Mar 1, 2017

பேசாத வார்த்தைகள் : கண்ணதாசன் , குருகுலம் , சுகன்யா ஸம்ரிதி யோஜனா.


     
அர்த்தமுள்ள இந்து மதம் உட்பட கண்ணதாசனின் பத்து புத்தகங்கங்கள் அடங்கிய மின் நூலை நண்பர் ஒருவர் கட்செவி அஞ்சலில் பகிர்ந்திருந்தார். கிட்டத்தட்ட 1000 பக்கங்கள். RANDOM ஆக தினமும் ரெண்டு மூணு பக்கங்களை வாசிக்கிறேன். இன்று அமராவதிபுதூர் குருகுலத்தை பத்தி ஒரு பத்தி ...!

குருகுலத்தில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் விடுதி எண் உண்டு. கிட்டத்தட்ட பெயருக்கு இணையானது விடுதி எண் . விடுதி எண்னை சொன்னால் வீட்டு எண் வரை வரலாற்றையே சொல்லிவிடுவார்கள். கவியரசருக்கு 498 ஆம் எண். அவர் படித்த காலத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் பத்துக்கு பத்து சதுர அடி விவசாய இடத்தையும், நால்வருக்கொன்றாக பசு மாட்டையும் கொடுத்து பராமரிக்க வேண்டும் என்பதும் கல்வியாக இருந்திருக்கிறது. கூடவே குருகுல வளாகத்திலேயே அமைக்கப்பட்டிருந்த  தறியில் அவரவருக்கான வேஷ்டியை மாணவர்களே நெய்துகொள்ள வேண்டுமாம். சில வருடங்கள் பாட்டு வகுப்பும், இசை வாத்திய வகுப்பும் கூட பயிற்றுவித்திருக்கிறார்கள் மாணவர்களுக்கு .

இதையேதான் இப்பொழுது CBSE, STATE BOARD என்று போர்டு வைத்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். குருகுலத்தில் ஒழுக்கத்திற்கு தான் முன்னுரிமை. நீங்கள் ஏழாம் வகுப்பையே எட்டு வருடங்கள் படித்தாலும் பிரச்சினையில்லை. காந்திய கொள்கையை ஒற்றிய பாடத்திட்டத்தையும் , பழக்கவழக்கங்களையும் கொண்டியங்கும் கல்விச்சாலை. நாங்கள் படிக்கும்போது மேற்படி கண்ணதாசன் காலத்திய கல்வி முறை இல்லை. இருந்திருந்தால் இன்னும் சிறப்பான வாழ்வியலை அனுபவித்திருக்கலாமோ என்ற எண்ணம் எழுகின்றது இப்பொழுது.

பெரும்பாலானவர்கள் குருகுலம் என்றால் , நந்தா படத்தில் சூர்யாவை சேர்த்திருப்பார்களே அதுவா என்று கேட்கிறார்கள். இல்லை. அது சிறுவர் சீர்திருத்தப்பள்ளி. அது தண்டனை...! இது பெற்றவர்களின் விருப்பத்தின் பேரில் சேர்க்கப்படும் உண்டு உறைவிடப் பள்ளி. காலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலான ராணுவ ஒழுங்குடன் கூடிய டைம்டேபிள் . இருக்கப்பிடிக்காமல் , சாக்கடை பொந்துக்குள் புகுந்து தப்பித்தவர்கள், நடு சென்டரில் சிக்கி சின்னாபின்னமானவர்கள் எல்லாம் உண்டு. நமக்கு எலிப் பொந்தே போதுமானதாக இருந்தாலும், எப்படியும் அடித்து துவைத்து  மறுபடியும் குருகுலத்தில் தான்  கொண்டுவந்து காயப்போடுவார்கள் என்று தெரிந்தமையால் சமத்துப்பிள்ளையாகவே ஐந்து வருடங்களையும் கடத்தியாயிற்று. குருகுலத்தில் படிக்கும் போது மாணவர்கள் அனைவருமே அதை தண்டனையாகவே கருதினோம். இப்பொழுது கேட்டால் குருகுல வாசம்தான் தற்சமயம் இருக்கும் சிற்சில நல் பழக்கவழக்கங்களுக்கும் , ஓரளவேனும் நன்றாக இருப்பதற்கும் காரணம் என்று சொல்வோம்.

எனது விடுதி எண் 102. சமீபத்தில் இணையத்தின் வழியாக குருகுல மாணவர் ஒருவரின்  தொடர்பு கிடைத்தது. அண்ணே அவரா நீங்க...?! அடையாளமே தெரியலையே என்று ஜெர்க் ஆனார் . மேற்படி குருகுல வாசத்தில் ,அடியேன் பெரும்பாலும் தொள தொள சட்டையும், நெற்றி நிறைய பட்டையும், கழுத்தில் ருத்திராட்ச கொட்டையுமாகத்தான் திரிவேன். அதுதான் ஜுனியர் ஜெர்க் ஆனதன் காரணம். ஏதோ ஒரு மடத்தின் மடப்பள்ளியில், புளிச் சோறு உருட்டிக்கொண்டிருப்பான் என்று நினைத்த ஒருவன்,  ஜீன்ஸ் போட்டு மூஞ்சி புத்தகத்தில் ஸ்டேட்டஸ் போடுவேனென்று கனவிலும் எதிர்பார்த்திருக்கமாட்டான்.
     
ஆயிற்று, குருகுலத்தை விட்டு வந்து பதினெட்டு வருடங்கள் ஆயிற்று. விரைவில் ஓர் எட்டு போய் வரவேண்டும்

**********************************************************************************************************************************
ASSET ம் இல்லை LIABILITY ம் இல்லை, கிட்டத்தட்ட ஒட்டியும் ஒட்டாத வாழ்க்கையைத்தான் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இது வருமான வரி கணக்கு பைசல் பண்ண வேண்டிய நேரம் . எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல எந்தெந்த வகையில் வரி செலுத்தாமல் எஸ்கேப் ஆகலாம் என்று ஆளாளுக்கு ஆலாய்ப் பறக்கின்றார்கள் .

மேற்படி வருமான வரி தொடர்பான , சேமிப்பு திட்டங்கள் பற்றி இணையத்தில் உலாவியதில் கண்ணில் பட்டது ஒரு உருப்படியான திட்டம் . இந்திய அரசின் , பிரதமர் மோடி அமைச்சரவையினால் அறிமுகப்படுத்தப்பட்டசுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் ( தமிழில் செல்வமகள் சேமிப்புத்திட்டம் ) .

ரெம்ப காம்பெக்டான ஒரு திட்டம் , கண்ணைக்கட்டும் கண்டிப்புகளோ , கழுத்தை நெரிக்கும் அளவிற்கான தவணையோ இல்லாத வெகு நெகிழ்வான ஒரு திட்டம் . பெண் குகந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகளை மனதில் வைத்து கொண்டுவரப்பட்டிருக்கின்றது .

திட்டத்தின் சாதக பாதகங்கள்

Ø      பெண் குழந்தைகளுக்கான எளிய சேமிப்புத்திட்டம் .
Ø      பத்து வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு தொடங்கலாம்.
Ø      ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக லட்சத்து ஐம்பதினாயிரம் வரை கட்டலாம்.
Ø      நூரின் மடங்காக எவளவு வேண்டுமானாலும் எத்தனை தவணையில் வேண்டுமானாலும் கட்டலாம்.
Ø      பதினான்கு வருடங்கள் தொடர்ந்து கட்டவேண்டும்.
Ø      வேறு எந்த சேமிப்பு திட்டங்களிலும் கிடைக்காத அளவிற்கான வட்டி இதில் கிடைக்கும்
Ø      ஆரம்பித்த வருடத்தில் 9.1 சதவிகித வட்டியும் தற்சமயம் 8.6 சதவிகித வட்டியும் வழங்கப்படுகின்றது .
Ø      தபால் நிலையம் மற்றும் அரசு வங்கிகளின் எந்த கிளையில் வேண்டுமானாலும் கணக்கு தொடங்கலாம் . எந்தக் கிளைக்கு வேண்டுமானாலும் மாற்றிகொள்ளும் வசதியும் உண்டு .
Ø      ஆதார் அட்டை , பான் கார்டு , பாஸ்போர்ட் இதில் ஏதாவது ஒன்றும குழந்தையின் பிறப்புச் சான்றிதழும் இருந்தால் போதும் .
Ø      EEE என்று சொல்லப்படும் வரிவிலக்கு வசதி உண்டு . அதாவது இதில் செய்யப்படும் முதலீடு ,கிடைக்கும் முதிர்வுத்தொகை மற்றும் வட்டி இவை மூன்றிற்கும் வருமானவரி விலக்கு உண்டு.

பாதகம் என்று பார்த்தால் ,

Ø      பதினெட்டு வயதிற்கு முன்பாக அவ்வளவு எளிதில் பணத்தை எடுக்க முடியாது.
Ø      21 வருடங்கள் கழித்துதான் முதிர்வுதொகை கிடைக்கும்.
Ø      ஒரு வேளை அதற்கு முன்பாகவே திருமணம் நிச்சயிக்கப்பட்டால் மட்டுமே பணத்தை திரும்ப பெற முடியும்.
Ø      குழந்தையின் பதினெட்டாவது வயதில் கல்விக்காக ஐம்பது சதவிகிதம் மட்டுமே எடுக்கமுடியும் .
Ø      ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே முழு பயன் கிடைக்கும் .
Ø      நிலையற்ற வட்டி விகிதம்.
Ø      இணையத்தின் வாயிலாக கணக்கை ஆரம்பிக்கவும் இயலாது , பணம் செலுத்தவும் இயலாது .

இன்றைய கல்யாண கள நிலவரங்களை வைத்துப் பார்த்தால் , ஆக்சுவலி இந்த திட்டம் ஆண் குழந்தைகளுக்குத்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்கவேண்டும் . இன்றைக்கே  திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆண்கள் . இன்னும் இருபது வருடங்கள் கழித்து நிச்சயமாக பையன் வீட்டார்தான் வரதட்சணை கொடுத்து பெண் எடுக்க வேண்டியதிருக்கும் .

என்றென்றும் புன்னகையுடன்

ஜீவன்சுப்பு .

4 comments:

  1. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பற்றிய விளக்கத்திற்கு நன்றி ஜி...

    ReplyDelete
  2. குருகுலம் இன்றும் கண்டிப்புக்கு பெயர் போனதாய் இருக்கிறது...

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு. ஆனா என் பொண்ணுங்க இப்பவே கல்யாண வயசு வந்துட்டாங்களே

    ReplyDelete

Related Posts with Thumbnails