Jan 15, 2017

பேசாத வார்த்தைகள் : 15.01.2017 - ஆயிரங்கால் மண்டபம்




ஆயிரங்கால் மண்டபம்

புது வருடத்தை புத்தகத்துடன் தொடங்கலாம் என்ற நல்லெண்ணத்தின்பால் அருகிலுள்ள கிளை நூலகத்தினை அணுகினேன். நூலகங்களில் புத்தகம் தெரிவு செய்வதற்கு ஒரு தனித்திறமை தேவை . அது எமக்கு இன்னமும் கைவரப்பெறவில்லை. பகுதி புத்தகங்கள் அரசியல் புத்தகங்களாகவும் , மிகுதி புத்தகங்கள் அரசியலால் வந்த புத்தகங்களாகவும் இருக்கிறது .

நூலகப் பணி நேரம் முடியும் நேரம் அது  , பகுதி நேரப் பணியாளர் அதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருந்தார் . சிக்னல் போடுவதற்கு பத்து நொடிகள் இருக்கும் போதே வண்டியை எடுத்து விடவேண்டும் இல்லையேல் , ஒலி எழுப்பியே நம்மை ஒழித்துவிடுவார்கள் . கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் இருந்தேன் . பணியாளர் ஓங்கி அறைந்தார் சன்னலை . கண்ணை மூடி , கண நேர இங்கி பிங்கியின் முடிவில் ஜெயமோகனின் ஆயிரம் கால் மண்டபத்தினை தெரிவு செய்து நீட்டினேன் . நூலக அம்மையார் என்னை வெளிறிய முகத்துடன் வெளியேற்றினார் .

ஆறு வருடங்களில் வெவ்வேறு பத்திரிகைகளிலும் , இதழ்களிலும் ஜெமோ அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு . 1999  ல் அகரம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட  புத்தகம் . 2017 , சனவரி முதல் தேதி , மிகச்சரியாக பன்னிரெண்டு மணிக்கு முகநூல் நிலைத் தகவலுடனும் , ஆண்டவன் கருணையால் , அவ்வளவு எளிதில் விரும்பிடாத நான்கு ஜீவன்களின் விருப்பக்குரியுடனும் முன்னுரையை தொடங்கினேன் . நம் புத்திக்கு இரண்டு பத்திக்கு மேல் தாக்குபிடிக்க முடியவில்லை.

வேலைக்கு சேர்ந்த புதிதில் எப்பாடுபட்டாவது ஆங்கிலதில் புலவராகிவிடவேண்டும் என்ற சபத வெறியில் ஆங்கில இந்து பத்திரிக்கை வாங்கி , அதுவும் சொந்தக் காசில் வாங்கி பத்தி பத்தியாக பாத்தி கட்டிய நினைவுகள் வந்து போயின . ஒரு பத்தி வாசித்து அர்த்தம் விளங்குவதற்குள் பத்து பதினைந்து முறை அகராதியை புரட்டிப் பார்த்து ஓய்ந்த நாட்கள் அவை . இப்போது புத்தகத்தை வேலைக்காகாது என்று மூடி வைக்கவும் மனமில்லை . புத்தாண்டின் ஆரம்பமே அரைகுறையாக இருப்பது அபசகுனமல்லவோ...!

அர்த்தம் , அகராதியை எல்லாம் ஓரங்கட்டி விட்டு கதைக்குள் நுழைந்தேன் . முதல் கதை புத்தகத்தின் தலைப்பை தாங்கி வரும் “ஆயிரங்கால் மண்டபம்” . செண்பகக் குழல் வாய் மொழி என்னும் சிறுமியின் பார்வையில் சித்திக்குட்டி என்ற பெண்ணின் மீது நடத்தப்படும் மண வன்முறையை சொல்லிச் செல்கிறது . மனிதர்களின் மனம் எவ்வளவு கல்லாக இருக்கின்றது என்பதை உணர்த்தும் விதமாக சித்திக்குட்டி கற்சிலையாகிவிட்டார் என்று புரிந்து கொண்டேன் . கதையின் முதல் பத்தியில் வரும் மண்டப விவரணையில் மனம் லயித்து ஒரு சுகானுபவத்தை உணர முடிகின்றது .

அடுத்ததாக , “தேவகி சித்தியின் டைரி” . கட்டிப்பெட்டித் தனமான ஒரு குடும்பத்தில் திருமணமாகியிருக்கும், சுயமாக சிந்திக்கும் , சம்பாதிக்கும் திறமையுள்ள ஒரு பெண்னின் சுய விருப்பு, வெறுப்புகள் எவ்வாறு அவர் வாழ்வை புரட்டிப்போடுகின்றன என்பதினை விவரித்திருக்கிறார். மேற்படி கதையை வாசிக்கும் போது சமீபத்தில் படித்த ஒரு நிலைத்தகவல் நினைவிற்கு வந்தது .

ஓர் அவசர வேலை நிமித்தம் தனது வயோதிக தாயாரை தொடர் வண்டியில் வழியனுப்பச் செல்லும்  ஒரு மகன் மற்றும்  தாய்க்கு இடையேயான உரையாடல் அது . முன்னேற்படில்லாத பயணம் என்பதினால் தாயை , பெண்கள் பெட்டியில் ஏற்றி விட முயற்சிக்கிறார் மகன் . தாய், வேண்டாமென மறுத்து பொது பெட்டியிலேயே ஏற்றி விடச் சொல்கிறார். காரணம் கேட்ட மகனிடம் பின்வருமாறு கூறுகிறார் .

எவளும் எடம் தரமாட்டாளுகப்பா ....!

அடுத்து “ஒன்றுமில்லை” கதை . எளிதில் விளங்கக்கூடிய , நடைமுறைத் தமிழில் உள்ள ஒரு சிறு கதை . அதீத நம்பிக்கை வார்த்தைகள் தாம் சமயங்களில் அச்சத்தை அதிகப்படுத்துகின்றன என்ற பொருள் படும் கதை . 

சாதரணமான கருதிய ஒன்று எப்படி அசாதரணமாக மாறுகின்றது என்பதினை கருவாகக் கொண்ட மருத்துவம் சார்ந்த புனைவு. அதில் இப்படி ஒரு வரி வருகிறது , அனேகமாக எலோருக்கும் இந்த வரிகள் வாய்த்திருக்கும் அல்லது வாய்க்க விரும்பியிருப்போம்.

“வலியில்லாத , மரண பயமில்லாத , நோயாளியாக இருப்பது போல ஆனந்தமான விஷயம் இன்னொன்று இல்லை . கவனம் , பிரியம், ஆதரவு ஆகியவற்றுக்குப் பாத்திரமாக அதைவிடச் சிறந்த சந்தர்ப்பம் வேறு இல்லை .”

அடுத்தது , “வெள்ளம்” . கனவுக்குள் கனவு போல ஒரு கதை என்று வாசித்து முடித்ததும் நானாக முடிவு செய்துகொண்டேன் . வாசிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மூச்சு திணற ஆரம்பித்துவிட்டது . வெள்ளத்தில் சிக்கியிருந்தால் கூட இந்த அளவிற்கு மூச்சடைத்திருக்குமா என்பது சந்தேகமே . ஏ.டி.எம். வரிசையைப் போல வாக்கியங்கள் நீண்டு கொண்டே போவது அயற்சியை அதிகரிக்கின்றது . ஒரு வழியாக வாசித்து முடித்த போது சுழலில் சிக்கி மீண்ட அனுபவம் . சர்வ நிச்சயமா எனக்கு புரியவில்லை இருந்தாலும் வாசித்து முடித்தேன். ஒரு வேளை பிறிதொரு நாள் , மீள் வாசிப்புக்கு உட்படுத்தும்போது நம் வாசிப்புத் தரத்தினை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.

இன்னும் நாலைந்து கதைகள் பாக்கியிருக்கின்றன அது அடுத்த பதிவில் .


என்றென்றும் புன்னகையுடன் ☺
ஜீவன் சுப்பு .



4 comments:

  1. ஜெ.மோ வுடன் துவங்கிய வருடம் ஜெயம் தர வாழ்த்துக்கள் !! :)

    ReplyDelete
  2. அனுபவத்தினால் என் பொதுவான அணுகுமுறை, "எதையும் எதிர்பார்த்து ஆரம்பிக்க வேண்டாம்" என்பதே!!

    ReplyDelete
  3. நன்றாக ஒவ்வொரு சிறுகதை பற்றிய கருத்துக்கள் புத்தகத்தை படிக்கத்தூண்டுகிறது.

    ReplyDelete

Related Posts with Thumbnails