹீரோக்கள் அனைவருமே ஆக்சுமாரான தோற்றம் கொண்டவர்களாவே இருக்கிறார்கள். ரவி சரண் தேஜா என்றொருவர் மணிபர்ஸை அன் ஷிப் பண்ணியது போல சிரிக்கிறார். ப்பே.! கன்னடம் இதைக்காட்டிலும் மோசம். சமீபத்தில் மகீரா என்றொரு படம் பார்த்தேன். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் வகைமையில், சேர்க்கலாம். ஓரளவு நல்ல கதை மற்றும் இயக்கம் தான் ஆனாலும் நடிகர்களின் சோபையான நடிப்பில் சுமாராக வெளிப்பட்டிருக்கிறது. 5 ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 5 லட்ச ரூபாய்க்கு நடிக்கிறண்டா என்பதினைப்போல இசை. ரொம்ப ரிச் ஆக இருக்கின்றது . பிரதான வில்லன் , கடைகளுக்கு சாம்பிராணி புகை போடுபவரைப்போல உள்ளார். வில்லனின் அடியாள் ரோபோ சங்கரின் ஒன்றுவிட்ட தம்பி போலுள்ளார். துப்பறிவதில் கில்லாடி என்றழைக்கப்படும் ஆசாமி , பபூன் போல உள்ளார். உருவக் கேலி இல்லை , கொஞ்சமாவது நம்பும்படியாக இருக்கவேண்டுமல்லவா. குறைந்தபட்சம் நடிப்பிலாவது. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பேமிலி மென் என்றொரு சீரிஸ் பார்த்தேன் அமேசான் பிரைமில். அதில் பிராதான வேடமேற்றிருப்பவர் டொக்காகத்தான் தோற்றமளிப்பார். சாயலுக்கு லோ பட்ஜெட் சந்திரபாபுவைப் போன்று. ஆரம்பத்தில் நகைப்பாக தோன்றுபவர் சீரிஸ் முடியும்போது த்தா இந்தாள விட்டா வேற எவனாலும் இப்டி பண்ணிருக்கமுடியதுடா என்று வியப்பில் ஆழ்த்தியிருப்பார்.  ஆனால் நம் கன்னட மதீரா நடிகர்கள் யாரையும் காணச் சகிக்கவில்லை. ஒருவரிடம் கூட கொஞ்சம் கூட மிடுக்கில்லை. பெங்களூரு அழகான நகரம், டெக்னாலஜி ஹப் என்கிறார்கள் சினிமா மட்டும் விதிவிலக்கு போல. ஒப்பீட்டளவில் தெலுங்கு ரொம்ப ஆர்டிபிஷியலாகவும் ; மலையாளம் அதீத இயல்புத்தன்மையோடும் உள்ளதாகப்படுகிறது. தமிழ் சினிமா அந்தளவில் பேலன்ஸ்டாக இருப்பதாகவே தெரிகிறது. கன்னடம் ஆட்டத்திலேயே சேர்த்தியில்லை. விதிவிலக்காக ஒன்றிரண்டு நல்ல படங்கள் தேறலாம். ஆகையினால் மீண்டும் கடவுளின் தேசத்திலே கரையொதுங்கலாம் என்றிருக்கிறேன்.

★★★★★★

கடந்த இரண்டு வாரங்களும் கரோனவை பின்னுக்குத்தள்ளி பேசுபொருளாக இருந்தது மதுப்பிரியர்களும் டாஸ்மார்க்கும்தான். இதையொட்டி சொல்வதற்கு மூன்று விஷயங்கள் இருக்கிறது .

கரோனா காலங்களில் கைக்கொண்ட(கால்!?) ஒரே நற்பழக்கம் நடைப்பயிற்சி. பெரும்பாலும் நடைப்பயிற்சிக்கு துணை சேர்ப்பதில்லை. நடப்பதற்கே மூச்சு வாங்குகிறது இதிலெங்கே பேசுவது . அதுவும் அநேகர் தாமரை மணாளன்களாகவே அமைகிறார்கள். அதனால் ஆல்வேஸ் தனியன் தான். சமயங்களில் நடை முடிந்து ஓய்ந்து உட்காரும்போது அக்கம்பக்கம் பிளாட் அண்ணன்ங்களுடன் பேச நேரிடும். பெரும்பாலும் சம்பாஷனைகளில் கலந்துகொள்வதில்லை, கவனிப்பதைபோன்ற பாவனையோடு நிறுத்திக்கொள்வேன். அப்படியான சம்பாஷணை ஒன்று மதுவை முன்னிட்டு போன வாரம். நீ தண்ணியடிப்பியா தம்பி என்ற கேள்வியை என்னை நோக்கி எழுப்பினார் அண்ணன் ஒருவர், பாவனை எடுபடவில்லை. இல்லையென்றேன் . இப்பொழுதா எப்பொழுதுமா என்றார் . எப்பொழுதுமே என்றேன். என்னப்பா பொண்டாட்டியோட மட்டுமே இருக்குற எனக்கே பிரஷர் ஏறிடுது , கட்டிங் போட்டாதான் நிம்மதியா தூங்கி எழ முடியுது,  நீயோ மாமியார், மருமகள் , மகள்னு தெறி'ப்பிக்கான காம்பினேஷன்ல இருக்க , ஆனா தண்ணியடிக்குறதில்லைன்னு சொல்ற. பார்த்துப்பா பிரஷர் அதிகமாயி ஸ்டரோக்ல கொண்டுபோயி விட்டுடப் போவுதுன்னு பீதியைக் கிளப்பிவிட்டு கிளம்பிவிட்டார். முன்பெல்லாம் தண்ணியடித்தால் தான் வியாதிகள் அண்டும் என்று பயமுறுத்துவார்கள் இப்போது தண்ணியடிக்கவில்லை என்றால் வியாதி வருமென்று பயமுறுத்துகிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது நிசம் தானா!?

சமீபத்தில் அரசனின் அரண் சிறுகதை வாசித்தேன். வட்டார மொழி நடையில் கதைகள் எழுதுவதில் அரசன் முடிசூடா அரசன். முதல் புத்தகமான இண்டமுள்ளுவை கிண்டிலில் டவுன்லோடி வைத்திருந்தேன். ஒற்றைத்தலைவலி உக்கிரமாக ஆரம்பித்திருப்பதினால் , மொபைலில் படம் பார்ப்பது , மொபைல் கிண்டில் வாசிப்பதையெல்லாம் முற்றாக நிறுத்தியாயிற்று. அச்சுப் பதிப்பு வாங்கவேண்டும். அரண் சிறுகதை யாவரும் இணையதளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. வட்டார மொழி நடையெனினும் வாசிப்பதற்க்கு சுளுவாகவே இருக்கிறது. மதுவின்பால் அடிமைப்பட்டு தனது தொழில் மற்றும் இல்லறக் கடமைகளிலிருந்து தடம்புரளும் சவரத் தொழிலாளி ஒருவரை ஊர்ப் பெரியவர் ஒருவர் நட்புடன் நலவழிப்படுத்துவதுதான் கதை. இருவருக்குமான நட்பு வழியே மது , தீண்டாமை , சாதீய வேறுபாடுகள் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். வரிக்கு வரி கதை காட்சிகளாக விரிகிறது. அவ்வசியம் வாசிக்கவேண்டிய சிறுகதை.


சத்யம் பறஞ்சா விசுவாசிக்குமோ என்றொரு மலையாளப் படத்தினைப் பார்த்தேன். பிஜு மேனன் பிரதான வேடம். அய்யப்பனும் கோஷியும் பாத்திரத்திற்கு நேரெதிரான பொறுப்பற்ற குடும்பத்தலைவன். பிஜு அண்ட் கோ கட்டிட வேலைகளுக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள். அனைவரும் அதீத மதுப்பிரியர்கள். கட்டிட வேலைக்குச் சென்றயிடத்தில் , கட்டட ஓனரின் மகளை காதலித்து கட்டி முடிக்கப்படாத கட்டிடமொன்றில் குடியும் குடித்தனமுமாக இருக்கிறார். காலப்போக்கில் குடித்தனத்தின் வெளிப்பாடாக மகளொருவர். ஆனபோதிலும் குடியை விட்டாரில்லை. வீட்டை எதிர்த்து காதலித்து கட்டிக்கொண்ட கணவனால் அவமானமும் , வறுமையும் எதிர்கொள்கிறது குடும்பம். மறுநாள் மகளின் பிறந்தநாள் , லேட் நைட் குடிபோதையில் பிஜு வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார் , வழியில் மதுப் போத்தல்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது. குடிகார புத்தி குறுக்கு வழிப்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்த சம்பவங்கள்தான் படம். கேரளாவின் ஏதோ ஒரு கிராமத்தில் நான்கைந்து நாட்கள் கேமராவை வைத்துவிட்டு பின் எடிட்டிங் செய்தது போல அவ்வளவு இயல்பாக உள்ளது படம். படத்தின் சுவாரஸ்யக் குறைச்சல் அதிகம். அதனாலேயே என்னவோ டாகுமெண்ட்ரி பீல் வந்துவிடுகிறது. அதீதக் குடியால் குடும்பம் , குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளை மிகைப்படுத்தல் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு




2 comments:

  1. நல்லதொரு தொகுப்பு.

    மலையாள சினிமாக்கள் - தொடர்ந்து பார்த்தால் மலையாளம் கற்றுக் கொள்ளலாம்!

    மதுப் பிரியர்கள் - என்ன சொல்ல! எங்கேயும் இவர்கள் ஆட்டம் தான்.

    ReplyDelete
  2. Was reading your blog few years ago. Came across again recently. Terrific writing style!

    ReplyDelete

Related Posts with Thumbnails