Dec 30, 2019

பேசாத வார்த்தைகள் #30122019

பேசாத வார்த்தைகள் #30122019



திரைப்படம் ~ தம்பி.

தம்பி பார்த்தேன். த்ரிஷ்யம் படத்தினை திருட்டுத்தனமாக பார்த்த குற்ற உணர்வுக்கு பாவமன்னிப்பு கோரும் விதமாக திரையரங்கம் சென்று பார்த்தேன். ஜீத்து ஜோசப் அல்லாமல் படத்திற்கு செல்ல வேறொரு காரணமும் இருந்தது , அது "நிகிலா விமல்".

தயாரிப்பு தரப்பிலிருந்து இயக்குனரை த்ரிஷ்யம் மாதிரியே ஒரு படம் எடுக்கச்சொல்லியிருப்பார்கள் போல. அதாவது பேமிலி திரில்லர். பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாலிபத்தில் காணாமல் போன சரவணன் , கோவாவில் ஏமாற்றி பிழைப்பதே பேரின்பம் என்று கைடாக திரிகிறார். செய்தி கேள்விப்பட்டு சரவணனை வீட்டுக்கு அழைத்துவருகிறார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு அளவிலா சந்தோஷம். அதேசமயம் உயிர் நண்பன் உட்பட வீட்டில் இருக்கும் ஒரு சிலருக்கு அவர் சரவணன் தானா என்றொரு சந்தேகம். சரவணன் ஏன் காணாமல் போனார் , திரும்பியவர் சரவணன் தானா இவற்றிற்கெல்லாம் விடையாக படம் விரிகிறது.

பேமிலி திரில்லர். திரில்லர் ஓகே. பேமிலி தான் ட்ராஜிடியாக ஆகிவிட்டது. ரெடிமேட் பேமிலி போல ஒட்டவே இல்லை. கார்த்திக்கு வழக்கம் போல திருட்டு முழி கதாபாத்திரம். நன்றாகவே முழித்திருக்கிறார். சத்யராஜ், இளவரசு ஓகே. மற்ற அனைத்து பாத்திரங்களும் அவ்வளவு செயற்கை. குறிப்பாக வில்லனாக சித்தரிக்கப்படுபவர். ஜெயம் ரவி மற்றும் ஸ்ரீமன் குரல்களை பிளென்ட் செய்து தம்பி ராமையாவின் உடல்மொழிகளை உள்ளீடு செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அவுட்புட். ஜோதிகா காலர் வைத்த சுடிதார் போட்டு விரைப்பாக குதிரை ஓட்டுகிறார்.

முதல் பாதியில் வரும் ட்விஸ்டுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. மொக்கையான காட்சிகளைப் பார்த்து ஏற்கனவே  பார்வையாளர்கள் ட்விஸ்ட் ஆனதுபோல சோர்ந்து சரிந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இரண்டாம் பாதியில் இருந்து படம் விறுவிறுப்பாகிறது. அடுத்தடுத்த ட்விஸ்டுகள் ஓகே. 

நிகிலாவை "கீ கொடுத்த பொம்மையாக" நிறுவியிருக்கிறார்கள். கண்டனங்கள் சார். இதை விடக் கொடுமை ஒரே உருப்படியான பாடலான தாலேளே மெலடியை தியேட்டர்கார் கத்தரித்துவிட்டார். மனதுக்குள்ளே மண்ணை வாரி தூற்றி விட்டு வந்தேன்.

ஆக்சுவலி ஜீத்து நல்ல பொட்டன்ஷியல் உள்ள ஆள்தான். அநேகமாக நம்ம மார்க்கண்டேயர் பேமிலி தலை, கண், காது , மூக்கு முகரை எல்லாம் உள்ளே நுழைத்திருப்பார்கள் போல. அதான் தம்பி தடுமாறிவிட்டார்.


@@@@@@@@@@

புத்தகம் ~ அருணா இன் வியன்னா. 

அமேசான் பென் டூ பப்ளிஷிற்காக எழுதப்பட்ட புத்தகம் அருணா இன் வியன்னா. மத்திம வயதில் இருக்கும் பள்ளிதோழிகள் நால்வரின் பயண "அனுபவக் கட்டுரை". இந்தப் பயணத்தில் இரு சிறப்பம்சங்கள் உண்டு. முதலாவது , கல்லூரி செல்லும் வயதில் மகன்/மகள் இருக்கின்ற பெண்களின் தனித்த வெளிநாட்டுப் பயணம். இரண்டாவது பயணப்பட்ட நாடுகள். 

வழக்கமாக செல்லும் யூ.கே , யூ எஸ் , சிங்கப்பூர் மலேசியாக்களை தவிர்த்துவிட்டு யூரோப்பியன் நாடுகள் மூன்றின் தலைநகருக்கு போய் வந்திருக்கிறார்கள். அதுவும் மோடி கூட போயிராத ஊர்களுக்கு. புத்திசாலித்தனமான தெரிவு. ஏனென்றால் மேற்படி வழமையான நாடுகளுக்கு போகும்போது கண்டிப்பாக எதிர்ப்படும் பத்தில் ஒருவர் நம்மாட்களாக இருக்க வாய்ப்புண்டு. நம்மாட்களுக்கு கை , கால் சும்மா இருந்தாலும் இருக்குமே தவிர வாய் ஒரு போதும் சும்மா இருக்காது. செம்பருத்தியில் செண்பா என்ன சேலை கட்டினாள் , தமிழ்நாட்டில் தாமயிரை மலருமா , ரிஷப் பந்துக்கு பந்து பிடிக்கவே தெரியவில்லை என்று பேசி ஏண்டா வந்தோமென்று ஆக்கிவிடுவார்கள்.

ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட், ஆஸ்த்ரியாவின் தலைநகர்  வியன்னா மற்றும் செக் ரிபப்ளிக்கின் தலைநகர் ப்ராக். பத்து நாள் ட்ரிப் தந்த அனுபவத்தை அருணாவே சொல்வது போல காஃபி டேபிள் புஸ்தகமாக வடித்திருக்கிறார். ரைமிங்காக இருக்கவேண்டுமென்று என்பதற்காக வியன்னாவை தலைப்பாக்கியிருக்கிறார் என்றெண்ணுகிறேன். மற்றபடி புடா பெஸ்ட் தான் பெஸ்ட் என்றறியமுடிகிறது.

ஒவ்வொரு பக்கத்திலும் ஓர் உதட்டோரச் சிரிப்புக்கும் ; ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஓர் உரத்த சிரிப்பிற்கும் உத்தரவாதம் உண்டு. ஏழைத்தாயின் மகரை ஒரு பர்னிச்சராகவே பயன்படுத்தியிருக்கிறார். சுயபகடி செய்திருக்கும் அநேக இடங்களில் வாசிக்கும் நமக்கு வாய்விட்டு சிரிக்கத்தோன்றுகிறது. உதாரணம் ப்ராக்கை பாவாடையால் கூட்டியது.

குறைவான எழுத்துப்பிழைகள் , கூகிளில் இருந்து STD ஐ தோண்டியெடுத்து , புத்தகத்தில் வாரி இறைத்து இம்சிக்காமல் இருந்தது , ஒருமணிநேரத்தில் வாசித்து முடிக்கும் வண்ணம் சுருக்கமாக வடிவமைத்தது இது எல்லாம் பலம். 

எழுத்துருவின் அளவை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் , அட்டகாசமான அட்டைப்படம் .  கூடுதலான பயணப்படங்களும் , உத்தேச செலவு விவரங்களும் இடம்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்பிராயம். அச்சில் வரும்போது மேற்படி அம்சங்கள் இடம்பெறும் என்று நம்புகிறேன்.

மொத்தத்தில் பக்கா லைட் ரீடிங். வாசித்து முடித்தபோது நாமும் இப்படியொரு அறிமுகமற்றவர்களின் தேசத்தில் தேசாந்த்ரியாக சுற்றித் திரியவேண்டுமென்ற எண்ணம் மேலெழும்புகின்றது.

@@@@@@@

சாக்லேட்

தமிழ் அர்த்தம் மிட்டாய் என்றெண்ணுகிறேன். தமிழில் எனக்கு மிகப்பிடித்தமான வார்தை. குழந்தைகள் முதல் கன்னிப்பெண்கள் வரை சாக்லேட்டிற்கு மயங்காதவர்கள் இல்லை. இன்றும்கூட சாக்லேட் கொடுத்து காதல் சொல்பவர்கள் இருக்கக்கூடும். சாக்லேட் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகும், மன அழுத்தம் குறையும் , கொலஸ்ட்ரால் குறையுமென்றும் ஒரு குறிப்பு சொல்கிறது. போலவே சர்க்கரை அளவு அதிகரிக்கவும் , பல் சொத்தைக்கு அஸ்திவாரம் போடவும் , ஒற்றைத் தலைவலியை இரட்டிப்பாக்கவும் காரணமாகவும் அமைகிறதாம். நாளொன்றுக்கு 28 கிராம் சாக்லேட் அளவிற்கான சாக்லேட் துண்டு தின்பது நல்லதாம். 

முழுமையான கோகோவுடன் , கரும்புச்சாறு சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்பட்ட சாக்லேட்டிற்குத்தான் மேற்சொன்ன பயன்கள் பொருந்தும். ஆனால் துரதிர்ஷ்டமாக நாம் அதை சாப்பிடுவதில்லை. அல்லது வாங்கக்கூடிய விலையில் இல்லை. டஸ்ட் டீத்தூள் போல டஸ்ட் சாக்லெட்டைதான் சுவைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் மிகச்சிறந்த விளம்பரங்கள் என்று பட்டியலிட்டால் அதில் முதலிடத்தில் சாக்லேட் தயாரிக்கும் காட்ப்பெரிஸ் நிறுவனம்தான் இருக்கும். தொடர்ச்சியாக ரசனையுடன் விளம்பரங்கள் தயாரித்து வெளியிடுவதில் அவர்களுக்கு நிகர் யாருமில்லை. இந்திய சாக்லேட் சந்தையின் கணிசமான பங்கை அவர்கள்தான் வைத்திருக்கிறார்கள். இரண்டாமிடத்தில் இருக்கும் நெஸ்லே மூன்றில் ஒரு பங்கு மற்றவர்கள்  விரல் விட்டு எண்ணிவிடலாம். 

எங்களைப்போன்ற 80ஸ் கிட்ஸ்களுக்கு சாக்லேட் என்றால் அது எம்ஜிஆர் மிட்டாய் அல்லது ஆசை சாக்லேட் தான். இப்பொழுது அந்த இரண்டுமே வருவதில்லை என்றறிகிறேன். 90களில் ஹார்லிக்ஸ் மிட்டாய் வந்ததாக நினைவு. அப்பொழுதெல்லாம் பிரவுன் நிற சாக்லேட் பணக்காரர்களின் பண்டமாக இருந்தது. யாராவது மாமாவோ, அண்ணனோ வெளிநாடு போய் வந்தால் கண்டிப்பாக சாக்லேட் வாங்கிவருவர். யார் நீண்ட நேரம் சுவைக்கிறோம் என்று போட்டி வைத்து வாய்க்குள் குதப்பிக்கொண்டு திரிந்திருக்கிறேன். 

இந்தியாவில் தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே சாக்கோ பீன் உற்பத்தி நடைபெறுகிறது என்றும். கேரளாவும் ஆந்திராவும் பிரதானம் என்றும் ஒரு செய்திகுறிப்பு சொல்கிறது. தமிழகத்தில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி சாக்லேட்டிற்கு பிரசித்தம். மலைப்பிரதேசத்திற்கும் சாக்லேட்டிற்கு அப்படி என்ன தொடர்ப்பென்று தெரியவில்லை. ஹோம் மேட் சாக்லேட் செய்து பார்க்கவேண்டுமென்று நெடுநாள் ஆசை ஒன்று உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறது. பார்க்கலாம்.

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.


Dec 23, 2019

பேசாத வார்த்தைகள் # 231219


பேசாத வார்த்தைகள் # 231219



அமேசான் பென் டூ பப்ளிஷ் போட்டிக்காக எழுதப்பட்ட மாயாவின் யூனிட் 109 வாசித்தேன். அட்டகாசமான அறிவியல் புனைவு. பர பரவென சிட்டாக பறக்கிறது. இரவு பத்தரைக்கு எடுத்து அதிகாலை நான்கரைக்கு முடித்தேன். முதல் மூன்று நான்கு அத்தியாயங்களில் வரும் கவித்துமான விவரணைகள் மட்டும் கொஞ்சம் ஒட்டாமல் இருந்ததாக பட்டது. மற்றபடி ஜோர்.

தென்றல் ஒரு சிங்கிள் பேரண்ட் , தனது மகன் ஈஸ்வரை கண்ணும் கருத்துமாக வளர்த்துவருகிறார். ஈஸ்வர் ஒரு கிஃப்டட் சைல்ட். அழகான வாழ்வில் ஒரு புயல். நாட்டில் ஓர் ஒழுங்கற்ற பேட்டர்னில் கிஃப்டட் சைல்ட்ஸ் காணாமல் போகிறார்கள். ஒரிருவாரங்களுக்குள் சடலமாக மீட்கப்படுகிறார்கள். இந்த வரிசையில் ஈஸ்வரும் சேர்கிறான். போலீசும், தென்றலும் குழந்தையை தேடுகிறார்கள். எதிர்பார்த்தது போலவே ஓரிரு நாட்களில் ஈஸ்வரின் சடலம் மீட்கப்படுகின்றது.

ஈஸ்வருக்கு என்ன ஆனது ; எப்படி கடத்தப்பட்டான் ; யார் கொலை செய்தது ; அது ஈஸ்வர் தானா என்பதையெல்லாம் ஒரு திரில்லர் பட பாணியில் சொல்லி செல்கிறது நாவல். அத்தியாயத்திற்கு அத்தியாயம் சஸ்பென்ஸ். அறிவியல் பெயர்கள் , தொழில்நுட்ப விவரணைகள் புரியாவிட்டாலும் காட்சிகள் எல்லாம் கண் முன்னே விரிவது எழுத்தாளரின் கதை சொல்லலிற்கான வெற்றி.

ஆங்காங்கே முத்துத் தெரித்தாற்போல மேற்கோள்கள். உதாரணத்திற்கு இரண்டு.

"இங்கே நம்பிக்கைக்கு கூட எக்ஸ்பயரி டேட் இருக்கு."

"வலியும் துன்பமும் தனியா இருந்து அனுபவிக்கும் போது இரட்டிப்பாத் தெரியும்."

நிச்சயமாக யூனிட் 109 நாவல் திரைவடிவமாகவோ ; வெப் சீரிஸாகவோ வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி வருவதற்கு முன்பாக டெக்ஸ்டில் வாசித்தல் உங்களது கற்பனைக்கு விருந்தாக இருக்கும்.

@@@@@@@@

மாஸ் ஹீரோக்கள் என்று சொல்கின்றவர்களின் திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்ப்பதை நிறுத்தி பலவருடங்கள் ஆயிற்று. விலையில்லாமல் வீட்டிலேயே பார்க்க வாய்த்தால் கூட பெரிதாக ஈர்ப்பு ஏதுமிருப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் பாஸ்ட் பார்வேர்ட் பண்ணிதான் பார்க்கின்றேன். அந்த லட்சணத்தில் தான் இருக்கின்றது.

பிகில் பார்த்தேன். விஜயின் பெரிய பலம் சின்ன சின்ன எக்ஸ்பிரசன்ஸ் தான். ரெம்ப கியூட்டா இருக்கும். அதுதான் குழந்தைகள், பெண்களின் ஏகோபத்திய ஆதரவை அவருக்குப் பெற்றுதந்தது என்று நம்புகிறேன். அட்லீ என்ன செய்திருக்கிறார் என்றால் பொன்முட்டையிடும் வாத்தை பேராசைப்பட்டு அறுத்த கதையாக்கிவிட்டார். முதல் முப்பது நிமிடங்கள் சகிக்கல. தயை தாட்சண்யம் இன்றி கண்ணை மூடிக்கொண்டு கத்தரித்துவிடலாம். அதிலும் நயன் , விஜயைப்போல பாடி லேங்வேஜ் காட்டி பேசுவதெல்லாம் உவ்வே.

ராயப்பனும் ; மைக்கேலும் சந்தித்து பேசும் இடங்களெல்லாம் ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ராயப்பன் வேற வேற வேற லெவல். ஆடிக்கொண்டே வந்து அப்பாவை கட்டிப்பிடிக்கும் காட்சிகள் சோ கியூட். ஃபுட் பால் மேட்சில் கோல் போட்ட ஒவ்வொரு முறையும் விஜய் கொடுக்கும் சிக்னேச்சர் போஸ் ஸ்டைலீஸாக இருக்கிறது.

கால்பந்து அணியில் உள்ள பெண்களில் தென்றலும் அனிதாவும் கண்கள் கவர்கிறார்கள். தென்றலைப்பற்றிய மேலதிக தகவல்களை ஆராயவேண்டும். இன்ஸ்பயரிங் ஸ்டோரி சொல்லுமிடத்தில் ஒரிஜினல் அட்லீ தெரிகிறார். விவேக், யோகி பாபு எல்லாம் தே. இ.ஆ . நயன்தாரா படத்துக்குப் படம் முதிர்ந்துகொண்டே போகிறார். சிவாவுக்குதான் அக்கா போலிருக்கிறார் என்று பார்த்தால் விஜய்க்கும்.

ரகுமான் சார் பகலில் இசையமைத்திருப்பார் போல. ஸ்மாராக இருக்கிறது . அதைவிட ஸ்மாராக  காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லாப் பாடல்களிலும் தக்காளிச் சட்டினியை துப்பியதுபோல கலர் பேக்ரவுண்ட் . கண்ணு கூசுது. கிளைமேக்ஸ்க்கு கொஞ்சம் முன்பாக வருகிற அந்த பிஜிஎம்மும் நடனமும் பக்கா . ரஹ்மான் சார்ட்டருந்து தர லோக்கல் குத்து . விஜய்ட்ட இருந்து வழக்கமான effortless elegant மூவ்மெண்ட்ஸ். செம்ம !!!

உருவக் கேலி செய்து கப் அடிப்பதெல்லாம் அசிங்கமில்லையா பிகிலு !?

@@@@@@@@@

ஒவ்வொரு வருடமும் வெள்ளம் வருவதும் அதனைத் தொடர்ந்து தண்ணீர்ப் பஞ்சம் வருவதும் இயல்பாகிவிட்டது. இந்த வருடம் தமிழகத்தில் நல்ல மழை பெய்திருக்கிறது. வழக்கம்போலவே வேடிக்கை பார்த்து வீணாக கலக்க விட்டிருக்கிறோம் கடலில். மழை நீர் சேகரிப்பை கோனும் சரி கோமான்களும் சரி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. வழக்கம் போல இன்னும் இரண்டே மாதத்தில் கோவணத்துணி கசக்கக்கூட தண்ணி இல்லாமல் தவிக்கும்போதுதான் உணர்வோம்.

நாம் நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் செலவிடுகிறோம் என்று திட்டமாக எதையும் உங்களால் சொல்ல முடியுமா!? அதற்கான வசதிகளும் முன்னெடுப்புகளும் இல்லை. மின்சார நுகர்விற்கான அளவீடு எல்லா வீட்டு மீட்டர்களின் மூலம் கணக்கெடுக்கப்படுகின்றது. ஆனால் தண்ணீருக்கு!? உண்மையில் சொல்லப்போனால் நம்மால் உருவாக்கக்கூடிய மின்சாரத்தை விட உருவாக்கிட முடியாத தண்ணீரை தான் நாம் அளந்து அளந்து பயன்படுத்த வேண்டும். ஒவ்வொருவரு வீட்டினரும் எவ்வளவு தண்ணீர் நாளொன்றுக்கு , மாதமொன்றுக்கு செலவழிகின்றார்கள் என்றறிந்து கொண்டாலே போதும் . கணிசமான அளவுக்கான தண்ணீரை சிக்கனப் படுத்திவிடலாம். சென்னையை சேர்ந்த வீகாட் யூட்டிலிட்டி சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் ஒரு செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்களாம். 

இதற்கென ஒரு மீட்டரை உருவாக்கி அதை வீட்டின் குழாய் அமைப்பில் இணைத்துவிட்டால் போதும். செயலியின் துணை கொண்டு ஒவொரு நாளும் நாம் எவ்வளவு தண்ணீர் செலவழிகின்றோம் என்ற கணக்கு துல்லியமாக தெரிந்துவிடுகின்றது. அரசாங்கம் சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இந்த ஏற்பாட்டை முன்னெடுக்கலாம் .


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு


Dec 16, 2019

பேசாத வார்த்தைகள் #16122019


பேசாத வார்த்தைகள் #16122019





புத்தகம் ~ பெர்முடா By கேபிள் சங்கர்.

சற்றேறக்குறைய கடந்த பத்து வருடங்களாக கேபிள் சங்கர் அவர்களின் பத்திப் பதிவுகளை வாசித்து வருகிறேன். வெண்ணெயில் வழுக்கிக்கொண்டு செல்லும் கத்தி போல ஸ்மூத்தான ஃப்ளோ அவரது எழுத்தில் இருக்கிறது என்பது எனது அபிப்பிராயம். நான் விரும்பி , தேடிச்சென்று வாசிக்கும் தளங்களில் அவரது இணையப்பக்கமும் ஒன்று. மிகையான விவரணைகள், அலங்கார வார்த்தைகள் ஏதுமின்றியே ஸ்வாரஸ்யமாக இருக்கும் அவரின் எழுத்து.

நிறைய புஸ்தங்கள் எழுதியிருக்கிறார். அவரது சமீபத்திய பெர்முடா தான் நான் வாசிக்கும் அவரின் முதல் புத்தகம். அமேசான் கிண்டிலில் இலவசக் கொள்முதல் செய்தது. 
திருமணம் அதைத்தொடர்ந்து உருவாகும் பந்தம் இதல்லாம் ஒரு நிறுவனம் என்றும் அதன் உறுப்பினர்கள் என்றும் எங்கெயோ வாசித்த நினைவு. அந்த வகையில் பார்த்தால் மூன்று இணைகளின் Un official relationship பற்றிய கதை தான் பெர்முடா.


அனைத்து அத்தியாயங்களிலும் காமம் பிராவகமாக பொங்கி வழிகிறது. தழும்பத் தழும்ப. மூன்று இணைகளின் முறையே ஆண்கள் மத்திம வயது கொண்டவர்களாகவும் ; பெண்கள் யுவதிகளாகவும் இருக்கிறார்கள். கேபிள்ஜி ஆணாதிக்கவாதி என்று யாரும் கிளம்பவில்லையா...!?

அத்தியாயங்களுக்குப் பெயர் வைப்பதில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஒவ்வொரு இணைகளின் பெயரையே தலைப்பாக்கிவிட்டார். முன் பின்னாக ; பின் முன்னாக. உதாரணத்திற்கு A ~ B என்றால் A யின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது. B~A என்றால் B யின் பார்வையில். அப்படின்னா A-C , D-F ன்னு sufflingலாம் இருக்குமான்னு கேட்கப்புடாது. ஆனால் இருந்திருந்தால் அது வித்தியாசமாக இருந்திருக்குமோன்னும் தோன்றது.

மேற்படி இணைகளில் சுரேஷ்வர் ~ நித்தியா எபிஸோட்ஸ் எனக்கு நிரம்பப் பிடித்திருந்தது. இரண்டு கதாபாத்திரமுமே ஒவ்வொரு விஷயத்தையும் மிக பக்குவமாக அணுகுவதாகவே படைக்கப்பட்டிருக்கிறது. மற்ற இரண்டு இணைகளின் ஒன்றில் சைகோதனமும் , பிறிதொன்றில் பச்சாபாதமும் நிரம்பியிருக்கிறது. முக்கியமான ஒரு விஷயம் அந்த சுரேஸ்வரை மனம் அன்னிச்சையாக கேபிள் சங்கராகவே கற்பனை செய்துகொண்டுவிட்டது.

புத்தகம் அமேஷிங் ஃப்ளோ. செக்ஸ் சமாச்சாரத்தை ஃப்ளோவுல எழுதறதெல்லாம் ஒரு மேட்டரான்னு நினைக்காதீங்க. அதுதான் நிரம்பக் கஷ்டமான காரியம். நிறையபேர் காமத்தை கோவம் வர்ற மாதிரிதான் எழுதுகிறார்கள். எழுத்தாளருக்கு 45~50 வயதிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் மனதளவில் நிரம்ப இளமையாக இருப்பார் போல. நின்னு விளையாண்டிருக்கிறார்.

ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பிக்கும் முன்னும் ஒரு சேட் பாக்ஸ் உரையாடல் வருகிறது.  நாலைந்து இடங்களில் பெயர் மாறியிருந்தது , இது இரண்டையும் இணைத்து எதுவும் ட்விஸ்ட் வைப்பார் போல என்றெண்ணிதான் வாசித்தேன். ஆனால் அப்படியெல்லாம் ஏதுமில்லை. சாட் பாக்ஸ் உரையாடல் சேர்க்கைக்கான நோக்கம் என்னவென்று விளங்கவில்லை எனக்கு.

மொத்தத்தில் திகட்ட திகட்ட காமத்தையும் ; அதைத்தொடர்ந்து வரும் அலைக்கழிப்புகளையும் போரடிக்காமல் சொல்லியிருக்கிறார்.  எனக்கு கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்ததாகப்பட்டது.

@@@@@@@@@@@@

திரைப்படம் ~ வார் - இந்தி

ஆண் பெண் பாகுபாடின்றி ஹ்ரித்திக் ரோஷன் மேல் கிரேஸ் உச்சத்தில் இருந்த நாட்களிலேயே எனக்கு அவரைப் பிடிக்காது. அவரது முகம் ஏதொ அந்நியத்தன்மையான ஒன்றாகப்படும் எனக்கு. 45 வயதிலும் கட்டுடல் பேணுகிறார் ஹிரித்திக். லீட் ரோலுக்கு இணையான பாத்திரத்தில் ஜாக்கி ஷெராப் மகன் டைகர்  ஷெராப் நடித்திருக்கிறார். தமிழில் மறு ஆக்கம் செய்தால் விக்ரம் & துருவ் பொருத்தமாக இருப்பார்கள்.

தொழிலதிபர் என்ற போர்வையில் தீவிரவாதிகளுக்கு பண மற்றும் பொருள் உதவி செய்துகொண்டிருக்கும் கயவன் ஒருவனை பிடிக்கும் நோக்கில் ஓர் இந்திய அணி. அந்த அணிக்கு தலைமை ஹிரித்திக். நாட்டிற்கு துரோகம் செய்த தன் தந்தையை சுட்டுக்கொன்ற ஹிரித்திக்கின் தலைமையிலான அணியில் இடம்பிடிக்கவேண்டுமென்ற லட்சியத்துடனும் , தன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்துடனும் உயிரைப் பணயம் வைத்து அந்த அணியில் வந்துசேரும் இஸ்லாமிய இளைஞர் காலீத்தாக ஜுனியர் ஷெராப். ஹிரித்துக்கும் , ஷெராப்பும் அவர்களது அணியினருடன் சேர்ந்து அந்தக் கயவனை பிடித்தார்களா ; அந்த நெட்வொர்க்கை அழித்தார்களா என்பதை படம் விறுவிறுப்பாக சொல்கிறது.

கடவுளின் தேசமான கேரளாவிலிருந்து வட துருவமான ஆர்ட்டிக் வரை படம் பயணப்படுகிறது. ஆக்ஷன் காட்சிகள் அபாரம். ஹெலிஹாப்டர் சேஸிங், ஜம்பிங் எல்லாம் காதுல பூவாக இருப்பினும் உள்ளங்கை ஜில்லிட்டுப்போகிறது. இரண்டு மூன்று அட போட வைக்கும் டவிஸ்டுகள் திரைக்கதையில் உண்டு. அதுதான் பலம். பார்க்கலாம்.

@@@@@@@@@

பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாமே வேஸ்ட் ; நஷ்டத்தில் இயங்குகின்றன , ஊழியர்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கின்றார்கள்.  யாரோ எங்கேயோ மேம்போக்காக ஒரு விஷயத்தை கேள்விப்பட்டு சொன்னதுதான் இன்று வாட்ஸாப், சோஷியல் மீடியாக்கள் தயவுடன் வைரலாக்கப்பட்டு, கணிசமான சாமான்யர்களால் நம்பப்படுகின்றது. உண்மையான நிலவரத்தை "இன்றைய காந்திகள்" புத்தகத்தின் ஆசிரியர் பாலசுப்ரமணியன் முத்துசாமி சொல்கிறார்.

மொத்தமுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் சற்றேறக் குறைய 70 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகின்றனவாம். மீதமுள்ள 30 சதவீத நிறுவனங்கள் , (விமான சேவை உட்பட) நஷ்டத்தில் இயங்குகின்றன. தனியாருக்கு தாரைவார்த்தால் எல்லா நிறுவனங்களும் அட்சய பாத்திரமாக மாறிவிட வாய்ப்பிருக்கிறதே என்று நீங்கள் நினைத்தால். அய்யோ பாவம்..!!! உதாரணத்திற்கு டாடா குழுமத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நிறுவனத்தின் மொத்த லாபத்தில் 80 சதவீதம் மூன்றே மூன்று நிறுவனங்கள் மூலம் மட்டும்தான் கிடைக்கின்றதாம். மீதி இருக்கும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நஷ்டத்திலோ , சொற்பமான லாபத்திலோ தான் இயங்கி வருகின்றன. இதுதான் யதார்த்தம்.

சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட தடத்தில் ரயில் சேவையை தனியாருக்கு விட்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லாம் பள பளப்பாகத்தான் இருக்கும். போகப் போகத்தான் பளபளப்பு பள்ளிலிக்கும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பயன். பொதுத்துறை நிறுவனங்களை சீரமைக்கலாம் ; சிதைக்கக் கூடாது. அது மக்களைச் சீரழிப்பதற்கு ஒப்பாகும். 


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.


Dec 8, 2019

பேசாத வார்த்தைகள் ~ 08122019


பேசாத வார்த்தைகள் ~ 08122019


உணவகம் ~ சுப்பு மெஸ்.

முன்கூட்டிய திட்டமிடல் இல்லாத ஒரு கோவை பயணத்தில் , மதிய உணவிற்காக சுப்பு மெஸ் படியேறினேன். மேற்படி மெஸ்ஸை தெரிவு செய்ததற்கு மூன்று காரணம் .

முதல் காரணம் நான் சொல்லவேண்டிய அவசியமில்லை ; உங்களுக்கே தெரிந்திருக்கும் . ஆம் . அதேதான். நாமம்..!!! இரண்டாவது அமைவிடம். பேருந்து நிலையத்திற்கு வெகு சமீபம். மூன்றாவது அசைவ சாப்பாடு ருசியாக இருப்பது.  சுப்பு மெஸ் அளவிற்கு வேறெந்த உணவகத்திலும் நீங்கள் மகளிர் கூட்டத்தை காணவியலாது. குறிப்பாக யுவதிகள்.


எப்பொழுதும் போல அப்பொழுதும் சுப்பு மெஸ் ஜனத்திரளால் நிரம்பி வழிந்தது. பத்து நிமிடக் காத்திருப்பிற்கு பின் இருக்கை கிடைத்து , உபகாசரிடம் முழுச்சாப்பாடு கோரினேன். கூடவே வறுத்த மீன். தலைவாழை இலை போட்டு , ஒரு எவர்சில்வர் தட்டில் சடங்குப்பொருட்கள் போல குழிக்கிண்ணங்களில் கூட்டு, பொரியல் , மீன் மற்றும் ஆட்டுக் குழம்பு , தயிர் நிரப்பி கொண்டு வந்து வைத்தார்கள்.

உங்களுக்கு அதிர்ட்டம் இருந்தால் கறிக்குழம்புக் கிண்ணத்தில் ஒரு சிறு துண்டு கறி கிடைக்கலாம். அதிர்ட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மீன் மட்டும் கிட்டாது. இரண்டு குழம்புமே அளவான காரம். மீனை விட கறிக்குழம்பு சுவை. கூட்டு பொரியல் ஓகே ரகம். உள்ளங்கை அளவிற்கான மீன் துண்டு குறைவான மாசலா, எண்ணெய் தடவி வெங்காயம், எலுமிச்சை சகிதம் மிதமான சூட்டில் பரிமாறப்பட்டது. நடுவில் இருந்த முள்ளை தவிர எள்ளளவும் சேதாரமில்லை. ஒரு முழுச்சாப்படும் , மீன் துண்டும் 245 ரூபாயானது. 200க்குள் இருந்திருந்தால் தகும்.


@@@@@@@@@@@


பெண்கள் , பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை கட்டுப்படுத்தும்விதமாக , இணையத்தில் குழந்தைகளை கொண்டு எடுக்கப்பட்ட ஆபாச படங்களை , பார்ப்பவர்களை பட்டியலிட்டிருக்கிறோம் என்றும் , சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து அறிவுரையும் தேவைப்பட்டால் தண்டனையும் வழங்குவோம் என்று காவல்துறை அறிவித்திருக்கிறது. ஒரு பெண் பிள்ளையை பெற்றவன் என்ற முறையில் வரவேற்கிறேன். அதே சமயம் சம்பத்தப்பட்ட சலனப்படங்களை எடுப்பவர்களை ; இணையத்தில் ஏற்றுபவர்களை தண்டித்தால் மிக்க மகிழ்வோம்.

மற்றபடி இன்றைய சூழலில் பார்ன் மூவி பார்ப்பதற்கோ , சமிஞ்கைகள் வாசிப்பதற்கோ பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. வெப் சீரிஸ் , வெட்டிங் போட்டோகிராஃபி , கிண்டில் புத்தகங்களே போதுமானதாக இருக்கிறது. நீங்க நம்பவில்லையெனினும் அதுதான் நிஜம்.


@@@@@@@@@


புத்தகம் ~ அகிலாஷ் சூறாவளியின் 18 சிறுகதைகள்.

பிரபாகரின் சிபாரிசின் பேரில் பெருமுயற்சி எடுத்து அமேசான் கிண்டில் எல்லாம் டவுன்லோடி மேற்படி புத்தகத்தை இலவசக் கொள்முதல் செய்தேன். கிண்டிலை ஆண்ட்ராயிடிலும் வாசிக்கலாம் போல. எனக்கு கிண்டில் ஆண்ட்ராய்டில் புத்தகம் வாசிப்பது இதுதான் முதல்முறை.

பக்கத்திற்கு இருபது முதல் இருபத்தைந்து வரிகள். வரிக்கு நான்கு வார்த்தைகள் என்ற கட்டமைப்பில் இருக்கிறது. புத்தகம் போலவே பக்கத்தை புரட்டும் வசதிகூட உண்டு. வாசித்த பக்கங்களின் சதவீதம்,  வாசிக்க வேண்டிய பக்கங்களின் உத்தேச நேரத்தேவை எல்லாம் footnote ல் காணக்கிடைக்கிறது. பத்து நிமிடங்கள் சேர்ந்தாற்போல வாசித்தால் 20,30 பக்கங்களை எளிதில் கடந்துவிடலாம். நல்ல பெரிய எழுத்துரு ; அவ்வளவாக கண்களை உறுத்தாத பின்னணி என்று வாசிக்க சவுகர்யமாவே இருக்கிறது.

சரி புத்தகத்திற்குப் போவோம். மொத்தம் 18 சிறுகதைகள். அகிலாஷ் சூறாவளி என்கின்ற சுரேந்தர் என்பவர்தான் எழுதியிருக்கிறார். வழக்கமான சிறுகதை பாணியெல்லாம் இல்லாமல் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கிறது. ஆங்கில வார்த்தைகளை English லேயே எழுதியிருப்பது சிறப்பு. புத்தகத்தின் பெருங்குறையாக நான் கருதுவது  "எலுதுபிலைகள்". ஜீரணிக்கவே முடியவில்லை.

கணிசமான கதைகளில் பயணமும், உரையாடலும் பிரதானமாக இருக்கிறது. சாதாரண கதைகளில் வரும் உரையாடல்களிலேயே இது யார் பேசுவது என்ற ஐயம் வாசிப்பவனுக்கு வரும். இவரது சிறுகதைகளோ அசாதாரணமான ரகத்தில் இருக்கிறது. போதாதற்கு முன்பின்னாக, அரூபமாக கதையை சொல்லிச் செல்கிறார். ஆரம்ப கட்டத்தில் இருக்கும் வாசகர்களுக்கு புரிந்து கொள்வது ரெம்பவே கடினம்.

ஒவ்வொரு சிறுகதையிலும் சில பத்திகள் அபாரமாக இருக்கின்றது.  ஓர் ஆரம்பம் , ஒரு பிரச்சனை அப்றம் சுபமாகவோ , சோகமாகவோ ஒரு முடிவு என்கின்ற வழக்கமான சட்டகத்திற்குள் அடக்கமுடியாத சிறுகதைகள். அதுவே பலம் அதுவே பலவீனமும்.

கொஞ்சம் பொறுமையா மீள் வாசிப்புக்கு உட்படுத்தி திருத்தி வெளியிட்டிருக்கலாம். ஒரு போட்டி வைத்து , காலக்கெடு வைத்து , கட்டுப்பாடுகள் வைத்து எழுதினால் இப்படித்தான் வரும் போல. ஆடல், பாடல், ஓவியம் எழுத்து போன்ற கலைகளுக்கெல்லாம் போட்டி வைப்பதை அனுமதிக்கவே கூடாது. தனியல்பாக எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி முகிழ்க்கவேண்டும் என்பதே என் அபிப்பிராயம்.

அப்றம் அ.சூ கொஞ்சம் இண்டெலெக்சுவல் பார்ட்டி போல. எனக்கு ஒத்துவரவில்லை. புத்தகம் நல்லால்லைன்னு சொல்லல ; எனக்கு பிடிக்கலைன்னு கூட சொல்லமாட்டேன். பிடிபடலன்னு வேணும்னா சொல்லலாம். கொஞ்சநாட்கள் கழித்து பொறுமையாக மீள்வாசிப்பிற்கு உட்படுத்தவேண்டும்.
"சிப்பிக்குள் இருக்கும் முத்தின்பால் ஆயிரம் கனவுகள் " அப்படின்னு ஒரு கவிதை அதற்கொரு விளக்கம் ஒரு கதையில் வருகிறது. எனக்கு பிடித்திருந்தது.

என்றென்றும் புன்னகையுடன்.,
ஜீவன் சுப்பு.

Dec 1, 2019

பேசாதவார்த்தைகள் ~ #011219 ~ உலர் | சுஷ்சுருதி உணவகம் |ந.வீ.பி | DRIVE | HACKERS .



பேசாதவார்த்தைகள் ~ #011219 ~ உலர் | சுஷ்சுருதி உணவகம் |ந.வீ.பி | DRIVE | HACKERS .




கடந்த வாரத்தில் 3 படங்களை மொபைலில் பார்த்தேன். முதலாவது பாண்டிராஜின் நம்ம வீட்டுப் பிள்ளை. திரளான நடிகர்களை வைத்துக்கொண்டு குடும்பம், உறவுகள் சார்ந்து படம் எடுப்பதில் பாண்டிராஜ் தேர்ந்த விற்பன்னராகிவிட்டார். நான்கைந்து கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு சுவராஸ்யமாக படம் பண்ணுவதில் உள்ள சவால்களுக்கு நிகரான சவால்கள் இதுபோன்ற படங்களிலும் உண்டு. இத்துனை கதாபாத்திரங்களை சிருஷ்டித்து, அவர்களுக்கு ரசனையான நாமகரணம் சூட்டி , தனித்த சுபாவம் கொடுத்து அதை சுவரஸ்யமாகவும் அதே சமயம் துறுத்தாமலும் காட்சிப்படுத்துவதென்பது பராட்டப்படவேண்டிய ஒன்று. சிவாவுக்கு மீண்டுமொருமுறை கைகொடுத்திருக்கிறார் பாண்டிராஜ். படம் எனக்குப் பிடித்திருந்தது.

இரண்டாவதாக Drive என்றொரு இந்திப்படத்தின் தமிழ் டப்பிங் பார்த்தேன். அஃபீசியலாக கொள்ளையடித்த பணத்தை புரெபஷனலாக கொள்ளையடிக்கிறார்கள். ஸ்ட்ரீட் ரேஷும் ; ஜனாதிபதி மாளிகையும் களம். இதெல்லாம் நம்புறமாதிரியா சார் இருக்குன்ற ரகத்தில் அநேகக் காட்சிகள் இருப்பினும் , பார்வைக்கு இடையூறில்லை . லீட் ரோல் செய்திருக்கும் இருவருமே நச். ஹீரோ ரோல் செய்திருப்பவர் கண்களிலேயே சிரிக்கிறார். மலையாளத்தில் பகத் போல இந்தியில் இவர் போல. இவர்களுக்கு இணையாக தமிழில் ஜீவா வந்திருக்கலாம். வரவில்லை ; ஒருவகையில் தப்பித்தோம். கதாநாயகி அலட்டலான பெர்ஷனாலிட்டி. அசால்ட்டாக அசரடிக்கிறார். லேடி சூப்பர் சுடாரெல்லாம் நாலு அடியல்ல நாற்பதடி பேக் போகவேண்டும். படம், பார்க்கலாம் ; பார்க்காமலும் இருக்கலாம் ரகம்.


மூன்றாவதகா Hackers என்றொரு ஹாலிவுட் படத்தின் தமிழ் டப்பிங் பார்த்தேன்.  அதிகாரத்திலும் பதவியிலும் இருக்கும் நபர்கள் , பொதுமக்களின் இணைய  ; தொலைபேசி உரையாடல்களை , கருத்துபரிமாற்றங்களை வேவு பார்க்கிறார்கள். இதனை உலகறியச்செய்யும் முயற்சியில் இறங்கும் எதிர்க்கட்சி தலைவரை காவு வாங்க தேதி குறித்திருக்கிறார்கள். மேற்படி திட்டத்தை எதேச்சையாக அறிந்து கொள்ளும் ஹேக்கர் பெண்ணொருவர் , மற்ற ஹேக்கர்கள் துணையுடன் அம்பலடுத்துகிறார். இடையே அப்பா மகள் பாசம் , அப்பாவின் சிஷ்யப் பிள்ளையாண்டனுடன் காதல் , லிப்லாக்கெல்லாம் உண்டு. ஆங்கிலப் படங்களை தமிழ் டப்பிங்கில் பார்ப்பது , சுப்ரபாதத்தை ஒலிக்கவிட்டு ;  ஒளியில் கிரிக்கெட்டைப் பார்ப்பதுபோல் உள்ளது. பார்க்காமலேயே இருந்திருக்கலாம். சிப் அளவிற்குக்கூட சுவராஸ்யமில்லை.

@@@@@@

மயிலன் சின்னப்பனின் உலர் சிறுகதை வாசித்தேன். அச்சில் வந்திருக்கும் அவரது மூன்றாவது சிறுகதை இது என்றெண்ணுகிறேன். அந்திமழை இதழில் வந்திருந்ததாக எழுதியிருந்தார். அந்திமழையெல்லாம் எலைட் ரக வாசிப்பாளர்கள் மட்டுமே வாங்கிக்கொண்டிருக்கும் மாத/வார இதழ் போல. எனது விருப்பத்தின் பேரில் கட்செவியில் pdf கோப்பை அனுப்பி வைத்திருந்தார். அபாரமான சிறுகதை. சற்றே பெரிய சிறுகதையும் கூட. அவரின் முதலிரண்டு சிறுகதைக்கும்  உலர்க்கும் இடையே பெரும்பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் விவரணைகளில். கொஞ்சம் சிக்கலான மனித அகம் சார்ந்த எண்ணங்களை, வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத உள் மன விருப்பங்களை தஞ்சை வட்டார வழக்கில் , நுட்பமாகவும் எளிதாகவும் எழுத்தில் வடித்திருக்கிறார். வாழ்த்துக்கள் டாக்டர். முதுநிலை மருத்துவம் படித்துவிட்டு பரபரப்பான மருத்துவராக இயங்கிக்கொண்டே எழுதுவதும், எழுத்தில் பிராகசிப்பதும் அபூர்வம். நல்லதொரு வாசிப்பனுபவத்தை தந்ததற்கு மனம் நிரம்பிய நன்றிகள் ம.சி. உங்களின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.


@@@@@@@


கடந்த வாரத்தில் ஒரு வேலை நாளில் எதேச்சையா கண்ணில் பட்டது சுஷ்சுருதி இயற்கை உணவகம். திருப்பூர் டூ பல்லடம் சாலையில், பழைய பேருந்து நிலையத்திற்கு வெகு சமீபமாக உள்ளடங்கி இருக்கிறது. விசாலமான வாகன நிறுத்துமிடமே பாதி திருப்தியை தந்துவிடுகிறது. பொதுவாக இயற்கை உணவகம், பாரம்பரிய உணவகம் என்றால் , பெருவாரியானவர்களைப் போல் எனக்கும் ஒவ்வாமை உண்டு. பெரிதாக ஒன்றுமில்லை ; அது இதுவென்று சொல்லி மொத்தமாக ருசியை காலி செய்துவிடுவார்கள் என்பதுதான் காரணம். திருமண மண்டப பந்திபோல் இருக்கிறது உணவருந்துமிடம். அதேசமயம் சாம்பாரில் கை வைக்கும்போதே நமக்குப் பின்னால் வந்து அடுத்த பந்திக்கான ஆட்கள் நிற்கும் அவலமில்லை . போலவே சாப்பிடுவதற்கு முன்பே டோக்கன் வாங்கச் சொல்லும் அசிங்கம் இங்கில்லை என்பது உபரி ஆறுதலாக இருந்தது. 

தலை வாழை இலை போட்டு இந்துப்புடன் பரிமாற ஆரம்பிக்கிறார்கள். புடலைங்காய் பொரியல் அதீத மசாலாவினால் தன்னியல்பைத் தொலைத்திருந்தது. ருசியும் பிரமாதமாக ஒன்றுமில்லை. அடுத்தது பலாக்கீரை மசியல். வேகவைத்த பருப்புடன் நன்கு மசித்திருந்தார்கள். நல்ல சுவை. அடுத்தது முள்ளங்கி துவையல். வாழ்வில் முதன்முறையா கேள்விப்படுகிறேன். புளி சேர்த்து மைய்ய அரைத்திருந்தார்கள். மோர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அபாரமாக இருந்தது. இதுபோக மாங்காய் ஊறுகாய், பொரித்த அப்பளம். 

ஒற்றைத் தீட்டல் பொன்னி அரிசியில் வடிக்கப்பட்ட சாப்பாடு. பதமாகவும் இல்லாமல் ; குழைவாகவும் இல்லாமல் பக்குவமாக வடித்திருந்தார்கள். இளம் சிவப்பு வண்ணத்தில் கொஞ்சம் குருணையாக இருந்தது சாதம். ஆனால் நல்ல ருசி. கதம்ப சாம்பாரை பொன்னிக்குவியலில் ஊற்றிப் பிசைந்து ஒரு கவளம் எடுத்து வாயில்போட்டால் அடடா பிரமாதம். எங்கள் பகுதியில் பூசைச் சாம்பார் என்று சொல்லுவார்கள். பல காய்கள் போட்டு , உறைப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்கும் . சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமாய் இருக்கும். இரண்டு நாட்களுக்குக்கூட வைத்துச் சாப்பிடுவோம். இங்கே வழங்கப்பட கதம்ப சாம்பார் நல்ல சுவை. பெரும்பாலான உணவகங்களில் சாம்பாரில் போடப்பட்டிருக்கும் காய்கறிகள் நானும் ரவுடிதான் ரேஞ்சுக்கு மட்டுமே இருக்கும். இங்கே விதிவிலக்கு. காய்கள் ருசியாக இருந்தது , விரும்பி சாப்பிட்டேன். அடுத்தது பருப்பு ரசம். எல்லா இடத்திலும் போல் இங்கேயும் மிளகாய் பொடி போட்டு சாம்பாரின் ஒன்றுவிட்ட தங்கச்சியைப் போல சமைத்திருந்தார்கள். 

அடுத்து , புளிக்குழம்பு ஓகே ரகம். அல்சர் பிரச்னையிருப்பதினால் ஊறுகாய் போல தொட்டுக்கொண்டேன். நாட்டு மாட்டுப் பாலில் உண்டாக்கிய தயிர் ஒரு கிண்ணத்தில் கொடுத்திருந்தார்கள். தயிருக்கு தாவுவதற்கு முன்பாக ரவை, பாசிப்பருப்பு, பச்சரிசி கலவையில் இளம் சூட்டில் கொடுக்கப்பட்ட பாயாசத்தை இலையில் விட்டு ஒரு பிடி பிடித்தேன். 90ஸ், 2k கிட்ஸ்களெல்லாம் பாயாசத்தை கிண்ணத்தில் போட்டு ஸ்பூனில் சாப்பிடுகிறார்கள். அட்டகாசமான விஷுவல்ஸ் கொண்ட ஒரு திரைப்படத்தை ஸ்டாம்ப் சைஸ் ஸ்க்ரீன் கொண்ட மொபைலில் பார்ப்பதற்கு ஒப்பானது அது. நிறைவாக தயிருடன் மோர் விட்டு ஏப்பம் விட்டேன். சில இடங்களில் மோரில் பச்சை மிளகாய், இஞ்சி , மல்லித்தழை எல்லாம் போட்டு நீர்மோர்ப் பந்தல் மாதிரி ஆக்கிவிட்டிருப்பார்கள். இங்கே அந்தக் கொடுமையை செய்யவில்லை. கிளீன் மோர்.

ஒரு முழுசாப்பாட்டின் விலை 110 ரூபாயாகிறது. தொகை கொஞ்சம் அதிகம்போல் தோன்றினாலும் தரத்திற்குத் தகும். அருகிலேயே இயற்கை அங்காடி கடை விரித்திருக்கிறார்கள். கருப்பு கவுணி அரிசி கால்கிலோ வாங்கிவந்தேன்.

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன் சுப்பு