Showing posts with label பேசாத வார்த்தைகள்.. Show all posts
Showing posts with label பேசாத வார்த்தைகள்.. Show all posts

Oct 5, 2018

பேசாத வார்த்தைகள் : 07092018

பேசாத வார்த்தைகள் : 07092018






ஆந்திராவில் மையம் கொண்டு , தமிழகத்தில் கரை ஒதுங்கிக்கொண்டிருக்கும் “இம்கேம் இம்கேம்” புயலை இரண்டு நாட்களாக பார்த்தும் , கேட்டும் கொண்டிருக்கிறேன் . “கீத கோவிந்தம்” என்ற தெலுங்கு படத்திற்காக கோபி சுந்தர் இசைத்திருக்கும் பாடல் இது . ஐம்பது மில்லியனை கடந்து நூறை  துரத்திக்கொண்டிருக்கிறது யூ டியூப் ஹிட்ஸ் . தமிழ் வெர்ஷன் வேறு வந்திருக்கிறது. சமயங்களில் ஓரளவு சூப்பர் , சூப்பர் டூப்பர் ஹிட் ஆவதும், சூப்பர் டூப்பராக வரவேண்டியது அட்டர் பிளாப் ஆவதும் சகஜம். நம்மூரில் கூட கொலவெறியோடு ரெம்ப பேரு திரிந்தார்கள். சரி போகட்டும் ...! பாடலின் ஒரு பகுதியை சுட்டிக்காட்டி இந்த இசை முப்பத்தாறு வருசத்துக்கு முன்பாக இளையராஜா கோழி கூவுது படத்திற்காக போட்டது என்றும் ( பூவே இளைய பூவே ) அதிலிருந்து சுந்தர் சுட்டிருக்கார் என்றும் ஒரு யூ டியூப் வீடியோ சொல்கிறது. ஏழுமலையானுக்கே வெளிச்சம். பாடலின் ஆரம்ப சில வினாடிகள் எனக்கு “கொஞ்ச நாள் பொறு தலைவா” பாடலை நினைவுபடுத்தியது. 

பாடலுக்கு சுவராஸ்யம் சேர்ப்பது , கோரஸ் பாடும் ஜதி , அதற்கு இணையாக அவயங்களை அழகாக அசைக்கும் அந்த பரத நாட்டிய மங்கைகள். எல்லாவற்றிக்கும் மேலாக சித்ஸ்ரீராம் . லவ் யூ மேன். பாடலை கேட்கும்போதெல்லாம் சித் ஸ்ரீராம் கண் முன்னே வந்து போகிறார் . தமிழ் சினிமாவைப்போல் ஒரேயடியாக உச்சஸ்தாயியில் கதற விடவோ இல்லை ஹஸ்கி வாய்சில் கலங்க விடவோ செய்யாமல் , இயல்பான துள்ளலுடன்  பாடவிட்டிருக்கிறார் சுந்தர். கூடவே நிறைய வாய்ஸ் வேரியேஷனுக்கு இடம் கொடுத்திருக்கிறார். சித்தின் கெரியரில் கெத்தான பாடல் இது . கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவை  கண்டு பெண்கள் பித்தாக அலைவதாகச் சொல்கிறார்கள். போலவே மேற்படி பாடலில் வரும் ஹீரோயினுக்கு பாசறை எல்லாம் ஏற்பாடாகியிருப்பதாக அறிகிறேன். துயரம். ஒரு காட்சியில் கீரோயின் சிரிக்கிறார் , உவ்வே...ஹேன்ட் பேக்கை அன்ஷிப் பண்ணுவது போல உள்ளது . பிறிதொரு காட்சியில் ஹீரோவைபோல இமிடேட் செய்து நம்மை இரிடேட் செய்கிறார். இதெற்கெல்லாம் பரிகாரமாக சிலவினாடிகள் வரும் ஒரு கருப்பு வெள்ளை காவியத்தை பாடலில் இணைத்திருக்கிறார் இயக்குனர். அபாய வளைவுகளுடன் , அதைவிட அபாயகரமான போஸில் ஹீரோயின் தலை துவட்டும் காட்சியில் இருந்து அதற்கடுத்து வரும் காட்சிகள் பாடலுக்கு வேறொரு mood கொடுக்கிறது. இயக்குனர் “ஹாட்,ஹாட்டர்,ஹாட்டஸ்ட்” நிகழ்ச்சியின் விசிறியாக இருப்பார் என்று சந்தேகிக்கிறேன்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக, தாம் கொண்ட கொள்கையில் அரசு உறுதியாக இருக்குமா இல்லை வழக்கம்போல இம்முறையும் பாலீதின் பைகளைப் போலவே  காற்றில் பறக்க விட்டுவிடுமா என்று தெரியவில்லை. அம்பானி அன்கோ ஆட்டைய கலைக்காமலிருந்தால் சரி. திருப்பூரில் பாலிதீன் பைகள் உபயோகப்படுத்துவது ஓரளவிற்கு மட்டுப்பட்டுள்ளது.  மாநகராட்சி கட்டுப்பாட்டை மீறி பாலீதீன் உபயோகிக்கும் கடைக்காரர்களுக்கு பத்தாயிரம் வரை உடனடி அபராதமாக விதிக்கிறார்களாம். பாத்திரம் எடுத்துட்டு வாங்க தம்பி என்று கறிக்கடை பாயும், கட்டப்பை எடுத்துட்டு வாங்க சார் என்று காய்கறிக்கடை அண்ணாச்சியும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பாலிதீன் பைகளை உபயோகப்படுத்தும் பொதுமக்களிடமும் குற்றவுணர்ச்சியை காண முடிகிறது. ஆனாலும் முற்றாக தவிர்த்ததுபோல தெரியவில்லை . ஆணையை அரசு கடுமையாக அமல்படுத்தட்டும் பார்க்கலாம் என்றும் , அவர்கள் கொடுப்பதை நிறுத்தட்டும் ; நாங்கள் வாங்குவதை நிறுத்துகிறோம் என்ற அலட்சியமுமே மேலிடுகிறது . கடந்த பதினைந்து வருடங்களாகத்தான் பாலிதீன் உபயோகம் இப்படி அதிகரித்திருக்கிறது. ஒரு தலைமுறைக்குள்ளாகவே இப்படி அசுரத்தனமாக வளர்ந்து நிற்கும் பாலீதீனை இனியும் தொடர்வது நமக்கும் நல்லதல்ல நம் சந்ததியினருக்கும் உகந்தது அல்ல. கடந்த இரண்டு வாரங்களாக இறைச்சி வாங்குவதற்கு பாத்திரமும், காய்கறி வாங்க கட்டப்பையையும் தூக்க ஆரம்பித்து விட்டேன் .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டாட்டா நிறுவனம் இண்டிகா கார் உற்பத்தியை நிறுத்திவிட்டார்களாம். மிகச்சரியாக இருபது வருடங்களுக்கு “T”  போர்டு மார்க்கெட்டில் கொடி கட்டி பறந்த வாகனம் இண்டிகா. வாடகைக்கார் என்றால் அம்பாசடர் காருக்கு அடுத்ததாக அனைவராலும் அறியப்பட்டது . பொதுவாக டாடா வாகனங்கள் டீ போர்டுக்கென்றது என்றே இன்றளவும் நினைவுகூறப்படுகின்றது. எப்படி பதிந்தது இந்த எண்ணம் என்று தெரியவில்லை. இண்டிகா காரை தனி நபர் உபயோகத்திற்காக வைத்திருந்த ஒருவரைக்கூட என் சுற்றத்தில் காண முடியவில்லை. ஏன் இப்படி ...!? பராமரிப்பு செலவு , மைலேஜ் காரணம் என்றால் ஏன் மாருதி ஆல்டோவை ,மாருதி 800ஐ டீ போர்டில் காணமுடியவில்லை...!?சமீப காலமாக டாடா குழுமத்திலிருந்து அடுத்தடுத்து ஹேட்ச் பேக் கார்கள் வந்துகொண்டிருக்கின்றன. பார்க்கலாம் மக்கள் டாட்டா சொல்கிறார்களா இல்லை வெல்கம் சொல்கிறார்களா என்று .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@.

புதிய அலுவலகத்தில் மலையாள நண்பர் ஒருவர் அமைந்திருக்கிறார். அவசரப்பட்டு குமையவேண்டாம் , அவர் ஆண் நண்பர். அகன்ற மார்பும், அடர்ந்த தாடியும், ஆறடி உயரமும் உள்ள ஆஜானுபாகுவான ஆண் சிங்கம். தோற்றம் கரடுமுரடாக இருப்பினும் , இளகிய மனம் கொண்டவர். கடந்த மாத நேர்பேச்சில் சினிமாக்களை பற்றி சம்சாரித்தபோது. கைவசம் ஏதேனும் மலையாள சினிமாக்கள் இருந்தால் பகிரவும் என்ற வேண்டுகோளுக்கிணங்கி ஏழெட்டு படங்களை உடனடியாக ஷேரிட்டிருந்தார். அதிலிருந்து சப் டைட்டில் உள்ள படமாக பார்த்து , பார்த்துக்கொண்டிருக்கிறேன். முதல் படமாக “ஆதி” பார்த்தேன். மோகன்லாலின் தவப்புதல்வர் நடித்திருக்கிறார். திரிஷ்யம் பட இயக்குனரின் படைப்பு . ஆரம்ப காட்சிகளில் ஜூனியர் லாலின்  குரலும், உடல்மொழியும் திசைக்கொன்றாக கும்மியடிக்கிறது . பெங்களூருக்குள் நுழைந்தவுடன் படம் வேகமெடுக்க ஆரம்பிக்கிறது . கபடி விளையாடிக்கொண்டிருக்கும் விஜய் கட்டிடம் கட்டிடமாக தாண்டியதையே ஆவென்று வாயைப்பிளந்து பார்த்த நமக்கு , தாண்டோட்டம் என்ற தாவுதலையே விளையாட்டாக பயின்றிருக்கும் ஹீரோ பெங்களூருவை தாண்டுவதை யார் நீங்க , எப்படி தாண்டுறீங்க என்ற கேள்விகளுக்கு இடம்கொடுக்காமல் , எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிறது .  கிளைமேக்ஸ் தமிழ்சினிமா போல இருந்தாலும் , படம் பார்க்கலாம் ரகம் . சம்பவம் எங்கே , எப்பொழுது , எப்படி நடந்தது என்று முன் கூட்டியே தெரிந்திருந்தாலும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட இருவருக்கும் கட்டுடல்.  சமகால மலையாள சினிமாவை ஒப்பிடும்போது இது சுமார் தான், ஆனாலும் நம்மூரில்  கலை வாரிசுகள் அறிமுகமான முதல் படத்தோடு ஒப்புநோக்கும்போது இப்படம் ஃபார் பெட்டர் .

என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு.

Mar 27, 2018

பேசாத வார்த்தைகள் : 03-2018


மாநகரக் குப்பைகள் போல வந்து குவியும் வாட்சப் பகிர்தல்களில், எப்பொழுதாவது முத்துப்போல உருப்படியான தகவல்கள் சிக்குவதுண்டு, அப்படியொரு முத்துதான் “இட்லி தோசை”- (“ID”) நிறுவன ஸ்தாபகர்களில் ஒருவரின் காணொளி. ஜிமிக்கி கம்மலாலும் , புருவ உயர்த்தல்களாலும் மாநிலம் தழுவிய மதிமயக்கத்திற்கு வித்திட்ட மங்கையர்களை வழங்கிய, கடவுளின் தேசமான கேரள நன்னாட்டில் பிறந்த இளைஞர் தான் மேற்படி இட்லி தோசை நிறுவனர் முஸ்தபா. 






ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூலில் அவர் ஆற்றிய உரைதான் கட்செவி அஞ்சலில் பகிரப்பட்டிருந்தது . வழமையான பிசினஸ் வெற்றியாளர்களின் வீர உரை போலில்லாமல் , நாடி. நரம்புகளை புடைக்கவைத்து , கனவுலகில் கணநேர சூர்யவம்சம் சரத்குமாராய் “லாலா லாலா” பாடவைக்காமல் ரெம்ப எதார்த்தமான பேச்சு. மெல்லிய நகைச்சுவை இழையோட, மென்மையான குரலில் , தன்மையான உடல் மொழியோடு வழங்கிய உரை வசீகரம். பதினைந்து நிமிட உரையில் மூன்று முக்கியமான தகவல்களை முன்னிறுத்துகிறார். அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.
யூ டியூப் : https://www.youtube.com/watch?v=01_eOCGNYN8
இணையதளம் : https://www.idfreshfood.com/

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


சமீபத்தில் அலுவல் நிமித்தம் பெருந்துறை சென்றிருந்தபொழுது , மதிய உணவிற்கான உணவக விசாரிப்பில் கண்டடைந்தது சக்தி மெஸ். பெருந்துறை டூ கோவை பிரதான சாலையில் , சுங்கச்சாவடிக்கு அடுத்த நால் ரோட்டின் வலதுபுறம் கார்னரில் அமைந்துள்ளது குடிசை வேயப்பட்ட இந்தக் கடை. அரைமனதுடன் உள்ளே நுழைந்தால், கல்யாண வீடு போல , சாப்பிடுபவர்களின் பின்னால் நின்று கொண்டிருக்கிறார்கள் அசைவப் பிரியர்கள். பதினைந்து நிமிடக் காத்திருப்புக்கு பின் இருக்கையைக் கைப்பற்றி இரைப்பையை நிறைத்துகொண்டோம்.

சாப்பாடு கொஞ்சம் பதமாக இருந்தது , ஆனால் , அசைவச் சாப்பாட்டிற்கு அதுதான் சரியான பதமென்று பக்கத்து இலை பரிந்தார். குடும்ப உறுப்பினர்கள் , பெரும்பாலும் பெண்கள் இணைந்து நடத்துகிறார்கள். நாங்கள் சென்றிருந்த சமயம் கரை வேஷ்டிகள் கூட்டம் குழுமியிருந்தது. பக்கத்தில் கட்சி மாநாடாம். தண்ணீரோடு  கரைபுரண்டோடிய கரை வேஷ்டிகளின் கலாட்டாக்களை வெகு நாசூக்காக , சிரித்துக்கொண்டே சமாளித்த அக்காக்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்.  மட்டன் குழம்பு , மீன் குழம்பு , கோழிக்குழம்பு , எலும்பு ரசம் , தயிர் இதுதான் வரிசை. நிறைவாக பாயசமும் உண்டு. உணவகத்தின் சிறப்பே மசாலாதான். “இனியொரு விதி”யெல்லாம் செய்யாமல் அவர்களே மசாலா அரைத்து சமைக்கிறார்கள். வயிற்றிற்கும், பர்சிற்கும் பங்கமில்லாத கடை.

நல்லா கார சாரமாய் உணவருந்துபவர்களுக்கான அமுத சுரபி சக்தி மெஸ் . அதே நேரம் , காரம்னா காத தூரம் ஓடுபவர்களுக்கு உகந்த இடமல்ல இது. நல்லா ருசியா இருக்கே என்று நாட்டுக்கோழியுடன் ஒரு வெட்டு வெட்டி வெளியே வந்தால். நாக்கை வெட்டிப் போட்டுவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு காரம் கபடி விளையாட ஆரம்பித்துவிட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பால், பழம் தயிர் என்று சமாளித்து நாக்கை நார்மல் மோடுக்கு வரவேண்டியதாகிவிட்டது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


வழக்கம் போல, இந்த ஆண்டும் நியூ இயர் ரிசொல்யூஷன் நீர்த்துப்போயிற்று. தினசரி, வாரம், மாதம் , காலாண்டு என்று அட்டவணை எல்லாம் வக்கணையாகத்தான் போட்டேன். நடைமுறையில் பிம்பிளிக்கி பிளாக்கி ஆகிவிட்டது. “ஒரே ஒரு குருக்கள் வரார்”ன்ற மாதிரி  ஒரே ஒரு பதிவு , ஒரே ஒரு படம் அவ்வளவுதான். காலாண்டு முடிந்துவிட்டது. காலரைப் பிடித்து யாரும் கேட்கப் போவதில்லைதான் , இருந்தாலும் இதுபோல பொதுவெளியில் எழுதி வைக்கும்போது கொஞ்சம் உறுத்தல் வந்து பாதியையேனும் பாலோ செய்துவிடலாமே என்ற நப்பாசைதான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 


கடந்த வாரம், சென்டிமென்டல் பயணமாக பழனி போய் வந்தேன். இது மூன்றாவது வருடம் . நடராஜா சர்வீசில் , பேருந்து நிலையத்திலிருந்து பழனி மலை உச்சியை அடைவதற்கு  இரண்டு மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. இடையிடயே இளைப்பாறல் வேறு. உடம்பு வெகுவேகமாக பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. வழமை போல சேட்டன்களும் , சேச்சிகளும் சாரை சாரையாக படையெடுக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் கோவில்களில் இலவச தரிசன வரிசையில் போவதுதான் எளிதாகவும் , விரைவாகவும் இருக்கிறது . பணத்தைக் கொடுத்து எல்லாவற்றையும் எளிதாக, விரைவாக வாங்கிவிடவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் அதிகரித்ததன் விளைவு இது. போலவே , மருத்துவமனைகள் , பள்ளிக்கூடங்களிலும். இது சரியான போக்காக தெரியவில்லை. கடந்த முறை போல அன்னதானத்திற்கு ஆசைப்பட்டு சிறையில் சிக்காமல் , உண்டச் சோறுடன் தப்பித்தாயிற்று . வெறும் கருப்பட்டிக் கூழை தகர டப்பாக்களிலும், பிளாஸ்டிக் டபாக்களிலும் அடைத்து பஞ்சாமிர்தம் என்று விற்பனை செய்யும் தேவஸ்தான கடைகளை முருகர் மன்னிப்பாராக. அதே  நேரம் மலையடிவாரத்தில், சித்தனாதன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் – அமிர்தம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

என்றென்றும் புன்னகையுடன்.,
ஜீவன்சுப்பு

Jan 13, 2017

பேசாத வார்த்தைகள் – 23*01*2015 – வருஷப் பழசு ..!



பேசாத வார்த்தைகள் – 23*01*2015 – வருஷப் பழசு ..!

ஷிப்மெண்ட் , டார்கெட் , ஓவர் டைம் ன்னு மெசின் லைஃப் வாழ்ந்திட்டு இருக்குற திருப்பூர்ல இருந்து, எப்பிடி இவ்வளவு பேரு சோஷியல் மீடியாவுல ஆக்டிவா இருக்குறாங்க ....? வருடங்களுக்கு முன்பு ஆச்சர்யப்பட்டு கேட்டமுந்தைய நிறுவன GM ன் கேள்விக்கு இப்பொழுதுதான் காரணம் உணர்ந்தேன் . ஸ்ட்ரெஸ்............! வாழும் கலைக்கும் , வேதாத்ரிக்கும், ஈஷா யோகத்திற்கும்  மிக அதிகமான கிளைகளும், தேவையும் உள்ள ஒரே ஊராக திருப்பூர் இருப்பதிலிருந்தே நீங்கள் உணர்ந்துகொள்ளலாம் அழுத்தத்தின் வீரியத்தை.


திருப்பூர் மாதிரியான 24 * 7 தொழில் நகரவாசிகளுக்கான, மிகப்பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர் சோஷியல் மீடியாதான் . அலுவலகம், குடும்பம் என கமிட்மென்ட்களுக்கு நடுவே காணாமல் போய்க்கொண்டிருக்கும் தனிநபரின் சுயத்தை சற்றேனும் தாங்கிப்பிடிப்பதில் ப்ளாக் , Facebook போன்ற மீடியாக்களின் பங்கு அதிகம்.


அண்மையில் அலுவலக நிமித்தம் வேறொரு நிறுவன மேலாளரிடம் தொலைபேசிக்கொண்டிருந்தேன் . பேச்சு பர்சனல் ஆக திரும்பியபொழுது சொந்த ஊர், குடும்பத்தை பற்றி விசாரித்தவர் காரைக்குடி ஏரியா என்று சொன்னதும் வரிசையாக கேள்விகளை தொடுக்க ஆரம்பித்துவிட்டார் . எப்டி சார் இவ்வளவு விஷயம் உங்களுக்கு தெரியும்னு கேட்க நினைத்த தருணம் அவரே , திருப்பூர் எழுத்தாளர் ஒருத்தர் உங்க ஊர் அருமை பெருமையெல்லாம் எழுத்திட்டு இருக்காரு நான் வருசமா படிச்சுட்டு வர்றேன்ன்னு சொன்னார். யாரு சார்…? ஜோதிஜியான்னு கேட்டதும் அப்டியே ஷாக்காயிட்டார். அட...! உங்களுக்கு ப்ளாக் பத்திக்கூட தெரியுமான்னு ஆச்சர்யப்பட்டவரிடம் ,நம் இலக்கியத் தொண்டைப்பற்றி தொண்டை அடைக்க அடைக்க சொன்னதோடு இல்லாமல்குறுஞ்செய்தியாக நம் இலக்கிய விலாசத்தையும் அனுப்பிவைத்தோம்.


அடுத்த ஒரு வாரத்திற்கு அவரிடமிருந்து அழைப்பே இல்லை , சரி பல்ப்பு வாங்குறதுன்னு முடிவாகிடுச்சு, இனி அவரா கொடுப்பாருன்னு எதிர்பார்க்காம நாமளே வாண்டடா வாங்கிக்கலாம்னு அழைத்தால் அதற்கும் ரெஸ்பான்ஸ் இல்லை. Felt that வட போச்சே மொமென்ட். ஆர்டர ஆன் டைம்க்கு கொடுக்காட்டியும் , வேலைக்கு ஆப்பு வைக்காம பினிஷ் பண்ணிக்கொடுத்திட்டு இருக்கும் ஒரே ஒரு சப்ளையரையும் சொந்த செலவுல சூன்யமாக்கிட்டோமேன்னு நினைத்தமாத்திரத்தில் , அவரிடமிருந்து அழைப்பு ....! ஆங்...! ஒங்க பிளாக்க பார்த்தேன்... பிளாக் நல்லாருக்கு, அந்த சைடுல கொடுத்துருக்க லிங்க் எல்லாம் சூப்பர் .... பாட்டு படமெல்லாம் கூட நல்லாருக்கு ....! அம்புட்டுத்தேன்...கடசி வரைக்கும் நம்ம இலக்கிய சேவையை பற்றிய ஒரு சிறு விமர்சனம் கூட இல்லை ....! U Know …? He is a Gentleman.


மேற்படி மேலாளருடனான பிறிதொரு சுமூகமான உரையாடலில் , என்ன சார் என் எழுத்தப்பற்றி எதுவுமே சொல்லலையே என்று வினவினேன் . காமிடியா எழுதுறீங்க ( உ.கு- நீ எழுதறதே  காமிடிதாண்டா),, ஆனா ஒன்னும் செழுமையா இல்லையே ,  கருத்து செறிவா எழுதுங்கன்னு சொல்லி, சொல்லாமாலேயே முடித்துக்கொண்டார் உரையாடலை . எனக்கும் கருத்து செறிவா எழுதனும்னு ஆசைதான் ,  என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன் .. வரமாட்டீங்குதே ....! என்னதான் தலைய சொறிஞ்சாலும் முடி கொட்டுற அளவில் பாதிகூட கருத்து கொட்டமாட்டீங்குதே ...!


ஆங்..! முடின்னதும் ஞாபகத்திற்கு வருது ...! இப்பல்லாம் முடி உதிர்தல் அப்டிங்குற பதமே வழக்கொழிந்து விட்டது. ஆமா…!முடி கொட்டுதல் தான் இப்ப ட்ரெண்ட்...! ச்சும்மா கொத்து கொத்தா கொட்டுது . அந்த அளவு வாட்டர் பொல்யூசன் . எல்லா ஊர்லயும் வாட்டர்ல பொல்யூசன் இருக்கும் , ஆனா, நம்ம திருப்பூர்ல பொல்யூசன்லதான் வாட்டரே இருக்கு . முன்பு மாதம் ஒருமுறை சலூன்போனவன் , இப்பொழுது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போகிறேன். அநேகமாக அடுத்த வருடம் சைடு ஒதுக்கத்தான் சலூனுக்கு போவேன்னு நினைக்கிறேன்.L. அடுத்த வீட்டு ஆன்டி சொன்ன டிரடிசனல் சீயக்காய் லருந்து , அமேசான் காடுகளில் தயாராகும் எர்வொமேட்டின் வரை ட்ரை பண்ணியாச்சு ... ம்கூம்.. எருமமாட்டுல பெஞ்ச மழை மாதிரி ,நோ ரிசல்ட் . எட்டுப்புள்ளி கோலம் போடுற அளவுக்கு முன்நெற்றிமுன்னேறியதுதான் மிச்சம்.


போதாதற்கு இந்த சலூன்காரர்கள் பண்ணும்  அட்டகாசம் ஆகப்பெரிய கொடுமை ...மூனே முடி இருந்தாலும் குறைந்தது  100  வசூலிக்கின்றார்கள். என்ன கொடுமை சார் ...? சமீபத்தில் ஒரு சலூன் விளம்பரம் பார்த்தேன் , நாடெங்கிலும் கிளைகள் கொண்ட சங்கிலித் தொடர் சலூன் ஒன்றின் விளம்பர பதாகை அது .  ஆடி ஆஃபர் ...! கெட் 500 டிஸ்கவுன்ட் ஆன் எனி சர்வீஸ். முதலில் ஒன்னும் தோணலை கொஞ்சம் தூரம் வண்டி நகர்ந்தபின் தான் அந்த டவுட் வந்ததது. அடங்கொக்காமக்கா...! டிஸ்கவுன்ட்டே 500 ரூவான்னா , அப்ப பில் எவ்ளோடா பண்ணுவீங்க. ஒருவேள முடிய நடுவாய்ங்களே அதுக்கா இருக்குமோங்குற டவுட்டுல ரிவர்ஸ் போய் பாத்தேன், இல்ல முடிய வெட்டுரதுக்குத்தான் போட்ருக்காய்ங்க. சரி அப்டி என்னத்ததான் பண்றாய்ங்கன்னு தெரிஞ்சுக்க போன் போட்டா . ஒரு யுவதி ஆங்கிலத்தில் கட்டண விவரத்தை சொல்லி  அப்பாயிண்ட்மென்ட் பிக்ஸ் பண்ணட்டான்னு குழைந்தாள்(ர்). நான் நிலை குலைந்தேன் .....! நீங்கல்லாம் நல்லாவருவீங்க யுவர் ஆனர்.


மொத வேலையா செல்ப் கட்டிங் பண்றது( நோ..... நோ ... போடுரதில்ல. பண்றது... பண்றது...) எப்டின்னு யூ டியூப்பில் தேடவேண்டும் .


அடுத்த பதிவில் எழுத்தாளர் தாமிராவின் –“பர்வதமலையில் ஒரு ராஜகுமாரி”பற்றியும், PK ப(பா)டம் பற்றியும் செழுமையான நடையில் , செறிவான கருத்துகளுடன் உங்களை சந்திக்கிறேன்.


பிகு : போகிப் பண்டிகையை முன்னிட்டு இரண்டு வருடங்களாக ட்ராப்டில் இருந்த பழைய கழிதல் பதிவிது . இனி புதியன புகலாம் .



என்றென்றும் புன்னகையுடன்
ஜீவன்சுப்பு