Jun 4, 2020

#பேசாத_வார்த்தைகள்~040620





அச்சுப் புஸ்தகம் வாங்கி ஆண்டுகள் சில ஆயிற்று. ஏற்கனவே வாங்கிய புஸ்தகங்களில் அன்பளிப்பாகக் கொடுத்ததுபோக கைவசமிருந்த ஒன்றிரண்டையும் தர்ஷினி தன் விளையாட்டு பொம்மைகளாக்கிவிட்டாள். எந்தப்புஸ்தகத்தையும் கிழிப்பதில்லை ; ஆனால் கிறுகிறுக்க வைக்குமளவிற்கு கிறுக்கிவைத்து விடுவாள். பிறகு எங்கேயாவது கண் காணாத இடத்தில் கொண்டுபோய் கிடத்திவிடுவாள். வீடடங்கிய காலத்தில் சுத்தம்பண்ணும்போது புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தொகுப்பை அலமாரியின் அடியிலிருந்து கண்டெடுத்தேன். அவசியம் வாசிக்க வேண்டிய ஐந்து தமிழ்ப் புஸ்தகங்கள் என்று எஸ்.ராமகிருஷ்ணன் பட்டியலிட்டதில் ஒன்று புதுமைப் பித்தனின் சிறுகதைகள் என்று நினைவு. எவ்வருடம் என்று துல்லியமாக நினைவில் இல்லை, கோவை கொடிசீயாவில் நடைபெற்ற புஸ்தகக் கண்காட்சியில் மலிவு விலையில் வங்கியது. கூடுதலாக வண்ணதாசனின் 2 புஸ்தகங்களும் , எஸ்.ரா அவர்களின் 4 புஸ்தகங்களும், மகள் தர்ஷினிக்காக இரண்டு புஸ்தகங்களுமாக சுமார் இரண்டாயிரம் சில்லறைகளுக்கு கொள்முதல் செய்திருந்தேன். புஸ்தகங்களுக்காக ஒரே தவணையில் அதிகமாக முதலீடு செய்ததில் இபோதுவரைக்குமான என் வாழ்நாள் உச்சம் அது. கொடிசீயா , பிரதான சாலையிலிருந்து சுமார் 2 பர்லாங் தூரத்தில் அமையப்பெற்றது. போகும்போது கைகளை வீசிக்கொண்டு சென்றதில் அயர்ச்சி தெரியவில்லை. உள்ளே சுற்றியலைந்து கணிசமான எடையோடு வெளியேறியபோது சோர்ந்துவிட்டேன். திரும்பும்போதும் நடராஜாவில் பிராயணப்பட்டு பாதி வழியில் தூக்கமுடியாமல்போகவே, வாடகை ஆட்டோ அமர்த்திக்கொண்டு வந்து சேர்ந்ததும் நினைவிலிருக்கிறது.

புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பு 900 பக்கங்கள் கொண்ட கெட்டிப் பதிப்பு, திருமகள் பதிப்பகத்தார் அசல் விலையிலிருந்து பத்து சதவீதக் கழிவில் கொடுத்தார்கள். 300ம் சில்லறையுமானதாக நினைவு. விலை தான் மலிவேயொழிய புஸ்தகத்தின் உள்ளடக்கமும், வடிவமைப்பும் அபாரமான தரம். சற்றேறக்குறைய 100 சிறுகதைகள் இருக்கும். கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு நுணுக்கமாக மொய்ப்பு பார்த்திருப்பார்கள் போல. பளிச்சென வெள்ளைத்தாளில் தாராளமான சமூக இடைவெளியோடு அச்சிடப்பட்ட புஸ்தகம். மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் ஆத்மார்த்தமாக புத்தகத்தை வடித்திருக்கிறார்கள் திருமகள் பதிப்பகத்தார். இன்றையிலிருந்து சுமார் 80 முதல் 90 வருடங்களுக்கு முன்பாக பல்வேறு பத்திரிக்கைகள், சமிஞ்கைகளில் வெவ்வேறு ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகள். நூறு வருடங்களை எட்டிபிடிக்கப்போகிற கதைகளாயினும் இப்பொழுதும் வாசிப்பின்பத்தைத் தருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத கதைகள் , வாக்கியங்கள் பெரிய மெனக்கெடல்கள் ஏதுமின்றி புரிகிறது. புதுமைப் பித்தனின் வார்த்தைத் தெரிவுகள் எனக்கு வெகுவாகப் பிடித்திருக்கிறது. வாக்கியங்களை அடிக்கோடிடுவது போல நான் வார்த்தைகளை மொபைல் நோட்புக்கில் குறித்துக்கொள்வதை பழக்கமாக்கியிருக்கிறேன். இன்னும் முழுமையாக படித்து முடிக்கவில்லை. தனித்த நேரம் எதுவும் ஒதுக்கிக்கொள்ளாமல் குழந்தையைக் கொஞ்சுவதுபோல அவ்வப்போது வாசிப்பதுண்டு. புஸ்தகத்தின் அசவுகரியமாகப்படுவது , அதன் எடை . ஆசையாக மடியில் எடுத்து வைத்தோ ; மல்லாக்கப் படுத்துக்கொண்டோ வாசிக்கயியலவில்லை என்ற வருத்தமிருக்கிறது. ஓங்கி அடித்தால் ஒன்னரை டன் வெயிட் கணக்காக கனக்கிறது✨

★★★★★★


மல்லிகைப்பூ என்றவுடன் நிறம் , மணத்திற்கு அடுத்து எனக்கு நினைவுக்குவருவது தமிழ்ச்சினிமாவின் முதலிரவுக் காட்சிகள் , வடிவேலுவின் மதுரை மல்லி நகைச்சுவை , குஷ்புவுக்கு முன்பான மல்லிகைப்பூ இட்டலி என்ற பதம். மல்லிகை என்று தொடங்கும் பாடல்கள் மட்டுமே அம்பதுக்கும் பக்கம் தமிழில் வந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்பாக மல்லிகைப்பூ ஒரு முழம் கேட்டதுக்கு 120 ரூபாயென்றார் பூக்காரம்மா. நொடிநேரம் சூப்பர் ஸ்டாராயிப்போனேன். இப்போது கிலோவே நூறு ரூபாய்தானாம். சமீபமாக "மாலை நேரம் மல்லிப்பூ மல்லிப்பூ" என்றொரு பாடல் அடிக்கடி தொலைகாட்சி இசைச் சேனல்களில் ஒலித்துக்கொண்டிருந்தது. தர்ஷினிக்குப் பிரியமான பாடல். பாக்கியராஜ் போல பகுமானமாக கைகால்களை நீட்டி மடக்கி நடனம் புரிவாள். இசையும் , குரலும் பின் மல்லிப்பூவும் உந்தித்தள்ள மேலதிக தகவல்களைக் கண்டடைந்து  படத்தை தரவிறக்கினேன். படத்தின் நாமம் ஏ 1. நாமம் மட்டுமே.

முதல் ஐந்து நிமிடங்கள் தொல்லைக்காட்சிகளின் விருது வழங்கும் விழாவில் காட்டப்படும் கிளிஷேவான ஆவணப்படம் போன்ற ஒன்றை எச்சரிக்கையாக ஒளிபரப்புகிறார்கள். உஷார்ப்பேர்வழிகள் அக்கணமே லேப்டாப்பை மூடியிருப்பார்கள். எண்ட்ரீ சீன்ல சந்தானம் டூ வீலர்லேயே கிணறு தோண்டுகிறார். பிறகு நாலைந்து சீனியர் சிட்டிசன்ங்களை ஜாக்கிசானாக மாறி அடித்துத் துவைத்து விரட்டுகிறார் . இசையமைப்பாளர் வயலினை நம் கழுத்துச் சங்கில் வைத்து மீட்டுகிறார். இட்டலி ; சட்னி ; பொங்கல் எல்லாம் வைத்து ஒரு அட்வைஸ் படையலொன்று பிரேக் அப் சீனில். அப்பிடியே சுவத்தில் போய் முடிக்கொள்ளலாம் என்று இருந்தது. ஆனால் அடுத்த வசனத்தில் ஈடு செய்துவிடுகிறார்கள். 

சந்தானம் படத்தில் அவரைத்தவிர வேறு யாரையும் நாம் கவனிப்பதுமில்லை ; கவனிக்கவைக்கும் அளவிற்கான யாரும் எவரும் வெளிப்படவுமில்லை. சந்தானமே அதைத்தான் விரும்புகிறார்போல. சந்தானம் மூவிங்குற லேபிளே போதுமென. உண்மையிலேயே சந்தானம் உடல்மொழியில் அசத்தியிருக்கிறார்.  புல்லட் புரூஃப் போல எப்போதும் லொள்ளு "ஷப்பா" டீமை தூக்கி சுமக்காமலும்;  நாலைந்து படங்களுக்கு அக்குளில் இருக்கும் நக்கல்களை அடியில் போட்டு நசுக்கிவிட்டும் ,  இயக்குனர் ஒருவரிடம் தன்னை ஒப்புக்கொடுப்பாரேயானால் நிச்சயம் பிரகாசிப்பார் என்றே எண்ணுகிறேன். படம் முழுவதும் சிரிப்பு நடிகர்கள் தான். ஆனால் பாருங்கள் முதல்சிரிப்புக்கு முப்பத்தைந்து நிமிடங்கள் காத்திருக்கவேண்டியத்திருக்கிறது. சுந்தர்.சி ரகப் படம். சுமாராக வந்திருக்கிறது✨

★★★★★★

வழக்கமான கோடைகாலங்களில் வரும் சீசனல் தண்ணீர் சிக்கன அக்கறை இவ்வருடம் கரோனா காரணமாக நித்திரையிலிருக்கிறது. இன்றும் தண்ணீர் அரிதான வளம் என்று எழுதி மட்டும்தான் கொண்டிருக்கிறோம் , காவல் துறை உங்கள் நண்பன் என்பதினைப்போல. நான் ஏற்கனவே சொல்லியதைப்போல , ஒவ்வொரு வீட்டிற்கும், அலுவலகத்திற்கும், ஆலைக்கும் தண்ணீர் கணக்கிடும் மீட்டர் பொருத்தப்படவேண்டும். நாம் எவ்வளவு தண்ணீரை செலவழிக்கிறோம் விரயமாக்குகிறோம் என்று தெரியாமலே , அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமலே அலட்சியமாக இருக்கிறோம். தெருக் குழாயில் தண்ணீர் கொணர்ந்து பயன்படுத்திய போது நாம் செலவழித்த தண்ணீரை விட இப்போது ஐந்து மடங்கு அதிகம் செலவழிக்கிறோம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. முன்பு  உள்ளங்கை நிறைய தண்ணீர் மோந்து முகம் கழுவிய இந்தியன் இப்போது குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் செலவழிக்கிறான் என்று சொல்கிறது பிறிதொரு புள்ளி விவரம். தவமாய்த் தவமிருந்து படத்தில் , கிராமத்தில் இருக்கும் பெற்றோரை மகன் சேரன் நகரத்து அப்பார்ட்மென்டுக்கு கூட்டி வந்திருப்பார். டாய்லெட் போய் வந்த சரண்யா பொன்வண்ணன் என்ன தம்பி இந்தக் கக்கூஸ்ல போற தண்ணிய வெச்சு ஒரு போகம் விவசாயமே பார்த்துடலாம் போலயே என்பார். இது ஓர் உதாரணம்.
இப்பொழுது மின்சாரம் தனியார் மயம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது அடுத்து நிச்சயமாக தண்ணீராகத்தான் இருக்கும். கோவையில் போனவருடமே அதற்கான முஸ்தீபுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டது. எதிர்ப்பு காரணமாக கொஞ்சம் பொறுதிருக்கிறார்கள் அவ்வளவுதான். அரசாங்கத்தைப் பொறுத்த வரையிலும் தனது துறைகளில் சீர்திருத்தம் செய்யவேண்டுமெனில் அதற்கான எளிய வழியாக கைகொள்வது தனியாருக்குத் தாரைவார்த்தல் என்பதுதான். இயன்றவரை தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தப் பழகுங்கள். குழந்தைகளைப் பழக்குங்கள். இல்லையெனில் தண்ணீர் அரிதான வளம் என்று எழுதுவதற்கு தேவையே இராமல் போய்விடும் வரும் தலைமுறைக்கு✨



என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.



May 26, 2020

பேசாத வார்த்தைகள் ~ 260520

பேசாத வார்த்தைகள் ~ 260520



சொந்த வேலையொன்றை நிறைவேற்றும் பொருட்டு சுமார் இரண்டு மாத காலங்களுக்குப்பிறகு மாநகருக்குள் பிரவேசித்து வந்தேன். உம்பன் புயலால் வெக்கை தணிய வாய்ப்புள்ளதாக சொல்லியிருந்தார்கள். வெளிச்சென்றுவர எத்தனித்ததற்கு அதுவுமொரு காரணம். பத்துமணிக்கு மேலாக பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. மனித மற்றும் எந்திர பழுதுநீக்கும் நிலையங்களிலும், மருந்துக்கடைகளிலும் கணிசமான கூட்டத்தைக் காணமுடிந்தது. ஏனைய ஸ்தாபனங்களில் மருந்துக்கும் மனிதர்களில்லை. கவசத்துடன்கூடிய கடைச் சிப்பந்திகள் கரோனாவை நொந்துகொண்டு வெம்மையில் வெந்துகொண்டிருந்தனர். வியாபார ஸ்தலங்களில் குளிர்சாதன வசதியை இயக்கினால் அறுபது நாட்களுக்கு கடை சீல் வைக்கப்படுமாம். அநேகர் விதியை பின்பற்றுகின்றனர். அதேசமயம் அலுவலகங்களில் விதி காற்றில் பறக்கிறது. 

சென்ற வேலை தாமதமாகியதால் நண்பரின் அலுவலகம் ஒன்றில் தஞ்சம் புகுந்தேன். நண்பர் அசைவப் பிரியர். இருவருமாகச் சேர்ந்து மதியச் சாப்பாட்டிற்காக மட்டன் பிரியாணி வழங்கும் கடையைத் தேட ஆரம்பித்தோம். எக்கடையிலும் அமர்ந்துண்ண அனுமதிக்காதபடியால் கடைசியில் தலப்பாக்கட்டியில் தஞ்சமடைந்தோம். அங்கேயும் பொட்டலம் மட்டுமே . பசி உந்தித்தள்ள பொட்டலத்தை வாங்கி எதிரில் ட்ராவல்ஸ் வண்டிகள் நிறுத்துமிடத்தில் கிடந்த வேப்பமரக்கல்லில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தோம். இரண்டு மட்டன் பிரியாணி , ஒரு பள்ளிப்பாளையம் செமி கிரேவி. பிரியாணி அளவான காரத்தில் நல்ல சுவை. தயிர் பச்சடி அபார சுவையோடு இருந்தது. தண்ணீர்ப் போத்தலோடு சேர்த்து  800ம் சில்லறையுமானது விலை. தலைப்பாகட்டியில் சேர்ந்தாற்போல நான்கு நாட்கள் சாப்பிடவேண்டுமானால் சாமான்யன் தன் தலையை செட்டியார் கடையிலோ ,சேட்டு கடையிலோ அடமானம்தான் வைக்கவேண்டும். நாளது தேதிக்கு ஹிருதயம் சிறுநீரகம் அளவிற்குக்கூடப் பெறாது நம் தலை. ஆனால் அதில்தான் அதிகமான எடையைச் சுமக்கிறோம். போகட்டும். இருக்கப்பட்டவன் அள்ளித்தினிக்கிறான். 

திரும்ப வரும் வழியில் , வளர்மதி பாலத்திலிருந்து ஸ்ரீ சக்தி தியேட்டர் போகும் வழியில் நடராஜர் செட்டியார் நகைக்கடை வாசலில் நிறுத்தினார் நண்பர்.  பர்பிக்யூ ஸ்டைலில் ஒரு மோட்டார் கடை. ARC பியூர் என்று நினைக்கிறேன். சிக்கனை விதம் விதமாக வதம் செய்துகொண்டிருந்தனர் இருவர். நண்பர் வாடிக்கையாளராம். அபாரமான சுவையோடு இருக்கும் ஆளுக்கொரு பள்ளிப்பாளையம் ரோல் சாப்பிடுவோம் என்றார். ஏற்கனவே உள்ளே தள்ளியிருந்த பாதிப் பிரியாணியே ஏகப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்பொழுது மேற்கொண்டு ஒரு சிக்கன் ரோலைத் திணித்தால் வீட்டிற்கு உருண்டுதான் போகப்போகிறோம் என்ற பயமிருந்தாலும் நண்பரின் மனம் கோணக்கூடாது என்பதற்காக சரியென்றேன். மைதா மாவை சப்பாத்தி பதத்தில் உருட்டித் தேய்த்து அதில் நறுக்கிய தேங்காய்ச்சில் , மசாலாவுடன் நன்கு வேகவைத்த போன்லெஸ் சிக்கனை இன்னபிற இனம்காணவியலாத சில அயிட்டங்களோடு ஸ்டஃப் செய்து சுருட்டி ஒரு பட்டர் பேப்பரில் வைத்து அதையும் சுருட்டி கையில் திணிக்கிறார்கள். அதைக் கைப்பற்றுவதென்பது தொடரோட்டத்தில் கட்டையை கைமாற்றும் வைபவம் போல் ரஸமான சம்பவமாக உள்ளது. பட்டர் பேப்பரை தின்றுவிடமல் அதே சமயம் கீழேயும் சிந்திவிடாமல் லாவகமாக சாப்பிட வேண்டும். நான் இரண்டு அங்குல நீளத்தை உள்ளே தள்ளுவதற்க்குள் நண்பர் ஜாலவித்தைக்காரரைப்போல சடுதியில் சாப்பிட்டு கையைத்துடைத்துவிட்டார். அடிக்ட் ஆகக்கூடிய அளவிற்கான அபாரமான சுவையென்று சொல்லமுடியாது ஆனாலும் தகும். அடுத்த முறை வேறொரு அயிட்டத்தை சுவைத்துப்பார்க்கவேண்டும். இரண்டு பள்ளிப்பாளையம் சிக்கன் ரோல் 200 ரூபாயாகிறது. 

★★★★★★

துல்லியமான கணக்கில்லையெனினும் இதுவரை உத்தேசமாக 30+ மலையாளப் படங்களை பார்த்திருப்பேன். சமீபத்தில் பார்த்த நான்கு படங்களைத் தவிர மற்றவையெல்லாம் சப் டைட்டில் தயவுடன் பார்த்தவை. இப்போது சப் டைட்டில் உதவியின்றியே ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடிகின்றது. சரியாக பிடிபடாத வசனங்களை மட்டும் ரீவைண்ட் செய்து கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது புரிந்துவிடுகின்றது. கவனித்தீர்களா பார்வை பல விசயங்களை மழுங்கடித்து விடுகிறது. சில இடங்களில் / விஷயங்களில் கண்களை மூடிக்கொண்டிருப்பது சாலச்சிறந்தது. மலையாளத்தில் ராவு என்றால் காலையில் என்றர்த்தம் ஆகிறதுபோல. நான் இரவென்று நினைத்துக்கொண்டு இதுகாறும் பார்த்துவந்தேன். நேற்றுதான் நண்பரொருவர் சொன்னார். இதுபோன்ற சில அனர்த்தங்கள் ஆகின்றபோதும் மலையாளப் படங்கள் எனக்கு பிடித்தமானவையாகவே இருக்கிறது. இன்னுமொரு 30+ படங்களை சப் டைட்டில் உதவியின்றி பார்த்துவிட்டால் , பேச்சு மலையாளத்தில் பாண்டித்தியம் பெற்றுவிடுவேனென்று எண்ணுகிறேன். ஒருவருக்கு எத்துனை மொழி தெரியுமோ அவர் அத்தனை மனிதருக்குச் சமானம் என்று சும்மாவாக சொன்னார்கள். 

கடந்த இரு வாரங்களில் ஒன்னரை கன்னடப் படங்களையும் , இரண்டரை தெலுங்குப் படங்களையும் காண நேர்ந்தது.  தெலுங்கில் நானி, வி.தே நீங்கலாக ஏனைய ஹீரோக்கள் அனைவருமே ஆக்சுமாரான தோற்றம் கொண்டவர்களாவே இருக்கிறார்கள். ரவி சரண் தேஜா என்றொருவர் மணிபர்ஸை அன் ஷிப் பண்ணியது போல சிரிக்கிறார். ப்பே.! கன்னடம் இதைக்காட்டிலும் மோசம். சமீபத்தில் மகீரா என்றொரு படம் பார்த்தேன். இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் வகைமையில், சேர்க்கலாம். ஓரளவு நல்ல கதை மற்றும் இயக்கம் தான் ஆனாலும் நடிகர்களின் சோபையான நடிப்பில் சுமாராக வெளிப்பட்டிருக்கிறது. 5 ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 5 லட்ச ரூபாய்க்கு நடிக்கிறண்டா என்பதினைப்போல இசை. ரொம்ப ரிச் ஆக இருக்கின்றது . பிரதான வில்லன் , கடைகளுக்கு சாம்பிராணி புகை போடுபவரைப்போல உள்ளார். வில்லனின் அடியாள் ரோபோ சங்கரின் ஒன்றுவிட்ட தம்பி போலுள்ளார். துப்பறிவதில் கில்லாடி என்றழைக்கப்படும் ஆசாமி , பபூன் போல உள்ளார். உருவக் கேலி இல்லை , கொஞ்சமாவது நம்பும்படியாக இருக்கவேண்டுமல்லவா. குறைந்தபட்சம் நடிப்பிலாவது. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பேமிலி மென் என்றொரு சீரிஸ் பார்த்தேன் அமேசான் பிரைமில். அதில் பிராதான வேடமேற்றிருப்பவர் டொக்காகத்தான் தோற்றமளிப்பார். சாயலுக்கு லோ பட்ஜெட் சந்திரபாபுவைப் போன்று. ஆரம்பத்தில் நகைப்பாக தோன்றுபவர் சீரிஸ் முடியும்போது த்தா இந்தாள விட்டா வேற எவனாலும் இப்டி பண்ணிருக்கமுடியதுடா என்று வியப்பில் ஆழ்த்தியிருப்பார்.  ஆனால் நம் கன்னட மதீரா நடிகர்கள் யாரையும் காணச் சகிக்கவில்லை. ஒருவரிடம் கூட கொஞ்சம் கூட மிடுக்கில்லை. பெங்களூரு அழகான நகரம், டெக்னாலஜி ஹப் என்கிறார்கள் சினிமா மட்டும் விதிவிலக்கு போல. ஒப்பீட்டளவில் தெலுங்கு ரொம்ப ஆர்டிபிஷியலாகவும் ; மலையாளம் அதீத இயல்புத்தன்மையோடும் உள்ளதாகப்படுகிறது. தமிழ் சினிமா அந்தளவில் பேலன்ஸ்டாக இருப்பதாகவே தெரிகிறது. கன்னடம் ஆட்டத்திலேயே சேர்த்தியில்லை. விதிவிலக்காக ஒன்றிரண்டு நல்ல படங்கள் தேறலாம். ஆகையினால் மீண்டும் கடவுளின் தேசத்திலே கரையொதுங்கலாம் என்றிருக்கிறேன்.

★★★★★★

கடந்த இரண்டு வாரங்களும் கரோனவை பின்னுக்குத்தள்ளி பேசுபொருளாக இருந்தது மதுப்பிரியர்களும் டாஸ்மார்க்கும்தான். இதையொட்டி சொல்வதற்கு மூன்று விஷயங்கள் இருக்கிறது .

கரோனா காலங்களில் கைக்கொண்ட(கால்!?) ஒரே நற்பழக்கம் நடைப்பயிற்சி. பெரும்பாலும் நடைப்பயிற்சிக்கு துணை சேர்ப்பதில்லை. நடப்பதற்கே மூச்சு வாங்குகிறது இதிலெங்கே பேசுவது . அதுவும் அநேகர் தாமரை மணாளன்களாகவே அமைகிறார்கள். அதனால் ஆல்வேஸ் தனியன் தான். சமயங்களில் நடை முடிந்து ஓய்ந்து உட்காரும்போது அக்கம்பக்கம் பிளாட் அண்ணன்ங்களுடன் பேச நேரிடும். பெரும்பாலும் சம்பாஷனைகளில் கலந்துகொள்வதில்லை, கவனிப்பதைபோன்ற பாவனையோடு நிறுத்திக்கொள்வேன். அப்படியான சம்பாஷணை ஒன்று மதுவை முன்னிட்டு போன வாரம். நீ தண்ணியடிப்பியா தம்பி என்ற கேள்வியை என்னை நோக்கி எழுப்பினார் அண்ணன் ஒருவர், பாவனை எடுபடவில்லை. இல்லையென்றேன் . இப்பொழுதா எப்பொழுதுமா என்றார் . எப்பொழுதுமே என்றேன். என்னப்பா பொண்டாட்டியோட மட்டுமே இருக்குற எனக்கே பிரஷர் ஏறிடுது , கட்டிங் போட்டாதான் நிம்மதியா தூங்கி எழ முடியுது,  நீயோ மாமியார், மருமகள் , மகள்னு தெறி'ப்பிக்கான காம்பினேஷன்ல இருக்க , ஆனா தண்ணியடிக்குறதில்லைன்னு சொல்ற. பார்த்துப்பா பிரஷர் அதிகமாயி ஸ்டரோக்ல கொண்டுபோயி விட்டுடப் போவுதுன்னு பீதியைக் கிளப்பிவிட்டு கிளம்பிவிட்டார். முன்பெல்லாம் தண்ணியடித்தால் தான் வியாதிகள் அண்டும் என்று பயமுறுத்துவார்கள் இப்போது தண்ணியடிக்கவில்லை என்றால் வியாதி வருமென்று பயமுறுத்துகிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது நிசம் தானா!?

சமீபத்தில் அரசனின் அரண் சிறுகதை வாசித்தேன். வட்டார மொழி நடையில் கதைகள் எழுதுவதில் அரசன் முடிசூடா அரசன். முதல் புத்தகமான இண்டமுள்ளுவை கிண்டிலில் டவுன்லோடி வைத்திருந்தேன். ஒற்றைத்தலைவலி உக்கிரமாக ஆரம்பித்திருப்பதினால் , மொபைலில் படம் பார்ப்பது , மொபைல் கிண்டில் வாசிப்பதையெல்லாம் முற்றாக நிறுத்தியாயிற்று. அச்சுப் பதிப்பு வாங்கவேண்டும். அரண் சிறுகதை யாவரும் இணையதளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. வட்டார மொழி நடையெனினும் வாசிப்பதற்க்கு சுளுவாகவே இருக்கிறது. மதுவின்பால் அடிமைப்பட்டு தனது தொழில் மற்றும் இல்லறக் கடமைகளிலிருந்து தடம்புரளும் சவரத் தொழிலாளி ஒருவரை ஊர்ப் பெரியவர் ஒருவர் நட்புடன் நலவழிப்படுத்துவதுதான் கதை. இருவருக்குமான நட்பு வழியே மது , தீண்டாமை , சாதீய வேறுபாடுகள் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். வரிக்கு வரி கதை காட்சிகளாக விரிகிறது. அவ்வசியம் வாசிக்கவேண்டிய சிறுகதை.


சத்யம் பறஞ்சா விசுவாசிக்குமோ என்றொரு மலையாளப் படத்தினைப் பார்த்தேன். பிஜு மேனன் பிரதான வேடம். அய்யப்பனும் கோஷியும் பாத்திரத்திற்கு நேரெதிரான பொறுப்பற்ற குடும்பத்தலைவன். பிஜு அண்ட் கோ கட்டிட வேலைகளுக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள். அனைவரும் அதீத மதுப்பிரியர்கள். கட்டிட வேலைக்குச் சென்றயிடத்தில் , கட்டட ஓனரின் மகளை காதலித்து கட்டி முடிக்கப்படாத கட்டிடமொன்றில் குடியும் குடித்தனமுமாக இருக்கிறார். காலப்போக்கில் குடித்தனத்தின் வெளிப்பாடாக மகளொருவர். ஆனபோதிலும் குடியை விட்டாரில்லை. வீட்டை எதிர்த்து காதலித்து கட்டிக்கொண்ட கணவனால் அவமானமும் , வறுமையும் எதிர்கொள்கிறது குடும்பம். மறுநாள் மகளின் பிறந்தநாள் , லேட் நைட் குடிபோதையில் பிஜு வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார் , வழியில் மதுப் போத்தல்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று விபத்துக்குள்ளாகியிருக்கிறது. குடிகார புத்தி குறுக்கு வழிப்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்த சம்பவங்கள்தான் படம். கேரளாவின் ஏதோ ஒரு கிராமத்தில் நான்கைந்து நாட்கள் கேமராவை வைத்துவிட்டு பின் எடிட்டிங் செய்தது போல அவ்வளவு இயல்பாக உள்ளது படம். படத்தின் சுவாரஸ்யக் குறைச்சல் அதிகம். அதனாலேயே என்னவோ டாகுமெண்ட்ரி பீல் வந்துவிடுகிறது. அதீதக் குடியால் குடும்பம் , குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளை மிகைப்படுத்தல் இல்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு




May 16, 2020

பேசாத வார்த்தைகள் ~ 160520



பேசாத வார்த்தைகள் ~ 160520


2011ல் டூவீலர் வாங்கியபோது அப்போதைய மேனேஜர் என்ன நம்பர் வாங்கப்போகிறாய் என்று கேட்டார். உள்ளபடியே அப்படியான பிரத்யேகமான எண் தான் வேண்டுமென்கிற விருப்பமோ, திட்டமோ ஏதுமில்லை எனக்கு . குறிப்பாக இந்த எண் வேண்டுமென்று எதுவும் கேட்கவில்லை , அவர்கள் தருவது எதுவாகியினும் சம்மதம்தான் என்றேன். 6564 என்று கிடைத்திருந்தது. பரவாயில்லை இறங்குமுகமாக இருந்தாலும் கூட்டுத்தொகை 3ல் முடிகிறது , ராசியான வண்டியாக அமையுமென்றார் அதே மேனேஜர் பிறிதொரு நாளில். அடுத்த நாளே பூமித்தாயை முத்தமிட்டுத்திரும்பினேன். ராசின்னு சொன்னீர்களேன்னு கேட்டதற்கு , ஆமாம்யா அதான் பெரிய அடியெல்லாம் எதுவுமில்லாம சில்லறை அடிகளோடு தப்பியிருக்கிறாய் என்றார். சரிதான். மிகச்சரியாக அன்றிலிருந்து எனக்கும் தொற்றிக்கொண்டது இந்த கூட்டுத்தொகை போஃபியா. எதிர்ப்படும் வாகன எண் , வீட்டு எண் , மொபைல் எண் என்று கண்ணில்படும் எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு கூட்டிப்பழக ஆரம்பித்துவிட்டேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையில் அபார்ட்மென்டில் வீடு தேடும்போது , வாடகைக்கு மற்றும் விற்பனைக்கு வந்த அனேக வீடுகளில் சுவாரஸ்யமான ஓர் ஒற்றுமை இருப்பதைக் கண்டேன்.
அனைத்து பிளாட்டுகளின் கூட்டு எண்ணும் 8 ல் முடிவதாக இருந்ததது. அட என்று மேலதிக தகவல்களுக்காக மேலோட்டமாக கூகிளை பீராய்ந்தால் , இந்தியர்களுக்கு 8 நம்பர் அலர்ஜியாம். ராசியற்ற எண் என்று திடமாக நம்புகிறார்கள். இப்டியிருக்கையில் பில்டர்கள் ஏன் 8ல் முடியுமாறு வீட்டு எண்களை வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. 16 ஆம் எண் வீட்டிற்குப் பிறகு 16 ஏ என்று வைக்கலாம் இல்லையா. அதிலெதுவும் சட்ட சிக்கல் இருக்கின்றதா என்று தெரியவில்லை. போகட்டும். இதுதொடர்பாக மருத்துவமனையில் வேலைபார்க்கும் நண்பரொருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது , அட நீங்க வேற எங்க ஆஸ்ப்பிட்டல்லே நிறையப் பேஷண்ட் எட்டாம் நம்பர் ரூமையே வேண்டாம் என்கிறார்கள். இதற்காக ஆப்ரேஷனைக்கூட தள்ளி வைத்த பேஷண்ட்களை எல்லாம் பார்த்திருக்கிறேன் என்று பகீர் செய்தியை சொன்னார். வாகனம் , வண்டி , வீடு எல்லாம் கூட்டுத்தொகை பார்த்து 8ஐ தவிர்த்துவிடலாம் , ஆனால் எனைப்போன்று எட்டாம் தேதி பிறந்தவர்கள் எங்கே போய் முட்டிக்கொள்வதாம்!?

★★★★★

பிறந்த தேதி என்றதும் நினைவுக்கு வருகிறது. அடியேன் இன்றுடன் அகவை முப்பதியெட்டை பூர்த்தி செய்கிறேன். பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் அதிகபட்சம் பள்ளிக்கூடத்தோடு நிறைவுக்கு வந்துவிடுகிறது என்றெண்ணுகிறேன்.  வறிய குடும்பச் சூழலில் பிறந்த எனக்கு பிறந்தநாட்கள் அரிசிப்பாயாசமும், ஆரஞ்சு மிட்டாய்களாகவும் கடந்து போனது. அதிர்ட்டம் இருந்த வருடங்களில் அரைக்கால் சட்டையோ, டிரவுசரோ கூடுதலாக கொண்டாடக் கிடைத்திருக்கிறது. வேலைக்கு சேர்ந்த பிறகு , பிறந்தநாட்கள் என்பவை வண்ணதாசன் அவர்கள் சொல்வதைப்போல வாசல் முன் தேங்கியிருக்கும் நீர்த்திட்டை தாண்டி வருவது போலத்தான். இந்த வருடம் எனக்கு நினைவில் கொள்ள ஒரு சிறப்புண்டு. குடும்ப பொருளாதார சூழல் காரணமாக 19 வயத்திற்குள்ளாகவே படிப்பை நிறுத்திக்கொண்டு  வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டேன். அப்படிப் பார்த்தால் இதுவரையிலான 38 ஆண்டுகளில் சரிபாதி ஆண்டுகள் பொருளீட்டுவதற்காக செலவிட்டிருக்கிறேன். பெரிய சொத்து எதுவும் சேர்க்கவில்லையெனினும் வறுமைக்கோட்டிற்கு வெகு ஆழத்தில் இருந்த குடும்பத்தை இந்த 19 வருடங்களில் நடுத்தர வர்க்கத்துக்கு கொண்டு வந்து சேர்ப்பித்திருக்கிறேன். மின்சார இணைப்பிலிருந்து , வீடு மராமத்து செய்தது வரை ஒரு சராசரி குடும்பம் என்ற வடிவிற்கு கொண்டுவரவே இத்தனை வருடங்கள் ஆகியிருக்கிறது. ஒரு குடும்பத்தின் தலைவன் பொருளீட்டுவதில் பிசகினால் அதற்கு ஈடாக அடுத்த தலைமுறை இழப்பது அதிகம். லஞ்சம், கமிஷன் , அன்பளிப்பு என்ற அற்ப சந்தோஷங்களுக்கு விலைபோகாமல் ; அதேசமயம் அண்ணாச்சி அதிகமாக கொடுத்த ஐந்து ரூபாய் சில்லறையை திருப்பிக் கொடுக்கலாமா வேண்டாமா என்று மறுகித்தவிக்கும் சராசரி சம்சாரியாக வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில் பெரிதாக மகிழ்ச்சியுமில்லை ; கவலையுமில்லை.

★★★★★

இத்தனை வருட உத்தியோக அனுபவத்தில் முதன்முறையாக தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் வேலைக்குச் செல்லாமல் ; வருமானமுமில்லாமல் வீட்டிலிருந்திருக்கிறேன். ஒரு நிறுவனத்திலிருந்து மற்றோரு நிறுவனத்திற்கு மாறியபோது கூட  ஓய்வெடுத்துக்கொண்டதில்லை. முதல் நாள் மாலை விடைபெற்று மறுநாள் காலை புதிய நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறேன். வெளிநாடுகளிலெல்லாம் சில நிறுவனங்களில் கட்டாயமாக ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுப்பார்களாம். ஊழியரின் தனிப்பட்ட விஷயங்களுக்காகவும் ; ஒரு வேலை குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்ற நிலையை மாற்றவும் அப்படி வழங்குவதாக படித்திருக்கிறேன். நீ இல்லாவிட்டாலும் கம்பெனி நடக்கிறது பார் என்ற மறைமுக செய்தியும் அதிலுண்டு. இதையெல்லாம் இந்தியாவில் எதிர்பார்க்கமுடியாது. என்னால் தான் நிறுவனமே இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற தொழிலாளர்களும் ; காசை விட்டெறிந்தால் ஆயிரம் பேர் என்ற எண்ணம் கொண்ட 
முதலாளிகளும் மலிந்திருக்கிறார்கள் இங்கே. விசுவாசம் , மனிதாபிமானமெல்லாம் பணத்திற்குபிறகே. வேலைக்குப்போகும் எல்லோருக்கும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சலிப்படைந்து , ஒரு ரெண்டு மூணு மாசம் இந்த டைமிங், அட்டண்டன்ஸ், டார்கெட் இல்லாமல் நிம்மதியாக வீட்டிலிருந்து , நினைக்கும் போது தூங்கி, சாப்பிட்டு , படம் பார்த்து என்ஜாய் பண்ணனும்ன்ற எண்ணம் இருந்திருக்கும். இனி அப்படியொரு எண்ணமே இருக்காது. அப்படியெல்லாம் இருப்பது என்ஜாய் அல்ல பனிஷ்மண்ட் என்றறிந்திருப்பார்கள். வொர்க் ஃபிரம் ஹோம் கூட வரமல்ல ; சாபம் என்று சொல்கிறார்கள். ஒருவழியாக இவ்வளவையும் கடந்து வேலைக்குப் போகலாம் என்று சந்தோஷத்தோடு கிளம்பினால்,   நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஆட்குறைப்பு, சம்பள வெட்டு , சலுகைகள் ரத்து என்று அடுத்தடுத்து அம்புகளை ஏவ சித்தமாய் இருக்கிறார்கள். கமிட்மெண்ட்கள் கண்முன்னால் வந்து பயம் காட்டுகின்றன. இனிவரும் நாட்கள் அனேகருக்கு மிகப்பெரிய உளவியல் சிக்கல்களை கொண்டுவருவது நிச்சயம். இயன்றவரை செலவுகளை சிக்கனப்படுத்திப் பழக வேண்டும். நான் வேலை பார்க்கும் ஆயத்த ஆடை துறை மீண்டு வர ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்கிறார்கள். கொஞ்சம் கலவரமாகத்தான் இருக்கிறது. நல்லதே நடக்கட்டும். இப்பொழுது நீண்ட இடைவேளைக்குப் பிறகு வேலைக்குச் செல்லவிருப்பது, படித்து முடித்து புதிதாக வேலைக்குப் போவதைப்போல உணர்கிறேன். பொதுவாக படுத்துக்கொண்டு போகுமளவிற்கு இருக்கைகள் காலியாய் இருப்பினும் தனியார் பேருந்துகளில் ஏறவே மாட்டேன்
அதை ஒரு கொள்கையாகவே கடைபிடிக்கின்றேன். அரசுபேருந்துகள் நாளையிலிருந்து கூடுதல் கட்டணத்தோடு இயங்குமென்று சொல்கிறார்கள். நல்லநாளிலே நம் அரசுப் பேருந்துகள் தேவிஸ்ரீ பிரசாத் போல சத்தம் கொடுக்கும். இரண்டுமாதம் கழித்து இயக்கத்திற்கு வருகிறது , தனித்தவில் போல முன்னத்தி  சக்கரம் மட்டும் கழண்டு ஓடாமல் இருக்கவேண்டும். போலவே ஓட்டுனர்களும் எங்கேடா இங்க இருந்த பிரேக் என்று தேடாமல் இருக்கவேண்டும். மருதமலை முருகா காத்தருள்வாயாகா!


★★★★★


அலுவலகம் செல்வதற்காக தோராயமாக தினமும் நான்கு மணி நேரம் பேருந்துப் பிரயாணம் செய்பவன் நான். அமர்ந்து செல்லும் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் சாரு , எஸ்.ரா , கேபிள் சங்கர் போன்றவர்களின் இணையதளத்தில் வாசிக்கும் வழக்கமுண்டு.  முதலிருவரும் வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு மூன்று இடுகைகளாவது எழுதியிருப்பார்கள். ஜெ. மோ தளத்தில் நாளொன்றுக்கே நான்கு இடுகைகள் வருகிறது. ஆனால் அவரது எழுத்துகள் ஆங்கில இந்து வாசிப்பதைப்போல இருப்பதினால் தவிர்த்துவிடுவேன்.  கேபிள் சங்கர் அவர்களின் எழுத்துகளை வாசிப்பதென்பது நீண்ட வேலை நாளின் நிறைவில் அருந்தும் தேநீர் போன்றதொரு refreshing. முன்பெல்லாம் வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒன்றிரண்டு தனது தளத்தில் எழுத்திக்கொண்டிருந்தார். இப்பொழுது மாசத்திற்கு ஒன்று என்று அருகி சமயங்களில் எதுவுமில்லை என்று ஆகிவிட்டது.

கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகமும் செல்லவில்லை , மேற்படி மூவரின் தளத்திற்கும் போகவில்லை. இரண்டு ஜி சுத்தோ சுத்து என்று சுத்துவதும் ஒரு காரணம். கரோனா நாட்களில் மற்றவர்களைப்போல கேபிளும் நிறைய குறுங்கதைகள் எழுதியிருக்கிறார். லாக்டவுன் சிறுகதைகள் என்ற லேபிளின் கீழே நிறைவாக எழுதியிருக்கும் 2040 என்ற விபரீத கற்பனைக் கதையை வாசித்தேன். வழக்கம்போல ரெஃப்ரேஷிங் ரீடிங் எக்ஸ்பீரியன்ஸ். கரோனா தொற்று தொடங்கிய அடுத்த 20வது ஆண்டில் நிகழ்வதான கதை. மனைவியை நெருங்குவதே மனித வெடிகுண்டை நெருங்குவதைப்போன்ற சூழல். இளம் தம்பதியொன்றை ஆர்கானிக்காக குழைந்தை பெற்றுக்கொள்ளத் தூண்டும் மருத்துவரின் ஆராய்ச்சியை சுருக்கமாக சொல்லியிருக்கிறார் மேற்படி கதையில். எதிர்காலத்தில் தொடுதல் என்றொரு உணர்வே இல்லாமல் போய்விடுமோ என்றுகூட தோன்றுகிறது. 2040 ல் நடைபெறுவதாக செல்லும் கதையின் ஒரு பத்தியில் , பாரதப் பிரதமர் தொலைகாட்சியில் தோன்றி டாஸ்க் கொடுப்பதாகவும், வங்கி கணக்கில் 15கோடி ரூபாய் வரவு வைக்கப்படும் என்று உறுதிமொழி கொடுப்பதாகவும் வருகிறது. ஆக 2040 லும் ஜி தான் என்று சொல்கிறார். விபரீத கற்பனை என்று சொன்னேனில்லையா அது இதுதான். மற்றபடி மதுக்கடை கூட்டத்தையும் ; மத்துவந்தியின் பேச்சையும் கேட்கும்போது இந்த கதை நிஜமாகும் சாத்தியம் பிரகாசமாக இருப்பதாகவே தோன்றுகிறது.


என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.



Jan 6, 2020

பேசாத வார்த்தைகள் #060120


பேசாத வார்த்தைகள் #060120





புஸ்தகம் ~ ரூஹ்

வெகுநாட்களாக லக்ஷ்மி சரவணகுமாரையும் சரவணன் சந்திரனையும் போட்டு குழப்பிக்கொண்டிருந்திருக்கிறேன்.  இருவரும் வெவ்வேறு எழுத்தாளர்கள் என்பதை சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன்.

அமேசான் பென் டூ பப்ளிஷ் போட்டிக்காக லக்ஷ்மி சரவணக்குமார் எழுதிய ரூஹ் வாசித்தேன். ஒரு நல்ல படைப்பு அதைப்பற்றிய மேலதிக தகவல்களை அறியத்தூண்டும். ரூஹ் என்றால் என்னவென்று இஸ்லாமிய நண்பர் ஒருவரிடம் கேட்டேன் ; உயிர் என்றார். 

கிறித்துவ தேவாலயங்களில் ஆற்றுப்படுத்துதல் மையம் என்றொரு அறை உண்டு. வேளாங்கண்ணியில் நான் பார்த்திருக்கிறேன். மன உளைச்சலில் அல்லல் படுபவர்கள் , வாழ்க்கையை வெறுத்து விரக்தியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர்கள் இவர்களுக்கான கவுன்சிலிங் கொடுப்பார்கள்.
எழுத்தாளர் அதுபோன்றதொரு மன உளைச்சலுக்கு ஆளாகி , தற்கொலை எண்ணம் மேலோங்கிய ஒரு காலத்தில் தனக்கான அமைதியை கடப்பா தர்ஹாவில் கண்டறிந்திருக்கிறார். கிட்டத்தட்ட ரூஹ் புஸ்தகம் ஓர் ஆற்றுப்படுத்தும் வேலையைத் தான் செய்கிறதென்பேன்.

"தேடிக் கண்டடைந்த யாவும் பின்னொரு நாள் துறப்பதற்கே" என்ற தத்துவார்த்தமான மேற்கோளுடன் ஆரம்பிக்கிறது நாவல். மிக அபாராமான அட்டைப்படம். இளையராஜா இசை போல வெகுவாக டிஸ்டர்ப் செய்கின்றது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாக அட்டைப்படத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்திருப்பேன். வடிவமைத்தவருக்கு அன்பும் நன்றியும். புதுவீட்டில் இந்த புஸ்தகத்தின் அட்டைப்படத்தை சட்டகம் செய்து மாட்டவேண்டும் என்று நினைத்திருக்கின்றேன்.

நிபந்தனையற்ற அன்பைப் பேசும் நாவல் ரூஹ் . அரிதாக எடுத்தாளப்படும் இஸ்லாமிய பின்புலத்தில் நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. புதிய அனுபவம். அலைக்கழிக்கும் எண்ணங்களுடனும் போராடும் ஜோதி , அன்பை விதைக்கவே பிறப்பெடுத்திருக்கும் ராபியா , கடமையைக் கண்ணாக பாவிக்கும் மாலுமி அஹமத் இவர்கள் மூவரும்தான் நாவலின் பிரதானம்.

அயற்சியை ஏற்படுத்தும் நீண்ட வாக்கியம் , தமிழ் வார்த்தைக்கே அகராதியை தேடத்தூண்டும் வார்த்தைப் பிரயோகம் ஏதுமின்றி இயல்பான தமிழில் செழுமையான நடை .வழக்கம் போல எழுத்துப்பிழைகளையும் , மனதிற்கு நெருக்கமான முக்கிய வரிகளையும் அடிகோடிட்டுக்கொண்டே வந்தேன். இரண்டு மூன்று அத்தியாங்களிலேயே அது ஓர் அபத்தம் என்பதை  உணர்ந்தேன். மிக மிகக்குறைவான எழுத்துப்பிழைகள். பக்கத்திற்கு பக்கம் மனத்திற்கு நெருக்கமான வரிகள். அடிக்கோடிட வேண்டுமென்றால் சரி பாதி புஸ்தகத்தை அடிகோடிடவேண்டும். நிறுத்திக்கொண்டேன்.

நாவல் நடைபெறும் காலம் திட்டமாக வரையறுக்கப்படவில்லை. அஹமத் வரும் அத்தியாயங்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பான மனவோட்டத்தையும் , ஜோதியின் தங்கை, நைஜீரியனுடன் , திருப்பூர் வரும் அத்தியாயங்கள் சமகால மனவோட்டத்தையும் தன்னியல்பாக ஏற்படுத்துகின்றது.

நாவலில் இருந்து சில மேற்கோள்கள்.

//

"சொந்த ஊர்க்காரர்களிடம் மரியாதையை சம்பாதிக்க ஒரு மனிதன் வேறு ஊர்களுக்குப் பஞ்சம் பிழைக்க போகவேண்டியிருப்பதை துரதிர்ஷ்டமென்றுதான் சொல்லவேண்டும்."

"நேசத்திற்குரியவர்களிடம் சந்தோசத்தைப் பகிர்ந்து கொள்வதைப் போல் துக்கத்தையும் தோல்விகளையும் இயல்பாய் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை."

"சக மனிதனை ஏமாற்றாமல் வாழ்வதும் சக மனிதனிடம் ஏமாறாமல் வாழ்வதும் எளிதான காரியமில்லை".

"மனிதன் தன்னைத் தானே மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ளத் துவங்கும்போதுதான் பிறருக்குத் தீங்கு இழைப்பது குறித்து எண்ணாதவனாகவும் தானென்ற அகங்காரம் நீங்கியவனாகவும் இருக்கிறான்"

"விருப்பமானவர்களை வெறுத்து ஒதுக்கும் கணங்களைப் போல் துயரமானது வேறில்லை."

//


ஐந்து முதல் ஆறு மணி நேரத்தைக் கோரும் வாசிப்பு . தகும். நிச்சயமாக அச்சில் வரும் ; வரவேண்டும். ஒரு ஃபீல் குட் திரைப்படம் பார்த்த ; நான்கைந்து மணி நேரம் சூஃபி பாடல்களைக் கேட்ட உணர்வு புஸ்தகத்தை வாசித்த பின் ஏற்பட்டது. நண்பர்களுக்கு புஸ்தகத்தை சிபாரிசிக்கிறேன். நிச்சயம் உங்களுக்கு நிறைவான அனுபவத்தை தரும்.


@@@@@@@@@


படம் ~ காளிதாஸ்

இரு முறை முயற்சித்தும் லிமிடெட் காட்சி நேரத்திற்குள் செல்லமுடியாததினால் திரையரங்கம் சென்று பார்ப்பது தவறிப்போய்விட்டது. பெரும்பாலும் சிறு பட்ஜெட் படங்களை பைரசியில் பார்ப்பதை இரக்கமற்ற செயலாகத்தான் பார்க்கின்றேன். காளிதாஸை பைரசியில் பார்த்து முடித்ததும் குற்ற உணர்ச்சி அதிகமாகிவிட்டது.

கணிசமானவர்கள் சொன்னது போல இது கரு.பழனியப்பன் இயக்கிய பிரிவோம் சந்திப்போம் கதையல்ல. அது ஒரு பக்காவான பேமிலி டிராமா. ஒற்றைக் குழந்தைகளின் தனிமையை , ஏக்கத்தை , எதிர்பார்ப்பை சொல்லிய விதத்தில் பிரிவோம் சந்திப்போம் குறிப்பிடப் படவேண்டிய படம். சைக்காலிஜிக்கல் என்ற ஒற்றை விஷயத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் காளிதாசும் , பி.சமும் வேறு வேறு தளம். காளிதாஸ் ஒரு கிரிப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். இரண்டு படத்திற்கும் ஒரேயொரு ஒற்றுமையை வேண்டுமானால் சொல்லலாம். இரு இயக்குனர்களும் தேவகோட்டையைச் சேர்ந்தவர்கள்.

திருக்குறளுடன் ஆரம்பிக்கும் படத்தில் , டைட்டில் கார்டிலேயே இயக்குனர் தனது இருப்பை பறைசாற்றியிருக்கிறார். படத்தில் இடம்பெரும் முக்கியமான ஆப்ஜெட்களை கொண்டே டைட்டில் கார்ட் டிசைன் செய்திருக்கிறார்கள். செம்ம.

சென்னையின் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் அடுத்தடுத்து பெண்கள் சாகிறார்கள். எல்லா இறப்புக்கும் ஓர் ஒற்றுமை. Fall from height. கொலையா, தற்கொலையா என்று இனம் காண முடியாமல் காவல் துறை அதிகாரியான பரத் தடுமாறுகிறார். வழக்கின் தீவிரம் கருதி அசிஸ்டெண்ட் கமிஷனர் சுரேஷ் மேனேன் வரவழைக்கப்படுகிறார். அவர் வசம் வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. இருவரும் சேர்ந்து குற்றவாளியை கண்டுபிடிப்பதே காளிதாஸ்.

காளிதாஸாக பரத் . நிறைவான பங்களிப்பு. நாயகப் பாத்திரம் என்று சொல்லவே முடியாது. வாய்ப்புகள் வரத்தில்லாமல் , கிடைத்த வாய்புகளாலும் வெற்றியை நெருங்க முடியாமல் கிட்டத்தட்ட காணாமலே போய்விட்ட பரத் என்ற நடிகனை,  பக்குவமான ஒரு கலைஞனாக ஸ்ரீசெந்தில் மீட்டெடுத்திருக்கிறார். நடிப்பிலும் தோற்றத்திலும் அப்படியொரு முதிர்ச்சி & பக்குவம்.

பரத்துக்கு இணையான மூன்று பாத்திரங்கள். ஒன்று சுரேஷ் மேனன். அட்டகாசமான பெர்ஷனாலிட்டியில் அசத்துகிறார். அடுத்தது நாயகி ஆன் ஷீதல் . ஆனந்தி , ஷ்ரத்தா ஸ்ரீநாத் , ஐஸ்வர்யா ராஜேஷ் , வசுந்தரா இவர்களெல்லாம் அசரடிக்கும் அழகில்லையென்றாலும் வசீகரிக்கக்கூடியவர்கள் . இந்தப் பட்டியலில் ஆன் ஷீத்தலையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். மற்றபடி ஆதவ் கண்ணதாசன் , சிங்கம் கான்ஸ்டபிள் , பழைய ஜோக் தங்கதுரை என்று அத்துனை பேரும் படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள்.

பாரதியாரின் இரண்டு பாடல்கள் உட்பட அட்டகாசமான 5 பாடல்களையும் , சிறப்பான பின்னணி இசையையும் நல்கியிருக்கிறார் இசைஞர் விஷால் சந்திரசேகர்.
சுதா ரகுநாதன் குரலில் ஒலிக்கும் "மழை நனைய வைத்தது ஒரு நாள்" பாடல் ஆல்ரெடி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது. "ஆடவன் அன்பிலே பெண் மனம் குழையுதே" என்ற பாடல் தனித்துவமான குரலாலும், இசைக்கோர்வையாலும் , காட்சியமைப்பாலும் கவர்கிறது. திரைப்படங்களில் அதிகமாக எடுத்தாளப்பட்ட பாரதியாரின் பாடலாக "காக்கை சிறக்கினிலே" பாடலை சொல்லலாம். விவாதத்திற்கு உரிய இடங்களில் முண்டாசுக் கவிஞனின் இரண்டு பாடல்களையும் இணைத்திருக்கிறார்கள். . விஷாலுடன் இணைந்து அபய் இரண்டு பாடல்களுக்கும்  தன்னுடைய குரல்களில் உயிர் கொடுத்திருக்கிறார். சபாஷ் . ஒளிப்பதிவும் , எடிட்டிங்கும் சிறப்பு . பரத் & ஷீதல் தம்பதியின் வீட்டு உள் அலங்காரம் அபாரமான ரசனையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆர்ட் டைரக்டருக்கு ஆளுயர மாலை போடலாம்.


ஸ்ரீ செந்தில் வசனங்களில் எதார்த்தமும் பகடியும் இழையோடுகிறது. சிரிக்கவும் , சிந்திக்கவும் , ரசிக்கவும் வைக்கும் வகையில் வசனங்களை எழுதியிருக்கிறார். சீரியஸான ஒரு சேஸிங் காட்ஸியில் போகிற போக்கில் ஒரு அடல்ட் காமெடியை சொருகியிருப்பது ஓர் உதாரணம்.

கொஞ்சம் மெதுவாகவே "நடக்கும்" திரைக்கதையில் , கடைசி காட்சி வரை சஸ்பென்ஸை தக்கவைத்திருக்கிறார் ஸ்ரீ . ஒரு சிலர் கிளைமேக்ஸ் ஏமாற்றம் அளிப்பதாக எழுதியிருந்தார்கள். எனக்கு அப்படிப்படவில்லை. கொஞ்சம் ஜீரணிக்க முடியாமல் இருந்தாலும் அதிர்ச்சி பிளஸ் ஆச்சர்யம் தந்ததது. ஓபனிங் சாங், பஞ்ச் டயலாக் , ஆக்ஷன் பிளாக் இல்லாமல் ஒரு போலீஸ் கதாபாத்திரம். Refreshing . காவல்துறையினர் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுவதும் , ஏமாறுவதும் ஒரு கட்டத்தில் நமக்கே கடுப்பை கிளப்பி , நாமும் களத்தில் இறங்கிவிட்டால் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது. அந்தளவிற்கு காவல்துறை வெகு இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

படத்தின் ஒரு காட்சியைக்கூட கழிக்க முடியாது. பக்காவான சைக்காலிஜிக்கல் இன்வெஸ்டிகேஷன் திரில்லர். ஸ்ரீசெந்தில் நம்பிக்கை இயக்குனர்களில் ஒருவராகத் தனித்துத் தெரிகிறார். ஒன் டைம் ஒண்டராக ஒதுங்கிவிடாமல் அடுத்தடுத்த வெற்றிகளைக் குவிக்க வேண்டும். காளிதாஸ் படத்தினை நண்பர்களுக்கு அழுத்தமாக சிபாரிசிக்கிறேன்.


டிஸ்கி : இயக்குனர் ஸ்ரீசெந்திலை உங்களுக்கு தெரியுமென்றும் நாம் எல்லோரும் ஒன்றாக விளையாடியிருப்பதாகவும் தம்பி ஒருவன் நினைவுபடுத்தினான். இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு , ஸ்ரீசெந்தில் எங்கள் விளையாட்டு கூட்டத்தில் ஒருவனுடைய விருந்தினர் அண்ணனாக எங்கள் கிராமத்திற்கு வந்திருக்கிறார். அவரோடு பேசி விளையாடி பொழுது களித்திருக்கிறோம். எனக்கு சுத்தமாக நினைவில்லை. ஸ்ரீசெந்திலுக்கும் நிச்சயம் நினைவிருக்காது. பரஸ்பரம் ஏற்கனவே அறிமுகமாகி கால ஓட்டத்தில் நினைவகன்று போயினும் , நமக்குத் தெரிந்திருந்த ஒருவர் நல்ல விஷயம் ஒன்றிற்காக பரவலான கவனத்திற்கும் , பாராட்டிற்கும் ஆட்படும்போது இயல்பாகவே நமக்குக் கூடுதல் சந்தோஷம் கிடைத்துவிடுகிறது.


@@@@@@@@@


குடியுரிமைச் சட்டம் , உள்ளாட்சித் தேர்தல் என்று நாடும் ,  மாநிலமும் வேறொரு சிந்தனையிலிருக்க மத்திய சர்க்கார் சத்தமேயில்லாமல் நடுத்தர மக்கள் மீது மற்றுமோர் சர்ஜிக்கல் அட்டாக் செய்திருக்கிறார்கள்.

நகைகளை அடமானம் வைத்து வங்கிகளில் வாங்கும் விவசாயக்கடன் திட்டத்தை ரத்து செய்திருக்கிறார்கள். முறைகேடாக திட்டத்தை பயன்படுத்துகிறார்களாம். இதற்கு முன்பு வரை 7 சதவீத வட்டியில் ரூபாய் 3 லட்சம் வரை நகைகடன் வாங்க வழிவகை இருந்தது . வருடா வருடம் முறையாக வட்டியை திரும்ப செலுத்தும் பட்சத்தில் மூன்று சதவீத வட்டிக் கழிவு மானியமாக வழங்கப்படும் . ஆக மொத்தத்தில் 4 சதவீத அதாவது அரைவட்டிக்கும் கீழே எளிதாக கடன் கிடைத்து வந்தது. இப்பொழுது திட்டமே ஸ்வாகா. பதிலாக 9 சதவீத வட்டியில் வாங்கிக்கொள்ளலாம் என்று வங்கித்தரப்பில் சொல்கிறார்கள். இதற்கு வட்டிக்கழிவு மானியம் கிடையாது.

நான் விசாரித்த வகையில் வாடிக்கையாக செய்திகள் வாசிக்கும் , கேட்கும் பழக்கம் கொண்டவர்கள் கூட , அட பாவிங்களா ! அப்படியா !? என்று விசனப்படுகிறார்கள்.

அரசாங்கம் சொல்வது போல சிலர் முறைகேடாக வட்டிக்கு விடுவதற்கு வாங்குகிறார்கள் தான். விவசாயத்திற்கு இந்த திட்டத்தை உபயோகிக்கிறவர்கள் குறைவுதான். ஆனால் அப்படி செய்பவர்களின் சதவீதம் சொற்பம். 90 சதவீத மக்கள் தங்களது அத்தியாவசிய தேவை மற்றும் நிகழ்வுகளுக்கு இதைத்தான் பெரிதினும் பெரிது நம்பியிருந்தார்கள். கல்விகட்டணத்திற்கு , அவசர மருத்துவ செலவுக்கு , சிறு சிறு சுப நிகழ்வுகளுக்கு , வீடு வாங்குவதற்கான முன்பணம் கொடுப்பதற்க்கு என்று. ஏற்கனவே பணப்புழக்கம் இல்லாமல் பொருட்களின் நுகர்வும் , அதைத்தொடர்ந்து தேவையும் உற்பத்தியும் கணிசமாக குறைந்து  போயிருக்கிறது. இந்த திட்டம் அதை இன்னும் மோசமாக்கும் என்றே நினைக்கிறேன்.

யானை போகும் வகையிலான ஓட்டைகளை அலட்சியப்படுத்திவிட்டு , எறும்பு நுழையும் அளவிற்கான நுண் துளைகளை அடைப்பதால் , பெரிய முன்னேற்றங்களை பொருளாதாரத்தில் ஏற்படுத்திவிடமுடியும் என்று எப்படி நம்புகிறார்கள் என்றே தெரியவில்லை. கேட்டால் வெங்காயம் சாப்பிடும் பழக்கம் இல்லை என்று சொன்னதைப்போல ஏதாவது சொன்னாலும் சொல்வார்கள் நமக்கு வாய்த்த அமைச்சர் மகான்கள்.

இப்படியே பண்ணிக்கொண்டிருந்தால் ஹைக்கோர்டில் கூட மலராது.

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.




Dec 30, 2019

பேசாத வார்த்தைகள் #30122019

பேசாத வார்த்தைகள் #30122019



திரைப்படம் ~ தம்பி.

தம்பி பார்த்தேன். த்ரிஷ்யம் படத்தினை திருட்டுத்தனமாக பார்த்த குற்ற உணர்வுக்கு பாவமன்னிப்பு கோரும் விதமாக திரையரங்கம் சென்று பார்த்தேன். ஜீத்து ஜோசப் அல்லாமல் படத்திற்கு செல்ல வேறொரு காரணமும் இருந்தது , அது "நிகிலா விமல்".

தயாரிப்பு தரப்பிலிருந்து இயக்குனரை த்ரிஷ்யம் மாதிரியே ஒரு படம் எடுக்கச்சொல்லியிருப்பார்கள் போல. அதாவது பேமிலி திரில்லர். பதினைந்து வருடங்களுக்கு முன்பு வாலிபத்தில் காணாமல் போன சரவணன் , கோவாவில் ஏமாற்றி பிழைப்பதே பேரின்பம் என்று கைடாக திரிகிறார். செய்தி கேள்விப்பட்டு சரவணனை வீட்டுக்கு அழைத்துவருகிறார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு அளவிலா சந்தோஷம். அதேசமயம் உயிர் நண்பன் உட்பட வீட்டில் இருக்கும் ஒரு சிலருக்கு அவர் சரவணன் தானா என்றொரு சந்தேகம். சரவணன் ஏன் காணாமல் போனார் , திரும்பியவர் சரவணன் தானா இவற்றிற்கெல்லாம் விடையாக படம் விரிகிறது.

பேமிலி திரில்லர். திரில்லர் ஓகே. பேமிலி தான் ட்ராஜிடியாக ஆகிவிட்டது. ரெடிமேட் பேமிலி போல ஒட்டவே இல்லை. கார்த்திக்கு வழக்கம் போல திருட்டு முழி கதாபாத்திரம். நன்றாகவே முழித்திருக்கிறார். சத்யராஜ், இளவரசு ஓகே. மற்ற அனைத்து பாத்திரங்களும் அவ்வளவு செயற்கை. குறிப்பாக வில்லனாக சித்தரிக்கப்படுபவர். ஜெயம் ரவி மற்றும் ஸ்ரீமன் குரல்களை பிளென்ட் செய்து தம்பி ராமையாவின் உடல்மொழிகளை உள்ளீடு செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அவுட்புட். ஜோதிகா காலர் வைத்த சுடிதார் போட்டு விரைப்பாக குதிரை ஓட்டுகிறார்.

முதல் பாதியில் வரும் ட்விஸ்டுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. மொக்கையான காட்சிகளைப் பார்த்து ஏற்கனவே  பார்வையாளர்கள் ட்விஸ்ட் ஆனதுபோல சோர்ந்து சரிந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இரண்டாம் பாதியில் இருந்து படம் விறுவிறுப்பாகிறது. அடுத்தடுத்த ட்விஸ்டுகள் ஓகே. 

நிகிலாவை "கீ கொடுத்த பொம்மையாக" நிறுவியிருக்கிறார்கள். கண்டனங்கள் சார். இதை விடக் கொடுமை ஒரே உருப்படியான பாடலான தாலேளே மெலடியை தியேட்டர்கார் கத்தரித்துவிட்டார். மனதுக்குள்ளே மண்ணை வாரி தூற்றி விட்டு வந்தேன்.

ஆக்சுவலி ஜீத்து நல்ல பொட்டன்ஷியல் உள்ள ஆள்தான். அநேகமாக நம்ம மார்க்கண்டேயர் பேமிலி தலை, கண், காது , மூக்கு முகரை எல்லாம் உள்ளே நுழைத்திருப்பார்கள் போல. அதான் தம்பி தடுமாறிவிட்டார்.


@@@@@@@@@@

புத்தகம் ~ அருணா இன் வியன்னா. 

அமேசான் பென் டூ பப்ளிஷிற்காக எழுதப்பட்ட புத்தகம் அருணா இன் வியன்னா. மத்திம வயதில் இருக்கும் பள்ளிதோழிகள் நால்வரின் பயண "அனுபவக் கட்டுரை". இந்தப் பயணத்தில் இரு சிறப்பம்சங்கள் உண்டு. முதலாவது , கல்லூரி செல்லும் வயதில் மகன்/மகள் இருக்கின்ற பெண்களின் தனித்த வெளிநாட்டுப் பயணம். இரண்டாவது பயணப்பட்ட நாடுகள். 

வழக்கமாக செல்லும் யூ.கே , யூ எஸ் , சிங்கப்பூர் மலேசியாக்களை தவிர்த்துவிட்டு யூரோப்பியன் நாடுகள் மூன்றின் தலைநகருக்கு போய் வந்திருக்கிறார்கள். அதுவும் மோடி கூட போயிராத ஊர்களுக்கு. புத்திசாலித்தனமான தெரிவு. ஏனென்றால் மேற்படி வழமையான நாடுகளுக்கு போகும்போது கண்டிப்பாக எதிர்ப்படும் பத்தில் ஒருவர் நம்மாட்களாக இருக்க வாய்ப்புண்டு. நம்மாட்களுக்கு கை , கால் சும்மா இருந்தாலும் இருக்குமே தவிர வாய் ஒரு போதும் சும்மா இருக்காது. செம்பருத்தியில் செண்பா என்ன சேலை கட்டினாள் , தமிழ்நாட்டில் தாமயிரை மலருமா , ரிஷப் பந்துக்கு பந்து பிடிக்கவே தெரியவில்லை என்று பேசி ஏண்டா வந்தோமென்று ஆக்கிவிடுவார்கள்.

ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட், ஆஸ்த்ரியாவின் தலைநகர்  வியன்னா மற்றும் செக் ரிபப்ளிக்கின் தலைநகர் ப்ராக். பத்து நாள் ட்ரிப் தந்த அனுபவத்தை அருணாவே சொல்வது போல காஃபி டேபிள் புஸ்தகமாக வடித்திருக்கிறார். ரைமிங்காக இருக்கவேண்டுமென்று என்பதற்காக வியன்னாவை தலைப்பாக்கியிருக்கிறார் என்றெண்ணுகிறேன். மற்றபடி புடா பெஸ்ட் தான் பெஸ்ட் என்றறியமுடிகிறது.

ஒவ்வொரு பக்கத்திலும் ஓர் உதட்டோரச் சிரிப்புக்கும் ; ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஓர் உரத்த சிரிப்பிற்கும் உத்தரவாதம் உண்டு. ஏழைத்தாயின் மகரை ஒரு பர்னிச்சராகவே பயன்படுத்தியிருக்கிறார். சுயபகடி செய்திருக்கும் அநேக இடங்களில் வாசிக்கும் நமக்கு வாய்விட்டு சிரிக்கத்தோன்றுகிறது. உதாரணம் ப்ராக்கை பாவாடையால் கூட்டியது.

குறைவான எழுத்துப்பிழைகள் , கூகிளில் இருந்து STD ஐ தோண்டியெடுத்து , புத்தகத்தில் வாரி இறைத்து இம்சிக்காமல் இருந்தது , ஒருமணிநேரத்தில் வாசித்து முடிக்கும் வண்ணம் சுருக்கமாக வடிவமைத்தது இது எல்லாம் பலம். 

எழுத்துருவின் அளவை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் , அட்டகாசமான அட்டைப்படம் .  கூடுதலான பயணப்படங்களும் , உத்தேச செலவு விவரங்களும் இடம்பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்பிராயம். அச்சில் வரும்போது மேற்படி அம்சங்கள் இடம்பெறும் என்று நம்புகிறேன்.

மொத்தத்தில் பக்கா லைட் ரீடிங். வாசித்து முடித்தபோது நாமும் இப்படியொரு அறிமுகமற்றவர்களின் தேசத்தில் தேசாந்த்ரியாக சுற்றித் திரியவேண்டுமென்ற எண்ணம் மேலெழும்புகின்றது.

@@@@@@@

சாக்லேட்

தமிழ் அர்த்தம் மிட்டாய் என்றெண்ணுகிறேன். தமிழில் எனக்கு மிகப்பிடித்தமான வார்தை. குழந்தைகள் முதல் கன்னிப்பெண்கள் வரை சாக்லேட்டிற்கு மயங்காதவர்கள் இல்லை. இன்றும்கூட சாக்லேட் கொடுத்து காதல் சொல்பவர்கள் இருக்கக்கூடும். சாக்லேட் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகும், மன அழுத்தம் குறையும் , கொலஸ்ட்ரால் குறையுமென்றும் ஒரு குறிப்பு சொல்கிறது. போலவே சர்க்கரை அளவு அதிகரிக்கவும் , பல் சொத்தைக்கு அஸ்திவாரம் போடவும் , ஒற்றைத் தலைவலியை இரட்டிப்பாக்கவும் காரணமாகவும் அமைகிறதாம். நாளொன்றுக்கு 28 கிராம் சாக்லேட் அளவிற்கான சாக்லேட் துண்டு தின்பது நல்லதாம். 

முழுமையான கோகோவுடன் , கரும்புச்சாறு சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்பட்ட சாக்லேட்டிற்குத்தான் மேற்சொன்ன பயன்கள் பொருந்தும். ஆனால் துரதிர்ஷ்டமாக நாம் அதை சாப்பிடுவதில்லை. அல்லது வாங்கக்கூடிய விலையில் இல்லை. டஸ்ட் டீத்தூள் போல டஸ்ட் சாக்லெட்டைதான் சுவைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் மிகச்சிறந்த விளம்பரங்கள் என்று பட்டியலிட்டால் அதில் முதலிடத்தில் சாக்லேட் தயாரிக்கும் காட்ப்பெரிஸ் நிறுவனம்தான் இருக்கும். தொடர்ச்சியாக ரசனையுடன் விளம்பரங்கள் தயாரித்து வெளியிடுவதில் அவர்களுக்கு நிகர் யாருமில்லை. இந்திய சாக்லேட் சந்தையின் கணிசமான பங்கை அவர்கள்தான் வைத்திருக்கிறார்கள். இரண்டாமிடத்தில் இருக்கும் நெஸ்லே மூன்றில் ஒரு பங்கு மற்றவர்கள்  விரல் விட்டு எண்ணிவிடலாம். 

எங்களைப்போன்ற 80ஸ் கிட்ஸ்களுக்கு சாக்லேட் என்றால் அது எம்ஜிஆர் மிட்டாய் அல்லது ஆசை சாக்லேட் தான். இப்பொழுது அந்த இரண்டுமே வருவதில்லை என்றறிகிறேன். 90களில் ஹார்லிக்ஸ் மிட்டாய் வந்ததாக நினைவு. அப்பொழுதெல்லாம் பிரவுன் நிற சாக்லேட் பணக்காரர்களின் பண்டமாக இருந்தது. யாராவது மாமாவோ, அண்ணனோ வெளிநாடு போய் வந்தால் கண்டிப்பாக சாக்லேட் வாங்கிவருவர். யார் நீண்ட நேரம் சுவைக்கிறோம் என்று போட்டி வைத்து வாய்க்குள் குதப்பிக்கொண்டு திரிந்திருக்கிறேன். 

இந்தியாவில் தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமே சாக்கோ பீன் உற்பத்தி நடைபெறுகிறது என்றும். கேரளாவும் ஆந்திராவும் பிரதானம் என்றும் ஒரு செய்திகுறிப்பு சொல்கிறது. தமிழகத்தில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி சாக்லேட்டிற்கு பிரசித்தம். மலைப்பிரதேசத்திற்கும் சாக்லேட்டிற்கு அப்படி என்ன தொடர்ப்பென்று தெரியவில்லை. ஹோம் மேட் சாக்லேட் செய்து பார்க்கவேண்டுமென்று நெடுநாள் ஆசை ஒன்று உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறது. பார்க்கலாம்.

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.