Apr 28, 2013

ஞானும் பயணக்கட்டுர எழுதப்போறேன் ....!வலையுலகில் இது பயணக்கட்டுரை மா....த........ம்...! எல்லாரும் எழுதுறாங்கோ ஸோ ஞானும் பயணக்கட்டுர எழுதலாம்னு முடிவு பண்ணிருக்கேன் . ஊரை ஓட்டி வாழ்றது தானே உத்தமம்.....!

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மருதமல போயிட்டு வந்தேன் . அதனால , மருதமலைக்கு போயிட்டு வந்தத சுவைபட எழுதப்போறேன் ....! ( சுவைபட க்கு பக்கத்துல ஆச்சரியக்குறி, கேள்விக்குறியல்லாம் போடமுடியாதுங்க...! கான்ஃபிடன்ட் பாஸ் கான்ஃபிடன்ட்..! ) சரி பயணக்கட்டுர எழுதுறதுன்னு முடிவு பண்ணியாச்சு யார் மாதிரி எழுதுறது .... ? யோசிக்கவே இல்ல,  மொத சாய்ஸ் நம்ம “பாலகணேஷ்” அண்ணேந்தான்.....!

பாலகணேஷ் அண்ணேன் மாதிரி கலகலப்பா எழுதுனம்னா படிக்குறவங்க ச்சும்மா விழுந்து விழுந்து சிரிப்பாங்க, உருண்டு பொரண்டு ரசிப்பாங்க, கமெண்ட்ஸ் ச்சும்மா அள்ளும் அப்டின்னு முடிவு பண்ணி, நைட்டு பூரா கட்டில்ல விழுந்து உருண்டு பொரண்டு யோசிச்சு ரெண்டு பக்கம் எழுதுனேன். எழுதுனத வாசிச்சு பாத்தா ....! பாத்தா ...!. ஆத்தா ...! சிரிப்பே வரலங்க ....! கடுப்பு தான் வருது யுவர் ஆனர் ...! சகிக்கல ...! அப்டியே போட்டேன்னா நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சுடும் . அதுசரி அவரு எவ்ளோ பெரிய ஆளு ?  “மலையோட போயி மடு மோதலாமா” ? லாது ...லாது ..! “புலியப்பாத்து பூனை சூடு போட்டுக்கலாமா” ? லாது..! லாது ...! ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் தெரிஞ்சுகிட்டேன்.... இன்னான்னு கேக்குறீங்களா ..? தப்பித்தவறி கூட பதிவுல என் போட்டோவயோ , கொரங்கு போட்டோவயோ போட்டுடக்கூடாது . எப்டி காலாய்ச்சுருக்கோம் நமக்கே திரும்பிடுச்சுன்னா...? ( ஆமா, ஓம் போட்டோவுக்கும் கொரங்கு போட்டோவுக்கும் என்னப்பா வித்தியாசம் அப்டின்னெல்லாம் கமெண்ட் போடப்புடாது, ப்புடாது...! ப்புடாது ..!ப்புடாது ...!

செரி மொத ஆப்சன் நமக்கு ஒத்துவரல. அடுத்து........ ஆங்...! நம்ம “பீப்பீ” மாதிரி எழுதலாம் ...!

நம்ம பிலாசபி பிரபா மாதிரி ச்சும்மா “கிளுகிளு”ப்பா , ரசனையோட , எழுத்துப்பிழையே இல்லாம ஒரு நீ.......ண்....ட.... பயணத்தொடர் எழுதலாம் அப்டின்னு முடிவு பண்ணி, நல்லெண்ணைய நறுக்குன்னு நடுமண்டைல தேச்சுட்டு வீட்லே ரூம் போட்டு களத்துல குதிச்சேன் . நடுச்சாமம் வரைக்கும் எழுதுனேன் . சுமாரா நாலு பத்தி எழுதிமுடிச்சு படிச்சுப் பாத்தா ...! பாத்தா..!  உவ்வே...ஏ..ஏ...! வாமிட் வாமிட்டா வருது அவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு . அப்டியே போட்டேன் “ரசனையாகாது ரகளையாயிடும்”. பிரபா மாதிரி வார்த்தை ஜாலத்தோட பதிவெழுதுரதுக்கெல்லாம் மச்சம் வேணுங்க, நமக்கு காக்கா போட்ட எச்சம் மாதிரி ஒடம்பு பூரா தழும்பு தான் இருக்கு .

ரெண்டாவது ஆப்சனும் அவுட்டு. அடுத்து ....? அடடே நம்ம சீனு ...! வரலாற்று பதிவெல்லாம் எழுதுறாப்புல அவர எப்பூடி மிஸ் பண்ணுனோம் . அடச்சே இவ்ளோ நேரம் கையில “வெண்ணைய” வச்சுண்டு நெய்க்குல்ல அலஞ்சுருக்கோம் ....! 

“மருதமலையை நோக்கி ஒரு வரலாற்றுப் பயணம்” – அடடா தலைப்பே ச்சும்மா அதிருதுல்ல .....! ஓக்கே நமக்கு தோதான ஒரு ஆளப்புடிச்சாச்சு , அட்டகாசமான ஒரு தலைப்பையும் வச்சாச்சு அடுத்து பதிவுல குதிக்க வேண்டியதுதான் . மொத வேல டேட்டா கலெக்ட் பண்ணனும், ரெடி ஸ்டார்ட்..!

மருதமலை ...,
கொங்கு மண்டலம் ,
அறுபடைவீடு,
குடைவரைகோவில்,
நிலவறைக்கதவு ,
தாழி,
தேவர் ...

ஆ..த்.தாடி..! இப்பவே கண்ணகட்டுதே..! எப்ப கலெக்ட் பண்ணி எப்ப பதிவெழுதி எப்ப முடிக்குறது ...!

ஏண்டா டேய்ய்.......! “வரலாறுன்னா எஸ்.டீ.டி தானே”ன்னு கேக்குற நீயெல்லாம் வரலாற்றுப் பயணம் எழுத நினைக்கலாமா ...? இதெல்லாம் ஒனக்கே “டுட்டுடூ” மச்சா தெரியலையான்னு மனஸ் மண்டையில அடிச்ச பின்னாடி தான் புரிஞ்சுது, எவ்ளோ பெரிய ரிஸ்க்கு எடுத்துருக்கோம்னு . மொதல்ல நம்ம போனது வரலாற்றுப் பயணமே இல்ல ..! அப்டியே இருந்தாலும் வரலாற்று பயணம் எழுதுறதுக்கு “சீனு” மாதிரி “தெறமையும்” , “பொறுமையு”ம் வேணும். நமக்கிட்ட “பேனா மை” கூட கெடையாது நமக்கு இதலாம் தேவையா ...?

போச்சு மூணு ஆப்சனும் போச்சு ...! பேசாம எழுதாம விட்ரலாமா...? நோ...! நெவர் ..... ! ஒருபோதும் முன்வச்ச கைய பின் வக்கப்புடாது....! அப்றம் வேற யாரு மாதிரி எழுதுறது ...?  ஆங் ..! ஐடியா..! நம்ம மாதிரியே எழுதுவோம் ...! இவ்ளோ நாள் எழுதலையா ? நாம எழுதுறதையும் படிக்குறாங்கல்ல ? கொஞ்சம் வித்தியாசமா எழுதுவோம் ...! வித்தியாசம் ...................?அது என்ன வித்தியாசம்ன்னு அடுத்த பதிவுல படிச்சு தெரிஞ்சுக்குங்க யுவர் ஆனர்ஸ்.........!
( ஹா ஹா ...! நாங்களும்  வப்போம்ல சஸ்பென்சும் டுவிஸ்ட்டும்...!)

அடுத்த பதிவு : பயணத்தொடர் 1 – ஏன் போனேன் எப்பூடி போனேன் மருதமலை ...!


ப்புடாது...! ப்புடாது..! ப்புடாது...! :

“கலாய்த்தலும் , கலாய்க்கப்படுதலும் நட்பின் உரிமையே” என்று எல்லாம் வல்ல எங்கள் பெரியவால்கணேஷ் அண்ணேன் சாரி பெரிய”பால்கணேஷ்” அண்ணேன் சொல்லியிருப்பதால்  கலாய்க்கப்பட்டவர்கள் கண்டிப்பா கோவிச்சுக்கவோ , அன் பாலோவ் செய்யவோ ப்புடாது..! ப்புடாது..! ப்புடாது...! பதிலுக்கு நீங்க எம்புட்டு வேணும்னாலும் கலாய்ச்சுக்கலாம் .

“மலை”யோட போயி மடு மோதலாமா...... ? “நம்ம “பிலாசபி பிரபா” மாதிரி ச்சும்மா கிளுகிளுப்பா...”
“அடச்சே இவ்ளோ நேரம் கையில “வெண்ணைய” வச்சுண்டு நெய்க்குல்ல அலஞ்சுருக்கோம்” ..........!
இந்த வரிகளையெல்லாம் அடைப்புல போட்டு – ஹா ஹா ஹா என்று சிரித்து, எதிர்க்கட்சி பதிவர்கள் சிலர் திட்டமிட்டு நம்முள் பகையை ஏற்படுத்த ட்ரை பண்ணுவாங்க அப்பக்கூட நீங்க கோவிச்சுக்கப்புடாது...! ப்புடாது..! ப்புடாது..! ப்புடாது...!Apr 27, 2013

வாய்ப்பாடு.....!


கார்மெண்ட்ஸ் பேக்கிங் சம்பந்தமாக அலுவலகத்தில் மேனஜருடன் பேசிக்கொண்டிருந்தேன் . சிறிய பெட்டியில் அதிகமான கார்மெண்ட்ஸ்களை அடைத்துவிடவேண்டுமென்று அதிகார வர்க்கத்தில் இருந்து  ஆணை வந்திருந்ததால் மும்முரமாக கணக்கு பண்ணிக்கொண்டும் , செய்முறை செய்துபார்த்துக்கொண்டுமிருந்தோம் .

இப்டி வச்சா எவ்வளவு புடிக்கும் , அப்டி வச்சா எவ்வளவு புடிக்கும் என்று மேனஜர் கேட்டுக்கொண்டே இருந்தார் , நானும் சொல்லிகொண்டே வந்தேன் .

ஏம்பா...! வித் வைஸ்ல எட்டு பாக்சும் லென்த் வைஸ்ல எட்டு பாக்சும் வச்சா எவ்ளோ வைக்கலாம்...?

“எட்டோ எட்டு அறுபத்தி நாலு சார்”ன்னு சட்டென வாய்தவறி வாய்ப்பாடு சொல்லிவிட்டேன் . அவர் என்னைப்பார்த்தார் நான் அவரைப்பார்த்தேன் . பேசவில்லை சிரித்துக்கொண்டோம் .

இரவு படுக்கைக்கு போனபின்பும் பால்யத்தில படித்த வாய்ப்பாட்டு மனதிற்குள் பாடிக்கொண்டே இருந்தது. அமராவதிபுதூர் குருகுலத்தில் படித்துக்கொண்டிருந்த போது கணக்கு வாத்தியார் செல்வேந்திரன் வாய்ப்பாடு சரியாகச் சொல்லாதவர்களை பாடு பாடுன்னு பாடுபடுத்திவிடுவார் . ஒவ்வொருமுறை வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போதும், எந்தவித முன்னறிவிப்புமில்லாமல்  சிவா நீ பதிமூணாம் வாய்ப்பாடு சொல்லுன்னு பீதியைக்கிளப்புவார்.  எப்ப யார எப்டி கிளப்புவார்னு தெரியாது. நம்மள கிளப்பிடக்கூடாதுன்னு  அவுங்க அவுங்க இஷ்ட தெய்வத்த வேண்டிக்குவோம்.

ஒருமுறை புத்தகத்த பார்த்துக்கொண்டே சுப்பு ஒம்பதாம் வாய்ப்பாடு சொல்லுன்னு சொன்னார். வாத்தியார் தான் கவனிக்கவில்லையே என்று நினைத்துக்கொண்டு எனக்கு தெரிந்த பத்தாம் வாய்ப்பாட்டை ஒப்பிக்க ஆரம்பித்துவிட்டேன்  அடுத்த கணம் சாக்பீஸ் ஈட்டி பறந்து வந்து முன் நெற்றியை பதம் பார்த்தது.

ஏன்டா ராஸ்கல்..! ஏமாத்த பாக்குறியா..? யார்கிட்ட..........!

அதுக்கப்புறம் நடந்தது சென்சார் கட் ....!

பத்தாம் வகுப்பு முடிக்கும் வரை நிறைய முறை சாக்பீஸ் ஈட்டிகளையும்,  டஸ்டர் அம்புகளையும் முகத்தில் வாங்கியிருக்கின்றேன் . இதோ இப்பொழுது முன் நெற்றியை தடவிப்பார்க்கிறேன்  சாக்பீஸ் வாசமும் , செல்வேந்திரன் சார் கோபமும் காற்றில் கலந்து என்னை நோக்கி வருவது போலவே இருக்கிறது .

திடீர்ன்னு இப்ப வாய்ப்பாடு கேட்கனும்னு ஒரு ஆசை ..! என்ன செய்யலாம் என்று யோசித்து  பக்கத்து வீட்டு குட்டிச்சுட்டியிடம் போய் கேட்டேன் ....

“குட்டிம்மா மாமாவுக்கு ஒரு வாய்ப்பாட்டு சொல்றியா ..?”

திரு திருவென முழித்தது ...

“மிட்டாய் வாங்கித்தர்றேன் செல்லம் ...”

ம்கூம் ... அதே பாவம் ... அதே முழி ...

நண்பர் வந்து , “பேபி..! அங்கிளுக்கு டேபிள்ஸ் சொல்லும்மா” என்று சொன்னதற்குப்பிறகு பேபி  இங்கி”லீசில்” எதையோ கக்க ஆரம்பித்தது.....!

பேபி ரோபோவாய் மாறி டேபிள்ஸ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சட்டென “குட்” சொல்லி பட்டென வெளியேறிவிட்டேன் . குழந்தை சரியாகத்தான் சொன்னது என்னால் தான் கேட்க முடியவில்லை . நான் பால்யத்தில் படித்த வாய்ப்பாடும் , பருவத்தில் கேட்ட வாய்ப்பாடும் , இப்பொழுது கேட்க நினைத்த வாய்ப்பாடும் இதுவல்ல .....!Apr 26, 2013

இறப்பும் , இழப்பும் , அனுபவமும் ...!

வீட்டிற்கு ஒற்றைப்பிள்ளையாய் பிறந்ததாலும் , இருபது வருடம் வீட்டைப்பிரிந்து விடுதி வாழ்க்கையே வாழ்ந்தாலும், உறவின் பிறப்பும் , இறப்பும் , ஈட்டலும் , இழத்தலும் , கூடலும், பிரிவும்,  பெரிதாக எந்த ஒரு தாக்கத்தையும் என்னுள் ஏற்படுத்தியதில்லை . இதோ முதல் முறையாக ஓர் இறப்பும் , ஓர் இழப்பும் என்னைத் தாக்கி கொண்டிருக்கிறது , வாட்டிக் கொண்டிருக்கிறது  .

தனித்து வாழ்ந்தே பழக்கப்பட்டிருந்த எனக்கு , திருமணத்தின் மூலம் மனைவி என்ற பெயரில் வந்த ஒரு புது உறவும் அதனை தொடர்ந்து வந்த மாமனார் , மாமியார் , மச்சான் .. இன்னும் பல உறவுகளும் மிக புதிதாகவும் , புதிராகவுமே இருந்தது. எளிதாக ஒட்டவும் முடியவில்லை , ஒதுங்கவும் முடியவில்லை . திருமண ஆன பின்பும் மனைவி அவர் அம்மா வீட்டிலிருந்தே படித்துக்கொண்டிருந்தார் . தனித்தே இருந்து பழகிவிட்டதாலும் , மாமியார் வீடு  செல்ல கூச்சமாக இருந்ததாலும் , அடிக்கடி மாமியார் வீடு செல்வதில்லை . எப்பொழுதாவது சென்று வருவதுண்டு . மாமியார் மீது மிகப்பெரிய அன்பும் இல்லை , கோபமும் இல்லை . தாமரை இல்லை தண்ணீர் போல பட்டும் படாமலும் ஓர் உறவு .

கடந்த வாரம் திங்கள் கிழமை முன்னிரவில் மனைவியும், மைத்துனனும் கதறிக்கொண்டே போனில் சொன்னார்கள் அம்மா இறந்துவிட்டார் என்று  . ஆம் என் மாமியார்  இறந்து விட்டார் . வயதொன்றும் அதிகமில்லை ஐம்பதுதான் . நெஞ்சு வலியென்று மருத்துவமனைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தவர் வழியிலேயே இறந்துவிட்டார் . செய்தி கேட்டவுடன் ஏதோ ஒரு விவரிக்க முடியாத உணர்வு சூழ்ந்துகொண்டது . டூ வீலரில் சாவியே போடாமல் வண்டியை  உதைக்கின்றேன் . ஸ்டாண்டில் வண்டி நம்பர் கேட்கும்போது தடுமாறுகின்றேன் . நெருங்கிய ஒருவரின் மரணச் செய்தி நம்மை நிலைகுலைய வைத்துவிடும்போல .

பெரும்பாலும் பயணங்கள் எல்லாருக்கும் சந்தோசமாகவே இருக்கும் . ஒரே ஒரு பயணத்தை தவிர...! அது  பின்னிரவில் துக்கத்துக்கு செல்லும் பயணம் . அந்த பயணம் மிகவும் வலி நிறைந்தது , ரணமானது . உலத்திலேயே மிக நீளமான துயரமான பயணம் துக்கத்துக்கு செல்லும் இரவுப் பயணமாகத்தானிருக்கும். கடைசியாக அத்தையை எப்பொழுது பார்த்தோம் , என்ன பேசினோம் ...? கடைசியாக தொலைபேசியில் பேசியபொழுது இன்னும் கொஞ்சம் பிரியமாக பேசியிருக்கலாமோ என்று  ஏதேதோ எண்ணங்கள் அலை மோதுகின்றன ....!

மத்தியான வெயிலில் மைத்துனன் சாலையில் புரண்டு அழுகின்றான் அம்மா வேண்டுமென்று , என்ன சொல்லி தேற்றுவது என்றே தெரியவில்லை . ஆறுதல் சொல்கிறேனென்று ஏதேதோ பிதற்றிக்கொண்டிருந்தேன் . நான் பிதற்றியது எனக்கே புரியவில்லை பாவம் அவனுக்கெங்கே புரிந்திருக்கும் . அழாதேப்பா என்று ஆளாளுக்கு அறிவுரை சொன்னார்கள் . என்னால் அறிவுரை சொல்லவும் முடியவில்லை , ஆறுதல் சொல்லவும் முடியவில்லை , அழுகட்டும் அழுது தீர்க்கட்டும் என்று அமைதியாக அவனை  அணைத்துக்கொண்டேன் . அரவணைப்பைவிட சிறந்த ஆறுதல் வார்த்தை இருப்பதாக எனக்கு தெரியவில்லை .

சடங்கும் மரியாதையும் முடித்து மாலை வீடு திரும்பிய பொழுது எனக்கே அழுகை வந்துவிட்டது. காலையில் திசையெங்கும் இருந்து கூடிய உறவுகளும் , நட்புகளும் , மாலையில் கல்லெறிந்த காக்கை கூட்டம் போல கலைந்துவிட்டது . மரணத்தின் வலியை விட , மரணத்திற்கு பின்பான தனிமையும் , இருட்டும் பல மடங்கு வலி நிறைந்தது .

சடங்குகள் , இறப்பு சான்றிதழ் , வங்கி பெயர் மாற்றம் என்று பகல் முழுக்க அலைச்சல்  , இரவு முழுக்க மன உளைச்சல் என்று ஒரு வாரம் கழிந்துவிட்டது . அத்தையை மாலையுடன் கிடத்தியிருந்த போர்டிகோவில் , இதோ இன்று வீட்டு ஓனரின் புத்தம் புது கார் மாலையுடன் நின்றுகொண்டிருக்கிறது . இவ்வளவு தான் வாழ்க்கை .

வீட்டை காலி செய்து மனைவியை நானும் , மாமாவை மைத்துனனும் கூட்டிக்கொண்டு வெளியேறிய கணம் மிக கொடுமையானது . சாலையில் இறங்கி வீட்டை திரும்பி பார்த்தேன் . இவ்வளவு நாள் அழகான வீடாகத் தெரிந்தது இப்பொழுது சூன்யம் நிரம்பிய ஓர் இருட்டறையாகத் தெரிந்தது . எவ்வளவு கோடி கொட்டி பகட்டாகவும் , ஆடம்பரமாகவும் பங்களாக்களை கட்டினாலும் , ஒரு பெண்ணின் இருப்பும் , வசிப்பும் மட்டுமே அதை வீடாக முழுமை பெறச்செய்யும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்த கணம் அது . பெண்ணில்லாத வீடு எவ்வளவு பெரிய அரண்மனை போலிருந்தாலும் , வெறும் கல் கட்டடம்தான் போல .

இதோ ஒரு நாளைக்கு மூன்று முறை மைத்துனன் பெங்களூரில் இருந்து கூப்பிடுகிறான் , “அய்த்தான் அப்டியே பைத்தியம் புடிக்குற மாதிரி இருக்கு என்ன பண்றதுனே தெரியல” என்று அழுகின்றான் . என்ன சொல்வது...? நண்பர்களுடன் எங்காவது வெளியில போய்வா என்றால் , நண்பர்களே இல்லை என்கின்றான். மூன்று வருடமாக பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றான் ஆனால் நண்பர்களே இல்லை . இவ்வளவு நாள் என்னடா செய்தாய் என்று கேட்டால் தினமும் வேலை விட்டு வீடு வந்து டிவி பார்ப்பானாம் , அம்மாவுடன் தினமும் ஒருமணி நேரம் போனில் பேசுவானாம் . அலுவலகம் , டிவி , போன்  ஒரு சின்ன வட்டம் அவ்வளவுதான் வாழ்க்கை . இந்த வட்டத்தில் ஒன்று தற்பொழுது இல்லை எனும் போது அவனால் தாங்க முடியவில்லை .

ஏதாவது கோவிலுக்கு போ..! இல்ல படத்துக்கு போ..! புத்தகம் வாசி ,பக்கத்து வீட்டு குழந்தையுடன் விளையாடு என்று எதையெதையோ சொல்லி வருகின்றேன்  . நண்பர்களே இல்லாமல் இருப்பதற்கு , நான்கு மோசமான நண்பர்களை வைத்திருப்பது எவ்வளவோ மேல் இல்லையா..? குறைந்தபட்சம், வாழ்க்கையில் சந்திக்கும் மோசமான மனிதர்களை எப்படி  கையாள்வது என்றாவது தெரிந்துகொள்ளலாம் அல்லவா ..! அதனால் இனிமேலாவது நண்பர்களை அமைத்துக்கொள் என்று அறிவுறைக்கிறேன் . ஆனால் எனக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்று யோசித்துப்பார்க்கிறேன் .......?  நான்குக்கு மேல் நொண்டியடிக்கிறது மனது .

மனைவி சற்று பரவாயில்லை வெகு விரைவில் இயல்புக்கு திரும்பிவிட்டார் . காரணம் என்னவென்று யோசித்து பார்த்தால்.., இரட்டைக்குழந்தைகளில் ஒருவரானவள் சிறுவயது முதலே பாட்டி வீட்டிலும் , சித்தி வீட்டிலும் வளர்ந்திருக்கிறாள் . மனைவியின் வட்டம் பெரியது. ஆயா , அப்பத்தா, ஐயா , அண்ணன் , அக்கா , தம்பி , அத்தை , மாமா , சித்தி , சித்தப்பா, பெரியம்மா , பெரியப்பா என்று பெரிய உறவு வட்டம் . சந்தோசமோ , துக்கமோ உடனுக்குடன்  பகிர அவளுக்கு ஆயிரம் உறவுகள் . குழந்தைகளுக்கு சொத்தோ , புகழோ , பணமோ சேர்த்து வைக்கத்தேவையில்லை நிறைய  நண்பர்களையும் , நிறைய உறவுகளையும் சேர்த்து வைத்தாலே போதும் போல . எந்த ஒரு உயிர் மீதும் பொருள் மீதும் அளவு கடந்த பிரியமும் , அன்பும் , எதிர்பார்ப்பும் வைத்தோமேயானால் நிச்சயமாக அது மிகப்பெரிய துயரத்திற்குத்தான் இட்டுச்செல்கின்றது .

ஆணுக்கு குறைந்தபட்சம் திருமணம் ஆகும் வரையிலும் , பெண்ணுக்கு திருமணம் ஆகி குழந்தை பெறும் வரையிலும் தாயின் அரவணைப்பு அதி அவசியமாகிறது . தாயின் இடத்தை யாரால் இட்டு நிரப்பமுடியும் ..? நூறு வருடங்கள் வாழ்ந்து இறந்தாலும் தாயின் இறப்பு மிகப்பெரிய இழப்பே . தகுதி இருக்கிறதோ இல்லையோ இதோ இன்று நான் பெரியமனிதனாகிவிட்டேன் . ஐந்து ஜீவன்களின் நல்லது கெட்டதுகளை  முன்னின்று நடத்தும் “பொறுப்பு” என்னும் பந்து காலத்தின் உதைப்பினால் என்னிடம் தள்ளப்பட்டிருக்கிறது . இருபது வருட கல்வி சொல்லித்தராததை இப்பொழுது  இந்த வாழ்க்கை கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. கற்றுக்கொண்டிருக்கின்றேன் .

இறப்பின் வலியை சுமந்து அலுவலகம் திரும்பிய எனக்கு  இங்கும் ஓர் இழப்பு காத்திருப்பதை என்னவென்று சொல்ல..? ஆம் ! நான்கு வருடம் உடன் வேலைபார்த்த சக அலுவலக நண்பர் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஊர் திரும்பிவிட்டார்  . வயதில் மூத்தவராக இருப்பினும் இட்ட வேலையை தட்டாமல் செய்தவர் . ஹரி சார் ரிப்போர்ட் ரெடியா ..? ஹரி சார் மெயில் அனுப்பீட்டிங்களா ..? ஹரி சார் குட்ஸ் வந்துடுச்சா ..? என்று மூச்சுக்கு மூன்று முறை விழித்த ஹரி சார் இன்று எங்கோ திருநெல்வேலியில் எதோ ஒரு நிறுவனத்தில் , யாருக்கோ பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் . இதோ ஹரி சாரின் இருக்கையை பார்க்கிறேன் காலியாக இருக்கிறது , என் மனம் பாரமாக இருக்கிறது .

இந்த நான்கு வருடங்களில் பரஸ்பரம் குற்றம் சாட்டியிருக்கிறோம் , முரண்பட்டிருக்கிறோம் , எரிந்து விழுந்திருக்கிறோம் , முகம் சுளித்திருக்கிறோம்  ஆனாலும் பிரிவு  வலிக்கிறது . விடைபெற்று  பிரிந்த பொழுதில்  “இத்தன வருசத்துல நா ஏதாவது ஒங்க மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்துட்டு இருந்தா என்ன மன்னிச்சுடுங்கன்னு” ஒற்றை வார்த்தையை சொல்லி  என்னை புனிதாக அடையாளப்படுத்த வெட்கப்பட்டு அப்படியே அணைத்துக்கொண்டேன் . அந்த அணைப்பில் அன்பையும் , மன்னிப்பையும் நான் உணர்ந்ததைப்போலவே அவரும் உணர்ந்திருப்பார் . பேசாத வார்த்தைகள் அழகானவை மட்டுமல்ல ஆயிரமாயிரம் அர்த்தங்களையும் கொண்டது .

ஓர் உயிரோ . பொருளோ உடனிருக்கும் போது அதன் அருமையும் , பெருமையும் தெரிவதே இல்லை , தெரியும் போது அதை விட்டு விலகி வெகு தூரம் வந்துவிடுகின்றோம் . அல்லது முழுமையாகவே இழந்து விடுகின்றோம் .

பிறப்பும் , இறப்பும்
ஈட்டலும் , இழத்தலும்  
பெறுதலும் , கொடுத்தலும்
இணைந்தது தானே
வாழ்க்கை...!

இதோ இப்பொழுது
இறப்பின் வலியையும்
இழப்பின் சுமையையும்
சகித்துக்கொண்டிருக்கிறேன்...!

வெகு விரைவில்
பிறப்பின் மகிழ்வையும்
ஈட்டலின் சந்தோசத்தையும்
சுகிப்பேன் என்று
நகர்ந்து கொண்டிருக்கின்றேன்
நம்பிக்கையுடன் ...!

நம்பிக்கைதானே வாழ்க்கை ...!


Apr 15, 2013

நீயா நானாவும் – நானும் ...!
வழக்கமாக நீயா-நானாவில் பேசப்படும், விவாதிக்கப்படும் விசயங்களை நான் என்னுடனும் என் நடைமுறை வாழ்க்கையுடன் பொருத்திப்பார்ப்பதுண்டு . நேற்று ஒரு அருமையான, அவசியமான  தலைப்பை பற்றிய ஒரு விவாதம் . “கேட்ஜட்களால்” நாம் நடைமுறை வாழ்க்கை எந்த அளவு மாறியிருக்கிறது . நாம் கேட்ஜட்களுக்கு அடிமையாகிவிட்டோமா ...? என்ற தலைப்பில் விவாதம் போனது .

கேட்ஜட்ன்னா என்னன்னு  கொஞ்சம் நாளைக்கு முன்னாடிதான் தெரிஞ்சுகிட்டேன் . மனித வேலைகளை எளிமையாக்கும் எந்த ஒரு மின்னணு உபகரணமும் , இயந்திரமும்  கேட்ஜத்தானாம். அந்தவகையில பாத்தா செல்போன் , டிவி , கால்குலேட்டர் , கம்ப்யூட்டர் , இணையம் , மிக்சி , கிரைண்டர் , ஃபிரிஜ் னு எல்லாமே கேட்ஜெட் தான் . சரி நாம இதுல எதுக்காவது அடிமையாகி இருக்குறோமா, இதனால நமக்கு ஏதும் பாதிப்பிருக்கா , இல்ல நம்ம நேரத்த மிச்சம் பண்ணுதான்னு  ன்னு யோசிச்சு பார்த்தேன் . நிச்சயமா அடிமையாகி இருக்கேன்னு தான் தோணுது

நீயா நானா ஆரம்பிச்ச ஐந்து நிமிடங்களில் , “விஜய் டீவி பாருங்க அருமையானா ஒரு புரோகிராம் டெலிகாஸ்ட் ஆகிட்டு இருக்குன்னு” , எனக்கு தெரிஞ்ச நாலு பிளாக்கர் நண்பர்களுக்கு மெசெஜ் அனுப்புனேன் . அனுப்பி முடிச்சு நிகழ்ச்சியில மூழ்கிட்டேன் . ஒன்பதரை மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி பதினொன்னரை மணி வரை நீடித்தது . ஒவ்வொரு விளம்பர இடைவேளையிலும் செல்போன எடுத்துப் பாத்தேன்  , யாருன்னா ரிப்ளை அனுப்பிச்சுருக்காங்கலான்னு . நிகழ்ச்சி முடியும் வரை யாருமே அனுப்பல . ஒரு சின்ன ஏமாற்றத்துடன் படுக்கப்போயிட்டேன் . நடு சாமத்துல பாத்ரூம் போக எந்திரிச்சவன் செல்போன பாக்குறேன் ஏதாவது ரிப்ளை வந்துருக்கான்னு, அப்பவும் வல்ல . காலையில எழுந்தவுடன் பாத்தேன் அப்பவும் வல்ல . இதோ இப்ப இந்த பதிவ டைப் பண்ணிக்கிட்டு இருக்குற வர ஒரு ரிப்ளை கூட வல்ல. ஆரம்பத்துல ஏமாற்றமா இருந்தது இப்ப கோவமா மாறிடுச்சு , ஒருத்தர்கூட நம்ம மெசெஜ் ஜ  மதிக்கலையேன்னு . இந்த கோவம்  ஒருவகையான மன உளைச்சலை தருது . மெசெஜ் ஜ படிச்சவங்க கண்டிப்பா ரிப்ளை அனுப்பனும்னு அவசியம் இல்லைதான் . ஆனா ஏத்துக்க முடியல .

ரெண்டுமணி நேரம் செல்போன வீட்டுல மறந்து வச்சுட்டு போயிட்டு , திரும்பி வந்தோன்ன பாக்குற மொத வேல , எதுனா மெசெஜ் வந்துருக்கா , மிஸ்டு கால் வந்துருக்கான்னு பாக்குறதுதன். ஒண்ணுமே வல்லைனா அவ்வளவு தான் . ச்சே..! ஒருத்தருக்கு கூட நம்ம முக்கியமில்லையா ..? நம்ம ஒர்த்தே இல்லையா ? ன்னு என் மேலேயே எனக்கு கோவம் கோவமா வருது . எப்பவுமே போனும் , மெசெஜ் மா இருக்குறவங்கள பாக்கும் போது எரிச்சலும் , பொறாமையும் வருது . இந்த ஒலகத்துல இருந்து என்னைய மட்டும் தனியாக பிரித்து வைத்த மாதிரியும் , வெகுவாக அந்நியப்படுத்தப்பட்ட மாதிரியும் ஒரு உணர்வு . பேஸ்புக் ல  ஒரு போட்டோவும் , ஸ்டேட்டசும் போட்டுட்டு மறுநாள் போயி பாக்கும்போது கொறஞ்சது நாலு லைக்ஸ் ம் , ரெண்டு கமெண்டும் வந்திருந்தாதான் திருப்தியா இருக்கு , வாழ்வதற்கே அர்த்தம் இருக்குற மாதிரி ஒரு திருப்தி .  ஒண்ணுமே வரலைன்னா ...அய்யய்யோ அந்த வலிய சொல்லவே முடியாது . இதே கத தான் பிளாக்ல எழுதுற பதிவுக்கும் .

நாலு மாசத்துக்கு முன்னாடி வர பிளாக்ன்னா என்னன்னே தெரியாது . இப்ப பிளாக் ஆரம்பிச்சத்திலருந்து , தெனமும் கொறஞ்சது ஒரு மணி நேரமாவுது அதுல செலவாகிடுது. பிளாக் ஒப்பன் பண்ணி பாக்கலைனா அன்னைக்கு நாளே முழுமையடையாத மாதிரி இருக்கு . எதையோ இழந்த மாதிரி ஒரு உணர்வு  . ஆரம்பத்துல ஏதோ நம்ம அனுபவங்களையும் , எண்ணங்களையும் பதிவா போடலாம்னு நெனச்சு பதிவு போட்டவன் இப்ப பதிவு போடுவதற்காகவே அனுபவங்களையும் , எண்ணங்களையும் தேடுகிறேன் . பார்க்கும் எல்லாவற்றையும் பதிவாக போட மனம் துடிக்கிறது . தூங்கும் போது , படிக்கும் போது , குளிக்கும் போது என எல்லா நேரமும் இதே சிந்தனை . வேலை நேரம் முடிந்து , பிளாக் பாத்து வீட்டுக்கு போகும்போது மணி எட்டு ஆகிடுது . அம்மா இப்ப அடிக்கடி கேக்குது , என்னாச்சுப்பா ஆபிஸ்ல வேல அதிகமா ? மொகம் சொரத்தே இல்லாம இருக்கே...? ரெம்ப டல்லா இருக்கியேன்னு ..? என்ன சொல்வது அம்மாவிடம் . இத்தனைக்கும் ஆபீஸ்ல வேல ரெம்ப கம்மி , ஆஃப் சீசன் .

பிளாக் பாலோவ் பண்றதுனாலயும், பிளாக் ல எழுதுரதுனாலயும் நெறைய தெரிஞ்சுக்க முடியுதுதான்  , புது நண்பர்கள் கிடைக்கிறாங்கதான் . ஆனா அதற்கான விலை அதிகமா இருக்குதோன்னு கொஞ்சம் பயமாவும் இருக்கு . கை நீட்டி உதவி கேக்கும் பிசைக்காரனை உதாசீனப்படுத்திவிட்டு கோவில் உண்டியலில் பணம் போடுவதைப்போல , அக்கம் பக்கம் இருப்பவர்களை தவிர்த்துவிட்டு, அவர்களுடன் உரையாடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டு , எங்கோ அண்டை மாநிலத்திலும் , அண்டை நாட்டிலும் இருக்கும் யாருடனோ சாட் செய்வது உறுத்தலாக இருக்கிறது .

இந்த உலகத்தோடு கணினி வழியாகவும் , இணையம் வழியாகவும் , தொலைகாட்சி வழியாகவும் தான் இணைந்திருக்கிறேன். எங்காவது டூர் போனால் கூட இயற்கையை கண்களால் பார்த்து  காட்சிப்படுத்துவதைவிட காமிராக் கண்களில் தான் அதிகம் பார்க்கிறேன் , பார்ப்பவை அனைத்தையும் காமிராவில காட்சிப்படுத்த தோன்றுகிறது   . டூர் தராத சந்தோசத்தை, டூர் போட்டோவுக்கு பேஸ்புக்கில் கிடைக்கும் கமென்ட்சும் , லைக்சும் தருகிறது .

மொழி தெரியாத ஒரு புது ஊருல ஒருத்தர கொண்டு போயி விட்டுட்டு , எப்டி இருக்குன்னு  கேட்டா என்ன சொல்லுவாங்க ....? “கண்ணைக்கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கும்பாங்க ” . இப்பல்லாம் மொழி தெரியாத ஒரு புது ஊருல ஒருத்தர கொண்டு போயி விடணும்னு அவசியமே இல்ல , ரெம்ப சிம்பிள், செல்போன புடுங்கிட்டீங்கன்னா போதும். அதுவே கண்ணக்கட்டி காட்டுல விட்டதுக்கு சமம் தான் . ஒங்களுக்கு எத்தன போன் நம்பர் மனப்பாடமா தெரியும் .? எனக்கு மூணே மூணு நம்பர் தான் தெரியும் . இந்த கேட்ஜட்கள் ஞாபக சக்திய சுத்தமா மழுங்கடிச்சுடுச்சு . பஸ்ல நூறு ரூபா கொடுத்து ரெண்டு டிக்கட் போக , மீதி சில்லறையை வாங்கி மூணு மொற என்னுனாலும் கணக்கு பிடிபடவே மாட்டீங்குது . கடசில செல்போன் கால்குலேட்டர்ல தட்டி பாத்தாதான் கரெக்டா இல்லையான்னே தெரியுது .

சமீபத்துல ஒரு பதிவர் எழுதி இருந்தார் ... தமிழ்நாட்டுல மொத்தம் ஏழரை கோடி சினிமா விமர்சகர்கள் இருக்கறாங்கன்னு . அதுல ஒரு சின்ன திருத்தம், ஏழரை கோடி சினிமா விமர்சகர்கள் இல்லை ஏழரை கோடி நியூஸ் ரீடர்கள் இருக்கிறாங்கன்னு சொல்றதுதான் கரக்டு . செய்திகளை முந்தித்தருவதில் தொலைக்”கட்சி” களுக்கு மட்டும் போட்டியல்ல , நம் அனைவருக்குமே போட்டிதான் . எனக்கு ஒரு நியூஸ் தெரிஞ்ச ஒடனே அப்டேட் பண்ணனும்னு கையும் , நாக்கும்  அறிக்க ஆரம்பிச்சுடுது . பிளாக் , பேஸ்புக் , டுவிட்டர் , மெசெஜ்னு  அது எந்த மீடியமோ ஒடனே அப்டேட் பண்ணனும் . இது எதுவுமே இல்லையா இருக்கவே இருக்கு வாய் .

போனவாரம் தூரத்து நண்பர் ஒருவர், ஆபீஸ்க்கு வந்தவுடன் நேர எங்க கேபினுக்கு வந்தார் . அவரே பேச ஆரம்பிச்சார் .. இன்னைக்கு என்னாச்சு தெரியுமா ..? “காலைல ஆபீசுக்கு வந்துட்டு இருக்கும்போது , பீளமேட்டுக்கு பக்கத்துல ஒரு பெரிய ஆக்சிடன்ட் ..................................................................!
புதிய தலைமுறை நிருபரையும் விட விரிவாவும் , நுணுக்கமாவும் ஆக்சிடண்ட விவரிக்க ஆரம்பிச்சுட்டார் . பேசிகிட்டு இருக்கும்போதே சட்டுன்னு செல்போன்ல படம் பிடிச்ச வீடியோவ காமிக்குறார். ஏன் எங்ககிட்ட சொன்னாருன்னு தெரியல , சொல்லி முடிச்சு போயிட்டார்  . மதியம் பாத்தா வேறொரு கேபின்ல அதே ஆக்சிட்டேன்ட அதே மாதிரி சொல்லிட்டு இருக்கார் . மறுநாள் காலைல பேப்பரோட வந்தார் , பாத்தியா நேத்தே நான் சொன்னன்ல அது நியூசா வந்துருக்கு பார் . இந்த “நேத்தே நா சொன்னேன்ல” இருந்த அழுத்தத்த என்னால உணர முடிஞ்சுது . அவர் மட்டுமல்ல நா கூட நெறைய தடவ இப்டிதான் .

இந்த ஒலகத்துலேயே மிகப்பெரிய கெட்ட பழக்கம் எதுன்னு என்னைய கேட்டீங்கன்னா டீ.வி. யையும் , செல்போனையும் தான் சொல்லுவேன் . தண்ணியடிக்குரத விடுறதோ , தம்மடிக்குரத் விடுறதோ கஷ்டம் இல்லங்க டி.வி பாக்குறதையும் , செல்போன் பேசுறதையும் விடுறதுதான்  ரெம்ப கஷ்டம் . எதாவது ஒரு சேனல் பாத்துட்டு இருப்பேன் விளம்பரம் வந்துட்டா ஒடனே அடுத்த சேனல் அப்புறம் அதுக்கடுத்த சேனல் , இப்டியே இமைக்காம பாத்துட்டே இருப்பேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி வீட்டுல நடந்த ஒரு சண்டைல ரிமோட்ட தூக்கிபோட்டு ஒடச்சுட்டேன் , ஸோ, இப்பல்லாம் ஒரே சேனல் தான் பாக்குறேன் . சோம்பேறித்தனம் , யாரு எந்திரிச்சு போயி டி.வி ல சேனல் மாத்தறதுங்குற சோம்பேறித்தனம் . விளம்பர இடைவெளியம்போது கண்ண மூடிக்குவேன் . அது கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கு . அம்மாவும் , வீட்டுக்காரம்மாவும் ரிமோட் வாங்க சொல்றாங்க நா வாங்குறதா இல்ல. இதவிட பெரிய சண்டை வராமலா போயிடும் , கண்டிப்பா வரும் . ங்கொய்யால அப்டி வரும்போது டி.வி ய தூக்கிப்போட்டு ஒடச்சுடனும் , சனியன் அத்தோட தொலஞ்சுதுன்ன்னு நிம்மதியா இருக்கணும் .

நேத்து சென்னையிலருந்து நண்பன் புத்தாண்டு வாழ்த்து சொல்லி மெசெஜ் அனுப்பி இருந்தான் . சரி ரெம்ப நாளாச்சேன்னு பதிலுக்கு கூப்ட்டேன் , ரெண்டாவது கூப்பிடுக்கு அழைப்பில் வந்தான் . உற்சாகமா பேச ஆரம்பிச்சவன்ட்ட இருந்து  கொஞ்ச நேரத்துல ம் ம் ம்க்குற சத்தம் மட்டுந்தான் வருது , நா மட்டும் தான் பேசிட்டு இருக்கேன்  . என்னடான்னு கேட்டா, இல்லடா எங்க கம்பெனிக்கு அவார்ட் கொடுக்குறாங்க அதான் டி.வி ல பாத்துட்டு இருக்கேன் , நா ஈவ்னிங் கூப்ப்டட்டா ன்னு கேட்டுட்டு, நா பதில் சொல்றதுக்கு முன்னாடியே கட் பண்ணிட்டான் . ரெண்டு ஈவ்னிங் முடிஞ்சுது இன்னும் போன் வரல . யோசிச்சு பாத்தா நாங்கூட அப்டிதான் , சூப்பர் சிங்கர் பாக்கும்போது யாரும் கூப்ட்டாலும் எடுக்குறதே இல்ல . விளம்பர இடைவெளியம்போதுதான் பேசுவேன் . ஏன் எடுக்கலைன்னு கேட்டா பாத்ரூம்ல இருந்தேன் , சார்ஜ் போட்டுருந்தேன் , சைலண்டல போட்டுட்டேன்னு குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாம கூசமா ஒரு பொய் . வீட்டுக்கரம்மாவுக்கு தெரிஞ்சுடுச்சு , இப்பல்லாம் விளம்பர இடைவெளிகள் ல கூப்பிட பழகிட்டார் .

டிவி யாவது பரவால்லன்னு சொல்லலாம் , நமக்கு புடிக்குதோ இல்லையோ சேனல் போடுற புரோகிராமத்தான் பாக்கணும் , அதுக்கும் கரண்டு வேணும் . ஆனா இந்த செல்போன் இருக்கே , எத வேணும்னாலும் பாக்கலாம் , எப்ப வேணும்னாலும் பாக்கலாம் , கரண்ட் தேவையில்ல . கட்டற்ற சுதந்திரம் தவறான பாதைக்கு நம்மள இழுத்துட்டு போகுதோன்னு ஒரு கவல இருந்துட்டே இருக்கு. ஆனாலும் விட முடியல .

“அபியும் நானும்”ல பிரகாஷ் ராஜ் கேக்குற மாதிரி , நிலாவ எப்ப கடசியா ரசிச்சு பாத்தேன்னு என்ன நானே கேட்டுக்கிட்டேன் .....! ரெம்ப நேரம் யோசிச்ச பெறகும் தெய்வத்திருமகள் படத்துல நிலாவ ரசிச்சதுதான் ஞாபகத்துக்கு வருது . வீட்டு பால்கனில ஒக்காந்து  நிலாவப் பாக்கக்கூட  நேரம் இல்ல , இதுல எங்க போயி ரசிக்குறது .

சரி கடசியா யாரோட பிறந்தநாளுக்காவது அப்டியே கட்டிப்பிடிச்சு , கைகொடுத்து மனசார வார்த்தைகள விட்டு வாழ்த்தி இருக்கோமான்னு யோசிச்சு பாக்குறேன் . இல்லவே இல்ல. ஸ்மைலி படம் போட்டு ரெண்டுவரில ஒரு மெசெஜ் , விஸ் யூ ஹேப்பி பர்த்டே, அவ்ளோதான் . வெளிநாட்டுலயோ , வெளி மாநிலத்துலையோ இருந்த பேஸ்புக்ல ஒரு மெசெஜ் ஓவர் . இப்பல்லாம் காதல் மொட்டாவதும் , மலர்வதும் , இணைவதும் கூடிப்பிரிவதும் இப்டி எல்லாமே டெக்ஸ்ட் மெசெஜ்லதான் .

கடசியா யாருக்கு கைபட கடிதம் எழுதினேன் ...! ஞாபகமே இல்ல . கடிதமும் , கடிதம் கொண்டுவரும் தபால்காரரும் மறந்தே போய்விட்டார்கள் . இப்பல்லாம் பேனா பிடிச்சு ரெண்டு வார்த்தைகள் எழுதுவதற்கே ரெம்ப  கஷ்டமாக இருக்கிறது .

கடசியா, யாருக்கு பரிசு வாங்கி கொடுத்திருக்கிறேன் , எப்ப வாங்கி கொடுத்தேன்னு யோசிச்சு பாக்குறேன் . அப்டி ஒரு நிகழ்வு நடந்ததாவே ஞாபகம் இல்ல . வேகமான இந்த வாழ்க்கையில நமக்கு என்ன புடிக்கும்னே நமக்கு தெரிஞ்சுக்க நேரமில்ல , இதுல அடுத்தவனுக்கு என்ன புடிக்கும்னு தெரிஞ்சு , அத கடையில போயி வாங்கி ..... அட போங்கப்பா....! அம்பதோ நூறோ மொய் வச்சு , செயற்கையா போட்டோவுக்கு ஒரு போஸ் கொடுத்துட்டு  திரும்புவதுதான் வழக்கமாயிடுச்சு .

கேட்ஜெட்ஸ் இல்லாத ஒரு ஒலகத்த நெனச்சு பாக்கவே முடியல ...! ஃபேன் இல்லாம தூங்க முடியல , டூ வீலரும் , செல்போனும் இல்லாம வெளில போக முடியல , ஃபிர்ட்ஜ்ம் , கியாசும் இல்லாத சமையலறைகுள்ள போகவே முடியல . நாளுக்கு நாள் டிப்பெண்டன்ஷி அதிகமாயிட்டே போகுது . ஈ வேஸ்ட்டும் தான் .

டெக்னாலஜி வளர்ந்துடுச்சுன்னும்  , ஒலகம் ரெம்ப சுருங்கி உள்ளங்கைக்குள்ள வந்துடுச்சுன்னும் சொல்றாங்க . வாஸ்தவம் தான் , உண்மையும் அதுதான் . அதேவேளையில், டெக்னாலஜியால உலகம் சுருங்கியதைவிட அதிகமாக மனிதர்களிடம் மனிதமும் , ஈரமும் , இரக்கமும் , இயல்பும், உடல் நலமும் , சகிப்புத்தன்மையும் , பொறுமையும் சுருங்கிவிட்டது என்பதும் உண்மை . மறுக்க முடியாத உண்மை .


Apr 12, 2013

சகிப்புத்தன்மை ...?


இந்தியா ஒரு சகிப்புத்தன்மை மிகுந்த நாடு ...!
இந்திய மக்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள் ...!

இப்டியெல்லாம் சொல்றாங்கோ , எழுதுறாங்கோ ... அப்டியான்னு கேட்டா ஆமாங்குறாங்கோ...!

ஆனா...!

“பஸ்ல போகும்போது, பக்கத்து சீட்டுக்காரர் மேல தூங்கி விழுறத மட்டும் யாரும் சகிச்சுக்கவே மாட்டிங்குறாங்களே ” அது ஏன் யுவர் ஆனர் ...?

‘டிரெயின்ல போகும்போது , எதிர் சீட்டுக்காரர் படிச்சுட்டு இருக்குற பேப்பர எட்டி பார்க்குறத மட்டும் சகிச்சுக்கவே மாட்டிங்குறாங்களே “ அது ஏன் யுவர் ஆனர் ...?
                                                                            
ஏன் யுவர் ஆனர் ...? ஏன் ...?

Apr 11, 2013

டூ “வீ(ல்)”......லர் பய(ண)ம் .....!


தலப்பு அடப்பு : பால கணேஷ் அண்ணேன் மட்டுந்தேன் வார்த்தைக்குள்ள அடப்பு போடுவாரா? நாங்களும் போடுவோம்ல ....!

                                   டூ “வீ(ல்)”......லர் பய(ண)ம் .....!

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி , பழைய நன்பேண்டாவ பாக்க பீளமேட்டுக்கு போயிருந்தேன். நண்பேன் அப்பத்தான் புது வண்டி வாங்கிருந்தான் , “யமகா ஸ்போர்ட்ஸ் பைக்” . டேய் வாடா , ஒன்னைய வண்டில வச்சு ஒட்டி காமிக்கிறேன்னு சொன்னான் . சரின்னு நம்பி ஏறுனேன். பயபுள்ள நல்லா ஓட்டு ஓட்டுன்னு ஒட்னாங்க . சும்மா கதற கதற ஓட்றான் கண்ணுலருந்து கண்ணீரா வருது நிறுத்தவே இல்ல . அவென்  ஓட்டுன ஓட்டுல எமதர்ம ராசா வீட்டுக்கு எதிர் வீடே வந்துடுச்சு . அப்டியே மயங்கி சரிஞ்சுட்டேன் அவென் மேலயே . அப்றம்தான் எறக்கி விட்டான் . சிரிச்சுகிட்டே கேக்குறான், என்னடா  பயந்துட்டியான்னு..?  . கண்ண கசக்கி பாத்தா எதிர்ல “எமனும்”, “எருமைமாடும்” தான் தெரியுது . இப்பகூட அவனபாக்கும் போதெல்லாம் “எமன” பாக்குற மாதிரியும்,  “யமகா” பைக்க பாக்கும்போதெல்லாம் “எருமமாட்ட” பாக்குறமாதிரியுமே ஒரு பீலிங் .
பில்லியன்ல ஒக்காந்து போறவனுக்குதான் பீதியோட வலி தெரியும் . இப்பவும் பில்லியன்ல ஒக்காந்து போறதுண்டு , சில பல கண்டிசன்களுடன் ...... “ஒட்டுறவேன் ஹெல்மட் போடுறானோ இல்லையோ நா போட்டுக்கணும்” . “வண்டி ஓட்டும் போது போன் பேசப்புடாது”.  “அறுபது கிலோமீட்டர் ஸ்பீடுக்கு மேல போப்புடாது.” முக்கியமா “கட் அடிக்கபுடாது”  . இதுக்கெல்லாம் ஒகேன்னாதான் வண்டிலயே ஏறுவேன் .

இந்த பொண்ணுங்க பில்லியன்ல ஒக்காந்தாவே , வண்டிய “தொட நடுங்குரவனுக்கு(ம்)” கூட தைரியம் வந்துடுதுங்க .... ரேஸ்ல போற மாதிரி போறானுங்கோ ...! போறேனுங்கோ ...!

ஒருமொற இப்டித்தான் பிரியமானவள(!) பில்லியன்ல ஒக்கார வச்சு படத்துக்கு கூட்டினு போனேன். சரியா கருமத்தாம்பட்டி நால் ரோட்ட தொட்டபோது, சைடுல “மண்ணு லாரி”, முன்னாடி “தண்ணி  லாரி” அப்டியே அடிச்சேன் பாருங்க ஒரு “கட்”டு ... ஆஹா...! லைஃப்லேயே அடிச்ச மொத “கட்”டு.
( காலேஜ் கட்ட கணக்குல சேக்கல.) அடடா..! நல்லாத்தான் “கட்”டடிக்குரமே , நாம ஏன் வீலிங் பண்ணக்கூடாதுன்னு  யோசிச்சுட்டு இருக்கும்போதே , பொளேர்ன்னு முதுகுல ஒரு அடி , “பேயடிச்சுடுச்சோன்னு பிரேக்கடிச்சு திரும்பி பாத்தா ...!” “சாட்சாத் .... பொண்டாட்டியேதான் ...!” ( “ஐ நோ.., இந்த சாட்சாத் பக்கத்துல நீங்க என்ன எதிர்பார்த்திருப்பீங்கன்னு ஐ நோ ...!” ஒரு வாட்டிதான் பாஸ் “சொந்த செலவுல ஆப்பு வச்சுக்குவோம் , ஒவ்வொருவாட்டியுமா வச்சுக்குவோம்.”)

அய்யய்யோன்னு பதறி , செதறி எறங்கி பாத்தா ....! பயபுள்ள கண்ணுல ஒரே பீதி . “எமேன் எமஹா”வுலருந்து என்னைய எறக்கி விடும்போது நா என்ன மாதிரியான பீதிய உணர்ந்தேனோ அதே பீதியே இப்ப பொண்டாட்டி கண்ணுல பாத்தேன் . “இப்டியா வண்டி ஓட்டுவீங்க ...? நா படத்துக்கே வல்ல , ஆட்டோ புடிச்சி வீட்டுக்கு போறேன் .“ சுசீலா அம்மா” மாதிரி சாந்தமா இருந்தவ “சொர்ணாக்காவா” மாறி கத்த ஆரம்”பிச்சுட்டா” . அய்யய்யோ ..! கொஞ்சம் ஓவராத்தான் ஓட்டிட்டோமோ..? என்ன பண்ணலாம்னு யோசிச்சுனு இருக்கும்போதே வந்துட்டாரு நம்ம “தண்ணி வண்டி” , “ஏண்டா டேய்...!, பொறுமையா வரமாட்டியாடா பொறம்போக்குன்னு தண்ணியோட சேத்து வார்த்தைகளையும் எறச்சுட்டு போயிட்டார்”. இத கேட்டவுடனே  சொர்ணாக்கா சூடாயிட்டா ....!

பின்ன என்ன, சூட்ட தணிக்க பக்கத்துல இருக்க பழகடைக்கு கூட்டினு போயி  ஆப்பிள் ஜூஸ் வாங்கி கொடுத்துட்டே சொன்னேன் , “பயந்துட்டியா செல்லம் ..? அத்தானுக்கு இதெல்லாம் அல்வா சாப்புடுற மாதிரிம்மா” ன்னேன் ....! ஒரு மாதிரியா பாத்தா(ர்ள்)..! “என்னாதான் உள்ளுக்குள்ள பயம் இருந்தாலும் , கட்டிக்க போறவ முன்னாடியும் , கட்டிக்குனவ முன்னாடியும் பயத்த காட்டிக்க முடியுமா யுவர் ஆனர் ...?”.Apr 10, 2013

வாய்க்கொழுப்பு ...?


சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் அலுவகத்திற்கு தாமதமாக சென்றேன்.

காரணம்...?

வெள்ளிக்கிழமை மாலையில் ,  “தன்சனி” தொலைய எவரோ ஒருவர் சாலையில் உடைத்த சிதறு தேங்காய் , சனிக்கிழமை காலையில் “என்சனியாகி” வண்டியின் டயரை பதம் பார்த்துவிட்டது .
(இதுக்கு பெயர் தான் சனிப்பெயர்ச்சியோ ...?)

அவசர அவசரமாக அலுவலத்திற்குள் நுழைந்த என்னிடம் , எதிர்ப்பட்ட சக பெண் அலுவலகர் கேட்டார்...

“லேட்டாயிடுச்சு போல” ...?

“ஆமாங்க” ...

“என்னாச்சு” ...?

“வண்டி பஞ்சராயிடுச்சுங்க ..”

“எங்க” ?

“வழக்கம் போல டயர்லதான் “.

“.......!.”

இதன் பிறகு , அவர் வேலையை விட்டு போகிறவரை என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை . பின்னொரு நாள் இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரிடம் குமுறியிருக்கிறார், எனக்கு “வாய்கொழுப்பு” அதிகமென்று .

நீங்களே சொல்லுங்க யுவர் ஆனர் . இதுக்கு பேரு வாய்க்கொழுப்பா... ?Apr 9, 2013

கரு.பழனியப்பன் – ஒரு பார்வை ...!
“இருளும் , மவுனமும்” நிறைந்திருந்தால் அது ‘மணிரத்னம்’ படம் . “அன்பும் , பிரியமும்” நிறைந்திருந்தால் அது ‘ராதாமோகனின்’ படம் . “பிரமாண்டமும் , நடசத்திரங்களும்” நிறைந்திருந்தால் அது ‘சங்கரின்’ படம் . “வலியும் , துயரமும்” நிறைந்திருந்தால் அது ‘பாலா’வின் படம் . “காதலும் , மோதலும்” நிறைந்திருந்தால் அது கவுதமின் படம். “நக்கலும், நகைச்சுவையும்” நிறைந்திருந்தால் அது ‘ராஜேஸின்’ படம். “சுமோக்களும் , அரிவாள்களும்” நிறைந்திருந்தால் அது ‘ஹரி’யின் படம் . இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கிறது என் அகத்தில். இந்த வரிசையில், “வசனங்களும் , வசனங்களும்” நிறைந்திருந்தால் அது “காவன் ரூனா பாவன் ழானா” வின் படம். இங்கு நான் குறிப்பிடும் “காவன் ரூனா பாவன் ழானா” என்பவர் இயக்குனர் கரு.பழனியப்பன் .

அவரின் முதல் படம் பார்க்கும் முன்பே அவர் மீது ஒரு பிரியம் ஏற்பட்டுவிட்டதென்னவோ  உண்மை . அதற்கு காரணம், முதலாவதாக, சக மாவட்டத்துக்காரர் ; இரண்டாவதாக, எனக்கு மிக பிடித்த தாடி மற்றும் கண்ணாடி ; மூன்றாவதாக, நறுக்கென்று பேசும் அந்த பேச்சு .

முதல் படமான பார்த்திபன் கனவில் ஆரம்பித்து கடைசியாக வெளியான மந்திரப்புன்னகை படம் வரை அனைத்தையும் விரும்பி பார்த்திருக்கிறேன் . “வீடுன்னா கலஞ்சு தான் இருக்கும் , வச்சது வச்ச எடத்துல இருக்க இது என்ன மியூசியமா” என்பதில் ஆரம்பித்து , “இருந்த இடத்தில் இருந்து பேசுறதுக்கு தான் செல்போன் கண்டுபிடிச்சாங்க , ஆனா நாம் ஏன்யா போன் வந்தோன்ன எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சுறோம்” ங்குற வரையிலும் வசனங்களாலே நிறைந்திருக்கும் “காவன் ரூனா பானா ழானாவின்” படங்கள் .  ஒவ்வொரு வசனமும் குத்திக்கிழிக்கும் கூர்மையான கத்தியை போன்றது.

கிரேசிமோகணும் , கமலகாசனும் இணைந்து கொடுக்கும் படங்களை பார்ப்பதற்கு ஒரு தனி கவனம் வேண்டும் . அடுத்தடுத்த நகைச்சுவை வசனங்களால் நம்மை உண்டு இல்லை என்று பண்ணி விடுவார்கள் . முதல் நகைச்சுவைக்கு சிரித்து முடிக்கும் முன் அடுத்தடுத்து மூன்று நான்கு நகைச்சுவைகள் நம்மை கடந்து போய்விடும். அது போலதான் “காவன் ரூனா பானா ழானாவின்” படங்கள் . அடுத்தடுத்த வசனங்களால் நம்மை திணறடித்துவிடுவார் .

அட! ஆமால்ல, என்று ஒரு வசனத்தை பற்றி நாம் யோசித்துக்கொண்டிருக்கையிலேயே, அடுத்தடுத்த வசனங்களை வீசிக் கொண்டிருப்பார் . இவர் படங்களில் கதாநாயகன் மட்டுமல்ல கடைநிலை நடிகர் வரை பேசும் வசனங்கள் கூட அவ்வளவு பொருள் பொதிந்து இருக்கும். ஒவ்வொரு வசனத்தையும் கருவாய் வைத்து ஒவ்வொரு நீயா நானாவே வைக்கலாம் .

அவ்வப்போது நீயா நானாவில் “காவன் ரூனா பாவன் ழானா” பேசக் கேட்டிருக்கிறேன் , தனி மனிதராக இயல்பில் அவர் எப்படியோ அது எமக்கு தெரியவில்லை , தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை . ஆனால் மிக சுவராசியமாகவும் , சிந்திக்க வைக்கும் வகையிலும் பேசுகிறார் . ஒவ்வொருமுறை இவர் பேசும்போதும், அது எந்த விசயமாகினும் என்னை ஈர்த்து விடுகிறார் . இளைஞர்களுக்கு சுஜாதா சொன்ன பத்து அறிவுரைகளை ஒரு முறை மறு அறிவுறுத்தினார் . ஒருமுறை மதம் மாறி செய்த தன் காதலையும் கல்யாணத்தையும் சுவைபட கூறினார்.

கதாநாயகிகளின் பார்வையில் படம் சொல்லும் போக்கு தமிழ் சினிமாவில் அரிது . இவரது இரண்டு படங்கள் கதாநாயகிகளின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருகின்றது . பார்த்திபன் கனவு பிரிவோம் சந்திப்போம். இரண்டுமே படங்களிலுமே பெண்களின் பார்வையை மிக அழகாக படமாக்கியிருப்பார் . என்னை பொறுத்தவரை இந்த படங்களை ஒரு அழகிய இரண்டுமணிநேர கவிதையென்றே சொல்வேன் .

பிரிவோம் சந்திப்போமில் முதல் பாதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், அதன் நடைமுறை பழக்க வழக்கங்களையும் காட்டியிருந்தாலும், எந்த ஜாதிய, மத உணர்வுகளை புண்படுத்தாமலும், துதி படாமலும் காட்சிப்படுத்தியிருப்பார். தன் படங்களில் குணச்சித்திர நடிகர்களுக்கு இவர் தரும் முக்கியத்துவம் கவனிக்கப்பட வேண்டிய விசயம் . “பிரிவோம் சந்திப்போமில்” “எம். எஸ்.பாஸ்கரும்”, சமையல் காறராக வருபவரும் பேசிக்கொள்ளும் காட்சிகள் அவ்வளவு சுவராஸ்யமானவை . இரண்டாம் பாதியில் “ஜெயராமும்” , “கஞ்சா கருப்பும்” , “இளவரசும்” அதகளம் பண்ணியிருப்பார்கள் .

“இளவரசுவை”ப்போல டயலாக் டெலிவரி பண்ண வேறு ஆள் தமிழ் சினிமாவில் இல்லையென்றே நினைக்கின்றேன். “ஜெயராம்” , “இளவரசு”, “எம்.எஸ் பாஸ்கர்” அப்பப்பா எவ்வளவு திறமைசாலிகள்.  இவர்களுக்கு சரியான தீனி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை . “துப்பாக்கி” படத்தில் “ஜெயராமிற்கு” கொடுத்தது போல கோமாளித்தனமான கதாபாத்திரங்களை கொடுக்காமல் இருந்தாலே போதும்.

மந்திர புன்னகையில் ஒரு காட்சியில் , மருத்துவர் ஒருவர் “காவன் ரூனா பானா ழானாவை” பார்த்து இப்படி சொல்லுவார் .. “ஒட்டு மொத்த திறமையையும் நுனி நாக்கில் வைத்திருக்கிறாயே... விஷமாக “ என்று . உண்மை தான். நடிகர்களில் அஜித்தை போல , பின்விளைவுகள் பற்றி அலட்டிக்கொள்ளாமல், படபடவென்று பொரிந்து தள்ளிவிடுகிறார் பொது மேடைகளில் .

முதல் படமான “பார்த்திபன் கனவு” இரண்டாயிரத்து மூன்றில் வெளிவந்தது , இந்த பத்து வருடங்களில் மொத்தம் ஐந்து படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார் .இப்பொழுது “ஜன்னல் ஓரம்” என்றொரு படத்தை இயக்கி கொண்டிருப்பதாக கேள்வி. “கவுதம் மேனன்” போல அழகான தமிழ் பெயர்களை தம் படங்களுக்கு வைப்பவர் . கவுதம் படங்களின் பெயர்களை  ஒருவரிக்கவிதை என்றால் , கரு.பழனியப்பன் படங்களின் பெயர்களை ஒற்றை வார்த்தை கவிதை என்பேன்  . இவர் படங்களின் பாடல்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் . ( “கனா கண்டேனடி” , “ஆலங்குயில்” , “அற்றைத்திங்கள்” , “என்ன தந்திடுவாய்” , “விழியும் விழியும்”  “சித்திரையில் என்ன வரும்” , “இரு விழியோ” , “கண்டேன் கண்டேன்”, “சட சட சட “ .) ஒவ்வொன்றும் கிளாசிக்.

ஒரு முறை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் , “காவன் ரூனா பாவன் ழானாவிடம்” மதன் ஒரு கேள்வி கேட்டார் , ஒரு படத்திற்கும் மற்றுமொரு படத்திற்கும் நீண்டதொரு இடைவெளி இருக்கிறதே . அடுத்தடுத்து படங்கள் பண்ணி வாழ்க்கையில் செட்டில் ஆக ஆசையில்லையா...? என்று ... அதற்கு அவர் சொன்னது ...

செட்டில் ஆவதென்றால் என்ன ?

வித விதமான கார்களோ , நாலைந்து வீடுகளோ வாங்குவதா ?

அப்படியே வாங்கினாலும் ஒரே நேரத்தில் என்னால் எத்தனை வீடுகளில் வசிக்க முடியும்..? , எத்தனை கார்களில் பயணிக்க முடியும்..? . எனக்கு இதுவே போதுமானதாக இருக்கிறது . என் அப்பாகூட, என் அம்மாவிடம் வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார் , பழனியப்பன் படமே பண்ணவில்லையே , சாப்பாட்டுக்கு என்ன பண்ணுகிறான்..? , வருடத்திற்கு ஒரு படம் கொடுக்காவிட்டால் கூட சினிமா உலகம் மறந்துவிடுமே , எப்படி சமாளிக்கபோகிறான்..?  என்று . வயிற்றிற்காகவும் , வசதிக்காவும் என்னால் படம் எடுக்க முடியாது...என்று தொடந்தது அந்த பதில்.

“கெட்டவங்க எல்லாம் ஜெயிச்சுடுவோம்னு நம்புறாங்க , நல்லவங்க எல்லாம் தோத்துடுவோம்னு பயப்புடுறாங்கன்னு” ஒரு வசனம் “சதுரங்கம்” படத்தில் வரும் . பழனியப்பன்  நல்லவராகவே இருந்து ஜெயிக்கட்டும்.

“ஜன்னல் ஓரம்” காத்திருக்கின்றேன் காற்றுக்காக அல்ல கருத்தாழமிக்க வசனங்களுக்காக...!
Apr 8, 2013

நீயா நானா – பயம் பார்ட் - ஒண்.
வாரா வாரம் நீயா நானா பாக்கலைனா அந்த வாரமே முழுமை பெறாது எனக்கு . சில சமயம் சூப்பராகவும் , சில சமயம் சூர மொக்கையாவும் இருக்கும் . அந்தவகையில் போனவாரம் சூப்பர் எபிசோடு.

பயந்த சுபாவம் கொண்ட ஆண்களும் , தைரியமான சுபாவம் கொண்ட பெண்களும்  பரஸ்பரம் விவாதித்துக்கொண்டார்கள் . பொதுவாகவே நீயா நானாவில் பெண்களின் வாய்(ஸ்) தான் ஓங்கியிருக்கும் . இந்த வாரமோ, பயந்த சுபாவம் கொண்ட ஆண்கள் .. யார் அசத்தியிருப்பாங்கன்னு சொல்லவும் வேணுமா என்ன ....?

நிகழ்ச்சியில்,  நிறைய “அம்பிகளை” பார்க்க முடிந்த அதே சமயம் நிறைய “சொர்ணாக்காக்களை”யும் பார்க்க முடிந்தது . நிகழ்ச்சி முழுவதும் நிறைய சுவராஸ்யங்கள் , சும்மா அதகளம் பண்ணிவிட்டார்கள்  . சிறப்பு விருந்தினராக வந்திருந்த “திருநங்கை” யின் பேச்சு அவ்வளவு சிறப்பு . சிரிக்க சிரிக்க அவர்களின் வலியை சொன்னார் . யூ டியூபில் ய்ப்பாருங்கள் . அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய பகுதி.

ஆண்கள் உங்கள் பயத்தை சொல்லுங்கள், என்று கோபி கேட்டதற்கு கூட பயந்து பம்முகிறார்கள் என் சகோக்கள் . அவர் அங்கு கேட்டுக்கொண்டிருக்கும் போதே, நான் என் பயத்தை பட்டியலிட்டு கொண்டிருந்தேன் . என்னோட பட்டியல படிச்சு பாத்தாவே, பயமா இருக்கு . ஆக்சுவலா விஜய் டிவி காரங்க என்னையதான் குண்டுக்கட்டா கட்டி தூக்கி போயி பேச விட்ருக்கணும் , மிஸ் பண்ணிட்டாங்க .

சரி வாங்க பாக்கலாம் என்னோட பயப்பட்டியல :

லிப்ட் பயம் , எஸ்க்லேட்டேர் பயம் , ஏரோபிளேன் பயம் , ஆட்டோமேட்டிக் செக்போஸ்ட் பயம் , கடல்ல முங்கி குளிப்பது பயம் , மொட்ட மாடி பயம் , ரோலர் கோஸ்டர் பயம், செயின்ட் வீல் பயம் , பேய் படம் பயம் , நடு ராத்திரி போன் அழைப்பு பயம் , டாக்டர் பயம் , லேப் டெஸ்ட் ரிசல்ட் பயம், காரில் முன் சீட்டு பயணம் பயம் , டூ வீலரில் பின் சீட்டு பயணம் பயம் , கியாஸ் பயம், பெண்களிடம் பேசுவது பயம், ட்ரைன் பாத்ரூம் பயம் , சண்டை பயம், மேடைப்பேச்சு பயம்,
சலூனில் ட்ரிம் பண்ணுவது பயம் ... பயம் ...பயம் ...பயம் ....!

என்ன ...? பயந்தீங்களா ...சாரி படிச்சீங்களா ...? “தெனாலி” பயத்தவிட பெருசா இருக்கா ? இது சும்மா ட்ரைலர் தான் ..மெயின் பிச்சர்ல இதவிட பெரிய பயம்லாம்  இருக்கு .! இதுலென்ன பயப்புடுறதுக்கு இருக்குன்னு நீங்க கேக்கலாம் .... மேல படிங்க பாஸ்  ....!

லிப்ட் பயம் :

தனியா லிப்ட் ல போயிட்டு இருக்கும் போது நடு வழில லிப்ட் ரிப்பேர் ஆகிடுச்சுன்னா ...? கரண்ட் கட்டாகிடுச்சுன்னா ? ஆத்தாடி நெனச்சுப்பாத்தாவே குப்புன்னு வேர்த்துக்கொட்டுது . எப்பவுமே கூட்டத்தோடதான் லிப்ட்ல ஏறுவேன் , இல்லாட்டி “டிரைவர்” இருக்குற லிப்டா பாத்துதான் ஏறுவேன் . ரெண்டுமே இல்லனா இருக்கவே இருக்கு நடராஜா சர்வீஸ் . படி..படி..படியா ஏறிடுவேன் அது ஏழு மாடியாவே இருந்தாலும் . 


எஸ்க்லேட்டேர் பயம் :

நாலு வருசத்துக்கு முன்னாடி பெங்களூர்ல , மொத மொதல்ல நான்  எஸ்கலேட்டர் ஏறுனத , நீங்க பாத்ருந்தீங்கன்னா இன்னைக்கு வரைக்கும் நெனச்சு , நெனச்சு சிரிச்சுருப்பீங்க . ஒரு கால மேல் படியிலயும் , இன்னொரு கால கீழ் படியிலையும் வச்சுகிட்டு நான் “பப்பரபான்னு” போனத பாத்து பின்னாடி வந்த பொண்ணுங்கல்லாம் குய்யோ முறையோன்னு சிரிச்சாங்க . ஒரே கேவலமா  போச்சு . இப்பகூட மாலுக்கு போனா , யார்கூட போறனோ அவங்க கைய நல்லா உடும்பு மாதிரி பிடிச்சுட்டு தான் ஏறுவேன் . தனியா போனா சுத்தி முத்தும் பாப்பேன், யாரும் என்ன பாக்குறாங்கலான்னு , குறிப்பா பொண்ணுங்க . யாரும் பாக்கலைங்குறத உறுதிப்படுத்திட்டு தான் ஏறவே ஆரம்பிப்பேன் . அப்பக்கூட ஏதாவது ஒரு புளோர்ல , ஏதாவது செல்போன் ரிங்டோன்  சிரிச்சாக்கூட, என்ன பாத்து யாரோ ஒரு பொண்ணு சிரிக்கிற மாதிரியே ஒரு பீலிங் .

ஏரோபிளேன் பயம் :

பஸ்லயோ , டிரைன்லையோ போகும்போது ஜன்னல் வழியா முழு தலையையும் வெளிய நீட்டி எட்டி பாக்குற மாதிரி, ஏரோபிளைன்லையும் எட்டி பாத்தா என்னாகும்னு என்னோட நண்பேன்டாகிட்ட கேட்டேன் . அதுக்கு அவன் காட்டுன காட்டு இன்னவரைக்கும் பயமா இருக்கு .

ஆட்டோமேட்டிக் செக்போஸ்ட் பயம் :

எங்க கம்பெனில மொத்தம் ரெண்டு கேட்டு அன்ட் ரெண்டு செக் போஸ்டு . உள்ள போறதா இருந்தாலும் சரி வெளிய போறதானாலும் சரி . ரெண்டு செக்போஸ்டையும் தாண்டி தான் போகணும் . ரெண்டுமே தானியங்கி . ஒவ்வொருமொற செக் போஸ்ட்ட கடக்கும் போதும் ஒரு பயம் இருந்துட்டே இருக்கும் . படார்னு தலையில விழுந்துட்டா..? செக்யூரிட்டி வேற அவர் பங்குக்கு பீதிய கெளப்பி விட்டுருந்தாரு தானியங்கி அடிக்கடி ரிப்பேராகிடுதுன்னு . டூ வீலர்ல  செக்போஸ்டை கடக்கும் ஒவ்வொருமுறையும் கண்ண மூடிட்டு அன்னிச்சையாகவே ஆக்சிலேட்டர அழுத்து அழுத்துன்னு அழுத்திடுவேன் . ஒரு மொற ஜெனரல் மேனஜோரோட கார்ல செக் போஸ்ட்ட கடக்கும்போது , நா கண்ண மூடுனத கவனிச்சுட்டார் மேனேஜர் . என்னடா பண்ற..? ன்னு கேட்டார் . இல்ல சார் செக் போஸ்ட்ட தாண்டும்போது , போஸ்ட் தலைல  விழுந்துடுமோன்னு பயமா இருக்கு அதான்னேன் . சும்மா இடி இடின்னு சிரிச்சுட்டு.... மீ டூ ......ன்னு சொன்னாரு பாருங்க அய்யோ அய்யோ...!. அது என்னமோ தெரியலங்க நமக்கு இருக்க பலவீனமோ , பயமோ , நோயோ இன்னொருத்தருக்கும் இருக்குன்னு தெரிஞ்சா அப்டி ஒரு ஒரு இனம் புரியாத சந்தோசம் வந்துடுது எனக்கு .

கடல்ல முங்கி குளிப்பது பயம் :

எனக்கு கல்யாணமே வரமாடிங்குதுன்னு சொல்லி, எங்கம்மா ஜோசியம் பாத்துருக்காங்க . ஜோசியக்காறார் இன்னா சொல்லிருக்காரு ... ஒன்னும் கவலைபடாதீங்க, பய புள்ளய கூட்டிக்கினு போயி ராமேஸ்வரம் கடல்ல முங்கி எந்திரிங்க எல்லாம் கூடி வந்துரும்னு . ( அப்ப முங்குனதுதான் இன்னும்...! ) “சுப்ரீம் கோர்ட்டு சொன்னாகூட எங்கம்மா கேக்காது ஆனா ஜோசியக்காரர் சொன்னா ஒடனே கேட்டுடும்” , மறுபேச்சே கெடையாது. அப்றமென்ன பய(ண)ம் தான் . கடல் தீர்த்தத்துல (?) போயி முங்குற மாதிரி போங்கு காமிச்சுக்கிட்டு இருந்தேன். எங்கம்மா பாத்துடுச்சு , பொளேர்னு  பொடரிலேயே தட்டி , நல்லா முடிய புடிச்சு முங்கி , முங்கி எடுத்துச்சு பாருங்க . முங்குன முங்குல மூச்சு தெணறி , தண்ணியே சூடகிடுச்சு . ஆத்தாடி தண்ணிக்குள்ள அமுக்கி கொல்லவுள்ள போகுது ஆத்தான்னு பயந்துட்டு அப்டியே  புடிச்சு தள்ளிவிட்டுட்டு கரைக்கு ஒடியாந்துட்டேன் . இப்பகூட எங்கயாவது தண்ணில முங்குனா , சூசைட் அட்டன்ட் பண்ணிக்கபோற மாதிரியே ஒரு பீலிங் .

மொட்ட மாடி பயம் :

நாலஞ்சு மாடியெல்லாம் ஏறனும்னு அவசியமில்ல , ஒரு ரெண்டு மாடி இருக்குற பில்டிங் உச்சில ஏறி, அப்டிக்கா ஓரமா வந்து கீழ எட்டி பாத்தேன்னு வைங்க ....சும்மா கால் ரெண்டும் கதகளி ஆடும். இதுக்காகவே கட்டசுவரு இருக்குற மொட்டமாடின்னா ஒரே ஓட்டம் தான் அந்த ஏரியா பக்கமே “கால் வச்சு படுக்குறதில்ல” . அப்டியொரு  அலர்ஜி .

ரோலர் கோஸ்டர் & செயின்ட் வீல் பயம் :

சின்ன வயசுல ஒரு மொற செயின்ட் வீல் ஏறினது இன்னும் ஞாபகம் இருக்கு . செயின்ட் வீலவிட நா தான் அதிகமா கத்துனேன் வீல் ..வீல்ன்னு ..! நா கதறுன கதறுல. பாதிலேயே நிறுத்தி எறக்கி விட்டுடாய்ங்க . நாலு வருசத்துக்கு முன்னாடி கூட , ஆபிஸ்ல இருந்து வீகாலேன்ட் டூர் கூட்டிட்டு போறோம்னு சர்க்குலர் வந்துச்சு . மலையாள “நன்பேண்டா சேட்டன்ட்ட” கேட்டேன் , ஏன்யா வீகாலேண்ட்ல இன்னாயா இருக்கும்னு ...... . அட உனக்கு தெரியாதா .. ? அடிபொலியுமாக்கும் . எனக்கு வளர இஸ்டம்மான ஸ்தலமாக்கும் . அவ்விட இருக்குற பெரிய ராட்டினத்துல ஏறி  அப்டியே தலகீழா பாத்தா அய்யோடா ... மொத்த கேரளாவும், சொர்க்கமா தெரியுமாக்கும்..! ங்கொய்யால சேட்டனோட எக்ஸ்பிரசனையும் , ராட்டினத்தையும் கேட்ட மாத்திரத்தில எனக்கு மூ.......ரமே வந்துடுச்சு . தலகீழா பாத்தா மொத்த கேரளாவும் சொர்க்கமா தெரியுமா ? நேரா பாத்தாவே எனக்கு நரகமே தெரியும்டா ன்னு சொல்லிட்டு, வீகாலேன்ட் டூரே போகல. விடுப்பெடுத்து வீட்டுல ரூம் போட்டு திட்டுனேன், டூர் ஸ்பாட்டா பிக்ஸ் பண்ணுனவய்ங்கள .

பேய் படம் பயம் :

காஞ்சனா படத்தையே நா கண்ண மூடிட்டு தான் பார்த்தேன்னா பாத்துக்கங்களேன். ஈரம் படம் பாத்து ஈரக்கொலையே நடுங்கிடுத்து . தமிழ் படத்துக்கே இப்டின்னா ,ஹாலிவுட்டுக்கு..? சான்சே இல்ல  இன்னவரைக்கும் ஒரு இங்கிலீஸ் ஹாரர் படம் கூட பாத்ததுல்ல. ஏலியன் பட போஸ்டர பாத்ததுக்கே காய்ச்சல் வந்துடுச்சு .

நடு ராத்திரி போன் அழைப்பு பயம் :

நான் சின்னப்புள்ளையா இருக்கும்போது , தந்தி வந்தா எங்க வீடே பீதில ஒறஞ்சு போயிடும் என்னமோ ஏதோன்னு . இப்ப தந்தி எல்லாம் எங்க..? எல்லாமே போன்தானே . நைட்டு நல்லா தூங்கிட்டு இருக்கும்போது பன்னெண்டு  ,ஒரு மணி வாக்குல  என்னமோ ஏதோன்னு ...செல்லு ரிங்காச்சுன்னா ... என்னமோ...!. ஏதோன்னு...! கலவரமாகி, வாரிச்சுருட்டி எந்திரிச்சு ஒரு படப்பிடிப்போட தான் போன எடுப்பேன் . அதுவும் அப்பா , அம்மா இருக்குற கிராமத்துலருந்து போன் வந்தா பீதிக்கு சொல்லவே வேண்டம் .

  
டாக்டர் பயம் :

எதுன்னா ஒடம்பு சரியில்லாம போச்சுன்னா அவ்ளோதான் , வராத  சிம்ப்டம்ஸ வந்ததா நெனச்சு   “கூகுள் கூகுள்” பண்ண ஆரம்பிச்சுடுவேன்  . அதுல எதாவது ஒன்ன படிச்சு , அந்த நோய் தான் வந்திருக்குன்னு பலமா நம்பவே ஆரம்பிச்சுடுவேன் . அப்றமென்ன தமிழ் சினிமா கதாநாயகன் ரேஞ்சுக்கு சோக கீதமா பாடிதிரிவேன் . ஒரு கட்டத்துக்கு மேல என்னோட இன்சை தாங்கமா ஆஸ்பத்திரிக்கு கூட்டினு போயிடுவாங்க . டாக்டருக்காக ஆஸ்பத்திரியில் காத்திருக்கிறதும் , முடிவெட்டுவதற்காக சலூனில் காத்திருப்பதும் எவ்வளவு பெரிய கொடும தெரியுமா ...? டாக்டர் என்ன சொல்ல போறாரோ ன்னு அதுக்கும் ஒரு பயம் . டாக்டர செக் பண்ணி பாத்துட்டு , ஒன்னும் இல்ல , “ஹி இஸ் ஆள் ரைட்டுன்னு” சொல்லுவாரு . ஒடனே சந்தோசமாகிடும். ஆனா எதுக்கும் ஒரு “பிளட் டெஸ்ட்” எடுத்து பாத்திரலாம்னு ஒரு செக்க வப்பாரு பாருங்க . போன செகண்ட்ல இருந்த சந்தோசம்  இப்ப சந்”தோஷம்” ஆகிடும் .

லேப் டெஸ்ட் ரிசல்ட் பயம் :

பதினாலு மணிநேரம் பச்ச தண்ணி கூட குடிக்காம பட்டினி கெடந்து , காலங் காத்தால லேபுக்கு போனா , கொள்ள காச வாங்கிகிட்டு மனசாட்சியே இல்லாம ரத்தத்த உறிஞ்சிப்புடுவாங்க . ரிசல்ட் சாயங்காலம் . போர்டு எக்ஸாம் ரிசல்ட்டு கூட இவ்வளவு பயமுறுத்தாது . ஆனா லேப் டேஸ்ட்டு பயமுறுத்தும் . ரிசல்ட் பாசிட்டிவ்னு சொன்னா பயப்புடனும் , நெகட்டிவ்னு சொன்னா சந்தோசப்படனும் என்னேவொரு முரண்பாடு . உங்களுக்கு ஒன்னும் இல்லா “எவ்ரிதிங் இஸ் ஃபைன் அப்டிங்குற” நர்ஸ் கொரல கேட்டதுக்கப்புறம் தான் தொண்டக்குழியில எச்சியே எறங்கி என் கொரலே வெளில வரும் . நா நல்லாருக்கோம்ங்க்குற சந்தோசம் கொஞ்ச நேரந்தான் . அதுக்கப்புறம் ? ச்சே ..இம்புட்டு காச கொடுத்து , பத்தாததுக்கு ரத்தத்தையும் கொடுத்து கடசில ஒன்னுமில்ல எல்லாம் நல்லாருக்குன்னுட்டாயங்களே , அம்புட்டும் வேஸ்டா போச்சே , அட்லீஸ்ட் எதுனா ஒன்னு கூட கொறைய இருந்துருக்கலமோன்னு மனஸ் அடிச்சுக்குது .

  
யப்பா எழுதுனத படிச்சு பாத்தாவே பயமா இருக்கு . இன்னைக்கு போதுங்க ...முடியல..! “பாக்கி பயத்த” அடுத்த பதிவுல பாக்கலாம் ....! அதுவர இந்த வீடியோவ பாருங்க .

நீயா நானா – பயம் பார்ட் டூ  - விரை....”வீல்:.......!