Mar 17, 2014

பேசாத வார்த்தைகள் : நீலாங்கரை , ட்வீட் , வித்தியாசம் .



புலிவால் படத்தில் வரும் நீலாங்கரையில் பாடல் இப்பொழுதைய விருப்பப்பார்வையில் . தினமும் ஓரிரு முறையேனும் காணொளியுடன் பார்த்துவிடுகிறேன் . பாடலின் சில காட்சிகள் சர்வம் படத்தின் பாடலை நினைவு படுத்தினாலும் ,  படமாக்கப்பட்டிருக்கும் இடங்களும் , நடனமும் , இசையும் அழகு ...!

வழக்கமாக பாடல் காட்சிகளில் நடமாடும் விமல் , மேற்படி பாடலில் நடனமாடியிருப்பது ஆச்சர்ய அதிர்ச்சி . அதிலும் அம்மணி அனன்யா அலுங்காமல் ஆட , அண்ணனோ குலுங்கி குலுங்கி ஆடுகிறார் . நடன வகுப்புக்கு போகிறார் போல , போய்த்தானே ஆகவேண்டும் , இல்லையெனில் சி.கா &  வி.சே க்களின் போட்டியை எப்படி சமாளிப்பது .? அனன்யா , வெகுளித்தனமான கதாபாத்திரங்களுக்கெனவே செய்துவைத்த பதுமை . லைலா, ஜெனிலியா போன்ற லூசுத்தனமான வெகுளிகள் பட்டியலில் இவரையும் சேர்க்காமல் இருந்தால் சரி .

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் மற்றுமொரு முணுமுணுக்க வைக்கும் அழகானதொரு இசைக்கோர்வை . தென்மேற்கு பருவக் காற்றிலிருந்து -புலிவால் வரையிலுமாக என்.ஆர்.ஆர் இசையில் வெளிவந்த படங்களில் குறைந்தது ஒரு பாடலாவது வானொலி மற்றும் காணொளிகளின் விருப்பப் பாடல்களாக இருந்துவிடுகின்றது . பாடல்கள் & இசை சிறப்பாக இருந்தும் அதற்கான அங்கீகாரம் அவருக்கு சரியாக கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம் .

பெண்கள் கொண்ட ஆசையெல்லாம்
Fridge ல்  வைத்த ஆப்பிள் போல ,
ஆண்கள் கொண்ட ஆசையெல்லாம்
வெயிலில் வைத்த வெண்ணெய் போல ....

மேலே உள்ள வரிகள் மேற்படி பாடலில் கதாநாயகி பாடுவது போல வருகிறது ... பொருளுரை புரிந்தவர்கள் விவரிக்கவும் .

ட்வீட்டு

இன்றைய ஆண்களின் முக்கியமான இரண்டு பிரச்சினைகள்- முடி & மடி , முதலாவது வளராம படுத்துது , இரண்டாவது வளர்ந்து படுத்துது – நான் ஆண் –

வித்தியாசம் ..

இன்னொன்னு சாப்புட்டுடான்னு தட்டுல கொண்டாந்து தோசைய வச்சா அது அம்மா ,
இன்னொரு தோச வேணுமான்னு கேட்டா அது வீட்டுக்காரம்மா .

தம்பி , முடி வெள்ளிக்கம்பிக் கணக்கா இருக்குடா – அம்மா .
தல பூராம் நரச்சுப்போச்சு – வீட்டுக்காரம்மா ...




என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .


Mar 10, 2014

பேசாத வார்த்தைகள் : கோலி சோடா *ச.இ.க.இ * ட்வீட் .









ரசித்தது –உடல் மொழி

ஒரு படமோ , பாடலோ  வெற்றியடைந்துவிட்டால் அதைபோலவோ/ அதையேவோ  திரும்ப திரும்ப வேறு வேறு பெயர்களில் எடுத்து , நம்மை சாவடிக்குரதுல தமிழ் சினிமா பிரம்மாக்களை மிஞ்ச ஆளே இல்லை .

சமீபத்திய உ.தா – கானா பாலா . கதையில்லாமல் கூட படம் எடுக்கிறார்கள் , ஆனால் கானா பாலா குரலில்லாமல் எடுப்பதில்லை . படத்திற்கும் , காட்சிக்கும் தேவையா , கதாபாத்திரத்திற்கு பொருத்தமான குரலான்னு ஏதொன்றையும் கருத்தில் கொள்ளாமல் நம்மைக் கொல்லுகிறார்கள். இப்பல்லாம் கா.பாலா குரலைக் கேட்டாலே காதுக்குள்ளார கடப்பாறைய விட்டு குடையுறமாதிரியே feel ஆகுது .

மேற்படி குடைச்சல் காரணமாகவே கோலி சோடா படத்தில் அண்ணன் கா.பா பாடிய All your Beauty பாட்டை கேட்டாலே தெரிச்சுடுவேன் . But , போன வாரம் ரிமோட் மக்கர் பண்ண வேறு வழியில்லாம கடப்பாறைய காதுக்குள்ளார விடவேண்டியதாப்போச்சு . ஆனா பாருங்க பாட்டும் , காட்சியும் ரெம்ப நல்லாவே இருக்கு . இப்ப அடிக்கடி விரும்பிப் பார்க்கும் பாடலாகிவிட்டது

பாடல் வரிகள் செம்ம லோக்கலா , ரகளையா நல்லா இருக்கு . அத விட முக்கியமா அன்பரசு விற்கு ஜோடியாக (சின்னத்)தாமரை போன்ற சாயலில் வரும் அந்தப் பொண்ணு அவ்வளவு லட்சணம் . உடல் மொழி கூட ரெம்பவே நல்லாருக்கு. குறிப்பா பையன் கைய புடிச்சுகிட்டு விடுற ஒரு லுக்கும் , அரை நொடிப்பொழுதில் அடிக்கும் அந்த சைட்டும் , வாயில் கை வைத்தபடி சிந்தும் சிரிப்பும் அட்டகாசம் . பொண்ணு வர்ற காட்சியெல்லாம் ஹைக்கூ கவிதை .

கவிஞர் தாமரை , சொய்ங் சொய்ங் பாடலுக்கு நடனமாடிய சந்தியா , அப்புறம் நம்ம பொண்ணு இந்த மூணு பேருக்கும் உள்ள எனக்கு ரெம்பப்பிடித்த ஒரு ஒற்றுமை , மூணு பேருமே நடு வகிடு எடுக்காமல் , பக்கவாட்டில வகிடு எடுத்திருப்பார்கள் . அவர்களின் முகவெட்டுக்கு , பக்கவாட்டு வகிடு பக்காவா இருக்கு .

பெண் குழந்தை பிறக்கவேண்டும் என்றும்  , அவள் பக்கவாட்டு வகிடு எடுக்கவேண்டும் என்றொரு ஆசையும் உண்டெனக்கு ....! J

ச.இ.க.இ...!

அதிகாலைத் தேநீருடன்
கூடிய செய்தித்தாள்

பின் மதிய கருப்பு
வெள்ளை கிளாசிக் மூவி

முன்னிரவு இளையராஜா இசை

இது மூன்றுமே போதுமானதாக
இருக்கிறது எனதொருநாளை
உயிர்ப்பித்துக் கொள்ள ...!

பிளாக்குல ட்வீட்டு :

கீழ விழுந்ததும், அடிபட்டுருக்கான்னு பார்க்குறதவிட அடுத்தவய்ங்க யாரும் பார்த்துட்டாய்ங்களான்னு பார்க்குறவய்ங்கதான் நம்மில் அதிகம். - நான் அவன்-



என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .


Mar 6, 2014

பேசாத வார்த்தைகள் : இன்லேன்ட் லெட்டர் ...!









கைப்பட ஒரு கடிதம் எழுத வேண்டிய சூழ்நிலை சமீபத்தில் . கொரியர் மூலம் அனுப்பலாம் என்று முடிவு செய்து , A 4 SHEET , கவர் எல்லாம் வாங்கி கொரியர் ஆபீஸ் போனால் , அங்கு ஏகப்பட்ட  நிபந்தனைகள் ,  குறைந்தபட்ச கட்டணமே முப்பது ரூபாயாம் . ரிமோட் ஏரியாவாக இருந்தால் தபாலை பட்டுவாடா செய்வதற்கு குறைந்த பட்சம் மூன்று நாட்களாகுமாம் அடுக்கிக்கொண்டே போனார் ஊழியர் .... போங்கடா நீங்களும் உங்க கூரியர் சர்வீசும்னு சொல்லிட்டு அஞ்சலகத்தை நோக்கி அடியை போட்டேன் .

பல வருஷம் ஆகிடுச்சு போஸ்ட் ஆபீஸ் போய் . தடை உத்தரவு போட்ட கிராமத்தில் கூட ஏழெட்டு காவல்துறை தலைகள் தென்படும். நான் நுழைந்த போஸ்ட் ஆபீஸ்ல நாலே பேரு . அந்த நால்வரும் போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள்ன்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்ல .  

வழி மேல் விழி வைத்து காத்திருந்தவரிடம் ஒரு இன்லேன்ட் லெட்டர் கேட்டு பத்து ரூபாயை நீட்டினேன் . சில்லறை இல்ல தம்பி நாலா வாங்கிக்குங்களேன்னு சொல்லி கல்லாவை திறந்து காட்டினார் . கல்லா காந்தித்தாத்தா தலையை போலவே இருந்தது . போஸ்ட் கார்டு இருக்கான்னு கேட்க நினைத்து , இல்லன்னு சொல்லிட்டா மனசக்கு கஷ்டமா ஆகிடுமேன்னு கேட்கமாலே வந்துவிட்டேன் . ஏன்னா , போஸ்ட் கார்டுக்கும் எனக்கும் ஏகப்பட்ட நெருக்கம், அதைப்பத்தி தனியே ஒரு பதிவெழுதி ஹிட்ஸ் தேத்த வேண்டும் , so , அது தனியா வரும் J.


இந்த இடத்துல ஒரு சின்ன பி.பேக்...

பால்யத்தில் இன்லேன்ட் லெட்டரை பற்றிய என் அபிப்பிராயத்தை நினைத்தால் சிப்பு சிப்பாக வருகிறது . இங்கிலாந்து லெட்டர் என்பது தான் திரிந்து பேச்சு வாக்கில் இன்லேன்ட் லெட்டர் ஆகிவிட்டதாக வெகு நாட்கள் நம்பியிருந்தேன் . இங்கிலாந்து நாட்டுக்காரங்க நம்மை ஆண்டுகொண்டிருந்தபோது கொண்டுவரப்பட்டது என்பதினால் இந்தப்பெயர் வந்தது என்று எம் அறிவுக்கூட்டத்திடம் சொல்லி அதை ஞாயப்”படுத்தியதும்” உண்டு , நமக்கு வாய்த்த அடிமைகளும் அதை நம்பினார்கள் . ஐந்தாம் வகுப்பில் அடுத்த ஊரில் இருந்து புதிதாக வந்து சேர்ந்த ஒரு தேர்ந்த அறிவாளி , எங்கள் நம்பிக்கையில் பலமாக ஆணி அடித்தான் .... ! அதாகப்பட்டது அந்தக்காலத்துல எல்லாரும் இங்க்  பேனாவுலதான் எழுதுவாங்க , SO , இங்க் லெட்டர் தான் மருவி இங்கிலாந்து லெட்டர் ஆகிவிட்டதாக சொல்லி நம் அடிமைக்கூடாரத்தை காலி செய்துவிட்டான்
.
இந்த இன்லேன்ட் லெட்டர் இருக்கு பாருங்க , அதை அவ்வளவு எளிதாகவெல்லாம்  மடித்துவிடமுடியாது .நிச்சயமாக தனித்திறமை வேண்டும் . அதைவிட இரண்டு மடங்கு திறமையும் , லாவகமும் பிரிப்பதற்கு வேண்டும் . பெரும்பாலும் நான் பிரித்த லெட்டர்கள் எல்லாம்  , சரளாவிடம் அடிவாங்கிய வடிவேலுவைப்போல நாராசமாய் கிழிந்து தொங்கும் . சேதாரம் இல்லாமல் பிரித்ததே இல்லை .

ரெம்ப சல்லிசான பைசா ங்குற ஒரே காரணத்தினால் வீட்டில் எப்பொழுதும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்துவது அஞ்சல் அட்டைதான் . போஸ்ட் கார்டுல  இருக்குற மிகப்பெரிய குறை பிரைவசி.  மிக முக்கியமான விசயங்கள் இருந்தால் மட்டுமே இன்லேன்ட் லெட்டர் வாங்குவார்கள் . இன்லேன்ட் லெட்டர்ல எழுதுறதே ஒரு தனி பெருமை , போஸ்ட் மாஸ்டர் நிமிர்ந்து பார்த்து லெட்டரை  ஐ கொடுப்பதில் இருந்து , போஸ்ட் பண்ற வரைக்கும் ஒரே குதூகலம்தான் .

போஸ்ட் பண்றதுல இருக்குற ஒரே சிக்கல் , போஸ்ட் பாக்ஸ் இருக்கும் உயரம் . எங்க கிராமத்தில் போஸ்ட் பாக்ஸை ஐந்தடி உயரத்தில் தான் வைத்திருப்பார்கள் . ஏன்னா, பழைய ஸ்டாம்புகளை தரலைன்னு சொல்லி போஸ்ட் மேன்/மாஸ்டர் மேல இருக்குற கோபத்தை  எங்களை மாதிரி சமத்தான பசங்கள் போஸ்ட் பாக்சிற்குள் கல்லு மண்ணு போட்டு காட்டுவோம் . இன்னும் ரெம்ப சமத்தான பருத்திவீர பசங்கள் தவளை , ஒனான்னு போட்டு போஸ்ட் பாக்ச ஒரு மினி மி.க.சா யாவே மாத்திடுவானுங்க .

So , போஸ்ட் பண்ணுவதற்கு மற்றுமொரு சமத்தனோ , இல்லை சமத்தனாக இருந்து இப்ப அட்வைசர் ஆறுமுகமா மாறியிருக்கும் யாரோ ஒரு அண்ணனின் உதவியோ தேவை . எப்பவும் போஸ்ட் பண்ண பிறகு உள்ள கைய விட்டு ஒரு ஆட்டு ஆட்டி , ரெண்டு சைடுலையும் ஒரு தட்டு தட்டுனாத்தான் ஒரு திருப்தி இருக்கும் . சமயங்கள்ல ரத்தம் பார்த்த கடிதங்கள் கூட உண்டு J

இந்த இடத்துல பி.பேக் முடியுது ....!

பழக்க தோசத்துல போஸ்ட் பண்ண பிறகு உள்ள கைய விட்டு பார்த்த என்னைய போஸ்ட் ஆபீசர் முறைக்கவே , வழிந்துவிட்டு ஓடியாந்துட்டேன் .

இப்போ எனக்கு வேறொரு பிரச்சினை , மீதம் உள்ள மூன்று கடிதங்களும் தங்களை உயிர்ப்பிக்க சொல்லி ஓயாமல் தட்டிக்கொண்டே இருக்கின்றன மேசையை . முகவரியை தேடிக்கொண்டே இருக்கின்றேன் நான் . உங்களில் யாருக்கேனும் உங்களுடைய பால்யத்தின் பரவசத்தை அனுபவிக்கவேண்டுமேன்று விருப்பமிருந்தால் பின்னூட்டத்தில் உங்களது முகவரியை சொல்லிச்செல்லுங்கள் . பரவசம் பத்திரமாக அனுப்பிவைக்கப்படும் இன்லேன்ட் லெட்டர் வழியாக ....!

பி.கு: ஆச்சர்யமான விசயம் என்னன்னா , சனிக்கிழமை மதியம் போஸ்ட் பண்ண லெட்டர் செவ்வாய்க்கிழமை காலை உரியவரிடம் சேர்ப்பிக்கப்பட்டுவிட்டதுங்குறதுதான்  . இரண்டரை ரூபாயில வேலையும் முடிஞ்சுடுத்து . ஜீவன் ஹேப்பி அண்ணாச்சி J.





என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .


Feb 25, 2014

கியாஸ்...!






மானிய விலையில் கியாஸ் வாங்குறதுக்கு ஆதார் அட்டை கட்டாயம்ன்னு சொன்னாய்ங்க   அப்புறம் வேண்டாம்ன்னாய்ங்க, இப்ப மறுபடி வேணும்னு சொல்றாய்ங்க .. என்ன நடக்குதுன்னே புரியல  ...? இந்த நேரத்துல கியாஸ் பத்தி ரெம்ப நாளைக்கு முன்பு எழுதி பத்தவைக்காம இருந்த ஒரு பதிவு , என் இருப்பை தெரிவிக்கும் விதமாக இப்போ இங்கே ....!

*******************************************************************

ஆறு வருசத்துக்கு முன்னாடிதான் எங்க வீட்டுல கியாஸ் வாங்குனோம் . அதுக்கு முன்னாடி வரையிலும் விறகடுப்பு தான் . எமர்ஜென்சின்னா  மண்ணெண்ணெய் அடுப்பு . முதல் கேஸ் அனுபவம் இன்னும் ஞாபகம் இருக்கு. வாங்கிட்டு வந்து எப்புடி மாட்டுரதுன்னு தெரியாம கீழ் ஃபுளோர்ல இருக்க ஆபிஸ் நண்பர கூட்டினு வந்து  மாட்டித்தர சொன்னேன் . அவர் நம்மள விட பெரிய “அம்மாடக்கரா” இருப்பாராட்டுக்கு, “ஹி” “ஹி” ன்னு முடியில்லாத தலைய சொரிஞ்சுட்டே , எங்க வீட்டுக்காரம்மாவதான் கேக்கனும்னு சொல்லி அவர அனுப்பி வெச்சாரு .

அந்தம்மா நக்கலா என்னைய ஒரு பார்வை பாத்துட்டு மாட்டிக்கொடுத்துட்டு போச்சு. அதென்னமோ தெரியல நமக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுதுனா ஊர் பூரா சொல்லிடுறோம் , ஆனா தெரியாத விசயத்த மட்டும் தெரியலைன்னு பளிச்சுன்னு யார்கிட்டயும் சொல்ல முடியல , குறிப்பா பெண்கள்ட்ட...!

கியாஸ் மாட்டி கொஞ்ச நாளைக்கு , நா இருக்கும்போது மட்டும் சமைன்னு எங்கம்மாட்ட சொல்லிருந்தேன் . பின்ன...! நா இல்லாத போது ஏதாவது திருகிவிட்டு பத்தி எரிஞ்சுருச்சுனா ? சந்தேகத்”தீ”...! ஆபிஸ் போகும்போதும் சரி விட்டு வந்தோன்னயும் சரி மொத வேலை, மோப்பம் புடிக்குற வேல தான் ...! கியாஸ் டியூப் , சிலிண்டர் , சிம்மு எல்லாத்தையும் மோந்து பாப்பேன் எதுனா கியாஸ் லீக் ஆகுதான்னு . நா பண்ணுற அட்ராசிட்டிய பாத்துட்டு அம்மா அஞ்சாறு வாரத்துக்கு அடுப்படி பக்கமே அண்டல . மண்ணெண்ணெய் அடுப்ப வச்சுகிட்டு பெட்ரூம்லே சமைக்க ஆரம்பிச்சுருச்சு .

அப்புறம் அம்மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமா சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சேன் . ரெகுலேட்டர் எந்தப்பக்கம் திருகுரது, லைட்டர் எப்டி பத்தவைக்குறது, எப்டி சிலின்டர ஆஃப் பண்றதுன்னு . ஆனா ரெகுலேட்டர் எந்தப்பக்கம் திருகுரதுன்னு அம்மாவுக்கு இன்னும் தெரியமாட்டிங்குது . ஸ்டிக்கர் லாம் எழுதி ஒட்டி வச்சேன் ... சோத்தாங்கை பக்கம் திருப்புனா ஆஃப் ஆயிடும் , பீச்சாங்கையி பக்கம் திருப்புனா எரியும்னு... ஊகும் கத்துக்குற வழிய காணும் . லைட்டர் அடிக்கவும் தெரியமாட்டிங்குது , தீக்குச்சிதான் , என்னைக்காவது மண்ணெண்ணெய தெளிச்சு பத்தவச்சுடுமோன்னு ஸ்ட்ராங்கா ஒரு பயம் இருந்துட்டே இருக்கு.

என்னம்மா இப்டி பண்ற...? எத்தனதடவ சொல்றதுன்னு ஏதாவது சத்தம் போட்டா , கியாஸ வேணா திருப்பி குடுத்துடுடா , கியாஸ் வெடிச்சா கூட பரவால்ல தாங்கிக்கலாம் , ஆனா தெனம் நீ  பண்ற அட்டாகாசத்ததான் தாங்க முடியலன்னு என்னையவே கலாய்க்குறாங்க J


என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .



Dec 21, 2013

GOODBYE..!








ஆகிவிட்டது ஒரு வருடமும், சில மாதங்களும் வலையுலகத்திற்கு வந்து  . அது தான் இதுவென்று தெரியாமலே சில பல பதிவுகளை வாசித்திருக்கின்றேன் . அலுவல் நிமித்தமாக, KNITTING MACHINE DETAILS ஐ கூகிளில் தேடப்போய் அது டாலர் நகரம் என்னும் தொடரில் கொண்டு போய்விட்டது . இமைக்க மறந்து , ஒரே மூச்சில் அதுவரை வந்திருந்த பதினெட்டு அத்தியாயங்களையும் வாசித்து முடித்து , எழுதியவரை தேடுகையில் அது ஜோதிஜியின் தளத்தில் கொண்டுபோய்விட்டது . அதன்பின் ஆர்வக்குறுகுறுப்பில் தளம் ஆரம்பித்து , சீனுவின் உந்துதலில் பதிவெழுதி நானும் ஆகிவிட்டேன் பதிவர் .


வலையை அறிமுகப்படுத்திய ஜோதிஜிக்கும்  ,
எழுத உந்திய சீனுவுக்கும்  ,
வலை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்த DD அவர்களுக்கும் நன்றிகள் ....!


தற்சமயம் நான் வேலை பார்க்கும் நிறுவனம் மூலம் தான் எனக்கு கணிப்பொறி அறிமுகமானது . உபோயகப்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது . இன்று வரை அலுவலக இணைப்புதான் . அலுவலகத்தில் மிகச் சொற்பமான நபர்களுக்கு மட்டுமே இணைய இணைப்பு தரப்பட்டுள்ளது . அதில் நானும் ஒருவன் .

வேலைகளுக்கு இடயிடையே , அவ்வப்போது வலையில் வாசிக்க ஆரம்பித்து பின் அது ஒரு பழக்கமாகி , தினமும் மாலை வேலை முடிந்து இரண்டு மணி நேரம் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன் .தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரம் கணினியில் வேலை அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் வலை என கணிப்பொறி பார்த்து, பார்த்து  கண்கள் சீக்கிரமே அயர்ச்சியாகிவிடுகின்றது .போதாக்குறைக்கு , சமீபத்தில்  EDP துறையிலிருந்து ஒரு மின்னஞ்சல் , ஒட்டு மொத்த அலுவலத்திலேயே நான் அதான் அதிகமாக இணையத்தைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்று . ஆனால் , யாரும் எதுவும் கேட்கவில்லை , மின்னஞ்சலோடு சரி . எந்தக்கட்டுப்பாடுகளும் இல்லை ,தண்டனையும் இல்லை . ஆனால் , அதுதான் பயமாக இருக்கிறது .

  
சுதந்திரத்தைக் காட்டிலும் பெரிய கட்டுப்பாடும் இல்லை ,
நம்பிக்கையைக் காட்டிலும் பெரிய தண்டனையுமில்லை .

எட்டு வருட விசுவாசமான உழைப்பும் ,  திறமையும் அந்த நம்பிக்கைக்கும் , சுதந்திரத்திற்கும் காரணமாக இருக்காலம் . அதைத் தக்கவைத்துக்கொள்வது நல்லதென நினைக்கின்றேன் .

இதுவரை , மேம்போக்காக வாசித்தும் , காமாச் சோமாவென்று வலிந்து திணித்து எழுதிய வார்த்தைகளைக் கொண்டு எழுதியும் , வலையில் உலாவந்தேன் . இப்பொழுது விடைபெறுகின்றேன் . அடுத்தடுத்த செலவுகள் அணிவகுத்து நிற்பதினால் அடுத்த ஆறு , ஏழு மாதங்களுக்கு கணினி வாங்குவதற்கான வாய்ப்பு அறவே இல்லை . So சொந்தக்கணினியுடனும் , செறிவான கருத்துக்களுடனும் மீண்டும் வருகின்றேன் .

நிறைய புதிய விசயங்களை வாசிக்கத் தந்த அனைத்து வலைப்பதிவர்களுக்கும் நன்றி ...!


புத்தகக் காதலர்களுக்கு ஒரு வேண்டுகோள்...!

நாடி நரம்பெல்லாம் பணக்கார கனவு தெறித்த சமயத்தில் வாங்கிய “வெற்றி நிச்சயம்” , நாங்களும் படிப்போம்னு பெருமைக்காக, புத்தக சந்தை போய் வாங்கிய “கதாவிலாசமும்” ஆக மொத்தம் இதுவரை என் வாழ்க்கையில் மொத்தமிரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே வாங்கியிருக்கின்றேன் . வரும் புத்தாண்டு முதல், மாதம் ஒரு புத்தகம் வாங்கவேண்டுமென்று தீர்மானம் எடுத்திருக்கின்றேன் .( ஒரு நாள் முதல்வர் போலல்லாமல் ஐந்து வருட முதல்வர் போன்று இந்தத் தீர்மானம் உயிர்ப்போடு இருக்குமென்று நம்புகின்றேன் J).

முதல் புத்தகமாக, விருப்பமான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் “உறுபசி” யைத் தேர்ந்தேடுத்திருக்கின்றேன் . படிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அனுபவத்தையும் , புதிய சிந்தனையையும் கொடுக்கும் தமிழ் புத்தகங்களை புத்தகக் காதலர்கள் பின்னூட்டத்தில் சொல்லிச் செல்லவும் . அது , அடுத்தடுத்த மாதங்களுக்கான அனுபவக் கொள்முதலுக்கு உதவியாக இருக்கும் .
  

இப்புத்தாண்டில்
உங்கள் எண்ணங்கள் ஈடேற
வாழ்த்துகிறேன் உளமார ...!





என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .