Showing posts with label பிறந்தநாள் .. Show all posts
Showing posts with label பிறந்தநாள் .. Show all posts

May 17, 2014

ஓஹோன்னானாம்...!





ஆனி போயி ,ஆடி போயி ஆவணி வந்தா எம்மகன் டாப்பா வாந்துடுவான்னு பட்டிக்காட்டு ஜோசியர் சொல்லிருக்காருன்னு களவாணி படத்தில் சரண்யாம்மா சொல்லியதைப்போலவே , முப்பத்தி ஒன்னு போயி , முப்பத்தி இரண்டும் போயி முப்பத்தி மூணுல நீ ஓஹோன்னு வருவேன்னு நம்மூரு விட்டி அய்யர் சொல்லீருக்காருடான்னு , விட்டி அய்யரிடம் ஜாதகம் பார்த்த கடந்த நான்கு வருடங்களாக அம்மா சொல்லிக்கொண்டிருந்த அந்த முப்பத்தி மூன்று இதோ இன்னிக்கு வந்திட்டு J ....!

கடந்த வருடம் ஆரம்பம் முதல் போன வாரம் வரை ஆப்ரேசன் , ஆஞ்சியோ , ஆஸ்பிட்டல்ன்னு ஒரே அலைச்சலும் , மன உளைச்சலுமாகவே போயிட்டு...! இந்த வருடம் ஓஹோன்னு இல்லாட்டியும் அய்யகோ ன்னு இல்லாமல் இருந்தாலே போதும் ஆண்டவா ...!

ஓஹோன்னானாம்...!



என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .

Aug 21, 2013

ஜீவா ...!




“வெளிச்சத்தின் விலாசம் ஜீவா” அப்டிங்குற புத்தகத்தை கொஞ்சம் வருசத்துக்கு  முன்னாடி ஒரு புத்தகச் சந்தையில் வாங்கினேன் . ரெம்ப ஆர்வத்தோடோ , கம்யூனிச பற்று காரணமாகவோ வாங்கவில்லை . விலை ரெம்ப குறைவா இருந்துச்சு அதுனால மட்டும்தான் வாங்குனேன் .

புத்தகத்தை வாசித்ததற்கு பிறகு மிகப்பெரும் மரியாதையும் , பிரியமும் ஜீவா அய்யாவின் மேல் ஏற்பட்டது . அதற்கு முன்பு வரை அய்யாவைப் பற்றி அவ்வளவாக தெரியாது . அன்றிலிருந்து என் ஆதர்ச நாயகர் ஜீவா அவர்கள் தான் . அதன் காரணமாகத்தான் சுப்பு என்ற என் இயற் பெயருடன் ஜீவனை இணைத்துக்கொண்டு ஜீவன்சுப்பு என்கின்ற புனைப் பெயருடன் எழுதிக்கொண்டிருக்கின்றேன்.


இன்று ஜீவா அய்யாவின் பிறந்தநாள் ...! தலைசிறந்த மனிதருக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்  , வாழ்த்துக்களும்   ....!



தோழர் ஜீவாவின் கீதம் .


காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாருக் குழைத்தோமடா - என் தோழனே
பசையற்றுப் போனோமடா! 


குண்டிக்கொரு துண்டுமில்லை
கொல்வறுமை தாளவில்லை
ஒண்டக் குடிசையில்லை - என் தோழனே
உழைத்திளைத்துப் போனோமடா 


கோணல்மானல் திட்டங்களால்
கோடிகோடி யாயிக்குவித்தே
வீணர்சிலர் கொழுக்கக் கண்டோம் - என் தோழனே
வெஞ்சினம் பொங்குதடா!
 

மாடமாளி கையவர்க்கு
மன்னர்மகு டமவர்க்கு
வாடவறு மைநமக்கு - என் தோழனே
வந்திடில் வாழ்வதெற்கு?
 

நன்றி – இணையம்



ஸ்தலத்தை நிர்வகிக்கும் திரு. பாண்டூ அவர்களுக்கு நன்றிகள் ...!



நண்பரின் விவரம் தெரியவில்லை . அவருக்கும் நன்றிகள் ....!


ஜீ.....! வா ....!
நீ திரும்பி வா ...!
நீ விட்டுசென்ற
இடத்திலேயே நிற்கின்றது அனைத்தும் ...!



என்றென்றும் புன்னகையுடன் ...

ஜீவன்சுப்பு .

May 16, 2013

ஹேப்பி பர்த்டே.....!



  


இன்றைய இரவோடு, நான் பூமிக்கு வந்து பதினோராயிரத்து முண்னூற்று இருபத்தி மூன்று நாள் முடிந்துவிட்டது. ஆமாங்க..! எனக்கு ஹேப்பி பர்த்டே ....!

(என்னங்க..! கால்குலேட்டர் ஒப்பன் பண்ணி 11316 டிவைடட் 365 ன்னு போட்டுப்பார்த்துருப்பீங்களே...! ஐ நோ ..! ஐ நோ...! எதையுமே நேரா சொல்றதவிட சுத்தி வளச்சு சொன்னாத்தானே ரீச் ஆகுது . சரி சரி சிரிச்சது போதும் மேல படிங்க ...! இல்ல... இல்ல... கீழ படிங்க .)

அன்பின் அரவணைப்புடனும், 
அனுபவத்தின் துணையுடனும்
அகவை முப்பத்து இரண்டில்
அடியெடுத்து வைக்கின்றேன்.
அற்புதமான ஆண்டாக
அமையுமென்ற நம்பிக்கையுடன்...!

சிறுவயதில் பிறந்தநாள் என்பது ஒரு திருவிழா , ஒரு கொண்டாட்டம் . ஆம் ...! எத்தனையோ ஆயிரம் விந்தணுக்களில் ஒன்று மட்டுமே கருவாகி , உயிராக உருவாகி , உலகத்தோடு உறவாடிய நாள் நிச்சயமாக கொண்டாடப்படவேண்டிய நாள் தானே ....! ஆனால் இப்பொழுதைய கார்ப்பரேட் கலாச்சாரத்தில் பிறந்தநாள் என்பது வெறும் விழா கூட இல்லை மற்றுமொரு திண்டாட்ட நாளே. வேலைக்கு வந்த புதிதில் பிறந்தநாளன்று புத்தாடை அணிந்து , மிட்டாயுடன் அலுவலகம் சென்ற என்னை விநோதமாகப் பார்த்தார்கள் சக கார்ப்பரேட் கர்மாக்கள் . என்ன இது சின்னப்புள்ளத்தனமா என்று ஏளனம் , பரிகாசம் வேறு . அன்றோடு முடிந்தது பிறந்தநாள் கொண்டாட்டம் . இப்பொழுது நானும் பழகிவிட்டேன் பரிகசிக்க ...!

இதோ இன்று அதிகாலை அலைபேசியில் அம்மாவின் அழைப்பு . மிகுந்த ஆச்சர்யம் எனக்கு….! அம்மாவின் அழைப்பில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம் . பரஸ்பரம் முரண்பட்ட ஒரு காரணத்தினால், இரண்டுநாளைக்கு முன் அம்மாவுடனான ஒரு தொலைபேசி உரையாடலை, முழுமையாக முடிக்காமலே துண்டித்துக்கொண்டேன் . அதன் பின் நானும் கூப்பிடவில்லை , அவரும் அழைக்கவில்லை . இதோ அவரே அழைத்துவிட்டார் ..!

சுப்புக்குட்டி ..! நாளக்கி ஒனக்கு பொறந்த நாளுப்பா , காலயில வெள்ளனா எந்துருச்சு கோயிலுக்கு
போயிட்டு வாய்யா….. வில் ஆரம்பித்து ஒவ்வொன்றாய் சொல்லிகொண்டே போனார் , அறிவு அன்னிச்சையாக சரி.... சரி.... என்று சொல்லிகொண்டு இருந்த அதே வேளையில்  , மனம் மானசீகமாக மன்னிப்புக்கேட்டுக்கொண்டிருந்தது, துண்டித்துக்கொண்ட தொலைபேசி இணைப்புக்காக . வீம்பில் நான் ஜெயித்து விட்டேன்...! ஆனால், அன்பில் அவர் ஜெயித்துவிட்டார்..! எவ்வளவு தான் முரண்பட்டாலும் , சண்டையிட்டாலும் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ள அம்மாக்களுக்கு மட்டும் ஆயிரம் ஆயிரம் அக்கறைகளும், பிரியங்களும்  இருந்து கொண்டுதானிருக்கின்றன .

நாளை நானும் கொண்டாடுவேன் ஹேப்பி பர்த்டே  ...! எப்படி ...?

வழமைபோல அதிகாலை எட்டரை மணிக்கு அடித்துப்பிடித்து எழுந்து, காக்கைக் குளியல் போட்டு,
கரித்துக் கொட்டிக் கொண்டே கேண்டீன் இட்லியை விழுங்கி , சீட்டு ஹீட்டாகும் வரை அலுவகத்தில் குப்பை கொட்டி, இடையிடையே ஐ.பி.ல், அஞ்சலி என நியாயம்பேசி , மாலை வீடுவந்து , வெட்டியாக சிறிதுநேரம் விட்டம் பார்த்து, சொச்ச நேரத்துக்கு பேஸ்புக் மேய்ந்து, ஹேப்பி பர்த்டே சொல்லாதவனுக்கு அர்ச்சனை செய்து, பின்னிரவில் சொட்டச்சொட்ட கண் விழித்து சூப்பர் சிங்கர் பார்த்து, சூம்பிப்போன கண்களுடன் சுருண்டிடுவேன் படுக்கையில் ....!


ஆனால் அம்மா அப்படியா ...!

அதிகாலை துயிலெழுந்து
அழகாகப் பட்டுடுத்தி
அன்பாக புன்னகைப்பூச்சூடி...!

அர்ச்சனை ஒருகையிலும்
ஆரஞ்சு மிட்டாய் மறுகையிலுமாக
ஆலயம் சென்றிடுவாள் ...!

இறைவனைப் பிரார்த்தித்து
இனிப்பை வழங்கிடுவாள்
இன்று எம்மகனுக்கு பிறந்தநாளேன்று ...!

மாசற்ற அந்தத் தாயிடம்
மனமாரச் சொல்லுங்கள்
எனக்கான வாழ்த்துக்களை ...!

சொல்லி முடிக்கும் அந்த
கணத்தில், ஆரஞ்சு மிட்டாயின்
தித்திப்பை நீங்களும் உணர்வீர்கள் ....!


என்றென்றும் புன்னகையுடன் ...
ஜீவன்சுப்பு.