Feb 15, 2013

நான் அவன் இல்லை ...!




ஒன்னு அறிவாளியா இருக்கணும்,  இல்லாட்டி முட்டாளா இருக்கணும் . ரெண்டும்கெட்டானா இருக்குறது ரெம்ப கஷ்டம் . அதுலயும் பெரிய கஷ்டம் என்னன்னா,  ஒரு ரெண்டுங்கெட்டான் சந்தர்ப்ப சூழ்நிலையால அறிவாளியா புரிந்துகொள்ளப்படுவதும் அதன்  தொடர்ச்சியா அறிவாளி பட்டத்த  தக்கவச்சுக்க அவன் படுற பாடும் . ( இத படிக்கும் போது , உங்க மைண்ட்ல “கும்கி பட தம்பி ராமையா” வந்தார்னா நீங்க ஒரு அறிவாளி பாஸ் . உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிட்டு தொடருங்க )


  
அமராவதிபுதூர் குருகுலத்துல படிக்குற (?) காலத்துல ஆறாப்பு லருந்து  பத்தாப்பு வரைக்கும் ‘இ ‘ பிரிவு தான் . அதென்ன லாஜிக்கோ படிக்காம ‘இ’ ‘ஈ’ ன்னு சுத்திக்கிட்டு திரியுற எல்லா பயபுள்ளைகளையும் இந்த , பிரிவுல தான் போடறாங்க . நான் படிச்ச பிரிவுல எல்லாருமே சுமாரு . அதுல நாம கொஞ்சம் சூப்பரான சுமாரு . இதுனாலேயே சுமாரான சுப்பையா , சூப்பர் சுப்பையாவா  அடையாளம் காணப்பட்டேன் ( வேலைக்கு வந்த பின்னாடி  சூப்பர்வைசர் சுப்பையா வா மாறி இப்ப மெர்ச்சண்டைசர் சுப்பையாவா அடையாளம் காணப்படுகிறேன்  .. ) .

ஒட்டுமொத்தமா எல்லா பிரிவையும் சேர்த்தா நான் ரெம்ப சுமாருதான் . இருந்தாலும் எங்க பிரிவுக்கு நாந்தான் நம்பர் ஒன்னு . (ஆல இல்லாத ஊருக்கு இலுப்பப்பூ சக்கர மாதிரி )சரி நாமளா சொல்லல , அவுங்களே நம்மள நல்லா படிக்குற பயன்னு சொல்றாங்க, அதனால ஒரு சாப்ட் கார்னர் கெடைக்குதுன்னு அப்டியே நல்லா படிக்குற புள்ளயாட்டமே நடிக்க ஆரம்பிச்சுட்டேன் . ஒம்பதாவது வர பிரச்சன இல்ல பத்தாவதுல வச்சாங்க ஆப்பு .

காரைக்குடி கம்பன் கழகத்துல நடக்குற மாநில அளவிலான திருவாசகம் , திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ல , என்னைய கேட்காமலே எங்க தமிழ் வாத்தியாரு எம் பேர கொடுத்துட்டாரு . மறுநாள் ஒரு பெரிய புஸ்தகத்த கொடுத்து நல்லா படி , நிச்சயமா நீதான் ஜெயிப்ப ன்னு சொல்லிட்டு போயிட்டாரு . புஸ்தகத்த பாத்தாவே கண்ண கட்டுது . எசகு பிசகா வசமா சிக்கிட்டேன் . நாள் நெருங்க நெருங்க பயம் அதிகமாகுது , ஒருவேள நாம டம்மி பீசுன்னு தெரிஞ்சு போச்சுன்னா ? நெனைக்கவே நெஞ்சடைக்குது . பேயறஞ்ச மாதிரியே சுத்திக்கிட்டு இருந்தேன் .

சரி முட்டி மோதி படிச்சரலாம்னு பாத்தா முடியல . வேப்பங்காயா கசக்குது . மறுநாள் காலைல போட்டி, திடீர்னு ஒரு கிரிமினல் யோசனை , உடம்பு சரி இல்லன்னு சொல்லிடலாம் . முடிவு பண்ணியாச்சு  , மொத நாள் நைட்டு வெங்காயத்த அக்குள்ள வச்சுக்கிட்டு , ராத்திரி பூரா எப்ப காச்சல் வரும் , எப்ப காச்சல் வரும்னு கொட்ட கொட்ட முழிச்சு கெடந்தேன் . மறுநாள் பெரிய நாடகத்த போட்டு போட்டிக்கு போகாம தப்பிச்சுட்டேன் .

அப்ப கூட எங்க தமிழய்யா என்ன சொன்னாரு தெரியுமா ? சுப்பையாவுக்கு ஒடம்பு சரியில்லாம போச்சு இல்லனா அவந்தான் பரிசு வாங்கிருப்பான்.. அடடா இன்னுமா இந்த உலகம் நம்புது ..
கடசி வரைக்கும் “கும்கி ராமையாவாகவே” குப்ப கொட்டி, கல்லூரிக்கு குடிபெயர்ந்தேன் .


 இப்ப கூட வேலைக்கு வந்த பின்னாடி , ஏதாவது அலுவலக கூட்டத்துல,  கூட வேல பாக்குறவங்க சொன்ன யோசனைய  நான் சொல்லும்போதோ , கீழ் வேல பாக்கும் நண்பர்கள்  தயாரித்த அறிக்கைய  கொடுக்கும் போது அதானால் கிடைக்குற பாராட்ட எனதாக்கி கொள்றேன் . பளிச்சுன்னு இல்லங்க இது என்னோட யோசன இல்ல என்கூட வேல பாக்குற ...... அவரோடதுன்னு , அவருக்கு தான் இந்த பாராட்டு போகணும்னு சொல்ல தயக்கம். நாம சொல்லாமலே , அவங்களா நம்மள அறிவாளியாக பார்க்கும் போது  நாமலே ஏன் வலிய போய் இல்லன்னு சொல்லணும் ங்கற எண்ணம் ஆழமா பதிஞ்சுருச்சு .

அதே சமயம் ஏதாவது பிரச்சனனாலோ , ரிப்போர்ட்ல தப்பு வந்தாலோ நான் இல்லன்னு ஒடனே பளிச்ச்ன்னு சொல்லி தப்பிக்க பாக்குறேன் . ஒன்னு மட்டும் நல்லா தெரியுது ந(ர)கரம் வாழக் கத்துக் கொடுக்குதோ இல்லையோ நல்லா பொழைக்க கத்துக்கொடுக்குது .

சரியான நபர்களுக்கு சரியான நேரத்துல பாராட்டும் அங்கீகாரமும் கிடைப்பது இல்ல . அதற்கு பதிலாக என்னை போன்ற கும்கி ராமையாக்கள் கவுரவிக்கப்படுகிறார்கள் .
இந்த ஒலகத்துல நெறைய கும்கி ராமையாக்கள் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறோம் .

காலம் போன கடசில , பாடுரதுக்கே கஷ்டப்படுற நேரத்துல சுசீலா அம்மாவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது பெரிய அநியாயம் .

இதவிட பெரிய அநியாயம் தனுசுக்கு தேசிய விருது கொடுத்தது . தனுஸ் சிறந்த நடிகர் தான் , ஆனா அவர விட சிறந்த நடிகர்கள் நெறைய பேருக்கு கலைமாமணி கூட கொடுக்கப்படலை ங்குறது தான் கொடுமையே.

இதப் போலத்தான் சமீபத்துல,  தேர்ந்தெடுத்த மலர்களால் வலைச்சரத்துல மலர்ச்சரம் தொடுத்த நம் நண்பர் திடம் கொண்டு போராடும் சீனு , “தெரிஞ்சோ தெரியாமலோ” இந்த வாசமில்லா வண்ணத்து பூ (ச்சியையும்) வையும் சேர்த்து கட்டிவிட்டார் . அடையாளம் காணப்படாமல் , அங்கீகரிக்கப்படாமல் எத்தனையோ புதிய , பழைய பதிவர்கள் இருக்கும் போது  நான் அடையாளம் காணப்பட்டது ஒரு குற்ற உணர்ச்சியை தருகிறது . இந்த தெரிஞ்சோ தெரியாமலோவில் , நான் சீனுவின் பார்வையில்  தெரிஞ்சதாலயும் , மற்றவர்கள் தெரியாமல் போனதாலயும்  இந்த வண்ணமும் வலைச்சரத்தில் அச்சேறி விட்டது . இதனால் தான் யாருக்கும் நன்றி கூடச்சொல்லவில்லை .


சவுக்கு போன்ற வீரியமான வீச்சும் , கழுகு , ஆந்தை , வௌவால் போன்ற  விசாலமான பார்வையும் கொண்ட ராஜாளி பறவைகள் வசிக்கும் இந்த வலைப்பூ வனத்தில் , இந்த வண்ணத்துப்பூச்சியும் தன்  இருப்பை தெரிவிக்கவே இந்த வலைப்பூ . வண்ணத்து பூச்சியைபோலவே இந்த தளம் , பெயர் ஓர் கவர்ச்சியை தரலாம், ஆனால் நீங்கள் நினைப்பது போல் ...
நான் அவன் இல்லை” ..


வண்ணத்துப்பூச்சி பறக்கும் .....


5 comments:

  1. அப்படி இப்படி என்று சொல்லிக்கொண்டே, சொல்கிற விசயத்தை (பத்மஸ்ரீ விருது) சரியா சொல்லிட்டீங்க பாஸ்... மற்றபடி ராமையா எல்லாம் நம் மனதைப் பொறுத்து...

    பறவைகள், விலங்குகள் இருக்கலாம்... நாம் மனிதனாக இருப்போம்...

    ReplyDelete
  2. மனசைத் தளர விடாதீங்க... இலக்கு ஒண்ணு வச்சிக்கிட்டுஅதை நோக்கி ப யணியுங்கள்... நடப்பது நல்லதாகவே இருக்கும்....

    ReplyDelete
  3. அருமையான பதிவு! வாழ்த்துக்கள்! வண்ணத்துப்பூச்சி யின் வண்ணங்களை காண ஆவலொடு இருக்கிறேன்! நன்றி

    ReplyDelete
  4. //இதுனாலேயே சுமாரான சுப்பையா , சூப்பர் சுப்பையாவா அடையாளம் காணப்பட்டேன் ( வேலைக்கு வந்த பின்னாடி சூப்பர்வைசர் சுப்பையா வா மாறி இப்ப மெர்ச்சண்டைசர் சுப்பையாவா அடையாளம் காணப்படுகிறேன் .. ) .// ஹா ஹா ஹா

    யோவ் என்னய்யா இது >... இது ஒரு வழக்கமான பதிவுன்னு வாசிச்சிட்டு வந்தா பொசுக்குன்னு நா பண்ணின காரியத்த பத்தி எழுதி இருக்கீரு....

    கழுகும் ராஜாளியும் பறக்கத் தொடங்குவது தரையில் இருந்து தான், எதுவுமே அனுபவம் கிடைக்க கிடக்க தான் உயர உயர பறக்கும்...

    தெரிந்தோ தெரியாமலோ உங்களை நீங்கள் சற்றே குறைந்து மதிபிடுகிரீர்கள், உங்கள் எழுத்து வசீகரிக்கும் விதமாய் தான் உள்ளது, தொடர்ந்து எழுதுங்கள் நண்பா...

    நான் சொல்ல விரும்புவதை எத்தனை பேர் ரசிப்பார்கள் என்று தெரியாது, ஆனாலும் உங்கள் எழுத்துக்கென்று ஒரே ஒரு வாசகர் இருந்தாலும் மகிழ்ச்சி தான்....

    //வண்ணத்துப்பூச்சி பறக்கும் .....// வண்ணத்துபூச்சி பூச்சி உயரப் பறந்தால் யாருக்கும் தெரியாமல் போய்விடும், காரணம் அது சாதாரணமாய் பறந்தாலே அழகு தான்....



    ReplyDelete
  5. super subbu .i wish u global success in your effort - m.s.muthiah, pon.puduppatti

    ReplyDelete

Related Posts with Thumbnails