Apr 1, 2013

பேசாத வார்த்தைகள் அழகானவை ...!



பேசாத வார்த்தைகள் அழகானவை ...!
எம் உலகம் பேசாத வார்த்தைகளால் நிறைந்திருக்கின்றது ..!
எழுதாத வார்த்தைகள் அழகானவை ...!
எம் உலகம் எழுதாத வார்த்தைகளால் நிறைந்திருக்கின்றது ..!

ஆம் , எம் உலகம் வெளிப்படுத்தாத அழகியல்களால் நிறைந்தது . ஏதேதோ பேசவேண்டுமென்றும், எழுதவேண்டுமென்றும் எண்ணுகின்றேன் , ஆனால் எதை எதையோ உளறுகின்றேன் பேச்சாக, எதை எதையோ கிறுக்குகின்றேன் எழுத்தாக. எம்மிடம் வெளிப்படுத்தப்படாத உளறல்களும், கிறுக்கல்களும் நிறைந்துகிடக்கின்றன அழகழகாக  .

காலையில், தாயோ , தாரமோ பரிமாறும் உணவில் உப்போ, காரமோ சிறிதேனும் அதிகமாகிவிட்டாலும் வார்த்தைகள் வெடித்து கிளம்புகின்றன . எப்பொழுதுமே தயங்கியதில்லை வெறுப்பையும் , கசப்பையும் உமிழ . ஒருநாளேனும், உணவு நன்றாக இருந்ததாக வாய் விட்டு வார்த்தைகளை வழங்கியதில்லை . பேசாத வார்த்தைகள் அழகானவை ...!

சக அலுவலகர் வேலையில் அறியாமல் செய்யும் தவறை, பலர் அறியப்படுத்துவதிலும் , குத்திக்காட்டுவதிலும் இருக்கும் வேகமும் , ஆர்வமும் . சிறந்த வேலைகளை அவர் செய்யும் போது காணக்கிடைப்பதில்லை . நல்ல வார்த்தைகள் உள்ளேயே நங்கூரமிட்டு நகர மறுக்கின்றன. பேசாத வார்த்தைகள் அழகானவை ...!

பொருந்தாத ஆடைகளை உடுத்தி வரும் நண்பனை பார்த்ததும் , கேட்காமலே சொல்கிறேன் கேவலமாக இருக்கிறதென்று . அவனே தேந்தெடுத்தெடுத்த உடைகளில் அழகாக வரும்போது , அவன் கேட்டாலுமே, நன்றாக இருக்கிறதென்ற வார்த்தை, நன்றாகவே வெளிவருவதில்லை. மனம் ரசித்தாலும் , குணம் ஏதேதோ குறைகளை தேடுகின்றது . அவன் பார்க்காத கணத்தில் பார்வை அவன் ஆடைகளை ரசிக்கிறது .  பேசாத வார்த்தைகள் அழகானவை ...!

கீரை விய்க்கும் பாட்டியிடமும் , செருப்பு தைக்கும் பெரியவரிடமும் வியாபாரத்தில் பேரம் பேசும் நாக்கு , மால்களிலும் , சூப்பர்மார்க்கெட்களிலும் நடக்கும் பகல் கொள்ளைகளை பார்த்ததும்  வறண்டுவிடுகின்றது . நியாயமும் , நிஜமும் , உரிமையும்  பேசும் அந்த  வெளிப்படுத்தாத, பேசாத வார்த்தைகள் அழகானவை ...!
  
குழந்தைகளை பார்க்கும்போதெல்லாம், என் அறிவையும் , அனுபவத்தையும் அகற்றி வைத்து அவர்களின் செம்மொழியான மழலை மொழியில் பேச வேண்டுமென்றே நெருங்குகின்றேன் . அவர்களை விட்டு விலகும்போதுதான் தெரிகின்றது நான் பேசவில்லை, என் அறிவையும் , அனுபவத்தையும் வைத்து பிதற்றியிருக்கிறேன் என்று . பேசாத வார்த்தைகள் அழகானவை ...!

ஒவொருமுறை பயணத்தின் போதும் , நடத்துனரையும் , ஓட்டுனரையும் வசைபாடியிருக்கிறேன் உருட்டுகிறார்கள் என்றும், கேட்க சகிக்காத பாடல்களை ஒளிபரப்புகிறார்கள் என்றும் , சில்லறை இல்லாததற்கு எரிந்து விழுகிறார்கள் என்றும் . ஆனால் நல்ல நல்ல பாடல்களை ஒளிபரப்பிய போதும் , சீரான வேகத்தில் சரியான நேரத்தில் எம்மை கொண்டு சேர்த்த போதும் , சில்லறை இல்லையா கண்ணு என்று பரிவாகவும் , பாசமாகவும் கேட்டபோதும் ஒரு நடத்துனரையோ , ஓட்டுனரையோ பாராட்டியதில்லை. ஏன், நன்றி என்று ஒரு வார்த்தை கூட உளமார உள்ளத்தில் இருந்து உதிர்த்ததில்லை . பேசாத வார்த்தைகள் அழகானவை ...!
  
சக அலுவலகர்களை விட குறைவான ஊதிய உயர்வு பெற்ற ஒவ்வொருமுறையும் , பார்க்கும் அனைவரிடமும் வலியப்போய் வெளிப்படுத்தியிருக்கிறேன் எம் மனக்குமுறல்களை. எரிமலை வெடித்ததுபோல எம் உணர்வுக்கொப்பளிப்பை மேலாளரிடம் கொட்டியதுண்டு. ஆனால் அதிகமான ஊதிய உயர்வோ , நியாயமான ஊதிய உயர்வோ பெற்ற ஒருமுறை கூட,  யாரிடமும் பகிர்ந்ததில்லை எம் சந்தோசத்தை, சந்தோசமாக . மேலாளருக்கு ஒரு நன்றியை கூட சொன்னதில்லை . பேசாத வார்த்தைகள் அழகானவை ...!

நான் செய்யாத ஒரு செயலுக்கு கிடைக்கும் தண்டனையை , திடம் கொண்டும், உணர்வுகொண்டும் வார்த்தைகளை தேடித்தேடி பேசி, முழு மூச்சாக மறுக்கின்றேன். எம் செயலை முடிந்த அளவுக்கு நியாயப்படுத்துகின்றேன் . அதே சமயம் நான் செய்யாத செயல்களினால் எமக்கு கிடைக்கும் அங்கீகாரத்தையும் , பாராட்டையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் . ஒரு வார்த்தை கூட வரமறுக்கிறது, நான் அவன் இல்லை என்றும் , அந்த செயலை செய்யவில்லை என்றும் .  பேசாத வார்த்தைகள் அழகானவை, உண்மையானவை  ..!
 
எம் பிரியமான நண்பனுக்கும் , பெற்றோர்க்கும் , மனைவிக்கும் பேசமுடியாத உணர்வுகளை , வார்த்தைகளை , எழுத்தாக வார்த்தெடுத்து அனுப்ப விழைகின்றேன் . ஆனால் கடிதம் எழுதும் ஒவ்வொருமுறையும் சம்பிரதாயமாகவே ஆரம்பித்து சம்பிரதாயமாகவே முடிக்கின்றேன் . எழுதப்படாத வார்த்தைகளும் , எழுதி, அஞ்சலுக்கு அனுப்பப்படாத கடிதங்களும் எண்ணிலடங்கா இருக்கின்றது எம் மனதில் . எழுதாத வார்த்தைகள் அழகானவை ...!

படிக்கும் போது, தன்னிலை மறந்து சில பதிவுகளும் , படைப்புகளும் எம்மை சிரிக்க வைக்கிறது , சிந்திக்க வைக்கிறது . ஒரு சில கதைகளையும், கட்டுரைகளையும் மனம் ரசிக்கிறது , சில கவிதைகளில் மனம் லயிக்கிறது அப்பொழுதெல்லாம் அதை எழுதியவர்களுக்கு ஒரு நன்றியையோ , பாராட்டையோ எழுத மனம் வருவதில்லை . பொறாமையோ , சோம்பெறித்தனமோ தடுத்துவிடுகின்றது . அப்படியே எழுதினாலும் நான்கு எழுத்துக்களுடனோ இல்லை நான்கு வார்த்தைகளுடனோ முடித்துக்கொள்கிறேன். அதே சமயம் நான்கு வரிகளுக்கு மேல் நீளும் எந்த ஒரு பின் கருத்தும், நிச்சயமாக எதிர்ப்பு கருத்தாகவோ இல்லை மறுப்பு கருத்தாகவோ தான் இருக்கின்றது . எழுதாத வார்த்தைகள் அழகானவை ...!


பேசாத வார்த்தைகள் அழகானவை ...!
எம் உலகம் பேசாத வார்த்தைகளால் நிறைந்திருக்கின்றது ..!
எழுதாத வார்த்தைகள் அழகானவை ...!
எம் உலகம் எழுதாத வார்த்தைகளால் நிறைந்திருக்கின்றது ..!

13 comments:

  1. பேசாத வார்த்தைகள் அழகானவை.. :)
    Nice one..

    ReplyDelete
  2. ரசித்தேன்... என்னிடம் நேரில் பேசாத அழகான வார்த்தைகளை எழுத்தில் ரசித்தேன்... பாராட்டுக்கள்...

    இது போல் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொடரலாம் அண்ணா ...! நன்றி .

      Delete
  3. அற்புதமான பதிவு நண்பா.. மிக மிக மிக ரசித்தேன்... ரசிக்க வைத்தது என்பதை விட உணர வைத்தது..அட சொல்ல வைத்தது ... சபாஷ்

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றி நண்பா . வலைபதிவுகளின் வாசிப்பின் தாக்கம் . குறிப்பாக வாரியாரை வாசிப்பதின் தாக்கம் .

      Delete
  4. நம்மில் பலரும் இப்படித்தான் இருக்கிறோம்... நன்றி சொல்ல, பாராட்ட... பேசாத வார்த்தைகள் அழகானவை என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம்..

    அப்புறம்... போட்டோல ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நன்றி ஸ்கூல் பையன் அண்ணா .

      //அப்புறம்... போட்டோல ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க...//
      பருவத்தில் பண்ணிக்குட்டிகூட அழகாகத்தானிருக்கும் என்று படித்ததுண்டு . ஆணின் பருவம் முப்பதோ என்னவோ .

      Delete
  5. நல்ல கருத்து. கட்டுரையாக இருந்தாலும் கவிதைத் தன்மையுடன் அமைந்திருந்தது பதிவு.
    பக்க வடிவமைப்பை வண்ணத்தில் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்..வண்ணத்துப் பூச்சி என்றாலே வண்ணங்களின் கலவை அல்லவா.ஏற்கனவே சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //நல்ல கருத்து. கட்டுரையாக இருந்தாலும் கவிதைத் தன்மையுடன் அமைந்திருந்தது பதிவு.//

      வலைபதிவுகளின் வாசிப்பின் தாக்கம் .

      //பக்க வடிவமைப்பை வண்ணத்தில் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.//

      கருப்பு வெள்ளை மேல் தீராக்காதல் அதனால் தான் .

      Delete
  6. //கீரை விய்க்கும் பாட்டியிடமும் , செருப்பு தைக்கும் பெரியவரிடமும் வியாபாரத்தில் பேரம் பேசும் நாக்கு , மால்களிலும் , சூப்பர்மார்க்கெட்களிலும் நடக்கும் பகல் கொள்ளைகளை பார்த்ததும் வறண்டுவிடுகின்றது . நியாயமும் , நிஜமும் , உரிமையும் பேசும் அந்த வெளிப்படுத்தாத, பேசாத வார்த்தைகள் அழகானவை ...!
    //

    உண்மை உண்மை

    ReplyDelete

Related Posts with Thumbnails