Showing posts with label தமிழ் .. Show all posts
Showing posts with label தமிழ் .. Show all posts

Jul 18, 2013

செம்மொழியான தமிழ்மொழியே ...!





“சொல்லுங்கண்ணேன் சொல்லுங்க” , “கொஞ்சம் நடிங்க பாஸ்” இந்த ரெண்டு நிகழ்ச்சிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும் . ரெம்ப, ரெம்ப சுவாரஸ்யமான நிகழ்ச்சி . ரெம்ப சாதாரணமான விசயங்கள, மக்கள் எப்படி புரிஞ்சுவச்சுருக்காங்கன்னும் , எந்த மாதிரி அதை வெளிப்படுத்துராங்கன்னும் பார்க்கும்போது செம்ம காமெடியா இருக்கும் . (அடுத்தவங்க பல்பு வாங்குறத பார்க்குறது  யாருக்குத்தான் பிடிக்காது...! ).

இந்த நிகழ்ச்சிகளை பார்க்கும்போதெல்லாம் , எனக்கு ஓர் ஆச வரும் , மேற்படி நிகழ்ச்சி மாதிரி தமிழ்நாட்டின் ஏதாவதொரு ஊரின் பொது எடத்துல , படிச்ச பத்து பேர நிறுத்தி வெள்ளக் காகிதம் கொடுத்து, ஒரு பக்கத்துக்கு தமிழ்ல எழுதுங்க மக்களே ன்னு சொல்லனும்னு ...! அப்டி எழுத வச்சு, அதப்படிச்சுப்பாத்தோம்னு வைங்க.. ச்சும்மா சிப்பு சிப்பா இருக்கும் . வடிவேலு , சந்தானம் காமெடில்லாம் பிச்சை எடுக்கணும், அப்டி அதகளமா இருக்கும்.

சாமி சத்தியமா பத்துக்கு நாலு பேரு , நாலு வரிக்கு மேல தாண்டமாட்டாங்க ... சொச்சத்துல பாதி பேரு, வரிக்கு ரெண்டு எழுத்துப்பிழையோடு தான் எழுதிருப்பாங்க . எழுத்துப்பிழை தவிர்த்து , இலக்கணப்பிழை , சந்திப்பிழையல்லாம் பாத்தோம்னா ஒருத்தரும் தேரமுடியாது . அதுதான் இன்றைய நிலை .

பள்ளிப்பருவத்தோடு முடிஞ்சுபோச்சு தமிழ்ல எழுதுறது . கல்லூரில, கடமைக்கு ஒரு தாள் தமிழ் . மற்றபடி வேலைக்கு வந்த பிறகு எங்கும் ஆங்கிலம் . தமிழ்ல எழுதுரதுக்கான வாய்ப்பே இல்ல . ஏன், பொதுவா எழுதுறதுக்கான வாய்ப்பே இல்லாமப்போச்சு அல்லது போக்கடித்துவிட்டோம் . தினசரி நாம ஏதாவது எழுதுரோமான்னு யோசிச்சு பத்தா, கையெழுத்து போடுவத தவிர வேறெதுவும் இருக்குற மாதிரி தெரியல  . அதுவும் சில நேரங்கள்ல டிஜிட்டல் கையெழுத்து இல்லைன்னா பஞ்சிங் ன்னு ஆயிடுத்து . ரெண்டாவது, கையெழுத்துப் போடுரதையெல்லாம் எழுத்துலேயே சேர்க்கமுடியாது . கைக்கு வந்தத கிறுக்குறது தானே கையெழுத்து ...!

கடிதம் ..? காணமல் போன பட்டியல்ல கூட இன்னைக்கு கடிதம் என்ற ஒன்னைக் காணமுடியல  . திருமணப்பத்திரிக்கைகள் கூட இன்னைக்கு ஆங்கிலம் தாங்கி தானே வருது...! நேர்ல கொடுக்குற ஒருசிலர் , பேரே எழுதுறதில்ல, மொட்டையாத்தான் கொடுக்குறாங்க ...!

ஏதோ தப்பித்தவறி வலைப்பூவுல எழுதுறதுனால, வட மாநில நடிகைகள் சொல்வது போல  கொஞ்சும் கொஞ்சும் தமிழ் வார்த்தைகள் ஞாபகத்துல இருக்கு . இதக்கூட முழுமையான தமிழ் ன்னு சொல்லமுடியாது தமிங்கிலீஸ் தான் . கைப்பட காகிதத்துல எழுதும்போதுதான் நம்ம லட்சணம் நமக்கே தெரியுது .  இந்த காற்புள்ளி , அரைப்புள்ளி , ஆச்சர்யக்குறியெல்லாம் எங்க போடனும்னு தெரியாத தற்குரிகள்ல நானும் ஒருத்தேன்னு சொல்றதுக்கு வெட்கமாத்தான் இருக்கு. ஆனா அது தான் உண்மை . கொஞ்சம், நா எழுதுன பதிவுகள(!) படிச்சுப்பாத்தா , கோபிநாத் எப்டி நிமிசத்துக் பத்துத்தடவ வேற, வேற ன்னும் , சரிதானேன்னும் சொல்றமாதிரி, குறைந்தபட்சம் நாலு வரிக்கு ஒரு எடத்துலயாவது மூணு புள்ளியும் ஓர் ஆச்சர்யக்குரியும் போட்டிருப்பது நல்லாவே தெரியுது ...!

திடீர்ன்னு இவனுக்கு என்ன தமிழ்ப்பற்று வந்துருச்சுன்னு உங்களுக்கு தோணலாம், அதற்கு காரணம் சமீபத்தில படித்த ஒரு பதிவு . எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள் எனக்கு ரெம்பப்பிடிக்கும் . அவரயே ஒருத்தரு கயுவி,கயுவி ஊத்திருக்காரு . பரவலான வாசிப்பு அனுபவமும் , எழுதுகின்ற  அனுபவமும் இருக்க அவருக்கே இப்டின்னா ...?

சரின்னு இதப்படிச்சு முடிச்சு வீட்டுக்கு போனா அடுத்த அதிர்ச்சி அங்கே செலவுச்சிட்டையில காத்திருந்தது  ...!

பொதுவா , அம்மா எப்ப கடைக்கு போய் வந்தாலும் செலவுக்கணக்கு கண்டிப்பா எழுதீருவாங்க, அது அரரூவாயா இருந்தாலும் சரி ஆயிரம் ரூவாயா இருந்தாலும் சரி ...! பெரும்பாலும் நா வீட்டுல இருக்கும்போது என்னையதான் எழுதச்சொல்லுவாங்க . டாக்டர்களுக்கு போட்டியா அண்ணாச்சிக கிறுக்கீருக்கத, முட்டக்கிளாஸ் வெளக்கு வெளிச்சத்துல படிச்சு சிட்ட எழுதுறதுங்குறது சிறுவயதுல ஒரு பெரிய சவால் . உ.ப , து.ப ல்லாம் போட்டு சிட்டய முடிச்சா ரெண்டரையோ , மூனரையோ இடிக்கும். இதர செலவுன்னு போட்டு கணக்கு முடிக்கலாம்னா அம்மா வுடாது . யோசிச்சு யோசிச்சு கடசில கணக்கு நேர் பண்ணீரும் . அதுவரைக்கும் தூங்காது , தூங்கவும் வுடாது  ...! படிக்காட்டியும் , கொஞ்சம் வருஷம் முன்னாடி வரைக்கும்  இந்தியன் பாட்டி மாதிரி, ஒத்த ஒத்த எழுத்தா, அழுத்தி அழுத்தி எழுதி  அம்மா செலவு சிட்ட போட்டுட்டுதான் இருந்தாங்க  . இப்பத்தான் போடுறதுல்ல , உண்மைய சொன்னா போட முடியல. இப்பல்லாம், பெரும்பாலும் அண்ணாச்சி கடையில கூட ஆங்கிலத்துல தானே ரசீது தர்றாங்க, அதான் .  

நம்ம வீட்டுக்காரம்மா போன மாசம்தான் பட்டயப்படிப்பு முடிச்சு பட்டம் வாங்கி வீட்டுக்கு வந்துருக்காக . அதுனால இந்த மாச செலவு சிட்டய அவுகதான் எழுதீருந்தாக. அதுலதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது ....! அது .....


மல்லிகை சாமான் வாங்கிய வகையில் செலவு ருபய் : 1150.00

என்னம்மா இப்டி எழுதீருக்கன்னு கேட்டா , நா என்ன பண்றது தமிழ்ல எழுதி நாலஞ்சு வருசமாச்சு, காலேஜ்ல புல்லா இங்கிலீசுலதான் படிச்சேன் , எழுதுனேன் அதான் அப்டிங்குராக .
என்னத்தச்சொல்ல ...!

ஆங்கிலோ இந்தியன் வீடுகள்ல வேல பாக்குற படிக்காத வேலைக்கார அம்மாவுக்கு , ஆங்கிலம் பேசத்தெரியும் , ஆனா படிக்கவோ , எழுதவோ தெரியாது . அந்த மாதிரி ஆயிடுச்சு இன்னைக்கு நம்ம நெலம.


செம்மொழியான தமிழ்மொழியே
உனக்கிது பெரும் வலியே...!


வேண்டுகோள் : இந்தப்பதிவுல கூட நெறைய எழுத்துப்பிழை இருக்கலாம் . என்னன்னு சொன்னீங்கன்னா திருத்திக்குவேன் .

சிபாரிசு : “அம்மா ,ஆடு , இலக்கணம்” அப்டிங்க்குற தலைப்புல கட்டுரையாளர் / எழுத்தாளர் என்.சொக்கன், தமிழ்பேப்பர் தளத்துல தமிழ் இலக்கணத்தொடர் எழுதீட்டு வர்றார் . தேவைப்படுபவர்கள் (சு)வாசித்து எழுதிப்பழகலாம் .