Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

May 29, 2017

பேசாத வார்த்தைகள் : 280517 – ஒரு புத்தகம் ; இரண்டு படம் ; மூன்று பாடல்.


ஒரு புத்தகம் : சுஜாதாவின் “வானில் ஒரு மவுனத்தாரகை”.

ஜெமோவின் ஆயிரங்கால் மண்டபத்தை நூலகத்திலிருந்து எடுத்து வந்து முழுதாக ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன. அதன் பிறகு நூலகத்தை எட்டாமல் கூட   பார்க்கவில்லை. போன வாரம் சந்தைக்கு போயிருந்தபோது நூலாக அம்மையாரிடம் வசமாக சிக்கிவிட்டேன். ஆயிரங்கால் மண்டபத்தை தடவிக் கண்டுபிடித்து கொண்டுசேர்த்தேன். பத்து ரூபாய் அபராதம் .

சுஜாதா புத்தகம் ஏதேனும் உண்டுங்களா என்று வினவியவனுக்கு சுட்டு விரலை நீட்டினார் . இரண்டு நாடகங்கள் , ஒரு கேள்விபதில் மற்றும் ஒரு சிறுகதை நான்கையும் கொண்டுபோய் நீட்டினேன். புது புஸ்தகம் என்று சொல்லி ஒன்றை மட்டும் இரவல் ஏட்டில் குறித்தார் . மேடம், நாலும் வேணுமே தரமாட்டீங்களான்னேன் . நிமிர்ந்து பார்த்தார் . எதுவும் பேசவில்லை . சந்திரமுகி படத்தில், ரஜினி வடிவேலுவைப்பார்த்து சொல்லும் “முருகேசா” வசனத்தை மனதிற்குள் நினைத்திருக்கக்கூடும்.

சுஜாதா எழுதிய புத்தகத்தை வாசித்ததை விட சுஜாதாவைப் பற்றி சிலாகித்து எழுதியததைப் படித்ததுதான் அதிகம். சுஜாதா எழுதியதில் நான் ஒரே ஒரு புஸ்தகத்தை மட்டுமே வாசித்திருக்கிறேன் ( அனிதா or நைலான் கயிறு ) . ஷோசியல் மீடியாவில் சுஜாதாமேனியா அதீதம். சுஜாதைவை பிடிக்கும்னு சொல்றதும் ; பேசுறதும் ; எழுதுறதும் தேய்வழக்கு என்று சொல்வது கூட தேய்வழக்கு தான்.

இந்தியாவில் இருக்கும் ஒட்டு மொத்த ரெஸ்யூம்களையும் நீங்கள் பார்த்தீர்களேயானால் ஒரு விசயம் பொதுவாக இருக்கும் . அது .., Hobby – Hearing Music. போலவே சுஜாதா பிடிக்கும்னு சொல்றதும். வருடங்களுக்கு முன் வீட்டுக்காரம்மாவை ஒரு நேர்முகத்தேர்வுக்காக பெங்களூருக்கு அழைத்துச் சென்றிருந்தேன் . ரெஸ்யூமை வாசித்த தேர்வர், எந்த மியூசிக் பிடிக்கும்னு கேட்டிருக்கிறார் . இளையராஜாவை சொல்லியிருக்கிறார் அம்மிணி. ஓக்கே அவரின் சமீபத்திய ஆல்பம் பெயர் என்ன , நீங்கள் விரும்பி கேட்கும் பாடல் எது ... ஏன் ...? அவ்வளவுதான் கேள்வி. ஐடி கம்பெனில அடிமாடாய் வேலைக்கு சேர்வதற்கும் இந்தக் கேள்விக்கும் என்னய்யா சம்பந்தம் என்று கேட்கலாம்தான். பதிலுக்கு திருப்பி , உனக்கு பிடித்த விசயத்திலேயே நீ அப்டேட்டா இல்லையே, பணத்துக்காக குப்பை கொட்டப்போற விசயத்திற்கா நீ அப்டேட்டா இருக்கபோறன்னு கேட்டா ...?

சுய அனுபவம் ஒன்றும் உண்டு . அறந்தாங்கி பாலிடெக்னிக்கில் படித்துக்கொண்டிருந்தபோது எங்களுக்கு புதிதாக ஒரு லேடி புரொபசர் வந்து சேர்ந்தார் . அரசுக் கல்லூரிகளில் பெரும்பாலும் கன்சர்வேட்டிவ் புரோபசர்கள் தான் அதுவும் நாற்பது பிளஸ் வயசுகளில் . எங்களுக்கு வந்திருந்தவருக்கு முப்பதுக்குள்தான் . அடுத்த டிப்பார்ட்மென்ட் பசங்களுக்கேல்லாம் சகலதுவாரங்களில் இருந்தும் புகையுடன் கூடிய தீ. முதல் அமர்வில் , பரஸ்பரம் அறிமுகம். ஒவ்வொருவராக அறிமுகப்படுதிக்கொண்டோம் . கவனம் கவரும் நோக்கில் அவனவன் அடுத்தவன் ஹாபிசை எல்லாம் அடித்துவிட்டான்கள். நானும் விட்டேன். பாலகுமாரன் , ஓஷோ புத்தகங்கள் பிடிக்குமென்று . எல்லோர் சொன்னதையும் தலையை அசைத்து கேட்டுக்கொண்டிருந்தவர் என்னிடம் மட்டும் இரண்டு கேள்விகள் கேட்டார் . சமீபத்தில் பாலகுமாரனின் எந்த புத்தகத்தை வாசித்தீர்கள் , கதையைப் பற்றி சுருக்கமாக சொல்லுங்கள் . இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அப்புறம் எப்படி கடைசியா படித்ததை சொல்லுவது . மென்று முழுங்கி , நெளிந்து மறந்துட்டேன்னு சொல்லி உட்கார்ந்தேன் . ஒருத்தர இம்ப்ரஸ் பண்ணப்போயி ஒட்டு மொத்த கிளாஸ்க்கு முன்னாடியும் பல்ப்பு. வாலி படத்துல தல சொல்ற மாதிரி, தெரியாதத தெரியாதுன்னுதான் சொல்லனும்னு பட்டறிந்த தருணம்.

ஓக்கே. கம் டு சுஜாதா. நான் பிறந்த வருடத்தில் , வார , மாத இதழ்களில் அவர் எழுதிய ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு . அப்பவே ஏகப்பட்ட ஆங்கில நெடி . முதல் கதையான “வானத்தில் ஒரு மவுனத்தாரகை” கதை தான் புத்தகத்தின் தலைப்பும் கூட . முதல் கதை அறிவியல் | விஞ்ஞானம் வகையறா. மெதுவாக ஆரம்பித்து ஜிவ்வென்று பறக்கின்றது. அடுத்தடுத்த கதைகளில் சில சினிமாத்தனம் சில அட வகையறா. தேனிலவு என்ற கதையில் கீழ்வரும் பத்தி ஒன்று .

“ ரவி ஒரு கையால் கார் ஓட்டிக்கொண்டிருந்தான். மற்றொரு கை அதை விலக்கி ‘ஏதாவது பாட்டுப் போடுங்களேன்” என்றால் சோபனா. அவன் காருக்குள் இருந்த காசெட் ரிகார்டரை தட்ட கீச்சுக் குரல் ஒலித்தது.”

வாசித்துக் கடந்த பின் அடுத்த பத்தியில் ,  இரண்டாவது முறையாக ரவியின் இடக்கை மறுபடியும் அவளை நாடியதுன்னு போட்டிருந்ததை பார்த்தவுடன் மனம் சடன் பிரேக் போட்டது, யோசித்தேன், அப்ப மொதல்ல எப்ப என்று. ரிவர்சில் போய் படித்துணர்ந்தேன். கிளுகிளுப்பான ஒரு பத்தியில் உள்ள விசயத்தையே முழுமையாக உணரமுடியவில்லையே, நாமெல்லாம் எப்போ குறியீடுகள் அடங்கிய மிகுபுனைவு புதினத்தை பின் நவீனத்துவ பாணியில் படைப்பது. எண்ட குருவாயூரப்பாவ்....!

சுஜாதாவே கூறியுள்ளபடி தேனிலவு, ஜன்னல், அரங்கேற்றம் மூன்றும் சிறப்பு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இரண்டு படம்.

ஆனந்தம் – மலையாளம்.








முதலாமாண்டு கல்லூரி மாணவர்களின் இன்டஸ்ட்ரியல் விசிட் தான் படம்.  மொத்த மாணவர்களில், அறுவர் அடங்கிய ஒரு குழுவின் நடவடிக்கைகளை கொண்டே நகர்கிறது IV & படம் . குழுவில் ஒரு காதல் ஜோடி , ஒரு முக்கோண காதல் ஜோடி , மற்றும் இரண்டு தனியர்கள். மாணவர்களின் கங்காணியாக பாலினத்திற்கு ஒருவர் வீதம் இரண்டு புரபசர்ஸ் . (அதென்னப்பா மலையாளப் படங்களில் சித்தரிக்கப்படும் ஆண் புரபசர்ஸ் எல்லோரும் முன்வழுக்கையுடனேயே இருக்கிறார்கள் . சேட்டன்கள் தேங்காய் சேர்ப்பதில்லையோ..?)

பயணம் போகிற பாதையில் கூட எந்த ஒரு திருப்பமும் இல்லை . முதலில் கெம்பி அதைத்தொடர்ந்து கோவா இதுதான் IV இன் ஸ்பாட்ஸ். அறுவருக்குள் நடக்கும் சம்பாஷனைகள், சேஷ்டைகள் , குறும்புகள் , கோபம் தாபம் இதெல்லாம் தான் படம். துள்ளுவதோ இளமைக்கு வாய்ப்பிருந்தும் இளமையை துள்ளவிடவில்லை. இன்றைய தேதிக்கு இதை “நீட்” மூவி என்று சொல்லமுடியாதுதான். பட்சே Neat மூவி. பக்கா வெஜிடேரியன் . நான் வெஜ் பிரியர்களை திருப்திப்படுத்தும் விதமாக மீன் மேக்கர் போல , ஆங்காங்கே சோமபானங்களுடன் கூடிய டிஸ்கோதேக்கள் , ஆதுரமான அரவணைப்புகள் , தழுவல்கள் ஒன்றிரண்டு இதழ் ஒத்தடங்கள்கூட உண்டு. படம் பார்த்தவுடன் தோன்றிய ஒன்று வாழ்கையில் ஒரு முறையாயினும் கெம்பி மற்றும் கோவா சென்று இரவாட்டங்களை கண்டுகளிக்கவேண்டும் என்பதே.

“வெகுதூரம் போகும்போது சேர்ந்தே போங்கள் “ . “ பொறுப்புகள் , கடமைகள் எல்லாம் முடிந்தபிறகே சந்தோசத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்தால் கடைசி வரை அது முடியாது . ஏனெனில் வாழ்வின் கடைசி நொடி வரையிலும் பொறுப்புகளும்  , கடமைகளும் துரத்திக்கொண்டே தானிருக்கும்”. போகிறபோக்கில் ஆங்காங்கே வருகின்றன வசனங்கள் யோசிக்க வைக்கின்றன.



அனுராக கரிக்கின் வெள்ளம் – மலையாளம்.

படத்தின் பெயருக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை . சிம்பிள் ஸ்டோரி பட்சே ஃபீல்குட் ஸ்க்ரீன்பிளே. ஆஷா சரத்தை தவிர வேறெந்த நடிகரையும் யான் அறிஞ்சில்லா .  ஆஷா சாரத் ஆசம் ஆக்டிங். அதுவும் உதடு மடித்து கண்களால் சிரிக்கும்போது மனதை மொத்தமாக களவாடுகிறார் . இளவயதில் கதாநாயகியாக ஏதும் நடித்திருக்கிறாரா என்று கூகிளிடத் தோன்றும் தோற்றம் & நடிப்பு . ஹீரோயின் குரலும், சிரிப்பும் குல்பி . “ஹீலிட்டா ரெண்டு இஞ்சு கூடிடும் ஆண்டி” என்று காதலனின் அம்மாவான ஆஷா சரத்திடம் கொஞ்சிக் கெஞ்சும்போது நாம் உருகிப்போய்விடுகிறோம் . கண்களாலே நடித்து கவனம் ஈர்க்கும் ஹீரோவின் தங்கையாக வருபவர் இன்னும் சில வருடங்களில் கதாநாயகியாக மிளிர்வதற்கான அதிகபட்ச வாய்ப்பு தென்படுகிறது. ஹீரோவின் மெக்கானிக் நண்பனை மகேஷிண்ட பிரதிகாரத்தில் பார்த்த நினைவு . சிரிப்பில் –சிறப்பு . படம் நெடுக மிதமான ஒப்பனையில் வெகு இயல்பாக வலம் வரும் கதாநாயகிக்கு கிளைமாக்சில் , மேக்கப் என்ற பெயரில் பெயின்ட் அடித்து உதட்டுக்கு ஈயம் பூசியது போல சாயம் பூசி அழ வைத்தது எல்லாம் வன்மம். ஜனரஞ்சக ரசிகருக்கு அஜீரணமாக இருந்தாலும் கிளைமாக்ஸ் எதார்த்தம்  லவ்லி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மூன்று பாடல்

மறு வார்த்தை பேசாதே – என்னை நோக்கி பாயும் தோட்டா

இசை , புயலா இல்லை தழுவல் இளவரசரா என்று தெரியவில்லை . பாடல் தாமரையாகத்தானிருக்கும். “பிடிவாதம் பிடி , சினம் தீரும் அடி” –காதலியின் செல்லச்  சிணுங்கல் போல வரிகள். சித் ஸ்ரீராம் குரலில் கேட்ட சில பாடல்கள் எல்லாமே ரோலர் ஹோஸ்ட் பயணம் போலத்தான். உச்சஸ்த்தாதியில் ஆரம்பித்து சடாரென கீழிறங்கி மயிலிறகாய் வருடுவார். மேற்படி பாடலில் அது கொஞ்சம் மட்டுப்பட்டிருக்கிறது . கண்ட்ரோல்டு சிங்கிங் . பாடல் வரிகளின் விகுதியில் ஸ்ரீராம் கொடுக்கும் மிகுதியான அழுத்தம் கேட்பதற்கு சுகம். பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் புல்லாங்குழல் இசை, சைவம் படத்தின் “அழகோ அழகையும்” , ஆரம்பம் முதல் முடியும் வரை தொடர்ந்து ஒலிக்கும் பீட்ஸ், நெஞ்சினிலே படத்தில் வரும் “மனசே மனசே குழப்பமென்ன” வையும் நினைவுபடுத்துகின்றன. இதற்குமேல் பாடலையும், இசையையும் ஸ்டான்ஸா ஸ்டான்ஸாவாக விவரித்து சிலாகிக்கும் அளவிற்கு நாம் இசையில் பண்டிதமில்லை.

காந்தாரி யாரோ – மகளிர் மட்டும்

ஜிப்ரான் இஸ் Back . வாகை சூடவா, திருமணம் எனும் நிக்காஹ் , களவாணி என்று ஜிப்ரான் செவி ஈர்த்த ஆல்பங்கள் வரிசையில் “மம”வும் நிச்சயம் இடம்பிடிக்கும் . ஜிப்ரான் ஸ்பெஷாலிட்டியே வித்தியாசமான இசைக்கருவிகளின் கோர்வைதான் . மேற்படி ஆல்பத்திலும்\ அது தொடர்கிறது. பத்மலதாவின் யூனிக் வாய்ஸ் தனி ஆவர்த்தனம். காந்தாரி, காதம்பரி , கடவுளின் துகள் என்று பாடல் வரிகளின் வார்த்தைகள் இதிகாச , விஞ்ஞான கலவையாக கவர்கின்றன. மதன்கார்க்கி...?

மனோகதம் பவான் – அனுராக கரிக்கின் வெள்ளம்.

பிரம்ம முகூர்த்தத்தில் துயிலெழுந்து, வீடு விடுபட்டு வீதியில் வந்து வானையும், பூமியையும் பார்க்கும்போது, இரவு கரைந்து பகல் புலரும் அந்த அரவமற்ற பொழுது  எவ்வளவு ரம்மியமாக இருக்குமோ அவ்வளவு ரம்மியம் இந்த பாடல் . வசீகரிக்கும் பெண்குரோலோடு , மெஸ்மரிசம் செய்யும் ஆண் குரல் ஹரிச்சரன் . இசை இதம்.


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.




Apr 5, 2017

பேசாத வார்த்தைகள் - 050417 : லெக்ஷ்மி | நேஷனல் சில்க்ஸ் | கனவு வாரியம்









சமீபத்தில் கேட்க, கேட்க பிடித்துப்போனது லெக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்தின் குரல் . போகன் படத்தின் செந்தூரா பாடல் லெக்ஷ்மியின் முதல் திரையிசைப்பாடல். வழக்கமாக இமான் இசைக்கும் படங்களில் ஷ்ரேயாகோஷலின் குரல் தான் கவனம் ஈர்க்கும். போகனிலும் ஸ்ரேயா உண்டு . ஆயினும் லெக்ஷ்மி செவியீர்க்கிறார். உருவத்திலும் , குரலிலும் முறையே சாய் பல்லவியையும் , சித் ஸ்ரீராமையும் நினைவுபடுத்துகிறார். லேடி சித் ஸ்ரீராம் என்றுகூட சொல்லலாம் . அப்படியொரு ஆளுமை நிரம்பிய அழுத்தமான குரல் . செந்தூரா பாடலின் மற்றுமொரு சிறப்பம்சம் தாமரையின் வசியம் செய்யும் வரிகள் .

“அலைந்து நான் களைத்துப் போகும்போது அங்கே
மெலிந்து நான் இளைத்து போவதாய் சொல்லி ,
வீட்டில் நளபாகம் செய்வாயா ;
பொய்யாய் சில நேரம் வைவாயா, நான்
தொலைந்து போனால் உனை சேரும் வழி சொல்வாயா...!”

பாடல் என்றதும் எங்கே இவர்கள் என்று கேட்கத்தோன்றும் இருவர் , ஜிப்ரான் & ஆலாப் ராஜ். சமீபத்தில் இவர்களிருவரையும் கேட்ட நினைவில்லை. என்னாச்சு ...?


திருப்பூரில் , பொழுதுபோக்க சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை , சென்னையானால் வள்ளுவர் கோட்டம் , பீச் என்று எங்காவது சல்லிசான செலவில் நாள் பூராவும் சுத்திவரலாம் . மதுரை , திருச்சிகளில் கோவில்கள் , அணைகள் என்று எப்படியாவது அரைப்பொழுதை கழித்துவிடலாம். கோவை என்றால் கூட பரவாயில்லை ஷாப்பிங்கிற்காகவும் , விண்டோ ஷாப்பிங்கிற்காகவும் என்று ஒன்றுக்கு இரண்டாக மால்கள் உண்டு . திருப்பூர் மாதிரியான ஊர்களில் ரெம்ப கஷ்டம். தடுக்கி விழுந்தாலும் தடுக்காமல் விழுந்தாலும் அது ஒரு பனியன் கம்பெனியாகதான் இருக்கும். அதிகபட்ச பொழுதுபோக்கும் ஸ்தலம் திரையரங்கை தவிர்த்து வேறொன்றுமில்லை .

ஞாயிற்றுகிழமைகளில் போரடித்தால் அப்படியே டவுன்பஸ்ஸில் ஏறி திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டிய கடை வீதிகளை ஒரு சுத்து சுத்தி வருவதுண்டு . அப்படியொரு சுத்தல் முடிந்து, வீடு திரும்ப கடைவீதி கார்னரில் நின்று கொண்டிருக்கும் போதுதான் கவனித்தேன் அந்த கடையை. பரபரப்பான கடைவீதியின் கடைக்கோடியில் பத்துக்கு இருபது அளவில் ஒரு அறையில் புத்தகக் கடை . நேஷனல் சில்க்ஸ்க்கு சொந்தமான கடை . இயற்கை வழி விளைவித்த பொருட்களையும் , தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களையும் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவசியமே இல்லைதான் , மூன்று டன் ஏ.சி யை மாட்டிவிட்டு புதுபொலிவுடன் விரிவுபடுத்தப்பட்ட பட்டுப்புடவை செக்ஷன் என்று விளம்பரப்படுத்தி கல்லாவை நிரப்பாலம்தான் ஆனால் செய்யவில்லை. மேற்படி நிறுவன உரிமையாளருக்கு புத்தகம் மீது அளவற்ற பிரியமுண்டென்றும் , அவரது தோட்டத்து வீட்டில் ஒரு குட்டி நூலகமே வைத்திருப்பதாகவும் கடைச் சிப்பந்தி சொல்லிகொண்டிருந்தார்.
மேற்படி கடையை ஒட்டினாற்போலயே நேஷனல் சில்க்ஸ் ஜவுளிக்கடையும் இயங்குகிறது .கடைக்கு செல்வோருக்கு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தாத அளவிலான அலங்காரங்களுடன் , எளிமையான , இயல்பான புன்னைகையுடன் கனிவாக வரவேற்கும் கடை சிப்பந்திகள் வெகுவாக கவர்கிறார்கள் . நியாயமான விலையில் தரமான ஜவுளிகளுக்கு அவசியம் நாடலாம் நேஷனல் சில்க்சை .


கனவு வாரியம் . இண்டர்நேஷனல் அளவில் கவனம் ஈர்த்த படமென்று நாளிதழ்களில் , சமூக ஊடகங்களிலும் பேசப்பட்ட படம் . சமீபத்தில் காணக் கிடைத்தது . ஆராய்ச்சியையும், சுய தொழிலையும் , இயற்கை விவசாயத்தையும் வலுவாக ஆதரித்து பேசும் ஒரு பாடம். டாக்குமென்றித்தனமான படமாக தோன்றினாலும் போரடிக்கவில்லை. பொதுவாக இந்தியர்கள் குறிப்பாக சமகால தமிழர்கள் வேலைக்கு செல்வதையே விரும்புகிறார்கள் . தப்பித்தவறி யாரேனும் சொந்தத் தொழில் செய்யபோகிறேன் என்று சொன்னால் , ஏதோ சூசைட் செய்யப்போகிறவனை போலவே இந்த சமூகம் பார்க்கிறது ; அறிவுரைக்கிறது . இதையெல்லாம் தாண்டி ஆராய்ச்சி செய்யபோகிறேன் என்று சொன்னால் சர்வ நிச்சயமாய் சம்பந்தப்பட்டவரை கொண்டுபோய் மனநல மருத்துவமனையில் அனுமதித்துவிட்டுதான் அமர்வார்கள் நம்மாட்கள் . கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் உங்கள் சுற்றத்தில் , நட்பில் எத்தனை பேர் சொந்தத் தொழில் செய்கிறார்கள் ; எத்தனை பேர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் . முன்னதில் சொற்பமாகவும் பின்னதில் அரிதினினும் அரிதாகவும் இருப்பார்கள்.

கம் டு தி மூவி . டிஜிட்டல் டீ.ஆராய் ஆணழகன் சிதம்பரம் . சுண்ணாம்புச் சுவராய் ஈ... ஈ.. என்று வலம் வருகிறார் போதாக்குறைக்கு குரல் வேறு கும்மியடிக்கிறது  . மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதம் . ஐ டி கம்பெனி டூ விவசாயியாக வரும் பாத்திரம் அவ்வளவு பக்குவம் . படத்தில் வெகுவாக கவர்ந்தது வசனம் . கொஞ்சம் பட்டி , டிங்கரிங் பார்த்து கதையின் நாயகனாய் வேறு யாரையேனும் போட்டிருந்தால் இன்னும் அதிகமானோரை சென்று சேர்ந்திருக்கும் கனவு வாரியம்.


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.

Mar 20, 2014

பேசாத வார்த்தைகள் : விஜய் , குக்கூ , டூர் & ட்வீட் .






நடிகர் கம் பாடகர் வரிசையில் உலக நாயகனுக்குப் பிறகு இளைய தளபதி குறிப்பிட்டுச்சொல்லக் கூடியவராகிறார் . சாமீபத்திய ஜில்லா “படத்தின் கண்டாங்கி கண்டாங்கி” பாடலில் தலைவி ஷ்ரேயாகோஷால்உடன் பாந்தமாக பாடியிருக்கிறார் . காஸ்ட்யூமும் , காட்சி படமாக்கப்பட்ட இடங்களும் பாடலுக்கு பொருந்தாத போதிலும் , தளபதியின் குரலிலும் , நடனத்திலும் அப்டியொரு வசீகரம் .

**********************************************************************************************************************************************************

புதுப்படங்களில் கவன ஈர்ப்பு செய்யும் பாடல் - குக்கூ படத்தின் , “கல்யாணமாம் கல்யாணம்” . வழக்கமான காதல் தோல்வி சிச்சுவேசன் பாடலென்ற பொழுதிலும் , கவன ஈர்ப்பு செய்வது இசையும் , குண்டடித்த எம்.ஜி.ஆரும் , பூசினாற்போல வரும் சந்திரபாபுவும் தான்  . சந்திரபாபுவை பார்க்கும் போது அவ்வளவு பரவசமாக இருக்கிறது . நம்பியார் , ரகுவரன் , நாகேஷ் போன்று மறக்க முடியாத நடிகர்களில் சந்திரபாபு முதன்மையானவர் .


**********************************************************************************************************************************************************


அலுவலக டூரில் , எந்தெந்த ஊர்களுக்கு செல்வதென்பதை முடிவு செய்யும் பொருட்டு பொதுக்குழுவை கூட்டி இருந்தார்கள் .  கடவுளின் தேசத்திற்கு போகலாமென நான் உள்பட நால்வர் கை தூக்க . தண்ணீர் தேசத்திற்கு போகலாமென நாற்பதுக்கும் மேற்பட்டோர் கைகள் , கால்கள் என மொத்தமாக தூக்க , நால்வருக்கும் டெப்பாசிட் காலி . என்னென்னமோ சொல்லி கேன்வாஸ் பண்ணினாலும் எடுபடவில்லை . வேணும்னா , இரண்டு அணியாக பிரிந்து  முதல் அணி பாண்டிக்கும் , இரண்டாவது அணி வீகாலேண்டுக்கும் போகலாமென ஒருவர் ஐடியா கொடுக்க , நமக்கு அடிவயிறே கலங்கிவிட்டது . பின்னே , மூணு படி மேலேறி , கீழே பார்த்தாலே நமக்கு தலையும் தரையும் சேர்ந்து சுத்தும்  இதில் வீகாலேண்ட், ஜெயண்ட்வீல்னு பேரக்கேட்டாலே டரியலாகுது. ஆணி புடுங்கவே வரலையப்பாவென்று கூறி வெளிநடப்பு செய்தாயிற்று . என்னவொன்னு டூர் போயிருந்தா, அப்படி இப்படின்னு  ஒரு அஞ்சாறு பதிவும் , ஏழெட்டு FB ஸ்டேட்டசும் தேத்தியிருக்கலாம் J விதி வலியது .....!

**********************************************************************************************************************************************************

தமிழனுக்கு தெரிந்ததெல்லாம் ரெண்டே திசைகள் தான் , ஒண்ணு நார்த் மற்றொன்று சவுத் . ஈஸ்ட் , வெஸ்ட்டெல்லாம் என்ன பாவம் பண்ணுச்சோ . / நான் தமிழன் /


ஜீவன்பேஷனில் : ஜீவன் பேஷன் : கோடைக்கேற்ற ஆடை - லினன் ( LINEN)



என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .




Mar 17, 2014

பேசாத வார்த்தைகள் : நீலாங்கரை , ட்வீட் , வித்தியாசம் .



புலிவால் படத்தில் வரும் நீலாங்கரையில் பாடல் இப்பொழுதைய விருப்பப்பார்வையில் . தினமும் ஓரிரு முறையேனும் காணொளியுடன் பார்த்துவிடுகிறேன் . பாடலின் சில காட்சிகள் சர்வம் படத்தின் பாடலை நினைவு படுத்தினாலும் ,  படமாக்கப்பட்டிருக்கும் இடங்களும் , நடனமும் , இசையும் அழகு ...!

வழக்கமாக பாடல் காட்சிகளில் நடமாடும் விமல் , மேற்படி பாடலில் நடனமாடியிருப்பது ஆச்சர்ய அதிர்ச்சி . அதிலும் அம்மணி அனன்யா அலுங்காமல் ஆட , அண்ணனோ குலுங்கி குலுங்கி ஆடுகிறார் . நடன வகுப்புக்கு போகிறார் போல , போய்த்தானே ஆகவேண்டும் , இல்லையெனில் சி.கா &  வி.சே க்களின் போட்டியை எப்படி சமாளிப்பது .? அனன்யா , வெகுளித்தனமான கதாபாத்திரங்களுக்கெனவே செய்துவைத்த பதுமை . லைலா, ஜெனிலியா போன்ற லூசுத்தனமான வெகுளிகள் பட்டியலில் இவரையும் சேர்க்காமல் இருந்தால் சரி .

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் மற்றுமொரு முணுமுணுக்க வைக்கும் அழகானதொரு இசைக்கோர்வை . தென்மேற்கு பருவக் காற்றிலிருந்து -புலிவால் வரையிலுமாக என்.ஆர்.ஆர் இசையில் வெளிவந்த படங்களில் குறைந்தது ஒரு பாடலாவது வானொலி மற்றும் காணொளிகளின் விருப்பப் பாடல்களாக இருந்துவிடுகின்றது . பாடல்கள் & இசை சிறப்பாக இருந்தும் அதற்கான அங்கீகாரம் அவருக்கு சரியாக கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம் .

பெண்கள் கொண்ட ஆசையெல்லாம்
Fridge ல்  வைத்த ஆப்பிள் போல ,
ஆண்கள் கொண்ட ஆசையெல்லாம்
வெயிலில் வைத்த வெண்ணெய் போல ....

மேலே உள்ள வரிகள் மேற்படி பாடலில் கதாநாயகி பாடுவது போல வருகிறது ... பொருளுரை புரிந்தவர்கள் விவரிக்கவும் .

ட்வீட்டு

இன்றைய ஆண்களின் முக்கியமான இரண்டு பிரச்சினைகள்- முடி & மடி , முதலாவது வளராம படுத்துது , இரண்டாவது வளர்ந்து படுத்துது – நான் ஆண் –

வித்தியாசம் ..

இன்னொன்னு சாப்புட்டுடான்னு தட்டுல கொண்டாந்து தோசைய வச்சா அது அம்மா ,
இன்னொரு தோச வேணுமான்னு கேட்டா அது வீட்டுக்காரம்மா .

தம்பி , முடி வெள்ளிக்கம்பிக் கணக்கா இருக்குடா – அம்மா .
தல பூராம் நரச்சுப்போச்சு – வீட்டுக்காரம்மா ...




என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .


Dec 4, 2013

நிலாச்சோறு – புதுயுகம் – CHANNELS பக்கம் , டிக்கெட் , இசை & ட்வீட் .






புதுயுகம்

புதுயுகம் அலைவரிசைக்கான, சீரியல் விளம்பரங்களை நாளிதழ்களில் பார்த்து சீண்டாமலே இருந்தேன் . சில நாட்களாக பார்க்க ஆரம்பித்துள்ளேன் ... சீரியல்களையும் தாண்டி சில நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள் . அதிலொன்று  “இனியவை இன்று” .

தினமும் காலை எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை ன்னு நினைக்கின்றேன் . FM STATION CONCEPT- ல் ஆனந்தியும், வருணும் தொகுத்து வழங்குகிறார்கள் . இருவருக்கும் ரெம்ப நல்ல குரல். பையந்தான் தூங்கி எழுந்து வந்தது போலவே இருக்கிறான் . பெண்ணின் முகத்தில்  பெயரைப்போலவே ஆனந்தம் ... எபொழுதும் புன்னகை தான் J.

சூரிய வணக்கம் , காலை வணக்கம் மாதிரியான நிகழ்ச்சிதான் .ஆனால் , PRESENTATION ரெம்ப நல்லாருக்கு .  குறிப்பா மாளவிகா அக்கா PORTION ... அதுக்கான மெனக்கெடல் அதிகம் . ட்ராஸ்கி மருது & குழுவினரின் CARTOON ANIMATION பெரிய SUPPORT . நேற்று PLASTIC பற்றி சொன்னார்கள் .

கரு.ஆறுமுகத்தமிழன்னு ஒருத்தர் பழந்தமிழ் கவிதைகளையும், அதற்கான பொருளை , கதைகளின் ஊடாகவும் சொல்கின்றார் . அவரது குரலில் கதை கேட்கும்போது கேட்பவர்களுக்கு குழந்தையின்  குதூகலம் . அப்புறம், வழக்கம் போல ஒரு புத்தக விமர்சனம் . இடையிடையே, தமிழ் திரைப்படப்பாடல்களில் வரும் சில வார்த்தைகளுக்கு ஏதாவதொரு பாடலாசிரியர் வந்து விளக்கம் சொல்கிறார்கள் . இரண்டு நாட்களுக்கு முன்பு “துந்தனா “ ங்குற வார்த்தையைப் பற்றி பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து விளக்கினார்  . உங்களில் யாருக்கேனும் துந்தனா என்றால் என்னவென்றும் அதுசார்ந்த மேலதிக தகவல்களும் தெரியுமா ...?


பயணம் – டிக்கெட்

வா.ம சொன்னது போல பெங்களூரு பேருந்துகளில் அந்த கூத்து நடந்து கொண்டுதானிருக்கின்றது. அதகாப்பட்டது , பன்னிரெண்டு ரூபாய் டிக்கெட்டிற்கு இருபது ரூபாய் கொடுத்தீர்களேயானால் பத்து ரூபாயை திருப்பிக்கொடுத்துவிடுவார்கள் . அதேசமயம் டிக்கெட் தரமாட்டார்கள் . நல்ல Deal ....! கடந்த பெங்களூர் பயணத்தில் DAY PASS எடுத்து ஊர் சுற்றினோம் . குறைந்த பட்ச கட்டணமே பன்னிரெண்டு ரூபாய் (?) இருக்கும் ஒரு ஊரில் . மூன்று STOP களுக்கு மேல ஏறி , இறங்கி பிரயாணிப்பவர்களுக்கும், ஊர் சுற்றிப்பார்ப்பவர்களுக்கும் இந்த  DAY PASS வரப்பிரசாதம் .

ஒரு நபருக்கு, முழு நாளைக்கு அறுபது ரூபாய் . நடத்துனர்களிடமே DAY PASS வாங்கிக்கலாம் . பயண நாள் , மாதம் ,வருடம் , ஆனா பெண்ணா இதையெல்லாம் PASS ல் PUNCH செய்து தருகிறார்கள் . ஒருசில நடத்துனர்கள் அடையாள அட்டை கேட்கிறார்கள். VOLVO பேருந்தை தவிர மற்ற எந்த பேருந்துகளில் வேண்டுமானாலும் பயணிக்கலாம் . VALIDITY எவ்வளவுன்னு தமிங்கிலத்தில் நடத்துனரிடம் கேட்டதற்கு அவர் கன்னங்கிலத்தில் பதிலுரைத்தார்.  இரவு பத்து மணி வரை பயணிக்கலாம்னு குத்துமதிப்பாக நானே முடிவு பண்ணிக்கொண்டேன் . மேலதிக தகவல்களுக்கு .

சரியான சில்லறை கொடுக்கலைனா நடத்துனரே காண்டாயி கண்ணா பின்னான்னு திட்டுவாங்க. இந்த லட்சணத்துல ,பெங்களூரின் சில பேருந்துகளில் ஓட்டுனரே , நடத்துனர் . சொல்லவும் வேணுமா அர்ச்சனைக்கு ... என்ன சொல்லி திட்டுராங்கன்னே புரியல J கன்னட மொழி தெரியாதவர்கள்  இந்த டிக்கெட் வாங்கி பயணிப்பது உசிதம்.

நாங்க போன பேருந்துல, ஒரு நபர் ஓட்டுனருக்கு பக்கத்துலே பரிதாபமா நின்னுட்டு இருந்தார் . நான் DAY PASS ஐ ஓட்டுனரிடம் காண்பித்ததை பார்த்தவர் என்னன்னு என்னிடம் கேட்டார் ...அட நம்மாளு..! விம் போட்டவுடன் விசும்பினார் அடடா எனக்கு தெரியாமப்போச்சேன்னு . அதுசரி , நீங்க ஏன் இங்க நின்னுட்டு இருக்கீங்கன்னு கேட்டேன் ... 500 ரூபாய் கொடுத்தேன் மீதி சில்லறைக்காக நின்னுட்டுருக்கேன்னார் (பரவா இல்ல சுப்பு நீ சமத்தன்தான்னு மனசுகுள்ள நானே சொல்லிகிட்டேன் J). SO , இந்தமாதிரி சில்லறைத் தொந்தரவு, அர்ச்சனை இதுலருந்தேல்லாம் தப்பிக்கணும்னா கண்டிப்பா DAY PASS வாங்கீடுங்க . எந்த STOP ல் வேண்டுமானாலும்  ஏறி எந்த STOP ல் வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம் , குறைந்த செலவு இதெல்லாம் நன்மைகளில் இன்னும் சில .


இசை

தடையறத்தாக்க வில் வரும் இந்தப்பாட்டை கேட்டிருக்கிறீர்களா ரசித்திருகிறீர்களா ...? தமனின் அட்டகாசமான மெலடி , பார்க்கவும் கேட்கவும் அவ்வளவு பிரமாதமா இருக்கும் . குறிப்பா மம்தா வோட COSTUME , அருண் & மம்தாவோட ELEGANT DANCE MOVEMENTS  . கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியான ஒளிப்பதிவு , ஆலாப்ராஜ் ன் அசத்தும் குரல்  , கட்சியமைக்கப்பட்ட இடம்னு எல்லாமே பக்காவா அமைந்த ஒரு பாடல் .  





பிளாக்குல ட்வீட்டு


பத்து நிமிசத்துக்கு ஒரு மொற செல்போன் வாங்கலையா ன்னு வந்து படுத்துன  , அப்புறம் நக வாங்கலையான்னு படுத்துன , இப்ப வீடு வாங்கலையான்னு படுத்துற ... யய்யா மாதவா ஒனக்கு என்னதான்யா ப்பிரச்சன ...? // BY பாவப்பட்ட மிடில்கிளாஸ் மாதவன்கள் //

என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .