Jan 3, 2021

பேசாதவார்த்தைகள்#030121

 

பேசாதவார்த்தைகள்#030121



ஊர்சுத்தீசின் இரண்டாம் பயண இலக்காகக் குறிக்கப்பட்டது பொன்னூத்து. அனுவாவிக்கு சென்று வந்த அடுத்தடுத்த வாரங்கள் தட்டிப்போக , பயணம் தாமதமாகிக்கொண்டே வந்தது. இதனிடையே குரூப்புல டூப்பாக ஓர் அணி உருவாகி , திருச்செந்தூர் பயணத்திட்டம் போட்டார்கள். இதுவரை போனதில்லையே, வந்த வாய்ப்பை எதற்ககாக தவறவிட வேண்டுமென்று, ஸ்லீப்பர் செல்லாகி அங்கேயும் ஒரு துண்டைப் போட்டு வைத்தேன். அடுத்தடுத்த நாட்களில், திருச்செந்தூர் பயணத் திட்டத்தை பற்றியும், கடைபிடிக்கவேண்டியவை என்று என்று இவர்கள் பட்டியலிட்டதை பார்த்து குளிர் ஜூரமே வந்துவிட்டது எனக்கு. மொத்த பயண தூரம் 1000 கிலோ மீட்டர்களாம் ; சனிக்கிழமை.ஐந்து மணிக்கு ஒண்டிப்புதூர் சந்திப்புக்கு சாப்பாட்டு பொட்டலத்தோடு வந்துவிடவேண்டுமாம் ; ஞாயிறு நள்ளிரவு நாலு மணிக்கு சுவாமி தரிசனமாம் அதுவும் மேற்சட்டை அணியாமல். போங்கய்யா போங்க என்று சொல்லி, கம்போர்டேரரை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டேன். என்னைத்தவிர ஏனையோர் இரண்டு நாட்கள் பயணத்தை இனிதே முடித்துத் திரும்பினர். பதிலுக்குப் பதிலாக அல்வா வாங்கி வந்தும் தந்தனர்.



சரியாக ஒரு மாதம் கழித்து, கடந்த சனிக்கிழமை ஓர் எண்ணிக்கை கூடுதலாக , நால்வராக பொன்னூத்து பயணப்பட்டோம். காந்திபுரத்திலிருந்து சற்றேறக்குறைய 20 கிலோ மீட்டர்கள் இருக்கும். கணுவாய் சந்திப்பிலிருந்து , வலது பக்கம் , சந்துபோல பிரிந்து செல்லும் ஓர் கிளைச் சாலையில் பயணிக்க வேண்டும். சரியான வழிகாட்டும் பலகைகள் ஏதுமில்லை. கூகிளை மட்டுமே நம்பியிராமல் , ஊர்காரர்களிடம் விசாரித்துச் செல்லல் நலம். லாலி ரோட்டிலிருந்து ஆணைகட்டி செல்லும் சாலை குண்டும் குழியுமாக , அதீத வாகன நெரிசலோடு , மருத்துவக்காப்பீட்டை என்ன சேதி என்று கேட்கிறது. செங்கற்சூலையை முன்னிறுத்தி சீறிப்பாயும் லாரிகளின் உபாயம். ஆகவே அதீத கவனம் அவசியம்.  வீடுகளுக்குள்ளாக புகுந்து புறப்படுவதுபோல போகிறது சாலை. இரண்டு மூன்று கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு மற்றுமோர் பிரதான சாலையில் இணைந்து மறுபடியும் ஒரு கிளைச்சாலை. வரைபடப்படி 15 கிலோ மீட்டர்தான் ஆனால் நீண்டுகொண்டே போகிறது. திருப்பங்களில் நிறைய close call க்கு சாத்தியம், போக அநேக வீட்டு வாசல்கள், சாலையில் இருக்கிறது. ஆகவே கவனமாக வாகனங்களை செலுத்துவது அவசியம்.



பொன்னூத்துக்கான பிரதான சாலையில் , மிகப்பெரிய ஆல அரச மரங்கள் நம்மை வரவேற்கிறது. வண்டியை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும்போதுதான் கவனித்தோம் , புத்தம் புதிய சாணத்தின் மூலம் , யானைகள் தமது இருப்பைத் தெரிவித்திருப்பதை. மேற்கொண்டு காலதாமதம் செய்யாமல் , சிற்பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டு , மேற்கொண்டு பயணித்தோம். அடிவாரத்தில் டோக்கன் வாங்கிக்கொண்டு திறந்த வெளியில் வண்டியை பார்க் செய்யச் சொல்கிறார்கள். அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தூரம் , சரிவான மண் பாதையில் ஏறவேண்டும். ஒயிட் காலர் ஜாபர்களுக்கு நாக்குத் தள்ளும். கொஞ்சம் கவனம் பிசகினாலும் , சறுக்கல் சாத்தியம். இருநூறு மீட்டர்க்குப் பிறகு , கற்படிகள் ஆரம்பமாகிறது. அங்கிருந்து சுமார் 200 படிகளைக் கடந்தால் கோவில்.



கோவிலின் ஒருபுறம் ஏறி, மறு புறம் இறங்கினால் , சிறிய குடைவரைக் கோவிலும், அதனருகிலேயே பதினைந்து, இருபது அடித் தூரத்திலிருந்து விழும் சிற்றருவியும் காட்சியின்பம். நாங்கள் நண்பகலில் தான் மலேயேறினோம், ஆனபோதிலும் இதமான சூழல். மிகக் குளுமையாக இருக்கிறது. காற்றின் சப்தமும் , நீரின் குளுமையும் அனுபவிக்க பரவசம். முன்னேற்பாடாக ஒரு செட் மாற்றுடை, குத்தாலம் துண்டு எல்லாம் கொண்டு சென்றிருந்ததினால் , நான் மட்டும் நீராடினேன். ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியை எதிர்பார்த்துச் சென்றிருந்த எனக்கு, ஆறேழு சிறார்கள் ஒன்றாய்ச் சேர்ந்து நின்று ஒன்னுக்கு விட்டதுபோல போல இருந்தது சற்று ஏமாற்றம் அளித்தாலும், முதலுக்கு மோசமில்லை. சிலபல கோணங்களில் உடம்பை அஷ்டகோணலாக்கி நனைந்துகொண்டேன். ஃப்ரீசரில் வைத்தெடுத்தது போல இருந்தது தண்ணீர்.



நீராடி முடித்ததும் , பொன்னூத்து அம்மனை தரிசிக்கச் சென்றோம். குகைக்குள் பூசாரி தவிர்த்து இருவர் அல்லது மூவர் மட்டுமே அமர இயலும். உடம்பை எட்டாய் மடித்துத் தலைவணங்கி தான் உள் செல்ல இயலும். பெயர்களையும், நட்சத்திரங்களையும் கேட்டுச் சொல்லி அர்ச்சித்தார் பூசாரி. இரண்டடி உயரத்தில் அம்மன் அற்புதமான அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். தண்ணீர் ஊற்று அம்மனின் நாலு புறங்களிலும் ஊர்ந்து வருகிறது. அதுதான் தீர்த்தம். திவ்யம். அம்மன் தவிர்த்து, விநாயகர் , ஆஞ்சநேயர், முருகருக்கென்று தனித்த சந்நிதி இருக்கிறது. மலையைக் குடைந்து ஓர் தியான மண்டபமும் உண்டு. இங்கேயும் தணிந்து, பணிந்து தான் செல்ல இயலும். அதிகபட்சம் மூவர் மட்டுமே சம நேரத்தில் தியானிக்கலாம். தியானத்தில் இருக்கும்போது செவிகளில் கேட்கும் காற்றின் சப்தமும், நகரும் நீரின் ஓசையும் புது அனுபவத்தைத் தருகின்றது. மேற்படி கோவிலுக்கும் மேலாக மொட்டைப் பாறைகள் உண்டு. சாகச விரும்பிகள் உலாத்திக்கொண்டிருந்தனர்.



மொத்தத்தில் நல்லதொரு அனுபவம். குடும்பம் சகிதமாக சென்று வரலாம். யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியென்பதினால், காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் சென்று வருதல் நலம். ரூபாய் 2000 பெறுமானமுள்ள , வாங்கி வருடமே ஆன எனது நைக் ஷூ காணாமல் போகாதிருந்தால் இன்னும் நிறைவான பயணமாக இருந்திருக்கும்✨




1 comment:

Related Posts with Thumbnails