Jan 17, 2021

பேசாத வார்த்தைகள் #170121
ஊர் சுத்தீசின் மூன்றாம் பயணமாக பழனி உறுதி செய்யப்பட்டு , ஜனவரி இரண்டாம் திகதி சென்று வந்தோம்.  பழனியைத் தெரிவு செய்ததில் எனது சென்டிமெண்டும் அடங்கும். பால்யத்தில், பெற்றோருடன் பழனிக்குப் பாதயாத்திரை சென்றதுண்டு. ஏழு அல்லது எட்டு நாள்ப் பயணம். வழி நெடுகிலும் உண்பதற்கும், அருந்துவதற்கு ஏதேனும் தந்துகொண்டே இருப்பார்கள். தாராளமாகக் கொள்ளக்கூடிய ஜோல்னா பை ஒன்றை எடுத்துக்கொண்டால் போதும் . பத்து நாட்களை பதுவிசாக களித்துவிடலாம். பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம் என்று கட்டுப்பாடுகள் இல்லாமல் , சுதந்திரமாகச் சுற்றலாம். வாத்தியாரும் சரி வீட்டினரும் சரி, எவ்வளவு சேஷ்டை, குறும்புகள் செய்தாலும் அடிக்க மாட்டார்கள். கன்னி சாமியாம் 🙂. மேற்படி சலுகைகளுக்காவே தையை எதிர்பார்த்திருப்போம். இப்போது வாட்ஸாப் பிரைவசி பற்றி எல்லோரும் அரற்றிக்கொண்டிருக்கிறார்கள். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பான பாதயாத்திரையில், சாலையில் , சாக்பீஸ்கள் கொண்டு மெசேஜ் பாஸ் செய்துகொள்வார்கள். நத்தத்திற்கு முன்பே பெற்றோரை தவறவிட்டுட்டு , திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் காத்திருப்பதாக சாலையில் தகவல் எழுதிவிட்டுச் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது.கல்லூரி சென்ற பிறகு பழனி செல்வது நின்று போனது, கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து , 2016 ஜனவரியில்  பணி நிமித்தம் உடுமலை சென்றிருந்தேன். உடன் வேலைபார்க்கும் சகா ஒருவருடன். சென்ற வேலை சீக்கிரமே முடித்துவிட, இரவல் வாகனம் வாங்கிக்கொண்டு பழனிக்கு ஒரு திட்டமிடாத விஜயம் செய்து வந்தோம். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அவ்வருடம் , மகள் பிறப்பு , பதவி உயர்வு என சுபிட்சமாக கடந்தது. சென்டிமெண்டாக அதற்கடுத்த மூன்று வருடங்களும் பழனிக்குப் போய் வந்தேன். பெரும்பாலும் தனியனாக. மிகச் சிறப்பாக அமைந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் மோசமில்லை. சென்ற வருடப் பயணம் தள்ளிப்போனது , கரோனவால் கடைசி வரை போக முடியாமாலும் போனது. 2020 எவ்வளவு சீறும் சிறப்புமாக போனதென்று நான் உங்களுக்குச்சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அடுத்தடுத்து கோவில்களாகத் தெரிவு செய்து பயணித்துக் கொண்டிருப்பதை நண்பர்கள் சிலர் பரிகசிக்கிறார்கள்.  கோவில்களை குறிப்பாக மலைக்கோவில்களை தேர்ந்தெடுத்துப் பயணிப்பது ,தேக ஆரோக்கிய சோதனைக்காவே. மற்றபடி பக்தி , ஆன்மீகம் என்பதெல்லாம் , சனிக்கிழமை வீட்டுத்தங்கலை தவிர்த்துவிட்டு ஊர் சுத்துவதற்கு வீட்டினரின் இசைவையும் , ஆதரவையும் சுமூகமாக பெறுவதற்கான ஒரு காரணம். அவ்வளவே !பழனி என்று முடிவான பின், எவ்வகையில் பயணிப்பதென்று வாட்ஸாப்பில் கூடிப்பேசி , இரயில், பேருந்து என்று பரிசீலித்து நிறைவாக வாடகை டாக்சி அமர்த்திக்கொண்டு பயணிப்பது என்று முடிவானது. ஆகும் செலவை சமமாக பங்கிட்டுக் கொள்வதென்றும் ஏகமனதாக முடிவு செய்து, காந்திபுரத்திலிருந்து காலை ஏழு மணிக்கு நால்வருடன் இன்டிகாவில் கிளம்பினோம். முன்னிருக்கையில் வயதில் மூத்தவரை அமர்த்திவிட்டு. பின்னிருக்கையில் இரண்டு மலைகளுக்கு நடுவே அடியேன் ஒடுக்கி, மடக்கி என்னை இருத்திக் கொண்டேன். இருங்கள், மலைகளென்றா சொன்னேன்!? நாளை அலுவலகம் போனால்  தாமரை மணாளன்கள் நசுக்கிவிடுவார்கள். மலைக்குப் பதிலாக குன்று என்று வாசித்துக்கொள்ளுங்கள்.கோவையிலிருந்து, பொள்ளாச்சி வரையிலான சாலையை, தார் கொண்டும் , சிமெண்ட் கொண்டும் இழைத்திருக்கிறார்கள். வாகனங்கள் வெண்னெயில் வழுக்கிக்கொண்டு போகும் கத்தி போல விரைகிறது. அதே சமயம் அச்சமாகவும் இருக்கிறது. நாங்கள் சென்று திரும்பிய போதும் மட்டும் நான்கைந்து விபத்துகளைக் கண்ணெதிரில் கண்டோம். பொள்ளாச்சிக்குப் பிறகான சாலை மிகவும் குறுகலாகவும் , நெரிசலாகவும் இருக்கிறது. சுமார் 9.30 மணி வாக்கில் பழனியடைந்தோம். 50 ரூபாய்க்கான டோக்கனைத் தந்துவிட்டு , 60 ரூபாய் கேட்டுப் பெற்றுக்கொண்டார்கள் வாகனக் கட்டணமாக. ஆவினன்குடி முருகரைத் தரிசித்துவிட்டு, அடிவாரத்தில் இருக்கும் அய்யர் களப்பில் , காலை உணவாக , மைதாமாவு தோசையையும், திரவ இட்டலியையும், கடலை மாவு கரைத்துவிட்ட சாம்பரையும் எடுத்துக்கொண்டோம். கொண்டுபோயிருந்த வேஷ்டி சட்டையை , மடம் ஒன்றில் கட்டணம் செலுத்தி உடுத்திக்கொண்டு மலையேறத் தயாரானோம்.அடியேனும் , நண்பரும் முறையே இரத்த அழுத்த, சர்க்கரை வியாதிக்காரர்கள் என்பதினால் மலையேறத் தயங்கி , வின்ச்சை நாடச்சொல்லி வற்புறுத்தினோம். கரோனா காரணமாக வின்சிற்கு இணைய முன்பதிவு செய்யவேண்டுமாம். போக இரண்டு மணி நேரம் காத்திருக்கவும் வேண்டுமாம். கொஞ்சம் தூரம் போய் வின்ச் கார் மேலேறுவதை வேடிக்கை பார்த்தேன். கால்களிரண்டும் நழுவி, தலை சுற்றி எங்கேயோ அடி ஆழத்தில் வீழ்ந்துகொண்டிருப்பது போல ஆகிவிட்டது. . ரோப் கார் என்று இழுத்தோம். அதுவும் இப்படித்தான் தொங்கும் , அதற்கும் இரண்டு மணி நேரம் தொங்கல் என்றார்கள். ஆள விடுங்கடா சாமி , தவழ்ந்தே மலேயேறிக்கிறேன் என்று சொல்லி யானைப்பாதையை நோக்கி நடையைப் போட்டோம். தைப்பூசத்திற்கான பராமரிப்பு பணிகள்நடைபெறுவதாலும், கரோனா பாதுகாப்பு நிமித்தமும் வழக்கமான தலைவாசல் பாதையை மூடிவிட்டார்கள். ஓர் அரைப் பர்லாங் சுற்றி வந்து , உடற்சூடு சரிபார்க்கப்பட்டு , கிருமிநாசினி தெளிக்கப்பட்டு யானைப்பாதையில் பயணிக்கப் பணிக்கப்பட்டோம்.உடன் வந்த தா. மணாளன்கள் இருவரும் சடுதியில் மலையேறிவிட , நானும் , நண்பர் சர்க்கரையும் ஒவ்வொரு குடுமி ஊசி வளைவுகளிலும் உட்கார்ந்து ஓய்வெடுத்து, அயோடக்ஸ், மூவ் விளம்பர ஆண்டிகள் போல உடல் வளைத்து, முதுகு கூனி மிக மெதுவாக தவழ்ந்தேறினோம். வழக்கத்தை விட மிகவும் சோர்வாக உணர்ந்தேன். சேர நன்னாட்டினரின் வருகைக்குறைவும் ஒரு காரணமாக இருக்கலாம். சுமார் 1 மணி நேர பெரு(மூச்சு) முயற்சிக்குப் பிறகு உச்சியை வெற்றிகரமாக அடைந்தோம். நல்ல தேக சுத்தி உள்ளவர்கள் பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் மலையேறி விடுவார்களாம். நண்பர் சொன்னார். நடை சாத்தும் நேரமென்பதினால் மணாளன்கள் நெட்டித் தள்ளிக் கூடிபோனார்கள். நான் தனியாக சென்றிருந்தால் ஆற அமர உட்கார்ந்து சேவித்துத் திரும்பியிருப்பேன். கடந்த முறை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் உட்கார்ந்து காத்திருந்து தரிசித்துத் திரும்பினேன். அவ்வளவு பொறுமை எப்படி வந்தது என்று எண்ணி எனக்கு நானே ஆச்சரியப்பட்டுக்கொண்டேன். அது பொறுமையல்ல வயோதிகம் காரணமாக வந்த இயலாமை என்று பிறிதொருநாள் உணர்ந்தும் கொண்டேன். ராஜ அலங்காரம் , ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டு 30 வினாடிகள் முருகரை நோக்கித் திரும்பினோம்.மலையில், வின்ச் வந்திறங்கும் இடத்தில் காஃபி கிளப் ஒன்று இயங்கிக்கொண்டிருப்பதை எங்கள் சாரதி சொல்லியிருந்தார். தரிசனம் முடித்து, சாரதியின் தகவலை நினைவில் வைத்து விரைந்தோம். சூடாக மெது வடை போட்டிருந்தார்கள். ஆளுக்கு இரண்டு வடையும் , தேநீரும் அருந்தினோம். வடையும் சட்டினியும் இலை போட்டுப் பரிமாறினார்கள். திவ்யம். தேநீர் பானகம் போலிருந்தது. சர்க்கரை நண்பர் கொஞ்சம் கூடுதலாக பால் வாங்கிக்கொண்டார். ஐயர் கடையில் தேநீரருந்துவது , முனியாண்டி விலாசில் தயிர் சாதம் சாப்பிடுவது போன்றது. அடுத்த முறை இத்தகைய தவறை செய்திடலாகாது.வடை தந்த ஆற்றலில் விறு விறுவென இறங்க ஆரம்பிதோம். கிட்டத்தட்ட கடைசி மண்டபத்திற்கு முன்பாக சர்க்கரை நண்பர் நின்றுவிட்டார். என்னவென்று ஏறிட்ட எனக்கு பூமியைக் காட்டினார். வடிவேலுவின் "பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்" காட்சியின் நேரலையை கண்டேன். அடுத்த நிமிஷமே எனக்கும் பேஸ்மட்டம் பூகம்பம் கண்ட கட்டிடடம் போல ஆட ஆரம்பித்துவிட்டது. அங்கேயே ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து ஸ்திரப்படுத்திக்கொண்டு கீழே இறங்கி வந்தோம்.வழமையைத் தொடரும் வண்ணம் சித்தனாதன் கடையில் விபூதி, குங்கும சந்தனப் பொட்டலங்களை வாங்கிக்கொண்டேன். இம்முறை பஞ்சாமிர்தத்தை மடத்தில் எவர்சில்வர் போத்தலில் வாங்கிக்கொண்டேன். அரைகிலோ நூறு ரூபாய். அம்மா கேட்ட கறுப்புக் கயிறு எளிதில் கிடைத்துவிட்டது. மனைவி கேட்ட முருகன் மோதிரமும் ; மகள் கேட்ட சிஞ்சான் பொம்மையும் எளிதில் கிடைக்காமல் அலையவிட்டது. சென்ற முறை சிஞ்சான் பொம்மைக்குப் பதிலாக பெயர் தெரியாத வேறொரு பொம்மையை வாங்கிக் கொண்டுபோய் மகளுக்குக் கொடுத்தேன். குதூகலத்தோடு வாங்கிக்கொண்டவள் சுமார் முப்பது வினாடிகள் அதையே உற்றுப் பார்த்துவிட்டு இது சிஞ்சான் இல்ல இவன் ஏமாத்திட்டான்னு மூஞ்சியில் விசிறியெறிந்துவிட்டாள். ஆகவே இம்முறை அசலோடு போனால்தான் ஆச்சு என்று கடை கடையாக ஏறி இறங்க ஆரம்பித்தேன்.நான் சிஞ்சான் பொம்மையை தேடுவதைப் பார்த்த நண்பர்கள், இவன் வாங்காமல் வரமாட்டான் போலயே என்று பங்குக்கு அவர்களும் தேட ஆரம்பித்துவிட்டார்கள். சகாவு ஒருபடி மேலே போய் , சிஞ்சான் பொம்மை என்று கூகிளிலிட்டு,  சிஞ்சான் பொம்மை சித்திரத்தை மனத்திலேற்றி ஒரு வழியாக ஒரு கடையில் கண்டிபிடித்துவிட்டார். ஆனால் அது பொம்மையில்லை , சிஞ்சான் பொம்மையிட்ட சாவிக் கொத்து. சரி பொன் வைக்குமிடத்தில் பூவையாவது வைக்கலாம் என்று வாங்கிக்கொண்டேன். மடத்திற்கு வந்து வேஷ்டி சட்டையிலிருந்து ஜீன்ஸ் டீசர்டிற்கு மாறிக்கொண்டு திரும்ப ஆரம்பித்தோம். வரும் வழியெங்கும் பழநி க்கு , "நி" வருமா இல்லை "னி" வருமா என்று நண்பர்கள் தமிழாராய்ச்சி செய்துகொண்டே வந்தார்கள்.நெடுந்தொலைவுப் பயணத்திற்கு இன்டிகா ஏதுவான வாகனமில்லை. சல்லிசான தொகை , எளிதில் கிடைக்கும் என்பது மட்டுமே அனுகூலம். சாரதி அனுபவஸ்தர் என்பதினால் திறம்பட செலுத்தினார். பெரிதாக அசதி தெரியவில்லை. நபர் ஒருவருக்கு ரூபாய் 7590 ஆனது. வரும் வழியில் டேக் டைவர்சன் போட்டு 15 கிலோமீட்டர் சுற்ற விட்டுவிட்டார்கள். மூன்றரை மணிக்குக் காந்திபுரம் வந்ததும் நண்பரின் ஆஸ்தான மெஸ்ஸில் அவரது உபயத்தில் மதிய உணவு முடித்துக்கொண்டு வீடு திரும்பினோம். 


பார்க்கலாம் 2021 என்னென்ன சுபிட்சங்களை தரவிருக்கிறது என்று✨


என்றென்றும் புன்னகையுடன்

ஜீவன் சுப்பு


 


Jan 3, 2021

பேசாதவார்த்தைகள்#030121

 

பேசாதவார்த்தைகள்#030121ஊர்சுத்தீசின் இரண்டாம் பயண இலக்காகக் குறிக்கப்பட்டது பொன்னூத்து. அனுவாவிக்கு சென்று வந்த அடுத்தடுத்த வாரங்கள் தட்டிப்போக , பயணம் தாமதமாகிக்கொண்டே வந்தது. இதனிடையே குரூப்புல டூப்பாக ஓர் அணி உருவாகி , திருச்செந்தூர் பயணத்திட்டம் போட்டார்கள். இதுவரை போனதில்லையே, வந்த வாய்ப்பை எதற்ககாக தவறவிட வேண்டுமென்று, ஸ்லீப்பர் செல்லாகி அங்கேயும் ஒரு துண்டைப் போட்டு வைத்தேன். அடுத்தடுத்த நாட்களில், திருச்செந்தூர் பயணத் திட்டத்தை பற்றியும், கடைபிடிக்கவேண்டியவை என்று என்று இவர்கள் பட்டியலிட்டதை பார்த்து குளிர் ஜூரமே வந்துவிட்டது எனக்கு. மொத்த பயண தூரம் 1000 கிலோ மீட்டர்களாம் ; சனிக்கிழமை.ஐந்து மணிக்கு ஒண்டிப்புதூர் சந்திப்புக்கு சாப்பாட்டு பொட்டலத்தோடு வந்துவிடவேண்டுமாம் ; ஞாயிறு நள்ளிரவு நாலு மணிக்கு சுவாமி தரிசனமாம் அதுவும் மேற்சட்டை அணியாமல். போங்கய்யா போங்க என்று சொல்லி, கம்போர்டேரரை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டேன். என்னைத்தவிர ஏனையோர் இரண்டு நாட்கள் பயணத்தை இனிதே முடித்துத் திரும்பினர். பதிலுக்குப் பதிலாக அல்வா வாங்கி வந்தும் தந்தனர்.சரியாக ஒரு மாதம் கழித்து, கடந்த சனிக்கிழமை ஓர் எண்ணிக்கை கூடுதலாக , நால்வராக பொன்னூத்து பயணப்பட்டோம். காந்திபுரத்திலிருந்து சற்றேறக்குறைய 20 கிலோ மீட்டர்கள் இருக்கும். கணுவாய் சந்திப்பிலிருந்து , வலது பக்கம் , சந்துபோல பிரிந்து செல்லும் ஓர் கிளைச் சாலையில் பயணிக்க வேண்டும். சரியான வழிகாட்டும் பலகைகள் ஏதுமில்லை. கூகிளை மட்டுமே நம்பியிராமல் , ஊர்காரர்களிடம் விசாரித்துச் செல்லல் நலம். லாலி ரோட்டிலிருந்து ஆணைகட்டி செல்லும் சாலை குண்டும் குழியுமாக , அதீத வாகன நெரிசலோடு , மருத்துவக்காப்பீட்டை என்ன சேதி என்று கேட்கிறது. செங்கற்சூலையை முன்னிறுத்தி சீறிப்பாயும் லாரிகளின் உபாயம். ஆகவே அதீத கவனம் அவசியம்.  வீடுகளுக்குள்ளாக புகுந்து புறப்படுவதுபோல போகிறது சாலை. இரண்டு மூன்று கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு மற்றுமோர் பிரதான சாலையில் இணைந்து மறுபடியும் ஒரு கிளைச்சாலை. வரைபடப்படி 15 கிலோ மீட்டர்தான் ஆனால் நீண்டுகொண்டே போகிறது. திருப்பங்களில் நிறைய close call க்கு சாத்தியம், போக அநேக வீட்டு வாசல்கள், சாலையில் இருக்கிறது. ஆகவே கவனமாக வாகனங்களை செலுத்துவது அவசியம்.பொன்னூத்துக்கான பிரதான சாலையில் , மிகப்பெரிய ஆல அரச மரங்கள் நம்மை வரவேற்கிறது. வண்டியை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும்போதுதான் கவனித்தோம் , புத்தம் புதிய சாணத்தின் மூலம் , யானைகள் தமது இருப்பைத் தெரிவித்திருப்பதை. மேற்கொண்டு காலதாமதம் செய்யாமல் , சிற்பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டு , மேற்கொண்டு பயணித்தோம். அடிவாரத்தில் டோக்கன் வாங்கிக்கொண்டு திறந்த வெளியில் வண்டியை பார்க் செய்யச் சொல்கிறார்கள். அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தூரம் , சரிவான மண் பாதையில் ஏறவேண்டும். ஒயிட் காலர் ஜாபர்களுக்கு நாக்குத் தள்ளும். கொஞ்சம் கவனம் பிசகினாலும் , சறுக்கல் சாத்தியம். இருநூறு மீட்டர்க்குப் பிறகு , கற்படிகள் ஆரம்பமாகிறது. அங்கிருந்து சுமார் 200 படிகளைக் கடந்தால் கோவில்.கோவிலின் ஒருபுறம் ஏறி, மறு புறம் இறங்கினால் , சிறிய குடைவரைக் கோவிலும், அதனருகிலேயே பதினைந்து, இருபது அடித் தூரத்திலிருந்து விழும் சிற்றருவியும் காட்சியின்பம். நாங்கள் நண்பகலில் தான் மலேயேறினோம், ஆனபோதிலும் இதமான சூழல். மிகக் குளுமையாக இருக்கிறது. காற்றின் சப்தமும் , நீரின் குளுமையும் அனுபவிக்க பரவசம். முன்னேற்பாடாக ஒரு செட் மாற்றுடை, குத்தாலம் துண்டு எல்லாம் கொண்டு சென்றிருந்ததினால் , நான் மட்டும் நீராடினேன். ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியை எதிர்பார்த்துச் சென்றிருந்த எனக்கு, ஆறேழு சிறார்கள் ஒன்றாய்ச் சேர்ந்து நின்று ஒன்னுக்கு விட்டதுபோல போல இருந்தது சற்று ஏமாற்றம் அளித்தாலும், முதலுக்கு மோசமில்லை. சிலபல கோணங்களில் உடம்பை அஷ்டகோணலாக்கி நனைந்துகொண்டேன். ஃப்ரீசரில் வைத்தெடுத்தது போல இருந்தது தண்ணீர்.நீராடி முடித்ததும் , பொன்னூத்து அம்மனை தரிசிக்கச் சென்றோம். குகைக்குள் பூசாரி தவிர்த்து இருவர் அல்லது மூவர் மட்டுமே அமர இயலும். உடம்பை எட்டாய் மடித்துத் தலைவணங்கி தான் உள் செல்ல இயலும். பெயர்களையும், நட்சத்திரங்களையும் கேட்டுச் சொல்லி அர்ச்சித்தார் பூசாரி. இரண்டடி உயரத்தில் அம்மன் அற்புதமான அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். தண்ணீர் ஊற்று அம்மனின் நாலு புறங்களிலும் ஊர்ந்து வருகிறது. அதுதான் தீர்த்தம். திவ்யம். அம்மன் தவிர்த்து, விநாயகர் , ஆஞ்சநேயர், முருகருக்கென்று தனித்த சந்நிதி இருக்கிறது. மலையைக் குடைந்து ஓர் தியான மண்டபமும் உண்டு. இங்கேயும் தணிந்து, பணிந்து தான் செல்ல இயலும். அதிகபட்சம் மூவர் மட்டுமே சம நேரத்தில் தியானிக்கலாம். தியானத்தில் இருக்கும்போது செவிகளில் கேட்கும் காற்றின் சப்தமும், நகரும் நீரின் ஓசையும் புது அனுபவத்தைத் தருகின்றது. மேற்படி கோவிலுக்கும் மேலாக மொட்டைப் பாறைகள் உண்டு. சாகச விரும்பிகள் உலாத்திக்கொண்டிருந்தனர்.மொத்தத்தில் நல்லதொரு அனுபவம். குடும்பம் சகிதமாக சென்று வரலாம். யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியென்பதினால், காலை 10 மணி முதல் மாலை 4 மணிக்குள் சென்று வருதல் நலம். ரூபாய் 2000 பெறுமானமுள்ள , வாங்கி வருடமே ஆன எனது நைக் ஷூ காணாமல் போகாதிருந்தால் இன்னும் நிறைவான பயணமாக இருந்திருக்கும்✨
Nov 23, 2020

பேசாத வார்த்தைகள் #231120 ~ அனுவாவி பயண அனுபவம் !

பேசாத வார்த்தைகள் #231120 ~ அனுவாவி பயண அனுபவம் !


திருப்பூரிலிருக்கும் போதே அறியக் கேட்டிருக்கிறேன். வழக்கமாக கோவையில் பார்க்கக் கூடிய இடங்கள் என காலம்காலமாக மருதமலையையும், சமீபமாக வெள்ளிங்கிரி ஈஷாவையும் சொல்வார்கள். அதையும் தாண்டி அதிகம் பிரபலமாகாத ,  ஆனால் அவசியம் பார்க்கத்தகுந்த இடங்கள் அநேகம். அதில் அனுவாவி சுப்ரமணியர் கோவிலும் ஒன்று. மருதமலைக்கு நேர் பின்னால் அமைந்திருக்கிறது.ஒரு மாதத்திற்கு முன்பாக அனுவாவி பயணம் பற்றி அலுவலகத்தில் பேச்செடுத்த போது நான் நீ என்று பத்து பேர் பக்கம் கைகளைத் தூக்கினார்கள். கடைசியில் ஒரு மாதமாக திட்டமிட்டு  கடந்த சனியன்று அலுவலக சகாக்கள் இருவருடன் சேர்நது மூவராக சென்று வந்தோம். அலுவலக சகாக்களுடன் செல்வதில் சில சகாயங்கள் உண்டு. அலுவலகத்தில் ஏற்படும் சிறு சிறு உரசல்கள் நெருப்பாய் பற்றி எரிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள  இது போன்ற பயணங்கள் உதவிடும் என்று நம்புகிறேன். 

வடவள்ளியிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் , காந்திபுரத்திலிருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவிலும் உள்ளது அனுவாவி. ஆனைகட்டி செல்லும் பிராதான சாலையிலிருந்து இடது புறமாகப் பிரிந்து ஒரு மூன்று கிலோமீட்டர் சென்றால் அனுவாவி முருகரின் அடிவாரம்.   மேற்படி மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கும் அனைத்து வீடு, கட்டிடங்களும் மின்சாரக் கம்பி கொண்டு வேலியிடப்பட்டிருக்கிறது. யானை இறங்குமிடமென்பதினால் உடமைகளையும் ; உயிர்களையும் பாதுகாக்கும் பொருட்டு மேற்படி நடவடிக்கை.

அடிவாரத்தில் பிரம்மாண்டமான  ஆஞ்சநேயர் வெட்டவெளியில் வீற்றிருக்கிறார். அவருக்கும் மி.க. வேலித்தான். சனிக்கிழமையானபோதும் , வேலி அடைக்கப்பட்டிருந்ததினால் தரிசிக்கவியலவில்லை. உடன்வந்த ஆஞ்சநேய சகாவிற்கு வருத்தம் அதில். பரந்து விரிந்த ஆல, அரச மரங்களின் நிழலில் , பத்து ரூபாய் கொடுத்து,  வண்டியை நிறுத்திவிட்டு மேலே ஏற ஆரம்பித்தோம். ஒப்பீட்டளவில் மருதமலையை விட படிகள் குறைவுதான். ஆனால், செங்குத்தான படிகள் அதிகதிக மூச்சைக் கோருகிறது. சுமாராக 500 முதல் 600 படிகளிருக்கும். நான்கைந்து இடங்களில் ஓய்வெடுத்துக்கொண்டு உச்சிக்குச் சென்றடைந்தோம். நாங்கள் சென்றிருந்த நாள் திருக்கல்யாண வைபவம் ஆகையினால் கரோனவையும் தாண்டிய கணிசமான கூட்டம். மாப்பிள்ளை அலங்காரத்தில் முருகரையும் , மணப்பெண்கள் அலங்காரத்தில் அவர்தம் மனைவி, துணைவியையும் தரிசித்தோம்.  90கிட்ஸ்கள் கவனத்திற்கு. தம்பதிகள் சகிதமாக இருக்கும் முருகரை தரிசித்தால் , திருமண பாக்கியம் விரைவில் கிட்டுமாம் .

முருக தரிசனம் முடித்து, அதனினும் உச்சியில் வீற்றிருக்கும் சிவனை வழிபட்டு, சிவனேன்னு சில நிமிடம் உட்கார்ந்து வந்தோம். முருகருக்கும், சிவருக்கும் இடையில் ஹனுமான் தீர்த்தமுண்டு. சுனை போலிருக்கும் அவ்விடத்தை இரும்புச் சட்டகம் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள் ,செல்ஃபிப் பலிகளை தவிர்க்கும் நடவடிக்கையாக இருக்கலாம். இந்த ஹனுமன் தீர்த்தத்தை வைத்து ஒரு வரலாறு சொல்கிறார்கள். சுவாரஸ்யமாக இருக்கிறது. அதாவது , ஹனுமான் சஞ்சீவி மலையை கொணர்ந்து கொண்டிருக்கும்போது, ஓய்விற்காக ஆன் தி வேயில் , இக்குன்றின் மேல் இளைப்பாறியிருக்கிறார். தண்ணீருக்காக தவித்திருக்கும்போது , முருகர் மனமிரங்கி , மலையிறங்கி தனது வேலால் மலையின் ஒரு பகுதியை குத்தியிருக்கிறார். அங்கிருந்து பீறிட்ட தண்ணீர் ஹனுமனின் தாகத்தை தீர்த்திருக்கிறது. ஹனுமனுக்கான ஊற்று . ஊற்றுக்கு வாவி என்றொரு பெயரும் உண்டாம். ஆக , ஹனுவாவி அது மருவி இப்போது அனுவாவி . பெயர்க்காரணம் முற்றிற்று. 
சிவன் சன்னதியில் காட்சி முனை இருக்கிறது. அங்கிருந்து செங்கற்ச் சூளைகள் சூழ்ந்த சின்னத்தடாக நிலபரப்பையும் , அரண் போல நீண்டு  தொடர்ந்து இருக்கும் மலைகளையும் , வானையும் பார்த்தல் பரவசம். இறங்கி வருகையில் கல்யாண விருந்தாக வெஜிடபிள் பிரியாணி வழங்கினார்கள். இரண்டு பொட்டலங்களை சுவீகரித்துக்கொண்டோம். முற்பகலில் மலை ஏறி பிற்பகலில் இறங்கினோம் . நல்ல வெயில் ஆனபோதிலும் கொஞ்சம் கூட சோர்வே இல்லை. மருதமலையை விட குளிர்ச்சியாக இருக்கிறது. தண்ணீர் ஃபிரீசரில் வைத்தெடுத்தது போல ஜில்லிடுகிறது. சொற்பமான செலவில் குடும்பத்தினருடன் சென்று வர தோதான இடம் அனுவாவி சுப்ரமணியர் கோவில்.யானை பயம் மட்டும் உண்டு , மற்றபடி கயவர் ; காதலர் பயம் இல்லாமல் குழந்தை குட்டிகளோடு விஜயம் செய்யலாம். விசேடமற்ற பிறிதொருநாள் காலை வேளையில் வரவேண்டும். பனி படர்ந்த மலைகளையும் ; நகரும் மேகங்களையம் காண்பது அலாதியான அனுபவமாக இருக்கும். ஸ்தலம் இன்னும் கமர்சியலாக மாறாதபடியால், கடைகள் ஏதுமில்லை ; எல்லா நாளும் பிரியாணிக்கு உத்தரவாதமும் சொல்லமுடியாது. ஆகையினால் கையோடு தின்பண்டங்கள் , உணவுபொட்டலங்கள் , தண்ணீர்ப் போத்தல்கள் கொண்டு செல்தல் உசிதம். மலையிறங்கிய போது தான் கவனித்தோம் , அகஸ்தியர் ஆசிரமம் ஒன்று அடிவாரத்தில் இருக்கிறது. உள்ளே சென்று வந்தோம் , அகஸ்தியரின் சமகால வாரிசொருவர் , சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு ,  ஹாய் டியூட் என்று யாரிடமோ மொபைலில் வீடியோ சாட்டிக்கொண்டிருந்தார். சரியாக இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். காந்திபுரத்திலிருந்து தனி வாகனத்தில் புறப்பட்டால் ஒரு நான்கு மணி நேரத்திற்குள் சென்று திரும்பி விடலாம். 

ஊர் சுத்தீஸ் குருப்பீன் முதற்பயணம் சிறப்பாக நிறைவுற்றது. அடுத்தவாரம் பொன்னூத்து என்று திட்டமிட்டிருக்கிறோம். பார்க்கலாம் ✨என்றென்றும் புன்னகையுடன்

ஜீவன்சுப்பு


Jun 9, 2020

#பேசாத_வார்த்தைகள்~090620
ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களோடு வந்திருக்கும் பொன்மகளைப் பார்க்க வாய்க்கவுமில்லை ; நேரவுமில்லை. வேண்டி , விரும்பித் தேடிப் போய் பார்த்தாயிற்று. படம் வந்த ஒரு வாரத்திற்கு எல்லோரும் அதைப்பற்றியே பேசியும், எழுதியும் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் பார்க்காமலிருப்பது ஏதோ ஒரு தசாப்தம் பின்தங்கியிருப்பதைப் போன்றதொரு நினைப்பு. இப்போதான் நார்மலான அப்டேட்டான மாதிரி ஒரு ஃபீல் வந்திருக்கிறது. படம் பேஷ்புக்ல ஊமக்குத்தா குத்திக்குதறியது போல மோஷமில்லை. பேஷ்புக்ல புழங்காதவர்களுக்கு ரெம்பவே புடிக்கும்கூட. 

படம் ஆரம்பித்து முதல் பதினைந்து நிமிடங்கள் சத்ய சோதனை . சீரியல் பார்க்குறோமா இல்லை படம் பார்க்குறோமா என்றிருக்கிறது. அடுத்த ஒண்ணே கால் மணி நேரம் ஒரு இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்ப்போல , அதே நேரம் நிதானமாக நகர்கிறது. அதற்கடுத்து மறுபடியும் சீரியல் டோன். வாதிட்டுத் தோத்துருந்தா கூட படம் இன்னும் பெட்டராயிருக்கும்னு நினைக்குறேன். கண்ணீரும் கம்பளையுமா நீதி கேட்டு வெண்பா நிற்பது, எதார்த்தமெனினும், அதனால் தீர்ப்பு மாறுவது என்பது அட போங்கப்பா என்றாகிவிடுகிறது. வெண்பா அழ அதிலிருந்து ஒவ்வொருத்தரா அழ , கடைசியில் சுவத்தில மாட்டியிருந்த காந்தித்தாத்தா கூட கண்ணாடியைக் கழட்டிட்டு ரெண்டு செக்கண்ட் கண்ணைத் தொடைத்திருப்பார்.

லக்ஷ்மி சரவணகுமார் வசனங்கள் நல்லாயிருக்குறதுல ஆச்சர்யப்பட ஏதுமில்லை. ஜோதி என்ற பெயர் அவர்தான் வைத்திருப்பார் என்றெண்ணுகிறேன். ஒரு பதிவில் இந்தப் படம் ஸ்மால் பட்ஜெட்லதான் முதலில் திட்டமிடப்பட்டது, பிறகு சூர்யா&ஜோதிகா கைக்கு போனதும் பெரிய பட்ஜெட்டாக மாறிடுச்சு என்று எழுதியிருந்தார் . ஸ்மால் பட்ஜெட் பொன்மகளாகவே வந்திருந்துருக்கலாம்.

திருமணத்திற்குப் பிறகான ஜோவுக்கென ஒரு பிம்பத்தை கட்டியெழுப்ப முயல்கிறார்கள் போல. 36 வயதினிலே நீங்கலாக அனைத்துப் படங்களிலும் முறைப்பும் விறைப்புமாகவே வரும் ஜோதிகா இதில் கூடுதலாக கண்ணீருடனும். பட்ஜெட் பெரிதானதால் "பா" சீரிஸ் நடிகர்கள் , தியாகராஜனையெல்லாம் காஸ்டிங்கில் சேர்த்திருக்கிறார்கள். "டூ மெனி குக்ஸ் ஸ்பாயில் தி ஃபுட்" என்று ஓர் ஆங்கிலச் சொலவடை உண்டல்லவா, அதுபோல ஆயிற்று. தொலைக்காட்சிகளில் குற்றம் நடந்தது என்ன போன்ற நிகழ்ச்சிகளில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று காண்பிப்பார்கள் , அதுபோல செயற்கையான திணிப்பாக இருக்கிறது மேற்படி நடிகர்கள் பங்கு . இளவரசு , ஜெய்பிரகாஷ் , எம்.எஸ்.பாஸ்கர் இதுபோன்ற நடிகர்கள் ஆப்டாக இருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

ஜோதிகா பேசும் "வால்கையிழ" வஷனம் ~ ப்பா! நல்ல வசனத்தை சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்க தேவதை. கோர்ட்டே கூண்டுமாதிரி தான் இருக்கு , ஒரு சிறிய ஊரின் கோர்ட் அப்படித்தான் இருக்கும்கூட , ஆனால் அதை டிசைன் டிசைனான கோணத்தில் படம் பிடித்திருப்பது ஏதோ வேடிக்கை காட்டுவது போலுள்ளது. "வா செல்லம்"பாடலின் அனேகக் காட்சிகளில் ஜோவின் தோற்றமும் முகபாவமும் காலம் சென்ற நடிகை ஸ்ரீ வித்யாவை நினைவுபடுத்துகின்றது ~அழகு. 

பார்த்திபன் தனக்கான வசனத்தை தானே எழுதியிருப்பார் போல , வழமைபோல வார்த்தைக் கபடி ஆடியிருக்கிறார். எனக்குப்பிடித்த வி.ஜே.ஆஷிக்கிற்கு அறிமுகம். தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள். வெண்பா~ ஏஞ்சல் ஆள்மாறாட்டத்தை பார்த்திபன் வரையும் ஓவியம் மூலம் நுணுக்கமாக சொன்ன டைரக்டர், காவலாளிக்கு லஞ்சம் கொடுத்து கூட்டி வருவது போன காட்சிகளை யோசித்தவர் சென்டிமெண்டை தவிர்த்து அல்லது குறைத்து ஒரு கம்ப்ளீட் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராவே தந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்துருக்கும் என் பது எனது அபிப்பிராயம். மற்றபடி பார்த்திபன் சுப்பு சந்திப்பில் அந்த சர்வர் ஏன் தழும்ப தழும்ப சரக்கை கோப்பையில் ஊற்றுகிறார், எதுவும் குறியீடா!? போலவே பிரதாப் போத்தன் பொட்டி வாங்குவது, தியாகராஜனை கோர்ட்டுக்கு வரவழைப்பதற்காகவா இல்லை உண்மையிலேயே விலைபோய்விட்டாரா என்று எனக்குப் புரியவில்லை✨

★★★★★★

ஏ. கே.செட்டியார் அவர்களின் "உலகம் சுற்றும் தமிழன்" புஸ்தகம் வாசித்துகொண்டிருக்கிறேன். சுமார் 80 வருடங்களுக்கு முன்பாக செட்டியார் அவர்கள் அவரின் பருவ வயதில் பல்வேறு உலக நாடுகளுக்கு மேற்கொண்ட பயணக் கட்டுரைகளின் தொகுப்பு. அதிர்ட்டம் வாய்ந்த ஆத்மா. எத்தனை பேருக்கு வாலிபத்தில் வாய்க்கும் இந்த வாய்ப்பு. பார் என் மொழிப் பாண்டித்யத்தை என்றில்லாமல் மிக மிக எளிய நடையில் வாசிக்கும் வண்ணம் புஸ்தகம் எழுதப்பட்டுள்ளது சிறப்பு.

முதல் அத்தியாயம் மகாத்மா காந்தியடிகள் பற்றி. உலக நாடுகளுக்கு இந்தியாவின் முகமாக காந்தி இருந்திருக்கிறார் ; இருக்கிறார். ஹாவாய் தீவுகள் பற்றிய குறிப்புகளும் , விவரணைகளும் நேரில் சென்று பார்க்கவேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகின்றது.

அமெரிக்காவின் நிறவெறியை வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். இன்றும் அது தொடர்வதை நினைக்கையில் உள்ளபடியே வருத்தம் தருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தான் அதீதமான நிறதுவேஷம் என்று சொல்கிறார். இப்போது நிலைமை எப்படியென சீனுவிடம் கேட்கவேண்டும். அனேக நாடுகளில் பாரிஸ் நீங்கலாக டர்ப்பன் கட்டாத இந்தியர்கள் நீக்ரோக்களைப் போலவே நடத்தப்படுவதாகவும் சொல்கிறார். கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடுத்தவராக இருந்தபோதிலும், பிரெசிலை கண்டுபிடித்து பின் அதை புஸ்தகமாக வெளியிட்ட அமெரிக்கோ வெஸ்புக்கி பெயர்தான் அந்நாட்டிற்கு சூட்டப்பட்டிருக்கிறது. ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியமென்பதற்கான உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

தினமும் ஓர் அத்தியாயம் என்று முறை வைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். முழுமையாக வாசித்துவிட்டு மீண்டுமொருமுறை ஆவணப்படுத்த வேண்டும். நாட்டுக்கு பேர் வைக்காவிடிலும்✨


★★★★★★

நண்பரொருவர் தனது மகளுக்கு ரூபாய் முப்பத்தைந்தாயிரம் கட்டி ஜனவரியிலேயே எல்.கே.ஜி சீட் வாங்கியிருந்தார். மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான். ஊரில் பெயர்பெற்ற பள்ளி இப்போதே சீட் வாங்கினால்தான் ஆச்சு என்ற முன்திட்டமிடல். என்னையும் வேறு வற்புறுத்தி கடைசியில் மகள் மீது அக்கறையில்லாதவன் என்று என்னையே எண்ணவும் வைத்துவிட்டர் . ஆனாலும் நான் அசரவில்லை . இப்போது கோரோனோ காரணமாக பள்ளிகள் திறப்பது தள்ளிப்போகிறதல்லவா. கூடுதலாக கரோனா டூரிஸ்ட் விசாவில் வரவில்லை , வொர்க் பரமிட்டில் வந்திருப்பதால் இரண்டு வருடங்கள் நம்மோடு வாழப்போகிறது என்றும், ஆதலால் இந்த வருடம் ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற வாட்ஸாப் செய்தியையும் படித்துவிட்டு, நண்பர் பள்ளிக்கு போய் கட்டிய பணத்தை திருப்பிக் கேட்டிருக்கிறார். வாய்ப்பில்லை ராஜா , போங்க போய் ஆன்லைன் வகுப்புக்கு தயார் படுத்துங்கள் என்று சொல்லி ஒரு சிட்டையை கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். சிட்டையில் 40 அங்குல ஸ்மார்ட் டி.வியோ அல்லது உள்ளங்கை அகல ஸ்க்ரீன் சைஸ் கொண்ட ஸ்மார்ட் போனோ வாங்கச்சொல்லி சிபாரிசித்திருக்கிறார்கள். கூடவே 4ஜி வேகத்தில் தங்கு தடையற்ற இணையமும். முப்பதைந்தாயிரம் இப்போ ஐம்பதாயிரமாக எகிறியிருக்கிறது. எல்லாம் செலவு பண்ணி , மாலை 4 to 5 ஆன்லைன் வகுப்புக்கு மகளை அமரச்சொன்னால் போராடிக்குதுப்பான்னு பத்து நிமிசத்தில் ஓடிவிடுகிறாளாம். சொல்லிப் பொருமிக்கொண்டிருக்கிறார் . உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும் அதெல்லாம் போகப்போக சரியாயிடும்னு சமாதானம் சொல்லி தேற்றி வைத்தேன்.

ஏம்பா ஆய்போகத் தெரியாத குஞ்சு குலுவானுகளுக்கெல்லாம் ஆன்லைன் வகுப்பா!? ன்னு கேட்கத்தோன்றுகிறது. அநேகமாக அடுத்த கல்வியாண்டிலிருந்து , பள்ளிக்கூடக் கொள்ளையில் புஸ்தகம், சீருடை , ஷூ லிஸ்டில் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன் , மோடமெல்லாம் சேர்ந்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை✨


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்புJun 4, 2020

#பேசாத_வார்த்தைகள்~040620

அச்சுப் புஸ்தகம் வாங்கி ஆண்டுகள் சில ஆயிற்று. ஏற்கனவே வாங்கிய புஸ்தகங்களில் அன்பளிப்பாகக் கொடுத்ததுபோக கைவசமிருந்த ஒன்றிரண்டையும் தர்ஷினி தன் விளையாட்டு பொம்மைகளாக்கிவிட்டாள். எந்தப்புஸ்தகத்தையும் கிழிப்பதில்லை ; ஆனால் கிறுகிறுக்க வைக்குமளவிற்கு கிறுக்கிவைத்து விடுவாள். பிறகு எங்கேயாவது கண் காணாத இடத்தில் கொண்டுபோய் கிடத்திவிடுவாள். வீடடங்கிய காலத்தில் சுத்தம்பண்ணும்போது புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தொகுப்பை அலமாரியின் அடியிலிருந்து கண்டெடுத்தேன். அவசியம் வாசிக்க வேண்டிய ஐந்து தமிழ்ப் புஸ்தகங்கள் என்று எஸ்.ராமகிருஷ்ணன் பட்டியலிட்டதில் ஒன்று புதுமைப் பித்தனின் சிறுகதைகள் என்று நினைவு. எவ்வருடம் என்று துல்லியமாக நினைவில் இல்லை, கோவை கொடிசீயாவில் நடைபெற்ற புஸ்தகக் கண்காட்சியில் மலிவு விலையில் வங்கியது. கூடுதலாக வண்ணதாசனின் 2 புஸ்தகங்களும் , எஸ்.ரா அவர்களின் 4 புஸ்தகங்களும், மகள் தர்ஷினிக்காக இரண்டு புஸ்தகங்களுமாக சுமார் இரண்டாயிரம் சில்லறைகளுக்கு கொள்முதல் செய்திருந்தேன். புஸ்தகங்களுக்காக ஒரே தவணையில் அதிகமாக முதலீடு செய்ததில் இபோதுவரைக்குமான என் வாழ்நாள் உச்சம் அது. கொடிசீயா , பிரதான சாலையிலிருந்து சுமார் 2 பர்லாங் தூரத்தில் அமையப்பெற்றது. போகும்போது கைகளை வீசிக்கொண்டு சென்றதில் அயர்ச்சி தெரியவில்லை. உள்ளே சுற்றியலைந்து கணிசமான எடையோடு வெளியேறியபோது சோர்ந்துவிட்டேன். திரும்பும்போதும் நடராஜாவில் பிராயணப்பட்டு பாதி வழியில் தூக்கமுடியாமல்போகவே, வாடகை ஆட்டோ அமர்த்திக்கொண்டு வந்து சேர்ந்ததும் நினைவிலிருக்கிறது.

புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பு 900 பக்கங்கள் கொண்ட கெட்டிப் பதிப்பு, திருமகள் பதிப்பகத்தார் அசல் விலையிலிருந்து பத்து சதவீதக் கழிவில் கொடுத்தார்கள். 300ம் சில்லறையுமானதாக நினைவு. விலை தான் மலிவேயொழிய புஸ்தகத்தின் உள்ளடக்கமும், வடிவமைப்பும் அபாரமான தரம். சற்றேறக்குறைய 100 சிறுகதைகள் இருக்கும். கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு நுணுக்கமாக மொய்ப்பு பார்த்திருப்பார்கள் போல. பளிச்சென வெள்ளைத்தாளில் தாராளமான சமூக இடைவெளியோடு அச்சிடப்பட்ட புஸ்தகம். மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் ஆத்மார்த்தமாக புத்தகத்தை வடித்திருக்கிறார்கள் திருமகள் பதிப்பகத்தார். இன்றையிலிருந்து சுமார் 80 முதல் 90 வருடங்களுக்கு முன்பாக பல்வேறு பத்திரிக்கைகள், சமிஞ்கைகளில் வெவ்வேறு ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகள். நூறு வருடங்களை எட்டிபிடிக்கப்போகிற கதைகளாயினும் இப்பொழுதும் வாசிப்பின்பத்தைத் தருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத கதைகள் , வாக்கியங்கள் பெரிய மெனக்கெடல்கள் ஏதுமின்றி புரிகிறது. புதுமைப் பித்தனின் வார்த்தைத் தெரிவுகள் எனக்கு வெகுவாகப் பிடித்திருக்கிறது. வாக்கியங்களை அடிக்கோடிடுவது போல நான் வார்த்தைகளை மொபைல் நோட்புக்கில் குறித்துக்கொள்வதை பழக்கமாக்கியிருக்கிறேன். இன்னும் முழுமையாக படித்து முடிக்கவில்லை. தனித்த நேரம் எதுவும் ஒதுக்கிக்கொள்ளாமல் குழந்தையைக் கொஞ்சுவதுபோல அவ்வப்போது வாசிப்பதுண்டு. புஸ்தகத்தின் அசவுகரியமாகப்படுவது , அதன் எடை . ஆசையாக மடியில் எடுத்து வைத்தோ ; மல்லாக்கப் படுத்துக்கொண்டோ வாசிக்கயியலவில்லை என்ற வருத்தமிருக்கிறது. ஓங்கி அடித்தால் ஒன்னரை டன் வெயிட் கணக்காக கனக்கிறது✨

★★★★★★


மல்லிகைப்பூ என்றவுடன் நிறம் , மணத்திற்கு அடுத்து எனக்கு நினைவுக்குவருவது தமிழ்ச்சினிமாவின் முதலிரவுக் காட்சிகள் , வடிவேலுவின் மதுரை மல்லி நகைச்சுவை , குஷ்புவுக்கு முன்பான மல்லிகைப்பூ இட்டலி என்ற பதம். மல்லிகை என்று தொடங்கும் பாடல்கள் மட்டுமே அம்பதுக்கும் பக்கம் தமிழில் வந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்பாக மல்லிகைப்பூ ஒரு முழம் கேட்டதுக்கு 120 ரூபாயென்றார் பூக்காரம்மா. நொடிநேரம் சூப்பர் ஸ்டாராயிப்போனேன். இப்போது கிலோவே நூறு ரூபாய்தானாம். சமீபமாக "மாலை நேரம் மல்லிப்பூ மல்லிப்பூ" என்றொரு பாடல் அடிக்கடி தொலைகாட்சி இசைச் சேனல்களில் ஒலித்துக்கொண்டிருந்தது. தர்ஷினிக்குப் பிரியமான பாடல். பாக்கியராஜ் போல பகுமானமாக கைகால்களை நீட்டி மடக்கி நடனம் புரிவாள். இசையும் , குரலும் பின் மல்லிப்பூவும் உந்தித்தள்ள மேலதிக தகவல்களைக் கண்டடைந்து  படத்தை தரவிறக்கினேன். படத்தின் நாமம் ஏ 1. நாமம் மட்டுமே.

முதல் ஐந்து நிமிடங்கள் தொல்லைக்காட்சிகளின் விருது வழங்கும் விழாவில் காட்டப்படும் கிளிஷேவான ஆவணப்படம் போன்ற ஒன்றை எச்சரிக்கையாக ஒளிபரப்புகிறார்கள். உஷார்ப்பேர்வழிகள் அக்கணமே லேப்டாப்பை மூடியிருப்பார்கள். எண்ட்ரீ சீன்ல சந்தானம் டூ வீலர்லேயே கிணறு தோண்டுகிறார். பிறகு நாலைந்து சீனியர் சிட்டிசன்ங்களை ஜாக்கிசானாக மாறி அடித்துத் துவைத்து விரட்டுகிறார் . இசையமைப்பாளர் வயலினை நம் கழுத்துச் சங்கில் வைத்து மீட்டுகிறார். இட்டலி ; சட்னி ; பொங்கல் எல்லாம் வைத்து ஒரு அட்வைஸ் படையலொன்று பிரேக் அப் சீனில். அப்பிடியே சுவத்தில் போய் முடிக்கொள்ளலாம் என்று இருந்தது. ஆனால் அடுத்த வசனத்தில் ஈடு செய்துவிடுகிறார்கள். 

சந்தானம் படத்தில் அவரைத்தவிர வேறு யாரையும் நாம் கவனிப்பதுமில்லை ; கவனிக்கவைக்கும் அளவிற்கான யாரும் எவரும் வெளிப்படவுமில்லை. சந்தானமே அதைத்தான் விரும்புகிறார்போல. சந்தானம் மூவிங்குற லேபிளே போதுமென. உண்மையிலேயே சந்தானம் உடல்மொழியில் அசத்தியிருக்கிறார்.  புல்லட் புரூஃப் போல எப்போதும் லொள்ளு "ஷப்பா" டீமை தூக்கி சுமக்காமலும்;  நாலைந்து படங்களுக்கு அக்குளில் இருக்கும் நக்கல்களை அடியில் போட்டு நசுக்கிவிட்டும் ,  இயக்குனர் ஒருவரிடம் தன்னை ஒப்புக்கொடுப்பாரேயானால் நிச்சயம் பிரகாசிப்பார் என்றே எண்ணுகிறேன். படம் முழுவதும் சிரிப்பு நடிகர்கள் தான். ஆனால் பாருங்கள் முதல்சிரிப்புக்கு முப்பத்தைந்து நிமிடங்கள் காத்திருக்கவேண்டியத்திருக்கிறது. சுந்தர்.சி ரகப் படம். சுமாராக வந்திருக்கிறது✨

★★★★★★

வழக்கமான கோடைகாலங்களில் வரும் சீசனல் தண்ணீர் சிக்கன அக்கறை இவ்வருடம் கரோனா காரணமாக நித்திரையிலிருக்கிறது. இன்றும் தண்ணீர் அரிதான வளம் என்று எழுதி மட்டும்தான் கொண்டிருக்கிறோம் , காவல் துறை உங்கள் நண்பன் என்பதினைப்போல. நான் ஏற்கனவே சொல்லியதைப்போல , ஒவ்வொரு வீட்டிற்கும், அலுவலகத்திற்கும், ஆலைக்கும் தண்ணீர் கணக்கிடும் மீட்டர் பொருத்தப்படவேண்டும். நாம் எவ்வளவு தண்ணீரை செலவழிக்கிறோம் விரயமாக்குகிறோம் என்று தெரியாமலே , அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமலே அலட்சியமாக இருக்கிறோம். தெருக் குழாயில் தண்ணீர் கொணர்ந்து பயன்படுத்திய போது நாம் செலவழித்த தண்ணீரை விட இப்போது ஐந்து மடங்கு அதிகம் செலவழிக்கிறோம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. முன்பு  உள்ளங்கை நிறைய தண்ணீர் மோந்து முகம் கழுவிய இந்தியன் இப்போது குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் செலவழிக்கிறான் என்று சொல்கிறது பிறிதொரு புள்ளி விவரம். தவமாய்த் தவமிருந்து படத்தில் , கிராமத்தில் இருக்கும் பெற்றோரை மகன் சேரன் நகரத்து அப்பார்ட்மென்டுக்கு கூட்டி வந்திருப்பார். டாய்லெட் போய் வந்த சரண்யா பொன்வண்ணன் என்ன தம்பி இந்தக் கக்கூஸ்ல போற தண்ணிய வெச்சு ஒரு போகம் விவசாயமே பார்த்துடலாம் போலயே என்பார். இது ஓர் உதாரணம்.
இப்பொழுது மின்சாரம் தனியார் மயம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது அடுத்து நிச்சயமாக தண்ணீராகத்தான் இருக்கும். கோவையில் போனவருடமே அதற்கான முஸ்தீபுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டது. எதிர்ப்பு காரணமாக கொஞ்சம் பொறுதிருக்கிறார்கள் அவ்வளவுதான். அரசாங்கத்தைப் பொறுத்த வரையிலும் தனது துறைகளில் சீர்திருத்தம் செய்யவேண்டுமெனில் அதற்கான எளிய வழியாக கைகொள்வது தனியாருக்குத் தாரைவார்த்தல் என்பதுதான். இயன்றவரை தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தப் பழகுங்கள். குழந்தைகளைப் பழக்குங்கள். இல்லையெனில் தண்ணீர் அரிதான வளம் என்று எழுதுவதற்கு தேவையே இராமல் போய்விடும் வரும் தலைமுறைக்கு✨என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.