May 30, 2013

தமிழ் வழியா ...? ஆங்கில “வலி”யா ...?
 குறிப்பு : நான்கு நாட்களுக்கு முன்பு எழுதியது .


போனவாரம் தமிழ்த்தாய்க்கு சிலை...!
இந்த வாரம் தமிழுக்கு உலை ...!

கல்லூரிகளில் இனி கட்டாயம் ஆங்கிலமாம்...! விசித்திரமாக இருக்கின்றது . விழிகளை விற்று சித்திரம் வாங்குவதற்கும் இதற்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை .

கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள் , பத்தாம் வகுப்பு வரையோ பன்னிரெண்டாம் வகுப்பு வரையோ தமிழில் படித்து விட்டு , பின் எப்படி கல்லூரியில் அனைத்தையும் ஆங்கிலத்தில் படிக்கமுடியுமென்று தான் தெரியவில்லை . தனிப்பட்ட முறையில் மிகுந்த சிரமப்பட்டேன் . இதோ இன்று வரை பட்டுக்கொண்டிருக்கின்றேன் . பத்தாம் வகுப்பு முடிந்து பாலிடெக்னிக் சேர்ந்தபொழுது மொழிதெரியா நாட்டில் சிக்கிக்கொண்ட மாதிரிதான் இருந்தது . அதுவும் முதல் வருடம் கணிணியையே பார்த்திராத என்னைப்போன்ற  மாணவர்களுக்கு C , C ++ என்று பாடங்களை வைத்தது பெரும் கொடுமை கூடவே கணிதம் ஒன்று கணிதம் இரண்டு என்று இரண்டு பி(க)ணக்குகள் வேறு  . இந்த பாடங்களில் சரி பாதி மாணவர்கள் அவுட் . அதைவிட கொடுமை அடுத்த முறை அரியர் எழுதிய அத்தனை போரையும் தேர்ச்சி பெற வைத்தது.

கடந்த ஆறு மாதங்களில் அதிகமான சம்பளத்துடனும் , சலுகைகளுடனும் கூடிய அருமையான இரண்டு வேலை வாய்ப்புகள் தவறிப்போனது. ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தெரியவில்லை என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே இருவிடங்களிலும் நிராகரிக்கப்பட்டேன் . இயல்புக்கு திரும்ப இரண்டு வாரமானது . இடைப்பட்ட காலத்தில் ஏகத்துக்கும் எரிந்து விழுந்தேன்  அம்மாவிடமும்  , அப்பாவிடமும் ஆங்கிலப் பள்ளியில் என்னை சேர்க்காத காரணத்திற்காக.  நிராகரிப்பின் வலியைக்காட்டிலும் ரணமான வேறு வலி இவ்வுலகில் இருகின்றதா எனத்தெரியவில்லை  .

தமிழில் புரிந்து கொள்ளும் அளவுக்கு ஆங்கிலத்தில் பாடங்களை புரிந்து கொள்ளமுடியவில்லை , புத்தகத்தின் பக்கங்களை திருப்புவதை விட, டிக்சனரியின் பக்கங்களை தான் அதிகம் புரட்ட வேண்டியிருக்கிறது . அதே சமயம் , சில தொழில்நுட்ப படிப்புகளை தமிழில் படிப்பதென்பது ரஷ்ய , சீன மொழியில் படிப்பதைப்போன்று அவ்வளவு சிரமமாக இருக்கின்றது  , அந்தக்கொடுமைக்கு ஆங்கிலமே பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது .

இன்று வாழ்வாதாரமான தமிழ் மொழியை பொருளாதாரமான ஆங்கிலம் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றது  . இன்றைய இயந்திர வாழ்க்கையில் , நல்லதொரு பொருளாதார நிலையைப்பெற ஆங்கிலம் அதி அவசியம் தான் , அதிலேதும் மாற்றுக்கருத்து இல்லை . ஆனால் கட்டாயம் என்று திணிக்கப்படுவதைத்தான் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . திணிக்கப்படும் எதுவுமே வாந்தியாகத்தானே வெளியே வரும் ...? வாந்தி சில சமயம் வாழ்க்கையையே பறித்துவிடுகின்றதே.

பள்ளிக்கூட நாட்களில் எப்பொழுதும் பிடித்தமான வகுப்பு விளையாட்டு வகுப்பு தான் , எந்தவிதமான தேர்வும் , மதிப்பீடும் , மனனமும் கிடையாது . எந்தவிதமான கட்டாயமும் கிடையாது ஆனால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் எல்லோரும் விருப்பத்தோடு  விளையாடுவோம் . வாழ்வாதாரமான தமிழையும் , பொருளாதாரமான  ஆங்கிலத்தையும்   பரீட்சை எழுதும் ஒரு பாடமாக வைக்காமல், விளையாட்டு வகுப்பை போன்றே , செயல் வழிக்கற்றல் மூலமாக ஆரம்பப்பள்ளிகளில் இருந்தே  முறையாக  சொல்லிக்கொடுத்தார்களேயானால்  நிச்சயமாக அது எல்லோருக்கும் பயனாக இருக்கும் . அதை விடுத்து கட்டாயம் என்று திணித்தார்களேயானால் அது சர்வநிச்சயமாக அழிவையே தரும் மொழிக்கும் , மனிதர்க்கும் .

ஒருவேளை ஆங்கில வழி கட்டாயமாக்கப்பட்டால் , அனைவரின் ஒருமித்த கருத்துக்கு பின்னரே அது நடைமுறைக்கு வரவேண்டும் . இல்லையெனில் ஆட்சி மாறினால் காட்சி மாறும் அரசியல் சடுகுடுவில் மாணவர்கள் சிக்கி சின்னா பின்னமாகிவிடுவார்கள். ஏற்கனவே சமச்சீர் கல்வியில் அதுதானே நடந்தது .


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு24 comments:

 1. பலருக்கும் சிரமமான வலி(ழி) தான்... ஆனால் கடக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. கடக்கலாம் ...! ஆனா கட்டாயப்"படுத்த"ப்பூடாது ..!

   Delete
 2. //ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தெரியவில்லை என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே இருவிடங்களிலும் நிராகரிக்கப்பட்டேன்//

  நிலைமை இப்படி இருக்கும்போது வேறென்ன செய்ய?த்மிழும் வேண்டும்,ஆங்கிலமும் வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. //தமிழும் வேண்டும்,ஆங்கிலமும் வேண்டும்!//

   ஆமா , ரெண்டுமே உருப்படியா வேணும் ...!

   Delete
 3. //அதே சமயம் , சில தொழில்நுட்ப படிப்புகளை தமிழில் படிப்பதென்பது ரஷ்ய , சீன மொழியில் படிப்பதைப்போன்று அவ்வளவு சிரமமாக இருக்கின்றது , அந்தக்கொடுமைக்கு ஆங்கிலமே பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது . // - இது சொன்னீங்களே சரி...
  பொருளாதார வாழ்விற்காக ஆரம்பத்திலிருந்தே அடித்தளம் அமைத்து கொள்வது அவசியமாகிறது... வலியும், வழியும் அவரவர் சூழலை பொறுத்து அமைகிறது.

  ReplyDelete
  Replies
  1. //ஆரம்பத்திலிருந்தே அடித்தளம் அமைத்து கொள்வது அவசியமாகிறது... //

   நிறையா பேருக்கு நிலமே இல்லையே ....! எங்க போயி அடித்தளம் அமைப்பது ..?

   Delete
 4. இதுகுறித்து விரைவில் என்னுடைய பார்வையையும் கூறுகிறேன்...

  அவனவனுக்கு வலி வந்ததாத் தான் தெரியும் .................

  ReplyDelete
  Replies
  1. //அவனவனுக்கு வலி வந்ததாத் தான் தெரியும் .................//

   "வலி"மொழிகின்றேன் ...!

   Delete
 5. புரிந்து கொள்வதற்கும் சொந்தாமாக படிக்கவும் தாய்மொழிதான் சிறந்தது. ஆனால் என்ன செய்ய ஆங்கிலம் நம்மை ஆட்டிப் படைக்கிறது.
  ஆங்கிலவழிக் கல்வி பற்றி இன்று நானும் பதிவிட்டிருக்கிறேன்.
  அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி சரியான முடிவா?

  ReplyDelete
  Replies
  1. நல்ல விரிவான பதிவுங்க ...!

   Delete
 6. // வாழ்வாதாரமான தமிழையும் , பொருளாதாரமான ஆங்கிலத்தையும் பரீட்சை எழுதும் ஒரு பாடமாக வைக்காமல், விளையாட்டு வகுப்பை போன்றே , செயல் வழிக்கற்றல் மூலமாக ஆரம்பப்பள்ளிகளில் இருந்தே முறையாக சொல்லிக்கொடுத்தார்களேயானால் நிச்சயமாக அது எல்லோருக்கும் பயனாக இருக்கும் . //

  I agree with the above points. I was a tamil medium student till 12th grade. I had to struggle in engineering and job search as you mentioned. But I took it easy as "This too shall pass". So Please take this as opportunity to learn and you will succeed!

  ReplyDelete
 7. ஆங்கில அறிவு அத்தியாவசியம்தான் ஜீவன். அதில் மாற்றுக் கருத்தில்லை. தமிழ்வழிக் கல்வியை அடிப்படையாக வைத்து, ஆங்கில அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து. அது கட்டாயப்படுத்தி திணிக்கப்படாமல் ஆர்வத்தின் பாற்பட்டு வர வேண்டும்!

  ReplyDelete
 8. நான்கூட ரொம்ப சிரமப்பட்டேன்... ஆனால் முதல் வருடம் வரை மட்டுமே... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வலி யிலிருந்து வழி தேடி தப்பிச்சுட்டீங்க ..!

   Delete
 9. நானும் +2வில் தமிழில் இருந்து கல்லூரியில் ஆங்கிலத்துக்கு மாறினேன். HIGH SCHOOL ENGLISH GRAMMAR -WREN & MARTIN உதவியுடன் ஆங்கிலம் கற்றுக் கொண்டு தேர்வுகள் எழுதுவது அவ்வளவு சிரமம் ஒன்றும் இல்லையே!! ஒரு வேலை இது ஆளாளுக்கு மாறுபடலாம். ஒரு ஆசிரியர் உதவியுடன் சில மாதங்களில் PICK up செய்து விடலாம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க ...!

   //ஒரு ஆசிரியர் உதவியுடன் சில மாதங்களில் PICK up செய்து விடலாம்.//

   வாஸ்தவம் தான் , அதற்கான முயற்சி எடுக்காதது தவறேன இப்பொழுது உணர்கிறேன் .

   Delete
 10. நல்ல கட்டுரை நண்பரே... திணிக்கப்படும் எதுவும் சரியல்ல என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

  ஆங்கிலம் கற்றுக்கொள்வதும் தவறல்ல. அடிப்படையிலிருந்தே நமது தாய்மொழி தவிர வேறு ஒரு பாஷையும் கற்றுக்கொள்வது நிச்சயம் உதவும். எத்தனை மொழிகள் கற்றுக் கொண்டாலும் அதனால் நல்ல பலன் தான் கிட்டுமே தவிர கெடுதல் ஒன்றும் இல்லை. ஹிந்தி கற்றுக் கொள்ளாது தில்லி வந்து பட்ட கஷ்டங்கள் - ஹிந்தியை படிக்காது விட்டது தவறு என புரிய வைத்தது!

  ReplyDelete
 11. யப்பா !! நீங்க பட்ட ஒவ்வொண்ணும் நானும் பட்டேன், படுகிறேன். இன்னும் ஆங்கில அகராதியைப் புரட்டிக் கொண்டு, எனக்குத் தெரிந்த ஒரே தீர்வு ஆங்கில வழிக் கல்விதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது கருத்துக்கு நன்றி தமிழானவரே ...!

   Delete
 12. ஆங்கிலவழிக் கல்வியினால் மட்டும் ஆங்கிலம் சரளமாகப் பேச வந்துவிடும் என்று தோன்றவில்லை. ஆங்கிலம் என்கிற தயக்கம் வேண்டுமானால் குறையலாம். அந்தத் தயக்கம் மொழியின் மேலிருக்கும் ஆர்வத்தினாலும் குறைந்து மறையும். பெண்ணைச் சந்தித்துப் பேசும் தயக்கம் போலத்தான் மொழியை பழகும் தயக்கமும்.

  ஆங்கிலம் அவசியம் தான். சந்தேகமேயில்லை.

  ReplyDelete
  Replies
  1. //பெண்ணைச் சந்தித்துப் பேசும் தயக்கம் போலத்தான் மொழியை பழகும் தயக்கமும்.//

   ரெம்பச்சரியா சொன்னீங்க .உங்களது கருத்துக்கு ரெம்ப நன்றிங்க ...!

   Delete

Related Posts with Thumbnails