அச்சுப் புஸ்தகம் வாங்கி ஆண்டுகள் சில ஆயிற்று. ஏற்கனவே வாங்கிய புஸ்தகங்களில் அன்பளிப்பாகக் கொடுத்ததுபோக கைவசமிருந்த ஒன்றிரண்டையும் தர்ஷினி தன் விளையாட்டு பொம்மைகளாக்கிவிட்டாள். எந்தப்புஸ்தகத்தையும் கிழிப்பதில்லை ; ஆனால் கிறுகிறுக்க வைக்குமளவிற்கு கிறுக்கிவைத்து விடுவாள். பிறகு எங்கேயாவது கண் காணாத இடத்தில் கொண்டுபோய் கிடத்திவிடுவாள். வீடடங்கிய காலத்தில் சுத்தம்பண்ணும்போது புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தொகுப்பை அலமாரியின் அடியிலிருந்து கண்டெடுத்தேன். அவசியம் வாசிக்க வேண்டிய ஐந்து தமிழ்ப் புஸ்தகங்கள் என்று எஸ்.ராமகிருஷ்ணன் பட்டியலிட்டதில் ஒன்று புதுமைப் பித்தனின் சிறுகதைகள் என்று நினைவு. எவ்வருடம் என்று துல்லியமாக நினைவில் இல்லை, கோவை கொடிசீயாவில் நடைபெற்ற புஸ்தகக் கண்காட்சியில் மலிவு விலையில் வங்கியது. கூடுதலாக வண்ணதாசனின் 2 புஸ்தகங்களும் , எஸ்.ரா அவர்களின் 4 புஸ்தகங்களும், மகள் தர்ஷினிக்காக இரண்டு புஸ்தகங்களுமாக சுமார் இரண்டாயிரம் சில்லறைகளுக்கு கொள்முதல் செய்திருந்தேன். புஸ்தகங்களுக்காக ஒரே தவணையில் அதிகமாக முதலீடு செய்ததில் இபோதுவரைக்குமான என் வாழ்நாள் உச்சம் அது. கொடிசீயா , பிரதான சாலையிலிருந்து சுமார் 2 பர்லாங் தூரத்தில் அமையப்பெற்றது. போகும்போது கைகளை வீசிக்கொண்டு சென்றதில் அயர்ச்சி தெரியவில்லை. உள்ளே சுற்றியலைந்து கணிசமான எடையோடு வெளியேறியபோது சோர்ந்துவிட்டேன். திரும்பும்போதும் நடராஜாவில் பிராயணப்பட்டு பாதி வழியில் தூக்கமுடியாமல்போகவே, வாடகை ஆட்டோ அமர்த்திக்கொண்டு வந்து சேர்ந்ததும் நினைவிலிருக்கிறது.
புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பு 900 பக்கங்கள் கொண்ட கெட்டிப் பதிப்பு, திருமகள் பதிப்பகத்தார் அசல் விலையிலிருந்து பத்து சதவீதக் கழிவில் கொடுத்தார்கள். 300ம் சில்லறையுமானதாக நினைவு. விலை தான் மலிவேயொழிய புஸ்தகத்தின் உள்ளடக்கமும், வடிவமைப்பும் அபாரமான தரம். சற்றேறக்குறைய 100 சிறுகதைகள் இருக்கும். கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு நுணுக்கமாக மொய்ப்பு பார்த்திருப்பார்கள் போல. பளிச்சென வெள்ளைத்தாளில் தாராளமான சமூக இடைவெளியோடு அச்சிடப்பட்ட புஸ்தகம். மிகுந்த கவனத்தோடும், அக்கறையோடும் ஆத்மார்த்தமாக புத்தகத்தை வடித்திருக்கிறார்கள் திருமகள் பதிப்பகத்தார். இன்றையிலிருந்து சுமார் 80 முதல் 90 வருடங்களுக்கு முன்பாக பல்வேறு பத்திரிக்கைகள், சமிஞ்கைகளில் வெவ்வேறு ஆண்டுகளில் எழுதப்பட்ட சிறுகதைகள். நூறு வருடங்களை எட்டிபிடிக்கப்போகிற கதைகளாயினும் இப்பொழுதும் வாசிப்பின்பத்தைத் தருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத கதைகள் , வாக்கியங்கள் பெரிய மெனக்கெடல்கள் ஏதுமின்றி புரிகிறது. புதுமைப் பித்தனின் வார்த்தைத் தெரிவுகள் எனக்கு வெகுவாகப் பிடித்திருக்கிறது. வாக்கியங்களை அடிக்கோடிடுவது போல நான் வார்த்தைகளை மொபைல் நோட்புக்கில் குறித்துக்கொள்வதை பழக்கமாக்கியிருக்கிறேன். இன்னும் முழுமையாக படித்து முடிக்கவில்லை. தனித்த நேரம் எதுவும் ஒதுக்கிக்கொள்ளாமல் குழந்தையைக் கொஞ்சுவதுபோல அவ்வப்போது வாசிப்பதுண்டு. புஸ்தகத்தின் அசவுகரியமாகப்படுவது , அதன் எடை . ஆசையாக மடியில் எடுத்து வைத்தோ ; மல்லாக்கப் படுத்துக்கொண்டோ வாசிக்கயியலவில்லை என்ற வருத்தமிருக்கிறது. ஓங்கி அடித்தால் ஒன்னரை டன் வெயிட் கணக்காக கனக்கிறது✨
★★★★★★
மல்லிகைப்பூ என்றவுடன் நிறம் , மணத்திற்கு அடுத்து எனக்கு நினைவுக்குவருவது தமிழ்ச்சினிமாவின் முதலிரவுக் காட்சிகள் , வடிவேலுவின் மதுரை மல்லி நகைச்சுவை , குஷ்புவுக்கு முன்பான மல்லிகைப்பூ இட்டலி என்ற பதம். மல்லிகை என்று தொடங்கும் பாடல்கள் மட்டுமே அம்பதுக்கும் பக்கம் தமிழில் வந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்பாக மல்லிகைப்பூ ஒரு முழம் கேட்டதுக்கு 120 ரூபாயென்றார் பூக்காரம்மா. நொடிநேரம் சூப்பர் ஸ்டாராயிப்போனேன். இப்போது கிலோவே நூறு ரூபாய்தானாம். சமீபமாக "மாலை நேரம் மல்லிப்பூ மல்லிப்பூ" என்றொரு பாடல் அடிக்கடி தொலைகாட்சி இசைச் சேனல்களில் ஒலித்துக்கொண்டிருந்தது. தர்ஷினிக்குப் பிரியமான பாடல். பாக்கியராஜ் போல பகுமானமாக கைகால்களை நீட்டி மடக்கி நடனம் புரிவாள். இசையும் , குரலும் பின் மல்லிப்பூவும் உந்தித்தள்ள மேலதிக தகவல்களைக் கண்டடைந்து படத்தை தரவிறக்கினேன். படத்தின் நாமம் ஏ 1. நாமம் மட்டுமே.
முதல் ஐந்து நிமிடங்கள் தொல்லைக்காட்சிகளின் விருது வழங்கும் விழாவில் காட்டப்படும் கிளிஷேவான ஆவணப்படம் போன்ற ஒன்றை எச்சரிக்கையாக ஒளிபரப்புகிறார்கள். உஷார்ப்பேர்வழிகள் அக்கணமே லேப்டாப்பை மூடியிருப்பார்கள். எண்ட்ரீ சீன்ல சந்தானம் டூ வீலர்லேயே கிணறு தோண்டுகிறார். பிறகு நாலைந்து சீனியர் சிட்டிசன்ங்களை ஜாக்கிசானாக மாறி அடித்துத் துவைத்து விரட்டுகிறார் . இசையமைப்பாளர் வயலினை நம் கழுத்துச் சங்கில் வைத்து மீட்டுகிறார். இட்டலி ; சட்னி ; பொங்கல் எல்லாம் வைத்து ஒரு அட்வைஸ் படையலொன்று பிரேக் அப் சீனில். அப்பிடியே சுவத்தில் போய் முடிக்கொள்ளலாம் என்று இருந்தது. ஆனால் அடுத்த வசனத்தில் ஈடு செய்துவிடுகிறார்கள்.
சந்தானம் படத்தில் அவரைத்தவிர வேறு யாரையும் நாம் கவனிப்பதுமில்லை ; கவனிக்கவைக்கும் அளவிற்கான யாரும் எவரும் வெளிப்படவுமில்லை. சந்தானமே அதைத்தான் விரும்புகிறார்போல. சந்தானம் மூவிங்குற லேபிளே போதுமென. உண்மையிலேயே சந்தானம் உடல்மொழியில் அசத்தியிருக்கிறார். புல்லட் புரூஃப் போல எப்போதும் லொள்ளு "ஷப்பா" டீமை தூக்கி சுமக்காமலும்; நாலைந்து படங்களுக்கு அக்குளில் இருக்கும் நக்கல்களை அடியில் போட்டு நசுக்கிவிட்டும் , இயக்குனர் ஒருவரிடம் தன்னை ஒப்புக்கொடுப்பாரேயானால் நிச்சயம் பிரகாசிப்பார் என்றே எண்ணுகிறேன். படம் முழுவதும் சிரிப்பு நடிகர்கள் தான். ஆனால் பாருங்கள் முதல்சிரிப்புக்கு முப்பத்தைந்து நிமிடங்கள் காத்திருக்கவேண்டியத்திருக்கிறது. சுந்தர்.சி ரகப் படம். சுமாராக வந்திருக்கிறது✨
★★★★★★
வழக்கமான கோடைகாலங்களில் வரும் சீசனல் தண்ணீர் சிக்கன அக்கறை இவ்வருடம் கரோனா காரணமாக நித்திரையிலிருக்கிறது. இன்றும் தண்ணீர் அரிதான வளம் என்று எழுதி மட்டும்தான் கொண்டிருக்கிறோம் , காவல் துறை உங்கள் நண்பன் என்பதினைப்போல. நான் ஏற்கனவே சொல்லியதைப்போல , ஒவ்வொரு வீட்டிற்கும், அலுவலகத்திற்கும், ஆலைக்கும் தண்ணீர் கணக்கிடும் மீட்டர் பொருத்தப்படவேண்டும். நாம் எவ்வளவு தண்ணீரை செலவழிக்கிறோம் விரயமாக்குகிறோம் என்று தெரியாமலே , அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமலே அலட்சியமாக இருக்கிறோம். தெருக் குழாயில் தண்ணீர் கொணர்ந்து பயன்படுத்திய போது நாம் செலவழித்த தண்ணீரை விட இப்போது ஐந்து மடங்கு அதிகம் செலவழிக்கிறோம் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. முன்பு உள்ளங்கை நிறைய தண்ணீர் மோந்து முகம் கழுவிய இந்தியன் இப்போது குறைந்த பட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் செலவழிக்கிறான் என்று சொல்கிறது பிறிதொரு புள்ளி விவரம். தவமாய்த் தவமிருந்து படத்தில் , கிராமத்தில் இருக்கும் பெற்றோரை மகன் சேரன் நகரத்து அப்பார்ட்மென்டுக்கு கூட்டி வந்திருப்பார். டாய்லெட் போய் வந்த சரண்யா பொன்வண்ணன் என்ன தம்பி இந்தக் கக்கூஸ்ல போற தண்ணிய வெச்சு ஒரு போகம் விவசாயமே பார்த்துடலாம் போலயே என்பார். இது ஓர் உதாரணம்.
இப்பொழுது மின்சாரம் தனியார் மயம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது அடுத்து நிச்சயமாக தண்ணீராகத்தான் இருக்கும். கோவையில் போனவருடமே அதற்கான முஸ்தீபுகள் முளைக்க ஆரம்பித்துவிட்டது. எதிர்ப்பு காரணமாக கொஞ்சம் பொறுதிருக்கிறார்கள் அவ்வளவுதான். அரசாங்கத்தைப் பொறுத்த வரையிலும் தனது துறைகளில் சீர்திருத்தம் செய்யவேண்டுமெனில் அதற்கான எளிய வழியாக கைகொள்வது தனியாருக்குத் தாரைவார்த்தல் என்பதுதான். இயன்றவரை தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தப் பழகுங்கள். குழந்தைகளைப் பழக்குங்கள். இல்லையெனில் தண்ணீர் அரிதான வளம் என்று எழுதுவதற்கு தேவையே இராமல் போய்விடும் வரும் தலைமுறைக்கு✨
என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.
கிண்டில் தான் இன்றைக்கு...!
ReplyDeleteநாடே தனியார் மயம் ஆகலாம்...!
அனைத்தும் சிறப்பு.
ReplyDeleteஆங்காங்கே இழையோடும் நகைச்சுவையையும் ரசித்தேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.