Showing posts with label வாசிப்பு . சிறுகதை . பேசாத வார்த்தைகள். Show all posts
Showing posts with label வாசிப்பு . சிறுகதை . பேசாத வார்த்தைகள். Show all posts

May 8, 2017

திருச்சி – CONCLUSION..!


உணவகம் | சிற்றுண்டியகம்




திருச்சி மலைக்கோட்டை வாசலின் நேர் எதிர்த்தாற்போல உள்ள வீதியில் , இரவு பத்து மணிக்கு மேல திருவரங்கத்துக்காரர்கள் தள்ளுவண்டி உணவகம் நடத்துவார்கள். ஒன்றிரண்டு கடைகள் அல்ல ; சேர்ந்தார்போல இருபது , முப்பது கடைகள் . தயிர்சாதம் முதல் அக்கார வடிசல் வரை விதம் விதமாக, தரமான பதார்த்தங்கள்  மலிவான விலையில் கிடைக்கும் .  ஐந்து ரூபாய்க்கு ஒரு பதார்த்தம் என்று தட்டில் வைத்துத் தருவார்கள் . வகைக்கு ஒன்றாக நாலு தட்டு வாங்கி சாப்பிட்டால் திவ்யமாக இருக்கும். நள்ளிரவு வரை கூட்டம் தட்டேந்திக்கொண்டிருக்கும் அந்த வீதியை ,  மறுநாள் காலையில் பார்த்தீர்களேயானால் அசந்து போய்விடுவீர்கள் . சில மணி நேரங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ரூபாய்களுக்கு உணவு வியாபாரம் நடந்ததற்கான அறிகுறியாக ஒரு சோற்றுப்பருக்கையைக் கூட உங்களால் காண முடியாது . அவ்வளவு சுத்தம் . இபொழுதும் மேற்படி கடைகள் நடந்து கொண்டிருக்கின்றனவா எனத் தெரியவில்லை.

மலைகோட்டை தெப்பக் குளத்தின் அருகே உள்ள உணவகம் ஹோட்டல் ரகுநாத் . மேட்டுக்குடி மக்களுக்கானது ( ஹை கிளாஸ் வெஜ் ரெஸ்ட்டாரென்ட்!) . அவர்களது மலிவு விலை உணவகம் ஒன்றும் ஓரமாக இருந்தது . தற்போதைய அம்மா உணவகம் போல . சமையல், பதார்த்தங்கள் எல்லாம் ஒன்றே தான் . பரிமாறும் இடமும் அளவும் சிறியது. அப்புறம் மதியம் மட்டும் தான் மலிவு விலைச் சாப்பாடு . பதினைந்து ரூபாயோ இருபது ரூபாயோ கொடுத்ததாக நினைவு . அன்றைய நாட்களில் அங்கே தினமும் டோக்கன் வாங்குவதே எம் அன்றாட லட்சியம் . முக்கால் வயிற்றிற்குதான் போதுமானதாக இருக்கும் ஆனாலும் சுவை அலாதி.

அடுத்தது நம்ம ஏரியா . சிந்தாமணி கேண்டீன் . அரசு சார்ந்த உணவகம் , டெய்லரிங், ஜவுளி என்று வரிசையில்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சிந்தாமணி அங்காடிகளில் உணவகமும் ஒன்று . புதிதாகப் போகிறவர்கள் கூகுள் இட்டால் கண்டுபிடிக்க முடியாது. கூட்டத்தின் கூச்சலைத் தாண்டும் அளவிற்கு கூக்குரல் இட்டீர்களேயானால் நடைபாதைக் கடைக்கார்கள் கை காட்டுவார்கள். பெரும்பாலான நகரங்களில் சிந்தாமணி சீந்தாமணியாகத்தான் காட்சி அளிக்கும் . ஆனால், திருச்சி விடிவிளக்கு. போளி , குழிப்பணியாரம் போன்ற இடைப் பலகாரங்கள் சுவையாகவும் , சல்லிசாகவும் கிடைக்கும் . அன்றைய நாட்களின் காலைகளில் சிந்தாமணியில் தான் கை நனைப்பேன் . இந்த முறை இரவில் போனபோது புரோட்டவும், குழிப்பணியாரமும் கிடைத்துண்டேன்.

மெயின்காட்கேட் நிறுத்தம் தாண்டி காந்தி மார்க்கெட் செல்லும் நேர் சாலையின் மத்திய நூலகம் அருகில் , கல்யாணி கவரிங் கடைக்கு வலதுபுறம் கற்பகம் ரெஸ்ட்டாரென்ட் என்று ஒன்று உண்டு . இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருகின்றது. வேலை பார்த்த கடைக்கு நேர் பின்புறமாக அமைந்திருந்தது . கடையில் இரண்டு வேளையும் கொடுக்கும் தேநீரைத் தவிர்த்து அதற்குண்டான காசை கையில் பெற்றுக்கொண்டு கற்பகத்தில் மாலை வேளைகளில் காஃபி சாப்பிட்டதுண்டு. கற்பகம் காஃபிக்கென்றே பிரத்யேக ருசியுண்டு . குறிப்பாக கண் முன் காஃப்பிக் கொட்டையை அரைத்து சுடச்சுட டவரா செட்டில் போட்டுத்தரும் காஃபியின் ருசி அடுத்த நாலைந்து மணி நேரங்களுக்கு உங்கள் நாவில் நிலைத்திருக்கும் . பாலைத்தொட்டு பொட்டு வெச்சுக்காலம் என்று கிராமங்களில் பாலின் கெட்டிதன்மைக்கு ஒரு உதாரணம் சொல்வார்கள் . போலவே கற்பகம் காஃபியும் .

மைக்கேல் ஐஸ்கிரீம் பார்லர் . திருச்சியினரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பெற்றுக்கொண்டிருக்கின்ற வெயில் நகரத்தின் COOL DESTINATION. மெயின்காட்கேட் அஞ்சலகத்தின் அருகில் கடை . கண்ணாடித் தடுப்புகள், குளிரூட்டப்பட்ட அறை , மெல்லிய இசை , வண்ணம் பூசப்பட்ட சுவர்களின் , வாய்களில் ஐஸ்கிரீம்கள் வழிய செயற்கைப் புன்னகையுடன் கூடிய விளம்பரக் குழந்தைகளின் போஸ்டர் என்று   ஐஸ்கிரீம் பார்களுக்கென்று உள்ள எந்தவொரு உள்கட்டமைப்புகளோ , அலங்காரங்களோ இல்லாத ஒரு பனிக்கூழகம் . இருபது நபர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் போடப்பட்டிருக்கும் டீக்கடை டைப் மர பெஞ்ச் , ஐஸ்கிரீம் பெட்டிகள் அவ்வளவே . நிற்பதற்கு இடமில்லாமல் மக்கள் நாக்கைச் சொட்டிகொண்டு நடைபாதையிலே நிற்கிறார்கள் . நானும் போய் நின்றுகொண்டேன் . நின்று கொண்டே சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை . பத்துப் பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின் மர பெஞ்சில் இடம் கிடைத்தது . மொத்தமே எட்டு வகைதான் . குறிப்பாக வெரைட்டிகளின் பெயர் உச்சரிக்கும் வகையில் உள்ளது சிறப்பு. குறைந்தபட்ச விலை எட்டு ரூபாய் , அதிகபட்சம் பதினைந்து அவ்வளவே . பேமிலி பேக்கும் உண்டு. இருபது பேர் அமரக்கூடிய இடத்தில் மடிமீது ஒருவாரக சேர்த்து  நாற்பது பேர் ஐஸ்கிரீம் சுவைக்கிறார்கள். 

பரிசாரகரை கண்டுபிடிப்பது கூவத்தூரில் ஒளிந்திருக்கும் எம்.எல்.ஏ வைக் கண்டுபிடிப்பதை விட சிரமாமாக இருந்தது. தாவிப்பிடித்து கேசர் பாதமும் , பிஸ்தாவும் ஆர்டர் செய்தேன் . வகைக்கு ஒன்றாக சின்ன குழிக்கிண்ணங்கள் இரண்டில் கரண்டியுடன்  மேசை மீது வைக்கப்பட்டது. பொதுவாக ஐஸ்கிரீமை ஸ்பூன் பை ஸ்பூனாக ரசித்து ருசித்து சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள் . ஆனால் நமக்கு அந்தளவுக்கு பொறுமை இல்லை மேலும் மைக்கேல் பார்லரில் அது முடியாததும் கூட . கவுதம் மேனன் டைப்பில் நாம் சுவைத்துக்கொண்டிருந்தால் , நடைபாதையில் நிற்பவர்கள் ஹாட்டாகி நம்மை  கூழாக்கிவிடுவார்கள் . வேகமாகவே புசித்து ருசித்து வெளியேறினேன் . கேசர் பாதம் நல்ல சுவை . பிஸ்தா ஓக்கே. வகைக்கு ஒன்றாக நாலைந்து கிண்ணங்களை சுவீகரிக்கிறார்கள் மக்கள் . ரேபான் கிளாஸ் , அர்மானி ஜீன்ஸ் , அடிடாஸ் டீ சர்ட் என்று ஒரு மேட்டுக்குடி பிராண்டட் நபர் அருகிலேயே மேல் பட்டன் இல்லாத , தலை வாரத கேசத்துடன் ஒழுகிய மூக்கைத் துடைத்துக்கொண்டே ஐஸ்கிரீமை சுவைத்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தருண் விஜய் சொன்ன சகிப்புத்தன்மையை பிரதிபலித்துக் கொண்டிருந்தான் .

திருச்சியில் சூடு தலையில் இருந்து தரை வரை கொதிக்கின்றது . உக்கிரம் தாங்காததால் திருவரங்கம் , திருவானைக்கோவில், ஐயப்பன், கோர்ட் சித்தர் விசிட் திட்டத்தை கைவிட்டு திருப்பூருக்கு திரும்பியாயிற்று .


என்றென்றும் புன்னகையுடன்

ஜீவன்சுப்பு

Jan 15, 2017

பேசாத வார்த்தைகள் : 15.01.2017 - ஆயிரங்கால் மண்டபம்




ஆயிரங்கால் மண்டபம்

புது வருடத்தை புத்தகத்துடன் தொடங்கலாம் என்ற நல்லெண்ணத்தின்பால் அருகிலுள்ள கிளை நூலகத்தினை அணுகினேன். நூலகங்களில் புத்தகம் தெரிவு செய்வதற்கு ஒரு தனித்திறமை தேவை . அது எமக்கு இன்னமும் கைவரப்பெறவில்லை. பகுதி புத்தகங்கள் அரசியல் புத்தகங்களாகவும் , மிகுதி புத்தகங்கள் அரசியலால் வந்த புத்தகங்களாகவும் இருக்கிறது .

நூலகப் பணி நேரம் முடியும் நேரம் அது  , பகுதி நேரப் பணியாளர் அதற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருந்தார் . சிக்னல் போடுவதற்கு பத்து நொடிகள் இருக்கும் போதே வண்டியை எடுத்து விடவேண்டும் இல்லையேல் , ஒலி எழுப்பியே நம்மை ஒழித்துவிடுவார்கள் . கிட்டத்தட்ட அந்த நிலையில் தான் இருந்தேன் . பணியாளர் ஓங்கி அறைந்தார் சன்னலை . கண்ணை மூடி , கண நேர இங்கி பிங்கியின் முடிவில் ஜெயமோகனின் ஆயிரம் கால் மண்டபத்தினை தெரிவு செய்து நீட்டினேன் . நூலக அம்மையார் என்னை வெளிறிய முகத்துடன் வெளியேற்றினார் .

ஆறு வருடங்களில் வெவ்வேறு பத்திரிகைகளிலும் , இதழ்களிலும் ஜெமோ அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு . 1999  ல் அகரம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட  புத்தகம் . 2017 , சனவரி முதல் தேதி , மிகச்சரியாக பன்னிரெண்டு மணிக்கு முகநூல் நிலைத் தகவலுடனும் , ஆண்டவன் கருணையால் , அவ்வளவு எளிதில் விரும்பிடாத நான்கு ஜீவன்களின் விருப்பக்குரியுடனும் முன்னுரையை தொடங்கினேன் . நம் புத்திக்கு இரண்டு பத்திக்கு மேல் தாக்குபிடிக்க முடியவில்லை.

வேலைக்கு சேர்ந்த புதிதில் எப்பாடுபட்டாவது ஆங்கிலதில் புலவராகிவிடவேண்டும் என்ற சபத வெறியில் ஆங்கில இந்து பத்திரிக்கை வாங்கி , அதுவும் சொந்தக் காசில் வாங்கி பத்தி பத்தியாக பாத்தி கட்டிய நினைவுகள் வந்து போயின . ஒரு பத்தி வாசித்து அர்த்தம் விளங்குவதற்குள் பத்து பதினைந்து முறை அகராதியை புரட்டிப் பார்த்து ஓய்ந்த நாட்கள் அவை . இப்போது புத்தகத்தை வேலைக்காகாது என்று மூடி வைக்கவும் மனமில்லை . புத்தாண்டின் ஆரம்பமே அரைகுறையாக இருப்பது அபசகுனமல்லவோ...!

அர்த்தம் , அகராதியை எல்லாம் ஓரங்கட்டி விட்டு கதைக்குள் நுழைந்தேன் . முதல் கதை புத்தகத்தின் தலைப்பை தாங்கி வரும் “ஆயிரங்கால் மண்டபம்” . செண்பகக் குழல் வாய் மொழி என்னும் சிறுமியின் பார்வையில் சித்திக்குட்டி என்ற பெண்ணின் மீது நடத்தப்படும் மண வன்முறையை சொல்லிச் செல்கிறது . மனிதர்களின் மனம் எவ்வளவு கல்லாக இருக்கின்றது என்பதை உணர்த்தும் விதமாக சித்திக்குட்டி கற்சிலையாகிவிட்டார் என்று புரிந்து கொண்டேன் . கதையின் முதல் பத்தியில் வரும் மண்டப விவரணையில் மனம் லயித்து ஒரு சுகானுபவத்தை உணர முடிகின்றது .

அடுத்ததாக , “தேவகி சித்தியின் டைரி” . கட்டிப்பெட்டித் தனமான ஒரு குடும்பத்தில் திருமணமாகியிருக்கும், சுயமாக சிந்திக்கும் , சம்பாதிக்கும் திறமையுள்ள ஒரு பெண்னின் சுய விருப்பு, வெறுப்புகள் எவ்வாறு அவர் வாழ்வை புரட்டிப்போடுகின்றன என்பதினை விவரித்திருக்கிறார். மேற்படி கதையை வாசிக்கும் போது சமீபத்தில் படித்த ஒரு நிலைத்தகவல் நினைவிற்கு வந்தது .

ஓர் அவசர வேலை நிமித்தம் தனது வயோதிக தாயாரை தொடர் வண்டியில் வழியனுப்பச் செல்லும்  ஒரு மகன் மற்றும்  தாய்க்கு இடையேயான உரையாடல் அது . முன்னேற்படில்லாத பயணம் என்பதினால் தாயை , பெண்கள் பெட்டியில் ஏற்றி விட முயற்சிக்கிறார் மகன் . தாய், வேண்டாமென மறுத்து பொது பெட்டியிலேயே ஏற்றி விடச் சொல்கிறார். காரணம் கேட்ட மகனிடம் பின்வருமாறு கூறுகிறார் .

எவளும் எடம் தரமாட்டாளுகப்பா ....!

அடுத்து “ஒன்றுமில்லை” கதை . எளிதில் விளங்கக்கூடிய , நடைமுறைத் தமிழில் உள்ள ஒரு சிறு கதை . அதீத நம்பிக்கை வார்த்தைகள் தாம் சமயங்களில் அச்சத்தை அதிகப்படுத்துகின்றன என்ற பொருள் படும் கதை . 

சாதரணமான கருதிய ஒன்று எப்படி அசாதரணமாக மாறுகின்றது என்பதினை கருவாகக் கொண்ட மருத்துவம் சார்ந்த புனைவு. அதில் இப்படி ஒரு வரி வருகிறது , அனேகமாக எலோருக்கும் இந்த வரிகள் வாய்த்திருக்கும் அல்லது வாய்க்க விரும்பியிருப்போம்.

“வலியில்லாத , மரண பயமில்லாத , நோயாளியாக இருப்பது போல ஆனந்தமான விஷயம் இன்னொன்று இல்லை . கவனம் , பிரியம், ஆதரவு ஆகியவற்றுக்குப் பாத்திரமாக அதைவிடச் சிறந்த சந்தர்ப்பம் வேறு இல்லை .”

அடுத்தது , “வெள்ளம்” . கனவுக்குள் கனவு போல ஒரு கதை என்று வாசித்து முடித்ததும் நானாக முடிவு செய்துகொண்டேன் . வாசிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மூச்சு திணற ஆரம்பித்துவிட்டது . வெள்ளத்தில் சிக்கியிருந்தால் கூட இந்த அளவிற்கு மூச்சடைத்திருக்குமா என்பது சந்தேகமே . ஏ.டி.எம். வரிசையைப் போல வாக்கியங்கள் நீண்டு கொண்டே போவது அயற்சியை அதிகரிக்கின்றது . ஒரு வழியாக வாசித்து முடித்த போது சுழலில் சிக்கி மீண்ட அனுபவம் . சர்வ நிச்சயமா எனக்கு புரியவில்லை இருந்தாலும் வாசித்து முடித்தேன். ஒரு வேளை பிறிதொரு நாள் , மீள் வாசிப்புக்கு உட்படுத்தும்போது நம் வாசிப்புத் தரத்தினை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.

இன்னும் நாலைந்து கதைகள் பாக்கியிருக்கின்றன அது அடுத்த பதிவில் .


என்றென்றும் புன்னகையுடன் ☺
ஜீவன் சுப்பு .