உணவகம் | சிற்றுண்டியகம்
திருச்சி மலைக்கோட்டை வாசலின் நேர் எதிர்த்தாற்போல
உள்ள வீதியில் , இரவு பத்து மணிக்கு மேல திருவரங்கத்துக்காரர்கள் தள்ளுவண்டி உணவகம்
நடத்துவார்கள். ஒன்றிரண்டு கடைகள் அல்ல ; சேர்ந்தார்போல இருபது , முப்பது கடைகள் .
தயிர்சாதம் முதல் அக்கார வடிசல் வரை விதம் விதமாக, தரமான பதார்த்தங்கள் மலிவான விலையில் கிடைக்கும் . ஐந்து ரூபாய்க்கு ஒரு பதார்த்தம் என்று தட்டில்
வைத்துத் தருவார்கள் . வகைக்கு ஒன்றாக நாலு தட்டு வாங்கி சாப்பிட்டால் திவ்யமாக
இருக்கும். நள்ளிரவு வரை கூட்டம் தட்டேந்திக்கொண்டிருக்கும் அந்த வீதியை , மறுநாள் காலையில் பார்த்தீர்களேயானால் அசந்து
போய்விடுவீர்கள் . சில மணி நேரங்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ரூபாய்களுக்கு
உணவு வியாபாரம் நடந்ததற்கான அறிகுறியாக ஒரு சோற்றுப்பருக்கையைக் கூட உங்களால் காண
முடியாது . அவ்வளவு சுத்தம் . இபொழுதும் மேற்படி கடைகள் நடந்து கொண்டிருக்கின்றனவா
எனத் தெரியவில்லை.
மலைகோட்டை தெப்பக் குளத்தின் அருகே உள்ள
உணவகம் ஹோட்டல் ரகுநாத் . மேட்டுக்குடி மக்களுக்கானது ( ஹை கிளாஸ் வெஜ்
ரெஸ்ட்டாரென்ட்!) . அவர்களது மலிவு விலை உணவகம் ஒன்றும் ஓரமாக இருந்தது . தற்போதைய
அம்மா உணவகம் போல . சமையல், பதார்த்தங்கள் எல்லாம் ஒன்றே தான் . பரிமாறும் இடமும்
அளவும் சிறியது. அப்புறம் மதியம் மட்டும் தான் மலிவு விலைச் சாப்பாடு . பதினைந்து
ரூபாயோ இருபது ரூபாயோ கொடுத்ததாக நினைவு . அன்றைய நாட்களில் அங்கே தினமும் டோக்கன்
வாங்குவதே எம் அன்றாட லட்சியம் . முக்கால் வயிற்றிற்குதான் போதுமானதாக இருக்கும்
ஆனாலும் சுவை அலாதி.
அடுத்தது நம்ம ஏரியா . சிந்தாமணி கேண்டீன்
. அரசு சார்ந்த உணவகம் , டெய்லரிங், ஜவுளி என்று வரிசையில்லாமல் அங்கொன்றும்
இங்கொன்றுமாக இருக்கும் சிந்தாமணி அங்காடிகளில் உணவகமும் ஒன்று . புதிதாகப்
போகிறவர்கள் கூகுள் இட்டால் கண்டுபிடிக்க முடியாது. கூட்டத்தின் கூச்சலைத்
தாண்டும் அளவிற்கு கூக்குரல் இட்டீர்களேயானால் நடைபாதைக் கடைக்கார்கள் கை
காட்டுவார்கள். பெரும்பாலான நகரங்களில் சிந்தாமணி சீந்தாமணியாகத்தான் காட்சி
அளிக்கும் . ஆனால், திருச்சி விடிவிளக்கு. போளி , குழிப்பணியாரம் போன்ற இடைப்
பலகாரங்கள் சுவையாகவும் , சல்லிசாகவும் கிடைக்கும் . அன்றைய நாட்களின் காலைகளில் சிந்தாமணியில்
தான் கை நனைப்பேன் . இந்த முறை இரவில் போனபோது புரோட்டவும், குழிப்பணியாரமும் கிடைத்துண்டேன்.
மெயின்காட்கேட் நிறுத்தம் தாண்டி காந்தி
மார்க்கெட் செல்லும் நேர் சாலையின் மத்திய நூலகம் அருகில் , கல்யாணி கவரிங்
கடைக்கு வலதுபுறம் கற்பகம் ரெஸ்ட்டாரென்ட் என்று ஒன்று உண்டு . இப்பொழுதும்
இயங்கிக் கொண்டிருகின்றது. வேலை பார்த்த கடைக்கு நேர் பின்புறமாக அமைந்திருந்தது .
கடையில் இரண்டு வேளையும் கொடுக்கும் தேநீரைத் தவிர்த்து அதற்குண்டான காசை கையில்
பெற்றுக்கொண்டு கற்பகத்தில் மாலை வேளைகளில் காஃபி சாப்பிட்டதுண்டு. கற்பகம் காஃபிக்கென்றே
பிரத்யேக ருசியுண்டு . குறிப்பாக கண் முன் காஃப்பிக் கொட்டையை அரைத்து சுடச்சுட
டவரா செட்டில் போட்டுத்தரும் காஃபியின் ருசி அடுத்த நாலைந்து மணி நேரங்களுக்கு
உங்கள் நாவில் நிலைத்திருக்கும் . பாலைத்தொட்டு பொட்டு வெச்சுக்காலம் என்று
கிராமங்களில் பாலின் கெட்டிதன்மைக்கு ஒரு உதாரணம் சொல்வார்கள் . போலவே கற்பகம்
காஃபியும் .
மைக்கேல் ஐஸ்கிரீம் பார்லர் .
திருச்சியினரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பெற்றுக்கொண்டிருக்கின்ற வெயில் நகரத்தின்
COOL DESTINATION. மெயின்காட்கேட் அஞ்சலகத்தின் அருகில் கடை
. கண்ணாடித் தடுப்புகள், குளிரூட்டப்பட்ட அறை , மெல்லிய இசை , வண்ணம் பூசப்பட்ட
சுவர்களின் , வாய்களில் ஐஸ்கிரீம்கள் வழிய செயற்கைப் புன்னகையுடன் கூடிய விளம்பரக்
குழந்தைகளின் போஸ்டர் என்று ஐஸ்கிரீம்
பார்களுக்கென்று உள்ள எந்தவொரு உள்கட்டமைப்புகளோ , அலங்காரங்களோ இல்லாத ஒரு
பனிக்கூழகம் . இருபது நபர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் போடப்பட்டிருக்கும்
டீக்கடை டைப் மர பெஞ்ச் , ஐஸ்கிரீம் பெட்டிகள் அவ்வளவே . நிற்பதற்கு இடமில்லாமல் மக்கள் நாக்கைச்
சொட்டிகொண்டு நடைபாதையிலே நிற்கிறார்கள் . நானும் போய் நின்றுகொண்டேன் . நின்று
கொண்டே சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை . பத்துப் பதினைந்து நிமிட காத்திருப்புக்கு
பின் மர பெஞ்சில் இடம் கிடைத்தது . மொத்தமே எட்டு வகைதான் . குறிப்பாக வெரைட்டிகளின்
பெயர் உச்சரிக்கும் வகையில் உள்ளது சிறப்பு. குறைந்தபட்ச விலை எட்டு ரூபாய் ,
அதிகபட்சம் பதினைந்து அவ்வளவே . பேமிலி பேக்கும் உண்டு. இருபது பேர் அமரக்கூடிய
இடத்தில் மடிமீது ஒருவாரக சேர்த்து
நாற்பது பேர் ஐஸ்கிரீம் சுவைக்கிறார்கள்.
பரிசாரகரை கண்டுபிடிப்பது
கூவத்தூரில் ஒளிந்திருக்கும் எம்.எல்.ஏ வைக் கண்டுபிடிப்பதை விட சிரமாமாக
இருந்தது. தாவிப்பிடித்து கேசர் பாதமும் , பிஸ்தாவும் ஆர்டர் செய்தேன் . வகைக்கு
ஒன்றாக சின்ன குழிக்கிண்ணங்கள் இரண்டில் கரண்டியுடன் மேசை மீது வைக்கப்பட்டது. பொதுவாக ஐஸ்கிரீமை
ஸ்பூன் பை ஸ்பூனாக ரசித்து ருசித்து சாப்பிடவேண்டும் என்று சொல்வார்கள் . ஆனால்
நமக்கு அந்தளவுக்கு பொறுமை இல்லை மேலும் மைக்கேல் பார்லரில் அது முடியாததும் கூட .
கவுதம் மேனன் டைப்பில் நாம் சுவைத்துக்கொண்டிருந்தால் , நடைபாதையில் நிற்பவர்கள்
ஹாட்டாகி நம்மை கூழாக்கிவிடுவார்கள் .
வேகமாகவே புசித்து ருசித்து வெளியேறினேன் . கேசர் பாதம் நல்ல சுவை . பிஸ்தா ஓக்கே.
வகைக்கு ஒன்றாக நாலைந்து கிண்ணங்களை சுவீகரிக்கிறார்கள் மக்கள் . ரேபான் கிளாஸ் ,
அர்மானி ஜீன்ஸ் , அடிடாஸ் டீ சர்ட் என்று ஒரு மேட்டுக்குடி பிராண்டட் நபர்
அருகிலேயே மேல் பட்டன் இல்லாத , தலை வாரத கேசத்துடன் ஒழுகிய மூக்கைத்
துடைத்துக்கொண்டே ஐஸ்கிரீமை சுவைத்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தருண் விஜய்
சொன்ன சகிப்புத்தன்மையை பிரதிபலித்துக் கொண்டிருந்தான் .
திருச்சியில் சூடு தலையில் இருந்து தரை வரை
கொதிக்கின்றது . உக்கிரம் தாங்காததால் திருவரங்கம் , திருவானைக்கோவில், ஐயப்பன்,
கோர்ட் சித்தர் விசிட் திட்டத்தை கைவிட்டு திருப்பூருக்கு திரும்பியாயிற்று .
என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு
நாவில் நீர் ஊற வைத்த பதிவு..ஐயோ எண்டே ஜீவன்!!!சாரி உங்களை சொல்லலை..நீங்கள் சொல்லியிருக்கும் பத்தார்த்தங்கள்..என் ஜீவனாக்கும் னு சொன்னேன்...வில்லன் பதிவு...ஹஹஹ.பின்ன இங்க புகையுதுல....
ReplyDeleteகேசர் பாதாம் இல்லையா அந்த ஐஸ்க்ரீம்....
சுவைத்த பதிவு...என்ஜாய். ஜீவன்...
கீதா
எந்தத் தப்பை செய்யக்கூடாதென்று நினைத்திருந்தேனோ அந்தத் தப்பை மிகச்சரியாக செய்திருக்கிறேன் :( . சுட்டியதற்கு நன்றி.
Deleteஅங்கே இருக்கும் கடைகள்.... தனியாகச் செல்லும் போது பலமுறை இப்படி பதார்த்தங்களைச் சுவைத்ததுண்டு! இப்போது மதுரை ஃபேமஸ் ஜிகிர்தண்டா குடிப்பதோடு சரி!
ReplyDelete