Jan 17, 2021

பேசாத வார்த்தைகள் #170121
ஊர் சுத்தீசின் மூன்றாம் பயணமாக பழனி உறுதி செய்யப்பட்டு , ஜனவரி இரண்டாம் திகதி சென்று வந்தோம்.  பழனியைத் தெரிவு செய்ததில் எனது சென்டிமெண்டும் அடங்கும். பால்யத்தில், பெற்றோருடன் பழனிக்குப் பாதயாத்திரை சென்றதுண்டு. ஏழு அல்லது எட்டு நாள்ப் பயணம். வழி நெடுகிலும் உண்பதற்கும், அருந்துவதற்கு ஏதேனும் தந்துகொண்டே இருப்பார்கள். தாராளமாகக் கொள்ளக்கூடிய ஜோல்னா பை ஒன்றை எடுத்துக்கொண்டால் போதும் . பத்து நாட்களை பதுவிசாக களித்துவிடலாம். பள்ளிக்கூடம், வீட்டுப்பாடம் என்று கட்டுப்பாடுகள் இல்லாமல் , சுதந்திரமாகச் சுற்றலாம். வாத்தியாரும் சரி வீட்டினரும் சரி, எவ்வளவு சேஷ்டை, குறும்புகள் செய்தாலும் அடிக்க மாட்டார்கள். கன்னி சாமியாம் 🙂. மேற்படி சலுகைகளுக்காவே தையை எதிர்பார்த்திருப்போம். இப்போது வாட்ஸாப் பிரைவசி பற்றி எல்லோரும் அரற்றிக்கொண்டிருக்கிறார்கள். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பான பாதயாத்திரையில், சாலையில் , சாக்பீஸ்கள் கொண்டு மெசேஜ் பாஸ் செய்துகொள்வார்கள். நத்தத்திற்கு முன்பே பெற்றோரை தவறவிட்டுட்டு , திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் காத்திருப்பதாக சாலையில் தகவல் எழுதிவிட்டுச் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது.கல்லூரி சென்ற பிறகு பழனி செல்வது நின்று போனது, கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து , 2016 ஜனவரியில்  பணி நிமித்தம் உடுமலை சென்றிருந்தேன். உடன் வேலைபார்க்கும் சகா ஒருவருடன். சென்ற வேலை சீக்கிரமே முடித்துவிட, இரவல் வாகனம் வாங்கிக்கொண்டு பழனிக்கு ஒரு திட்டமிடாத விஜயம் செய்து வந்தோம். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக அவ்வருடம் , மகள் பிறப்பு , பதவி உயர்வு என சுபிட்சமாக கடந்தது. சென்டிமெண்டாக அதற்கடுத்த மூன்று வருடங்களும் பழனிக்குப் போய் வந்தேன். பெரும்பாலும் தனியனாக. மிகச் சிறப்பாக அமைந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் மோசமில்லை. சென்ற வருடப் பயணம் தள்ளிப்போனது , கரோனவால் கடைசி வரை போக முடியாமாலும் போனது. 2020 எவ்வளவு சீறும் சிறப்புமாக போனதென்று நான் உங்களுக்குச்சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அடுத்தடுத்து கோவில்களாகத் தெரிவு செய்து பயணித்துக் கொண்டிருப்பதை நண்பர்கள் சிலர் பரிகசிக்கிறார்கள்.  கோவில்களை குறிப்பாக மலைக்கோவில்களை தேர்ந்தெடுத்துப் பயணிப்பது ,தேக ஆரோக்கிய சோதனைக்காவே. மற்றபடி பக்தி , ஆன்மீகம் என்பதெல்லாம் , சனிக்கிழமை வீட்டுத்தங்கலை தவிர்த்துவிட்டு ஊர் சுத்துவதற்கு வீட்டினரின் இசைவையும் , ஆதரவையும் சுமூகமாக பெறுவதற்கான ஒரு காரணம். அவ்வளவே !பழனி என்று முடிவான பின், எவ்வகையில் பயணிப்பதென்று வாட்ஸாப்பில் கூடிப்பேசி , இரயில், பேருந்து என்று பரிசீலித்து நிறைவாக வாடகை டாக்சி அமர்த்திக்கொண்டு பயணிப்பது என்று முடிவானது. ஆகும் செலவை சமமாக பங்கிட்டுக் கொள்வதென்றும் ஏகமனதாக முடிவு செய்து, காந்திபுரத்திலிருந்து காலை ஏழு மணிக்கு நால்வருடன் இன்டிகாவில் கிளம்பினோம். முன்னிருக்கையில் வயதில் மூத்தவரை அமர்த்திவிட்டு. பின்னிருக்கையில் இரண்டு மலைகளுக்கு நடுவே அடியேன் ஒடுக்கி, மடக்கி என்னை இருத்திக் கொண்டேன். இருங்கள், மலைகளென்றா சொன்னேன்!? நாளை அலுவலகம் போனால்  தாமரை மணாளன்கள் நசுக்கிவிடுவார்கள். மலைக்குப் பதிலாக குன்று என்று வாசித்துக்கொள்ளுங்கள்.கோவையிலிருந்து, பொள்ளாச்சி வரையிலான சாலையை, தார் கொண்டும் , சிமெண்ட் கொண்டும் இழைத்திருக்கிறார்கள். வாகனங்கள் வெண்னெயில் வழுக்கிக்கொண்டு போகும் கத்தி போல விரைகிறது. அதே சமயம் அச்சமாகவும் இருக்கிறது. நாங்கள் சென்று திரும்பிய போதும் மட்டும் நான்கைந்து விபத்துகளைக் கண்ணெதிரில் கண்டோம். பொள்ளாச்சிக்குப் பிறகான சாலை மிகவும் குறுகலாகவும் , நெரிசலாகவும் இருக்கிறது. சுமார் 9.30 மணி வாக்கில் பழனியடைந்தோம். 50 ரூபாய்க்கான டோக்கனைத் தந்துவிட்டு , 60 ரூபாய் கேட்டுப் பெற்றுக்கொண்டார்கள் வாகனக் கட்டணமாக. ஆவினன்குடி முருகரைத் தரிசித்துவிட்டு, அடிவாரத்தில் இருக்கும் அய்யர் களப்பில் , காலை உணவாக , மைதாமாவு தோசையையும், திரவ இட்டலியையும், கடலை மாவு கரைத்துவிட்ட சாம்பரையும் எடுத்துக்கொண்டோம். கொண்டுபோயிருந்த வேஷ்டி சட்டையை , மடம் ஒன்றில் கட்டணம் செலுத்தி உடுத்திக்கொண்டு மலையேறத் தயாரானோம்.அடியேனும் , நண்பரும் முறையே இரத்த அழுத்த, சர்க்கரை வியாதிக்காரர்கள் என்பதினால் மலையேறத் தயங்கி , வின்ச்சை நாடச்சொல்லி வற்புறுத்தினோம். கரோனா காரணமாக வின்சிற்கு இணைய முன்பதிவு செய்யவேண்டுமாம். போக இரண்டு மணி நேரம் காத்திருக்கவும் வேண்டுமாம். கொஞ்சம் தூரம் போய் வின்ச் கார் மேலேறுவதை வேடிக்கை பார்த்தேன். கால்களிரண்டும் நழுவி, தலை சுற்றி எங்கேயோ அடி ஆழத்தில் வீழ்ந்துகொண்டிருப்பது போல ஆகிவிட்டது. . ரோப் கார் என்று இழுத்தோம். அதுவும் இப்படித்தான் தொங்கும் , அதற்கும் இரண்டு மணி நேரம் தொங்கல் என்றார்கள். ஆள விடுங்கடா சாமி , தவழ்ந்தே மலேயேறிக்கிறேன் என்று சொல்லி யானைப்பாதையை நோக்கி நடையைப் போட்டோம். தைப்பூசத்திற்கான பராமரிப்பு பணிகள்நடைபெறுவதாலும், கரோனா பாதுகாப்பு நிமித்தமும் வழக்கமான தலைவாசல் பாதையை மூடிவிட்டார்கள். ஓர் அரைப் பர்லாங் சுற்றி வந்து , உடற்சூடு சரிபார்க்கப்பட்டு , கிருமிநாசினி தெளிக்கப்பட்டு யானைப்பாதையில் பயணிக்கப் பணிக்கப்பட்டோம்.உடன் வந்த தா. மணாளன்கள் இருவரும் சடுதியில் மலையேறிவிட , நானும் , நண்பர் சர்க்கரையும் ஒவ்வொரு குடுமி ஊசி வளைவுகளிலும் உட்கார்ந்து ஓய்வெடுத்து, அயோடக்ஸ், மூவ் விளம்பர ஆண்டிகள் போல உடல் வளைத்து, முதுகு கூனி மிக மெதுவாக தவழ்ந்தேறினோம். வழக்கத்தை விட மிகவும் சோர்வாக உணர்ந்தேன். சேர நன்னாட்டினரின் வருகைக்குறைவும் ஒரு காரணமாக இருக்கலாம். சுமார் 1 மணி நேர பெரு(மூச்சு) முயற்சிக்குப் பிறகு உச்சியை வெற்றிகரமாக அடைந்தோம். நல்ல தேக சுத்தி உள்ளவர்கள் பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் மலையேறி விடுவார்களாம். நண்பர் சொன்னார். நடை சாத்தும் நேரமென்பதினால் மணாளன்கள் நெட்டித் தள்ளிக் கூடிபோனார்கள். நான் தனியாக சென்றிருந்தால் ஆற அமர உட்கார்ந்து சேவித்துத் திரும்பியிருப்பேன். கடந்த முறை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் உட்கார்ந்து காத்திருந்து தரிசித்துத் திரும்பினேன். அவ்வளவு பொறுமை எப்படி வந்தது என்று எண்ணி எனக்கு நானே ஆச்சரியப்பட்டுக்கொண்டேன். அது பொறுமையல்ல வயோதிகம் காரணமாக வந்த இயலாமை என்று பிறிதொருநாள் உணர்ந்தும் கொண்டேன். ராஜ அலங்காரம் , ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டு 30 வினாடிகள் முருகரை நோக்கித் திரும்பினோம்.மலையில், வின்ச் வந்திறங்கும் இடத்தில் காஃபி கிளப் ஒன்று இயங்கிக்கொண்டிருப்பதை எங்கள் சாரதி சொல்லியிருந்தார். தரிசனம் முடித்து, சாரதியின் தகவலை நினைவில் வைத்து விரைந்தோம். சூடாக மெது வடை போட்டிருந்தார்கள். ஆளுக்கு இரண்டு வடையும் , தேநீரும் அருந்தினோம். வடையும் சட்டினியும் இலை போட்டுப் பரிமாறினார்கள். திவ்யம். தேநீர் பானகம் போலிருந்தது. சர்க்கரை நண்பர் கொஞ்சம் கூடுதலாக பால் வாங்கிக்கொண்டார். ஐயர் கடையில் தேநீரருந்துவது , முனியாண்டி விலாசில் தயிர் சாதம் சாப்பிடுவது போன்றது. அடுத்த முறை இத்தகைய தவறை செய்திடலாகாது.வடை தந்த ஆற்றலில் விறு விறுவென இறங்க ஆரம்பிதோம். கிட்டத்தட்ட கடைசி மண்டபத்திற்கு முன்பாக சர்க்கரை நண்பர் நின்றுவிட்டார். என்னவென்று ஏறிட்ட எனக்கு பூமியைக் காட்டினார். வடிவேலுவின் "பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்" காட்சியின் நேரலையை கண்டேன். அடுத்த நிமிஷமே எனக்கும் பேஸ்மட்டம் பூகம்பம் கண்ட கட்டிடடம் போல ஆட ஆரம்பித்துவிட்டது. அங்கேயே ஒரு ஐந்து நிமிடம் உட்கார்ந்து ஸ்திரப்படுத்திக்கொண்டு கீழே இறங்கி வந்தோம்.வழமையைத் தொடரும் வண்ணம் சித்தனாதன் கடையில் விபூதி, குங்கும சந்தனப் பொட்டலங்களை வாங்கிக்கொண்டேன். இம்முறை பஞ்சாமிர்தத்தை மடத்தில் எவர்சில்வர் போத்தலில் வாங்கிக்கொண்டேன். அரைகிலோ நூறு ரூபாய். அம்மா கேட்ட கறுப்புக் கயிறு எளிதில் கிடைத்துவிட்டது. மனைவி கேட்ட முருகன் மோதிரமும் ; மகள் கேட்ட சிஞ்சான் பொம்மையும் எளிதில் கிடைக்காமல் அலையவிட்டது. சென்ற முறை சிஞ்சான் பொம்மைக்குப் பதிலாக பெயர் தெரியாத வேறொரு பொம்மையை வாங்கிக் கொண்டுபோய் மகளுக்குக் கொடுத்தேன். குதூகலத்தோடு வாங்கிக்கொண்டவள் சுமார் முப்பது வினாடிகள் அதையே உற்றுப் பார்த்துவிட்டு இது சிஞ்சான் இல்ல இவன் ஏமாத்திட்டான்னு மூஞ்சியில் விசிறியெறிந்துவிட்டாள். ஆகவே இம்முறை அசலோடு போனால்தான் ஆச்சு என்று கடை கடையாக ஏறி இறங்க ஆரம்பித்தேன்.நான் சிஞ்சான் பொம்மையை தேடுவதைப் பார்த்த நண்பர்கள், இவன் வாங்காமல் வரமாட்டான் போலயே என்று பங்குக்கு அவர்களும் தேட ஆரம்பித்துவிட்டார்கள். சகாவு ஒருபடி மேலே போய் , சிஞ்சான் பொம்மை என்று கூகிளிலிட்டு,  சிஞ்சான் பொம்மை சித்திரத்தை மனத்திலேற்றி ஒரு வழியாக ஒரு கடையில் கண்டிபிடித்துவிட்டார். ஆனால் அது பொம்மையில்லை , சிஞ்சான் பொம்மையிட்ட சாவிக் கொத்து. சரி பொன் வைக்குமிடத்தில் பூவையாவது வைக்கலாம் என்று வாங்கிக்கொண்டேன். மடத்திற்கு வந்து வேஷ்டி சட்டையிலிருந்து ஜீன்ஸ் டீசர்டிற்கு மாறிக்கொண்டு திரும்ப ஆரம்பித்தோம். வரும் வழியெங்கும் பழநி க்கு , "நி" வருமா இல்லை "னி" வருமா என்று நண்பர்கள் தமிழாராய்ச்சி செய்துகொண்டே வந்தார்கள்.நெடுந்தொலைவுப் பயணத்திற்கு இன்டிகா ஏதுவான வாகனமில்லை. சல்லிசான தொகை , எளிதில் கிடைக்கும் என்பது மட்டுமே அனுகூலம். சாரதி அனுபவஸ்தர் என்பதினால் திறம்பட செலுத்தினார். பெரிதாக அசதி தெரியவில்லை. நபர் ஒருவருக்கு ரூபாய் 7590 ஆனது. வரும் வழியில் டேக் டைவர்சன் போட்டு 15 கிலோமீட்டர் சுற்ற விட்டுவிட்டார்கள். மூன்றரை மணிக்குக் காந்திபுரம் வந்ததும் நண்பரின் ஆஸ்தான மெஸ்ஸில் அவரது உபயத்தில் மதிய உணவு முடித்துக்கொண்டு வீடு திரும்பினோம். 


பார்க்கலாம் 2021 என்னென்ன சுபிட்சங்களை தரவிருக்கிறது என்று✨


என்றென்றும் புன்னகையுடன்

ஜீவன் சுப்பு


 


2 comments:

  1. பழனி பயணம் நன்று. நான் சென்று கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. போக வேண்டும் என்று ஆசையிருந்தாலும் வாய்ப்பு இது வரை அமையவில்லை. திருப்பதிப் பயணமும் அப்படியே - கடைசியாகச் சென்றது கல்லூரியில் படிக்கும்போது!

    ReplyDelete
  2. அட...! எங்க ஊர்...! வாழ்த்துகள்...

    ReplyDelete

Related Posts with Thumbnails