Mar 26, 2014

தண்ணீர் - கண்ணீர் ...!

"நாக்கு இல்ல , நாடி நரம்பெல்லாம் வறண்டு போகப்போகுதுடா ...!"

ஊரிலிருந்து திரும்பி வந்த அம்மா சொன்ன வார்த்தைதான் இது . ஒட்டு மொத்த தமிழகமே தண்ணீர் பஞ்சத்தை நோக்கி காட்டாற்று வெள்ளம் போல முன்னேற , எங்கள் சிவகங்கைச் சீமை அதற்கும் ஒரு படி மேலே வேகமாக சென்றுகொண்டிருக்கின்றது .

ஆற்றுப்பாசனமோ , வாய்க்கால் பாசனமோ ஏதொன்றும் இல்லை . வானம் பார்த்த பூமி , இப்பொழுது வானத்தையும் பார்க்க முடியாததாகி தகிப்பது பெருங்கொடுமை . சிவகங்கை மாவட்டத்தின் எல்லைக் கிராமம் பூலாங்குறிச்சி தான் எங்கள் ஊர். தண்ணீர் வசதி ஏதுமில்லாத போதும் , இயற்கையிலேயே அமைந்த மலைகளும் , அதிலிருந்து வரும் ஊற்றுகளும் , மூதாதையர்கள் நுட்பமுடன் அமைத்த ஒன்றை ஒன்று தொடர்புடைய குளங்களும் , ஊருணிகளும் இது வரை காப்பாற்றியது .

மினரல் வாட்டரெல்லாம் வருவதற்கு முன்பே எங்கள் ஊர் தண்ணீர் அக்கம் பக்கத்து ஊர்களில் மினரல் வாட்டர் கணக்காக விற்கப்பட்டது . பொன்னமராவதியிலோ , கொப்பனாபட்டியிலோ இல்லை அக்கம் , பக்கம் உள்ள ஏதேனும் ஒரு கிராமத்திலுள்ள வீட்டில் குடிக்க பூலாங்குறிச்சி தண்ணீர் தந்தார்கள் என்றால் , அவர்கள் கொஞ்சம் வசதி படைத்தவர்கள் என்று அர்த்தம் . அனுதினமும் அதிகாலையிலும் , அந்தி மாலையிலும் அக்காக்களும் , அண்ணன்களும் சாரை சாரையாக மிதிவண்டியில் ரப்பர் டியூபுடன்  , பிளாஸ்டிக் குடங்களுடனும் தண்ணீர் சுமந்து செல்வார்கள். முறையே வீடுகளுக்கும் , விற்பதற்கும் . இப்படி இருந்த ஊரில் இன்று மினரல் வாட்டர் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள் .

கேணிக் கயிறு , வாளியை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு , எங்கள் வீட்டு கிணற்றில் மொந்து குளித்த நாட்கள் எல்லாம் போய் இன்று இரண்டு செட் கயிறு வாங்கி பிணைத்து இறைத்துக் கொண்டிருக்கிறோம் . அப்படியே இறைத்தாலும் , வாளியில் வரும் தண்ணீரை விட உடம்பில் இருந்து வெளியேறும் வியர்வை நீர் தான் அதிகமாக இருக்கின்றது . ஆடு , மாடுகளெல்லாம் அடிமாட்டுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது . வெயில் மழை பொழிந்து கொண்டிருக்கின்றது.

பொதுவாக விவசாயம் தவிர வேறெந்த தொழிற் வாய்ப்பும் , வசதியும் இல்லாத தேய்ந்த தென் மாவட்டமான எங்கள் மாவட்டத்தில் வீட்டுக்கொருவர் மலைசியாவிலோ, சிங்கப்பூரிலோ கொண்டுவிற்கப் போயிருப்பார்கள் . என் உடன் படித்த நண்பர்களில் என்பது சதவீதத்திற்கும் மேலே மேற்படி ஊர்களில் தான் வாழ்கிறார்கள் இல்லை பிழைக்கிறார்கள்  . இப்பொழுது இந்த நிலைமை மாறிவிட்டது , வீட்டிற்கு ஒருவர் இல்லை இருவராகிவிட்டனர் . போகிற போக்கில் ஒட்டு மொத்த சிவகங்கை மாவட்டமும் சிங்கைக்கோ , மலைசியாவிற்கோ புலம் பெயர்ந்தாலும் ஆசார்யப்படுவதற்கில்லை .ஆனால், அப்பொழுதுகூட எங்கள் தொகுதி மாண்புமிகு ஏதோவொரு கிராமத்தின் ATM ஐ திறந்து கொண்டு, இந்தியா வளர்ந்துகொண்டிருக்கிறது என்பார் .

வைரமுத்து சொன்ன தண்ணீருக்கான மூன்றாம் உலகப்போர் வரும் தலைமுறையில் அல்ல , நம் தலைமுறையிலேயே வரப்போகின்றது . வெகுவிரைவில் , நீங்களும் , நானும் தண்ணீருக்காக கட்டிப் புரண்டு சண்டை போடப்போகின்றோம் .

திரையரங்குகளில் காண்பிக்கப்படும்  “நான் தான் முகேஷ் “ என்ற விளம்பரப் படத்தில் புகையிலைக்குப் பதிலாக தண்ணீரையும், பாடப் புத்தகங்களில் தீண்டாமைக்குப் பதிலாக விளை நிலங்களை , விலை நிலங்களாக்குவது ஒரு பாவச் செயல் என்று போடும் நாள் வந்துவிட்டதென்றே நினைக்கின்றேன் . அரசுகளையும் , அதிகாரிகளையும் குறைசொல்வதை விட்டுவிட்டு  , ஒவ்வொரு தனி மனிதனும் தன்னளவில் தண்ணீரின் அவசியத்தையும் , முக்கியத்துவத்தையும் உணர்ந்தாலொழிய தண்ணீருக்காக சிந்தப்போகும் செந்நீரை யாராலும் தடுக்கவோ / தவிர்க்கவோ முடியாது

நீ எதிர் பார்க்கும் மாற்றத்தை உன்னில் இருந்தே ஆரம்பி என்று சொல்வார்கள் . அதன்படி , என்னால் முடிந்த அளவு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென்றும், மக்காத பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக மஞ்சள் பைகளையும் , கட்டை பைகளையும் பயன்படுத்த வேண்டுமென்று முடிவெடுத்து அதன்படி நடக்க ஆரம்பித்துள்ளேன் . கண் கெட்ட பிறகான சூரிய நமஸ்காரம் தான் ... கண்ணோடு போகட்டுமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு .

செலவழிக்கும் ஒவ்வொரு அதிகபட்ச தண்ணீர் துளியும் , தண்ணீர் கிடைக்காமல் நாக்கு, நாடி, நரம்பெல்லாம் வறண்டு போய் மாண்டு போன யாரோ ஒருவருடைய செந்நீர் என்றும்  . பிளாஸ்டிக் பைகளை கைகளில் தொடும்போதெல்லாம் , தண்ணீர் இல்லாமல் மாண்டு போன ஒரு குழந்தையின் சடலத்தை தொடுவது போலவுமே உணர்வதாக கற்பிதம் செய்து கொள்கின்றேன் நான் . நீங்கள் ......?

நாக்கு இல்ல , நாடி நரம்பெல்லாம் வறண்டு போகப்போகுதுடா ....!

என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .Mar 20, 2014

பேசாத வார்த்தைகள் : விஜய் , குக்கூ , டூர் & ட்வீட் .


நடிகர் கம் பாடகர் வரிசையில் உலக நாயகனுக்குப் பிறகு இளைய தளபதி குறிப்பிட்டுச்சொல்லக் கூடியவராகிறார் . சாமீபத்திய ஜில்லா “படத்தின் கண்டாங்கி கண்டாங்கி” பாடலில் தலைவி ஷ்ரேயாகோஷால்உடன் பாந்தமாக பாடியிருக்கிறார் . காஸ்ட்யூமும் , காட்சி படமாக்கப்பட்ட இடங்களும் பாடலுக்கு பொருந்தாத போதிலும் , தளபதியின் குரலிலும் , நடனத்திலும் அப்டியொரு வசீகரம் .

**********************************************************************************************************************************************************

புதுப்படங்களில் கவன ஈர்ப்பு செய்யும் பாடல் - குக்கூ படத்தின் , “கல்யாணமாம் கல்யாணம்” . வழக்கமான காதல் தோல்வி சிச்சுவேசன் பாடலென்ற பொழுதிலும் , கவன ஈர்ப்பு செய்வது இசையும் , குண்டடித்த எம்.ஜி.ஆரும் , பூசினாற்போல வரும் சந்திரபாபுவும் தான்  . சந்திரபாபுவை பார்க்கும் போது அவ்வளவு பரவசமாக இருக்கிறது . நம்பியார் , ரகுவரன் , நாகேஷ் போன்று மறக்க முடியாத நடிகர்களில் சந்திரபாபு முதன்மையானவர் .


**********************************************************************************************************************************************************


அலுவலக டூரில் , எந்தெந்த ஊர்களுக்கு செல்வதென்பதை முடிவு செய்யும் பொருட்டு பொதுக்குழுவை கூட்டி இருந்தார்கள் .  கடவுளின் தேசத்திற்கு போகலாமென நான் உள்பட நால்வர் கை தூக்க . தண்ணீர் தேசத்திற்கு போகலாமென நாற்பதுக்கும் மேற்பட்டோர் கைகள் , கால்கள் என மொத்தமாக தூக்க , நால்வருக்கும் டெப்பாசிட் காலி . என்னென்னமோ சொல்லி கேன்வாஸ் பண்ணினாலும் எடுபடவில்லை . வேணும்னா , இரண்டு அணியாக பிரிந்து  முதல் அணி பாண்டிக்கும் , இரண்டாவது அணி வீகாலேண்டுக்கும் போகலாமென ஒருவர் ஐடியா கொடுக்க , நமக்கு அடிவயிறே கலங்கிவிட்டது . பின்னே , மூணு படி மேலேறி , கீழே பார்த்தாலே நமக்கு தலையும் தரையும் சேர்ந்து சுத்தும்  இதில் வீகாலேண்ட், ஜெயண்ட்வீல்னு பேரக்கேட்டாலே டரியலாகுது. ஆணி புடுங்கவே வரலையப்பாவென்று கூறி வெளிநடப்பு செய்தாயிற்று . என்னவொன்னு டூர் போயிருந்தா, அப்படி இப்படின்னு  ஒரு அஞ்சாறு பதிவும் , ஏழெட்டு FB ஸ்டேட்டசும் தேத்தியிருக்கலாம் J விதி வலியது .....!

**********************************************************************************************************************************************************

தமிழனுக்கு தெரிந்ததெல்லாம் ரெண்டே திசைகள் தான் , ஒண்ணு நார்த் மற்றொன்று சவுத் . ஈஸ்ட் , வெஸ்ட்டெல்லாம் என்ன பாவம் பண்ணுச்சோ . / நான் தமிழன் /


ஜீவன்பேஷனில் : ஜீவன் பேஷன் : கோடைக்கேற்ற ஆடை - லினன் ( LINEN)என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .
Mar 17, 2014

பேசாத வார்த்தைகள் : நீலாங்கரை , ட்வீட் , வித்தியாசம் .புலிவால் படத்தில் வரும் நீலாங்கரையில் பாடல் இப்பொழுதைய விருப்பப்பார்வையில் . தினமும் ஓரிரு முறையேனும் காணொளியுடன் பார்த்துவிடுகிறேன் . பாடலின் சில காட்சிகள் சர்வம் படத்தின் பாடலை நினைவு படுத்தினாலும் ,  படமாக்கப்பட்டிருக்கும் இடங்களும் , நடனமும் , இசையும் அழகு ...!

வழக்கமாக பாடல் காட்சிகளில் நடமாடும் விமல் , மேற்படி பாடலில் நடனமாடியிருப்பது ஆச்சர்ய அதிர்ச்சி . அதிலும் அம்மணி அனன்யா அலுங்காமல் ஆட , அண்ணனோ குலுங்கி குலுங்கி ஆடுகிறார் . நடன வகுப்புக்கு போகிறார் போல , போய்த்தானே ஆகவேண்டும் , இல்லையெனில் சி.கா &  வி.சே க்களின் போட்டியை எப்படி சமாளிப்பது .? அனன்யா , வெகுளித்தனமான கதாபாத்திரங்களுக்கெனவே செய்துவைத்த பதுமை . லைலா, ஜெனிலியா போன்ற லூசுத்தனமான வெகுளிகள் பட்டியலில் இவரையும் சேர்க்காமல் இருந்தால் சரி .

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் மற்றுமொரு முணுமுணுக்க வைக்கும் அழகானதொரு இசைக்கோர்வை . தென்மேற்கு பருவக் காற்றிலிருந்து -புலிவால் வரையிலுமாக என்.ஆர்.ஆர் இசையில் வெளிவந்த படங்களில் குறைந்தது ஒரு பாடலாவது வானொலி மற்றும் காணொளிகளின் விருப்பப் பாடல்களாக இருந்துவிடுகின்றது . பாடல்கள் & இசை சிறப்பாக இருந்தும் அதற்கான அங்கீகாரம் அவருக்கு சரியாக கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம் .

பெண்கள் கொண்ட ஆசையெல்லாம்
Fridge ல்  வைத்த ஆப்பிள் போல ,
ஆண்கள் கொண்ட ஆசையெல்லாம்
வெயிலில் வைத்த வெண்ணெய் போல ....

மேலே உள்ள வரிகள் மேற்படி பாடலில் கதாநாயகி பாடுவது போல வருகிறது ... பொருளுரை புரிந்தவர்கள் விவரிக்கவும் .

ட்வீட்டு

இன்றைய ஆண்களின் முக்கியமான இரண்டு பிரச்சினைகள்- முடி & மடி , முதலாவது வளராம படுத்துது , இரண்டாவது வளர்ந்து படுத்துது – நான் ஆண் –

வித்தியாசம் ..

இன்னொன்னு சாப்புட்டுடான்னு தட்டுல கொண்டாந்து தோசைய வச்சா அது அம்மா ,
இன்னொரு தோச வேணுமான்னு கேட்டா அது வீட்டுக்காரம்மா .

தம்பி , முடி வெள்ளிக்கம்பிக் கணக்கா இருக்குடா – அம்மா .
தல பூராம் நரச்சுப்போச்சு – வீட்டுக்காரம்மா ...
என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .


Mar 10, 2014

பேசாத வார்த்தைகள் : கோலி சோடா *ச.இ.க.இ * ட்வீட் .

ரசித்தது –உடல் மொழி

ஒரு படமோ , பாடலோ  வெற்றியடைந்துவிட்டால் அதைபோலவோ/ அதையேவோ  திரும்ப திரும்ப வேறு வேறு பெயர்களில் எடுத்து , நம்மை சாவடிக்குரதுல தமிழ் சினிமா பிரம்மாக்களை மிஞ்ச ஆளே இல்லை .

சமீபத்திய உ.தா – கானா பாலா . கதையில்லாமல் கூட படம் எடுக்கிறார்கள் , ஆனால் கானா பாலா குரலில்லாமல் எடுப்பதில்லை . படத்திற்கும் , காட்சிக்கும் தேவையா , கதாபாத்திரத்திற்கு பொருத்தமான குரலான்னு ஏதொன்றையும் கருத்தில் கொள்ளாமல் நம்மைக் கொல்லுகிறார்கள். இப்பல்லாம் கா.பாலா குரலைக் கேட்டாலே காதுக்குள்ளார கடப்பாறைய விட்டு குடையுறமாதிரியே feel ஆகுது .

மேற்படி குடைச்சல் காரணமாகவே கோலி சோடா படத்தில் அண்ணன் கா.பா பாடிய All your Beauty பாட்டை கேட்டாலே தெரிச்சுடுவேன் . But , போன வாரம் ரிமோட் மக்கர் பண்ண வேறு வழியில்லாம கடப்பாறைய காதுக்குள்ளார விடவேண்டியதாப்போச்சு . ஆனா பாருங்க பாட்டும் , காட்சியும் ரெம்ப நல்லாவே இருக்கு . இப்ப அடிக்கடி விரும்பிப் பார்க்கும் பாடலாகிவிட்டது

பாடல் வரிகள் செம்ம லோக்கலா , ரகளையா நல்லா இருக்கு . அத விட முக்கியமா அன்பரசு விற்கு ஜோடியாக (சின்னத்)தாமரை போன்ற சாயலில் வரும் அந்தப் பொண்ணு அவ்வளவு லட்சணம் . உடல் மொழி கூட ரெம்பவே நல்லாருக்கு. குறிப்பா பையன் கைய புடிச்சுகிட்டு விடுற ஒரு லுக்கும் , அரை நொடிப்பொழுதில் அடிக்கும் அந்த சைட்டும் , வாயில் கை வைத்தபடி சிந்தும் சிரிப்பும் அட்டகாசம் . பொண்ணு வர்ற காட்சியெல்லாம் ஹைக்கூ கவிதை .

கவிஞர் தாமரை , சொய்ங் சொய்ங் பாடலுக்கு நடனமாடிய சந்தியா , அப்புறம் நம்ம பொண்ணு இந்த மூணு பேருக்கும் உள்ள எனக்கு ரெம்பப்பிடித்த ஒரு ஒற்றுமை , மூணு பேருமே நடு வகிடு எடுக்காமல் , பக்கவாட்டில வகிடு எடுத்திருப்பார்கள் . அவர்களின் முகவெட்டுக்கு , பக்கவாட்டு வகிடு பக்காவா இருக்கு .

பெண் குழந்தை பிறக்கவேண்டும் என்றும்  , அவள் பக்கவாட்டு வகிடு எடுக்கவேண்டும் என்றொரு ஆசையும் உண்டெனக்கு ....! J

ச.இ.க.இ...!

அதிகாலைத் தேநீருடன்
கூடிய செய்தித்தாள்

பின் மதிய கருப்பு
வெள்ளை கிளாசிக் மூவி

முன்னிரவு இளையராஜா இசை

இது மூன்றுமே போதுமானதாக
இருக்கிறது எனதொருநாளை
உயிர்ப்பித்துக் கொள்ள ...!

பிளாக்குல ட்வீட்டு :

கீழ விழுந்ததும், அடிபட்டுருக்கான்னு பார்க்குறதவிட அடுத்தவய்ங்க யாரும் பார்த்துட்டாய்ங்களான்னு பார்க்குறவய்ங்கதான் நம்மில் அதிகம். - நான் அவன்-என்றென்றும் புன்னகையுடன் J

ஜீவன்சுப்பு .


Mar 6, 2014

பேசாத வார்த்தைகள் : இன்லேன்ட் லெட்டர் ...!

கைப்பட ஒரு கடிதம் எழுத வேண்டிய சூழ்நிலை சமீபத்தில் . கொரியர் மூலம் அனுப்பலாம் என்று முடிவு செய்து , A 4 SHEET , கவர் எல்லாம் வாங்கி கொரியர் ஆபீஸ் போனால் , அங்கு ஏகப்பட்ட  நிபந்தனைகள் ,  குறைந்தபட்ச கட்டணமே முப்பது ரூபாயாம் . ரிமோட் ஏரியாவாக இருந்தால் தபாலை பட்டுவாடா செய்வதற்கு குறைந்த பட்சம் மூன்று நாட்களாகுமாம் அடுக்கிக்கொண்டே போனார் ஊழியர் .... போங்கடா நீங்களும் உங்க கூரியர் சர்வீசும்னு சொல்லிட்டு அஞ்சலகத்தை நோக்கி அடியை போட்டேன் .

பல வருஷம் ஆகிடுச்சு போஸ்ட் ஆபீஸ் போய் . தடை உத்தரவு போட்ட கிராமத்தில் கூட ஏழெட்டு காவல்துறை தலைகள் தென்படும். நான் நுழைந்த போஸ்ட் ஆபீஸ்ல நாலே பேரு . அந்த நால்வரும் போஸ்ட் ஆபீஸ் ஊழியர்கள்ன்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்ல .  

வழி மேல் விழி வைத்து காத்திருந்தவரிடம் ஒரு இன்லேன்ட் லெட்டர் கேட்டு பத்து ரூபாயை நீட்டினேன் . சில்லறை இல்ல தம்பி நாலா வாங்கிக்குங்களேன்னு சொல்லி கல்லாவை திறந்து காட்டினார் . கல்லா காந்தித்தாத்தா தலையை போலவே இருந்தது . போஸ்ட் கார்டு இருக்கான்னு கேட்க நினைத்து , இல்லன்னு சொல்லிட்டா மனசக்கு கஷ்டமா ஆகிடுமேன்னு கேட்கமாலே வந்துவிட்டேன் . ஏன்னா , போஸ்ட் கார்டுக்கும் எனக்கும் ஏகப்பட்ட நெருக்கம், அதைப்பத்தி தனியே ஒரு பதிவெழுதி ஹிட்ஸ் தேத்த வேண்டும் , so , அது தனியா வரும் J.


இந்த இடத்துல ஒரு சின்ன பி.பேக்...

பால்யத்தில் இன்லேன்ட் லெட்டரை பற்றிய என் அபிப்பிராயத்தை நினைத்தால் சிப்பு சிப்பாக வருகிறது . இங்கிலாந்து லெட்டர் என்பது தான் திரிந்து பேச்சு வாக்கில் இன்லேன்ட் லெட்டர் ஆகிவிட்டதாக வெகு நாட்கள் நம்பியிருந்தேன் . இங்கிலாந்து நாட்டுக்காரங்க நம்மை ஆண்டுகொண்டிருந்தபோது கொண்டுவரப்பட்டது என்பதினால் இந்தப்பெயர் வந்தது என்று எம் அறிவுக்கூட்டத்திடம் சொல்லி அதை ஞாயப்”படுத்தியதும்” உண்டு , நமக்கு வாய்த்த அடிமைகளும் அதை நம்பினார்கள் . ஐந்தாம் வகுப்பில் அடுத்த ஊரில் இருந்து புதிதாக வந்து சேர்ந்த ஒரு தேர்ந்த அறிவாளி , எங்கள் நம்பிக்கையில் பலமாக ஆணி அடித்தான் .... ! அதாகப்பட்டது அந்தக்காலத்துல எல்லாரும் இங்க்  பேனாவுலதான் எழுதுவாங்க , SO , இங்க் லெட்டர் தான் மருவி இங்கிலாந்து லெட்டர் ஆகிவிட்டதாக சொல்லி நம் அடிமைக்கூடாரத்தை காலி செய்துவிட்டான்
.
இந்த இன்லேன்ட் லெட்டர் இருக்கு பாருங்க , அதை அவ்வளவு எளிதாகவெல்லாம்  மடித்துவிடமுடியாது .நிச்சயமாக தனித்திறமை வேண்டும் . அதைவிட இரண்டு மடங்கு திறமையும் , லாவகமும் பிரிப்பதற்கு வேண்டும் . பெரும்பாலும் நான் பிரித்த லெட்டர்கள் எல்லாம்  , சரளாவிடம் அடிவாங்கிய வடிவேலுவைப்போல நாராசமாய் கிழிந்து தொங்கும் . சேதாரம் இல்லாமல் பிரித்ததே இல்லை .

ரெம்ப சல்லிசான பைசா ங்குற ஒரே காரணத்தினால் வீட்டில் எப்பொழுதும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்துவது அஞ்சல் அட்டைதான் . போஸ்ட் கார்டுல  இருக்குற மிகப்பெரிய குறை பிரைவசி.  மிக முக்கியமான விசயங்கள் இருந்தால் மட்டுமே இன்லேன்ட் லெட்டர் வாங்குவார்கள் . இன்லேன்ட் லெட்டர்ல எழுதுறதே ஒரு தனி பெருமை , போஸ்ட் மாஸ்டர் நிமிர்ந்து பார்த்து லெட்டரை  ஐ கொடுப்பதில் இருந்து , போஸ்ட் பண்ற வரைக்கும் ஒரே குதூகலம்தான் .

போஸ்ட் பண்றதுல இருக்குற ஒரே சிக்கல் , போஸ்ட் பாக்ஸ் இருக்கும் உயரம் . எங்க கிராமத்தில் போஸ்ட் பாக்ஸை ஐந்தடி உயரத்தில் தான் வைத்திருப்பார்கள் . ஏன்னா, பழைய ஸ்டாம்புகளை தரலைன்னு சொல்லி போஸ்ட் மேன்/மாஸ்டர் மேல இருக்குற கோபத்தை  எங்களை மாதிரி சமத்தான பசங்கள் போஸ்ட் பாக்சிற்குள் கல்லு மண்ணு போட்டு காட்டுவோம் . இன்னும் ரெம்ப சமத்தான பருத்திவீர பசங்கள் தவளை , ஒனான்னு போட்டு போஸ்ட் பாக்ச ஒரு மினி மி.க.சா யாவே மாத்திடுவானுங்க .

So , போஸ்ட் பண்ணுவதற்கு மற்றுமொரு சமத்தனோ , இல்லை சமத்தனாக இருந்து இப்ப அட்வைசர் ஆறுமுகமா மாறியிருக்கும் யாரோ ஒரு அண்ணனின் உதவியோ தேவை . எப்பவும் போஸ்ட் பண்ண பிறகு உள்ள கைய விட்டு ஒரு ஆட்டு ஆட்டி , ரெண்டு சைடுலையும் ஒரு தட்டு தட்டுனாத்தான் ஒரு திருப்தி இருக்கும் . சமயங்கள்ல ரத்தம் பார்த்த கடிதங்கள் கூட உண்டு J

இந்த இடத்துல பி.பேக் முடியுது ....!

பழக்க தோசத்துல போஸ்ட் பண்ண பிறகு உள்ள கைய விட்டு பார்த்த என்னைய போஸ்ட் ஆபீசர் முறைக்கவே , வழிந்துவிட்டு ஓடியாந்துட்டேன் .

இப்போ எனக்கு வேறொரு பிரச்சினை , மீதம் உள்ள மூன்று கடிதங்களும் தங்களை உயிர்ப்பிக்க சொல்லி ஓயாமல் தட்டிக்கொண்டே இருக்கின்றன மேசையை . முகவரியை தேடிக்கொண்டே இருக்கின்றேன் நான் . உங்களில் யாருக்கேனும் உங்களுடைய பால்யத்தின் பரவசத்தை அனுபவிக்கவேண்டுமேன்று விருப்பமிருந்தால் பின்னூட்டத்தில் உங்களது முகவரியை சொல்லிச்செல்லுங்கள் . பரவசம் பத்திரமாக அனுப்பிவைக்கப்படும் இன்லேன்ட் லெட்டர் வழியாக ....!

பி.கு: ஆச்சர்யமான விசயம் என்னன்னா , சனிக்கிழமை மதியம் போஸ்ட் பண்ண லெட்டர் செவ்வாய்க்கிழமை காலை உரியவரிடம் சேர்ப்பிக்கப்பட்டுவிட்டதுங்குறதுதான்  . இரண்டரை ரூபாயில வேலையும் முடிஞ்சுடுத்து . ஜீவன் ஹேப்பி அண்ணாச்சி J.

என்றென்றும் புன்னகையுடன் J
ஜீவன்சுப்பு .